Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2007
புனித பாரதி

அ. ஜெகநாதன்

காலச்சுவடின் டிசம்பர் 2006 இதழ் ‘பாரதி 125’ சிறப்பிதழாக வெளிவந்தது. காலச்சுவடின் ஆளுமைகள் குறித்தான சிறப்பிதழின் தொடர்ச்சியாக இந்த இதழ் இருந்தது. இங்கு 2004 செப்டம்பரில் வெளிவந்த ‘பெரியார் 125’ சிறப்பிதழை மீள் ஞாபகப்படுத்தி ‘பாரதி 125’ இதழோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். சமீபகாலமாக தன்னை சனநாயகத்தன்மை கொண்டதாக காட்டிக் கொள்ளும் காலச்சுவடு ‘பெரியார் 125’க்கு வைத்த அளவுகோலை ‘பாரதி 125’க்கு வைக்க வில்லை. இத்தோடு காலச்சுவடு, கடவு என்ற இலக்கிய அமைப்போடு இணைந்து ‘சித்திரபாரதி’ என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த நூலின் ஆசிரியர் ரா.அ.பத்மநாபன். இவரது பேட்டியும் ‘பாரதி 125’ல் இடம் பெந்றிருக்கிறது. “25 ஆண்டுகளுக்குப் பின் இப்போது மூன்றாம் பதிப்பு வரவுள்ளது.

காலச்சுவடு பதிப்பகம் நூலைச் சிறப்பான வகையில்கொண்டு வர எல்லா ஏற்பாடுகளையும் சிரத்தையுடன் செய்திருக்கிறது” எனக் கூறியிருந்தார். சித்திர பாரதி என்ற நூலுக்குள்ளும் மூன்றாம் பதிப்பின் முகவுரையில் “மூன்றாம் பதிப்பு வெளிவருவதில் முக்கியாக இரண்டு பேருக்கு நன்றி செலுத்தவேண்டும். காலச்சுவடு பதிப்பக அதிபர் எஸ்.கண்ணன் அவர்களுக்கும் டாக்டர் ஆ.இரா. வேங்கடாசலபதி (‘சலபதி’) அவர்களுக்கும்” என எழுதி யிருக்கிறார். ரா.அ.ப.வின் நேர்காணலிலும் அவரது முகவுரை யிலும் ஒரு இருட்டடிப்பை தெரிந்தே மேற்கொண்டிருக் கிறார். கடவையோ அதனை உருவாக்கிய கவிஞர் தேவேந்திர பூபதியையோ ரா.அ.ப. நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்நிகழ்வே சித்ரபாரதியை படிக்க வைத்தது. அதன் வாயிலாக ரா.அ.ப.வின் வரலாற்று திரித்தலையும் அறிய முடிந்தது. ரா.அ.ப.வின் வரலாற்றுத் திரிபை கட்டுரை தேவைப்படும் இடங்களில் சுட்டிக் காண்பிக்கும் என்ற முன்னுரையோடு மதிப்புரைக்குள் நுழையலாம்.

இங்கு மதிப்பிட எடுத்திருக்கும் ‘சித்திரபாரதி’ எனும் நூல் 1957ல் வெளிவந்ததாகும். அதன் இரண்டாவது பதிப்பு 1982லும் தற்போது மூன்றாம் பதிப்பாகவும் வெளிவந்தி ருக்கிறது. தற்போதைய பதிப்பில் ஆதாரப்பூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு என முகப்பிலேயே எழுதப் பட்டுள்ளது. முன்னுரை முகவுரை தவிர்த்து மொத்தம் 213 பக்கங்கள். இந்நூலின் கட்டமைப்பு இரண்டு பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது. பாரதி பிறந்தது முதல் இறந்தது வரையிலானவை ஒரு பகுதியாகவும் பாரதி இறந்தபின் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் பாரதிக்குப் பின்னைய பாரதி எழுத்துக்கள் எந்தெந்த நாடுகளில்/ மொழிகளில் விரவி பரவியிருந்தமை ஆகியவை பிரிதொரு பகுதியாகவும் பிரிந்து கிடக்கின்றன. இங்கு பாரதியின் சிந்தனையோட்டம் குறித் தான விமர்சனத்தை தவிர்த்திருக்கிறேன். அதற்கான சூழல் இதுவல்ல என்பதோடு அது குறித்தான தரவுகள் இந்நூலில் குறைவாகவே இருக்கின்றன என்பதால் தவிர்த்திருக்கிறேன்.

