Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

சனிமூலை
- ராகவன் தம்பி


சென்ற இதழில் உடல்நிலை சயில்லாத நிலையில் வீட்டில் படுத்திருந்த சி.சு.செல்லப்பாவை, முனைவர் செ.ரவீந்திரனுடன் சென்று பார்த்து விட்டு வந்ததைப் பற்றியும் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று ரவீந்திரனிடம் சொன்னதையும் சொல்லி நிறுத்தி இருந்தேன்.

எழுதிக்கொண்டு போகிற போக்கில் ஒரு விஷயத்தை சுத்தமாக மறந்து விட்டேன். அது என்னவென்றால், வடக்கு வாசல் இதழில் முற்றிலும் வேறு ஒரு தளத்துக்கு படைப்பாளிகள் குறித்த அறிமுகங்கள் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுத்தான் எல்லாவற்றையும் செய்து வருகிறேன். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்து சிறுபத்திகைகள் வாசித்து வரும் இலக்கிய ஜாம்பவான்களுக்காக மட்டுமே இந்தப் பத்திகை கொண்டு வரப்போவதில்லை என்று இந்தப் பத்திகை துவங்குவதற்கு முன்பிருந்தே எங்கள் ஊர் முனீஸ்வரர் மேல் சத்தியம் செய்திருந்தேன்.

வடக்கு வாசல் இதழின் பல வாசகர்கள் இந்த இலக்கியப் பரப்புக்கு முற்றிலும் புதியவர்களாக இருக்கிறார்கள். தமிழில் அறுபதுகளுக்குப் பிறகு ஏற்பட்ட கலாச்சாரச் சீரழிவுகளில் மிகவும் முக்கியமானது பல சீரிய இலக்கிய முயற்சிகள் பரந்த அளவில் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதுதான். தரமற்ற அரசியல், சினிமா போன்ற அசுரத் தாக்குதல்களின் விளைபொருளான வெகுஜனக் கலாச்சாரம் தமிழில் நிகழ்ந்த பல அற்புதங்களைப் பற்றி, தமிழுக்குக் கிடைத்த பல அரிய வரங்களைப் பற்றி வெகுவான அளவில் தெரிந்து கொள்ள இயலாமல் செய்து விட்டன என்பதை மிகவும் வருத்தத்துடன் பலர் எழுதியும், பேசியும், குடித்து விட்டுக் கத்தியும் பைத்தியம் பிடித்து சட்டையைக் கிழித்துக் கொண்டும் ஓய்ந்து போயிருக்கின்றனர்.

என்னைப் போன்ற ஆட்கள் கொஞ்சம் புத்திசாலிகள். இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு பிரபலங்கள் மற்றும் அரசியல் மற்றும் ஆள் பலம் படைத்தவர்கள் எதையாவது உளறித் தொலைக்கும் போது ஒன்றும் தெரியாதது போல முகத்தை வைத்துக் கொண்டு ஓரண்டு வார்த்தைகள் பாராட்டி விட்டுத் தலைதெறிக்க ஓடிவிடுகின்ற சாமர்த்தியத்தை காலம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நேரம் கிடைக்கும் போது யாராவது ஏமாந்தவர்கள் கிடைத்தால் அவர்களிடம் மட்டும் நவீன இலக்கியம் பற்றிக் கொஞ்சம் பேசி அல்ப சந்தோஷம் அடைந்து வருகிறோம்.

