Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜுன் 2006
தேவகி

பிரதிபா ரே
தமிழில்: திலகவதி

காட்டுப் பாதையில் களைப்போடு நடந்தபடி, ஜுமியா சந்தையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். துயரத்தின் படிகளில் ஏறி, வாழ்க்கையின் மலைப்பாதையில் நடைபோட்டுச் செல்லுபவளைப் போலக் காணப்பட்ட அவள் இன்னதென்று அறியாத ஒரு பொருளைத் தன் மார்போடு, விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷத்தைக் கட்டிக் கொள்வதைப் போல இறுக அணைத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். அது, ஏதோ ஒரு சின்னஞ்சிறு குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சியபடி அவள் மார்போடு ஒட்டிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது.

அவள், மூன்று கால்வாய்களையும், ஒரு ஆற்றையும் கடந்து காட்டுக்குக் குறுக்கே பதினைந்து மைல்கள் நடந்து தன்னுடைய கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இரண்டு தினங்களுக்கு முன்னால் அவள் தன்னுடைய கிராமத்திலிருந்து, கடியால்கிராமத்துச் சந்தைக்கு நடந்தே போயிருந்தாள். திரும்பி வரும்போதும் அவள் விலை மதிப்பற்ற பொக்கிஷத்தைத் தன்னுடைய ஐந்து மாதக்குழந்தையை தன்னுடைய மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். அவள் சந்தையில் எதை விற்றாள், எதை வாங்கினாள் என்பதைப் பற்றி எல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. அவளுடைய ஒரே கவலை எப்படியாவது கிராமத்தை அடைந்து, பசி வியாதியை மேற்கொண்டும் பொறுக்க முடியாதவனாகக் கிராமத்தை விட்டு ஓடி விடுவதற்குத் தயாராக இருந்த அவளுடைய கணவன் கன்னுவுக்குக் கொஞ்சம் உணவைத் தந்து, அவனை உயிர் வாழச் செய்ய வேண்டும்... அவளும் கொஞ்சம் சாப்பிட்டு, மூச்சைக் கொஞ்சம் சுலபமாக இழுத்துவிட முடியுமாக இருந்தால்... அவளுடைய அந்த உடற்கூட்டிலும் கொஞ்சம் உயிர் ஊறும்.

கன்னு, ‘வா, நாம் இந்த கிராமத்தை விட்டு ஓடிப் போய்விடலாம். இந்த கிராமத்தில் வேலை இல்லை, உணவு இல்லை, இந்திரனின் கிருபை இல்லை, பயிர்கள் இல்லை. இங்கிருந்து வறட்சியும், பஞ்சமும், வியாதிகளும், மரணமும் ஒரு பொழுதும் விலகாது. வேறு ஏதாவது ஒரு இடத்துக்கு நாம் ஓடிவிடலாம்” என்று மாதக்கணக்காக, சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜுமியா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுக்குப் பால் குடிக்கும் கைக் குழந்தை இருந்தது. மற்றொன்று கருவில் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தக் கிராமத்தை விட்டு வெளியே போய் அவளால் என்ன செய்ய முடியும்? வேறு எதுவும் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அவர்களுடைய தலைக்கு மேல் கூரையாவது இருக்கிறது. அவர்களுடைய முன்னோர்களின் பாழடைந்து, சிதிலமான, விழப்போகும் நிலையில் உள்ள குடிசையாவது இருக்கிறது. மழைக்காலம் சமீபித்துவிட்டது. எப்படியாவது மழைக்காலம் வந்துவிடும். பிறகு அவர்களுக்கு வேலை கிடைக்கும். கடந்த பல வருடங்களும் நகர்ந்ததைப் போலவே வாழ்க்கை நகர்ந்து விடும். ஜுமியா சொல்வதைக் கேட்டுக் கேட்டு கன்னு அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற தன் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்து அங்கேயே இருந்தான். அவனைப் போல ஓட வேண்டும் என்ற தங்களுடைய ஆசையைக் கொன்றுவிட்டு நிறையபேர் தங்களுடைய இருப்பிடத்திலேயே வசித்தார்கள். வறட்சி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், கிராமத்தைச் சேர்ந்த எல்லோரும் வெளியேறி விடுவதில்லை.

அந்தக் குக்கிராமத்தில் பல பழங்குடி இனத்தவர்களும், குயவர்கள் மற்றும் யாதவர்களும் ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கை, மரணம், பசி, நோய், வறட்சி, பஞ்சம் ஆகியவற்றுடன் போர் புரிய வேண்டியிருந்தது. கிராமத்தில் கிணறோ, குளமோ இல்லை, பள்ளி இல்லை, மருத்துவமனை இல்லை, கடைகள் இல்லை, சந்தை இல்லை. தூரத்திலிருந்த கால்வாயில் இருந்து கலங்கலான தண்ணீரைக் கொண்டுவந்து, அரிசியைச் சமைத்து, அவர்கள் தங்கள் பசியை ஆற்றிக்கொண்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் பலர் வறட்சிக்குப் பலியானார்கள். ஒரு காலத்தில் ஜனசந்தடி மிகுந்திருந்த கிராமத்தில் இப்போது நோய்வாய்ப்பட்ட, பசியோடிருந்த இருநூறுபேர் மட்டுமே இருந்தார்கள். ஜுமியாவும் கன்னுவும் அடுத்தவர்களுடைய வயலில் வேலை பார்த்துவிட்டு, சம்பளமாக மண் பானைகளையும், குடங்களையும் பெற்றார்கள். அவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடுவதின் மூலமாக அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஜுமியா கன்னுவின் அடுப்படிக்குள் கால் வைத்துப் பதினேழு வருடங்கள் ஆகிவிட்டன. அவள் எட்டுக் குழந்தைகளைப் பெற்றுவிட்டாள். ஆனால் அவற்றில் ஒன்றுகூட அவளுக்கு சொந்தமாக இருக்க முடியவில்லை. அவை அவளைத் தத்தம் வழிகளில் ஏமாற்றிவிட்டு நழுவிப் போய்விட்டன. பெரிய மகன் அவளோடு இருந்திருந்தால், இப்போது அவனுக்கு பதினைந்து வயது ஆகியிருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்த வறட்சியின் போது கிராமத்து மக்களில் பலர் மத்தியப் பிரதேசத்துக்கும் பஞ்சாபுக்கும் வேலை தேடும் நம்பிக்கையோடு, வாழ வேண்டும் என்ற ஆவலோடு போனார்கள். மோத்தியும் யாருடனோ சேர்ந்து கொண்டு மத்தியப் பிரதேசத்துக்குப் போய்விட்டான். அதிலிருந்து அவன் திரும்ப வரவில்லை. அதற்குப் பிறகு அவனைப் பற்றி அவர்கள் எதையும் கேள்விப்படவும் இல்லை. சூறாவளி மாமரத்தின் பூக்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போய்விடுவதைப் போல வறட்சி கிராமத்துக்காரர்களை விழுங்கி, கிராமத்தை சோகம் ததும்பும், வருத்தத்துக்குரிய ஒரு இடமாக ஆக்கிவிட்டுப் போனது. மோத்தி திரும்ப வராதது நல்லதாயிற்று. அவன் எங்கேயிருக்கிறான், எப்படி இருக்கிறான், உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பதை ஜுமியா அறியவில்லை. ‘இப்போதும் என் மோதி உயிரோடிருக்கிறான்” என நினைத்துக் கொண்டு, அவள், தன்னுடைய எல்லாக் கவலைகளுக்குமிடையே மகிழ்ச்சியோடிருக்கிறாள். ஒரு தாயாக இருக்கும் அவளுடைய இதயம் உணர்ச்சிகளால் நிரம்பியிருக்கிறது. ‘அவன் எங்கே இருந்தாலும் நான்றாக இருக்கட்டும். யானை காட்டில் திரிந்தாலும், அரசனுக்குச் சொந்தமானதுதானே.” ஒரு தாய்க்கு, திக்கற்ற ஜுமியாவைப் போன்றவளுக்கு, இதைக் காட்டிலும் வேறு என்ன உத்திரவாதம் தேவை!

