Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

பயணக் கட்டுரை
நேர்மை... நாணயம்... நேரம் தவறாமை
ரவி சுவாமிநாதன்


சூரியன் உதிக்கும் நாட்டுக்குச் செல்லப் போகிறோம்...!

Japan உழைப்பாளர்களின் தேசம் காணப் போகிறோம்...

சுறுசுறுப்புக்கு உதாரணமான மக்களைச் சந்திக்கப் போகிறோம்...

ஜப்பான் பயணம் என்றதும் என்னுள் ஆர்ப்பரித்த எண்ண அலைகள் இவை...!

விமான நிலையத்திலிருந்து இத்தனை மணிக்கு கிளம்பும் பேருந்து பிடிக்க வேண்டும்.... பேருந்தைவிட்டு இறங்கியவுடன் அருகிலிருக்கும் ஒரு டாக்ஸி பிடித்து இந்த வரைபடத்தைக் காண்பிக்க வேண்டும். இத்தனை யென் கொடுக்க வேண்டும். ஹோட்டல் அறையின் குறியீடு எண் இது.. என்று ஏதோ கம்ப்யூட்டர் மென்பொருள் போன்று ஜப்பானிலிருந்து மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இதில் எதுவும் பிசகாமல் அப்படியே நடந்தது, ஜப்பான் ஆச்சரியங்களில் ஒன்று. ஒவ்வொரு ஜப்பானியருக்கும் உள்ளே ஒரு கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது.

தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தாலும் ஜப்பான் இன்னும் தன் பாரம்பரிய பழக்கங்களை கைவிடவில்லை. இடுப்பை வளைத்து வணக்கம் சொல்லும் அழகைப் பார்க்கும் போது நாம் எத்தனை முறை கைகூப்பி வணக்கம் சொல்லியிருக்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஐரோப்பிய நாகரீகமான கைகொடுக்கும் பழக்கம் நம்மை எப்போதோ வசப்படுத்தி விட்டது. வணங்குவது மட்டுமல்ல.... எதையுமே இரண்டு கையால் கொடுப்பது... யாரையும் ‘சான்' என்ற அடைமொழியுடன் அழைப்பது.... என்று ஜப்பானுக்கே உரிய பழக்கங்கள் பல...! உடையைத்தவிர ஜப்பானியர்களை மேற்கத்திய நாகரீகம் ஆக்கிரமிக்கவில்லை.

ஜப்பான் மக்களின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் பழகும் முறை... எப்படித்தான் அவர்களுக்குள் அவ்வளவு பவ்யம் இருக்கிறதோ தெரியவில்லை... சக மனிதர்களிடம் வன்மம் இல்லாத ஒரு தன்மை... எப்போதுமே மென்மையாக பேசும் ஒரு குணம்... உலகப் பொருளாதாரத்தை தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறோம் என்ற கர்வம் இல்லாத ஒரு நடத்தை. இவையெல்லாம் தான் ஜப்பானியர்களை மற்ற இனங்களை விட ஒரு படி மேலே உயர்த்திக் காட்டுகிறது.

அதிர்ந்து பேசும் ஜப்பானியர்களைப் பார்ப்பதே வெகு அபூர்வம். அவர்கள் செல்போன் கூட அலறுவதில்லை.. மெüன மொழியே பேசுகிறது.

இந்திய உணவுகள் ஜப்பானில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அதிலும் தாவரப் பட்சிணிகளுக்கு திண்டாட்டம்தான். சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் சில இந்திய உணவகங்களில் கூட ஜப்பான் சாயல் படிந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியால் ஜப்பானுக்கு பல இந்தியர்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். வருங்காலத்தில் பல இந்திய உணவங்கள் ஜப்பானில் தோன்றலாம்.

உணவு தவிர ஜப்பானில் இந்தியர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை மொழி. ‘இங்கு ஆங்கிலத்துக்கு இடம் இல்லை' என்று எழுதிவைக்காத குறையாக அங்கு ‘எங்கும் ஜப்பானியம். எதிலும் ஜப்பானியம்' என்பதுதான் கொள்கை. உணவு பொருட்களிலும் சரி, தொலைகாட்சி, வாஷிங் மிஷின் போன்ற சாதனங்களிலும் சரி, பெயர் மற்றும் விளக்கங்கள் எல்லாம் ஜப்பானியத்திலேயே இருக்கிறது. குளிர்சாதன மோட் கண்ட்ரோலை அலுவலகத்துக்கு எடுத்துச்சென்று அங்குள்ள ஜப்பானியர்களிடமிருந்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று புரிந்து கொண்டு அதை சரிவர இயக்குவதற்கு ஒரு வாரம் பிடித்தது. சில சமயம் பாலுக்கு பதிலாக மோர் வாங்கிக் கொண்டு வந்த வேடிக்கைகளும் நடந்தது.