இந்த சாமர்த்தியங்களும் அற்பத்தனங்களும் எதுவுமே இல்லாது நிஜமான வாழ்க்கையை அதன் முழு அர்த்தத்துடன் வாழ்ந்தவர்கள் சி.சு.செல்லப்பா போன்ற இமயங்கள். வடக்கு வாசல் மற்றும் என்னுடைய வலைப்பூவில் செல்லப்பா பற்றிய கட்டுரை வாசித்த பல நண்பர்களும் பகைவர்களும் "எல்லாம் சரி. செல்லப்பான்றது யாரு? அது யாரு ரவீந்திரன்?'' என்று கேள்விகளை அடுக்கிய போது சற்று வேதனையாக இருந்தது. தமிழ்ச் சூழலில் செல்லப்பாவுக்கு இன்றும் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால் இது காலத்தின் கட்டாயம். செல்லப்பாவுக்கெல்லாம் அறிமுகம் தேவைப்படுகிறதே என்று புலம்பி விட்டு மேலும் கொஞ்சம் மொட்டை பிளேடுகளைப் போடக் கிளம்பினால் அந்தப் பாவம் நிஜமாகவே என்னைச் சும்மா விடாது. எனவே அவரைப் பற்றிய மிகச்சிறிய சுருக்கமான குறிப்பு இங்கே.

1912ல் மதுரை அருகே சின்னமன்னூரில் பிறந்து வத்தலக்குண்டில் வளர்ந்த சி.சு.செல்லப்பா தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். அவருடைய வாடிவாசல் புதினம் மிகவும் சிறப்பான ஒரு படைப்பு. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, திருலோக சீதாராம், க.நா.சுப்பிரமணியன் போன்ற தன் சமகால எழுத்தாளர்களின் நண்பராகத் திகழ்ந்தவர் சி.சு.செல்லப்பா. 1959ல் எழுத்து என்னும் இதழை மிகவும் சிரமப்பட்டு வெளிக் கொணர்ந்தார். கிராமத்து வீட்டை விற்று எழுத்து பிரசுரம் என்ற பெயரில் பல தரமான நூல்களைப் பதிப்பித்தார்.

எழுத்து என்னும் அவருடைய இதழ் தமிழ் நவீன இலக்கிய உலகில் மிகப்பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. இன்றைய பல நவீன இலக்கிய முயற்சிகளுக்கு எழுத்து முதல் தடம் அமைத்தது. தமிழில் விமர்சனம், புதுக்கவிதை, நவீன ஓவியங்கள், நவீன நாடகங்கள் போன்ற பல சாளரங்களைத் திறந்து விட்ட மாயத்தை நிகழ்த்தியது சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து பத்திரிகை.

தன் இறுதி மூச்சு வரை ஒரு உண்மையான காந்தியவாதியாக வாழ்ந்து மறைந்தவர் செல்லப்பா. அவர் எழுதிய ஒரே நாடகமான முறைப்பெண்ணை இயக்கி பலமுறை பல இடங்களில் மேடையேற்றி இருக்கிறேன். செல்லப்பாவுடன் எனக்குக் கிடைத்த அறிமுகம் என்பது அன்னையின் அருளும் சத்குருநாதன் திருவடிகளின் கருணையும் எனக்குக் கொடையாக அருளிய பெரும்பேறு என்று எப்போதும் எண்ணி நெகிழ்கிறவன் நான்.

பேராசியர் ரவீந்திரன் தில்லி பல்கலைக் கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது புதுவையில் வசிக்கிறார். தமிழ் நாடக மேடைகளில் ஒளியமைப்புக்குத் தனிப் பெருமை பெற்றுத் தந்தவர். உலகின் பல அரங்குகளில் ஒளி நெறியாளுகை செய்து வருகின்றவர். யதார்த்தாவின் அனைத்து நாடகங்களுக்கும் ஒளி நெறியாளுகை செய்தவர். தனிப்பட்ட வகையில் எனக்குப் பல சாளரங்களைத் திறந்து வைத்தவர். உலக சினிமாக்கள் பற்றிய ஆழ்ந்த ஞானம் உடையவர். வட ஆற்காடு மாவட்டத்தின் தெருக்கூத்து பற்றிய இவருடைய கட்டுரைகள் மிக அற்புதமான தகவல்களைத் தருவன. தமிழின் நவீன நாடக வரலாற்றில் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் இவருடையது. இவரும் நானும் சி.சு.செல்லப்பாவைப் பார்க்கப் போயிருந்தோம். அதைப் பற்றி சென்ற இதழில் எழுதியிருந்தேன்.