மோத்திக்குப் பிறகு பிறந்த குழந்iதைகளெல்லாம் பிறந்ததும் இறந்து போய்விட்டன. தன்னுடைய ஆறு சகோதரர்களும், சகோதரிகளும் ஒருவரையடுத்து ஒருவராக இறந்ததைக் கண்டு மோத்தி பயந்து போனான். ஆனால் கன்னு அதைப் பற்றி அதிகமாக கவலைப்படவில்லை. ஒவ்வொரு முறையும் இறந்த சிசுவை கந்தல் துணியில் சுற்றி சுடுகாட்டில் கொண்டுபோய்ச் சேர்த்ததும், அவன் கால்வாய்க்கு வந்து குளிப்பான். வீடுவந்து, சோறு சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் வேலைக்குப் போய்விடுவான். தன்னுடைய மகன் மோத்தியை ஆறுதல் படுத்துவதற்காக, அவனுடைய முதுகைத் தடவியபடி, ‘சாவைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? அதைப்பற்றி ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? மரத்திலே இருக்கும் எல்லாப் பழங்களும் பழுக்கிற வரையில் மரத்திலேயாவா இருக்கிறது? மனித வாழ்க்கையும் அது போலத்தான்” என்பான். ஜுமியா ஓரிரு தினங்கள் பயங்கரமாக அழுவாள். கன்னு தன் தைரியத்தை அவளிடம் காட்டிக் கொண்டு, ‘எதற்குப் பேனைப் பெருமாளாக்குகிறாய்? துரும்பைத் தூணாக்குகிறாய்? தங்கள் குடும்பத்தில் ஐந்து அல்லது ஏழு குழந்தைகள் சாவதைக் காணாத எந்தக் குடும்பமாவது இந்தக் கிராமத்தில் இருக்கிறதா? அப்ப? உன்னுடைய எல்லா வேலைகளையும் ஒரு பக்கம் போட்டுவிட்டு நீ மட்டும்தான் உன்னுடைய குழந்தைகளை இழந்துவிட்டதைப் போல, எதற்கு நீ இப்படி அழவேண்டும்? போய் வேலைகளைப் பாரு. அவை உன்னுடையவை இல்லை என்று நினைத்துக்கொண்டு உன்னை சமாதானப்படுத்திக் கொள்.” என்பான்.

ஜுமியா தன்னை ஆறுதல் படுத்திக்கொள்வாள். கன்னு தப்பாகச் சொல்லிவிடவில்லை. ஏதோ ஒரு தேவதை, ஒரு சாபத்தின் விளைவாக அவளுடைய கர்ப்பத்தில் மனித ஜென்மம் எடுத்துத் தோன்றிப் பிறகு தன் சாபம் முடிந்ததும் மீண்டும் சொர்க்கத்துக்குத் திரும்பப் போய்விட்டது. அத்தகைய தேவதைகள் எதற்காக இந்தச் சிறிய பழங்குடியினரின் கிராமத்தில் வாழ்ந்து பசியினாலும், நோயினாலும் துடிக்க வேண்டும்? அப்படி இறந்து போய்விடுகிறவன் கடவுள் - ஏனென்றால் அவனுக்குத் துயரமும் பசியும் தெரிவதில்லை. உயிரோடு இருப்பவன் மனிதன், அவன் வேதனையிலும், பசியிலும், துயரத்திலும் ஊறி அழுகிப் போகிறான். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எதிர் நீச்சல் போடும் வல்லமையோடு இருந்து, துயரங்களின் குன்றுகளைக் கடந்து, வருவது இயல்பானது, அழகானது. அது ஒரு அந்தரங்கமான ஆறுதல்.

ஜுமியாவுக்குக் குழந்தை பிறக்கும்போதெல்லாம் அந்த முறை கடவுள், அந்தக் குழந்தையிடம் கருணை காட்டுவார் என்று நினைப்பாள்;. அவளுடைய துயரமிக்க குடிசையில் ‘அம்மா’ என்கிற அழைப்பை அவள் கேட்கப் போகிறாள் என்று நினைப்பாள். ஆனால் ஒரு குழந்தையும் பிழைக்கவில்லை. அவர்களுடைய பெரிய மகனுக்குப் பிறகு ‘அம்மா’ என்று அழைக்கிற வயது வருகிறவரையிலும் கூட, ஒரு குழந்தையும் தங்கவில்லை. வறட்சி, அக்கம்பக்கத்தில் இருந்த ஐந்து கிராமங்களையும் பல வருடங்களாகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தது. குழந்தைகளைக் கொன்று, அது தாய்மார்களைக் குழந்தைகளற்றவர்களாகச் செய்து கொண்டிருந்தது. வறட்சி, கம்சனைப் போல பசியினாலும் பட்டினியினாலும், விறைத்துப் போன மென்மையான கழுத்துகளை நெறிக்கக் காத்துக் கொண்டிருந்தது.

