Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

உணவில் உழலும் பிணங்கள்
சுபமி


எலி, கடா, மீன், மனிதன் என உலகில் வாழும் அத்தனை ஜீவன்களும் உணவில் உழலும் பிணங்கள்தாம்!

Goat காவிப் பற்கள் அத்தனையும் வெளித் தெரிய, ‘ஆவ்' எனக் கொட்டாவி விட்டபடியே எழுகிறார் பெரிய நாடார்.

வெளியே வாசலைப் பெருக்கிக் கொண்டே குருவம்மாள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள்: ‘விடிஞ்சாப் பொங்கல். இன்னுங் கெடா கூடப் பிடிக்கலை. ‘எங்க வீட்லயும் பொங்க வைக்கிறம், கெடா வெட்றம்'னு ஊர் பூராத் தம்பட்டமடிச்சிட்டா மட்டும் ஆச்சா? ஆம்பிளை - கோழி கூப்பிடாம எந்திரிச்சி இந்நேரம் சொக்கம் பட்டிலேருந்து கெடாவைக் கொண்டாந்திருக்க வேணாம்? என்னைக்கும் போல வெயில் ஏறுறது வரைக்கும் ஒறங்கிக்கிட்டிருந்தா ஆகிய காரியங்களை யார் பாப்பா?''

பெரிய நாடார் கொல்லைப்புறம் சென்று முகம் கழுவிவிட்டு மூலைப் பானையிலிருந்து ஒரு தம்ளர் நீராகாரத்தை மொண்டு குடிக்கிறார். நெய் மூடைகளின் பொந்தில் வைத்திருந்த எலிப்பொறியிலிருந்து "கீச்கீச், கீச்கீச்'' என்று எலியின் கதறல் கேட்கிறது.

"குருவு... எலிச்சத்தம் கேட்டியா..? இன்னைக்கும் ஒன்னு சிக்கீருச்சி போல...''

குருவம்மாள் சிடுசிடுக்கிறாள். "அதையெல்லாம் பெறகு பாக்கலாம் - மொதல்ல கெடாவைக் கொண்டாந்து சேக்கப்பாருங்க...''

பெரிய நாடாருக்கு அலட்சியம். "கெடா என்ன ஓடியா போகப் போகுது..? துட்டைக் காட்டினா, "என்னதை வாங்கிக்க, ஒன்னதை வாங்கிக்கன்னு மொய்ப்பாங்க...''

"அப்ப இப்பப் போகலையா? பெறகுன்னா வடிவும் மாப்பிளையும் வந்திருவாங்க - ஒங்களால நகர முடியாது. அதான் இப்பவே பெறப்படுங்கிறேன்...''

"இரு இரு... எலியைப் பாத்திட்டுக் கெüம்புறேன்...'' என்ற பெய நாடார், நெல்மூடைகளின் இடுக்கில் கைவிட்டு எலிப்பொறியை எடுக்கிறார். "அம்மாடியோவ்! எத்தாம் பெரிய குண்டெலி!... குருவு... வந்து பாரேன்...''

குருவம்மாளும் ஆவலாய் வந்து பார்க்கிறாள். "ம்.. பெருசாளி கணக்காக் கொழுத்திருக்கு... இதோட பத்தாச்சா, பதினென்னாச்சா...?''

"பன்னெண்டு!... இன்னும் எத்தினி சிக்குதுகளோ? குருவு... இதுகளுக்கெல்லாம் மூளைங்கிறதே கெடையாது போல. பெட்டியில இருக்க கருவாட்டை நொழைஞ்சி திங்கப் போன தன்னையொத்த ஒன்னு பெட்டீல சிக்கிக் கிட்டதும் புரிஞ்சுக்கிட்டு இதுகள்லாம் பெட்டிப் பக்கம் நெருங்காம இருக்கலாம்ல..? புத்தி கெட்டதுக. அப்பிடி என்ன கருவாட்டு ஆசை?''

குருவம்மாள், "ம்..'' என்று ஆமோதிக்கிறாள்.

