Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

வேலை
புதுகை சரவணன்


இவன் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையை அடைந்திருந்தான். கதிரவன் பிரகாசித்து மேலெழும்பிக் கொண்டிருக்க சாலையின் இடதுபுறம் அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புளிய மரங்களின் நிழல், கறுத்த தார் சாலையின் பாதிவரை கோணல் மாணலாக பரவிக் கிடந்தது. சற்று முன்வரை வெறிச்சோடிக் கிடந்த சாலையின் மெüனத்தை ஒரு சில வாகனங்கள் மெதுவாக கலைக்கத் தொடங்கியிருந்தது. இந்த பக்கம் காவிநிறம் மங்கிய அரண்மனைச் சுற்றுச் சுவர் நீண்டு சென்று தூரத்தில் ஒரு புள்ளியாய் மறைந்து போக அதனை ஒட்டியபடி நடந்தான்.

Man பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு ஆள் எடுப்பதாக முந்தின நாள் தினசயில் பார்த்திருந்தான். எத்தனை மணிக்கு இண்டர்வியூ என்று இவனுக்கு சரியாக தெரியவில்லை. வீட்டிலிருந்து சீக்கிரமே கிளம்பியிருந்தான். சான்றிதழ்கள் அடங்கிய பையை அக்கிளில் வைத்துக் கொண்டு சட்டைப் பையில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

பார் வேலையை விட்டு நின்று இன்றோடு ஒருவாரம் ஆகியிருந்தது. முதலாளி மற்றும் சக வேலையாட்களின் பிரிவு மனதிற்கு ஒரு இனம் புரியாத வருத்தத்தை தந்தது.

அங்கு வேலைக்கு சேர்ந்து ஏழெட்டு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. வேலைக்கு வரவில்லையென்று முதலாளியிடம் சொல்லலாமா வேண்டாமாவென யோசித்து யோசித்து இறுதியில் சொல்லாமலே நின்று விட்டிருந்தான். இதுவரை முதலாளி வந்து இவனைப் பார்க்காதது வருத்தமாக இருந்தது. இவன் வேலையில் திருப்தியற்றுப் போய், போனால் போகட்டும் என இருந்து விட்டாரோவென்று சந்தேகப்பட்டுக் கொண்டான்.

இதற்கு முன்பெல்லாம் உடம்பு சரியில்லையென்று இரண்டு நாள் சேர்ந்தது போல் லீவு எடுத்தால், மறுநாள் காலையில் அவருடைய சிகப்பு நிற ஹீரோ ஹோண்டா வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தபடி இவன் வீட்டு வாசலில் நிற்கும். "ஏண்டா உடம்பு சரியில்லைன்னா எனக்கு போன் பண்ணி சொல்லலாம்ல? நான் வந்து டாக்டர் கிட்ட கூட்டிப் போயிருப்பேன்ல.'' என்பதோடு அல்லாமல் அவர் வண்டியிலேயே கூட்டிச் சென்று மருத்துவம் பார்த்து, கொண்டு வந்து வீட்டில் விட்டுச் செல்வார்.

“எந்த முதலாளிமா வேலைக்காரங்கள ஆஸ்பத்திக்கு கூட்டிட்டு போறாரு. நீ என்னடான்னா வேலய உட்டு நிக்கச் சொல்றியே,'' முதலாளியை நினைத்து உள்ளூரப் பெருமைபட்டு இவன் சொல்வான்.

"அவரு நல்லவரு தான்டா. நான் அவரை குறை சொல்லல. ஆனா வேல பாக்குற எடந்தான்'',

நிலைப்படியில் சாய்ந்து கதவு நாதாங்கியை அசைத்தபடி அம்மா சொல்லுவதை கேட்டு அம்மாவின் பக்கம் நியாயமும் இருப்பது இவன் நன்கு உணர்ந்தது தான். அதன் உள் மனதில் இன்னும் பழைய காயங்கள் ஆறாமல் தான் கிடக்கின்றது.

