Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜுன் 2006
வாய்மொழிப் பதிவு

அப்பணசாமி

WIP
(Women In Prostitution)


(இது வாய்மொழிப் பதிவு.எய்ட்ஸ் தினமான டிசம்பர் -1 ஐ ஒட்டி சென்ற ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பு பத்திரிகையாளர்களுக்கான ஐந்து நாள் பட்டறையை சென்னையில் நடத்தியது. இதில் கலந்து கொண்டபோது, எச் ஐ வியால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக, சென்னையில் உள்ள பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் பலருடன் பேச நேர்ந்தபோது, அவர்கள் எத் தவறும் செய்யாமலேயே சமூக அவலத்தைத் தாங்கிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. அவ்வாறு பாதிக்கப்பட்ட பல பெண்களிடம் தொடர்ந்து பேசி ஒரு பெண்ணின் வாழ்க்கையை, அவர் வாய் மூலமாக பதிவு செய்து, அப்படியே எப்புனைவும் இன்றித் தரப்படுகின்றது. அவரது பெயரும், சொந்த ஊரும் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, ‘விமன் இன் பிராஸ்டிடியுசன்’ என்றே அழைக்கும்படி தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன.)

என் பேரு தங்கம். சொந்த ஊரு காஞ்சிபுரம். கூடப்பிறந்தவங்க அஞ்சுபேரு. ஒரு அக்கா, ஒரு தம்பி, ஒரு அண்ணன், நான். அப்புறம் கடைசித் தம்பி ஒருத்தன் இறந்துட்டான். குடும்பத்துல, எங்க அப்பா பயங்கர குடிகாரரு. குடிச்சி-குடிச்சு சொத்தும் போச்சு. உடம்பும் போச்சு. எங்களுக்கு அப்ப மூனு வீடு சொந்தமா இருந்துச்சு. நெறைய மாடுகள் எல்லாம் இருந்தது. பால் கறந்து விப்பாங்க. அப்போ நான் சின்னப் பொண்ணா இருந்தேன்.

ஏன் குடிக்கேன்’னு அம்மா கேட்டா, கண்ணு - மண்ணு தெரியாம அடிப்பாரு. இந்த கொடும தாங்காம, அம்மா எங்க பாட்டி வீட்டுக்கு (அம்மாவின் அம்மா) வந்துடுவாங்க. எங்கம்மாவுக்கு சென்னையில் திருவொற்றியூர். எங்க பாட்டி வீட்டு வேல செஞ்சு பொழச்சிக்கிட்டு இருந்தாங்க. அதால, எங்க அம்மாவும் வீட்டு வேல செஞ்சாங்க. திடீர்னு அப்பா வந்து எங்கள கூட்டிட்டுப் போவாரு. பழைய படியும் குடிக்க ஆரம்பிச்சதும், சண்ட வரும். அம்மா பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க. இப்படீ அஞ்சு குழந்தங்க பிறந்தது. இப்படி போய்ட்டு - போய்ட்டு வந்ததால எங்களுக்கு படிப்புங்கற பேச்சே இல்ல. அதனால, திரும்ப அங்க போகல, மெட்ராஸ்லயே அம்மா இருக்க முடிவு செஞ்சாங்க. அந்த ஆளு இனிமே வேண்டாம்னு தனியாகவே இருந்து, ஒரு வீட்டுல வேலைக்கு சேத்து விட்டாங்க. அண்ணன் பட்டறையில வேல பார்த்தான். நான் ஏழாம் வகுப்பு வரை படிச்சேன். அதுக்கு மேல அனுப்பல. தம்பிய காலேஜ் வரைக்கும் அனுப்புனாங்க ஆனா வருசா வருசம் பீஸ் கட்டமுடியாம, பாதியிலேயே விட்டுட்டான். இப்ப ஒரு கம்பனில வேல பாக்கான். அண்ணன் எலக்டிரிக்கல் வேலைக்குப் போய்ட்டு இருக்கார்.