"உள்ள கெடக்க குண்டனைப் பார். கத்தீட்டுக் கத்தீட்டு கருவாட்டைக் கொறிக்கிறதை! சாகப் போறோம்னு ஆனப்புறமும் அவனுக்குத் திங்கிற ஆசை விடலைபார்...!''

இந்நேரம் மகன் சின்னச்சாமி ஓடி வருகிறான்''.. யப்போவ்... இன்னைக்கு நான் அடிக்கிறேன்ப்பாவ்...''

"சரிசரி அடி! தப்ப விட்றப்படாது...!'' என்றபடி அவனிடம் எலிப்பொறியைத் தந்துவிட்டு, பழைய தகரப்பெட்டியைத் திறந்து இரண்டாயிரம் ரூபாவை எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறார் பெரிய நாடார். "குருவு... கெடா வாங்கீட்டு வாறப்ப மீன் கீன் ஏதாச்சும் சிக்கினா வாங்கியாறேன். வடிவுக்கு மீன்னா உசிரு... மாப்பிளைக்கும் பிடிக்கும்...''

குருவம்மாள் கேலியாகச் சிக்கிறாள். "அவங்க பேரைச் சொல்லி நீங்க சாப்பிட நெனைச்சிட்டீங்க போல!... சரி.. மசால் அரைச்சி ரெடியா வைக்கிறேன்... வெரசா வந்து சேருங்க...''

சொக்கம்பட்டியில் நல்ல ‘கொழுகொழு' கடா ஆயிரத்து எழுநூறுக்கே அமைகிறது. "வளக்கிறதுக்குனா ரெண்டாயிரத்துக்குக் கொறையமாட்டேன். மாயாத்தா விஷயமாக் கேக்கிறீங்களேன்னுதான் இந்த வெலைக்குத் தர்றேன்...'' என்றபடி கயிறு மாற்றுகிறார் ஆட்டுக்காரர்.

உற்சாகமாகக் கடாவை ஓட்டிக் கொண்டு பேரையூருக்கு வருகிறார் பெரிய நாடார். மஞ்சள்கிழங்கு, குங்குமம், தேங்காய், பழம் என்று பொங்கலுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு, கையோடு ஒரு பூமாலையும் வாங்கிக் கொள்கிறார். நாளைக்குக் கடாவுக்குப் போட வேண்டுமே!

மீன் கடைக்குள் நுழைகிறார். "நாடாரே, வாங்க வாங்க, பெய வெலாங்கு இருக்கு - உசிரோட!''

பெரிய நாடார் அலுமினியச் சட்டிக்குள் எட்டிப் பார்க்கிறார். சாவு நெருங்குவதை உணராததாய், ஏதோ ஓர் இரையைச் சட்டி நீருள் சுருண்டு சுருண்டு துரத்திக் கொண்டிருக்கிறது விலாங்கு. விலாங்கின் நீளம் பெய நாடாருக்குத் திருப்தியளிக்கிறது. அறுபது ரூபா என்று பேரம் பேசி முடிக்கிறார். "மண்டேல ஒன்று போட்டு இந்தப் பையில போடு...''

ஊரை நோக்கி வெற்றிலைக் கொடிக் கால்கள் வழியே நடக்கையில் வேலாண்டி குரல் கொடுக்கிறான். "நாடாரண்ணே, கெடாவுக்குக் கீரை வாங்கீட்டுப் போறதுதானே?''

"சரி, குடு''

வேலாண்டி ஐந்தே நிமிடத்தில் ஐந்து அகத்திக் கீரைக் கட்டுகளுடன் வருகிறான்.

"அஞ்சு எதுக்குப்பா... ரெண்டு போதும்...''

"இருக்கட்டுங்கண்ணே... நாளைக்குப் பலியாகப் போற கெடா நல்லா வயிறாரத் திங்கட்டுமே?''

"நீ சொல்றதும் சதான்...'' என்றபடி பத்துரூபா நோட்டை அவனிடம் கொடுத்துவிட்டு, கீரைக் கட்டுகளைத் தலையில் சுமந்தபடி நடக்கிறார் பெரிய நாடார்.

காலையில் வருவதாக இருந்த வடிவுவும் மாப்பிளையும் பொழுது சாயத்தான் வருகிறார்கள். அந்தவேலை, இந்த வேலை என்று ஒவ்வொன்றாய் முடித்து மதியம்தான் பிறப்படவே முடிந்ததாம்.