இந்த ஆண்டு வறட்சி குழந்தைகளை மட்டும் அல்லாமல், பெரியவர்களையும், கிராமத்திலிருந்த கால்நடைகளின் உயிரையும் குடித்தேவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது. கிராமம் ஒரு சுடுகாட்டைப்போல திக்கற்றதாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் ஆகிக் கொண்டிருந்தது. கிராமத்திலிருந்து சுமார் நூறு பேர் கூலி வேலை செய்வதற்காக எங்கெங்கோ போய்விட்டார்கள். சிலர் கொத்தடிமைகளாகவும், சிலர் தினக்கூலிகளாகவும் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். கிராமத்திலிருந்த சில வசதியுள்ள குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட்டார்கள். விதைக்காக வைக்கப்பட்டிருந்தவற்றைக் கூட பசியைத் தணிப்பதற்காகச் சாப்பிட்டுவிட்டார்கள். அவர்கள், நிலம், பாத்திரங்கள், பசுக்கள், காளைகள், ஆடுகள், வெள்ளாடுகள் என்று எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஏதுமற்றவர்களாக ஆகிப்போனார்கள். உணவை உண்பதற்குக்கூட வீட்டில் தட்டுகள் இல்லை. எத்தனை நாளைக்குக் கிழங்குகளையும், வேர்களையும் சாப்பிட்டு உயிர் பிழைக்க முடியும்? மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விஷக் கிழங்குகளைக் கூட வேகவைத்துப் பிழிந்துவிட்டுச் சாப்பிடலானார்கள். இப்போது, காட்டிலிருந்த வேர்களும் கிழங்குகளும்கூட காலியாகிவிட்டன. உயிர்வாழ, மக்கள் இப்போது மரப்பட்டைகளையும், வேக வைத்த இலைகளையும் சார்ந்திருக்கலானார்கள். ஜுமியாவும் கன்னுவும் நான்கு உழைக்கும் கரங்களைத் தங்களுடைய சொத்தாகக் கொண்டிருந்தார்கள். வயல்களில் பயிர்கள் ஏதும் இல்லாததால், கிராமத்தில் வேலை எதுவும் இல்லை. வேலை இல்லாதபோது, அரிசியும் கிடைக்காது. அரிசி இல்லாமல் கைகள் நீண்டகாலம் சம்பாத்தியம் செய்வதென்பது முடியாது.

கிராமத்தில் விழுந்து கிடந்த எலும்புக்கூடான மனித உருவங்களைக் கண்டு இளையவர் யார், முதியவர் யார் என்பதைச் சொல்ல யாராலும் முடியாது. அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காட்சியளித்தார்கள். அவர்களுடைய உயரமான அல்லது சிறிய உருவங்களை வைத்துத்தான் ஒரு நபர், குழந்தையா, வயது வந்தவரா என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய கண்கள் பயங்கரமாகக் குழி விழுந்து போய், உடல் வெறும் எலும்புக்கூடாகி, கன்னங்கள் பள்ளமாகிக் கிடந்தன. உணவு இல்லாமல், குழந்தைகளின் தலையிலிருந்த முடிகூட நிறம் மாறிப் போய்விட்டிருந்தது. மிருகங்கள் மற்றும் மனிதர்கள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள், வயல் வெளிகள் மற்றும் காடுகள் எல்லாவற்றிலும் முதுமை முற்றிலுமாகக் கோலோச்சியது.

ஜுமியா தன்னுடைய இளம் குழந்தையைப் பற்றிய நம்பிக்கைளை விட்டுவிட்டாள். அவள் ஒரு வாய் உணவு கூட சாப்பிடாத போது, அவளால் எப்படித் தன் குழந்தைகளுக்குப் பாலூட்ட முடியும்? காட்டுமரங்களின் அவிக்கப்பட்ட இலைகள் அவளுக்கும் கன்னுவுக்கும் சில நாட்கள் பசியாற்றும். ஆனால் குழந்தை எப்படி வாழ்வான்? தன்னுடைய குழந்தையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஜுமியா சந்தைக்குக் கிளம்பியபோது, கன்னு அவளிடம், ‘நீ சந்தையில் எதை விற்பாய்? உன்னுடைய கையில் விற்பதற்கு என்ன இருக்கிறது வெள்ளாடா, கோழியா, முட்டையா, காய்கறிகளா அல்லது பாத்திரங்களா? எதற்காக சந்தைக்குப் போகிறாய்? நீ வெறும் வயிற்றோடு பதினைந்து மைல் தூரம் நடந்து எப்படி ஆறுகளையும், பள்ளத்தாக்குகளையும் கடந்து போகப் போகிறாய்? நீ, ஏதோ ஒரு மாதிரி விளையாட்டாக ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு கடியால் போய் சேர்ந்தே விட்டாலும், உன்னுடைய முகத்தை மட்டும் பார்த்து யார் அரிசியோ, பணமோ தரப் போகிறார்கள்?” என்று கேட்டான்.

ஜுமியா, வருத்தம் நிரம்பியவளாக ‘நான் உயிரோடு வாழ்கிறேனா அல்லது சாகிறேனா என்பது இரண்டாம்பட்சம். நான் விரும்புவது என்னவென்றால் எப்படியாவது இந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். வறட்சி, கம்சனைப் போல கிராமத்தில் பதுங்கியிருக்கிறது. அது, என்னுடைய குழந்தையை என்னிடமிருந்து பறித்துக் கொண்டு போகத் தயாராக இருக்கிறது. கிராமத்திலிருந்து பலர் சந்தைக்குப் போகிறார்கள். நானும் போவேன். ஏதாவது வழி கிடைக்கிறதா என்று பார்ப்பேன்.” என்றாள். அவள் வேறு எதையோ சொல்ல விரும்பினாள், ஆனால் அவள் தொண்டை கண்ணீரால் அடைத்துக் கொண்டது.