ஜப்பானில் உதவி கேட்பது நமது பிறப்புரிமை...! உதவி செய்வது அவர்கள் பிறப்புரிமை..! ஏதோ போன ஜென்மத்தில் கடன் பட்டவர்கள் போல நாம் கேட்கும் முன் தாமாகவே வந்து உதவி செய்யும் தன்மை எல்லா ஜப்பானியர்களிடமும் உள்ளது. இதில் ரயில் நிலைய டிக்கெட் அதிகாரிகளைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். நாம் ஏதாவது கேட்டு விட்டால் போதும்... இருக்கையிலிருந்து எழுந்து வந்து நமக்காக டிக்கெட் எடுத்துக் கொடுத்து சரியான சரியான ரயிலை அடையாளம் காட்டி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். சிலர் டோக்கியோ ரயில் வரைபடத்தை எடுத்து விளக்க ஆரம்பித்து விடுவார்கள்.

தினம் 60 லட்சம் மக்களை சுமந்து செல்லும் மெட்ரோ ரயில்கள்தான் டோக்கியோவின் எலும்புக்கூடு. கிட்டத்தட்ட 200 ரயில் நிலையங்களைக் கொண்ட டோக்கியோவில் எந்த ஒரு இடத்திற்கும் ரயில் மூலமாகவே அடையாளம் சொல்லப்படுகிறது. டோக்கியோ மற்றும் அதன் புறநகரில் எந்தப் பகுதியாயிருந்தாலும் ஏதாவது ஒரு ரயில் நிலையத்திலிருந்து அதிகபட்சம் 10 நிமிட நடையில் அடைந்துவிடலாம். (9 நிமிட நடை, 11 நிமிட நடை என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பார்கள்.

குத்துமதிப்பாக 10 நிமிடம் என்று கூறுவதில்லை) 8.47க்கு ஒரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு வரும் என்று அறிவித்தால் அந்த நேரத்துக்கு அந்த ரயில் வந்தே தீரும். அது மட்டுமல்ல... ஒரு ரயில் நிலையதிலிருந்து இன்னொரு ரயில் நிலையத்திற்கு சாதாரண ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும். விரைவு ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்ற விவரங்கள் எல்லா ரயில் நிலையத்திலும் வைக்கப் பட்டிருக்கிறது. இதே கால அட்டவனையை இணையத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் கூட பிசகாமல் இந்த நேரங்கள் கடை பிடிக்கப்படும்.

ஒரேயொரு விதத்தில் மட்டும் டோக்கியோ ரயில்களையும் இந்திய நகர ரயில்களையும் ஒப்பிடலாம். அது ஜனநெரிசல்... காலை நேரங்களில் ஒரு ரயிலில் 400 பேர் சர்வசாதாரணமாக பயணிக்கிறார்கள். ஆனால் ரயிலுக்கு வரிசையில் நிற்பது, இறங்குபவர்களுக்கு அழகாக பிரிந்து வழிவிடுவது என்பதையெல்லாம் நம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. டோக்கியோவில் உள்ள சின்சுகு என்ற ரயில் நிலையம்தான் உலகத்திலேயே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை தினமும் 20 லட்சம் மக்கள் கடந்து செல்கிறார்கள்.

ஜப்பானியர்கள் நேரத்தை கடைபிடிப்பது மட்டு மல்லாமல் நேரத்தை எப்படி சுருக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதற்கு ‘ஷின்காசன்' என்ற புல்லட் ரயில்கள் சாட்சி. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில்கள் ஜப்பானின் முக்கிய நகரங்களை சில மணி நேரங்களில் கடந்துவிடுகிறது. 99% புல்லட் ரயில்கள் ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவு தாமதத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறது. முப்பது நிமிடமெல்லாம் தாமதமாக வந்தால் தொலைகாட்சி செய்திகளில் அறிவிக்கப்படுமாம். இவ்வளவு வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்கள் கடந்த நாற்பது வருடங்களாக எந்த ஒரு பெரிய விபத்தையும் சந்தித்ததில்லை.

பிரசித்தி பெற்ற ஜப்பானியர்களின் நேர்மையை அனுபவிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை என் மாத ரயில் அட்டையை தவறவிட்டு விட்டேன். பிறகு ஒரு வாரத்திற்கான அட்டை வாங்கி உபயோகித்து வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து என் அலுவலகத்திலிருந்து என் ரயில் அட்டை குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ரயில் அட்டையை கண்டெடுத்த யாரோ ஒரு புண்ணியவான் அதை தவறாக உபயோகப் படுத்தாமல் ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறார். ரயில்வே அதிகாரிகளும் என் அட்டையில் பதிந்திருக்கும் என் மொபைல் எண்ணை கண்டுபிடித்து, மைபைல் எண்ணை அழைக்காமல் என் அலுவலகத்தை தொடர்பு கொண்டு செய்தி தெரிவித்திருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்திற்கு சென்றவுடன் என் பாஸ்போர்ட்டை சரிபார்த்து ரயில் அட்டையை திரும்பக் கொடுத்தார்கள்...!

என் ஆச்சரியம் இதோடு நின்றுவிடவில்லை. நான் வாங்கிய வார அட்டையில் மீதமுள்ள நாட்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்து விட்டார்கள்.

