Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

புத்தபிரானை நாடிவந்த ஊர்ஸுலா: பி.சுரேந்திரன்

தமிழாக்கம்: டாக்டர் டி.எம். ரகுராம்

(பி.சுரேந்திரன் தற்கால மலையாள இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமை. சிறுகதை, நாவல், விமர்சனம், மொழியாக்கம் எனப் பல்வேறு தளங்களிலும் விரிந்த ஆளுமை கொண்டது அவருடைய இலக்கிய வெளி.

மனைவி சுஜாதா மற்றும் குழந்தைகள் ஜெயதேவன், நிகிலா சந்திரன் ஆகியோரோடு கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் என்ற இடத்தில் வசித்து வருகிறார். லௌகீக வாழ்வின் நீரோட்டத்தில், குமரநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இதுவரை பதினோருசிறுகதைத் தொகுப்புகள், அய்ந்து நாவல்கள், ஒருகலை விமர்சன நூல், ஒரு கட்டுரைத் திரட்டு, ஒரு மொழியாக்க நூல் ஆகியன பிரசுரமாகியுள்ளன. கேரள மாநில சாகித்ய அகாதெமி மற்றும் கேரள மாநில லலிதகலா அகாதெமி விருதுகள் உட்பட 9 விருதுகள் தந்து இவரை கௌரவப்படுத்தியுள்ளது கேரள அரசு.)

புலம் பெயர்ந்த திபெத்தியர்களின் சகிப்புத்தன்மை மற்றும் போராட்டங்களின் பாதைகள் மார்க்கமாகப் பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு பயணத்துக்கிடையில்தான் ஹிமாச்சல் பிரதேசத்து மக்லோட்கஞ்ச் எனும் டவுன்ஷிப்பை வந்தடைந்தேன்.

மக்லோட்கஞ்சை ‘லிட்டில் லாசா’ என்று அழைப்பர். உண்மையான லாசா, திபெத்தில் உள்ளது. தலாய்லாமா எனும் மத குருக்களின் ஆஸ்தானமான பொட்டாலா மாளிகை அங்குள்ளது. சீனர்கள் குடியேற்றத்துக்குப் பிறகு தற்போதைய தலாய்லாமா இந்தியாவில் புகலிடம் தேடினார். அவரின் ஆன்மீகத் தலைமையை அங்கீகரித்த பத்தாயிரக்கணக்கான திபெத்தியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். லாசாவை அவர்கள் மக்லோட்கஞ்சில் மறுமுறை உருவாக்கினார்கள். தலாய்லாமா தற்போது இங்குதான் வசிக்கிறார். புலம்பெயர்ந்த அரசாட்சி மையமும் இதுவே.

பனிமூடிய இமயமலைப் பாதைகள் தாண்டி அகதிகள் இன்னும் வந்தபடியிருக்கின்றனர். ‘சைனீஸ் மார்க்கெட்’ என்ற என் கதையில் வரும் தாம்சோ பல்மோ என்ற திபெத்திய பெண்மணியை நான் சந்தித்ததும் இங்குதான். சுதந்திர திபெத்துக்காகப் போராடியதன் காரணத்துக்காக இவரை த்ராவசில் ஜெயிலில் கடுங்காவலில் வைத்தனர். கொடுமையான சித்திரவதைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. ஆண்களும் பெண்களுமான திபெத்திய துறவிகள் ஆன்மீக விடுதலைக்காக சீனாவுடன் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பெண் புத்தத்துறவிகளின் ‘கெடன் சோலிங்’ என்ற ஆசிரமத்தையும் தேவாலயத்தையும் தேடிச் செல்கையில் எனக்கு நன்றாகவே வழி தவறிவிட்டது. ஆசிரமத்தின் மேல் பாகத்திலுள்ள காட்டுப்பாதையில்தான் முதலில் வந்து சேர்ந்தேன். சரிவான மலையோரமெங்கும் வீடுகள். அனைத்துக்கும் கீழே தேவாலயம். அங்கு செல்ல வழிகாட்ட யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்துக்கொண்டு அந்தக் காட்டுப்பாதையில் நிற்கையில் கீழே ஒரு வீட்டின் மேல் தள முகப்பில் சட்டென்று ஒரு மூதாட்டி நிற்பது தெரிந்தது. அவர் என்னை சைகை காட்டி அழைத்தார். காட்டுப் புதர்களைக் கையால் ஒதுக்கிவிட்டு வீட்டை நெருங்கியதும் அந்த மூதாட்டியைச் சுற்றி நாய்கள் இருப்பதைக் கவனித்தேன். மிகப்பெரிய வளர்ப்பு நாய்களான அவை குரைத்துக் குதிக்க முற்பட்டதும் பயத்துடன் பின்வாங்கினேன். அப்போது அந்த வயோதிகப் பெண்மணி அந்த நாய்களுடன் உள்ளே சென்றார். அவைகளைக் கூண்டுக்குள் போட்டுவிட்டுத் தனியாகத் திரும்பி வந்தார். ஆங்கிலத்தில் தான் பேசினார். உள்ளம் கவரும் சிரிப்பில் அந்தப் புத்தத் துறவியின் கருணை மனம் தெரிந்தது.

