Keetru Vanam
Vanam
செப்டம்பர் 2007

கருப்பு சொற்கள்
(ராணிதிலக்கின் ‘காகத்தின் சொற்கள்’)
குலசேகரன்

தமிழில் உரை நடைக் கவிதைகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அவை பாரதியின் வசன கவிதைகளே ஆகும். இலக்கணக் கட்டமைப்புக்குள் செயல்பட்ட பாரதிக்கு சுதந்திரமாக இயங்கும் களங்களாக அவை இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைய கவிதைகளும் சில மரபுகளை அபேதமாக வைத்துக் கொண்டிருப்பதால் அவைகளையும் மீறிய பின் சுதந்திர நிலைக்கு ராணிதிலக் வந்திருக்கிறார் போலும். பாரதியின் வசன கவிதைகள் வேதங்களின் உச்சாடன நடையையும், பொருளில் இயற்கை வழிபாட்டையும் கொண்டிருக்கின்றன எனப்படுகிறது. உரை நடை சார்ந்த சொற்களாகவே எண்ணங்கள் வெளிப்படுவதால் பெதும் இயற்கையை சார்ந்திருக்கலாம். ஆம், இவற்றிலும் ஒரு பார்வையில் இயற்கையைப் போற்றுவதாகவும், ஏங்குவதாகவும் தோன்றினாலும் ஆழ்ந்ததொரு அர்த்தத்தில் இயற்கையை அடைவதாகவே இவை உள்ளன. வெண்ணிற மேகமாக மாறுவது, நகரத்தில் அன்னியப்பட்டு கிராமத்திற்கு மீள்வது, மீன்கள் மீண்டும் மீண்டும் தொட்டியை மீறும்/ உடைக்கும் நிலை, மனிதர்களின் சாம்பலில் சூரிய காந்திகள் மலர்வது, கண்களால் நதியைப் படைத்துக் கொள்வது, போன்றவை உதாரணங்களாகலாம்.

குழந்தைமையின் முன்னிலையில் கவிதையும் பொருட்படுத்தத் தக்கதில்லையென்று காட்டி, இக்கவிதைகள், அதையே தம் அடிப்படை குணமாக கொண்டிருக்கின்றன. படைப்பென்பதே குழந்தைகளைப் போல் வியப்புற வாழ்க்கையைப் புதிதாகப் பார்ப்பதும் வாழ்வதும் என கவிதைகள் காட்டியபடியே இருக்கின்றன. ஒரு கவிதைக்குள், கட்டுப்படுத்தப்பட்ட நம் பார்வையும் குழந்தைகளின் புதிய விழிகளும் மோதி முரண் கொள்கின்றன. மற்றொன்றில், உலகம் அலுக்கையில் குழந்தைகள் அதைத் தலைகீழாகப் பார்த்துப் புரிந்து கொள்ள முயலுகின்றன. சுந்தரராமசாமி ஆர்வமாக சிறுவர்களைக் கவனிப்பாராம். இலக்கியம் இளமைப் பருவத்தை அவதானிக்கையிலேயே உச்சம் கொள்கிறது. நீரால் அடைபட்ட மீன்களாகவும், காற்றடைத்த பந்துகளுமாக, சிறுவர்கள் சிறையுண்டிருந்தாலும், அவர்களுக்குள் வாழும் குழந்தைத் தன்மை, உலகத்தையே பெரும் மைதானமாக மாற்றி விடுகிறது.

மரணத்தையும் நிறுத்தி வைக்கிறாள் ஒரு சிறுமி. ஒவ்வொருவரிலும் உள்ள குழந்தையை விளையாட பிற குழந்தைகள் கவிதைகளில் அழைத்தவாறிருக்கின்றன. மற்றொரு சிறுமி தானே மானாகி விலங்குகள் பாத்திரங்களாகும் கதை சொல்லலைத் துவக்கி வைக்கின்றாள். படைப்பையும் ஒரு விளையாட்டாக மாற்றி, அதற்கான தொடர்பு வெளியாக குழந்தைகளை நோக்கி சன்னல்களை திறந்து வைத்துள்ளன கவிதைகள். குழந்தையின் பிரசன்னம், பழைய பொருட்களுக்கு புதிய அர்த்தங்களை கவிதைகளில் வழங்கிக் கொண்டேயுள்ளன. இதுவே நாம் வேண்டும் பிரக்ஞையின் விழிப்பு நிலையாகும். இது இக்கவிதைகளின் முக்கிய அடிநாதமாக உள்ளது.