கன்னு, அவளுடைய கிழிந்துபோன புடவையைப் பார்த்து ‘பசி, உன்னை அடக்கத்தையும், மானத்தையும் இழந்து போகும்படிச் செய்துவிட்டதா? நீ சரியாகக் கூடவா உடுத்திக் கொள்ளாமல் சந்தைக்குப் போவாய்?” என்றான்.

இப்போது கோபம், துயரம், நிராசை ஆகியவற்றால் எரிச்சல் கொண்டவளாக ஜுமியா, ‘அடக்கத்தைப் பற்றியும் மானத்தைப் பற்றியும் என்ன பேச்சு வேண்டியிருக்கு? என் வயிற்றில் எரியும் பசியின் நெருப்பை நான் என் சதையைத் தின்று மட்டும்தான் இப்போது ஆற்றிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. என்னுடைய எலும்புக் கூட்டைப் பார்த்து கேலி பேச சந்தையில் யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்?... அங்கே ஒரு புடவையும் கிடைக்குமா என்று நான் பார்ப்பேன்...” என்றாள்.

ஜுமியா குழந்தையை இறுக்கமாக எடுத்துத் தூக்கிக்கொண்டு புறப்பட இருந்தபோது, கன்னு ‘அப்படியானால் போ! போவதாயிருந்தால் நான் சொல்வதைக் கேள்... இனிமேலும் நான் இந்த கிராமத்தில் பரிதவிக்கப் போவதில்லை. என்னால் கொஞ்சம் நடக்க முடியும்படி ஆனதும், உன் பேச்சை கவனிக்காமல் நான் ராய்ப்பூருக்குக் கிளம்பிவிடுவேன். ரிக்ஷா இழுப்பதன் மூலமாவது, கூலி வேலை செய்வதின் மூலமாவது அங்கே எனக்கு ஒரு கை அரிசிக் கிடைக்கும்...” என்றான்.

ஜுமியா உடனடியாக அவனைக் குழந்தையைத் தீண்டச் செய்தாள். ‘மறுபடியும் கிராமத்தை விட்டுக் கிளம்புவதைப் பற்றி எப்போதும் பேசமாட்டேன் என்று உன்னுடைய குழந்தையின் பேரால் சத்தியம் செய். நான் சந்தையிலிருந்து நிச்சயமாக ஏதாவது கொண்டு வருவேன். உனக்கு ரிக்ஷா இழுக்கிற அளவு சக்தி இருக்கிறதா” என்று கேட்டாள்.

கன்னு திகைத்துப் போனவனாகத் தன்னுiடைய கையை இழுத்துக் கொண்டான். ‘ஏய்! எதுக்கு குழந்தை மேல சத்தியம்செய்யும்படி சொல்றே? மற்ற எல்லாக் குழந்தைகளும் வறட்சியால விழுங்கப்பட்டுடுச்சு. நீ சந்தைக்கிப் போற வழியில இந்தக் குழந்தை கடைசி மூச்சை விட்டுடாதுன்னு மட்டும் நான் நம்பறேன்.” என்றான்.

‘உன்னுடைய இந்தக் கெட்டவாய், கெட்ட விஷயங்களை மட்டும்தான் பேசும். இரவும் பகலும் கிராமத்தை விட்டுக் கிளம்பறதா என்னை பயமுறுத்திக்கிட்டே இருக்கே. என்னவோ நீதான் எனக்கும் என் குழந்தைக்கும் சம்பாதிச்சுப் போடுறது மாதிரி...” இதைச் சொல்லியபடி ஜுமியா வெடித்து அழுதாள்.

கன்னு, குழந்தையின் வற்றிப்போன முகத்தை மென்மையாகத் தடவியபடி ‘அப்ப சரி, போ. ஆனா, குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்க. வழி ரொம்ப மோசமா இருக்குது. நீயும் அவ்வளவு நல்ல ஆரோக்கியத்தோட இல்ல.” என்றான்.

ஜுமியா குழந்தையைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, மிகுந்த சிரமத்தோடு காட்டுப் பாதையில், ஆறுகளையும் கால்வாய்களையும், திட சித்தத்துடன் கடந்தாள். ஒவ்வொரு அடியுடனும் அவள் கொண்டிருந்த தீர்மானம் வலிமை அடைந்து கொண்டிருந்தது. அவள் வாழ்வாள், கன்னு வாழ்வான், அவளுடைய மகன் வாழ்வான். ஒரு மனிதன் இதற்காகத்தான்; பிறக்கிறான்... வாழ்வதற்காக... இதுபோலத்தான் வசுதேவர் கிருஷ்ணனை தேவகியின் கைகளிலிருந்து எடுத்துக் கொண்டு, காட்டைக் கடந்து ஆறுகளையும், சிற்றாறுகளையும் கடந்து கோகுலத்தை நோக்கி நடந்தார். தன்னுடைய கிருஷ்ணன் கம்சனின் பிடியிலிருந்து தப்பவேண்டும் என்ற தீர்மானம் வாசுதேவருக்கும் இருந்தது. ஆமாம், அவன் தப்புவான்... அன்றைய தினம், தேவகி தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, கிருஷ்ணனை வசுதேவரிடம் கொடுத்தாள். ‘எங்கேயிருந்தாலும் என் மகன் நல்லபடி உயிரோடு இருக்கட்டும்.” தேவகி விரும்பியதெல்லாம் அதைத்தான். ஜுமியாவின் விருப்பம் தேவகியின் விருப்பத்திலிருந்து வேறுபட்டதல்ல. தேவகியும் ஒரு தாயாக ஜுமியாவைப் போல இருந்தவள்தான். ஜுமியாவின் தாய்மை தேவகியின் தாய்மையை விட எந்தவிதத்தில் குறைந்தது? வறட்சி, அந்தக் கம்சன் அவளுடைய கரங்களிலிருந்து அவளுடைய ஆறு குழந்தைகளைப் பறித்துவிட்டான். இப்போது கம்சன் இடியின் ரூபத்திலும், புயலின் ரூபத்திலும், இந்தக் குழந்தையையும் அவளுடைய கையிலிருந்து பறித்துக் கொள்வதற்காக அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் போல் இருந்தது.