அப்புறம், அக்கா ‘ஏஜ்’ அட்டண்ட் பண்ணி, வீட்டு வேலக்கே போய்கிட்டு இருந்துட்டு, அப்புறம் வேற வழியா போயிட்டாள். யார் உடயோ ஓடிப் போயிட்டா. யாருனே தெரியாத ஒருத்தனோட ஓடிப்போயிட்டா. கல்யாணம் கட்டிட்டுதான் இருக்கா. அக்கா ஓடிப்போயிட்டதால என்னய ஸ்கூல்ல இருந்து நிப்பாட்டிட்டு, அம்மா கூடவே வீட்டு வேலைக்கு கூப்பிட்டுப் போனாங்க. நானும் எங்கனாச்சும் ‘ஓடி’ப் போயிடுவேன்னு பயம்.

ஆனாலும் அக்கா, அப்பப்ப வந்துபாக்க வரும். அது கூட பேசக்கூடாதுனு தடை போட்டாங்க. ஆனா கூடப் பொறந்த அக்கா, எப்படிப் பேசாம இருக்க முடியும்னு, நான் பேசித்தான் தீருவேன், நீங்க பேசலைன்னா இருங்கன்னு சண்டை போட்டு அக்கா கூட பேசுவேன், போவேன். அம்மா தலையில அடிச்சிக்கிட்டு அழும். அப்படி அக்காவப் பாக்கப் போனதுதான் வாழ்க்கையில வெனயா வந்து போச்சு.

அக்கா கூட பேச்சு வச்சுக்கிட்டப் பெறகு, அவங்க வீட்டுக்கு போறது - வறதுனு இருந்தேன். அப்ப எனக்கு 20 வயசு இருக்கும். ‘ வாடி, வந்து ஒரு வாரம் தங்கியிருந்துட்டுப் போ’னு சொன்னாள். நானும் அங்க போயி இருந்தேன். ஏதோ இதுல உள்ரூட்டு இருக்குனு தெரியாது. ஏன்னா, ஒருத்தன்ட்ட இருபதாயிரம் ரூபாய அக்கா கடனா வாங்கியிருக்காப் போல, அவன நா பாத்தது கூட கிடையாது. ஆனா, அவன் வந்து, இருபதாயிரம் ரூவாய இப்பவே கொடுத்தாலே கொடு, இல்லேனா உன் தங்கச்சிய எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுன்னு டார்ச்சர் பண்ணிகிட்டு இருந்திருக்கான்.

இதுக்கிடையில எங்க வீட்டுலயும் ஒரே வசவு. உன் அக்காக்காரி வீட்டுக்கு அடிக்கடி போற - வாறே, அவ புத்தித்தான் உனக்கும் வரப்போவுதுனு திட்டுனாங்க. நான் இங்குட்டும் போக முடியாம, அங்கிட்டும் போக முடியாம மாட்டிக்கிட்டு அழுவேன். இப்படி இருக்கயிலதான் அந்தப் பாவி வந்து அக்கா வீட்டுல டார்ச்சர் பண்ணிட்டு இருந்திருக்கான். எனக்குத் தெரியாது.

இப்படி ஒரு நாள் அண்ணன், அம்மா எல்லோரும் என்னய அடிச்சாங்க. நான் அழுதுக்கிட்டு இருக்கையிலதான் அக்கா வந்து கூட்டிட்டு போனா. அப்ப வீட்டுல இருக்கும்போது, அந்த ஆள் வருவான், பேசிக்கிட்டு இருப்பான், எனக்கு 20 வயசு, அவனுக்கு 22 வயசு, ஆனா, சாராய வியாபாரம் - கள்ளச்சாராயம், அதுல சம்பாதிக்கிற பணத்தத்தான் இப்படி வட்டிக்கு கொடுத்து - வாங்கிட்டு இருந்துருக்கான். கடனக் கொடுக்க முடியாததால, அக்காட்ட என்னயக் கலியானம் செய்து கொடுன்னு கேட்டுருக்கான். ஆனா, இதுக்கு எங்க அம்மா சம்மதிக்காதுனு தெரியும். ஏன்னா நாங்க ரெட்டி, அவன் எஸ் சி. இதெல்லாம் அக்கா யோசிச்சிருக்கும் போல.

