ஸ்ரீ இராவண ஜெயம்
- புதியமாதவி
சன்னல் கம்பிகளை
வளைத்துக் கொண்டு
அறைக்குள் எட்டிப்பார்க்கும்
ஒளியின் கீற்றுக்களைச்
சிறைப்பிடிக்கத் தெரியாமல்
சிதறிக்கிடக்கிறது
இரவு முத்தங்களை
இழுத்துப் போர்த்தியிருக்கும்
சாயம் தேய்ந்தக் கண்ணாடி.
குருடனின் சங்கீதத்தை
விற்றுப் பிழைக்கும்
பிச்சைக்காரியாய்
அலைகளின் கைப்பிடித்து
அலைகின்றன
கடலின் விழிகள்.
எட்டுத்திசைகளிலும்
எழுதப்பட்டிருக்கும்
ஸ்ரீராம ஜெயத்தின்
மகிமையை
ஒரு நொடியில்
புரட்டிப் போடுகிறது
ஒன்பாதாவது திசையிலிருந்து
சீதை எழுதும்
ஸ்ரீ ஸ்ரீ இராவண ஜெயம்!
ஒற்றுப்பிழையாய்
எப்போதும்
ஒட்டிக் கொள்கிறது
எல்லா வேற்றுமைகளிலும்
ஒற்றுமையாய்
நினைவுத் தடங்கள்
புணர்ச்சி விதிகளை மறந்து.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|