Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

சிந்தனைச் சிதறல்கள்
- ய.சு. ராஜன்


குளிர்ந்த நாடுகளே வளர்ந்த நாடுகளாக இருக்க முடியும் என்பது கடந்த நூற்றாண்டில் சுமார் எண்பது ஆண்டுகள் வரை பரவலாக இருந்த எண்ணம். குளிரே காணாத சிங்கப்பூர் அவ்வெண்ணங்களுக்குப் பெரிய சவால் விட்டது. இப்பொழுது பல ஆசிய நாடுகள் படு வேகமாக வளர்ந்து வருகின்றன. உள்நாட்டுப் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமும், உலகத்தையே ஒரு பெரிய சந்தையாகக் கருதி வியாபாரம், தொழில்களில் முயலுவதாலும் அவை முன்னேற முடிந்தன. தவிர விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்களை விரைவாகத் தங்கள் நாட்டுக்குக் கொணர்வதாலும் வளர்ச்சி மிகவும் அதிகமாயிற்று. வறுமை நிலையிலிருந்த பலர் நிறைய வருமானம் பெற ஆரம்பித்தார்கள். சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.

ஜுலை மாதத்தின் இடையில் மீண்டும் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பல நாடுகள் நாலந்தா பல்கலைக் கழகத்துக்குப் பணத்தாலும் அறிவாலும் உதவ ஒரு Mentor Group அமர்த்யா சென் தலைமையில் உண்டாக்கி இருக்கிறது, நமது வெளியுறவு அமைச்சகத்தின் (Ministry of External). முதல் கூட்டம் சிங்கப்பூல். சிங்கப்பூர் வெளிநாட்டு அமைச்சர் George Yeo இரண்டு நாட்களும் கலந்து கொண்டார். மூன்றாவது நாள் (ஞாயிறு) கொஞ்சம் நேரம் கிடைத்த போது சிங்கப்பூர் சயன்ஸ் சென்டருக்குப் போயிருந்தேன். ஒரு தமிழ்நாட்டு இளைஞர் ராஜசேகர் என்பவர் உதவியுடன்.

Ya.Su.Rajan விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வத்தையும் அறிவையும் உண்டாக்க எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாகப் பலர் வந்து பார்க்கிறார்கள்.

முன்னரே நான் வடக்கு வாசலில் ‘நானோ டெக்னாலஜி'' பற்றி எழுதலாம் என்று நினைத்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் முக்கியச் செய்தி ஆனதால் கடந்த மாதம் விண்வெளியுடன் மனித இனத்துக்கு இருக்கும் இணைப்பு பற்றிக் கொஞ்சம் எழுதினேன்.

சிங்கப்பூர் சயன்ஸ் சென்டல் இருக்கும் "நானோ டெக்னாலஜி'' பகுதியைப் பார்த்தவுடன் வாசகர்களுடன் அத்தொழில் நுட்பம் பற்றி எழுதலாம் என்ற அவா மிகவும் ஓங்கியது.... அங்கும் சில குறிப்புகள் எடுத்தேன்.

விஞ்ஞானத்துக்கு ஒரு மூலாதாரம் அளவை: நீளம், அகலம், உயரம், வட்டத்தின் பாதி... பொருட்களின் எடை. எவ்வளவு சூடு.... நேரத்தின் பகுதிகள்... இப்படிப் பலப்பல. நீளத்தில் அளவு என்பது பல அளப்புகளுக்கு (அதனால் ஆராய்ச்சிகளுக்கு) முக்கியம். ராக்கெட் எவ்வளவு தூரம் செல்லும்? விண்கணை ஒரு இடத்தில் விழ வேண்டுமானால் குறியின் மகத்துவம் தவறி விழுவது எவ்வளவு குறைவான அளவில் இருக்கிறது என்பதைப் பொருத்தது. உதாரணமாக ‘பிரம்மோஸ்' (Brahmos) விண்கனை 300 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு சாதாரண வீட்டின் சிறிய சன்னல் மூலமாக உள்ளே நுழைய முடியும்! இது தான் Accuracy.....

மூளையில் இருக்கும் Turnover (சதை வளர்ச்சி) எவ்வளவு பெயது? இருதய நாளங்களிலுள்ள அடைப்பு எவ்வளவு?... எல்லாமே அளவுதான்.

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் முழம், சாண், விரல் அளவு, சாதம்... இப்படி உண்டு. பிட்டிஷார் வந்தவுடன் இன்ச், ஃபுட் (அடி), யார்ட் (கஜம்), ஃபர்லாங்க், மைல்... என்று.

