Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

நெடுநல்வாடையும் நிதித்துறையும்...
ஆர். பாலகிருஷ்ணன்


Balakrishnan இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையராகத் தலைநகரில் பணியாற்றும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர். ஐ.ஏ.எஸ். தேர்வு மற்றும் அதற்கான நேர்காணலை முழுக்கத் தமிழிலேயே அளித்து முதல் அமர்விலேயே வெற்றியை சாதித்தவர். ஒரிசா மாநிலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் மற்றும் பல முக்கியப் பதவிகளையும் வகித்து அந்த மாநிலத்தின் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தவர். ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறுவதற்கு முன்பு தினமணி நாளிதழில் துணையாசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். கணையாழி இலக்கிய இதழிலும் ஆலோசகர் குழுவில் தீவிரப் பங்காற்றியிருக்கிறார்.

மனதில் எப்போதும் கவிதை ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் இவருடைய அன்புள்ள அம்மா கவிதைத் தொகுப்பை நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இடப்பெயர்கள் குறித்தும் மனிதர்களின் துணைப்பெயர்கள் குறித்தும் ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டு பல விவான ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். இவருடைய கட்டுரைகள் உலக அளவில் பல ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்படுகின்றன. தன்னுடைய வீட்டுக் கணிப்பொறியில் ஒரு பல்கலைக் கழக ஆய்வு மையம் வைத்திருக்கக் கூடிய அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவருடைய ஆய்வுகளுக்கான தகவுகளை சேகத்து வைத்திருக்கிறார். பாலகிருஷ்ணனின் நேர்காணல் வடக்கு வாசலில் இரு பகுதிகளாக விரிகிறது. முதல் பகுதியில் அவருடைய மாணவப் பருவம், இந்திய ஆட்சிப் பணியில் அவருடைய அனுபவங்கள் மற்றும் பணிகள் குறித்தும் இரண்டாம் பகுதியில் அவருடைய ஆய்வுகள் குறித்த விரிவான பதிவுகளும். இடம் பெறும்.

இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புக்குத் தமிழை முதன்மைப் பாடமாக எடுக்க வேண்டும் என்று உங்களைத் தூண்டிய காரணி எது?

பள்ளிப் படிப்பு முடித்ததும் என்ன செய்யவேண்டும் என்று வழிகாட்டும் அளவுக்கு எனக்குக் குடும்பப் பின்னணி கிடையாது. யாருக்கும் அந்த சந்தர்ப்பத்தில் பொதுவாக மருத்துவம் அல்லது பொறியியல் போன்ற படிப்பைத் தான் நாடத் தோன்றும். எனக்கும் பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது எதைப் படிக்க வேண்டும் என்ற தடுமாற்றம் இருந்த போது எனக்குப் பிடித்ததை செய்ய வேண்டும் என்று தோன்றியது. எதில் நாம் முழுமையாக உணர முடியுமோ எதில் நாம் மன ஒருமையுடன் இருக்க முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

நாம் எதில் முதல்வனாக விளங்க முடியும் என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்ட போது தமிழ் இலக்கியத்தில் அது முடியும் என்று உறுதியாகத் தோன்றியது. இதில் கை வைத்தால் நான்தான் முதல்வனாக முடியும் என்கிற தெம்பு வந்தது. அந்தத் தெம்பு வேறு படிப்பில் கிட்டுமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. இதைப் படித்தால் வேலை கிட்டும் இதைப் படித்தால் கிட்டாது என்று தான் எல்லாப் பெற்றோர்களும் அளவு கோல்களை வைத்திருக்கிறார்கள். நாம் எதில் தலை சிறந்து விளங்குவோமோ அதைச் செய்வதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றியது. தியாகராயர் கல்லூயில் பிஏ தமிழ் இலக்கியம் படிக்க சேர்ந்தபோது யாரையும் கேட்காமல் நானே முடிவெடுத்துப் போய் சேர்ந்து கொண்டேன்.

தமிழ் படிக்க உங்கள் வீட்டில் ஆதரவு கிடைத்ததா?