தலை மழித்திருந்தார். துறவிகளுக்கே உரித்தான தவிட்டு நிற உடை. அவரைப் பார்த்தால் திபெத்தியப் பெண்களின் சாயல் தெரியவில்லை. திபெத்துக்கும் ஐரோப்பாவுக்கும் உறவுகள் இருந்ததால் ‘க்ராஸ்’ ஆக இருக்குமோ என்றெண்ணி, கேட்டேன்: ‘‘மேடம் திபெத்துக்காரர்ங்களா?’’

‘‘இல்லை, ஜெர்மன்!’’ என்று கூறிவிட்டு உரக்கச் சிரித்தார்.

அந்தக் கண்களை நான் அப்போதுதான் சரியாக கவனித்தேன். வெய்யிலில் பளபளக்கும் இரண்டு கூழாங்கற்கள்! அந்தப் பெண்மணியின் பெயர் உர்ஸுலா.

அந்தப் பெயரையும் அதைச் சார்ந்திருக்கும் ஊரையும் நினைவுகூற விரும்பாததுபோல ஒரு எட்டாத் தொலைவில் தன்னை வைத்துக் கொள்வது போலிருந்தது. அதனால் முற்றிலும் திபெத்தியர்கள் உள்ளிட்ட புத்தத் துறவியர் அமைப்பில் பாகமாகாமல் ஐரோப்பிய உடம்பும் திபெத்திய உள்ளமுமாக அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். ஜம்பா யாங்சான் என்ற திபெத்திய பெயரை ஏற்றுக்கொண்டு எத்தனையோ காலமாகிவிட்டது. ஆன்மீகத் தேடலின் பாதையில் எத்தனையோ சத்திரங்களைக் கடந்துவந்து இறுதியில் பாரதத்தில் வந்து சேர்ந்தார்.

இந்தியாவுக்கு வந்து கால் நூற்றாண்டாகி விட்டது என்று சொன்னார். மணவாழ்க்கை, குடும்பவாழ்க்கை போன்றவற்றுடன் ஒரு போதும் நெருக்கம் தோன்றியதில்லை. பிறப்பால் பரிச்சயமான கிறித்துவ மதத்தை ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியதில்லை. லண்டனில் 14 வருடம் வாழ்ந்தார். அங்கே சந்திக்க நேர்ந்த புத்தத் துறவிகள்தான் புத்தரின் பாதைக்கு வழி காட்டினர். தான் தேடிக் கொண்டிருந்த உண்மை இதுதான் என்று புரிந்தபோது இந்தியாவுக்கு வந்தார். பெண் துறவிகளின் அமைப்பில் சேர வழி தேடி, திபெத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களிடம் வந்து சேர்ந்தார். ஜெர்மனியில் இருந்த தன் சொத்துக்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு துறவிகளின் காலனியில் தனக்கென்று ஒரு அப்பார்ட்மென்ட்டைக் கட்டினார். இந்த அப்பார்ட்மென்டில் எட்டு வளர்ப்பு நாய்கள் இந்த மூதாட்டிக்குக் காவலாக இருக்கின்றன.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் குமரிப் பருவத்துத் துறவியொருவள் அங்கே வந்தாள். திபெத்தியப் புத்தாண்டு வாழ்த்துக்களும் இனிப்பு வகைகளுமாக வந்திருந்தாள். திபெத்தியர்களுக்கு இது முக்கியமான வழக்கம். புத்தாண்டை அங்கு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

அறைக்குள்ளே புலால் வாடையடித்தது. கூடவே நாய்களின் வாடையும்.

இந்தத்துறவி புலால் உண்ணுபவரோ?

புலால் வாடையைப் பற்றிக் கேட்டபோது மீண்டும் சிரித்தார். ‘‘திபெத்திய துறவிகளுக்கு புலாலுணவு அனுமதிக்கபட்டிருக்கிறது. அங்குள்ள பிரத்யேகமான பருவ நிலையைத் தாக்குப் பிடிக்க உடம்பில் நிறைய கொழுப்புச்சத்து தேவை. ஆனால் நான் சுத்த சைவம். என்னுடைய நாய்களுக்காகத்தான் கறி வாங்குகிறேன்.’’

அந்த அம்மையாரின் வீட்டு மாடி முகப்பில் நின்றால் தௌலஹார் மலைத் தொடர்ச்சியைக் காணலாம். வெண்பனி அந்த மலையை முற்றிலும் மூடிவிடவில்லை.

‘‘அதோ அந்த மலையில் தெரியும் பனிதான் எங்களுக்கு உயிரூட்டும் ஜலம். இந்த முறை பனி சரியாக விழவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு நன்றாகவே வரப்போகிறது.’’

‘‘திபெத்துக்குச் சென்றிருக்கிறீர்களா?’’ நான் கேட்டேன்.

‘‘இல்லை. ஆனால் அங்கே வாழ்ந்து மடிவது என்பது என் கனவு.’’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com