Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

இக்கரைக்கு அக்கரை பச்சை
தெலுங்கு மூலம்: எண்டமூரி வீரேந்திரநாத் / தமிழாக்கம்: கெளரி கிருபானந்தன்


கம்பளியை லேசாக விலக்கி, ஒருகண்ணை மட்டும் திறந்து பார்த்தாள் சுமித்ரா. சரவணன் எழுந்து விட்டிருந்தான். கட்டில் மீது இருந்த போர்வையை சரியாக மடித்து வைத்துக் கொண்டிருப்பது விடி விளக்கின் வெளிச்சத்தில் சுமித்ராவுக்கு மங்கலாக தென்பட்டது.

Women அப்படி என்றால் மணி நாலரை.

டிசம்பர் மாதக் குளிருக்கு கம்பளிக்கடியில் உடல் நடுங்கியது. டிசம்பர் மாதம் ஆனாலும் ஏப்ரல் மாதமானாலும் சரவணன் காலையில் நாலரை மணிக்கே எழுந்து விடுவான்.

சுமித்ரா மறுபடியும் கம்பளியை போர்த்திக் கொண்டாள். அவள் எழுந்து கொள்வதற்கு ஆறரை மணியாகிவிடும். அதற்குள் அவன் மார்னிங் வாக் போய்விட்டு வந்து, ஷேவ் செய்து, குளித்து, பிரைவேட்டாக செய்யும் ஜாப்வர்க்கை செய்யத் தொடங்குவான். வக்கீல்கள் தரும் பேப்பர்களை டைப் செய்து தருவதால் அவனுக்கு மாதம் இருநூறு ரூபாய் வரையில் கிடைக்கும்.

ஒன்பது மணி ஆனதும் அவன் சைக்கிளில் குழந்தைகள் இருவரையும் முன்னும் பின்னுமாக உட்கார வைத்துக் கொண்டு பள்ளியில் கொண்டு போய் விடுவான். எத்தனையோ ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்ச்சி நிரல் இது. கல்யாணமான புதிதில் கணவன்பால் இருந்த கெளரவத்தை உத்தேசித்து தானும் எழுந்து கொள்ள சுமித்ரா முயற்சி செய்தாள். சாத்தியப் படவில்லை. ஆறு மாதங்கள் கழித்து கணவன் மேல் கமாண்ட் ஏற்பட்டு ஆறரை மணி வரையிலும் அவனை தன்னுடைய பிடியில் இறுக்கி வைத்துக் கொள்ள முயற்சித்தாள். அதுவும் நடக்கவில்லை.

அப்படியே எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன.

சரவணன் எப்போதும் நேரம் தவறாமல் நடந்து கொள்வான். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் வாழ்க்கையிடம் அவனுக்கு இருக்கும் ஸ்திரமான, நெர்மையான எண்ணம் பிரதிபலிக்கும்.

அதுதான் சுமித்ராவுக்குப் பிடிக்காது. அவனுடன் வாழ ஆரம்பித்து எட்டாண்டுகள் முடிந்த பிறகும் அவளால் முழுவதுமாக அட்ஜெஸ்ட் ஆக முடியவில்லை. அதற்குக் காரணம் மற்றவர்கள்தான் என்று இருவரும் நினைத்து வந்தார்கள்.

ஒரு முறை.........

நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கும் போது கட்டிலை விட்டு இறங்கினான்.

"என்ன ஆச்சு?'' எச்சலுடன் கேட்டாள்.

"அந்த மூலையில் பார். சுவற்றில் ஒட்டடை!'' என்றான்.

இழுத்து ஒரு அறை கொடுக்க வேண்டும் என்ற அளவுக்குக் கோபம் வந்தது அவளுக்கு வலுக்கட்டாயமாக அடக்கிக்கொண்டு "நாளை காலையில் ஒட்டடை அடித்தால் ஆகாதா?'' என்று கேட்டாள்.

"இன்று மதியமே நீ அதை கவனித்து எடுத்திருக்க வேண்டாமா? ரொம்ப நாளாக உன்னை ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நான் ஆபீசுக்கு போன பிறகு, பகல் முழுவதும் நீ என்னதான் செய்து கொண்டிருப்பாய்?'' மடக்கு நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு, பழைய விளக்குமாற்றை எடுத்து ஒட்டடை அடித்துக் கொண்டே கேட்டான்.

"பக்கத்து வீட்டு ருக்மிணியுடன் ஊர் வம்பு பேசிக் கொண்டிருப்பேன்.'' வெடுக்கென்று சொன்னாள் சுமித்ரா. கோபத்தில் உடல் பற்றி எவது போலிருந்தது அவளுக்கு.

********************************

அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் ......

