Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2007
பாரதி கிருஷ்ணகுமாரின் 2வது ஆவணப்படம்: என்று தணியும்...?

களப்பிரன்

முப்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவ ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்ட வெண்மணியின் வர்க்கப் போராட்டத்தையும் அதன் மீதான கொடுமைகளை யும் கடும் முயற்சியால் “இராமையாவின் குடிசை” ஆவணப் படம் மூலம் வீதிக்கு கொண்டுவந்த இயக்குனர் ‘பாரதி கிருஷ்ணகுமாரின்’ அடுத்தப் படைப்பே “என்று தணியும்?”. இரண்டாண்டுகள் ஆனபின்னும் கொஞ்சமும் குறையாத சோகத்தினை முகத்தில் அப்பியபடியான குழந்தைகளின் குடும்பங்களை பதிவு செய்திருக்கும் செல்வாவின் ஒளிப் பதிவோடு, “சொல்ல மனம் துடிக்குதே தேமி தேமி எங்க புள்ள கறி கேட்டது எந்தச்சாமி? எனும் தனிக்கொடியின் வரிகள் பிரபாகரனின் இசையில் தேமிக்கொண்டிருக்க தொடங்கும் படம், சுனாமிப் பெருஞ்சாவில் தமிழ்ச்சமூகம் மறந்தே போன குடந்தை கல்விக்கொலையினை ஓங்கிக் கொட்டி ஞாபகப்படுத்துகிறது. அந்தக் கொடுங்கொலை யினை காட்டி பல ஊடகங்கள் காசாக்கிய நிலையில், இப்படமோ அக்காட்சிகளை மையப்படுத்தி இலவச ஆரம்பக்கல்வி குறித்து அவசியமானதொரு பொது விவாதத்தினை தொடங்கி வைக்கிறது.

படத்தின் முற்பாதி, பள்ளிக்கு கையசைத்து சென்ற குழந்தைகள் கரிக்கட்டையாக கிடந்ததையும், இறுதிவரை அடையாளம் தெரியாமல் முடிவில் ஏதோ ஒரு குழந்தையை அடக்கம் செய்த தாயையும், எரிந்துபோன வசந்தபிரியாவின் புகைப்படத்தின் மேல் தொடர்ந்து சுழலும் மின்விசிறிக்கு விளக்கம் சொல்லாமலே விளங்க வைத்த சிவக்குமாரின் முனகல்களும், விக்கி விக்கி பிழியும் சோகங்களுக்கு ஊடாக, கீழ்நிலை அதிகாரிகள் அங்கீகரிக்க மறுத்த அப்பள்ளியின் கோப்புகளை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வரவழைத்து அங்கீகாரம் வழங்கிய அந்த உயரதிகாரியின் செயலைச் சொல்லி கொலைக்கான காரணம் தேடி பயணிக்கிறது.

பிற்பாதியில், தமிழகத்தில் குறிப்பாக 1978க்கு பிறகு கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்து போனதையும், தனியார் பள்ளிகளை வரையறையின்றி அங்கீகரித்து ஊக்கப் படுத்தியதையும், அதனால் கல்வி மறுக்கப்பட்டவர்கள் -ஏழைகள் - பெரும்பாலும் தலித்துகள்- அதுவும் முதல் தலை முறையாக கற்க வந்தவர்கள் என்பதையும், அப்படி கல்வி மறுக்கப்பட்டவர்களே குழந்தைத் தொழிலாளர்களாக உருவாவதையும் அடுக்கியடுக்கி ஆதங்கப்பட்டு இந்த ஆரம்பக்கல்வியில் உள்ள குறைபாடு உயர்க்கல்வியை மட்டுமின்றி இச்சமூகத்தையே பாதிக்கும் என்று வசந்திதேவி போன்ற கல்வியாளர்களின் எச்சரிக்கைகளோடு இலவச ஆரம்பக்கல்வி எனும் இலக்கு நோக்கி நகர்ந்து முடிகிறது.