செல்லப்பா வீட்டை விட்டு வெளியே வந்ததும் எங்களிடையே நிலவிய மௌனத்தை உடைத்து "சார் இவரைக் கண்டிப்பா டாகுமெண்டரி எடுக்கணும்'' என்றேன்.

அது எந்த தைரியத்தில் நான் சொன்னது என்று இன்று வரை எனக்குத் தெரியாது. பொதுவாக என்னுடைய நாடக முயற்சிகள் மற்றும் இதற்கு முன்னர் தெருக்கூத்துக் கலைஞர் புசை கண்ணப்பத் தம்பிரானைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்ததும் மற்றும் சில சில்லரையான முயற்சிகளும் தற்போதைய தற்கொலையான வடக்கு வாசலும் ஏதோ ஒரு தைரியத்தில் விளைந்தவைதான். என்றாவது ஒரு நாள் இந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்றும் சக தமிழ்க்குடிகளால் என்றாவது ஒருநாள் ஆதக்கப்படும் என்ற தைரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் தான் என்று சொல்லலாமோ என்று தோன்றுகிறது. சில சாத்தியம் இல்லாத அசாத்தியங்களை நம்பியும் செய்கிறேனோ என்றும் சில சமயங்களில் தோன்றும். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய தமிழ் சினிமாக்களில் இருந்துதான் இதற்கான நேரிடையான உதாரணங்களை சொல்ல முடியுமா என்று பார்க்க வேண்டும்.

விஷயம் எப்படி என்றால், நீண்ட நாட்களாக நம் தமிழ் திரைப்படங்களில் எதிரிகள், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ராட்சச ஜீப்புகள், ஹெலிகாப்டர்கள், நீரைக்கிழித்து விரையும் போர்க்கப்பல்கள் போன்ற சகல வாகனாதிகளிலும் கதாநாயகனைத் துரத்துவார்கள். கதாநாயக வேடமணிந்த முதியவர் ஒரு சைக்கிளில் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்வார். அவருடைய லேசான இடது கால் வீச்சில் பல வாகனங்கள் எகிறி சிதைந்து பறக்கும். ஏ.கே 47, ஏ.கே.57, போன்ற நவீனரக துப்பாக்கிகளும் போஃபோர்ஸ் பேரத்தில் வாங்கப்பட்ட பீரங்கிகள் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆயுதங்களாலும் அந்தக் கதாநாயக வேடமணிந்த முதியவரைத் தாக்குவார்கள். அதில் ஒரு குண்டு கூட தவறிக்கூட அவர் மேல் படாது. ஆனால் கதாநாயக வேடமணிந்த அந்த முதியவர் உண்டி வில் போன்ற அதிபயங்கர ஆயுதத்தை எதிகள் மேல் சுண்டி விடுவார். அதில் சுமார் இருபது பேர் பறந்து கீழே விழுவார்கள். ஒரு சிறிய ரப்பர் பந்தால் ஒவ்வொருவராகத் தாக்குவார். குறைந்தது 150 கிலோ எடையுள்ள சுமார் 15 பேர் பறந்து பறந்து கீழே விழுவார்கள்.

அதே போல கதாநாயகனாக வயதைக் குறைத்து ஒப்பனை செய்த ஒருவர் தன் மகள் வயதுடைய பெண் ஒருத்தியின் வீட்டுக்குப் போய் அவள் மேல் ஆசையிருப்பதாகவும் அவளுடன் பழகிப் பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுவார். அந்த வீட்டார்கள் மறுத்தால் என்ன? பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு விவஸ்தை கெட்ட கிழவர் தன் வீட்டில் இருந்து இரு பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் தாராளமாகப் பழகிப் பார்க்கச் சொல்வார். இப்படியாக "தொமிளு' கலாச்சாரம் பேணப்படும்.