மதுவருந்திக் கொண்டாடும் மனோபாவங்களாக, இயற்கைக்கும் தெய்வத்திற்கும் படைத்து பின் தாமுண்ணும் மனிதனின் ஆதி நிலைக்கும் அழைத்துச் செல்கின்றன இக் கவிதைகள். முதல் மிடறை நதிக்கு அளித்து- பூமிக்கும் கூட- அதை சாந்தப்படுத்தல் பழங்குடி மரபின் நீட்சியே. கவிதைகளின் மொத்த மனமும் கூட இந்த தொன்மைத் தன்மையைத் தொடர்வதே. இந்த வழியிலேயேப் பயணித்தால் இவற்றின் பல நாட்டாரியல் கூறுகளையும் கண்டடையலாம். அவர்களுக்கே அமாவாசையும், பௌர்ணமியும் இவற்றில் போல பிரத்யேகமானவை. அவற்றில் அடர்ந்த வனங்களையும், எப்போதும் உடன் திரியும் சூரிய, சந்திரர்களையும், எந்த அணைகளுக்கும் கட்டுப்பட விரும்பாத காட்டாறுகளும் ஓடக் காணலாம். அவற்றை ஒரு நதியெனவே நடத்தும் ஆதிவாசியின் பாறை ஓவியத் தீற்றல்களாக பல கவிதைகள் வண்ணம் பெறுகின்றன. கொம்பற்ற மானும், தொட்டிகள் உடைய நீந்தும் மீன்களும், தாவும் கருப்பு முயல்களும், நின்றபடியே ஓடும் குதிரைகளும், புவியீர்ப்பை கடக்கும் அம்புகளின் வேட்டையும், கருஞ்சிறகு விரித்த காகங்களும், அக் குகையின் பக்கங்களில் காட்டப்படுகின்றன.

பின் நவீனத்துவமனமானது ஆதி நிலையை நவீனப்படுத்துவது. அதன் பார்வை, வழிபாட்டுக்கும், பயத்துக்கும் அப்பால் பழமையை மீட்டுக் கொண்டாடுவது. ஓடும் நதியில் நிற்கும் பாறையைக் கண்டு, பாறை நகர்வதாக நினைக்கும். நதியில் நீரென்று தம் முகங்களையே அள்ளிப் பருகும் . வானென்னும் குகையில் தாவும் மான்களைக் காணும். வியப்பூட்டும் நட்சத்திர மீன்கள் ஆன்மாவாக பதிந்திருக்கும். முழு சூரியனை அல்லாமல் சூர்யோதயத்தின் வெளிச்சமே வரையப்படுகிறது. விரோதங்களைப் போல் நட்புமுள்ள, நாள் கழித்து வந்தால் அன்னியமாகும், பெரும் சக்தி வடிவான நகரம் ஒரு வாய் மது சமர்ப்பிக்கப்படும் நவீன கடவுளாகிறது. இங்கு, எதிடையாகவோ, கலகமாகவோ, மது முன் வைக்கப்பட்டு கற்பிக்கப்படுவதில்லை. மாறாக, சுயத்தை மறுதலிப்பதின் ஆதிக் கொண்டாட்டமாக, போதை உருவாக்கப்படுகிறது.

பொதுவாக இளம் கன்னிகளைக் கற்பனை செய்கிற கவிதைகள்தான் தமிழில் அதிகம். அபூர்வமாக இவற்றில் முதிர் பருவம் தொடர்ந்து நடந்தேறுகிறது. அவர்கள் ஓரு நரையோட தலை சீவிக் காத்திருக்கிறார்கள். அவர்கள் பொங்கும் உணர்வுகளை வெளிக்காட்டாத ஆழ்ந்த நதிகளைப் போலிருக்கிறார்கள். நரைத்து வற்றிக் கொண்டிருக்கும் அவற்றில் தாகம் தீர்க்கும் சிற்றோடைகள் தேடப்படுகின்றன. காமத்துடன் தொடர்புடைய அழுக்கை, தன்னிலிருந்து எழும்பும் குரல்களான மீன்கள் உண்ண அலைகின்றன. இவ்வாறாக தன் பார்வையும் அதனோடு அப்பிறிதின் பார்வையும் ஒருங்கே கவிதைகளில் வெளிப்படுகின்றன. இதுவரையிலுமாக கண்களுக்கு உவமையாக்கப்பட்ட மீன்களை புதிதாக வந்த நரை போலும் நாரைகள் கொத்தித் தின்கின்றன.

