Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

நிழல்களின் உலகம்
- வெ.சந்திரமோகன்


கரிய நிறத்தில் உங்கள் காலடியில்
தவழ்ந்து வரும் நிழலை
கவனித்ததுண்டா நீங்கள்?

நீங்கள் நினைத்திருப்பதைப் போல்
நிழல்கள் வெறும் நிழல்களல்ல.

பலர் நினைத்திருந்ததைப் போல்
இறந்தவர்களின் உயிர்களல்ல பேய்கள்
அவை இருப்பவர்களின் நிழல்கள்.

பகல் முழுதும்
உங்கள் ரொட்டி தின்ற நாய்போல்
உங்களைத் தொடர்ந்து அலையும் நிழல்கள்
உங்கள் இளைப்பாறலுக்குப்பின்
இருளில் அலைந்து திரிகின்றன
ரத்தம் குடிக்கும் பேய்களாய்.

என்னுடைய - உங்களின்
நண்பர்களின் - காதலிகளின் நிழல்கள்
ரகசியமாய் சந்தித்துக் கொள்கின்றன
ராத்திரிகளின் மெளனக் காட்டில்.

அவை சந்திக்கும் இடங்களுக்கு
ஒருபோதும் சென்றுவிடாதீர்கள்
சங்கடமாய் இருக்கும்.

உங்கள்சகோதரியின் நிழலுக்கு
நெருங்கிய நட்பு நிழல்
முத்தமிடுவதையும்

என் மனைவியின் நிழலுக்கு
முதிய நிழல் ஒன்று
முத்தமிடுவதையும்
நேரில் கண்டதனால் சொல்கிறேன்.
அவை பயங்கரமானவை.
உடல்களுக்குத்தான் உடைகள்
நிழல்கள் என்றும் நிர்வாணமாய்த் திரிகின்றன.
இரவில் விளக்கொளிகளைக் கொன்று
இருளைக் குடித்து அலையும் நிழல்கள்
பகலில் உங்கள் காலடியில் பயத்துடன் அலைகின்றன.

பாலைவன இரவொன்றில்
நிலவின் கீழ் நெடுநேரம் நின்றிருந்தேன்
மரணம் என் கால்களை
மவுனமாய்ப் பற்றுவதாய்ப் பட்டது
நீண்டு நெளிந்திருந்த என் நிழலைப்பார்த்தேன்
யாதுமறியாக் குழந்தையின் பாவனையுடன்
சொட்டுச் சொட்டாய் என் உயிரை
உறிஞ்சத் தொடங்கியிருந்தது
அது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.