ஒரு நா அக்கா, நான், அவன் மூணு பேரும் ராத்திரி சினிமாவுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தோம். இவனும் இங்கேயே படுத்துக்கிட்டான். ‘என்னக்கா அவன் வீட்டுக்கு போகாம இங்கேயே படுக்கான்’னு கேட்டேன். ஏன்னா அக்கா புருஷனும் இல்ல. அப்பப்போ கோவிச்சிக்கிட்டு டீக்கடையிலயே படுத்துக்குவாறு. இப்படியிருக்கும் போது இவனும், இங்க படுக்கானேனு கேட்டேன். ‘இல்லடீ ராத்திரியாயிருச்சு, இங்க தூங்கிட்டு காலையில போயிருவாரு’னு அக்கா சொன்னாள். ‘எனக்கென்ன நீயாச்சு, அவனாச்சு’னு நினச்சுக்கிட்டு ‘நான் நாளைக்கு காலையி மெட்ராஸீக்கு போயிடுவேன் அம்மா திட்டும்’னு அக்காட்ட சொல்லிட்டு படுத்துக்கிட்டேன்.

நடுராத்திரியில எனக்கு முழிப்பு வந்தது. எந்திருச்சு பாத்ரூம் போனேன். இவனும் எழுந்திருச்சு பின்னாலயே வந்துருக்கான். எனக்குத் தெரியாது. நான் பாத்ரூம்ல இருக்கும்போது அக்கா திடீர்னு கூப்பாடு போட்டாள். ‘அய்யய்யோ, என் தங்கச்சிய கற்பழிச்சுட்டான், என் தங்கச்சிய கற்பழிச்சுட்டான்னு...... அய்யய்யோ.... அய்யய்யோ’னு கூப்பாடு போட்டாள். எனக்கு ஒன்னுமே புரியல... அதுக்குள்ள அக்கம் பக்கத்துலயிருந்து கூட்டம் கூடியிருச்சு.

பக்கத்துல குடியிருக்கிற ஆளுங்க வந்து, என்ன-ஏதுனு விசாரிச்சப்போ, ‘என் தங்கச்சி பாத்ரூம் போனப்ப, இவன் பின்னாலய போயி கற்பழிச்சுட்டான்’னு அழுதா, ஆனா... அப்படி ஒன்னும் நடக்கலை. ஏன் இப்படி சொல்றானு எனக்கு திகப்பா இருந்துச்சு. அவனும் திகச்சுப் போயி நிக்கான். நான் ஒன்னுமே பேசத் தெரியாம விடியற வரைக்கும் அழுதுக்கிட்டு இருந்தேன்.

காலையில நாம்பாட்டுக்கு விட்ட விட்டு வெளியேறி ரயில்வே ஸ்டேஷன் வந்தேன். ‘பேசாம நம்ம வீட்டுக்குப் போயிடுவோம்’னு ரயில் ஏற உக்காந்துகிட்டு இருக்கேன். அப்ப இவனும் பின்னாலே வந்துட்டான். வந்து கையப் பிடிச்சு இழுத்துக்கிட்டு விர்-விர்னு நடந்தான். என்ன அப்படியே கூட்டிட்டுப் போயி. அவன் பிரண்ட் வீட்டுல விட்டான். அங்கய ஒரு வாரம் வச்சிருந்தான்.