பாரதியின் வாழ்க்கையை தேடும் முயற்சியை ரா.அ. ப. 1934ல் தொடங்கி ஒருவகையாக 1957ல் முடித்திருக்கிறார். தேடுதலின் வலிகளை நாம் ரா.அ.ப. விடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ரணமிகுந்த தேடுதல் பாதை புத்தகமாக விரிந்து வரலாறாக பதிவாகி இருக்கிறது.
இந்த வரலாற்றின் விட்டுப் போன பக்கங்கள் 1982ல் நிவர்த்தி செய்யப்பட்டு ‘விஞ்ஞானப்பூர்வ வரலாறு’ முடிவுற்றதாக ரா.அ.ப. நினைத்துவிட்டார் போலும். இந்த விஞ்ஞானம் லெகுவான மொழியில் நடைபோட்டு வந்திருப்பதை வாசகர்கள் அறியலாம். சிறுவர் முதல் ஆய்வாளர் வரையி லான எந்தப்பகுதி வாசகனுக்கும் பாரதி சென்று சேர வேண்டும் என்ற நோக்கம் இந்த மொழிக்குப் பின்னால் மறைந்து கிடக்கிறது. இதுதான் ரா.அ.ப.வின் நோக்கமும் ஆகும்.

இந்த மொழியமைப்பை வரலாற்று கட்டமைத்தலுக்கு மட்டும் பயன்படுத்தினால் நமக்கு ஒன்றும் ஆகிவிடாது. ஆனால் இம்மொழி கட்டமைப்பில் கழிவிரக்க தொனி தொடர்ந்து பயணமாகிறது. பாரதி வறுமையில் இருந்தார், பாரதி தனது புத்தகத்தை அச்சடிக்க பணமின்றி தவித்தார், என்பதிலிருந்து “பாரதிக்குப் பல சமயம் எழுதுவதற்கு நல்ல காகிதம் பேனா மைக்கூடக் கிடைத்ததில்லை”(108) என்பதான கழிவிரக்க மொழிகள் ஒருபுறம் இருக்க, பாரதியை ஆதரித்து உணவு, உடை, பணம் கொடுத்த செயல்பாட்டை “பாரதி சேவை” என விளிக்கவும் செய்கிறார். அதே தருவாயில் பாரதியின் செயல்பாடுகள் அனைத்தையும் விதந்தோதுகிறார். இங்கு இதற்கான காரணத்தை முதலில்காணலாம்.

முதலாவதாக பாரதி வறுமையில் வாழ்ந்தாரா? எனக் கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. பாரதியின் பிறப்பு ஒன்றும் வறுமைச் சூழலில் நிகழவில்லை. இந்த மண்ணில் உழைப் பதற்கென்றே பிறந்த தலித்துகள் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் தன் சதை பிளந்து வளமையாக்கிய மண்ணையும் மண்ணில் விளைந்தெடுத்த நவமதிகளையும் கொள்ளை யடித்து கொழுத்த அரச பாரம்பரியத்தின் முன் சேவகம் செய்து வாழ்ந்த வளமையான குடும்பத்தில்தான் பாரதி பிறந்தார். இதற்கு ஆதாரமாக பாரதியின் பால்ய திருமணத்தின்போது வரதட்சணையாக வந்த குறிப்பை இங்கு எடுத்தாளலாம். “கிருஷ்ண சிவன் (பாரதியின் அத்தை கணவர்) அவர்களின் நண்பர்களான ராமநாதபுரம் ராஜாவிடமிருந்தும் சேத்தூர் தலைவன் கோட்டை ஜமீன்தார்களிடமிருந்தும் பட்டும் பட்டாவளியுமாகச் சால்வைகள் மோதிரங்கள் முத்துமாலை கள் முதலிய வெகுமதிகள் ஏராளமாய் வந்தன. தங்க நாதஸ்வர வித்வான் ரத்னசாமியை ராமநாதபுரம் ராஜா அவர்கள் அனுப்பி யிருந்தார்கள்”. (15) மேலே வைத்த எனது வாதங்களுக்கு ஆதாரமாக இங்கு நான் இக்குறிப்பை முன்வைக்கிறேன்.