சாராய வாசனை எத்தனை பெரிய மாளிகையையும் கீற்றுக் குடிசை ஆக்கிவிடும் என்பதை நன்கு உணர்ந்தவன். இவன் பள்ளி செல்ல ஆரம்பித்து சில வருடங்கள் ஆகியிருந்தது. இராமநாதபுரம் நகரில் இருந்து சில பர்லாங்கு தூரத்தில் உள்ள அந்த கிராமத்தில் தோட்டம் துறவுகளோடு வசதியாக உள்ள சிலல் இவன் தந்தையும் ஒருவர். விவசாயம் தவிர வெற்றிலை வியாபாரம். விடியற்காலை சானி தெளித்து கிடக்கும் வாசலில் அகன்ற கேயர் உடைய அவரது இரு சக்கர வண்டியின் பின்புறம் முற்றிலும் மறையுமளவிற்கு வெற்றிலை முட்டிகள் அடுக்கியிருக்கும். நெற்றி நிறைந்த திருநீறும், வெள்ளை வேட்டி சட்டையுமாக வண்டியினை உயிர்ப்பித்தவன் குரல் சன்னமாக வீட்டினுள் பாயும், "ரவக்கி யாராருக்கு என்னென்ன வாங்கியாரணும்.''

வீட்டிலுள்ளவர்களின் தேவைகள் போய்ச் சேர இரு கால்களையும் கெந்திக்கெந்தி வண்டியை நகர்த்துபவருக்கு, மாளிகையென விரிந்து கிடக்கும் வீட்டின் நிலைப்படிகளில் நின்று விடை கொடுத்து அனுப்புவாள் இவன் அம்மா. உடன் இவனும் இருப்பான்.

உடல் அசதியையும் பொருட்படுத்தாமல் வியாபாரம் மட்டுமே குறிக்கோளென சுத்து பட்டு கிராம நகரமெல்லாம் வியாபாரம் முடிப்பார். மையிருள் கவிழ்ந்து கிடக்கும் இரவில் வீடு திரும்புபவடம் சில்லரைகளாலும் நோட்டுக்களாலும் கனத்து நிறைந்த தோல் பையும், வீட்டிலுள்ளவர்கள் வேண்டிய பொருட்கள் இம்மி பிசகாமலும் இருக்கும்.

லாந்தர் விளக்கின் துணையுடன் கணவனும் மனைவியுமாக நோட்டுக்களை எண்ணி முடிக்க, எஞ்சும் சில்லரைக் காசுகளை எண்ணுவதற்கு நேரமின்றி நெல்லளக்கும் மறக்காயில் இட்டு சாமியறையில் வைத்து விடுவார்கள்.

நடுநிசியை நெருங்கும் வேளையில் டவுனில் வாங்கி வந்த சாராயத்தை கிளாசுகளில் பாதியும், மீதத்திற்கு சிவன் குளத் தண்ணீரையும் கலந்து குடிக்கத் தொடங்குவார். உள்ளே செல்லும் கிளாசுகளின் அளவிற்கேற்ப நாட்டுக் கோழி வருவலும், முட்டைகளும் நிறைந்த தட்டின் எடை குறையத் தொடங்கும். இரவு நெடுநேரம் வரை தலைக்கு ஏறிய போதையுடன் பழைய கதைகளையும் தேவையில்லாத விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டேயிருப்பார்.

பல வருடங்களாக தொடர்ந்த இந்த குடிப்பழக்கத்திற்கு பலனாக குணப்படுத்துவதற்கரிய நோயொன்று குடலில் விளைந்தது. இருந்தும் விடமுடியாத பழக்கத்தினால் நோய் முற்றி வலி தாங்காமல் இரவில் துடித்துக் கத்துவார். இம்சிக்கும் உடல் உபாதைகளால் முன்பு போல் உழைக்க முடியாமல் போக பாரம் மிகுந்த வண்டியில் பூட்டிய தொத்தை மாடுபோல் வியாபாரம் படுக்கத் தொடங்கியது.

