Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

தன்னை முன்னிறுத்தாத நடிகன் ரியாசத் சிஷ்லக்

சண்முகராஜா

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பின் போது சலீம் கௌஸ் உடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒப்பனைகளைக் கலைத்துவிட்டு, படக்குழுவினர் அனைவரும் சென்றபின்னும் வெகுநேரம் தேநீர் அருந்தியபடி தொடர்ந்த உரையாடல் அது. எனக்கு சலீமின் குரல் மீது அளப்பரியா மோகம் உண்டு. எந்தச் சூழலையும் தன்வயப்படுத்திவிடும் அவரது குரலுக்கு, சென்ற ஆண்டு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மும்பையில் தொடர்ந்து நாடகங்கள் செய்து கொண்டிருக்கும் அவர் தற்போதுதான் லண்டன் எடின்பெர்க் விழாவில் தன்னுடைய நாடகத்தை அரங்கேற்றிவிட்டு வந்திருந்தார். குரல்வளம், நடிப்பு, நடிகன், பாத்திரமாக்கல், சூபி கவிகள் (குறிப்பாக ரூமி), நாடகவிழாக்கள், மகாராஷ்டிர அரங்கு என பலவற்றையும் பற்றி விரிந்தது உரையாடல். பெரும்பாலும் நடிப்பு என்பதை விட்டு விலகிச் செல்லவில்லை.

ஒருவன் நல்ல நடிகனாவதற்கு குறைந்தபட்சம் இருபது வருடங்கள் தேவைப்படுகின்றன. நடிப்பு பற்றிய பயிற்சிகள், தொழில் நுட்பங்கள் நடிகனுக்குள் பூரணமடைய மேற்கண்ட காலகட்டம் அவசியம் என்றார் சலீம். மேலும் அவர், ஒரு நடிகன் என்பவன் வள்ளலைப்போல் வாரிவழங்க வேண்டும். அதற்கு மாறாக சில கதாநாயகர்கள் நடிப்பென்று வந்துவிட்டால் பிச்சைக்காரர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. நான் நான் என்று தன்னுடைய நிரந்த முகபாவங்கள் அசைவுகளைத் தாண்டி அவர்களிடம் வேறு படைப்பு வளம் இல்லை. பாத்திரத்தைப் பட்டினி போட்டுவிடுகிறார்கள் என்றார்.

நாடகமோ, நடிப்போ எந்த படைப்புக் கலையானாலும் கலைஞனுக்கு இருக்க வேண்டிய பண்புகளில் தலையாயது தன்னை முன்னிறுத்தாமை. ஆனால், தமிழ்நாட்டில் பல நாடகக்குழுக்கள் காணாமல் போனதற்கும் நல்ல நடிகர்கள் உருவாகாமல் போனதற்கும் காரணம் அவர்கள் நடிப்பு, நாடகம் என்பதை விட்டு விலகிச் சென்று, நடிப்பையும் நாடகத்தையும் முன்னிறுத்தாமல் தன்னை முன்னிறுத்தியமைதான்.

அந்த வகையில் சலீமின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் தன்னை முன்னிறுத்தாத படைப்பு வளமிக்க வள்ளல்களின் வள்ளலை நான் சந்தித்தேன். அவர் ஜெர்ஸி குரோட்டோவ்ஸ்கியின் லேபரட்டரி தியேட்டரினுடைய பிரதான நடிகர் ரியாசத் சிஷ்லக்

தில்லியின் கலாச்சார செயல்பாடுகளுக்கு அங்குள்ள பன்னாட்டு தூதரகங்கள் முக்கிய பங்களிப்பு செய்கின்றன. அவ்வகையில் போலந்து நாட்டுத் தூதரகம் தேசிய நாடகப்பள்ளியுடன் இணைந்து போலந்தின் நவீன நாடக வரலாற்றை அறிமுகப்படுத்தி விவரிப்பதற்கான கருத்தரங்கை சங்கீத நாடக அகடமி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. போலந்திலிருந்து நாடக விற்பன்னர்களும் கலைஞர்களும் விருந்தினர்களாக வந்திருந்தனர். போலந்தின் சமகால நாடக வரலாற்றைப் பற்றிப் பேசும் பொழுது குரோட்டோவ்ஸ்கியின் பங்களிப்பை, அவரது நாடகங்களை ஒரு தனி அமர்வாகப் பகுத்திருந்தனர். அவருடைய நாடகங்களையும் பயிற்சி முறைகளையும் வீடியோ படமாகக் காண்பித்தனர். அவருடைய முறைமைகள், உலக நாடக வரலாற்றிற்கு அவர் செய்த பங்களிப்பு பற்றி நான் அறிந்திருந்தாலும், அவருடைய பயிற்சிகளை, தயாரிப்புகளை காட்சி வடிவமாக பார்ப்பதென்பது எனக்கு முதல்முறையாகும்.