ஜுமியா தன்னுடைய மகனைக் கந்தலில் நன்றாகச் சுற்றி இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை, ஜுமியாவின் வற்றிய மார்பகத்தின் மேல் வைத்த தன் வாயுடன் வலுவற்ற தன்னுடைய தாயின் மார்போடு ஒன்றிப் போயிருந்தது. சமயங்களில் அவன் உயிரோடுதான் இருக்கிறானா என்று ஜுமியா யோசித்தாள். குழந்தை, பால் இருந்தால் கூட அதை உறிஞ்ச முடியாத அளவு அவ்வளவு பலவீனமாக இருந்தது. ஜுமியாவின் மார்பகத்தில் அவளுடைய மகனுக்காக ஒரு சொட்டுப் பால் கூட இல்லை. ஜுமியா முட்கள், சரளைக் கற்கள் பற்றிக் கவலை கொள்ளாதவளாக நடந்தபடி இருந்தாள். அவளுடைய பலவீனமான கால்கள் அறியாத ஏதோ ஒன்றிலிருந்து வலிமையைப் பெற்றன.

ஜுமியா கடியால் சந்தையில் மண்பானைகளையும் குழந்தைகளையும் விற்றிருக்கிறாள். சில சமயங்களில் முட்டைகளையும், கோழிகளையும், வீட்டுத் தோட்டத்திலிருந்த காய்கறிகளையும் விற்றிருக்கிறாள். ஆனால், இன்று அவள் விற்கப் போவதை மறுபடியும் அடுத்த ஏழு ஜென்மங்களிலும் அவள் விற்காமல் இருக்கும்படியாக காப்பாற்றப்படுவாளாக. அதைப் பற்றி உலகத்துக்கு ஒரு செய்தியும் கிடைக்காமல் போகட்டும். ஏனென்றால் அவ்வாறு நேர்ந்தால் மக்கள் ஜுமியா ஒரு தாயா அல்லது பேயா என்று எண்ணுவார்கள். யாரால் ஜுமியாவின் மன வேதனையைப் புரிந்து கொள்ள முடியும்?

அவர்களுடைய கிராமத்திலிருந்து பலர் சந்தையில் விற்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இளம் மனைவி அவளுடைய கணவனால் விற்கப்பட்டிருக்கிறாள். திருமண வயது வந்த ஒரு பெண் அவளுடைய தந்தையால் விற்கப்பட்டிருக்கிறாள். ஒரு கணவன் அவனுடைய மகளையும், மகனையும், மனைவியையும் விட்டுவிட்டுக் கண்காணாத ஏதோ ஒரு மூலைக்கு ஓடிப் போய் விட்டான். பசி பொறுக்க முடியாதவனாக ரமாவின் கணவன் ஓடிவிட்டான். ரமாவுக்கு ஒரு இளம் மகளும், கைக்குழந்தையும், தவழும் மகளும் இருந்தார்கள். அதிகப் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரமா அவளுடைய இளம் மகளை விற்றாள். சின்னக் குழந்தைகளை விற்பதனால் அவளுக்கு அதிகப் பணம் கிடைத்திருக்காது. பனாஸ்புஞ்சி, திருமண வயது வந்த அவளுடைய நாத்தனாரை நூறு ரூபாய்க்கு விற்றாள். ஜுமியாவுக்கு ஒரு இளம் மகள் இருந்திருந்தால் அவளும் அவளைத்தான் விற்றிருப்பாள், தன்னுடைய மகனை அல்ல. அவள் செய்ய இருந்தது பாவமில்லை. அவள் வாழ்வாள், அவளுடைய மகனும் வாழ்வான். கிருஷ்ணனை கோகுலத்துக்கு அனுப்பிய தினத்தில், தேவகியும் தன்னையும் தன் மகனையும் காப்பாற்றிக் கொள்வதைப் பற்றி நினைக்கவில்லையா? இன்றைக்கு நிறையத் தாய்மார்கள், நிறையக் குழந்தைகளை வளர்க்க முடியாததால் கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள். அது பாவமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். உண்மையில், அது நன்மைக்கானது. அவள் ஒரு கருவை அழிக்கப் போவதில்லை. வாழ்வதற்கு வேறு எந்த வழியையும் அவளால் கண்டுபிடிக்க முடியாததால் அவள் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாள்.

பயணம் முழுக்க ஜுமியா தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள, நியாயப்படுத்திக் கொள்ள, முயன்று கொண்டே இருந்தாள். தான் எடுத்துக்கொண்டிருக்கிற வேலை எவ்வளவு தூரத்துக்குத் தவிர்க்க முடியாதது என்பதை நினைத்துக் கொண்டே இருந்தாள். குழந்தையை அன்னை யசோதாவிடம் கொடுத்துவிடுவது மெத்தச் சிறந்தது, பைன் மரங்களுக்குக் கீழே அதனுடைய சடலத்தை உருட்டி விடுவதைக் காட்டிலும் எவ்வளவோ மேலானது என்று மீண்டும் மீண்டும் நினைத்து அவள் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.

கடியால் சந்தைக்கு அருகே ஒரு பெரிய மனிதன் ஒரு குழந்தைக் கிடைக்குமா? என்று ஆவலோடு பார்த்தபடி சுற்றிக் கொண்டிருந்தான். கடவுள், அவனுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதிக்கவில்லை. அவன் ஒரு அனாதைக் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறான். ஜுமியா சந்தையிலிருந்து திரும்புகிறவர்கள் மூலம் பலமுறை அவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள். அவன் கடியாலிலுள்ள மிஷனரி மருத்துவமனையில் நிராகரிக்கப்படுகிற ஒரு குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறான். அவனுடைய விருப்பம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அந்தப் பெரிய மனிதன் ஒரு மகனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தான். ஜுமியா வாழ்க்கைக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள். மனதில் இந்த நம்பிக்கையோடு அவள் கடியால் சந்தைக்கு வந்திருந்தாள். இப்போதிருந்து இன்னும் சில மாதங்களில் அவள் மீண்டும் தாயாகிவிடுவாள். குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஜுமியாவுக்குக் கடினமானதல்ல. அவளுக்குக் கடினமாகத் தெரிந்தது எதுவென்றால் அவளை ‘அம்மா” என்று அழைக்கிற வரை அந்தக் குழந்தையை உயிரோடு வாழ வைப்பதுதான். ஜுமியா தன்னுடைய மனோதிடத்தை வளர்த்துக் கொள்ள மீண்டும் மீண்டும் முயன்றாள்.