இதுக்கிடையில, என் அக்கா எங்க வீட்டுக்கு போயி, ‘நான் அவள் மானத்த வாங்கிட்டேன்’னும், ‘அவள் புருஷன் கூடவே தப்பாப் பழகினேன்’னும் கூப்பாடு போட்ருக்காள். அப்புறம் இவன் வீட்டுக்கு போயி, என் தங்கச்சிய உன் மகன் கற்பழிச்சு இழுத்துட்டு போயிட்டான்’னு கூப்பாடு போட்டிருக்காள். நான் இப்படி இருக்கும் போது இவன் என்ன செஞ்சான்னா, ‘எனக்கு தங்கத்த பிடிச்சிருக்கு, அவளத்தான் கல்யாணம் செய்யப்போறேன்’னு அவன் வீட்ல பேசி சம்மதம் வாங்கிட்டான். அவங்களும் சரீன்னு எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க. அவங்க பெரிய குடும்பம். அம்மா, அப்பா கிடையாது. கூடப்பிறந்தவங்க ஆறு பேரு, ரெண்டு அக்காக்களுக்கு கலியாணம் ஆயிருச்சு. இன்னும் ரெண்டு தங்கச்சி இருந்தாங்க. அவங்களுக்கு கலியாணம் நடத்தனும்.

கலியாணமாகி நல்லாத்தான் இருந்தான். சாராயம் காச்சுற தொழிலுன்னாலும் காசு வந்துச்சு. எல்லாம் எடுத்துக் கொடுத்து நல்லா வச்சிருந்தான். இப்படி ஆறு வருஷம் போச்சு. ஆனா படிப்படியா அவன் கொணத்தக் காட்ட ஆரம்பிச்சான். குடிதான் ஏற்கனவே இருக்கே அதோடு அடி-தடினு சேர்ந்துச்சு.

இவன் இப்படி இருக்கான்னு விசாரிச்சப்போதான் அவன் வண்டவாளம் தெரிஞ்சுச்சு. அவனுக்கு ஒரு முஸ்லீம் குடும்பத்துல தொடுப்பு இருந்துருக்கு. அங்க அக்கா-தங்கச்சி ரெண்டுபேரு. அதுல அக்காக்காரியோட மொதல்ல தொடுப்பு. சம்பாதிக்கிற பணம் எல்லாம் அங்க போக ஆரம்பிச்சது. அவள் ஏற்கனவே இன்னொருத்தன் லவ் பண்ணி, அவனோட இருந்துட்டு, அவன் போனதுக்குப் பிறகு, இவனப் பிடிச்சிருக்காள், இவன்தான் கள்ளச்சாராயம் அது-இதுனு வசதியா இருக்கான்ல. அதனால ரெண்டு பேரும் குடிக்கிறது - சேர்றதுனு இருந்தாங்க.

இந்த விவரம் தெரிஞ்சு நம்ம வாழ்க்க இப்படியாயிட்டுதேனு அவன கண்டிச்சேன். அடி, உதை, அவன் அம்மாக்காரியும் ஏண்டான்னு கேட்டாள், பெத்தவளுக்கும் அடி உதை. இது சரிப்பட்டு வராதுன்னு, தொடுப்பு வச்சிருந்தவ வீட்டுல போயி நான் கத்துனேன். இதுல ஊருல அவமானமாப் போச்சு. அப்புறம் அவள வேற ஒருத்தனுக்கு கலியாணம் செஞ்சு வச்சாங்க.

‘அப்பாடா, கண்டம் ஒழிஞ்சத’னு இருந்தப்ப, இவன் மறுபடியும் வேலயக் காட்டினான். ‘இது ஏன்னு பாத்தப்ப ஏற்கனவே தொடுப்பு வச்சிரந்தவளோட தங்கச்சிய இப்ப சேத்துக்கிட்டான். இதக் கண்டிச்சப்போ வீட்டுல எல்லாருக்கும் அடி உதை. வீட்டுக்கும் வர்றதுல்ல. அதுலருந்து செலவுக்கும் பத்துப் பைசா கொடுக்கிறதில்ல. சோத்துக்கே லாட்டரியாப் போச்சு. அப்புறம் அவள விரட்டுறதுக்குள்ள பெரும்பாடாப் போச்சு. அப்புறம் - அப்புறம் விசாரிச்சப்போது, அக்கா -தங்கச்சி ரெண்டு பேரும் இப்படி வீட்டுல இருந்தே தொழில் பண்றவங்க(Casual sex worker) னு தெரிஞ்சுது.