நிலபுலன்களை விற்றும் வீட்டை அடமானம் வைத்தும் நம்பிக்கையின் பேல் கடன்கள் வாங்கியும் பல நகரங்களில் வைத்தியம் பார்த்தார்கள்.

பணத்தால் மரணத்தின் வரவை சற்று நாள் வரை தள்ளிப் போட மட்டுமே முடிந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல் நாளொன்றில் அவரைவிட்டு உயிர் பிரிந்தது.

தலைக்கு மேல் ஏறிக்கிடந்தது கடன். அவருக்கு காயங்கள் முடிக்கவே பொறியில் மாட்டிய எலி போல் விழி பிதுங்கி போனார்கள். பொருளாதார விசயத்தில் ஒரு வழியாக எல்லாம் முடிந்து போனது.

சிறு குடிசையில் சோகமே உருவாக அமர்ந்திருந்த இவன் அம்மாவிடம் சொன்னார் ஊர்ப்பெரிய மனிதரான நாச்சிமுத்துப் பண்ணையார், "மகாராணி மாதிரி இருந்தியேம்மா. போக விட்டுப் பேசுற இந்த சனங்களுக்கு மத்தியில எப்பிடிம்மா காலந்தள்ளப் போற,''

என்றவர் மேலும் சொன்னார்,

"என் சினேகிதன் இந்த ஊர்ல இருக்கான். அவனப் போய் பாரும்மா. வேல ஏற்பாடு செஞ்சுத் தருவான், புள்ளைய கரை சேத்துக்கம்மா,''

என்றவர் கொடுத்த கடுதாசியில் அவர் நண்பன் முகவயும் நிலைதடுமாறிக் கிடந்த குடும்பத்தின் மேல் அவர் கொண்ட அக்கறையும் தெரிந்தது.

ஊர் விழிக்கக் காத்துக் கிடந்த அந்த பொழுதில் பேருந்திற்காக பெரிய கண்மாய் வழியாக அம்மாவுடன் சேர்ந்து நடந்தது இவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. அநாதைகள் என்று நெற்றியில் பச்சை குத்தி விட்டது போன்ற உணர்வுடன் பேருந்தில் ஏறினார்கள்.

இந்த ஊருக்கு வந்து அவர்கள் இறங்கியபோது சிதறிக் கிடந்த நம்பிக்கைகளும், பேருந்துக்காரன் கொடுத்த மீதச் சில்லரைகளும் மட்டுமே இருந்தது. காமராஜர் புரத்தில் அறுபது ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசை வீடும், தெற்கு ராஜ வீதியில் உள்ள ஒரு பழமண்டியில் அம்மாவுக்கு வேலையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் பண்ணையான் நண்பர். மண்டியை கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் பிடித்து வைக்கும் வேலை. பற்றாக்குறை குடும்பம் நடத்துவதற்கும், இவனை நகராட்சிப் பள்ளியில் படிக்க வைப்பதற்கும் போதுமானதாக இருந்தது வருமானம்.

அம்மாவின் சிரமத்தை உணர்ந்து ஒரளவிற்கு நன்றாக படித்து வந்தவன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் தேர்ச்சியெனத் தெந்ததும் அம்மாவிடம் சொன்னான்,

"நீ ஓராளா கஷ்டப்பட வேண்டாம்மா. நானும் வேலக்கிப் போறேன்.''

படிக்கிற வயசில வேலக்கு போக வேண்டாமென அம்மா எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. படிப்பை நிறுத்தி விட்டான்.

