Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

உறவுகள்
எஸ். கிருஷ்ணமூர்த்தி (கொல்கத்தா)


ஓரே குழப்பமாயிருந்தது சுசீலாவுக்கு, அடுத்தவீட்டு உமா சொல்லி விட்டுப் போனதை நம்புவதா இல்லையா?

Woman நம்பாமல் என்ன செய்வது? உமா ஒன்றும் வம்புக்காரியல்ல. அவள் உண்டு அவள் காயம் உண்டு என்று இருப்பவள். முடிந்தவரை பிறருக்கு உதவும் சுபாவம். அப்படிப்பட்டவள் விஜயாவைப் பற்றி ஏன் இல்லாததும் பொல்லாததும் சொல்ல வேண்டும்?

பள்ளியிலிருந்து அப்போது தான் திரும்பி வந்திருந்தாள் சுசீலா. மிகவும் களைத்துப் போயிருந்தாள். தலைமை ஆசிரியைப் பணியில் ரொம்பப் பிடுங்கல். கழுப்பிணி ஆசிரியைகள், எதற்கெடுத்தாலும் யூனியன் பெயரில் பேராட்டம் நடத்தும் ஊழியர்கள்; மாணவிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! அவர்களைப் பார்த்தால் படிக்க வருபவர்களாகவே தெரியாது. ஏதோ அழகுப் போட்டியில் கலந்து கொள்ள வருபவர்கள்போல் அவர்களுடைய நடையும், உடையும், அலங்காரமும், அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்த முயன்றால் உடனே ‘எங்கள் சுதந்திரம் பறிபோகிறது!' என்று கூச்சல் எழும்பும். வசதியும் செல்வாக்கும் படைத்த பெற்றோர் தங்கள் செல்லப் பெண்களுக்காகப் பந்து கொண்டு வந்து விடுகிறார்கள். இந்தப் பத்திரிகைகளும் அவர்களுக்கு சாதகமாகத்தான் பிரசாரம் செய்கின்றன. அவை வெளியிடும் படங்களில் ‘கவர்ச்சி' காட்டும் திரைப்பட நடிகைகள், "நாங்கள் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் இருந்து தான் கவர்ச்சி கற்றுக் கொள்ளுகிறோம்'' என்று வாக்கு மூலம் தருகிறார்கள்!

மாணவிகளும் ஆசிரியைகளும் தனக்கு ‘சிடுமூஞ்சி சுசீலா' என்று பெயர் வைத்திருப்பது அவளுக்குத் தெரியும்.

சுசீலா தலைவலியோடு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது தான் உமா வந்தாள்.

"மேடம் ரொம்ப நாளாவே உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு....''

"என்னம்மா, சொல்லு...''

"நீங்க தப்பா, நினைச்சுக்க மாட்டீங்களே?''

"தயங்காமே சொல்லும்மா. நான் ஒண்ணும் தப்பா எடுக்கமாட்டேன்.''

"நான் அடிக்கடி அடையாறிலே என் அண்ணன் வீட்டுக்கு போறேன் இல்லியா. அப்போ பல தடவை கிண்டி காலேஜøக்குப் பக்கத்திலே உங்க விஜயாவைப் பார்த்திருக்கேன். யாரோ ஒரு பையனோட சிரிச்சுப் பேசிக்கிட்டு நடந்து போவா. அவளோடே படிக்கற பையனாயிருக்கலாம். அவங்க பழகறதைப் பார்த்தா வெறும் சிநேகம்னு தோணல்லே... மறுபடியும் கேட்டுக்கறேன், நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு விஜயாவைத் தெரியும். அவ நல்ல பொண்ணுதான், தவறான வழியிலே போகிறவ இல்லே. இருந்தாலும்... காலம் கெட்டுக் கிடக்கு. சமூகச் சூழ்நிலையே மாறிக்கிட்டிருக்கு. இந்த வயசிலே பொண்ணுகளும் பிள்ளைகளும் எளிதிலே உணர்ச்சி வசப்பட்டுடறாங்க.... எதுக்கும் உங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்னு வந்தேன். நான் உங்ககிட்டே சொன்னதாக விஜயாவுக்குத் தெரிய வேண்டாம்....

இடி விழுந்தாற் போலிருந்தது சுசீலாவுக்கு. அவள் தன்னை சமாளித்துக் கொண்டு, "ரொம்ப நன்றிம்மா, நான் கவனிச்சுக்கறேன்'' என்று சொல்லி உமாவை அனுப்பி வைத்தாள்.

