Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vanam
Vanam
செப்டம்பர் 2007

பிரம்மராஜன் கவிதைகள்

ஜென் மயில்

புன்னை மயில் விரைந்தது
ஜென் காரின் குறுக்காய்ப் பறந்து
குருதியொத்த நிறம்
சேதாரம் எதுமில்லை
கேட்டுத் திரும்பின கால்கள்
மைனாக்களின் உலோக ஸிம்பனியை
மடையான்களின் மாலை சாதகத்தை
ஸெல் கோபுரம் முற்றும் உச்சியில்
இருவரின் ஸ்பானர்கள் இயங்கும்
வெள்ளி வெளிச்சத்தில்
கைகள் ஒயக்காத்திருந்து
கடவுள் கயிறுகளை சற்றே
மேலே இழுத்து விடுகிறார்
கால்கள் கண்டன
விளக்கற்ற அடுக்களையில்
உறுகாய்ப் பாட்டிலின் மீதிருந்து
கொசுக்களைப் பிடித்துண்ணும்
மரத்தவளை

புத்திப் புலன்

புள்ளிக் குயிலொன்று நுணா மரத்தில்
கண்கண்ட காட்சி புத்தி பாராது
அருகாமைக் கூந்தப்பனையிலமர்ந்து கூவியது
திக்கித் திக்கி
புத்திக்குப் புலர் நேரம்
அகன்றுயர் ஆண்பனையில் அமர்ந்தது
நடுநெஞ்சிலிருந்து
விருட்டென்று பறந்தகன்றது வல்லூறு
இலக்கை இழக்க
விரும்பாது

செங்கோணச் சமதளம்

சாபமும் மறதியும் சகதியாய்க் குழைந்து
நதியாகத் தவறி கிழக்கு மேற்கில்
குப்புறத் தூங்கும் சாக்கடை
துருவங்களில் வரைவளைவுகாய்
நீந்தும் நீர்ப்பாம்புகள்
தகவமைப்பின் உச்ச இலக்கணம்
பொரியளவேயாகும் மீன் குஞ்சுகள்
வரைவளைவுகளை வெட்டிச் செல்லும்
செங்கோணங்களும் பிறவும்
நீர்மறந்த ஏரிகள் நிராகரித்த
சிலந்தி இழைவழி இறங்குவது போல்
எரிபொருள் வற்றிய ஹெலிகாப்டராய்
சாம்பல் நிறக் கொக்கு
துணுக்கு மீன்கள்
நீந்தி ஒயும்
ஒளியும்
தென்வடலாய் இந்த வாயில்
கைப்பிடிச்சுவரில்
மந்திரக்கோலாகக் காய்ந்த குச்சி
தார்வேலையில் மிஞ்சிய ஒரு பாறையெச்சம்
இரண்டிலொன்றைத்
தேர்ந்து
குறிபார்க்க
யாருக்கென்ன
யோக்யதை

பெற்றே தீர்தல் மீண்டு

பிரயாணம் முடிந்து ஊர்வந்து
தேர்நின்ற பின் பயணவழிவரைபடம்
பார்த்து சென்றவழியெல்லாம்
எறும்பாய்த் தேய்ந்து செல்கிறபோது
பனையும் தென்னையும் மயங்கும் புலம்
மணலில் மறைந்து கிடக்கிறது
காரை நிறுத்தும் சோதனைச் சாவடிகள்
ஆவணங்களை மேயும் ஆயுதபாணிகள்
சரிசரியெல்லாம் போகலாம் போவென்றாலும்
மேலதிகாரியின் ஜோபிக்காக இன்னும்
கார் தயங்கித் தடங்க
காகிதக் காசுகள் கைமாற
இழப்பொன்றுமில்லை
ஒர் சூர்யாஸ்தமனம்
உருண்டைப் பாறையில் மாறிமாறிக் குந்திய
கடல் காகங்கள்
எறும்பு மீண்டும் பாதை தொற்றிச்
செல்கிறது
மேலதிகாரியையும் சீருடையாளரையும்
வரைபடத்தில்
போடுவதில்லை
என்பதை அறியாது


நவீனக் குறுஞ்செய்தி

மணியன் என்பவன் சொன்னதென்ன என்று கேட்டேன்
அந்த தபால் கார்டு புரியாமல்
அடுத்த நாள் ஆயிரம்
வரைந்தீர் அத்தனையிலும் அதே
கொக்கிகளைக் கோர்த்துச் சாய்த்தது போல
சொன்னதென்ன என்றேன் அடுத்து
விடுத்தீர் அயிரத்தெண்ணூறு இன்லாண்டுகள் மாற்றமிலாது
பிறகு தினத்திற்கு 22 தந்திவீதம் பெற்றவள் வாங்கி வைத்தாள்
அதே மூன்று வரிகள் ஒன்றிலும் சாவியில்லை
அவன் சொன்னதென்ன என்றேன் எட்டவில்லை உமக்கு
உம்மிடம் யூடியூப் செல்ஃபோன் சாதாஃபோன் கேமராஃபோன்
ஏதுமில்லை அவன் என்ன சொன்னான் நாம் நம்மைப் பற்றியா
படித்தும் படிக்காமல் விட்ட புத்தகங்கள் பற்றியா
வாங்க நினைத்து வாங்காது விட்டவை பற்றியா
வாங்கியும் பிரிக்காது விட்ட நூல்களையா
படித்துவிட்டது போல பாசாங்கு செய்தவை
‘பவர் ரீடிங்’ என்று சொல்லி நீர் 10 பக்கங்களைத் தள்ளிவிட்டு
வாசித்ததையா
முப்பது முறை தொடங்கி ஒருபோதும் முடிக்காது விட்டவை
பிறகும் கடிதங்கள் எப்போதும் போல்
இருவர் பிடித்திழுத்து ஸ்பிரிங்குகளை
தளர்த்தியது போலிருந்த எழுத்துக்கள்
உமது டைப்ரைட்டருக்கு வலிக்காதென்று
எண்ணித் தட்டுகிறீர்
நீர் மறைந்தும் உம் டைப்ரைட்டரிலிருந்து
எப்படி எண் இ-மெயில் பெட்டிக்கு
அந்த மூன்று வரிகள் வருகின்றதென்று தெரியவில்லை
‘ஸ்பாம்’ பாதுகாப்புக்கு மிஞ்சியும்