அப்போதுதான் இந்த பால் வேலைக்கு சேர்ந்தான். ஆரம்பத்தில் கிளாசுகள் கழுவுகின்ற வேலை. அதில் இவன் காட்டிய பொறுப்பும் உழைப்பும் முதலாளியிடம் இருந்து இவனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

முதலாளிக்கு இது தவிர கிரசர் ஓட்டல் கடை என நிறைய தொழில்கள் உண்டு. அடிக்கடி வெளியில் சென்று விடுவார். நாளடைவில் அவர் இல்லாத சமயங்களில் பாருக்கு இவனே முழு பொறுப்பு. அவர் வெளியூர் சென்று விடுகிற சமயங்களில் கல்லாவை கணக்கு முடித்து அசோக் நகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று இவனே கொடுத்துவிட்டு வருவான்.

அம்மாவிற்கு இவன் இங்கு வேலை பார்ப்பது ஆரம்பத்திலிருந்து சுத்தமாக பிடிப்பதில்லை.

"உங்க அப்பாவ மாதிரி ஒனக்கும் இந்த பழக்கம் வந்துடுமோன்னு பயமா இருக்குடா,''

அடிக்கடி இப்படிச் சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பாள் இவன் அம்மா.

"உன் பிள்ளை மேல் நம்பிக்கை இல்லையாம்மா,'' என்று இவன் சொல்கிற போது அம்மாவின் கண்களில் நம்பிக்கை மிளிர்வதை இவன் கண்கூடாக் காண்பான். இருந்தும் நாள் உழைப்பும் அலைச்சலும் தரும் களைப்புடன், வீட்டுக் கட்டிலில் சோர்வாக விழும் இவனை சந்தேகத்துடன் அம்மா பார்ப்பதையும் இவன் கவனிப்பான்.

ஓட்டலை சமீபித்திருந்தான். சுற்றிலும் சாக்கடையும், பன்றிக் கழிவுகளும் நிறைந்து கிடந்த குடிசைகளின் முடிவில், ஒய்யாரமாக உயர்ந்து நின்றது ஓட்டல் வாசலில் கூட்டமாக ஆட்கள் நிற்பது தெரிந்தது.

பரந்து விரிந்த நகரத்தின் மையப் பகுதியென்பதால் ஞாயிற்றுக்கிழமையிலும் போக்குவரத்து நெருக்கமாக இருந்தது. தெருவில் மக்கள் கூட்டமும் அதிகம்.

எதிர்பட்ட வயிரு தெரிய சேவை உடுத்திய இரண்டு அரவாணிப் பெண்கள் இவனிடம் காசு கேட்டதுகள். இவன் சட்டைப் பைகளை துலாவி தட்டுப்பட்ட சில்லரைகளில் ஒன்றான எட்டனாவை எடுத்து அவர்களிடத்தில் கொடுத்தான். காசையும் இவன் முகத்தையும் மாறி மாறி பார்த்து விட்டு, "அய்யே என்னாது எட்டனா... இதவச்சு என்னா பன்றது'', என்றது ஒரு அரவாணி கரகரத்த குரலில்.

"போதும் போதும்'', என்றான் இவன்.

"அய்யே இது மூஞ்சப்பாரு... போதுமாமுள்ள போதும். சொத்த சேர்த்து என்னா பண்ணப்போற. ஒனக்கு வெறும் பொட்டப் புள்ளையாத்தான் பொறக்கும் போ'', கட்டை விரலை மடக்கி இவன் கண்ணத்தில் அழுத்திவிட்டுச் சென்றது ஒன்று. இவன் அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு நடந்தான்.

சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லரைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை செலவிற்கு. இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமென்று தோன்றியது இவனுக்கு.

காசில்லாமல் கை ஒரு மாதிரியாக இருந்தது. வேலைக்கு சென்றிருந்தால் கை புலக்கமாக இருக்கும். டிப்ஸ் தினப்படி அதில்லாமல் காலி பாட்டில்களை வார முடிவில் கேயர் வேனில் ஏற்றிவிடும் போது இப்படி ஏதாவது செலவிற்கு கிடைத்துவிடும்.

சேகர் இந்நேரம் உழவர் சந்தை வந்திருப்பான். இவன் இருந்த வரையில் ஒன்றாகத் தான் வருவார்கள்.