இங்கு பாரதி மிக்க வறுமையோடு இருந்த காலகட்டமாக 1910-15ஐ ரா.அ.ப. அறுதியிட்டுக் குறிப்பிடுகிறார். “1910 லிருந்து 1915 வரை பாரதிக்கு தீராத கடன் தொல்லைகள் ஒருபுறம்” (129) என்ற குறிப்பை இங்கு கவனப்படுத்தலாம். இக்காலகட்டத்தில் பாரதி ஈசுவரன் தர்மராஜா கோவில் தெருவிலுள்ள சிறிய வீட்டிலிருந்து அதற்கு எதிரே உள்ள பெரிய மாடிவீட்டிற்கு குடியேறியுள்ளார். இதன் காலத்தை ரா.அ.ப. குறிப்பிடவில்லை என்றபோதும் புதுவையில் நன்றாக வேரூன்றிய பின் குடும்பத்தை அழைத்த பாரதி சிறிய வீட்டிலிருந்து பெரிய மாடி வீட்டிற்கு சில ஆண்டுகள் கழித்து மாறினார் என்பதில் இருந்து 1910ல் இம்மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். இவை ஒருபுறமிருக்க 1910-15ல் கஷ்ட சீவனத்தில் காலம் கழித்த பாரதியால் பெரிய மாடிவீட்டை விட்டு மீண்டும் சிறியவீட்டிற்கு மாறாமல் ஏன் இருந்தார்? என்ற கேள்வியையும் இங்கு எழுப்ப வேண்டியிருக்கிறது.

வா.வே.சுப்ரமணியம் என்பவருக்கு நெய்டின்னில், புத்தகத்தில் பணங்கள் வருமாம். அப்பணங்களை எடுத்து ‘தேசப்பற்றாளர்களுக்கு’ பிரித்துக் கொடுப்பாராம். இதே காலகட்டத்தில் ‘கண்ணன் பாட்டை’ பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்டிருக்கிறார். ‘பாஞ்சாலி சபதத்தின்’ முதல்தொகுதியும், The fox with the coolden tail எனும் புத்தகத்தையும் 1914ல் வெளியிட்டிருக்கிறார். இதில் பாஞ்சாலி சபதத்தின் முதல்தொகுதியை பாரதி சொந்தமாகவே வெளியிட்டதாக பொ.வேல்சாமி தன் கட்டுரை ஒன்றில் பதிவு செய்கிறார்.

‘பொன்வால் நரி’ எனும் நூல் 500 பிரதி வேண்டும் என்று வி.பி.ஆர்டர் செய்திருக்கிறார் நஞ்சுண்டன். இக்குறிப்புகளில் இருந்து நோக்கும்போது பாரதி வறுமையில் வாடவில்லை என்பதாக அறிய முடிகிறது. கேப்பைக் கூழுக்கு குருணை இல்லாததால் மொட்டக்கூழை பட்டவத்தலோ வெங்கா யமோ துணை கொண்டு ஒருவேளை பசியாறும் மனிதனுக்கு ‘வறுமை’ என்ற வாழ்க்கை நிலையை சுட்டினால் அது பொருள் படைத்ததாகும். விலையுயர்ந்த பொன்னி அரிசிக்கு நெய் கிடைத்தது , தயிர் இல்லையே? எனப் புலம்பும் கூட்டத் தாருக்கு வறுமை என்ற சொல்லை எப்படிப் பயன்படுத்த முடியும்? என்றுதான் ரா.அ.ப.வை நோக்கி வினவ வேண்டியுள்ளது.

