Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

அஞ்சாங்கரம்

கௌதமசித்தார்த்தன்

தெல்லாட்டம் ஆடிக் கொண்டிருந்த லச்சுமியின் ஆடு மேய்ச்சல் நிலத்திலிருந்து தப்பி சோளக்காட்டை நோக்கி பம்மிக் கொண்டிருந்தது. தெல்லுக்காயை நோக்கி நொண்டியிட்டுக் குதிப்பவளைத் தடுத்து நிறுத்திய ராசாத்தி, “ஆடெல்லா சோளக்காட்டுக்குப் போய்டிச்சி... போயி திருப்பீட்டு வா....” என்றாள். “போன விசை நாந்தானே போனே... இப்ப நீ போய்ட்டு வா...” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கரத்துக்குள் இறங்கியவளின் சடையைப் பிடித்து இழுத்தாள் ராசாத்தி. இருவரும் மல்லுக் கட்டும் அழகை மரநிழலில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரங்குப்பாட்டி ரசித்துக் கொண்டிருந்தாள். கை சாடையிட்டு அவர்களிருவரையும் அழைத்தாள். முணுமுணுத்துக் கொண்டே அருகில் வந்தனர் இருவரும். பாட்டி அடித் தொண்டையில் ஆடுகளை நோக்கிக் குரல் எழுப்ப, மேய்ச்சல் காட்டை நோக்கித் திரும்பின அவை. அவர்களிருவரும் மகிழ்ச்சியுடன், பாதியில் விட்ட ஆட்டத்தை விளையாடப் போக, பிடித்துக் கொண்டாள் பாட்டி.

“ஒக்காருங்கடி... தெல்லாட்டம்ன்னா என்னானு தெரியுமா ஒங்களுக்கு...?”

“ஓ...” இருவரும் உற்சாகமாய்த் தலையசைத்தனர்.

“அதில்லடியம்மா, சமைஞ்ச கொமுறிகள் இதை விளையாடக்கூடாது. ஏன்னு தெரியுமா?”

அவர்கள் தலையைத் தலையை ஆட்டவே,

“அப்றம், இந்த அஞ்சாங்கர ஆட்டம், மொதல்லே வெளையாடும்போது நாலு கரமாத்தா இருக்கும்... ஆனா, வெளையாடற ஆளை கருப்பராயன் தொட்டுட்டான்னா, இந்த வெளையாட்டு அஞ்சாங்கரமா மாறீடும்... இதெல்லா உங்களுக்குத் தெரியுமாடி?” என்று பொக்கை வாயைக் காட்டிச் சிரித்தாள்.

அந்தப் பேச்சில் ஒளிந்திருந்த விடுகதையின் புதிர் அவர்களிருவரையும் வியப்பில் மலைக்க வைத்தது. அப்படியே சொக்கிப்போய் உட்கார்ந்து கொண்டனர்.

“கருப்பராயன்னா யாரு பாட்டி...?”

“இப்ப, கருப்பராயனுக்குப் பதிலா உத்தியிலே கருங்கல்லே வெச்சி வெளையாடறீங்களே... அதுதான் கருப்பராயன்...”

தலை கிறுத்துப்போய் இருவரும் கிழவி முன் உட்கார்ந்தனர். அவள் சாவகாசமாய் காலை நீட்டிக் கொண்டு, வெத்திலையை கல்லில் வைத்து இடித்து வாயில் போட்டு இடுக்கிக் கொண்டாள். வெத்திலைச் சாறு அவளுக்குள் கிறக்கமாய் இறங்கியது.

ஆட்டம் ஆரம்பமானது. முதல் கட்டத்தில் வட்ட வடிவமான தெல்லுக்காயை வீசியெறிந்தாள் தேவனாத்தா. நொண்டியடித்துக் கொண்டே அந்தத் தெல்லுக்காயை குறுக்கும் நெடுக்குமான கோடுகளில் படாமல் நகர்த்திக் கொண்டு நாலாவது கட்டம் வரை கொண்டு போக வேண்டும். ஆட்டக்களத்தைச் சுற்றிலும் ஆடுமாடு மேய்க்கும் சிறுவர் சிறுமியர்கள் குமிந்திருந்தார்கள். அந்த அஞ்சாங்கரம் ஆட ஆரம்பித்தாலே ஒரே கொண்டாட்டந்தான். ஆடுமாடுகள் மேய்ச்சல் நிலத்தை விட்டு நகர்ந்து வெள்ளாமைக் காட்டில் வாய் வைப்பது கூடத் தெரியாமல் ஆட்டத்தின் போக்கில் அடைபட்டுக் கிடப்பார்கள். அதுஒரு மாயவித்தை நிறைந்த விளையாட்டு.