"இந்த மாசத்தோட நான் வேலய விட்டு நிக்கப் போறேண்டா சேகரு'',

அன்று வெள்ளிக்காய்களும் காய்கறிகளும் நிறைந்த கூடையை கேரியல் வைத்து கட்டிக் கொண்டிருந்தவனிடம் சொன்னான்.

"ஏண்டா'', சட்டென்று சிறுத்துப்போன முகத்துடன் கேட்டான் சேகர்.

"அம்மா தான்டா அனத்துது. இங்க வேல பாக்கிறதால யாரும் பொண்ணு தர மாட்டேங்கறாங்களாம். ரெண்டு மூனு வரன் வேற கை நழுவிப் போச்சாம்'', சிறிது நேரம் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு அம்மா சொல்வது தான் சரியென சேகரும் சொன்னான்.

மூடப்பட்டிருந்த கம்பி கேட்டிற்கு வெளியே பெரும்பான்மையென மொய்த்துக் கிடந்த கூட்டத்தில் தானுமொருவனாக கலந்தான்.

"இப்ப கேட்டு தெறக்குறேன். அடிச்சுக்காம பண்ணாம வருசையா உள்ள வந்து நிக்கனும் தெரியுதா'',

கேட்டிற்குள்ளிருந்து சிமிண்டு கலர் சட்டை பேண்டு அணிந்திருந்த வாட்சுமேன் சொன்னவுடன் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. கேட்டு திறந்ததுதான் தாமதமென அடித்துப் பிடித்து ஓடியது கூட்டம். தாமதமாக வந்திருந்தாலும் முதல் பத்து பேருக்குள் ஒருவனாக சாமர்த்தியமாக நுழைந்து கொண்டான்.

கேட்டு திறந்து விட்ட வாட்சுமேனும் இன்னும் சிலரும் கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் இறைச்சல் குறைந்திருந்தது. முன்பக்கம் முழுவதும் பளபளக்கும் கண்ணாடிகளால் அலங்கக்கப்பட்டிருந்த ஓட்டலின் நுழைவாயிலில் இருந்து, போக்குவரத்திற்கு இடையூல்லாமல் இடது பக்கம் வளைந்து நீண்டிருந்தது வசை.

"எத்தினி மணிக்கு இண்டர்வியூ''

இவனுக்கு அடுத்து சிகப்பு சட்டையணிந்து நின்ற இளைஞனிடம் கேட்டான்.

"ஆரம்பிச்சுடுவாங்க'', என்றான் அந்த இளைஞன்.

"நான் பத்தாவது பாஸ் பண்ணியிருக்கேன். இங்க சர்வர் வேலை குடுப்பாங்களா'', அவனிடம் கேட்டான்.

"குடுக்கமாட்டாங்க'', அவன் சொன்னான்.

"ரூம் சர்வீஸ்'',

"ஹலோ அதெல்லாம் உங்களுக்கு சாதாரணமா தெயுதா... அதுக்கெல்லாம் லட்சம் செலவு பண்ணி படிச்சிருக்கணும். அந்த வேலைக்கெல்லாம் போனவாரமே ஆள் எடுத்திட்டாங்க.''

‘ஆள் எடுத்திட்டாங்களா... அப்பறம் ஏன் இங்க இவ்வளவு கூட்டம்' சந்தேகத்தை அந்த இளைஞனிடமே கேட்க அவன் சொன்னான் "அதுவா... இன்னும் கொஞ்ச நாள்ள இங்க அட்டாச்சுடு பார் வரப்போகுது. அதில டேபிள் கிளீன் பண்றதுக்கும், கிளாஸ் கழுவுறதுக்கும் ஆள் எடுக்குறாங்க.''

அவன் சொன்னவுடன் இவன் கால்கள் அணிச்சையாக வசையில் இருந்து விலகத் தொடங்க, அந்த இடத்தில் வந்து நின்ற சிகப்பு சட்டைக்காரன் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com