நான் அப்படி சேர்ந்ததும் என் வீட்டில் என்னிடம் பேசக்கூட மறுத்து விட்டார்கள் என்று சொல்லலாம். நான் ஏதோ தற்கொலைக்கு சமமான ஒரு முடிவு எடுத்து விட்டதைப் போல அவர்கள் நடந்து கொண்டார்கள். சுற்றம் நட்பு எல்லாம் கேட்டது தமிழ் படித்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று.

தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தபோது அதற்கான அடிப்படைக் காரணம், பிடித்ததை செய்ய வேண்டும் என்கிற முனைப்புத்தான். இன்று சற்று திரும்பிப் பார்க்கும்போது பிடித்ததைத் தான் செய்தேனா அது ஏன் என்று சில தீர்ப்புக்கள் வழங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த நேரத்தில் கிடைத்த தெம்பு அது. எங்கிருந்து அந்தத் தெம்பு எனக்கு வந்தது என்று கூட சொல்லமுடியாது. தமிழ் இளங்கலை மற்றும் முதுகலைத் தேர்வில் மதுரை காமராசர் பல்கலைக் கழத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் உங்களுக்கு ஆதர்சமாக இருந்து ஊக்கம் அளித்தவர்கள்...

ஆசிரியர்கள் என்று பார்க்கும்போது நான் ஆறாவது வகுப்பில் படிக்கும் போது என்னை பேச்சுப் போட்டிகளில் அறிமுகப்படுத்திய என்னுடைய ஆசிரியர் புலவர் சோமநாதன் அவர்கள். சமீபத்தில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றத்தில் அவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது என் பழைய நினைவுகளை மலரச் செய்தது. கல்லூரி வாழ்க்கையில் படிப்பைத் தவிர பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளில் பங்கேற்பும் அது மட்டுமின்றி சில பொது வாழ்க்கைத் தொடர்புகளும் இருந்தன. சில கருத்து வேறுபாடுகளால் நான் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த கல்லூரியை விட்டு விலகி இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகள் வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர நேர்ந்தது.

நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியை விட்டு விலகுகிறேன் என்று தெரிந்ததும் வேறு சில கல்லூரிகளில் இருந்தும் எனக்கு அழைப்புக்கள் கிடைத்தன. மறைந்த பேராசிரியர் தமிழ்க்குடிமகன் அவர்களை நான் கலந்து கொண்ட பேச்சுப்போட்டிகளின் போது நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் சந்திக்கும் வாய்ப்பு பல சந்தர்ப்பங்களில் எனக்குக் கிட்டியது. யாதவா கல்லூரியில் எனக்கு இடமளித்தது மட்டுமல்லாது பல வகைகளிலும் எனக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியவர் அவர் என்று சொல்லலாம்.

எனக்கு ஒரு இலக்கிய சிம்மாசனம் அளித்து அழகு பார்த்தவர் பேராசிரியர் தமிழ்க்குடிமகன் என்று சொன்னால் அது மிகையாகாது. எனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் இவரைப் போன்ற தமிழறிஞர்கள் அளித்த உற்சாகமும் பேராதரவும் பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகளில் 94 பரிசுகளை ஈட்டித் தந்தது.

என் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை எல்லாம் சில சமயங்களில் பின்னொக்கிப் பார்க்கும் போது நாடக மேடையில் நடக்கும் நிகழ்வுகள் போலத் தோன்றும். நான் படித்துக் கொண்டிருந்த கல்லுரிôயில் குன்றக்குடி அடிகளார் கேடயம் என்று ஒரு சுழற்கேடயம். மதுரையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் பேச்சுப்போட்டி நடத்துவார்கள். முதலாண்டு நான் படித்த கல்லூரிக்கு நான் வெற்றி பெற்றதனால் அந்த சுழற்கோப்பை கிடைத்தது. இரண்டாம் ஆண்டு வேறொரு கல்லூரிக்கு வந்து அந்த சுழற்கோப்பையை அந்தக் கல்லூரிக்கு வாங்கிக் கொடுத்தேன். இது போன்றவையெல்லாம் ஒரு வகையில் உற்சாகம் அளிக்கும் விஷயங்கள்தான். நான் யாதவா கல்லூரியில் படித்த போது நூலகங்களுக்குப் போய் எத்தனை ரூபாய்க்கு வேண்டுமானாலும் கல்லூரி நூலகத்துக்கு கல்லூரி நூலகக் கணக்கில் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் வாங்கலாம் என்னும் சுதந்திரத்தை கல்லூரி எனக்கு அளித்திருந்தது.