"கவனிச்சுக்கறேன்'' என்று எளிதாகச் சொல்லி விட்டாள். ஆனால் என்ன கவனிப்பது, எப்படி கவனிப்பது? விஜயா சின்னக் குழுந்தையல்ல, பொறியியல் கல்லூரியில் படிக்கும் பதினெட்டு வயதுப் பெண். அவள் எங்கு போகிறாள், யாருடன் பேசுகிறாள் என்று இவளால் கண்காணிக்க முடியுமா? தான் கண்காணிக்கப் படுகிறோம் என்று தெரிந்தால் விஷயம் விபரீதமாக அல்லவா ஆகிவிடும்! தாய் தன் சுதந்திரத்தில் தலையிடுவதாக நினைத்துக் கொண்டு அவளது பிடிவாதம் அதிகமாகிவிடுமே!

உமா சொல்வது சரிதான். இந்த இளம் பருவம் பெண்களுக்கும் பையன்களுக்கும் மிகவும் ஆபத்தான வயதுதான். கட்டுப்பாடு மிக்க நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்தும் அவளே அந்தப் பருவத்தில் காதல் வசப்பட்டு விட்டாளே!

சுசீலா சிறுமியாயிருந்த போதே அவளுடைய தந்தை காலமாகி விட்டார். அவளுடைய தாய் தான் அவளை மிகுந்த கஷ்டங்களுக்கிடையில் வளர்த்து ஆளாக்கினாள். அவள் நன்றாகத் தான் படித்தாள். ஆனால் கல்லூரியில் படிக்க வசதியில்லாததால் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் கற்றுக் கொண்டாள். அப்போது தான் அவளுக்கு இன்ஸ்டிட்யூட்டின் முதலாளியின் பிள்ளை சதாசிவத்துடன் பச்சயம் ஏற்பட்டது.

சதாசிவத்தின் குடும்பம் நல்ல வசதி படைத்தது. வீட்டின் பின்புறம் இன்ஸ்டிட்யூட், முன்புறம் குடும்பம். சதாசிவம் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பார்க்க ஆகிருதியாக இருப்பான். களையான முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு தவழும். கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் அவன் தந்தைக்கு உதவியாக இன்ஸ்டிட்யூட்டை கவனித்துக் கொள்வான்.

அவனுக்கு சுசீலாவைப் பிடித்துவிட்டது. அவளுக்கும் அவனுடைய அழகும் பணிவும் பிடித்திருந்தது. அவனைக் கலியாணம் செய்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று அவள் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் அவள் மறுகணமே தன்னைக் கடிந்து கொள்வாள். தன் வீண் ஆசைக்காக. அந்தஸ்தில் அவளுக்கும், அவனுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். அவனைக் கல்யாணம் செய்து கொள்வதைக் கனவிலும் நினைக்க முடியாது அவளால். இருந்தாலும் அவனைப் பற்றி நினைப்பதையும் அவனுக்காக ஏங்குவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் சில சமயங்களில் எதிர்பாராத விஷயங்களும் நடந்து விடுகின்றன வாழ்க்கையில், சதாசிவம் சுசீலாவைத் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் செய்தான். தந்தைக்கு இதில் விருப்பமில்லை. எனினும் இறுதியில் தம் ஒரே பையனின் விருப்பத்துக்கு இணங்கிவிட்டார்.

சதாசிவத்துக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. சுசீலாவைத் திருமணம் செய்து கொண்டான். அதற்குப் பிறகு சுசீலாவின் தாய் வெளியூலிருந்த தன் அண்ணனின் வீட்டுக்குப் போய் அங்கேயே வசிக்கத் தொடங்கினாள்.

முதல் சில ஆண்டுகள் இன்பமாகக் கழிந்தன. ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாண்டுகளுக்குப் பின் மறுபடி சுசீலா கருவுற்ற போது பிள்ளைப் பேறுக்காகத் தன் மாமன் வீடுபோனாள்.

அந்த சமயத்தில் தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

சதாசிவத்தின் அலுவலகத்தில் அவனுடைய ஸ்டெனோவாக வேலையில் சேர்ந்தாள் செல்வி. அவள் நல்ல அழகி, ஏழைக் குடும்பத்துப்பெண். ஆனால் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டு மென்ற தீவிர தாகம் அவளுக்கு. அதற்காக எந்த உபாயத்தையும் மேற்கொள்ள அவள் தயார். அவளது பார்வை சதாசிவத்தின் மேல் விழுந்தது. அவனை வசப்படுத்திக் கலியாணம் செய்து கொண்டால் அவள் நோக்கம் நிறைவேறி விடும். அவன் கலியாணமானவனாயிற்றே, அவனது குடும்பம் என்ன ஆகும் என்பதைப் பற்றியெல்லாம் அவள் கவலைப் படவில்லை.