இவையெல்லாம் சாத்தியமாகின்ற அசாத்தியங்களில் சேருகின்ற ரகங்கள் இல்லையா? இதற்குச் சற்றும் குறையாத சாத்தியமாகின்ற அசாத்தியங்களை நம்பித்தான் பல காரியங்களை செய்து வந்திருக்கின்றேனோ என்ற ஒரு ஐயம் வயதாகிக் கொண்டு வருகின்ற இப்போதெல்லாம் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றது.

இந்த ஐயம் உண்மையானால் அந்த சாத்தியம் ஆகின்ற அசாத்தியத்தை நம்பித்தான் செல்லப்பாவைப் பற்றிய ஒரு படத்தை எடுக்க வேண்டும் எனத் துணிந்தேன் என்று சொல்லலாம் என்றும் தோன்றுகிறது.

திருவல்லிக்கேணியில் இருந்து வேளச்சேயில் உள்ள அண்ணன் வீட்டுக்குச் சென்றதும் மனைவியைத் தனியாக அழைத்து விஷயத்தைச் சொன்னேன். ஊட்டிக்குப் போவதாக வைத்திருக்கும் பணத்தை இப்போதைக்குக் கொடுத்தால் சென்னை வந்திருக்கும் இந்த நேரத்திலேயே படத்தை எடுத்து முடித்து விடலாம் என்றும் அவளிடம் சொன்னேன். அவள் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்துவிட்டு "என்ன வேணும்னாலும் பண்ணிக்குங்க'' என்று சொல்லி விட்டு நகர்ந்து போனாள். எத்தனை வருடங்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறாள்? இரட்டைக் குடுமியுடன் தெருவில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த என் பெண்கள் தில்லியிலேயே பிறந்து வளர்ந்ததால் அவர்களுக்கு ஊட்டி போன்ற விஷயங்கள் அவ்வளவாகத் தெந்திருக்கவில்லை. எனவே இன்னொரு கண்டத்தையும் தாண்டியாகி விட்டது.

அடுத்து என்ன? செல்லப்பாவைப் பார்த்துக் கேட்க வேண்டும். ஆவணப்படம் எடுக்க அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் இது போன்ற விஷயங்களுக்கு அவர் கோபித்துக் கொள்வார் என்பது நண்பர்கள் வட்டாரம் நன்கு அறிந்த விஷயம். பல விருதுகளை அவர் வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்ப் படைப்பாளிகளுக்கான ராஜராஜசோழன் விருது என்ற ஒன்றை அளித்து வந்தார். அந்த விருது வாங்குவதற்காக எம்.ஜி.ஆர். முன்னால் நாக்கைத் தொங்கவிட்டு கொண்டு பல தமிழ் தன்மான சிங்கங்கள் அலைந்து கொண்டிருந்தனர் என்று கேள்வி. செல்லப்பா வீட்டைத் தேடித் தகவல் சென்றது - அவருக்கு ராஜராஜசோழன் விருது வழங்கப்பட்டிருப்பதாகவும் உடன் மற்ற இருபது எழுத்தாளர்களுடன் (எண்ணிக்கை சரியா என்று சரியாகத் தெயவில்லை) அந்த விருதினைப் பகிர்ந்து கொள்ளக் குறிப்பிட்ட தேதிக்குக் குறிப்பிட்ட கலையரங்குக்கு வருமாறும் செல்லப்பாவுக்குக் கடிதம் கிடைத்தது. சீறி எழுந்தார் செல்லப்பா. தரமற்ற மற்றவர்களுடன் அந்த விருதினைப் பகிர்ந்து கொள்வதில் தனக்கு எந்த விருப்பமும் இல்லையென்று முதல்வருக்குக் கடிதம் எழுதியதுடன் தன்னைத் தேடி வந்த அரசு அதிகாரிகளையும் கடிந்து கொண்டு திருப்பி அனுப்பி விட்டார்.