இதழாளராகவும் சில காலங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்து சற்று பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் எம்ஏ படித்துக் கொண்டிருந்தபோது இதழியல் எனக்கு விசேஷ பாடம். அப்போது நாங்கள் கண்டிப்பாக சில நாளிதழ்களில் சிறிது நாட்கள் பணியாற்ற வேண்டும். நானும் என் நண்பர்களும் அப்படி ஒரு பயிற்சிக்காக மதுரை தினமணி இதழ் அலுவலகத்துக்குப் போயிருந்தோம். தினமும் போய் அவர்கள் அங்கு எப்படி எடிட் செய்கிறார்கள் டெஸ்க் வேலை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அங்கு போவோம். அப்போது ஏ.என்.சிவராமன் அவர்கள் சென்னையில் தங்கியிருந்தார். அவருடைய மகன் திரு.எஸ்.பத்மநாபன் மதுரை இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஏ.என்.சிவராமன் அப்போது அவருடைய மகன் வீட்டில் மதுரையில் தங்கிக் கொண்டு ஓரு மாதங்கள் தினமணி வேலையையும் பார்த்து விட்டுப் போவதை வழக்கமாக வைத்திருந்தார். அதை என்னுடைய பேறு என்றுதான் சொல்ல வேண்டும். நான் பயிற்சிக்காக மதுரை தினமணி சென்றிருந்த போதுதான் சிவராமன் அங்கு தங்கியிருந்தார். மேல்சட்டை கூடப் போடாமல் ஒரு நான்கு முழ காவி வேட்டியைக் கட்டிக் கொண்டு அவர் உட்கார்ந்திருந்தார். நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை நான் தினமணியில் வேலை செய்வேன் என்று. இரண்டு வாரங்கள் அவருடன் இருந்திருப்போம். எப்போதும் எங்களை ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டு இருப்பார். இலக்கியம் பற்றி, இலக்கணம் பற்றிப் பேசுவார்.

அவருடைய பரந்த ஞானம் அனைவரும் அறிந்ததே. துளைத்துத் துளைத்துக் கேள்விகள் கேட்பார். அன்றைய செய்தித்தாளை நாம் படித்திருக்கிறோமா என்பதை சோதிப்பது போல இருக்கும் அவருடைய கேள்விகள். நமக்கு உலக ஞானம் இருக்கிறதா என்பதை தெந்து கொள்வதற்காக துளைத்துத் துளைத்துக் கேள்விகள் கேட்பார். சிறிய வயதில் இருந்தே தினமும் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதனால் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வாய்ப்பு இருந்தது. இது எப்படி அவருடைய மனதில் பதிந்தது என்று தெரியவில்லை. நாங்கள் பதினைந்து நாட்கள் பயிற்சியை முடித்து விடை பெற்றுக் கிளம்பும்போது என்னைத் தனியாகக் கூப்பிட்டார் சிவராமன். "பரீட்சை எப்போது முடியும்?'' என்று கேட்டார். "இன்னும் மூன்று மாதங்களில் முடியும்'' என்றேன். "அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?'' வேலைக்கு சேருவேன் என்று சொன்னேன். "இங்கே வேலை கொடுத்தால் சேருவாயா? என்று கேட்டார். இந்த மாதிரி கேள்வியை அவரிடம் எதிர்பார்க்கவில்லை. இன்னொன்று, தமிழாசிரியர் தொழிலைத் தவிர வேறொன்றை நான் செய்வதாக கற்பனை செய்து கூடப் பார்த்திருக்கவில்லை. ஆனால் சிவராமன் அவர்கள் கேட்டபோது யோசித்து சொல்கிறேன் என்று கூட சொல்லத் தோன்றவில்லை. "தாராளமாக'' என்று உடனே பதிலளித்தேன்.

