Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

மாடும் மனிதனும்
விந்தன்


மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமா என்று கேள்விப் பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர்.

Vindhan's story "என்னடா பயல்களா, என்ன சேதி?''

"பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்...!''

"வேலைதானே? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!''

"முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்...!''

"ஆமாம், அதற்கென்ன இப்போது?''

"அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்...!''

"ஒஹோ! அப்படியானால் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்; கணக்குப் பிள்ளை அவனைத்தான் பார்க்கப் போயிருக்கிறார்; வரட்டும்!''

அப்படியே அவர்கள் ஒதுங்கி நின்றனர். அதே சமயத்தில் ஒதுங்காமலும், பதுங்காமலும், நிமிர்ந்த நடையுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் எசமான் வீட்டு நாய் அவர்களுக்கிடையே நுழைந்தது. அதைத் தொடர்ந்து கணக்கப் பிள்ளையும் வந்தார்.

"என்னய்யா, ஆளைப் பார்த்தீரா? என்ன சொன்னான்? இன்றாவது வேலைக்கு வரப் போகிறானா, இல்லையா?'' என்றார் மாணிக்கம் பிள்ளை.

"அவன் எங்கே இனிமேல் வேலைக்கு வரப்போகிறான்?'' என்றார் கணக்குப் பிள்ளை.

"ஏன் வாயைப் பிளந்து விட்டானா?''

"ஆமாம்.''

"சரி, வீடு கழுதையை! ஏய்! யாரடா அங்கே?'' என்று திரும்பினார் மாணிக்கம் பிள்ளை.

அவ்வளவுதான்; "எசமான்!'' என்று விழுந்தடித்துக் கொண்டு வந்து அவருக்கு எதிரே நின்றான் ஒருவன்.

அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "வந்திருப்பவர்களில் நீதான் தேவலை என்று தோன்றுகிறது; ஒழுங்காக வேலை செய்வாயா?''

ரோஸம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது அவனுக்கு; "என்னா அப்படிக் கேட்டுப்புட்டிங்க, உங்கக் காலு செருப்பாயிருப்பேனுங்க நானு!'' என்று சூள் கொட்டினான்.

"என்னமோ, தலைக்குக் கிரீடமாக வந்து சேராமல் இருந்தால் சரிதான்! - ஓய், இவனைப் பண்ணைக்கு அனுப்பி வையும்; பாக்கிப் பேரை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தும்!'' என்று உத்தரவு போட்டுவிட்டு மாணிக்கம் பிள்ளை உள்ளே வந்தார். மாட்டு வைத்தியர் கையைப் பிசைந்து கொண்டு அவருக்கு எதிரே நின்றார்.

"என்னய்யா, எப்படியிருக்கு?''

"என்னாலே ஆன மட்டும் பார்த்தேனுங்க; தவறிப் போச்சுங்க!''

"இரண்டுமா?''

"ஆமாங்க!''

இதைக் கேட்டதுதான் தாமதம்; ‘ஆ' என்று அலறிய வண்ணம் அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் பிள்ளை.

மாட்டு வைத்தியர் அதுதான் சமயமென்று மெள்ள நழுவினார்.

"அப்போது சேக்கு ஆள் விடட்டுமா?'' என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் மாணிக்கம் பிள்ளையின் மனைவி.

"பேசாமல் போடி, சேக்கு ஆள் விடுகிறாளாம் ஆள்!'' என்றார் பிள்ளை எச்சலுடன்.

"ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது! முப்பது வருஷமா வேலை சேஞ்ச முனியனே போயிட்டானாம்; மாடு போனா என்னவாம்?'' என்றாள் அவள்.

"மனுஷன் முதலில்லாமல் வருவான்; மாடு முதலில்லாமல் வருமா?'' என்றார் அவர்.

*****************************************************************

நன்றி - விந்தன் கதைகள் - விந்தன், ‘புத்தகப் பூங்கா' வெளியீடு, சென்னை. தேர்வு செய்து அனுப்பியவர் ப.சரவணன். விந்தன் படைப்புக்கள் பற்றி சரவணன் எழுதிய கட்டுரை அடுத்த இதழில் வரும்.

- ஆசிரியர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com