"என்னங்க... எழுந்திருங்க.'' ருக்மிணி கணவனை உலுக்கினாள்.

நாராயணன் "ஊம்'' என்று முனகிவிட்டு அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டான்.

"ரேடியோவில் செய்திகள் கூட முடியப் போகிறது. எழுதிருங்களேன்.'' போர்வையை இழுத்தாள்.

அவன் சட்டென்று அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அவள் பெரும் முயற்சி செய்து தன்னை விடுவித்துக் கொண்டு "குளித்துவிட்டு என்ன பிரயோஜனம்? மறுபடியும் தலைக்குக் குளிக்க வேண்டும்'' என்று சொல்லிக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

அரைமணி கழித்து நாராயணன் எழுந்துகொண்டான். "டேய் பப்லூ! எழுந்திரு'' என்று சொல்லிக் கொண்டே மகனையும் எழுப்பிவிட்டான்.

தந்தை, மகனும் இருவரும் பிரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டு கொல்லைப்புரம் வந்தார்கள்.

"வெந்நீர் வைக்கட்டுமா?""

ருக்மணி கேட்ட போது நாராயணன் "ஊம்'' என்றான். அவள் உள்ளே சென்றாள். அரைமணி நேரம் பல்லை தேய்த்துத் தேய்த்து, பப்லூவையும் தேய்க்கவைத்து நாராயணன் உள்னே வந்தான். அதற்குள் ருக்மிணி வெந்நீரை எடுத்து வைத்தாள்.

"இன்னிக்கு என்ன சமையல் டியர்?'' என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தவன் வாணலியில் இருந்த உருளைக் கிழங்கு கறியை, ஒவ்வொரு துண்டமாக எடுத்து வாயில் போட்டுக் கொள்ளத் தொடங்கினான்.

ருக்மிணி தலையில் அடித்துக் கொண்டாள். "அடடா! மறுபடியும் இங்கே வந்து விட்டீங்களா? வெந்நீர் ஆறிப் போய்விடும். குளிக்கப் போங்க'' என்று வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளிவிட்டாள்.

பப்லூவை பள்ளியில் கொண்டு விடுவது நாராயணனுக்கு தினமும் பிரச்னைதான். அவனை இறக்கிவிட்டு வந்து, மறுபடியும் சமையல் அறைக்குள் நுழைந்தான். "என்னதான் சொல்லு. உனக்கு ரசத்துக்கு தாளித்துக் கொட்டும் பக்குவம் இன்னும் தெரியவில்லை ருக்மிணி!"

"எல்லாம் எனக்குத் தெரியம். நீங்க ஹாலுக்குப் போய் பேப்பரை பாருங்க'' என்றாள்.

ருக்மிணி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அஞ்சறைப் பெட்டியிலிருந்து காய்ந்த மிளகாயை எடுத்து காம்பை கிள்ளி தட்டில் வைத்துக் கொண்டிருந்தான். ருக்மிணி அடுப்பிலிருந்த வாணலியில் எண்ணெய் சரியாக காய்ந்து விட்டதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொல்லைப்புறம் வந்த சுமித்ரா ஜன்னல் வழியாக இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

**********************************

"சுமீ! சுமீ!'' என்று அழைத்துக் கொண்டே சரவணன் உள்ளே நுழைந்தான்.

"உனக்காக என்ன வாங்கி வந்தேன் என்று பாரு?""

"என்னது?'' வெளியில் வந்து பார்த்தாள் சுமித்ரா. அவள் கண்கள் வியப்பால் விரிந்தன. சரவணன் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஸ்கூட்டர்!'' என்றாள்.

ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.

அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ''வாங்கினீங்களா?'' என்றாள்.

"பின்னே?"

"ஓ ... டியர்!'' என்றவள் வேகமாக அருகில் சென்று அவன் கழுத்தைச் சுற்றிலும் கைகளை மாலையாக போட்டு கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

அவன் நகராமல் அப்படியே நின்றான். "சுமித்ரா! ஒரு கேள்விக்கு பதில் சொல்லு. இந்த அன்பு என் மீதா இல்லை ஸ்கூட்டர் மீதா?'' என்று கேட்டான்.

சுமித்ரா சட்டென்று கைகளை எடுத்துவிட்டு சுட்டெப்பது போல் கணவனை கோபமாகப் பார்த்தாள். "யூ ஆர் அன் இடியட்!'' என்றாள்.

ஆனால் அந்தக் கோபம் இரவு ஒன்பது மணி ஆனதும் குறைந்துவிட்டது. மெள்ளமாக கணவன் அருகில் சென்று "செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போகலாமா?'' நயமான குரலில் கேட்டாள்.