"தினமணி - இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு பத்திரிகைகளையும் எடுத்துக் கொள். இரண்டிலும் கிட்டத்தட்ட செய்தி ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆங்கிலத்தில் வரும் செய்தியை நாம் தமிழில் எப்படி சொல்கிறோம் என்பதை கவனித்து விட்டு உன்னுடைய கருத்துக்களை ஒரு குறிப்பு போலத் தயார் செய்து எடுத்துக் கொண்டு வா. அதன் பிறகு நான் தகவல் சொல்கிறேன்'' என்று சொன்னார். நான் அதற்குப் பிறகு எம்ஏ தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு பரீட்சைகளை முடித்து என்னுடைய சொந்த ஊரான நத்தத்துக்கும் போய் சேர்ந்து விட்டேன். இதைப் பற்றி மறந்தும் போனேன். தினமணியை தொடர்ச்சியாகப் படித்து வந்தேன். சிவராமன் சொன்னது போல மொழிபெயர்ப்பு தொடர்பாக ஒரு குறிப்பைத் தயார் செய்து கொண்டிருந்தேன்.

எனக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து செய்தி வந்தது - என்னை தினமணி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளச் சொன்னதாக. நான் தினமணி அலுவலகம் சென்றபோது ஒரு பயிற்சியாளராக நியமனம் செய்தார்கள். அப்போது தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரசில் பணியில் சேர ஐஏஎஸ் தேர்வுக்கு நிகரான தேர்வு முறைகளை வைத்திருந்தார்கள். ஏ.என்.சிவராமன் நேரடியாக என்னை வேலை பார்க்க சொல்லியிருந்தாலும் முறைப்படி எனக்கு ஆணை வரவில்லை. "ஏ.என்.சிவராமன் ஏற்கனவே உங்களை தேர்வு செய்து விட்டார்.

நீங்கள் பெயருக்கு ஒரு தேர்வு எழுதிவிட்டு பணியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் நான் தேர்வு எழுதுவதை சிவராமன் அவர்கள் விரும்பவில்லை. உனக்கு ஒரு பத்திரிகை ஆசிரியன் லட்சணம் இருப்பதால் உன்னை நேரடியாக பத்திரிகையில் வேலை பார்க்க சொல்லி விட்டேன். நீ தேர்வு எழுதித்தான் தேர்வு பெறவேண்டும் என்கிற அவசியம் கிடையாது'' என்று அவர் உறுதியாகச் சொன்னார். அவருடைய பிடிவாதத்தால் தேர்வு ஏதும் இல்லாமல் என்னை பணி நியமனம் செய்தார்கள்.

"ஸ்த்ரீ'' பெண்ணாகவும் ஆஸ்பத்திரி மருத்துவ மனையாகவும் சர்வ கலாசாலை பல்கலைக்கழகமாகவும் தினமணியின் தமிழில் உருமாற்றம் பெற்ற காலகட்டம் அது. நான்கு வருடங்கள் அங்கு பணியாற்றினேன். 1984ல் இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெறும் வரை அங்குதான் வேலை செய்தேன். ஒரு வேளை நான் ஐஏஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால் நான் இதழியல் பணியைத் செய்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை திரைப் படத்துறைக்குப் போயிருக்கலாம். பாரதிராஜாவின் படங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசிப் போட்ட நாட்கள் அவை. மற்றபடி வேறு ஏதாவது வேலைக்கு சென்றிருப்பேனா என்று தோன்றவில்லை.

உங்களை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதத் தூண்டியது எது?

பொதுவாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஏஎஸ் படித்தவர்கள் குடும்பத்தில் இருந்து வருவார்கள். அல்லது பெரும் நகரங்களில் இருந்து வருவார்கள். அல்லது துவக்கத்தில் இருந்தே இப்படி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவினை யாராவது ஊட்டி வளர்த்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு இதுபோன்ற கனவுகளை ஊட்டி வளர்க்க வாய்ப்பும் இல்லை. அப்படி ஊட்டி வளர்க்க ஆளும் இல்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இப்படி ஐஏஎஸ் அதிகாரி ஆவதை ஒரு குறிக்கோளாக எடுத்துக் கொண்டு படிக்கவில்லை. பிடித்ததைப் படித்தேன். எங்காவது ஆசிரியப் பணிக்கு செல்லலாம் என்னும் திட்டத்துடன் தான் இருந்தேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல, என்னுடைய ஆறாம் வகுப்பில் இருந்தே மேடைகளில் ஏறிப்பேசும் வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்தன. 1973ல் ஒரு சந்தர்ப்பத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் பயணிக்கக் கூடிய, அவர் முன்னிலையில் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெருந்தலைவர் என்னிடம் "நீ நன்றாகப் படித்து, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டராகி நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும். நீ படித்து மற்றவர்க்கு நிறைய நல்லவற்றை செய்யலாம் என்று தனிப்பட்ட முறையில் சொன்னார்.