நரைத்த முலைகளில் ஏறும் உஷ்ணத்தை வெளியிலிருந்து ஒரு பார்வையாளனாக உணர்ந்து ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில் தன்னளவில் மட்டுமே அதைத் தணித்துக் கொள்ள முடிகிறது. தலைவனின் வருகையை எதிர் நோக்கி நித்தியத்துவத்தில் காத்திருப்பவளின் பசலை படரும் காலம், கூந்தல் வெள்ளையாகுமளவு நெடியது. நவீன கவிதைகளிலும் மிக உணர்வுபூர்வமாக எழுத முடியும் என்பதற்கு குறிப்பிட்ட இக் கவிதைகள் சாட்சியாகின்றன. மனதின் அடிப்படை உணர்வாயிருக்கும் காதல், அது இயல்பாயில்லாத பட்சத்தால் அதன் திபு நிலைகளாக இங்கு விரிகின்றன.

அலைகளாகப் பெருகும் இதன் வரிகள் அடியில் அமைதியையே கோரி நிற்கின்றன. ஜடத்திலிருந்து விலகும் சாந்த நிலை, மது பருகி சாந்த சொரூபியாவது, பெண்களை நினைத்து சாந்தமாவது எல்லாமே சத்துவ குணம் வேண்டுபவை. பல நேரங்களில் தாவோவின் நோக்குகளாகவும், ஜென்னில் போல் காட்சிகளைத் தசிப்பதாகவும் அமைகின்றன. அதனாலேயே புத்தர் ஒரு பூவை எடுத்து மறுபுறம் வைப்பதாயுள்ள செயல்கள், சுவரைப் பார்ப்பது, சுவலிருந்து வெளியேறுவது போன்று, நிகழ்ந்தேறுகின்றன. காலத்தில் பொருட்களில் உண்டாகும் நுட்பமான மாற்றங்கள் எண்ணங்களிலும் ஏற்பட்டு விடுவதையும் பேசுகின்றன. கடவுளும் மனிதனும் ஒன்றே என்கிற அத்வைதமும் வெளிப்படுகிறது. எல்லோரும் இறக்கப் போகிறவர்கள்தான், இவை வெறும் இடைநிலைத் தோற்றமே என்கிற பிரக்ஞையும் தொடர்ந்து செயல்படுகிறது. மிக முதிர்ந்த மனமோ அல்லது குழந்தையுள்ளமோ சொற்களால் தட்டி ஒயும் போதே கடவுள் என்கிற தன்மை தோன்றவே ஆரம்பிக்கிறது என்கிறது வேறொரு கவிதை. அபத்த உலகில் தற்கொலையைத் தவிர்த்தே வாழ வேண்டியிருக்கிறது என்பார் சார்த்தர்.

ஒவ்வொருவரும் அந்நினைவை ஒத்திப் போட்டபடியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் கூடியிருந்தும் உள்ளத்து அளவில் தனித்தே இருக்கிறோம் என்கிற கவித்துவத்தின் விளைவான பல தத்துவங்களின் நோக்குகளும் இவற்றில் படிகின்றன. கவிதைகளில் வரும் சாதாரணமான பொருட்களும் தங்களின் ஜடத்தன்மையை இழந்து உயிர்ப்படைவதால் குறியீடுகளாக மாற்றம் கொள்கின்றன. அதன் உதாரணங்கள், நடக்கும் படிகள், தனக்குள் ஒரு தலையை வளர்க்கும் தூக்குக் கயிறு, போன்றவை. அதே போல, நிரம்பியோடும் நதி விஷங்களை முறிக்க வல்லவையாயிருக்க, மாறாக வற்றிய நதி மரண எண்ணங்களைத் தருவது, கடுங்கோடையை அதில் நிரம்பிய வெறுமைக்காக விரும்பப்படுவது, எங்கும் நிறைந்த மீன் தொட்டிகள் சின்னஞ்சிறு கல்லால் மனதினின்று உடைத்தெறியப்படுவது, எல்லாமே ஒற்றைத் தத்துவத்தை நோக்கி நகர்வதாக இல்லாமல், உதிகளாக, கீழைத்தேயத்தை சார்ந்து பன்முகத்தன்மையோடுள்ளன.