வறுமை என்ற புலம்பல் ஒருபுறம் என்றால் அவருக்கு உதவி செய்த நல்லுள்ளங்களை ‘சேவை’ என்று விளிக்கவும் செய்கிறார். பாரதி ஒரு தெய்வப்புலவன்; பிறவிப் புலவன் என்றெல்லாம் நினைத்து இந்த உதவியை செய்திருக்க முடியாது. கடவுளை விட வணங்கத்தக்க ஒரு பார்ப்பனன் ‘தேசிய உணர்வின்’ காரணமாக புலம் பெயர்ந்து வாழ்கி றானே என்ற இரக்கத்தில் உதவியிருப்பார்கள் என்பதுதான் எதார்த்தமாகும். இதோடு பாரதியின் சிறுமைச் செயல் பாட்டை கூட விதந்தோதுகிறார். பாண்டியில் பொன்னு முருகேசம் எனும் செல்வந்தர் வீட்டில் பாரதி நடந்த செயல்பாட்டை பின்வருமாறு ரா.அ.ப. விவரிக்கிறார்:“பாரதி கட்டுக்கடங்காத செல்லக் குழந்தை - நினைத்த சமயம் கவிதை வரும். உரக்கப் பாடுவார். உட்கார்ந்த இடத்தில் இருந்தே எச்சிலைத் துப்புவார். இந்தக் குறைபாடுகளைப் பற்றிப் பிள்ளையவர்கள் வீட்டில் மூச்சுப் பேச்சு இராது” (91) என எழுதுகிறார். பாரதி செயல்பாடு நாகரீகமற்றது.

மடத்தனமானதும் கூட. இதே பாரதி வ.வே.சு. வீட்டிலோ அரவிந்தர் வீட்டிலோ கண்ட இடத்தில் எச்சிலைத் துப்பி இருப்பாரா? அப்படியே துப்பியிருந்தாலும் ரா.அ.ப. இப்படி விதந்தோதி எழுதுவாரா? சூத்திரன் வீட்டில் பார்ப்பனன் என்ன அசிங்கம் செய்தாலும் சூத்திரன் மூச்சு பேச்சு இன்றி இருக்க வேண்டும் என ரா.அ.ப. நேரடியாகச் சொல்ல வருகிறார் என்றுதான் இங்கு நினைக்கத் தோன்றுகிறது.

எளிய மொழிக்கட்டமைப்பின் பிரிதொரு பாகமாக மகாகவி என்ற ஒளிவட்ட மொழிப்பின்னலும் நூல் முழுக்க இடை விடாமல் பயணிக்கிறது. நூலின் துவக்கத்திலேயே ‘ஒரு பண்டிதர் வாழை,கமுகு இரு பொருள்களும் ஒரே பாட்டில் வரும்படி பாடச் சொன்னார். அவர் கேட்டு வாய் மூடும் முன்னே பாரதி பாடிவிட்டான்” (12) என்பதான ஒளிவட்ட பின்னலை பின்னியவர் “பாரதியின் பரிணாமத்தைக் கவனிக்கும்போது அவர் பிறவியில் கவியென்பதும்” (87) என்ற அமிர்தாவின் வாக்கு மூலம் நிரூபித்துவிட்டார். காளி தாசன் என்ற சூத்திரன் கல்வி கற்று கவி புனைய காளிதேவி நாக்கில் எழுத வேண்டியிருந்தது. பாடல் கொஞ்சம், ஆடல் கொஞ்சம், விளையாட்டே பிரதானமான பதினொரு வயதில் பாரதி இருபொருள் கொண்ட கவியை வாய்மூடும் முன்பே பாடிவிட்டான். இதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் என 2007ல் ரா.அ.ப. கூறுவது அபத்தமாக இருக்கிறது.

இதோடு ரா.அ.ப. நின்றுவிடவில்லை. ஏராளமான முரணோடு இந்நூலில் உலவுகிறார். 1957ல் வெளிவந்து 1982ல் இரண்டாம் பதிப்பாகி 2007ல் மூன்றாம் பதிப்புக் குள்ளான இந்நூலில் ஏராளமான வரலாற்று முரண்கள் மலிந்து கிடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. யாரும் இதனை கவனிக்கவில்லையா? அல்லது ‘பாரதி சேவைக்காக’ இந்த ‘விஞ்ஞானபூர்வ வரலாற்று நூலை’ கேள்வி கேட்கக்கூடாது என்று நினைத்து விட்டார்களா? என்று தெரியவில்லை. என் வாசிப்புக்கு கிட்டிய முரணை இங்கு முன்வைக்கிறேன்.