விஞ்ஞான முறைப்படி Decimal கணக்குகள் பத்து வைத்தே எல்லாம் செய்ய முடியும். அளவு ஒரு மீட்டர் (சுமார் 3 கஜத்துக்கு மேல்) என்றால், சென்டி மீட்டர் 100இல் ஒரு பகுதியான மீட்டர் அளவு. (1/100 மீட்டர்) மீட்டரை ஆயிரத்தால் வகுத்தால் மில்லி மீட்டர் (1/1000 மீட்டர்) மீட்டரை ஆயிரம் மடங்கு பெருக்கினால் கிலோ மீட்டர் (1000 மீட்டர்).... நாம் வகுத்துக் கொண்டே போவோம் ஒரு மில்லி மீட்டரை ஆயிரம் பகுதியாக்கி ஒரு பாகத்தை அளந்தால் அது மைக்ரோ மீட்டர் (அதாவது மீட்டன் பத்து லட்சத்துக்கு 1000X1000 ஒரு பகுதி). (ரேடியோவில் மீட்டர்வேவ் என்று கேட்டிருக்கிறீர்கள். மைக்ரோவேவ் ஓவனும் ரேடியோ கதிர்களை உபயோகிப்பதே. அந்த ரேடியோ அலைகளில் அளவு மைக்ரோ மீட்டல் இருக்கும்.)

பத்து லட்சம் = ஒரு மில்லியன்

1000 மில்லியன் = ஒரு பில்லியன் Billion = 100 கோடி.

மீட்டரை பில்லியன் பகுதிகளாக வெட்டி ஒரு பகுதியை எடுத்தால் அது நானோ மீட்டர்.

குழப்பமாக இருக்கிறதா? உங்கள் உயரம் சுமார் ஒன்றே முக்கால் மீட்டர் இருக்கும். உங்களை நூறு கோடி பங்காகச் சுருக்கினால் (சுந்தரகாண்ட அனுமனை நினைத்துக் கொள்ளுங்கள்) ஒரு நானோ மீட்டர் (Nano Meter) ஆகும்.

சுமார் ஒன்றிலிருந்து நூறு நா.மீ. வரையில் உள்ள பொருட்களை நானோ பொருட்களாக (Nanomaterials) விவரிக்கிறோம்.

இப்படிப்பட்ட சிறிய நிலையில் உள்ளவற்றை அறியும் விஞ்ஞானம் Nano Science; தொழில் நுட்பம் Nanotechnology.

இப்படிச் சிறிய நிலையில் பொருட்களில் குணங்கள் மிகவும் மாறுதலாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள்.

உதாரணமாகச் செம்பினால் செய்த பாத்திரங்கள் சிவப்பாக இருக்கின்றன. நானோ நிலையில் செம்பு நிறமில்லாமல் ஒளி ஊடுருவும் நிலையில் (Transparent) இருக்கிறது! நானோ தங்கத்திற்கு மஞ்சள் நிறமில்லை, நானோ நிலையில் லேசான பின்க் (Pink) நிறம்!

பொருட்கள் தனி அணுவாகவும் (Atoms) தனி அணுச் சேர்க்கையுடன் (Molecules) இருக்கும் போது ஒரு விதக்குணங்கள். பற்பல கோடிகளாகச் சேர்ந்து இருக்கும் போது வேறுவித குணங்கள். நானோ நிலையில் இன்னும் பல அற்புதக் குணங்கள். இந்த நியதிதான் Nano Science, Nanotechnology-இன் அஸ்திவாரம், அடித்தளம். வேகமாகச் சில குறிப்புகளைப் பார்ப்போம்...

இந்தச் சிறிய நிலையில் இருக்கும் அணுக் கூட்டங்களில் நிறைய இடம் இருக்கிறது; புது உண்மைகள் வரக்கூடும் என்று எழுதியவர் Richard Feynman (1959). Eric Drexler நானோ டெக்னாலஜி என்று வார்த்தையை உண்டாக்கினார். பெüதிக, வேதிய, உயிரியல்... இப்படிப்பல துறைகளில் "நானோ'' ஆராய்ச்சிகள் மிகவும் தீவிரமாயின. வேதியியலில் (Chemistry) நோபல் பரிசு பெற்ற Richard Smalley என்பவர் Nano Technology- க்குப் பெரிய முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

ஜூன் 1999 இல் புற்று நோய்க்கு "கீமோதிராபி' எடுத்துக் கொண்டிருக்கும் போது (மிகவும் வேதனை தரும் வைத்தியம்) நான் பார்க்க முடியாவிட்டாலும் நிச்சயமாக ஒருநாள் Precision Guided Tumour Killer மூலம் புற்று நோய் வைத்தியத்தை செயல் முறையாக்க முடியும் என்று உறுதியாக எழுதினார். ‘பிரம்மோஸ்' எப்படி தன் குறியை நோக்கிச் செல்கிறதோ. அது போல் நானோ அளவிலுள்ள யந்திரம் வேண்டிய அளவு மருந்துடன் உடம்புக்குள்ளே சென்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே அழிக்கும்.