தேவதச்சனின் தன்னுணர்வுக் கவிதைகளைப் போல், சில அரூப உணர்வு நிலைகள் எழுப்பவும் படுகின்றன. அதே போல உரையாடலின் வெளிப்படையான வியப்பும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவை வாசிப்பின் வெளிகளையும் உண்டாக்குகின்றன. அந்தி ஒளியை குழந்தை உண்பதால் உண்டாகும் இரவையோ அல்லது தீராது ஓடும் வெளிச்சத்தையோக் கூட நினைக்கும் பூரண உமைகள் வழங்கப்படுகின்றன. கவிஞர்களின் தீராத மாயமான கனவைக் காணாதக் கவிதைகளிருப்பதில்லை. இவற்றிலும் நிகழ்வது நனவிலா அல்லது கனவிலா என்று கனவின் அதே சாயல்களான தர்க்கமின்மை, தன்மயம் போன்றவற்றைக் கொண்டு இயங்குகின்றன. கனவில் சாலை நதி ஓடுவது, பெண்ணின் இலைகளில் இந்திரியம் கழிக்கப்படுவது, நகரம் பாழடைந்து, கோபுரம் சரிவது, நனவில் சாலை நதியில் மது கொட்டப்படுவது, எல்லாமே மயக்க நிலையில் நிறைவேறுகின்றன.

கோபுரம் குறித்த ஒரு கவிதையை மாதியாகக் கொண்டால் பலகுரல்கள் ஒலிப்பதைக் கேட்கலாம். தொடர்ந்த செய்திகள் வழியாக உட்புகும் அமெக்கவின் இரட்டைக் கோபுரம், கவிதையின் கனவிலும் சுயத்தின் கோபுரமாக மாறி சரிகிறது. ஏற்கெனவே பாழடைந்துவிட்ட நகரத்தின் குறி அது. அதை அழித்த விமானங்கள் கழுகுகளாக வட்டமிடுவனவாக இருக்கலாம். ஆன்மாக்கள் பசுத்தமற்றவை, வெளிப்படும்போது தான் தூய்மை கொள்கின்றன. காக்கைகளின் உள்ளத்துக் கரும் சொற்களே கவிதைகளாகின்றன, கிளிப் பேச்சுகளல்ல. வாழ்வே ஒரு பரிசாக இருக்கையில், அதில் பரிசளிப்புகளாக கிடைக்கக் கூடியன வெறும் ரோகமும், துர்கனவுகளும் மட்டுமே. இப்படியாக கனவையொத்த தம் படைப்பு நிலைகளையும் விவாதித்துக் கொள்கின்றன இக் கவிதைகள். ஒழுக்கத்தைப் பேணுகின்ற இவ்வுலகு ஆன்மாவற்றது. அதற்கு எதிராக காணப்படும் துர்கனவுகளே பின் நவீனத்துவப் படைப்புகளாகின்றன.

கதை சொல்லல் எப்போதுமே சுவாரசியம் மிக்கது. கூறப்படும்போதே எதிரே மற்றொரு கதையும் உருவாகி விடுகிறது. அனைவருக்குமே சொல்வதற்கு நிறைய கதைகளுள்ளன. சொல்லப்பட்ட கதைகளில் கிளைக்கின்றன சொல்லாத பல கதைகள். இச் சாத்தியங்களைக் கொண்டு, சில வினைகளை தொடர்புபடுத்தும் கதைத் தொடராக இவற்றில் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நவீனக் கவிதைகள் ஓர் உணர்வு நிலையை எடுத்துக் கொண்டு விளக்க முற்படுகின்றன. அதைக் கடந்து, மற்றொரு அனுபவத்தை உண்டாக்கும் நிலையை இக் கவிதைகள் கதை வழியாக எட்ட முற்படுகின்றன.

கவிதையின் கதை நிகழ்ந்து முடிகையில், அதில் வரும் சம்பவங்களும், பொருட்களுமே, படிமங்களும், குறியீடுகளாகவும் மாறி முடிவில்லா அர்த்தங்களை வழங்கி விடுகின்றன. மனோநிலையில் சவாரி செல்வது புணர்ச்சியைப் போன்றே உணர்ச்சி நிலைதான். அது அவ்வப்போது தன்னிச்சையாகத் திய ஆரம்பித்து விடுகிறது. அதில் பயணிக்க முடியாதபோது படைப்பே சாத்தியமில்லைதான். குதிரையைப் பற்றிய கவிதை ஒரு கதையனுபவமாக, சவாரி செய்பவன் கதையாகவும், மாற்றம் பெற்று விடுகின்றது. குழந்தையின் எதிரே மரணமாக நெருங்கும் அதே குதிரைகள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. மார்க்கண்டேயனின் கதை போன்ற இப் புராணக் கதைகள் மனதின் ஆழ் படிமங்களாயிருந்து காலத்தில் உருமாறிக் கொண்டேயுள்ளன. அங்கு, மரணம் தற்சமயம் நின்றிருக்கிறதே தவிர பிறகு நேரலாம் என்கிற நவீனமான வாசிப்பும் உள்ளது.