விஷயம் எளிதாக முடிவடைந்தது. அவள் குழந்தையைப் பெரிய மனிதரின் மனைவிக்குக் கொடுத்து விட்டதும், ஜுமியாவின் வயிறு கலங்கவும், பிசையவும் தொடங்கியது. ஒருவேளை அதற்குள்ளேயிருக்கும் குழந்தை, ‘ஐயோ! அம்மா நீ என்னையும் இது போல வித்துடுவியா?” என்று கேட்கிறதோ? பெரிய மனிதரின் மனைவி உணர்;ச்சி நிரம்பித் ததும்பிய குரலில், ‘மனசில் எதையும் வைத்துக் கொள்ளாதே. உன்னுடைய மகன் நன்றாக வாழ்வான். இப்போது அவன் என் மகன்” என்றாள். குழந்தையை அன்போடு தடவிக் கொடுத்தபடி, ஏதோ ஜுமியா அவன் மேல் திருஷ்டி போட்டுவிடுவாள் என்பதைப் போல அவள் உடனே வீட்டுக்குள்ளே போய்விட்டாள்.

அந்தப் பெரிய மனிதர் ஜுமியாவின் கையில் ஒரு முரட்டுப் புடவையையும், எண்பது ரூபாய்களையும் வைத்தார். ஜுமியா அவளுடைய வாழ்நாளில் அவ்வளவு பணத்தை ஒரு சேரத் தொட்டதே இல்லை. ஆனாலும் அவள் வெறும் பெண்தானே என்று எண்ணிக்கொண்டு அந்தப் பெரிய மனிதர் அவளை ஏமாற்றிவிட்டதாக அவள் நினைத்தாள். பசுக்கள், காளைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் எல்லாம் கூட எவ்வளவோ அதிகமான விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு கோழி மட்டும் நாற்பது ரூபாய் விலையாக இருந்தது. ஒரு மனிதக் குழந்தையின் விலை, அதுவும் ஒரு ஆண் குழந்தையின் விலை எண்பது ரூபாயும் ஓரு புடவையும் மட்டும்தான். ஆனால், பெரிய மனிதரோடு வாதம் செய்வது சரியில்லை என்று அவள் நினைத்தாள். அவர் குழந்தையைத் திருப்பிக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது? அவனை முள்ளடர்ந்த பைன் மரங்களுக்குக் கீழே நிரந்தரமாக ஓய்வு கொள்ளச் செய்வதைத் தவிர அவளால் வேறு எதுவும் செய்ய முடியாது.

வலியாலும் நிச்சயமின்மையாலும் சுருங்கிய அவளுடைய முகத்தைப் பார்த்த பெரிய மனிதர், ‘குழந்தை மிகவும் பலவீனமாகவும் நோயுற்றும் இருக்கிறது. அவனுக்கான மருந்துகளுக்கு எனக்கு நிறையச் செலவாகும் அம்மா. என்னிடம் மேற்கொண்டு கொடுப்பதற்குப் பணம் இல்லை. அவனுடைய மருத்துவ செலவுகளுக்காக நான் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது” என்றார்.

அவர், அவளுடைய குழந்தைக்கான வைத்தியத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்டதும் அவள் மிகுந்த கவலையோடு, ‘இல்லை, இல்லை ஐயா. எனக்கு இது போதும். குழந்தைக்கு நல்லபடியாக உணவளித்து வைத்தியம் பார்ப்பீர்கள் என்று மட்டும் எனக்கு உறுதி கொடுங்கள். நான் நம்பிக்கையோடு திரும்பிப் போவேன்.” என்றாள் ஜுமியா.

வீட்டின் எஜமானி உள்புறமிருந்து ‘என் மகனைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நான் அவனை அக்கறையாகக் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்றா நீ நினைக்கிறாய்? புறப்படு, இந்த மழையிலும், புயலிலும் நீ வெகுதூரம் போக வேண்டியிருக்கிறது. குழந்தையைப் பற்றி இனிமேலும் நினைத்துக் கொண்டிருக்காதே. அது அவனுக்கு நல்லதல்ல. இதோ பார், மறுபடியும் இங்கே ஒரு போதும் வராதே!” என்றாள்.

ஜுமியா புறப்படுவதற்குத் திரும்பினாள். குழந்தையை இன்னொருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும் அவளால் அதைச் சொல்ல முடியவில்லை. வேறொருவரின் குழந்தை மேல் அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? எஜமானி, அவளுக்கு விரைவாக விடை கொடுத்து அனுப்ப விரும்புகிறாள் என்பதை புரிந்து கொள்ள அவளுக்கு நேரமாகவில்லை.

அவள் புறப்படுவதற்குத் திரும்பிய போது உள்புறத்திலிருந்து லேசான அழுகுரல் கேட்டது. அவளுடைய இதயம் புரண்டது. அவள் ஓரடி பின்வாங்கி உடனடியாகத் தன்னுடைய தவறை உணர்ந்தாள். வேறு ஒருவரின் குழந்தையின் அழுகையைக் கேட்டுத் தான் வேதனைப்படுவது சரியல்ல. ஒரு குழந்தையின் தாயைக் காட்டிலும் அவனைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுபவள் ஒரு சூனியக்காரி. ஜுமியா இனிமேலும் அவளுடைய குழந்தைக்கு தாய் அல்ல.