இவ்வளவு நடந்தப் பெறகும் வேதாளம் இறங்கல. மூனாவதா சாராயம் விக்கிற ஒருத்தியப் பிடிச்சுக்கிட்டான். அந்தப் பொண்ணோட இருந்துகிட்டு, வீட்டுல ரொம்ப அழிம்பு பண்ணான். அவளப் பாக்காம இருக்க முடியாதுங்கற மாதிரி அவங்க பண்ணிட்டாங்க. அவளுக்கு ஏற்கனவே கலியாணம் ஆகி, கணவர் இறந்து, அவர் மூலமா ஒரு பையனும் இருக்கான். அப்ப எனக்கும் மூணு வயசுல ஒரு பையன் இருக்கான். இப்ப நெலமெ ரொம்ப உச்சமாயிருச்சு. அந்தப் பொம்பளய இங்கயே கூட்டிட்டு வந்து வச்சுக்கிடுவேன்னான். நான் முடியாதுன்னே. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் இருக்கனும்னான். ‘நான் மட்டும் வேனும்னா இங்க இரு. அவள்தான் வேணும்னா அங்க போயிடு. ரெண்டு பேரயும் ஓட்றதுன்னா நான் போறேன்’னு உறுதியா சொல்லிட்டேன். அவன் கேக்கற மாதிரி தெரியல. அடி உதை கூப்பாடுனு மானம் போச்சு.

ஆனா, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ‘இனி, இங்க இருந்தா சரிப்படாது’ன்னு முடிவு பண்ணினேன். எங்க மாமியாரும் நல்லவங்க. ‘நீ இவன்கிட்ட இருந்து அடி-உதை படறத விட, உன் வீட்டுல இருந்து பொழச்சுக்கோ’னு சொன்னாங்க. நானும் சரினு கௌம்புனேன். எங்க போறது, எங்க வீட்டோடயும் எந்த தொடர்பும் கெடையாது. அவங்களும் வர்றதுல்ல. நானும் போறதுல்ல. இடையில எங்க அம்மா இறந்துடுச்சு. தம்பி வந்து சொல்லிட்டுப் போனான். எங்க அக்கா மூஞ்சியிலயும் முழிக்கறதுல்ல. நான் இப்படி ஆனதுக்கு காரணமே அவள்தான.

இப்படி என் வீட்டு சொந்த பந்தமெல்லாம் அத்துப் போன பெறகு எங்க போறதுனு, ஆனாலும் வேற வழியில்லாம, என் புள்ளய தூக்கிக் கிட்டு மெட்ராஸே வந்தேன். நான் வீட்டு வேல செஞ்ச வீட்டுக்கே போயி வேல கேட்டேன். அவங்களுக்கு கொழந்த இல்ல. நான் அவங்க வீட்டிலயே தங்கி இருந்து வேல பார்த்தேன். அப்போ வீட்டுக்காரங்களுக்கு கொழந்தைங்க கிடையாதுங்கறதால, எம்புள்ளகிட்ட ரொம்பப் பாசமா இருந்து, அவன் என்கிட்டய வராத மாதிரி பண்ணிட்டாங்க. என்னய அம்மானு கூப்பிடறத விட்டுட்டு, அந்த வீட்டம்மாவையே ‘அம்மா’னு கூப்பிடற மாதிரி பண்ணாங்க. இது எனக்குப் பிடிக்கல. புள்ள என்கிட்ட வந்தால. தலையில கொட்டி, ஏன் அங்க போற, இங்க வந்து படி’னு இழுப்பாங்க. இதெல்லாம் பாத்தப்பா, எங்க புள்ளயும் நம்மள விட்டுப் போயிடுமோனு தோனுச்சு. அவங்க நடந்துகிட்டதும் எனக்கு மனசு ஒப்பல. நம்ம புள்ளய நம்ம முன்னாடியே அடிக்கிறாங்க, கிள்ளுராங்க, அழவைக்கிறாங்கன்னு மனசுக்குள்ள அழுதே. அப்படியே பக்கத்துல வேற வேலைக்கு விசாரிச்சேன். அப்படி விசாரிச்சப்போ. ஒரு வீட்டுல வேலக்கு வச்சுக்கிட்டாங்க. அவங்களே என் பையன ஹாஸ்டல்ல சேத்து விட்டாங்க. நான் மட்டும் அவங்க வீட்டுல தங்கி வேலை பாத்துக்கிட்டு இருந்தேன்.