முரண் 1: பாரதியின் பால்ய திருமணத்தை விவரிக்கும் இடத்தில் “அப்போது பாரதிக்கு வயது 14, செல்லம்மாவுக்கு வயது 7” (15). “இவ்வளவு கோலகலமான கல்யாணம் நடந்த மறுவருஷம் பாரதிக்கு பெருந்துயரம் நேர்ந்தது... தந்தை இறக்கும் முன் 14 வயது பாரதி... (15). இவ்விரு குறிப்புகளும் ஒரே பக்கத்தில் இருந்தும் வயது இங்கு முரண்படுகிறது.

முரண் 2 : மூன்று மாதம் பத்துநாள் ஆனதும் பாரதியின் தந்காலிக வேலை முடிந்தது. 1906 நவம்பர் 10 ஆம் தேதி யோடு பாரதி தமிழ்ப் பண்டிதர் வேலையை விட்டார் (20). ஏற்கனவே எட்டையபுரத்திலும் மதுரையிலும் பார்த்த வேலைகள் ஒத்துவரவில்லையென்றதாலும் (23). இங்கு மதுரை வேலை கூட பாரதிக்கு திறமையால் கிடைக்க வில்லை. கோபாலகிருஷ்ணன் எனும் தமிழ்ப் பண்டிதரின் சிபாரிசின் காரணமாக சண்முகம் என்பவர் தனது விடுப்பு நாட்களை பாரதிக்கு வழங்கியிருக்கிறார். விடுப்பு முடிந்தபின் தானாக வேலையும் காலியாகி விடும் என்பதை 20ம் பக்கத்தில் பதிவு செய்த ரா.அ.ப. 23ம் பக்கத்தில் மதுரை வேலை ‘ஒத்துவரவில்லை’ யென்பதால் வேலையை விட்டு பாரதி விலகினான் என முரண்பட்டு நிற்கிறார்.

முரண் 3: சென்னைக்கு வந்த புதிதில் பாரதிக்கு அரசியல் ஈடுபாடே கிடையாது. தேசபக்தி துடிப்பும் இல்லை(26). 1904ல் சென்னை வந்தது முதலே பாரதியின் தேசாவேகம் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது (38). 26ம் பக்கத்தில் தேசபக்தி துடிப்பு இல்லை என்பது 38ம் பக்கத்தில் கொழுந்துவிட்டு எரிந்ததாக மாறியது எப்படியோ?

முரண் 4: குவளைக்கண்ணன் புதுவைவாசி. கல்வே கல்லூரியில் பத்து வருஷம் படித்தவர் (53). குவளைக் கண்ணன் படிப்பாளியல்ல. ஆனால் பாரதியிடம் ஊன்றிப் போன பக்தி கொண்டிருந்தார்(54). குவளைக் கண்ணன் பத்து வருஷம் கல்லூரியில்தான் படித்தாரா? எனில் என்ன படித்தார்? என்பதை 54ம் பக்கத்தில் பதிவாகியிருக்கும் விஞ்ஞான வரலாறுதான் பதில் தரவேண்டும்.

முரண் 5: நாகசாமி ஏற்பாட்டில் அன்றே ‘சூர்யோதயம்’ என்ற உள்ளூர் தமிழ் வாரப் பத்திரிகை ஆசிரியரானார் பாரதி. இதை நடத்தியவர் சைகோன் சின்னையா நாயுடு என்ற பிரபல புதுவை அச்சக முதல்வர் (62). ‘இந்தியா’ நின்று போய் விட்டது; சின்னையா ரத்னசாமி நாயுடு என்பவருடன் சேர்ந்து பாரதி ஆரம்பித்த ‘சூர்யோதயம்’ என்ற பத்திரிகையும் நின்று விட்டது(87). இங்கு புதுவை சின்னையாவின் பத்திரிகையை அப்படியே ரா.அ.ப. கபளீகரம் பண்ணியுள்ளார்.