திரும்பிச் செல்லும் வழிநெடுக அந்தக் கடைசி அழுகைக் குரலை ஜுமியா கேட்டபடி இருந்தாள். குழந்தை நிச்சயமாகக் கைகளையும், முகத்தையும் தடவித் தடவிப் பார்க்கும் என்று அவள் நினைத்தாள். இல்லாவிட்டால் வேறு எதற்கு அவன் அழுவான்? தன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவளுடைய கன்னங்களில் கண்ணீர் இடைவிடாமல் வழிந்து உலர்ந்து கொண்டிருந்தது. பசியோடும் தாகத்தோடும் அவள் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் அவர்கள் இருவருடைய வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தே விட்டிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும் என்று அவள் தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள். அம்மாவும் மகனும் அமைதியான உறக்கத்தில் சேர்ந்தே இருந்திருப்பார்கள். அவள் ஏன் இப்படி நடந்துகொண்டு, அவளுடைய இதயத்தில் என்றென்றைக்கும் கவலை இருக்கும்படியான ஆயுதத்தை செருகிக்கொண்டு விட்டாள்? பிறகு குழந்தையை எதற்கு அவள் பட்டினி போட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்? யாரோ ஒருவருடன் அவன் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வது நல்லது. கிருஷ்ணனைப் போல, இப்போது அவன் கம்சனின் பிடியிலிருந்து தப்பிவிட்ட அவன் ஒரு கண்ணியமான மனிதனாக வளரமாட்டான் என்று யாரால் சொல்ல முடியும்?

சாலை மேலும் மேலும் நீண்டு கொண்டே போனது. ஜுமியாவின் பாதங்கள் முன்னோக்கி நகர மறுத்தன. அவளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு விதமான வலி அவளுடைய உள்புறத்தைக் கிழித்துப் போட்டது. கையாலாகாத தன்னைப் பற்றியா, தன் விதியைப் பற்றியா என்று அவளால் ஆழம் காண முடியாத ஆத்திரம் ஒன்று அவளுக்குள்ளிருந்து கிளர்ந்து எழுந்தது. சமயங்களில் அவள் அந்தப் பெரிய மனிதனின் மனைவியை நினைத்துப் பொறாமை கொண்டாள். அவர்கள் வீட்டில் உணவு இருந்த ஒரே காரணத்தினால் அவள் இன்று பிரசவ வேதனை அறியாமலேயே ஒரு தாயாகிவிட்டாள். ஜுமியாவோ ஏழையாக இருந்ததினால், அந்த வலியை அனுபவித்துத் தன்னுடைய சொந்த சதையாலும் ரத்தத்தாலும் ஆன ஏழு குழந்தைகளைப் பெற்றிருந்தும் கூட குழந்தையற்றவளாக ஆகிப்போயிருந்தாள்.

அடுத்த கணம் தன்னுடைய பெண்மையை நினைத்து அவள் பெருமையால் பூரித்தாள். அவளுடைய கருவில் எட்டாவது குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் அவள் அதைப் பெற்றெடுப்பாள். அவளுடைய எட்டாவது குழந்தை, நிச்சயமாக அவனுக்குள் ஏதாவது ஒரு தெய்வாம்சத்தைக் கொண்டிருக்கும். அவன் வறட்சி, பஞ்சம், வறுமை என்ற கம்சனை அழிப்பானாயிருக்கும். அவன், பிறந்ததும் யாரும் தங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளைப் பசியின் பிடியிலிருந்து தப்புவதற்காக விற்காமல் இருப்பார்கள். வறட்சி இருக்காது. அந்தக் குழந்தையை கருத்தரித்தது முதல் ஜுமியா அவர்களுடைய கஷ்டங்களெல்லாம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்று உணர்ந்தாள். அவர்களுடைய கிராமத்தவர்கள் யாருக்கும் இனி உணவு, துணிக்கு தட்டுப்பாடு ஏற்படாது. எப்படி அவள் அந்தக் குழந்தையை உயிரோடு வைத்துக் கொண்டிருக்கப்போகிறாள். எப்படி வளர்க்கப்போகிறாள் என்பதை எல்லாம் அவள் யோசித்தாள். ஜுமியா குழந்தையை விற்ற வலியை மறக்கத் தொடங்கியிருந்தாள். வறட்சி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அவள் செத்தாலும் சாவாளே தவிர அவள் இந்தக் குழந்தையை விற்றுவிட மாட்டாள் என்று மறுபடியும் மறுபடியும் தீர்மானித்துக் கொண்டாள்.

எதிர்கால மகிழ்ச்சியை உத்தேசித்தோ அல்லது வேறு காரணத்தினாலோ ஜுமியாவின் உடல் முழுவதும் மெல்ல அதிரத் துவங்கியது. வலி தீவிரப்பட்டு உடனே அவளுடைய உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவியது. அவளுடைய கால்கள் இரண்டும் நடுங்கத் தொடங்கின. அவளுடைய முதுகெலும்பிலிருந்த ஏதோ ஒன்று இடுப்புக்கு அருகே, அடி வயிற்றுப் பகுதியில் இருந்து எதிர்ப்புக்குரல், கலகக்குரல் கொடுக்கத் தொடங்கியது. இந்த கலக்கத்தின் அர்த்தம் புரியாதது இல்லை. ஒரு பெண் அனுபவிக்கும் பயங்கரமான வலியில் துடித்தவளாக அவள் தரையில் மல்லாந்து படுத்தாள். அவளுடைய பார்வை மங்கத் தொடங்கியது. அவள் தன்னுடைய உப்பிய வயிற்றைத் தன்னுடைய இரண்டு கைகளாலும் தடவியபடி, ‘இல்லை, இது நடக்கக் கூடாது. என்னுடைய எட்டாவது குழந்தை ஒரு மின்னல் வீச்சோடு கலந்துபோய்விடக் கூடாது. இன்னமும் அந்த தெய்வக்குழந்தை பிறப்பதற்கான தருணம் வரவில்லை. அய்யோ என் மகனே, உனக்கு ஏன் விளங்கவில்லை? கம்சனின் வறட்சி, ரூபத்தில் இன்னமும் கிராமத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். நீ பிறப்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை...”

ஜுமியாவின் உடலிலிருந்த ஒவ்வொரு பாகமும் துடித்தது. வலியைக் காட்டிலும் அதிகமாகத் தீயது ஏதோ நடக்கப் போகிறது என்ற முன்னுணர்வினால் அவளுடைய கண்கள் விரிந்தன. வலியின் கடுஞ்சுமை ஒரு துள்ளலோடு சட்டென்று முடிவுக்கு வந்தது. அவளுடைய கண்கள் களைப்பினால் மூடிக்கொண்டன. முந்தைய தருணங்களைப் போல, மென்மையான குழந்தையின் அலறல் ஓசை எந்தக் கணமும் காற்றை நிறைக்கும், அவளுடைய மனம் மீண்டும் தாயானதில் மகிழ்ந்து நடனமாடும் என்று அவள் நம்பிக் கொண்டிருந்தாள்.