இப்படி ஐஏஎஸ் என்ற வார்த்தையை என் காதில் போட்ட முதல் மனிதர் பெருந்தலைவர் என்று சொல்லலாம். அவருக்கு ஏன் அப்படித் தோன்றியது என்று தெரியவில்லை. அவர் சொன்னார் என்பதற்காக நான் அதையே நினைத்து வாழ்ந்தேன் என்று சொல்லமுடியாது. அவர் சொன்னதை நான் மறந்து விட்டேன் என்று கூட சொல்லலாம். அதற்குப் பின்னால் நான் என்னுடைய பேச்சுப்போட்டி, என்னுடைய இளங்கலை, முதுகலைப் படிப்பு என்றுதான் போய்க் கொண்டிருந்தேனே தவிர ஐஏஎஸ் என்பதைக் குறிவைத்து நான் இயங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தினமணியில் வேலை பார்த்தபோது உடன் வேலை பார்த்த நண்பர்கள் என்னிடம் ஐஏஎஸ் தேர்வு எழுதினால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். அப்போது பத்திரிகையில் - பஞ்சாப் பிரச்னை, இலங்கைப் பிரச்னை மற்றும் அர்ஜென்டினா போர் போன்ற பல முக்கியமான விஷயங்களை நான் பார்த்துக் கொள்ளத் துவங்கினேன். நான் படித்த யாதவா கல்லூரியில் என்னை சொற் பொழிவாற்றக் கூப்பிட்டிருந்தார்கள். அங்கு ஒரு பெரும் பிரமுகர் கலந்து கொண்டார். என்னுடைய உரைக்குப் பின் அவர் முடிவுரை ஆற்றிய போது "பாலகிருஷ்ணன் பேசிய போது ஒரு ஐஏஎஸ் அதிகாரி பேசுவதைப்போல உணர்ந்தேன்.

அவர் ஐஏஎஸ் தேர்வு எழுதினால் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன்'' என்று பேசினார். அப்போது பெருந்தலைவர் சொன்ன விஷயத்தை நான் திரும்ப அசைபோடத் துவங்கினேன். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் எல்லோரும் அடிக்கடி ஐஏஎஸ் பற்றிப் பேசியதால் நானே அது குறித்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். அதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டு படித்தேன் என்று சொல்ல முடியாது. இடையில் நாடகத்தின் மீது ஆர்வம் வந்தது. நானே ஒரு குழுவை அமைத்துக் கொண்டு நாடகங்களில் நடிக்கத் துவங்கினேன்.

கவிதை எழுதினேன். பாடல்கள் பாடினேன். திரைப்படங்களில் ஆர்வம் காட்டினேன். இதில் திரைப்படமா ஐஏஎஸ் தேர்வா என்ற கேள்வி எழுந்தபோது பரீட்சை எழுதிப் பார்ப்போம். தேறினால் ஐஏஎஸ். இல்லையென்றால் பத்திரிகையாளனாகவோ அல்லது திரைப்படத் துறைக்கோ போவது என்று முடிவெடுத்தேன். இந்த முடிவில்தான் நான் விண்ணப்பத்தாளை வாங்கினேன். நான் ஒரு முறைதான் தேர்வு எழுதினேன். பொதுவாக ஐஏஎஸ் எழுதுபவர்கள் உடனடியாக அடுத்தடுத்து தேர்வுகள் எழுதுவார்கள். நான் ஒரு முறைதான் விண்ணப்பம் வாங்கினேன். ஒரு முறைதான் தேர்வு எழுதினேன்.