ஆதாரப்பூர்வமான சித்ரபாரதி வரலாற்றில் முன்பின் முரண் கள் எப்படி வந்தன? இவை எல்லாம் தெரியாமல் நேர்ந்த குறைபாடா என்றால் இல்லை என்றுதான் பதில் கூற வேண்டி யுள்ளது. இரண்டு பதிப்பு கடந்து மூன்றாம் பதிப்பில் இத்தனை குறைபாடும் தெரிந்தே நடந்தேறியிருக்கிறது. பாரதி என்ற ஆளுமையை அதிஉன்னத நிலைக்கு கொண்டு வர முயன்ற முதல்நூல் இதுவென்றே சுட்டலாம். அதிஉன்னத கட்டமைத்தலுக்காகவே மொழி நடை லெகுவாக்கப்பட்டது. இந்த லெகு மொழிப்பின்னல்தான் பச்சாதாபங்கள்; பரிகாசங்கள்; இரக்க உணர்வு முதலான கருத்தமைவுகளை அனைத்து மூளையிலும் கேள்வி இன்றி செலுத்தும். இப்படிச் செலுத்தப்பட்ட ஒரு கருத்தமைவில் இருக்கும் உள்முரணை எப்படி ஒருவர் கண்ணோக்க முடியும்? என்று கூட ரா.அ.ப. நினைத்திருக்கலாம். அல்லது முரண் வழியாக கட்டப்படும் உன்னதமயமாக்கலை பச்சாதாப மொழிப்பின்னல் மறைத்து விடும் என்றும் நினைத்திருக்கலாம். அப்படி அவர் நினைத்தது தான் நடந்தேறியிருக்கிறது என்று கூட இங்கு சொல்லலாம். இல்லையென்றால் முதல்பதிப்பு வந்த அய்ம்பதாண்டில் யாரும் இவருக்கு உணர்த்தி யிருக்கலாம் அல்லவா?

இங்கு இந்நூலின் இரண்டாவது பகுதியாக விரிந்திருக்கும் அனுபந்தங்களை எடுத்து இங்கு விமர்சனப்படுத்துவோம். இந்த அனுபந்தங்களில் பாரதியின் இறப்பு குறித்தான பதிவு கள் முதல்பகுதியிலும் பாரதிக்குப் பின்னயை பாரதி எழுத்துக் களுக்கான இடத்தையும் பிறமொழிகளில் பாரதியின் பாடல் கள் மொழிபெயர்க்கப்பட்ட சூழல்கள் குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதியின் நினைவை போற்றும் அன்றைய தமிழ்ப் பத்திரிகைகளின் எழுத்துக்கள் மறு ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியிருக்கிறது. பாரதி வேலை பார்த்த இந்தியா, விஜயா, பாலபாரதம் முதலான இதழ்களை பாரதியே ஆரம்பித்தார் என்பதான பொருள் பதிந்த சொல்லா டல்கள் ரா.அ.ப. எடுத்தாண்டிருக்கும் பத்திரிகைகளில் விரவி இருக்கின்றன. ரா.அ.ப. அதை எல்லாம் நிராகரிக்காமல் அப்படியே எடுத்து பதிவு செய்திருக்கிறார்.

அனுபந்தம் 2ல் பராதிக்குப் பிந்தைய பாரதி எழுத்துக்கள், பதிப்புகள், தேசவுடமையாக்கப்பட்ட சூழல்கள், நினைவு மண்டபங்கள் முதலானவற்றை தொகுத்து இப்பகுதியில் கொடுத்திருக்கிறார். பத்துப்பக்க தொகுப்பில் ரா.அ.ப. தவறி யும் இடதுசாரிகளின் பணிகளை குறிப்பிடாமல் போனது ஆச்சர்யமாக இருக்கிறது. “பாரதி என்ற காங்கிரஸ்காரன் ருஷ்யப் புரட்சியை பாடியதற்காகவே ஒருபைசா வாங்காமல் கம்யூனிஸ்ட் ஆக்கப்பட்டான்” என்று ஒரு கட்டுரையாளர் சொன்னதில் எந்தத் தவறும் இருக்கவில்லை.

பாரதி என்ற பெயரைக் கிளறி தமிழ் சமூகத்திற்குக் குறிப்பாக இடதுசாரிகளுக்கு சொந்தமாக ஆக்கியதில் ‘பேராசான்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் ஜீவானந்தத்திற்கு மிக முக்கியப் பங்கிருக்கிறது. பாரதியின் பாடல்களை பட்டிதொட்டி எங்கும் பரப்பியவர் ஜீவா என்பதை யாரும் புறந்தள்ள முடியாது. அதே போன்று பாரதி குறித்தான விவாதங்கள் வந்தபோது முன் நின்று எதிராளியின் விவாதத்தை முறியடிக்கவும் ஜீவா சளைக்கவில்லை.