ஓர் அழகிய இளம் பெண் ஓரிளைஞனை மயக்கத் தீர்மானித்து விட்டாள்; எப்படியும் அதை சாதித்து விடுவாள். சதாசிவம் அவளைத் தவிர்க்க எவ்வளவோ முயன்றும் இறுதியில் அவள் தான் வென்றாள். ஒரு கணநேர பலவீனம் அவனை வீழ்த்திவிட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் தன்னை சமாளித்துக் கொண்டு அவளுடன் தொடர்பை அறுத்துக் கொண்டான்.

ஆனால் செல்வி தன் முயற்சியைக் கை விடவில்லை. அவனுடைய குடும்பத்தில் கலகம் விளைவித்தால் அவன் தன் வழிக்கு வருவான் என்று கணக்குப் போட்டு சுசீலாவுக்கு ஓர் அநாமதேயக் கடிதம் எழுதினாள், சதாசிவத்துக்குத் தன் ஸ்டெனோவுடன் உறவு இருப்பதாக.

கடிதத்தைப் பார்த்துத் துடித்துப்போன சுசீலா கணவனுக்கு கடுமையாக ஒரு கடிதம் எழுதினாள். இதற்குள் அவளுக்கு ஒருபெண் குழந்தை பிறந்து விட்டது. இந்த சமயத்தில் சதாசிவம் தன் குற்றத்தை மறைத்திருந்தால் ஒருவாறு சமாதானம் ஏற்பட்டிருக்கும். ஆனால் பொய் சொல்ல விருப்பமில்லை சதாசிவத்துக்கு. அவன் தன் தவறை ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டான், இனி தவறு நேராதென்று உறுதியளித்தான்.

ஆனால் சுசீலா சமாதானமாகவில்லை, தன்னைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன் தனக்குத் துரோகம் செய்ததை அவளால் மன்னிக்க முடியவில்லை. அவள் விவாகரத்து வழக்கு தொடர்ந்தாள். இறுதியில் தம்பதியர் பிந்தனர். பிள்ளையின் பொறுப்பைத் தந்தைக்கும் பெண்ணின் பொறுப்பைத் தாய்க்கும் அளித்துத் தீர்ப்பாயிற்று. இதன் பிறகு சுசீலாவின் வாழ்க்கை எதிர் நீச்சல்தான். அவள் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி தொடங்கினாள், பிறகு தன் சொந்த முயற்சியால் மேலே படித்துப் பட்டம் பெற்றபின் ஆசிரியர் பயிற்சியும் பெற்றாள். ஓர் உயர்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்தது. இப்போது அவள் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை.

தன் திருமண வாழ்வின் கசப்பான அனுபவம் காரணமாக அவளுக்கு ஆணினத்தின் மீதே வெறுப்பு ஏற்பட்டு விட்டது. ஆண்கள் சபல புத்திக்காரர்கள். நம்பத் தகுந்தவர்களல்ல என்று கருதிய அவள் சமயம் வாய்த்த போதெல்லாம் தன் பெண்ணுக்குப் போதிப்பாள், ஆண்களை ஒரு போதும் நம்பக் கூடாதென்று. ஆனால் உமா சொல்வதைப் பார்த்தால்... விஜயாவும் ஓர் ஆணின் மோச வலையில் விழுந்து விட்டாளோ, தனக்கு நேர்ந்த துன்பம் தன் பெண்ணுக்குப் நேர்ந்து விடுமோ என்று பயந்து விட்டாள் சுசீலா...

அன்று விஜயா தாமதமாகத்தான் கல்லூரியிலிருந்து திரும்ப வந்தாள். சுசீலா படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, "ஏம்மா படுத்துக்கிட்டிருக்கே? உடம்பு சரியில்லையா?'' என்று கேட்டாள்.

"கொஞ்சம் தலைவலியாக இருந்தது, அதுதான்... சரி, ஏன் இவ்வளவு லேட்டு?''