ஒருவேளை அப்போது தேர்ச்சி பெற்றிருக்காவிட்டால் நான் மீண்டும் தேர்வு எழுதியிருக்க மாட்டேன் என்றுதான் தோன்றுகிறது. நான் ஐஏஎஸ் தேர்வுக்காகத் தயார் செய்து கொண்டிருந்தது என் மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். ஐஏஎஸ் தேர்வுகளுக்குத் தயார் செய்துகொண்டிருந்த போது என் சொந்த ஊரான நத்தத்தில் இருந்து நான் பணிபுரிந்த மதுரைக்கு தினம் போகவர சுமார் எண்பது கிலோ மீட்டர்கள் பயணித்து பிறகு இரவில் சென்று படித்து தயார் செய்து கொள்வேன். வேதியியல், இயற்பியல், உயிரியல் போன்ற அறிவியல் பிரிவுகளின் கலைச் சொற்களை தமிழில் தேர்வு எழுத வசதியாக நானே தயார் செய்து வைத்துக் கொண்டேன்.

Balakrishnan இதற்காக பிரத்யேகமாக விடுப்பு எதுவும் எடுக்கவில்லை. சொல்லப் போனால் என்னுடைய மெயின் பரீட்சைக்கு இரவு பத்து மணி வரை தினமணியில் வேலை செய்து பிறகு நள்ளிரவு நத்தத்தில் உள்ள என் வீட்டுக்குச் சென்று படிப்பேன். மொத்தம் பத்து தேர்வுகள் - சிறிது இடைவெளி விட்டு ஐந்து நாட்கள். இந்த இடைவெளி விட்ட ஐந்து நாட்களிலும் மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் ஐந்து முறை சென்று தேர்வுகள் எழுதினேன். என்னுடைய பிலிமினெ தேர்வின் முதல்நாள் மாலை நான் என் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். என் நம்பிக்கையின் படி என் முதல் முயற்சியிலேயே தேர்வு பெற்றேன். ஐஏஎஸ் முடிவு வந்த நாள் மிகவும் ஜனரஞ்சகமான சம்பவம் என்று சொல்வேன்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் எனக்கு இரவுப் பணி. அந்த வெள்ளிக்கிழமை ஒன்பது மணிக்கு எனக்கு இரவுப்பணி துவக்கம். அன்றுதான் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் நண்பர்களுக்கு இனிப்புக்கள் வழங்க வீட்டில் இருந்து பணம் வாங்கி வந்திருந்தேன். இந்தியா முழுக்க யார் யார் தேறி இருக்கிறார்கள் என்ற செய்தி தினமணி அலுவலகத்தில் பிடிஐ டெலிபிண்டர் வழியாக வந்து கொண்டிருக்கின்றன. நான் டெலிபிண்டர் பக்கத்தில் நிற்கிறேன். நான் இந்தத் தேர்வு எழுதியிருக்கிறேன் என்பது அங்கு யாருக்கும் தெயாது.

ஒரு குறிப்பிட்ட பத்து இருபது பெயர்கள் வந்தபிறகு இப்படியெல்லாம் பார்ப்பது சரியில்லை என்று தோன்றியது. அதனால் மற்ற செய்திகள் எப்படி வருமோ அந்த வரிசையில் எடுத்துப் பார்க்கலாம் என்று என்னை அதில் இருந்து விலக்கி வைத்து ஒரு சிறு நடை போய்வந்தேன். மற்ற செய்திகளை மொழி பெயர்த்துவிட்டு அதன் வரிசையில் அந்த ஐஏஎஸ் தேர்வு முடிவினை எடுத்துப் பார்த்தேன். நான் ஒரு செய்தியாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படிப் பார்த்த போது என் பெயரும் அதில் வந்தது. அங்கு என்னுடன் பிழை திருத்தம் பார்ப்பவர்கள் மற்ற தோழர்களை அழைத்து அவர்களுக்கு இரவு உணவும் இனிப்பும் வாங்கி வரச் செய்தேன். அவர்கள் ஏதோ எனக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதைப் போல நினைத்தார்களே தவிர நான் ஐஏஎஸ் தேர்வு பெற்றேன் என்று அவர்கள் நினைக்க வில்லை. நானும் சொல்லவில்லை. பின்னர் சொன்ன போதுதான் அவர்களுக்கு விஷயம் தெரிந்தது. அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். ஐஏஎஸ் வந்தது திட்டமிட்டது என்று சொல்ல முடியாது.