"கிமோதெரபி' போன்ற ரசாயனக் காளவாயில் முழு உடம்பையும் போட வேண்டாம். ஸ்மாலி சமீபத்தில் அக்டோபர் 28, 2005 இல் மறைந்தார். பல விஞ்ஞானிகளும், தொழில் நுட்பமும், மருத்துவர்களும் ஆராய்ச்சிகளில் முன்னேறி வருகின்றனர். நானோ பொருட்கள் மூலம் பல உட்பாகங்களை ரிப்பேர் செய்ய முடியும். (Biorepairs)... இன்னும் பல முடியும்: புழுதியே படியாத வீடு, வாகனங்கள்.... அழுக்கு, வேர்வை ஏற்காத உடைகள்... புது வித்யாந்திரங்கள்... உலோகப் பொருட்கள்....

ஒரு குட்டிக் கேள்வி - பதில்: நம் ரத்தத்திலுள் சிவப்பணுக்கள் நானோ நிலையில் இருக்கின்றனவா? நம் கண்ணுக்குத் தெரிவதில்லையே? இல்லை என்பது தான் சரியான பதில்... சிவப்பணுக்களின் பரிதி வட்டம் Thickness சுமார் 8000 நா.மீ. சுமார் 2000 நா.மீ. அவை நானோ நிலைக்கு மிகவும் வெளியானவை.

மயிலின் தோகை நிறங்கள் உண்டாக்கும் பொருட்கள் நானோ நிலையில் உள்ளன... நானோ பொருட்களைப் பற்றி பற்பல விஷயங்கள் உள்ளன. Google,Yahoo மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். பெரியவர்களுக்கு முடியாவிட்டாலும் இளைஞர் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

சரி; நம் நாட்டில் நானோ டெக்னாலஜி நிலை என்ன? இந்தியர்கள் புதியதாகப் பலவற்றைக் கண்டு பிடித்திருக்கிறார்களா? ஆராய்ச்சிகள் சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் மத்திய அரசு சுமார் 200 கோடி ரூபாய் நிதியுதவி கொடுத்திருக்கிறது. சில தொழில் நிலையங்கள் ஆராய்ச்சிகள் செய்கின்றன. பல கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நானோ டெக்னாலஜி பாடங்கள் நடத்துகின்றன. எல்லாம் நல்லது தான்.

ஆயின் நம் நாட்டிலிருந்து பெரிய புது கண்டுபிடிப்புகள் வருமா? சில கேள்விக் குறிகள் இருக்கின்றன. பல துறைகளில் இருப்பது போல் விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளிலும் ஒரு சில "பெரியவர்''களின் சர்வாதிகாரம், ஆதிக்கம் பல ஆண்டுகளாகவே இருக்கின்றன. இளைய ஆராய்ச்சியாளர்களுக்குச் சந்தர்ப்பம் குறைவு; சுதந்திரமும் குறைவு... நானோ டெக்னாலஜி என்ற கவிதையில் (மறக்காத தேடல் புத்தகம்) இது பற்றி வருந்தியிருக்கிறேன்.

பேசினார் பலரும் / ‘நானே நானே' /
எனக்கே எனக்கே / என்றவொரு ஆதங்கம் /
பெருவெள்ளம்போல் ஓடியதே!

இந்நிலை மாறும் என்று நாம் வேண்டிக் கொள்வோம். ஆயின் ஒரு நல்ல செய்தி: நம்நாட்டு இளைஞர் பலர், வளர்ந்த நாடுகளில் நல்ல முறையாக முன்னோட்ட ஆராய்ச்சிகளில் சிறந்து கொண்டு இருக்கிறார்கள்... பொருளாதார, மார்க்கெட் போட்டிகளின் அழுத்தத்தில், நம்நாட்டிலும் தொழில் நிலையங்கள் ‘பெரிய புள்ளி'' ‘சிறிய புள்ளி'' என்று பார்க்காமல் திறமையைத் தேடுவோர்கள்... அப்போது வெளியே சிறக்கும் பலரும் இந்தியா வந்து புதுத் தொழில் நுட்பங்களையும், ஆராய்ச்சிகளையும் வேகமாக முன்னேற்றுவார்கள்.

இப்போது பதினைந்து வயதில் இருப்பவர்கள் வேலைக்கு தயாராய் இருக்கும் போது நம்நாட்டில் நானோ டெக்னாலஜி முன்னேற்றப் பாதையில் ஏறிவிடும் என்று நம்புகிறேன்.

என் எழுத்துப்பற்றி எழுதிய வாசகர்களுக்கு மிகவும் நன்றி... வேறு எவை பற்றி எழுதலாம் என்று சொன்னால் எனக்கு உதவும்....

தொடரும்...