புதிதாக வாங்கிய ஸ்கூட்டரில் வெளியில் போக வேண்டும் என்றும், கணவனுடன் சேர்ந்து சினிமா பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவள் மனதில் பரவியிருந்தது. ஆனால் அவன் அதை கவனிக்கவில்லை. டைப்மிஷினின் முன்னால் உட்கார்ந்திருந்தவன் தலையை உயர்த்திப் பார்த்தான்.

"இந்தப் பேப்பர்களை இரவுக்குள் டைப் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வக்கீல் பணம் தரமாட்டார்'' என்றான்.

"பணம் .... பணம்..... பணம்... "என்றாள் எரிச்சலுடன். "எப்போதும் பணம்தானா?"

"அந்தப் பணமே இல்லாவிட்டால் இன்று ஸ்கூட்டர் எப்படி வந்திருக்கும்? எழுந்து அவள் அருகில் வந்தான். "இதோ பாரு சுமீ! கனவுலகில் வாழ்வது வேறு. கனவுகளை நினைவாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்வது வேறு. நாம் இரண்டாவது பிரிவில் சேரவேண்டும் என்பது என் விருப்பம்.""

"மனைவியுடன் சினிமாவுக்குப் போனால் அதில் தவறென்ன இருக்கிறது?''

"இந்த நள்ளிரவில் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு இரண்டாவது ஆட்டத்திற்குப் போகாவிட்டால்தான் என்ன? இதனால் இன்று வேலை நஷ்டம், நாளை அலுவலகத்தில் வேலை கஷ்டம்."

அவள் அவனை ரோஷத்துடன் பார்த்தாள். "உங்களைப் போல் கால்குலேடட் ஆக இருப்பவனுடன் எந்தப் பெண்ணும் சந்தோஷமாகக் குடித்தனம் செய்ய மாட்டாள். இது உண்மை'' என்றாள்.

அதற்குள் தெருவில் நின்றிருந்த நாராயணனும், ருக்மிணியும் அவள் கண்ணில் பட்டார்கள். "அதோ! அந்த ருக்மிணியைப் பாருங்கள். கொடுத்து வைத்தவள். கணவன் மனைவி என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். அவளுடைய கணவன் நாராயணன் சமையல் அறையில் மனைவிக்கு உதவி செய்வான். அருகில் இருந்து மகனை குளிக்க வைப்பான். அவனைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள். எதற்கும் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்'' என்றவள் சட்டென்று உள்ளே போனாள். "அந்த ருக்மிணியின் அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைக்காது.' மனதில் நினைத்துக் கொண்டாள்.

*****************************

மறுநாள் ருக்மிணி சுமித்ராவிடம் வந்தாள், ஒரு டம்ளர் சர்க்கரையை இரவல் வாங்குவதற்காக.

"யாரோ வந்திருக்காங்க போலிருக்கே?'' சுமித்ரா கேட்டாள்.

"ஆமாம். என் கூட படித்த சினேகிதிகள். இங்கே ஒரு சினேகிதியின் கல்யாணத்திற்காக வந்திருக்கிறார்கள்'' என்றவள் தன் வீட்டின் பக்கம் பார்த்தாள்.

அவள் முகம் சட்டென்று வாடிவிட்டது. வந்தவர்களுக்கு முன்னால் மகனை மடியில் வைத்துக் கொண்டு நாராயணன் உட்கார்ந்திருந்தான். மேல் சட்டையோ, பனியனோ அணிந்திருக்கவில்லை. உடுத்திக் கொண்டிருந்த வேட்டியும் அழுக்காக இருந்தது.

"இவருக்குக் கொஞ்சம் கூட இங்கிதமே கிடையாது. எந்தக் காரியமும் சரியாக செய்யமாட்டார்.'' டம்ளரை கையில் வாங்கிக் கொண்டே ருக்மிணி சொன்னாள். "உங்க கணவர் ரொம்ப பொறுப்பாக நடந்துகொள்வதை பார்க்கும் போது பெருமையாக நினைக்கத் தோன்றுகிறது. ஸ்கூட்டர் கூட வாங்கி விட்டீர்கள் இல்லையா. ஆம்பிளை என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். என்னுடையை கணவரும் இருக்கிறாரே. கொஞ்சம் கூட பொறுப்பு கிடையாது. சமையல் விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கு மட்டும் தயார். திடீரென்று மூட் வந்தால் சினிமாவுக்குப் போகலாம் கிளம்பு என்பார். காலையில் ஒன்பது மணி ஆனாலும் எழுந்து கொள்ள மாட்டார். இவருடன் காலம் தள்ளுவதற்குள் எனக்கு உயிரே போகிறது.'' ருக்மிணி மேலும் சொல்லிக் கொண்டே போனாள்.

சுமித்ரா வாயடைத்துப் போனவளாக அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com