"இன்னிக்கு மாணவர் சங்க நிகழ்ச்சி ஒண்ணு இருந்தது. அதுதான் லேட்டாயிடுத்து.... நான் காப்பி போட்டுக்கிட்டு வரேன். ஒரு ஆஸ்ப்ரோ சாப்பிட்டுக் காப்பி குடிச்சாத் தலைவலி பறந்து பேயிடும்.''

பெண்ணின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் சுசீலா அதில் குற்ற உணர்வோ பாசாங்கோ தென்படவில்லை. இவளை நம்புவதா, இல்லையா? அடிக்கடி லேட்டாக வீடு திரும்புகிறாள். அதற்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு காரணம் சொல்கிறாள். ஒரு நாள் கல்லூரி ஸ்போர்ட்ஸ், இன்னொரு நாள் டிராஃபிக் ஜாம், வேறொரு நாள் சிநேகிதி வீட்டுக்குப் போயிருந்ததாகச் சொல்கிறாள். இப்படி ஏதாவதொரு சாக்குச் சொல்லிக் கொண்டு அந்தப் பையனுடன் திரிகிறாளோ? அவளை இதைப்பற்றி எப்படி கேட்பது? தான் சந்தேகப்படுவதாகக் தெரிந்தால் அவள் இன்னும் ஜாக்கிரதையாகி விடுவாளே?

"எனக்குக் காப்பி வேண்டாம். தலைவலி இப்போ கொஞ்சம் தேவலை. நீ போய் சாப்பிடு. எனக்குப் பசிக்கல்லே...''

* * *
சிப்பு சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் வேலைக்காரி சுசீலாவிடம் ஒரு போட்டோவைக் கொண்டு வந்து கொடுத்துச் சொன்னாள், "பாப்பாவோட மேஜையில் புஸ்தகங்களையெல்லாம் அடுக்கி வைக்கறப்போ இது ஒரு புஸ்தகத்திலேருந்து கீழே விழுந்ததும்மா.''

ஓர் இளைஞனின் போட்டோ அது. ஆகிருதியாக, அழகாக இருந்தான். உமா, சொன்னது சரிதான். இவனுடன் தான் விஜயா சுற்றிக் கொண்டிருக்கிறாள். இன்று அவளைக் கேட்டுவிட வேண்டியதுதான்!

மாலையில் விஜயா வந்ததும் சுசீலா அவளைக் கூப்பிட்டாள், "விஜயா, இங்கே வா.''

"என்னம்மா?''

"இவன் யாரு?'' போட்டோவைக் காட்டிக் கேட்டாள்.

"இவனா?... இவன் வந்து...''

"இவன் யாரு, உண்மையைச் சொல்லு! இவனோட தானே நீ ரொம்ப நாளாச் சுத்திக்கிட்டிருக்கே?'' அதட்டினாள் சுசீலா.

"நான் இவனோடே பழகறது உண்மைதான், ஆனா நீ நினைக்கிற மாதி இல்லே...''

"அதாவது அண்ணன் தங்கை மாதிரி பழகறீங்களாக்கும்?'' சுசீலாவின் குரலில் குத்தல். அமைதியாகப் பதில் வந்தது விஜயாவிடமிருந்து. "அண்ணன் மாதிரி இல்லே, அண்ணனாகவே தான்!.... இவன் தான் என் அண்ணன், உன்னோட பிள்ளை விசுவம்..''

"என்ன சொல்றே நீ?''

"உண்மையைத் தான் சொல்றேன். அண்ணன் எனக்கு ரெண்டு வருஷம் சீனியர். படிப்பிலே சூரன், விளையாட்டிலே கெட்டிக்காரன். பேச்சுப் போட்டியிலே அவனை யாரும் ஜெயிக்க முடியாது. காலேஜ் விழாவிலே பத்துப் பதினஞ்சு பரிசு வாங்கறான். எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? ஆனா அவனோடு சேர்ந்து இருக்க எனக்குத்தான் குடுத்துவைக்கல்லே.''

சுசீலாவுக்குப் பேச நாவெழவில்லை.

"காலேஜிலே ஒரு நாள் தற்செயலா அவனோடே பேசினதிலே தெரிஞ்சது அவன் என் அண்ணன்னு... நீ அதிர்ஷ்டங் கெட்டவ அம்மா. அதனாலே தான் உனக்கும் இவ்வளவு நல்ல பிள்ளையோடே, நல்ல புருஷனோடே வாழ முடியல்லே...''

"நிறுத்துடீ! என் புருஷனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?''