Japan நான் எதுவும் பேசமுடியாமல் அசந்துபோய் நின்று கொண்டிருந்தேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது இது நமக்கு மட்டுமே வியப்பான விஷயம் என்று புரிந்தது. அவர்களைப் பொருத்தவரை அது சாதாரண செயல்... தாங்கள் கடமையை செய்வதாகத்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நேர்மை, உண்மை, தரம் இவையெல்லாம் அவர்கள் செய்முறையிலேயே கலந்திருக்கிறது. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். காணாமல் போன ரயில் அட்டையை தேடி வந்திருக்கிறேன் என்று அந்த அதிகாரிக்கு விளக்குவதற்கு ஒரு ஒரங்க நாடகமே நடத்த வேண்டியிருந்தது.

நாணயத்திலும் நாணயம் கடைபிடிப்பவர்கள் ஜப்பானியர்கள். அவர்களுடைய "ஒரு யென்' நாணயத்திற்கு (Currency) மதிப்பே இல்லை. 100 யென்னுக்கு குறைந்து எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஆனாலும் பொருட்களின் விலை 128 யென், 299 யென் என்றெல்லாம் இருக்கும். இருந்தாலும் மீதி சில்லறை துல்லியமாகக் கொடுக்கப்படும். அது ஒரு யென்னாக இருந்தாலும்..!

ஜப்பானில் புத்த மதம் மற்றும் ஷின்டொ என்ற மதமும் பின்பற்றப்படுகின்றன என்று சொன்னாலும், மதம் அவர்கள் அன்றாட வாழ்வில் குறுக்கிடுவதே இல்லை. இனப்பற்று மதப்பற்றை விட மேலோங்கியிருக்கிறது. மதம் அவர்கள் அகராதியில் கடைசிப் பக்கங்களில் மட்டுமே இருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற மதச் சார்பின்மையை விட மதமே தேவையில்லை என்ற மதப்பற்றின்மை இவர்களை ஆட்கொள்ளுகிறது. திருமணம், இறப்பு போன்ற விஷயங்களுக்கு மட்டுமே மத சம்பிரதாயங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக சுபகாயங்கள் ஷின்டோ மத முறைப்படியும் இறப்பு, மூதாதையர் வணங்குவது போன்றவைகள் புத்த மத முறைப்படியும் நடக்கிறது. இதைத்தவிர கிருஸ்துமஸ் பண்டிகையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒருசில புத்த கோவில்களைத் தவிர டோக்கியோவில் மத அடையாளங்கள் பெரியதாக எதுவும் இல்லை. ஆனால் டோக்கியோவிற்கு மிக அருகிலேயே இருக்கும் காமகுரா என்ற இடத்தில் பல புத்த கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் ஜப்பான் தலைநகரமாக இருந்த காமகுரா இன்று அதன் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று. பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமாண்ட வெண்கல புத்தர் சிலை இங்கு இருக்கிறது. இங்கிருந்த கோவில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு சுனாமியால் சிதைந்து போனதாம். கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் உள்ள புத்தர் மட்டும் இன்னும் வெயில், பனி, பூகம்பத்தினால் தன்னை காத்துக் கொண்டிருக்கிறார். கெஞ்கோஜி, எங்ககுஜி போன்ற பிரபல ஜென் கோவில்களும் காமகுராவில்தான் உள்ளன. ஜென் கோவில்கள் டோக்கியோவின் பரபரப்புக்கு கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாமல் ரம்யமான சூழலில் அடர்ந்த மரங்களுக்கிடையே அமைதி வழிந்தோடக் கூடிய இடமாக உள்ளது.

ஜப்பானில் மண்வளம் இல்லை. கனிமவளம் இல்லை. பூகம்பம், சுனாமி, எரிமலை என்ற இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது பதம் பார்க்கும் பூமி. எனினும் முக்கியமாக வாகனம் மற்றும் எலெக்ரானிக்ஸ் உற்பத்தி மட்டுமே இன்று ஜப்பானை உலக பொருளாதார வல்லரசாக வைத்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்ட ஒரு நாடு, எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாய் நின்ற ஒரு நாடு, ஐம்பது ஆண்டுகளில் பிரமிக்கத் தக்க வகையில் வளர்ந்து இன்று உலகையே ஆட்டிப் படைப்பது எப்படி?

அதன் தொழில்நுட்பமாக அல்லது உழைப்பா... அல்லது நேர்மையா?

இவையெல்லாம் விட இந்த மாற்றத்திற்கு மூலகாரணம், இது அரசும் மக்களும் செய்து காட்டிய கூட்டுமுயற்சி. அரசாங்கம் நினைப்பதையே மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் நினைபதேயே அரசாங்கமும் நினைக்கிறது. எந்த ஒரு தொழில் நுட்பமும் கடைசி ஜப்பானியனைப் போய் சேருகிறது. இந்தியாவில் உள்ளது போல் மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டு போனது இங்கு நிகழவில்லை.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது....!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com