அன்னம் உன் ஓவியம்

தந்தையைத் தீட்டுவது கடினமில்லை
பக்கவாட்டில் எழை வீடொன்றைப்
பார்த்துக் கொண்டிருந்தார் கண்மூடி
தங்கையின் பின்புறம் கூட உறுத்தவில்லை
திறந்த கண்ணாடி ஜன்னல்
பாய்மரமேறிய ஒற்றைத் தோணியைக் கண்டாள்
வெண்ணிற உடுப்பில்
அடுத்த அடி எடுப்பது போலிருந்தன கால்கள்
ஃபிராய்டை கரியநிறக்
கம்பிக் கூட்டுக்குள் போட்டாயிற்று
அம்மாவை வரையும் உக்கிரமில்லை
காதலியின் கணவனைச் சித்திரிக்க சலிக்கவில்லை
கார்க்கியின் சொட்டைத் தலைமேல் ஆறால்மீன்
சிறுமி எப்போதும் மாதாகோயிலின் மணியாய்
குழந்தைப்பெண் குழந்தைக் காதலிக்கு நகப் பூச்சு
ஒரு ரோல்ராய்ஸ் கார்
தலையில் குத்தீட்டி எறிய குதிரை
மோனாலிஸாவும் நெப்போலியனும் அருகருகே
பிக்காஸோவின் மூளை பிடறி வழியாக நாக்கை ஆராதிக்க
ஒரு வாசிக்கப்படாத மேண்டலின்
உன்னை வரையும்போதுதான்
மூளை சுக்கல்சுக்கலாக
முற்றாத சலவைக் கல்லை கைதவறிக் கீழேவிட்டீர்போல்
தரையில் கால்பாவாது உன்னை எற்றி வைக்க
வேண்டியிருக்கிறது
பாய்ந்து கிழித்தெறியத் தயாராகி
முடியாத வேங்கைகள் அவற்றைக் குறிபார்க்கும் துப்பாக்கிகள்
எல்லாம் சமைந்து நிற்க
ஈயாடாது
எறும்பசையாது
சிகரெட் புகை சுழலாது
அசைவற்ற மோட்டார் பைக் சுற்றி நாலைந்து பேர்
தேனீ ரீங்கரிக்காது
சமுத்திரங்கள் எல்லாம் வெட்டப்பட்ட காலத்தில் போல
மௌனிகளாய் ஸகரன் ஸகரன் எண்று நாமாவளியை மனதில் ஜபிக்க
உன்னருகே முட்டையிலிருந்து
மூன்று குஞ்சுகள்
அன்னமே

0

அந்தரத்தில் மிதப்பதென்பதால்
அதைக் கூடென்றோ கோளென்றோ
சொல் தளராது வீடென்று கொள்
விண்ணில் விதைத்த விதை
மண்ணில் விழுந்து வீறிட்டாக வேண்டுமே
மலரும் தோட்டக்காரனும்
ஒருவரேயென்றாலும்
துரிதம் குறைவுறு தெளிப்பான்கள்
மறைக்காட்டுக்குச் சொல்வதுண்டாம்
எடை ஈரம் வடிந்து
ஈய வைக்கோல் காய்ந்து
சுழன்றடிக்கும்
தர்க்க நாணல்
ஒரு நாள்
ஒரே
நாளில்

0

செய்நேர்த்தி கண்ட உமத்தை வித்துக்களை
களவு செய்த குரங்குகள்
உண்டிருக்க 120சதம் இல்லை வாய்ப்பூட்டு
கசந்த சுவை விற்பன்னர்கள்
காற்று திசை முகர்ந்து
பருவத்தே பயிர் முடித்து
கருஊதா மலர் விரியக் காத்து
பிய்த்தெறிய
வியலும்
சிலந்தி விரல்களால்
பொறுமையின் தெர்மாமீட்டர்
அனுமதிக்க

0

அங்கே நிற்பாட்டியிருக்கும்
வண்டியைக் கண்டு ஐயம் திரிபு அகற்று
ஐம்பொன்னால் அனது பீரங்கி
மல்லர்கள் புஜக பூஷணர்கள்
அசைக்கவியலாதது
ஒன்பதிலிருந்து பூஜ்யம்வரை
எண்ணிக் கழிக்க ஆள்வரக் காத்து
கள்ளிப் பெட்டியில் நிறைகொண்டிருக்கும்
ஐந்தே கல்குண்டுகளும்
ஒரு கோணிப் பை கரிமருந்தும்
அதிக ஆசையில்லை
பொடித்துத் தூளாக்க வேண்டி
உதித்திருப்பது
மேற்குவானில்
ஒரு சுக்கிரன் மாத்திரமே



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com