Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

ஆதியில் தொப்புள்கொடி இருந்தது

சுகிர்தராணி

பின்னிப் படர்ந்திருந்த விருட்சங்களின்கீழ் காமத்தின் ஒற்றைச் சுடரென சிந்தியிருந்தது ஒளி. முகட்டுச்சியில் கொத்தாய் நகரும் பனிப்பொதியின் குளிர்ச்சியுடைய அவ்விடத்தின் பரப்பு முழுவதும் செழுமையான புற்கள். இரைச்சலின் ஓசையின்றி நழுவிய நதியின் கிளைகள் அவ்வனம் முழுவதும் வேர்விட்டிருந்தன. காணக்கிடைக்காத பழமரங்களும், உதிரா இதழ்கொண்ட பூக்களின் செடிகளும் மங்கிய வெளிச்சத்தில் சித்திரங்களாய் நின்றிருந்தன. பட்சிகளின் சிறகடிப்புகள் வழக்கொழிந்த இசைக்கருவியொன்றின் மீட்டலை நினைவுபடுத்தின. விலங்குகளின் முகங்கள் அவற்றின் சாயலற்றுக் காணப்பட்டன.

அவர்கள் இருவராக இருந்தனர். அவர்களின் மொழி இசைக்குறிப்புகளாக மிதந்துவந்தன. குழந்தைப் பருவத்தைத் தீண்டாது பருவமடைந்த உடல்களில் குழந்தைமைப் பண்புகளோடு திரிந்தனர். வார்த்தெடுக்கப்பட்டு பிசிறு நீக்கிய சிலையின் மேல்பூச்சினைப் போல அவர்களது மேனி பளபளப்புற்றிருந்தன. நதியின் நீரைப் பருகுகையில் உருவங்களைப் பார்த்துக் கொண்டனர். அபூர்வமாய் ஒருபுறம் அச்சடிக்கப்படாத ரூபாய்தாளைப் போல மகிழ்ச்சியின் பக்கத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருந்தனர். தரைமீதே தவழ்ந்து தொங்கிய பழங்களில் பசியாறினர். சிந்தனையின் திரை அவர்களை மூடியிருந்தது.

பேசிக் கொண்டிருக்காத பொழுதொன்றில் அவளை நெருங்கியது பேசும் பாம்பொன்று. இயல்பாக உரையாடத் தொடங்கியிருந்த அதன் நெருக்கமும் நெகிழ்வும் அவளை கிளர்வூட்டியிருக்க வேண்டும். இரகசியத்தை அவளுக்கு முன்அறிவித்ததும் அது அவ்விடத்தை விட்டு அகன்று சென்றது. தயக்கம் ஏதுமின்றி அவள் பார்வை செந்நிறப் பழங்கள் தொங்கிய மரத்தை வருடத் தொடங்கியிருந்தது. பழத்தின் சுவை நாவின் அரும்புகளைத் தின்னத் தொடங்கியது. எச்சில் கனியை அவனும் சுவைத்தான். காமத்தின் ஏடு அவர்களின் உடலைப் போர்த்த ஆரம்பித்தது. அவளது கைகள் அவனுடலில் விரகத்தின் அத்தியாயத்தை எழுதியது. நீண்ட நாட்கள் கழிந்தொரு நாளின் காலையில் அவள் அலறினாள். புற்கள் தலைகவிழப் புரண்டாள். அவன், அவள் உடலின் அசைவுகளை திகைப்புடன் கவனித்தான். தொடையின் குறுகிய இடத்தில் குபுக்கென்று வெளிப்பட்ட இரத்தப்பையில் வீறிட்டழுதது சிசுவொன்று. அதன் வயிற்றில் பிணைந்திருந்தது கரும்பச்சை நிற தொப்புள்கொடி.

சமீபத்தில் படிக்க நேர்ந்தது செய்தியொன்றை. ஊரின் மையத்திலுள்ள குப்பைத்தொட்டியில் பிறந்து ஓரிரு நாட்களே ஆனநிலையில், தொப்புள்கொடியின் காயாத ஈரத்தோடு குழந்தையொன்று வீசப்பட்டிருந்தது. இவை போன்ற பல செய்திகளை வாசிக்கையில் குழந்தையின் மீது பரிதாபப்படுவதும் முகம் தெரியாத அப்பெண்ணைத் திட்டுவதும் பின் மறந்து போவதும் வழக்கமான நிகழ்வு. எனில் இவற்றிற்கான காரணத்தைத் தெளிதல் கடினமான முயற்சி. என்றாலும் குப்பைத் தொட்டிகளிலும், கழிவுநீர்க் கால்வாய்களிலும், முட்புதர்களிலும், விலங்குகள் கடித்தெஞ்சிய குழந்தைகள் கிடப்பதற்கான காரணங்களில் சமூக, உளவியல் பிரச்சினைகள் பிணைந்து காணப்படுகின்றன.

காமம் என்பது அவசியமான, அதிசயமான உணர்ச்சி. திருமணத்திற்கு முன்னர், நெருக்கமான உணர்வுநிலைக்கு இருவரும் செல்லும்போது, அதன் தொடர்நிகழ்வு குறித்தான பிரக்ஞை ஏற்படுவதில்லை. அங்கு காமஉணர்ச்சி மிக்கு ஏற்படுகிறது. பின்னர் அவள் தாய்மையுறும்போது, தொடர்பில்லாதது போல அவன் விலகிச்செல்வதை நியாயப்படுத்தும் விதமாக நடந்துகொள்வது சமூகத்தின் மோசமான ஆணாதிக்க கட்டமைப்பு. தனித்து விடப்படும் அவள், ஒழுக்கம் குறித்தான சமூகத்தின் வரையறைக்குள் தன்னை இறுத்திக் கொள்வதின் நிகழ்வே, திருமண உறவற்றுப் பிறந்தக் குழந்தையை குப்பையில் வீசுவது.

பாலியல் வன்புணர்வில் பிறந்த குழந்தையும் வீசப்படுவது அதனையொட்டியே நிகழ்கிறது. முறையான உறவில் பிறக்கும் பெண் சிசுக்களும் விதிவிலக்கல்ல. கள்ளிப்பாலும், நெல்மணியும் பல உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றன. காரணம் வறுமையும் விழிப்புணர்வின்மையும், எய்ட்ஸ் பரவுவது பெண்களால்தான் என்னும் உண்மையற்ற பொதுக்கருத்து உலவிக் கொண்டிருப்பதைப் போல, முறையற்ற உறவுகள், கருச்சிதைவுகள், பச்சிளம் குழந்தைகள் வீசப்படுதல், சிசுக்கொலை போன்றவற்றிற்கு பெண்களும், பெண்களின் ஒழுக்கக் கேடுகளுமே முடிவான காரணங்கள் எனக் கைகாட்டிவிட்டு, ஆண்கள் எல்லாரும் சமூகத்தின் பாதுகாப்பான மரபுகளில் நின்றுகொள்கிறார்கள்.

பெண்ணினத்திற்கு மட்டும் ஒழுக்கத்தை குளத்தின் கரையைப் போல நிர்மாணிக்கும் சமூகம், திருமணத்திற்கு முன்னரும் ஏன் பின்னரும்கூட பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண்களின் ஒழுக்கத்தை காட்டாற்று வெள்ளமாக ஏன் விட்டுவைத்திருக்கிறது என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்கட்டும்.

ஏவாளின் தாய்மையிலிருந்து ஆரம்பித்ததுதான் என்றாலும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது தொப்புள்கொடி.