முதல் படத்தில் குரோட்டோவ்ஸ்கியின் நடிப்புமுறை தத்துவத்திற்கு செயல்பாட்டு வடிவம் கொடுக்கும் நடிகர்கள் 1.ரியாசத் சிஷ்லக் 2.ரேனா மிரேசிகா இருவரும் தியேட்டர் லேப்பின் நோக்கம் மற்றும் அவசியத்தைக் கூறிவிட்டு ஆத்மார்த்தமாக பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். கீழைத்தேய மரபுக்கலைகளை உள்ளடக்கிய அப்பயிற்சி, உடல், குரல், மனம் ஆகியவற்றை மையப்படுத்தியதாக ஒரு நாடக நிகழ்வு போல் நடந்தேறிக் கொண்டிருந்தது. உடல் களைப்புறுவதையும் கூட அவர்கள் ஆற்றல் ஊக்கியாக மாற்றத் தெரிந்திருந்தார்கள். (ரியாசத் சிஷ்லக் முழுக்க முழுக்க குரோட்டோவ்ஸ்கியால் தயார்படுத்தப் பெற்றவர். இருவரும், இணைந்து விவாதித்தே பாரா தியேட்டர் ஆய்வுகளை முன் வைத்தனர்). அதைத் தொடர்ந்து சிஷ்லக் முதன்மைப் பாத்திரமேற்று நடித்த குரோட் டோவ்ஸ்கியின் இரு முக்கிய தயாரிப்புகளான தி கான்ஸ்டன்ட் பிரின்ஸ், அபோகாலிப்சிஸ் கம் ப்கரிஸ் ஆகியன திரையிடப்பட்டன. நிகழ்வில் சிஷ்லக்கின் தீராத வலியும், அதிலிருந்து பெறும் களிப்பும், தொடர் துயருறுதலும் பார்வை யாளனுக்கு தன்வயப் பட்டதொரு அதீத அனுபவத்தைத் தந்தபடி இருந்தது. சிஷ்லக்கின் உடல் அக புறவய வேறுபாடு களற்றுப் பிணைந்து கிடக்கிறது. ஆழ்ந்த தீவிரமான உணர்ச்சிகளை உடல் வெளிப்படுத்திய விதமும், வார்த்தைகளற்ற சப்தகோர்வைகளும் நடிகன் தனக்குள் தூரமாக பிரவேசிப்பதை உணர்த்துகிறது. பிரவேசிப்பதின் மூலம் பெறப் படும் அகத் தூண்டல்கள் பார்வையாளனை அதிர்வுறச் செய்து புதுவித அனுபவ உறவை ஏற்படுத்தும் விதம் தீர்க்கமாக நமக்குப் புலப்படுகிறது. ஒரு நாடக நடிகன் சிஷ்லக் போல்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் மேலிடும்படி நாடகக் கலையின் அசாத்திய எல்லைகளை விரிவு படுத்தியபடி இருந்தது அவரது மேடைச் செயல்பாடுகள்.

சமகால நாடகத்தில் நடிகன், பார்வையாளன் உறவு பற்றி விஞ்ஞான பூர்வமாகவும் தனித்துவமான அணுகுமுறையோடும் கருதுகோள்களை முன் வைத்தவர் குரோட்டோவ்ஸ்கி. அவர் இதை நடிப்பின் இயற்கையியலை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கினார். தத்துவத்தை செயல்படுத்தும் போது அது கொள்ளும் பரிணமிப்புகள் சிஷ்லக்கைப் போலவே வசீகரமானதாக இருக்கிறது.

சிஷ்லக்கின் வலியும் வசீகரமும் அகவயப்பட்ட நெடும்பயணத்தில்தான் சாத்தியப்படுகிறது. இப்பயணத்திற்கு அடிப்படை தகுதியே தன்னை முன்னிறுத்தாத பண்பேயாகும்.

நான் சலீம் உடன் உரையாடியதும், சிஷ்லக்கிடம் கண்டதும் இதுதான்: நடிகன் என்பவன் தன்னை முன்னிறுத்தாமல் நான் நடிக்கிறேன். நான் இயங்குகிறேன் என்பதைத் தாண்டி பாத்திரத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். தன்னை முன்னிறுத்துபவன் நாடகத்திலும் திரைப்படத்திலும் நடிப்புச் செயலை முற்றிலும் அறியாதவனாகவே இருக்கிறான். உணர்வு பரிமாற்றத்திற்கு தயாராகாதவன் அவன் இயங்கும் நடிப்புச் செயலுக்கும் நாடகச் சாதனத்திற்கும், சமூகத்திற்கும் அநீதி இழைக்கிறான். அவன் தனது தொடர்ச்சியாக நல்ல நடிகர்களையோ, பார்வையாளர்களையோ உருவாக்கத் தவறுகிறான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com