குறிப்பாக “யாமறிந்த புலவரிலே” பாட்டில் முதலாமவர் கம்பரல்ல தொல்காப்பியரே என கி.ஆ.பெ.விசுவநாதன் பேசியபோது அதை உறுதியுடன் எதிர்த்து கட்டுரை எழுதினார். பாரதியின் இந்துமத அபிமானம் அன்றிலிருந்து இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. ஆனால் ஜீவாவோ பாரதியிடம் சோசலிசத்தை தேடியவர். “...ஜனநாயகக் கோசங்களைக் கவிதைத் தேனில் குழைத்து இசை முழக்கம் செய்த நல்லிசைப் புலவன் அவன் ஒருவனே. சமதர்மத் திசையில் தனது தொலைநோக்குப் பார்வையை வீசிய புரட்சிக் கவியரசனும் அவன் ஒருவன் தான்” என ஜீவா சொன்னதை வரலாறு மறுக்காது. ஜீவா இத்தோடு நின்றுவிட வில்லை. பாரதியின் கிருதயுகத்தை கம்யூனிஸ்ட்டுகளின் புராதன பொதுவுடமைச் சமூகத்திற்கு ஒப்பிட்டார். துரதிருஷ் டமான இந்த ஒப்பீடுதான் இந்தியச் சமூகத்தை குறிப்பாக தமிழ் சமூகத்தை இடதுசாரிகளால் விளக்க முடியாமல் போனதின் தொடக்கநிலையாகும்.

வேதங்களை மிக நுட்பமாக ஆய்வுக்குட்படுத்திய அம்பேத்கர் வேதகால இந்தியாவை காட்டுமிராண்டிகளின் நாகரிகம் என் பார். அதே தருவாயில் வேதகால இந்தியாவுக்கு மாற்றான வளமையான நாகரிக இந்தியாவை சுட்டவும் அம்பேத்கர் தவறவில்லை. ஆனால் ஜீவாவோ வேதகால இந்தியாவை புராதான பொதுவுடமைச் சமூக காலமாக ஒப்பிட்டது பாரதி பாசத்தால்தான் என்று சொன்னால் அது பிழையல்ல. ஜீவாவை அடியொற்றிய இடதுசாரி கருத்தாளர்கள் பாரதியின் ஒவ்வொரு சொல்லாடலுக்கும் விளக்கம் கொடுத்து பாரதியை பாதுகாக்க ஆரம்பித்தனர். ஆரியர் X புலையர் என்ற எதிர்வை பாரதி இந்தியன் X ஆங்கிலேயன் என்ற எதிர்வுக்காக பயன் படுத்தினான் என்றது வரை இவர்களது கண்டுபிடிப்பு பரவி யது. இங்கு ஏன் பாரதி புலையன் X ஆரியன் என மாற்றிச் சொல்லவில்லை என்ற கேள்வி கூட எழாமல் போனதற்கு பேராசான் ஜீவாவே காரணமானார் என்று சொன்னால்அது மிகையல்ல.

ஜீவா இத்தோடு நிற்கவில்லை. பாரதியின் பாடல்கள் தேசிய சொத்தாக மாறவேண்டும் என்று 1947 அக்டோபர் 13ல் நடந்த பாரதி மண்டபத் திறப்புவிழாவில் பேசினார். (1948ல் மண்டபம் திறந்ததாக ரா.அ.ப.வும் 1947 அக்டோபர் 13ல் திறக்கப்பட்டதாக தோழர் நல்லகண்ணுவும் கூறுகின்றனர். எது விஞ்ஞான வரலாறு என்பதை ரா.அ.ப. இனிதான் கூற வேண்டும்). ‘ஜனசக்தி’ பிரசுராலயம் வெளியிட்ட துண்டறிக் கையில் ஜீவா எழுதியிருப்பதாகவும் அறியமுடிகிறது. தன் வாழ்நாளில் செய்த இலக்கியப் பகுதியில் கனிவான நேரத்தை பாரதிக்கு ஜீவா வழங்கியதாலே சென்னை பாரதி சங்கம் ஜீவாவுக்கு பாராட்டும் கேடயமும் வழங்கியது.