அப்படி இருக்கும்போது, என் புள்ளக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அப்போ வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சுத் தானே பாக்கனும். அதுக்கு இவங்க ஒத்துக்கல. ஹாஸ்டல் இருந்ததுனால புள்ளக்கு சிரங்கு புடிச்சிருச்சே. கை - காலல்லாம் ஒரே புண்ணா ஆகிப்போச்சு. ஆனா வீட்டுக்காரங்க என்ன நெனச்சாங்கன்னா அந்தச் சிரங்கல்லாம் நம்ம புள்ளகயுக்கும் புடிச்சிரும்னு நெனச்சி ‘நீ புள்ளய கூப்பிட்டு இங்க வரவேண்டாம், அவனை கூப்பிட்டு உன் சொந்தக்காரங்க வீட்டுல போயி ஒரு மாசம் இருந்து, சரியானப் பிறகு ஹாஸ்டல்ல விட்டுட்டு இங்க வா‘ன்னாங்க.

நா என்ன சொன்னன்னா, நான் கெட்டுப்போயி சொந்தமே வேண்டாம்னுதான் வீட்டோட தங்கி வேல செய்யிறேன். இப்ப மட்டும் எந்தச் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறதுன்னேன். ஆனா அவங்க அதக் கேக்கல, சரி நீங்க குடுங்கன்னு சொல்லி, ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டு, தெருவுல இருக்கற டீக்காரம்மாகிட்ட சொல்லி அழுதேன்.

அந்த அம்மா, தன் வீட்டுல இருந்த புள்ளப்பாருனு சொல்லிச்சு அங்கேயே தங்கியிருந்து எம்புள்ளக்கு வைத்தியம் பாத்து, சரியானப் பெறகு ஆஸ்டல்ல விட்டுட்டு, பழையபடி வேலைக்குப் போனேன். ஆனா சொந்தக்காரங்க வீட்டுக்கும் போகச் சொல்லியும், அங்க போகாம, பக்கத்துலய தங்கியிருந்ததுல அவங்களுக்குக் கோபம். ‘ஏன் பொய் சொன்னே’ன்னாங்க. நான், ‘சொந்தக்காரங்க வேண்டாம்னுதான் இப்படி உங்க வீட்லயே தங்கி வேலை பாக்க சம்மதிச்சேன். இப்போ மட்டும் போறதுன்னா எங்க போறது’னு சொன்னேன். அவங்க நீ வேண்டாம். வேற ஆள வச்சுக்கிட்டோம்’னாங்க. நானும் ‘சரி, சந்தோஷம் வேற இடம் பாத்துக்கிறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன்.

நான் டீக்காரம்மா வீட்டுலேயே தங்கிட்டு வேல தேடுனேன். முன்னூறு ரூபாய் வாடகை. அறநூறு ரூபாய் அட்வான்ஸ். ஏற்கனவே, ரெண்டாயிரம் ரூவாய் வாங்கனதுல அட்வான்ஸ் கொடுத்து, கொஞ்ச சாமான் வாங்கிப் போட்டு வைச்சிருந்தேன். இப்ப, இப்படி ஆயிருச்சே. வேல தேடுனப்போ, மிளகாய் கம்பெனில வேல கிடச்சுது, ஊறுகாய் மிளகா கம்பெனி. ஒரு நாளைக்கு 15 ரூபாய் சம்பளம். ஒரு மூட்டை மிளகாய நம்பளே முடிச்சா 15 ரூபாய். எக்ஸ்ட்ரா வாரா - வாரம் கூலி. இது பத்தல. வாடகையே முன்னூறு ரூபாய் அப்புறம் வேலயும் தினம் இருக்காது. அதனால வேற வேல தேடுனே. எக்ஸ்போர்ட்டுல ஹெல்பர் வேலை கிடைச்சது. 850 ரூபாய் சம்பளம்.