இதுவரை யாரும் அந்த சாலகத்தில் ஜெயித்ததில்லை. மிகப்பெரிதான ஒரு சதுரக் கட்டத்தில் பெருக்கல் குறி போன்று குறுக்கு வாக்கில் கோடு கிழித்த நான்கு கரங்களில் ஆட்ட விதிகள் கட்டமைகின்றன. அதன் நடுமையத்தில் காலில் உந்திச் சுழித்த உத்தி தான் கருப்பராயன் குழி. அதில் நின்றிருக்கிறான் பஞ்சமனான கருப்பராயன். பெண் பிள்ளைகள் மட்டுமே விளையாடும் ஆட்டத்தில் ஒரே ஒரு ஆண்.

கருப்பராயன் இல்லாமல் ஒரு போதும் அஞ்சாங்கரம் ஆடமுடியாத போக்கில், அந்தத் தருணத்திற்கு வாகாக வந்து சேருவான் அவன். கண்ணி வைத்துப் பிடித்த காக்கா குருவிகளை வேப்பமரத்தில் மாட்டிவிட்டு கருப்பராயன் குழிக்குள் இறங்கும்போது ஆட்டம் களைகட்ட ஆரம்பித்துவிடும். ஆட்டம் முடிந்து குருவிகளைத் தூக்கிக் கொண்டு பெருமிதத்துடன் நடக்கும் அவனது கருத்த கால்களில் அப்பியிருக்கும் புழுதியில், கெலிப்பு வாசம் வீசும்.

நொண்டியடித்தபடி தெல்லுக்காயை நகர்த்திக்கொண்டே ஒவ்வொரு கட்டமாக வலம் வரும் பெண்ணானவள், கருப்பராயனின் தொடுதலுக்குத் தப்பித்து நான்கு கரங்களையும் தாண்டி விட்டால் ஜெயித்தவளாவாள். ஆனால், கருப்பராயன் தொட்டுவிட்டால் தீட்டுப்பட்ட வளாவாள். அவன் தொட்ட மறுகணமே, நாலு கட்டங்களின் தலையில் ஒரு பெரிய அஞ்சாங்கட்டம் முளைத்துவிடும். அதற்குள் நுழைந்துதான் ஆட்டக்காரி வெளியே வரவேண்டும். ‘அது அவமானகரமானது அதற்குள் வைக்கும் குதிகாலில் காக்காய்க் கொப்புளங்கள் வந்து விடும்’ என்று பாட்டி சொல்லுவாள். அதையும் மீறி அஞ்சாங்கரத்திற்குள் நுழைந்தால் கருப்பராயனின் ஆளுகைக்குப் பணிந்துதான் அதிலிருந்து வெளியேற முடியும். அது வெற்றிக்கு ஒப்பானதாகாது. அதனாலேயே, கருப்பராயன் தொட்டதும், தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்திலிருந்து விலகி விடுவார்கள் ஆட்டக்காரர்கள்.

தேவனத்தா நொண்டியடித்துக் கொண்டே முதல் கட்டத்தில் இறங்கி தெல்லுக்காயை மிதித்தாள். அதன் கூம்பு வடிவக் கட்டம் சட்டென சுருங்கி விட்டாற்போல தெரிந்தது. கையகலக் குழியான கருப்பராயன் குழியில் நின்றிருந்த கருப்பராயன், கட்டத்தின் குறுக்குக் கோட்டில் கண்களைச் சுழட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். தேவனாத்தா அவனது தொடுதலுக்கு எட்டாமல் லாவகமாக ஒதுங்கிக் காலெடுக்க, தெல்லுக்காய் துள்ளிக் குதித்தது.

