|
லஷ்மண் ஆதித்யா கவிதைகள்
நகர் நீங்கிய படலம்
யௌவனம் கலைந்த
பூமியிலிருந்து வெளியேறுகிறது
பறவைகள் கூட்டம் கூட்டமாய்
அடர்வனம் உயர்மலை
சமுத்திரங்கள் தாண்டி
குருதிக்கு இரைதரும்
வளநிலம் இறங்கி
சேகரிக்கிறது ஒவ்வொரு தானியமாய்
நித்திரை நீங்கிய இரவுகளில்
நனைகிறது இமை
கூடுகள் நீங்காத மனம்
வெடித்த விம்மல்களால்
அதிர்கிறது திசை
கனவுகளினூடாய் கடந்து செல்கிறது பருவம்
நிலத்தின் கீழ் துடிக்கும்
கம்பிகளின் வழி
உயிர்மீட்டுக் கொள்கிறது அவ்வப்போது
பூர்வதேச வெளி ஏங்கி
மீண்டும் மீண்டும்
நீளும் சிறகுகளை மோதி நிறுத்துகிறது
காற்றில் தவழ்ந்து வரும்
இரையற்ற குஞ்சுகளின் வெப்பமூச்சு.
பரமபதம்
எத்தனை முறை
லாவகமாய் உருட்டினாலும்
சோழிகள் உதவுவதில்லை
ஏணிகளில் ஏற
சகுனியின் மாயக் கரங்கள்
கட்டுப்படுத்துகிறது
ஒவ்வொரு நகர்வையும்
நஞ்சுகள் தீண்ட
நகர முடிவதில்லை ஒரு கட்டமும்
தாயம் மறுதாயமென
உருட்ட உருட்ட
கீழும் மேலுமாய்
தொடர்கிறது ஆட்டம்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|