"நிறையத் தெரியாட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அண்ணன் அவரைப் பத்திச் சொல்லியிருக்கான் என்கிட்டே. நானும் அவரை ரெண்டு மூணு தடவை சந்திச்சுப் பேசியிருக்கேன்...''

"எனக்குத் தெரியாமே அவரைப் பார்த்துப் பேசியிருக்கியா?'' சுசீலாவின் குரலில் அதிர்ச்சி.

"ஆமா, அண்ணன் கூட்டிக்கிட்டுப் போயிருக்கான். உனக்குப் கோபம் வருமேன்னு தான் நான் உன்கிட்டே சொல்லல்லே. அப்பா ரொம்ப நல்லவராக்கும்! உன்னைப் பத்தி அவர் ஒரு வார்த்தை கூடக் கடுமையாச் சொல்லல்லே. நடந்ததெல்லாம் விதியோட விளையாட்டுன்னு சொல்றார்...''

"இவ்வளவு நாளா நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு உன்னை வளர்த்திருக்கேன். நீயானா எனக்கு துரோகம் பண்ணிட்டு உன் அப்பாவோட சேர்ந்துட்டே!'' அழுகை வந்துவிட்டது சுசீலாவுக்கு.

"நீ எனக்காக ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கே, உண்மை தான். ஆனா நீ பண்ணினது தியாகமில்லே, வறட்டுப் பிடிவாதந்தான். உன் ஒருத்தியோட பிடிவாதத்தாலே மூணு பேரோட இல்லே, உன்னையும் சேர்த்து நாலு பேரோட வாழ்க்கை பாழாயிடுச்சு... இளம் வயசிலே புருஷனும் மனைவியும் பிரிஞ்சு போய்த் தனி வாழ்க்கை நடத்தறீங்க. அண்ணனுக்குத் தாய்ப்பாசம் கிடைக்கல்லே, எனக்கு அப்பாவோட ஆதரவு கிடைக்கல்லே...''

"இதுக்கெல்லாம் காரணம் நான்தான்னு சொல்றியா? உன் அப்பா மேலே ஒரு தப்பும் இல்லியா?''

"அப்பா தப்பு பண்ணியிருக்கலாம். ஆனா தப்பு பண்றது மனித இயற்கை. ஒருவன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலே தவறு செய்ய வாய்ப்பு இருக்கு. ஆனா அப்பவும் அதுக்காக வருத்தம் பட்டுத் திருந்திட்டான்னா அவன் செஞ்ச தவறைப் பெசு பண்ணக்கூடாது, அவன் பாவின்னு முடிவு கட்டிவிடக் கூடாது... நீ அப்பாவை மன்னிச்சிருக்கணும்... அப்படி செய்யாததாலே எவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டியதாயிடுச்சு நாம எல்லாருக்குமே!...''

"போதும், போதும், லெக்சர் பண்ண வேண்டாம்!'' என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குப் போய்ப் படுக்கையில் விழுந்தாள் சுசீலா...

வாழ்க்கையில் அவள் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாளோ, அந்தப் பெண்ணே இப்போது அவளைப் பிடிவாதக்காரி என்று குற்றஞ்சாட்டுகிறாள், அவளால் தான் நான்கு பேர்களின் வாழ்க்கை வீணாகி விட்டது என்கிறாள். அப்படியானால் அவள் இவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்க்கையும் பட்ட கஷ்டங்களும் வீண்தானா? அவள் இவ்வளவு காலமாகக் கானல் நீரை தேடி ஓடிக் கொண்டிருந்திருக்கிறாளா?... நாற்பது வயதில் இந்த நரைத்த முடி, முகத்தில் சுருக்கங்கள், துணையின்றிக் கழித்த நீண்ட மாலைகள், இரவுகள் - இவையெல்லாம் அவளுடைய வறட்டுப் பிடிவாதத்துக்கு அவள் கொடுத்த விலையா?...

இரவு முழுதும் உறக்கம் வரவில்லை அவளுக்கு...

மறுநாள் விஜயா கல்லூரிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள். அப்போது சுசீலா அவளுடைய அறைக்குள் வந்தாள்.

"விஜயா, எனக்கு ஒரு காயம் செய்யணும்.''

"என்னம்மா?''

"இன்னிக்கு சாயங்காலம் விசுவத்தைக் கூட்டிக்கிட்டு வரணும்...''

ஒரு கணம் திகைத்துப் போய் நின்றாள் விஜயா. பிறகு "அம்மா!'' என்று கூவியவாறு சுசீலாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com