இப்படி சுமார போயிட்டிருந்தது. (ஒத்தப் பொண்ணு தனியா இருந்தா பிரச்சினைதானே. நம்ப பாட்டுக்கும் நம்ம வேலய பாத்துக்கிட்டு இருந்தாலும், உலகம் நம்மளத்தானே பாத்துக்கிட்டு இருக்கு) இது எதுவும் நமக்குப் புரியாதுல்ல. கண்ண இந்தப் பக்கம் - அந்தப் பக்கம் இழுத்தா தப்பாகத்தானே பேசும்.

இப்படி நாம் எம்பாட்டுக்கு வேலய பாத்துட்டு, புள்ளய வளர்த்துக்கிட்டு இருக்கும்போது, பக்கத்துல அண்ணன் - தம்பி ரெண்டு பேரும் குடித்தனம் வந்தாங்க. ஃபேமிலி ஊர்ல இருக்கு. என்ன பிரச்சனையோ அவங்க வந்து தங்கியிருந்தாங்க. ஏதோ சமையல் வேலைக்குப் போயிட்டு இருந்துருக்காங்க.

இங்க, நான் ஒரு பொண்ணு தனியா தங்கியிருக்கேன் - போறேங்கறத இவனுங்க கவனிச்சு பாலோ பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ஒரே காம்பவுண்டுதானே, புள்ளயும் வீட்டுல இல்ல. ஆஸ்டல்ல இருந்தது, அதனால ‘இவள் யாரு’னு விசாரிச்சிருக்காங்க. பூக்காரம்மாதான் என் கதைய சொல்லியிருக்கு. சரினு அவன் என்ன சொன்னான்னா, ‘நா அந்தப் பொண்ண கலியாணம் பண்ணிக்கிறேன். எனக்கும் பேமீலியில் பிரச்சனை. அங்க போகமாட்டேன். இவளக் கலியாணம் பண்ணி நல்லா வச்சுக்கிறேன்’னு சொன்னான். இந்தம்மாவும், என்கிட்ட பேசுனாங்க- நானும் பெரியவங்க எல்லாரும் சொல்றாங்களேன்னு ‘சரி’ன்னு சொல்லித் தொலஞ்சுட்டேன்.

இவன் ஒரு வருஷம் (1995) நல்லா இருந்தான். அதுக்கு அப்புறம் அப்புறம் வேலயக் காட்ட ஆரம்பிச்சான். அவன் ஒரு புரோக்கர் பய போல இருக்கு. ஏற்கனவே இந்தத் தொழில்ச் செய்து, போலிஸ்ல மாட்டி, ஜெயிலுக்கு போயி, அது அவன் குடும்பத்துல பிரச்சன ஆகித்தான் இங்க ஓடி வந்துருக்கான். அப்ப நான் கண்ணுல பட்டதும், திட்டம் போட ஆரம்பிச்சுட்டான். நைசாப் பேசி ஏமாத்தி கலியாணம் பண்ணிட்டா கிடுக்கி போட்றலாம்னு முடிவு பண்ணி இருக்கான். கலியாணம் ஆகி கொஞ்ச நாள் ஆனப்பிறகு, டார்ச்சர் ஆரம்பிச்சது.