ஆனால் யதார்த்தமாக என்னுடைய இலக்கியம், இதழ்ப்பணி, நாடகம், கவிதை போன்ற எதையுமே விட்டுக் கொடுக்காமல் முதல் முயற்சியிலேயே தமிழில் தேர்வு எழுதி தமிழை விருப்பப் பாடமாக எடுத்து தமிழிலேயே நேர்காணல் கொடுத்து வெளியே வரும்போது இந்திய ஆட்சிப் பணித்துறை வரலாற்றில் தமிழை ஒரு தாளாக எழுதி நிறைய பேர் தேர்வு அடைந்திருக்கிறார்கள். அவர்கள் பல துறைகளில் மாணவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் இளங்கலை மற்றும் முதுகலையை தமிழில் பயின்று ஒரே முயற்சியில் நேரடித் தேர்வில் இதுவரை யாரும் வந்தது இல்லை. முதல் மாணவனாக வந்தது பற்றி தமிழக சட்டசபை தொடங்கி பல இடங்களிலும் பேசினார்கள். பல இதழ்களிலும் ஊடகங்களிலும் இது பேசப்பட்டது. அந்த வகையில் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் படிக்கும் ஒருவன் கெட்டுப் போக மாட்டான் என்ற ஒரு உறுதியைக் கொடுக்க முடிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக ஒரிசாவில் உங்களுடைய அனுபவங்கள் குறித்து...

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற போது எனக்கு ஒரிசா மாநிலம் ஒதுக்கப்பட்டது. நான் தமிழகத்தில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படிக் கிடைத்ததில் ஏதோ கண்காணாத ஒரு இடத்துக்குப் போக வேண்டுமா என்பதுபோல நினைத்தேன். ஆனால் இந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு யோசித்துப் பார்க்கும் போது அது கூட ஒருவகையில் நல்லதுதான் என்று தோன்றுகிறது. என்னுடைய "அம்மாவுக்கு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் நான் சொல்லியிருப்பது போல, கிட்டப் பார்வையில் தட்டுப்படாதவை தூரப்பார்வையின் துலாக்கோலில் துலங்குகின்றன'' என்று. நாம் பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத விஷயங்களை தூரத்தில் இருந்து பார்ப்பது சாத்தியமாகி இருக்கிறது.

ஒரு புதிய பண்பாடு மற்றும் மொழிச்சூழலில் பல புதிய சவால்களை சந்திக்க வேண்டும். அதிருஷ்டவசமாக இந்த சவால்கள் எனக்கு நல்ல அனுபவங்களையே பரிசாக அளித்தன. வெளிமாநிலப் பணி வாய்ப்பில் விசாலமாகி இருக்கிறது எனது பார்வை. நிதித்துறை மேம்பாட்டுக் கழகத்தில் மேலாண்மை இயக்குநராக இருந்திருக்கிறேன். நான் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற நான்காம் ஆண்டிலேயே எனக்குக் கிடைத்த பதவியாகும். சொல்லப்போனால் அந்த நியமனத்தை நானே எதிர்த்தேன். இவ்வளவு குறைந்த வயதில் என்னை நியமிக்கக் கூடாது என்று வாதிட்டேன்.

அப்போது முதல்வராக இருந்த பிஜ÷ பட்நாயக் எல்லா விஷயங்களையும் தீர்க்கமாக ஆய்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். ஒரு ஐஏஎஸ் அதிகாரி இதை எவ்வளவு பெரிய பதவியாக நினைத்தாலும் அரசு எதை அவருக்கு உரியது என்று நினைக்கிறதோ அதை செய்ய வேண்டிய கடமை அந்த அதிகாரிக்கு இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். நெடுநல்வாடைக்கும் நிதித்துறைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால் அதை சவாலாக எடுத்து என் பணியைத் தொடர்ந்தேன்.

அடுத்த இதழில் தொடரும்....

நேர்காணல் - நிழற்படம்: ராகவன் தம்பி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com