அத்தகையது எதுவும் நடக்கவில்லை. புத்தம்புதிய சிசுவின் அழுகுரல் வனத்தின் பூமியை புனிதப்படுத்தவில்லை. பதிலாக, அவளுடைய இதயத்தைக் கிழித்துக்கொண்டு எழுந்த பரிதாபகரமான ஓலம் களைப்பை மறந்து அவளை எழுந்து உட்காரச்செய்தது. அவளுடைய கால்களில் ஒரு ரத்த ஊற்றுப் பெருகி ஓடியிருந்தது. அங்கு அவளுடைய கேவலப்பட்டுப் போன தாய்மையை பரிகசித்தபடி உயிரற்ற ஓர் சதைத் திரள் விழுந்து கிடந்தது, அவளுடைய எட்டாவது கர்ப்பத்தின் தெய்வக் குழந்தை அவளுடைய கருப்பையிலிருந்து விடுதலை பெற்று விட்டது. அந்த உயிரற்ற சதைத் திரள், அவளுக்கு ‘ஒரு மனிதக் குழந்தை தன்னுடைய தாயினால் பாலுட்டப்பட்டு, அவள் மடியில் வளர்வதற்காகப் பிறக்கிறது. ஒரு புடவைக்காகவும், எண்பது ரூபாய்க்காகவும் விற்கப்படுவதற்காக அல்ல. ஒரு மனிதக் குழந்தையின் மதிப்பு இவ்வளவு குறைவாக, காய்கறிகளோடும், செம்மறி ஆடுகளோடும், ஆடுகளோடும், காளைகளோடும், கோழிகளோடும் ஒப்பிடப்படும்பொழுது பொருட்படுத்தத் தகாததாக இருக்கும் பூமியின் இந்தப் பகுதியில் நான் ஒரு பாகமாக இருக்க விரும்பவில்லை...” என்று குறி சொல்வது போல சொல்லியது.

ஜுமியாவால் இந்த உன்னதமான வாசகங்களை, தெய்வக்குழந்தையின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உயிரற்ற சதைத் திரளின் மீது, வேதனை மிகுந்த, பரிதாபகரமான பார்வையை, வீசியபடி அவள் தன்னுடைய ரத்தம் சோர்ந்த கால்களை மடக்கினாள். அவளுடைய புடவை முந்தானையில் எண்பது ரூபாய்களையும், இறுக்கமாக முடிந்து கொண்டு அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். பிறகு அவள் ஒவ்வொரு அடியாக முன்னால் எடுத்து வைத்து நகரத் தொடங்கினாள். அவளுடைய உடல் லேசாகியிருந்தது. அவளுடைய எட்டாவது குழந்தையைப் போல, இந்த உலகில் எல்லாமே மாயை. அரிசியும், துணியும் உயிரோடு இருப்பதும் மட்டும்தான் உண்மை என்று அவள் நினைத்தாள்.

புடவையையும் பணத்தையும் ஒரு இளம் குழந்தையைப் போல மார்போடு அணைத்துக் கொண்டு அவள் விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள். தன்னுடைய குழந்தையை இழந்ததற்காக அவள் ஒடிந்து போய்விடவில்லை. ஆண்டுதோறும், வருடத்தில் எல்லா பனிரெண்டு மாதங்களிலும் தாயாவது, என்பது வயிறு நிறையச் சோறை அடைவதைக் காட்டிலும் சுலபமானது என்பது அவளுக்குத் தெரியும்.

*******************************

ஆசிரியர் குறிப்பு
பிரதிபா ரே


1943-ல் பள்ளித் தலைமையாசிரியரின் நான்காவது குழந்தையாக பிறந்தவர் பிரதிபா ரே. தன்னுடைய எழுத்தில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம், புரட்சி, தைரிய மனப்பான்மை, முதிர்ச்சி ஆகிய எல்லாவற்றிற்கும் தன்னுடைய கவிஞரான தந்தையின் தாக்கம் தான் காரணம் என்று அவர் சொல்கிறார்.

பனிரெண்டு வயதில் எழுதத் துவங்கிய பிரதிபா ரேயின் முதல் கவிதை புகழ்பெற்ற ‘பிரஜாதந்திரா’ செய்தித்தாளில், குழந்தைகள் பக்கத்தில் 1955-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு அவர் நாவல், சிறுகதைகள் என்று உரைநடை இலக்கியங்களைப் படைக்க ஆரம்பித்தார் என்றாலும் இன்னமும் கவித்துவம் வாய்ந்த ஒரு மனம் அவரிடம் இருப்பதை அவருடைய படைப்புகள் பிரதிபலிக்கின்றன. அவருடைய முதல் நாவலான ‘வர்ஷா, வசந்த வைசாசா’ 1974-இல் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு அவர் எண்ணற்ற பல நூல்களைப் படைத்துவிட்டார்.

பிரதிபா ரே பெற்ற விருதுகளில் குறிப்பிடத் தகுந்தவை, 1985 இல் பெற்ற மாநில சாகித்ய அகாதமி விருது, 1990-இல் சரளா விருது. பாரதீய ஞானபீடத்தின் மூர்த்தி தேவி விருது 1991-இல் வழங்கப்பட்டது. 1994, 1995 ஆகிய இரு வருடங்களுக்கான கதாவிருதைப் பெற்றார். வாழ்நாள் இலக்கிய சாதனையாளருக்கான ‘பிரஜாதந்திர பிரச்சார் சமிதியின்’ விசுவ விருதினை 1995-இல் பெற்றார். 2000-ஆவது ஆண்டில் அவர் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.

ஒரு பள்ளி ஆசிரியையாக தமது பணியைத் தொடங்கி, கல்லூரிப் பேராசிரியையாக ஓய்வு பெற்ற பிரதிபா ரே ஒரிசா பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

பிரதிபா ரே, சாகித்ய அகாதமியின் ஒரிய மொழி ஒருங்கிணைப்பாளராக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com