அதைப் போன்றே தற்போது நம்முடன் வாழ்ந்து வரும் தோழர் நல்லகண்ணு பாரதி மணிமண்டபத்திற்காக ‘கலைக்கழகம்’ என்ற அமைப்பின் வழி நிதி சேகரித்து வழங்கி அடிக்கல்நாட்டு விழாவிலேயும் கலந்து கொண்டிருக்கிறார். மணி மண்டபத் திறப்பை ஒட்டியே பாரதி சங்கத்தை இடதுசாரிகள் எட்டைய புரத்தில் நிறுவினர். ரா.அ.ப. பாரதி சங்கத்தை குறிப்பிடுகிறார். அதை நிறுவியர்கள் இடதுசாரிகள் என்பதை மட்டும் குறிப் பிடவில்லை- பாரதிக்கும் இடதுசாரிகளுக்குமான வரலாறு தொப்புள் கொடிபோல் தொடர்ந்து இருக்க ரா.அ.ப. அந்த வரலாற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் பெரும்பான்மை பார்ப்பனர்களை கொண்டே பாரதியின் வரலாற்றை புனைந்திருப்பதை கடுமையாக இக்கட்டுரை விமர்சிக்கிறது.

இந்த இடத்தில் வா.மு. தங்கப்பெருமாள் பற்றியும் கூற வேண்டும். பாரதி வா.மு. தங்கப்பெருமாளுக்கு எழுதிய கடிதத்தை குறிப்பிடும் ரா.அ.ப. அதைப்போன்று ஈரோடு கருங் கல்பாளையத்தில் கடைசியாகப் பேசியதையும் குறிப்பிடு கிறார். இங்கு கூட்டத்தை நடத்தியவர் பெயரை விட்டுவிட வும் செய்கிறார். பாரதி கடைசியாகக் கலந்துகொண்ட கருங் கல்பாளையத்தின் கூட்டத்தை கூட்டியவர் வ.மு.தங்கப் பெருமாள் என ‘முதல்குடியரசு சில பிரச்சனைகள் விமர்சனங் கள்’ எனும் நூலில் முருகு.ராசாங்கம் குறிப்பிடுகிறார். இவை தாண்டி முதல் குடியரசின் ஆசிரியர்களுள் வா.மு. தங்கப்பெரு மாளும் ஒருவர் என்பதையும் இங்கு குறிப்பிடலாம். இங்கு வேறொன்றையும் கவனப்படுத்த வேண்டும். அனைத்திலும் சாதிநீக்கம் தேவை என வாதிக்கப்படும் காலத் தில் ரா.அ.ப. பெயருக்குப் பின் வரும் சாதிஒட்டை எவ்வித கூச்ச நாச்சமின்றி எழுதியிருப்பது அருவருப்பை உண்டாக்குகிறது.

ஒட்டுமொத்தத்தில் ‘சித்ரபாரதியை’ நோக்கும்போது இந்நூல் பாரதிக்கு மிகப்பெரும் ‘ஒளிவட்டத்தை’ உருவாக்கி கொடுக் கிறது. இந்த ஒளிவட்டத்தில் நியாயமான பங்களிப்பு செய் தோரை இருட்டடிப்பு செய்து ஒளிவட்ட காரணகர்த்தாக்க ளாக பார்ப்பனர்களை மட்டுமே முன்வைக்கிறது. வரலாற்றுப் பிழை ஏராளமாக பொதிந்திருக்கும் இந்நூல் ஆதாரப்பூர்வ மான வரலாறு ஆகாது. பாரதியின் வரலாற்றை எழுத முயலும் வேறு யாருக்கேனும் இந்நூல் தொடக்கநிலை தரவாக இருக் கும். அதேவேளையில் பாரதியின் சாதியச் சார்பும் இன்னும் குறிப்பாக “தீவிரவாதிகள்” என அறியப்பட்ட “தேச பக்தர்களின்” சாதியச் சார்பும் விமர்சனத்திற்குட்படுத்தினால் ஒழிய முழுமையான பாரதி வரலாறு வெளிவர வாய்ப்பில்லை. இதற்கு அயோத்திதாசரின் எழுத்துக்கள் முக்கியப் பங்காற்றும் என்பதை மட்டும் இங்கு சொல்லிச் செல்லலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com