அரசுப்பள்ளிக்கு நிதியை குறைத்து தனியாரை திறந்துவிடும் கல்விக்கொள்கையால் 94 பிஞ்சுகளை தீக்கிரையாக்கிய- இலவச பாஸ்களை மட்டும் கொடுத்து போதுமான பேருந்து களை விடாத- ஊழல் அடித்தளத்தோடு லஞ்சலாவண்யம் கொண்டு எழுப்பிய கோட்டையிலிருக்கும் இந்த அரசு, ஒட்டுமொத்த சமூகக்கோபத்தையும் ஓலைக்கூரைகளின் மீது திசைதிருப்பிய அயோக்கியத்தனத்தை போட்டுடைக்கும் இப்படம் முடிந்தவுடன் “ அறுபது வருசமா என்ன மயித்த புடுங்குனுச்சி இந்த அரசாங்கம்?” என்பதே அனேகமாக எல்லோரும் ஆவேசமாக எழுப்பும் கேள்வியாக இருக்கும்.

இயக்குனரின் முதல் படத்தைப் போலல்லாது இதில் தன் பின்னணி வசனங்களை குறைத்திருப்பது நல்ல முன்னேற்றம் என்றாலும் இனிவரும் படங்களில் தான் பேசாமல் படங்களை மட்டுமே பேசவைக்க முயற்சிக்கலாம். மேலைய ஆவணப்படங்களில் வருவதுபோல் படத்துக்கு தொடர்பு டைய திரைப்படங்கள் (காமராஜ்) இலக்கியப் பதிவுகள் (கம்பர்), கலை இலக்கிய வடிவங்கள் (பாகவத மேளா) போன்றவற்றை இணைத்திருப்பது படத்தின் தரத்தினை உயர்த்தியிருக்கிறது. இறுதியில் கோழியையும், தூக்கனாங் குருவியையும் குழந்தை பாதுகாப்பிற்கு உவமையாக சொல்லியிருப்பது, இம்மண்ணின் மக்கள் மனதில் எளிய பதியவைக்கும் ஒரு நல்ல உத்தி.

அதேவேளையில் கல்விகுறித்து தேசிய மாநில அளவில் உள்ள புள்ளி விபரங்களையும், இந்தக் கல்விக்கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மாணவர் அமைப்புகளின் கருத்துக்களையும் பதிவு செய்திருப்பின் படத்தின் கருவிற்கு இன்னும் வலுவேர்த்திருக்கும். அதோடு உலகவங்கியிடம் ஒருபைசா கூட கடன் வாங்காமல், அமெரிக்கா உட்பட வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கும், தொடக்கம் முதல் தொழிற்கல்வி வரை அனைத்தையும் இலவசமாக கொடுத்து வரும், அமெரிக்காவின் சிம்மசொப்பனமான கியூபா குறித்து இயக்குனர் ஏன் பதிவுசெய்ய மறந்தாரோ! எல்லாவற்றிற்கும் மேலாக BEFI எனும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்துடன் தொடர்புடைய இயக்குநர், அவ்வமைப்பு பட்டுக்கோட்டையை அடுத்துள்ள குறிச்சி கிராமத்தில் , கற்றலை இனிமையாக்கும் வகையில் நடத்தும் கல்விக்கூடத்தை எப்படி பதிவுசெய்ய தவறினார் என்று தெரியவில்லை.

எனினும் இச்சமூகத்தின் கொடும்நோயான கல்விக் கொள்ளை குறித்து விவாதித்திருக்கிறது. குடந்தைக் கொலையில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல், இட ஒதுக்கீட்டில் மட்டும் கல்வியின் தரம் குறித்து பேசும் நீதித்துறை, அறுபது ஆண்டுகள் ஆன பின்னும் ஆரம்பக்கல்வி கூட முழுமையடையாத நாட்டில் ஒன்பது சதவிகித பொருளாதார வளர்ச்சி குறித்து புளங்காகிதப்படும் மத்திய அரசு, இலவச வண்ணத் தொலைக்காட்சிக்குள் நல்லாட்சிக் கனவுகளை காட்டிக் கொண்டிருக்கும் இந்த மாநில அரசின் கல்விக்கொள்கை ஆகியவை மீது இப்படம் ஒரு சிறு கீறலையாவது ஏற்படுத்தும். ஏற்படுத்த வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com