கனடாவின் விளக்கு அமைப்பு அவருக்கு விளக்கு விருது வழங்க முன்வந்த போது விருதோடு வழங்கப்படும் தொகை தனக்குத் தேவையில்லை என்றும் அந்தத் தொகைக்குத் தன்னுடைய நூலொன்றை பதிப்பித்துத் தருமாறும் கேட்டுக் கொண்டார் செல்லப்பா. அதன்படி அவருடைய "என் சிறுகதைப் பாணி'' நூல், விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டது. சாகித்ய அகாதமி விருதும் அவர் காலமான பிறகே அவருடைய பெயருக்கு வழங்கப்பட்டது.

அதே போல செல்லப்பாவின் முறைப்பெண் நாடகத்தை மதுரையில் நடந்த நிஜநாடக இயக்கத்தின் நாடக விழாவின்போது எடுத்துச் சென்ற போது செல்லப்பா படுத்திய பாட்டினை கோமல் பற்றி முன்னர் எழுதிய சனிமூலை கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கிறேன். படிக்காதவர்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, புறா போன்ற சாதனங்களில் முகவரிகளை அனுப்புங்கள். அந்த இதழை இலவசமாக அனுப்பி வைக்கிறேன். அல்லது என்னுடைய வலைப் பதிவில் "சனிமூலை கட்டுரைகள்'' என்னும் வகைமையில் பதிந்து வைத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

சரி. இத்தனை கதையும் எதற்காக என்றால் செல்லப்பாவை அணுகி அவரை ஆவணப்படம் எடுப்பதற்காக அனுமதி கேட்பது யார்? என்னதான் நான்போகும் போதெல்லாம் கையைத் தட்டி "முறைமைப்பெண் பென்னேஸ்வரன் வந்திருக்கான் பாரு'' என்று மாமியைக் கூப்பிட்டாலும் இது போன்ற விஷயங்களுக்காகப் போகும்போது என்ன சொல்வார் அல்லது என்ன செய்வார் என்று எனக்கு அடிவயிற்றில் பயம் இருந்துகொண்டே இருந்தது. முகத்தில் அடித்தது போல வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அதிகமானது.

செல்லப்பாவுக்கு மிக நெருக்கமான, அவரை மதிக்கின்ற, எழுத்துக்களால் அவரை மிகவும் மேன்மையாகப் பதிவு செய்திருக்கின்ற அவருடைய நண்பர்களை அணுகினேன். ஏதோ பேயைக் கண்டு அரண்டது போல தலை தெறிக்க ஓடினார்கள் அனைவரும். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. "உங்களுக்குத் தான் அவரைப் பற்றித் தெரியுமே? எதுக்கு வம்பு? எதுக்கும் நீங்களே கேட்டுப் பாருங்க. உங்களுக்கு மறுக்க மாட்டார்'' என்று என்னைக் கழற்றி விடப் பார்த்தார்கள். ஒருசிலர், "செல்லப்பாவோட பேசறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு. இப்போ போய் நின்னா கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிடுவார்'' என்று முதல் படியிலேயே ஒதுங்கிக் கொண்டனர்.

நாள் தள்ளிக் கொண்டே போனது. எனக்குக் கிருஷ்ணகிரிக்கும் உடனடியாகப் போகவேண்டும். சரி. நாமே கேட்டுப் பார்ப்போம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். "போய் செருப்படி பட்டு வாங்க'' என்று வாழ்த்தி அனுப்பினாள் மனைவி. மீண்டும் நானும் ரவீந்திரனும் தொட்டாலே திறந்து கொள்ளக் கூடிய கதவுகளை உடைய அந்தத் திருவல்லிக்கேணி வீட்டு வாசலில் ஒரு நாள் காலை வேளையில் மீண்டும் நின்றோம்.

....மீதி அடுத்த இதழில்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com