இந்த ஆட்டத்தின் போக்கைப்பற்றி அவளது பாட்டி நிறையச் சொல்லியிருக்கிறாள். அவள் போடும் கதைகளைவிடவும், இந்த ஆட்டத்தின் சூத்திரங்கள் பற்றிக் கதைக்கும் கதைகள்தான் அவளுக்கு நிரம்பப் பிடித்தமானவை. ‘கட்டங்கள் தோறும் கருப்பராயனின் கைகள் நீண்டுகிடக்கும் கண்ணே, கவனமாக ஆட வேண்டும்...’ ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு வாசனை இருக்கிறதென்றும், கட்டத்தில் கால்வைத்த உடன் வேறொரு உலகத்தின் வாசல் திறந்துகொள்ளும். அதற்குள் நடக்க நடக்க அதற்கேயுண்டான அற்புதங்கள் தன்னைச் சூழ்ந்து கொள்ளும். அதன் மாய வினோதங்களில் மயங்கி நொண்டிக்காலைத் தரையில் ஊன்றிவிட்டால் தோல்வியடைந்து போவதுதான். பாட்டி அந்த அற்புதமான ஆட்டத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் விடிய விடியப் பேசிக் கொண்டேயிருப்பாள். ஆகாசத்தில் குழந்தை நட்சத்திரங்களுக்குக் கதை சொல்லும் பாட்டி நட்சத்திரமும் அவர்களது கதைப்பைக் கண்சிமிட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அதிசயத்தில், பூரித்துப் போவாள் தேவனாத்தா.

ஓரக்கண்ணால் கருப்பராயனை நோட்டம் பார்த்துக் கொண்டே தெல்லுக்காயை நகர்த்த ஆரம்பித்தாள் அவள். தோள்மேல் காய்ச்சிய வெயிலின் சூடு மண்ணில் பாவாமல் அவளது உள்ளங்காலில் குளுமை ஏற, அந்தக்கட்டம் குளுந்து கொண்டே வந்தது. அவள் பரபரப்புடன் மூக்கை உறிஞ்சி வாசனைபார்த்தாள். அவளது அம்மா கம்மஞ்சோறு கிண்டும்போது எழும்பும் வெதுவெதுப்பு முகத்தில் மோதியது. தலை துளும்பியடிக்கும் வேனல் காத்தில் கம்மங்கருதுகள் ஆடியாடி அசைய அந்தக்கட்டம் முழுக்க கம்பங்காடாய் விரவிக் கிடந்தது. கம்மம் பூட்டைகளை நுள்ளி உள்ளங்கையில் வைத்து கசக்கி கொம்மைகளை ஊதினாள் அவள். அவை கம்மங் கொல்லைப் பொம்மை மீது பட்டு அதன் உடம்பெங்கும் அரிப்பேற்படுத்த, உடலெங்கும் சொறிந்து தள்ளுகிறது அது. கம்மம்பாலின் ருசி தொண்டைக் குழிக்குள் இறங்கும்போது ஏற்படும் தித்திப்பு அவள் எச்சிலில் சுரந்தது. அவளது முகமெங்கும் கம்மங் கருதுகள் முளைத்தன. கிச்சுமுச்சு கிச்சுமுச்சு என்று கத்திக்கொண்டுகுருவிகள் அவளது முகத்தில் ஆய்ந்தன. அவளது உடம்பெங்கும் கிலுக்கமெடுத்தது. ஆயலோட்டுபவனின் சத்தம் அவளது முதுகில் துரத்த ஓடிக் கொண்டிருந்தாள் அவள். ஓட ஓட அவளது ஆடைகள் பெரிதாகிக் கொண்டேயிருந்தன. குப்புறடித்துக்கொண்டு விழுந்தவளை கம்மந்தட்டுகளால் வேய்ந்த குச்சில் குத்துக்காலிட்டு உட்காரவைக்கிறார்கள். சரேலென கவண் கல்லின் விசை அவளது முகத்தை நோக்கிப்பாய, சடுதியில் ஒரு தேன் சிட்டின் லாவகத்துடன் சுதாரித்துத் தலையைத் திருப்பிக்கொள்ள, காதுகளின் ஓரத்தில் விசிறிக் கொண்டு போனது காத்து.

கருப்பராயனின் குறி என்றைக்கும் தப்பாமல் இன்றைக்குத் தப்பிப் போனதில் ஒருகணம் திகைத்துத் தடுமாறிப் போனான். அவமானத்தால் தனது குருதிநாளங்களில் உறைந்திருந்த முப்பாட்டன்களின் உடையாத குமிழிகள் வெடித்துச் சிதற உடலெங்கும் ஆவேசம் துளும்பியது.

அந்த ஆட்டத்தில் அவனை ஜெயிப்பதென்பது, அவனை மட்டும் ஜெயிப்பதல்ல; காலங்காலமாய் காலடியில் மிதித்துவைத்திருக்கும் ஒரு இனத்தையே ஜெயிப்பது. நூற்றாண்டு கால வஞ்சம் அவனது கைகளில் பரபரக்க கண்கள் நெருப்புக் கங்குகளாகிக் கொண்டு வந்தன. விடமாட்டேன். இந்த விளையாட்டில் கருப்பராயனை மீறி யாரும் ஜெயித்ததாக வரலாறு எழுதக்கூடாது.