பெரும்பாலும் நிகழ்காலத்திலேயே கவிதைகள் நடந்தேறுகின்றன. அதனால் தமிழ்க் கவிதைகளின் பொதுக் குணமான குறிப்புகளாக நிற்பதினின்று தப்பிக்கின்றன. தர்க்கத்தின் சொற்களால் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தோன்றினாலும் அதர்க்கத்தையே முன்மொழிகின்றன. இவை பற்பலவித வார்த்தைகளோடு குறுகிய எல்லைகளுக்குள் தேங்காமல் பெரும் சொற்கிடங்கையே தன்னகத்தேக் கொண்டுள்ளன.

சொல்லப்பட்டதற்கும் மேலாக கவிதைகளால் இயங்க முடிகிறது. ஆகையால் நவீனத்துவத்திற்கு பிந்தைவையாக வாசிக்கப்பட வேண்டும். இவை உரைநடையால் புதுப்பாணியில் எழுதப்பட்டாலும் கவித்துவமாக உருவாவதற்கு எவ்வித தடைகளாகவும் இல்லை. மேலும் வார்த்தைகளை உடைப்பதின் தளைகளைக் கடந்து தொடர்ச்சியானதொரு பொருள் கூட்டலை சாத்தியப்படுத்தி பலவித இயக்கங்களை உண்டு பண்ணுகின்றன. முழு சுதந்திரம் கொண்டு வாக்கிய அமைப்புகளை சரளப்படுத்தி கவிதையை மட்டுமே பிரதான நோக்கமாக்குகின்றன. தெளிந்த வார்த்தைகளால் எழுதிச் செல்லப்பட்டு ஒரு புயாத பொருளின் முன்னே நிறுத்தி கண்களை அவிழ்த்து விடுகின்றன. கிடைப்பது அழகும் வியப்பும் கலந்த புதிய தசனம். இவையே தமிழின் முதல் உரைநடைக் கவிதைகள். இதற்கு முன்னாலும் பின்னாலும் எழுதப்பட்டிருந்தாலும் தொகுப்பாக உருவெடுத்திருப்பது இதுவே முதன்முறை. இனி பல வரவும் கூடும். இது புதுக் கவிதையின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது.

இக் கவிதைகளின் பரப்பில் பொதுவாக புனைவுக் காதலும், காதலியும் மறுதலிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது வெளியில் காத்திருக்கிறார்கள். மாறாக நரைத்த பேரிளம் பெண்கள் மௌனித்து நின்றிருக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள், வயல்களின் நெல்மணிகளாக முற்றி உதிர்கின்றன. அம்மா பாத்திரத்தைக் கழுவுகிறாள். அவள் செல்லமாக திட்டி மேலும் துலக்க முயலுகிறாள். நதிக்கும், நகரத்துக்கும், சாலைக்கும் மது ஒரு மிடறு அளிக்கப்படுகிறது. மீதியெல்லாம் பூமி தள்ளாடும் வரை தனக்கும் படைத்துக் கொள்ளப்படுகிறது. சூரியனும் நிலவும் அறையின் இரு திசை சன்னல்களில் மாறித் தோன்றியவாறு இருக்கிறார்கள். அங்கங்கே பனி பெய்வதோடு, பாலைவனமும் பெருமூச்சுவிடுகிறது. நீர் நிலைகளெல்லாம் மீன் தொட்டிகளாக மாற்றம் பெறுகின்றன. அதில் மீன்கள் முழுப்பிரக்ஞையோடு சதா நீந்துகின்றன. பிதிர்களான காகங்கள் தலைமேல் கூறிக் கொண்டேயுள்ளன. கூர்காக்களின் காவலிலுள்ள நகரங்களுக்கு மாற்றாக கிராமங்கள் அல்லாமல் நதிகளே ஈரத்துடன் காட்டப்படுகின்றன. அவையும் பார்க்கும் கண்களிலிருந்தே, அகத்தியனின் கமண்டலத்திலிருந்து போல், பிரவாகமாய் ஓடுகின்றன.