டார்ச்சர் கொடுத்துக்கிட்டே, தொழிலுக்கு போகச் சொன்னான். மூணு வருசமா ஆம்பள துணையே இல்லாம தனியா இருந்தேன், வீட்டு வேலை பாத்து புள்ளயக் காப்பாத்துனேன். வசதியா இருக்கறதுனா அப்பவே இப்படிக் கேடு கெட்ட தொழிலுக்குப் போயிருப்பேன், ஏன், உன்கிட்ட வந்து மாட்டிருக்கிறேன். நான் ....டியாளாகி, நீ மஞ்சக் குளிக்கனுமா’னு சொன்னேன். மனசுக்குள்ள, ‘தனியா இருந்த நம்பள பாலோ பண்ணி, இப்படி பிராக்கட் போட்டுட்டானே, இந்தப் பாவி’னு குமுறுனேன். என்ன செய்யறதுன்னு புரியல வெளியே ஓடவும் முடியல. உள்ள இருக்கவும் முடியல. இதப் போயி யாருட்ட சொல்ல முடியும். ஆம்பிள மிருகம் அவன். அவன் மூஞ்சப் பாக்கவே அருவருப்பா இருந்துச்சு. இவன்கிட்டயா ஒரு வருஷம் குடும்பம் நடத்துனோம்னு நினைக்கும் போது குமட்டுச்சு.

இந்த ஆம்பள நாய்களால நம்ம வாழ்க்கயே திசை மாதிரிப் போயிருச்சே. சினிமாக் கதைய விட என் வாழ்க்கை கேவலமாப் போயிருச்சே’னு அவனோட அடி-உதை, டார்ச்சருக்கு மத்தியில யோசனையா வரும். இரையில குறிவச்ச மிருகம், அத எப்படியும் கபளிகரம் செய்யற மாதிரி ஜெயிச்சிட்டான், வேற வழி...

அந்த நாயி போயி கஸ்டமர் பிடிச்சுட்டு வந்தான். பொனத்த அலங்கரிக்கற மாதிரி எனக்கு அலங்கரிச்சுக் கூட்டிட்டுப் போயி காட்டினான். பணத்தை வாங்குனான். என்னய ஒரு லாட்ஜ் ரூமுல தங்குன்னான் அந்த முதல் நாள்.... அந்த அருவருப்பான அனுபவங்கள்... அதான் சொன்னேனே... பொனத்த அலங்கரிச்சுனு.

அதுலயிருந்து இந்தத் தொழிலு... இந்தத் தொழிலு விபசாரத் தொழிலு.

அவன் போயி கஸ்டமரப் பிடிச்சு, என்னயக் கூட்டிட்டு போயி காட்டி, லாட்ஜ், வீடு, ரூம் என்று என்னை அனுப்பினான். மலக் குடலில் இருந்ததெல்லாம் வாய்க்கு ஏறுனமாதிரி உணர்வுகள்... இதுக்கு மருந்து குடி. ஒவ்வொரு முறை கஸ்டமரப் பாக்கறது முன்னாடியும் குடி...

எத்தனை விதமான கஸ்டமர்கள்... அவங்களில் எத்தனை பேர் அப்பாவிகள்... நோயாளிகள்... கொலையாளிகள்...

நான் தொழில் பாத்து உனக்கு ஏண்டா குடுக்கனும்னு... அவன உதறித் தள்ளிட்டேன். நான் தனியா ஒரு வீட்டுக்கு வந்தேன். நானே மாமாக்கள் மூலம் கஸ்டமரப் பிடிச்சேன். அந்த நாய என் வீட்டு வாசலுக்கே வரவிடல.

ஆனா. என்னால முடியல... இந்தத் தொழில விட்டுறனும்னு ரொம்ப முயற்சி செஞ்சேன். அப்பதான் எங்களுக்கான அமைப்ப சென்னையில ஆரம்பிச்சாங்க. அவங்க கூட அடிக்கடி சந்திச்சு பேசுனேன். ஆறுதலா இருந்துச்சு. தொழிலை விட்டுட்டு வந்து, இதுல முழு நேர ஊழியரா சேர்ந்து, என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட அபலைகள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறேன். மாதம் ரெண்டாயிரம் சம்பளம். நிம்மதியாக கழிகிறது. மகன் எட்டாவது படிக்கிறான்.

இந்த ஆம்பளகள் கொடுத்தப் பரிசுல கடைசிப் பரிசு. எச்ஐவி பாசிட்டிவ். இந்த எச்ஐவி பாசிட்டிவ் உடன் ஒரு வருஷமா வாழ்ந்து வருகிறேன்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com