"உங்களுக்குன்னு மீன் கொழம்பு வச்சிக் காத்துக்கிட்டு இருந்தோம். வராமப் போய்ட்டீங்க... இப்பவாச்சும் வந்தீங்களே...'' என்கிறாள் குருவம்மாள்.

"எல்லாம் ராத்திச் சாப்பிட்டுக்கிடுறோம்மா, மீன் கொழம்பு ஆறினாத்தான் ருசி...'' என்கிறாள் வடிவு.

"இதான் நாளைக்கு வெட்டப்போற கெடாவா மாமா?'' என்று விசாரிக்கிறார் மாப்பிள்ளை.''

"ஆமாங்க மாப்பிள்ளை... ஆயிரத்தி எழுநூறு ரூவா... சொக்கம் பட்டீல வாங்கினேன்....''

"ஆயிரத்தி எழுநூறுன்னாப் பரவாயில்லே...'' என்ற மாப்பிள்ளை கடாவைப் பார்த்துச் சிக்கிறார். "வடிவு, பாரேன் இதை... புல்லும் போட்ருக்காங்க - ஆனா புல்லை மோந்துகூடப் பாக்காம கீரையையே திங்கிறதைப் பார்! நாளைக்குச் சாகப் போறதுக்குக் கூட அப்பிடிக் கேக்குது நாக்கு!'' வடிவோடு சேர்ந்து பெரிய நாடாரும் பெரிதாய்ச் சிரிக்கிறார்.

இரவு உணவு காரசாரமாய் அமைகிறது. மீன் குழம்போடு பொத்து மீன் வேறு. பெரிய நாடார் ஒரு பிடி பிடிக்கிறார். "குருவு... ஒப்புக்காகச் சொல்லலை... இன்னைக்குக் கொழம்புஞ் சரி, பொச்சதுஞ் சரி, ரொம்பத் தூக்கலா இருக்கு'' என்று விருதே கொடுக்கிறார்.

ஒன்பது மணியளவில் மாடியில் படுப்பதற்காக ஏணியில் ஏறிக்கொண்டே மாப்பிள்ளை கேட்கிறார், "மாமா, உங்களுக்குப் படுக்கை எங்க...?''

"நமக்கு இன்னைக்குத் திண்ணைதான் மாப்பிளை. கெடாவுக்குக் காவல் வேணும்ல?'' என்கிறார் பெரிய நாடார். பின் ஒரு சுருட்டைப் புகைத்தவாறே தம் படுக்கையைத் திண்ணையில் கொண்டு போய்ப் போடுகிறார்.

கடா இன்னும் கீரையிலேயே திளைத்துக் கொண்டிருக்கிறது.

காலை வெயில் ‘சுள்'ளென்று முகத்தில் அடித்தும் பெரிய நாடார் படுக்கையைவிட்டு எழவில்லை. முணுமுணுத்துக் கொண்டே அவரைத் தட்டி எழுப்ப வந்த குருவம்மாள், ஏதோ சந்தேகம் தட்ட அவர் நெஞ்சில் கைவைத்துப் பார்த்துவிட்டு, "ஐயையோ, ஐயையோ...!'' என்று அலறுகிறாள். பெரிய நாடார் இரவோடிரவாகப் பெரிய ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார், பாவம்.

பொங்கல், கடா வெட்டு என ‘கலகல' வென்றிருக்க வேண்டிய அவ்வீடு சோகத்தில் அமிழ்கிறது. ஒரே அழுகை ஒப்பாரி..

வந்த பெரியவர்கள் காயத்தில் இறங்குகின்றனர்.

- பொங்கற்பானை மூலைக்குப் போகிறது.
- கடாவுக்காக வாங்கிய பூமாலை சடலத்தின் மீது வைக்கப்படுகிறது.

எதைப்பற்றியும் சட்டை செய்யாது அகத்திக் கீரையிலேயே குறியாயிருக்கிறது கடா. உள்ளே யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்: "கெடாவை காயத்துக்கு வெட்டீரலாம்!''


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com