அந்த ஆட்டத்தில் உயர்சாதிக்காரர்கள் மட்டுந்தான் விளையாடுவார்கள். ஆனால், அந்த ஆட்டத்தின் மையப்புள்ளியாக ஒரு பஞ்சமன்தான் இருக்க வேண்டுமென்று அந்த விளையாட்டை வகுத்து வைத்தவன் ஒரு மிகப்பெரிய ஞானவான். நால்வருண வஞ்சனத்தைக் கட்டங்களாக்கி தெல்லாட்டம் என்கிற வஞ்சனையாட்டமாக எதிர் தரிசனமாக்கியிருக்கிறது விதி. சமூகம் என்கிற பெரிய சதுரத்தை குறுக்கும் நெடுக்கும் நான்காகப் பிளந்து அதன் மையவிதானத்தில் பஞ்சமனை உட்கார்த்தி வைத்திருக்கிறது மரபு.

அது வெறும் விளையாட்டல்ல. பன்னெடுங் காலமாய் தொடர்ந்து கொண்டிருக்கும் பனிப்போர் உடல் முழுக்க அதன் வெம்மை உள்ளோடித் தீண்ட காலால் எத்தினான். அவன் நின்றிருந்த கையகலக் குழியிலிருந்து எழும் ஒரு நூறு வருசத்துப் புழுதி அந்த நிலப்பகுதியை மறைத்தது.

புழுதிப் படலத்தைக் கலைத்துக் கொண்டே தெல்லுக்காயை நகர்த்தும் தேவனாத்தாளை நோட்டமிட ஆரம்பித்தான். அந்தக் கூம்பு வடிவக் கட்டத்துக்குள் அவள் இறங்கிய லாவகத்திலும், அவள் கண்களில் மின்னும் வெளிச்சத்திலும் பார்வையைப் பதித்தான்.

அவளைப் பார்க்கும் கணந்தோறும் அவனுக்குள் ஓர் இனம்புரியாத உணர்வு அலையோடிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். இதுநாள்வரை விளையாடிய பெண்களைப் போல் அவள் இல்லை. பூமியில் பொதுமியெழுந்த குதிங்கால் அடவில் குருவியின் தவ்வல் தெரிந்தது. அவள் கட்டத்துக்குள் இறங்கி விளையாடும் லாவகத்தில் அவளுக்கு அது விளையாட்டுக் கரமாக இல்லாமல் வேறு ஒன்றாகக் காட்சியளிக்கிறது என்பதை மெல்ல மெல்லப் புரிந்துகொண்டவன், ஆர்வம் ததும்ப அவளது விளையாட்டைக் கவனிக்க ஆரம்பித்தான்.

அவளது தலை அசைப்பில் கம்மம் பூட்டைகள் அசைந்தன. குருவிகள் கம்மங் கொல்லையில் வந்திறங்கிய சிறகடிப்பில், கம்மந்தட்டுகள் அசைந்தசைந்து தடுமாறின. தலையில் கொங்கடை கட்டிக்கொண்டு கம்பரகத்தியில் கம்மங்கருதுகளை அறுத்தபடி முன்னேறிக் கொண்டிருந்தாள் அவள். ஒரு கணம் திகைத்துத் தடுமாறிப் போனவன், சட்டென சுதாரித்துக் கொண்டவனாய், ‘இந்த உபாயத்திலிருந்து எப்படி தான் ஜெயிப்பது?’ என்று யோசனையிலாழ்ந்தான். கம்மந்தட்டுகளுக்குள் ஒளிந்து ஒளிந்து வரப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

இனிமேலும் தாமதிக்கலாகாதென பாய்ந்தெழுந்த கருப்பராயன், அந்தக் காட்சிப் புலத்துக்குள் தன்னை நுழைக்க ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவனது தலை மண் சட்டியாக மாற, உடம்பெங்கும் திணிக்கப்பட்ட வைக்கோல் கூளங்களாய் திரேகம் அசைவுபட, சற்றைக்கெல்லாம் கம்மங்கொல்லைப் பொம்மையாக மாறிப்போனான்.கம்மந்தட்டுகள் அசையும் வேகத்தை நோக்கி அவன் பாய்ந்த வேகத்தில், ஒரு கம்மங்கருதை நுள்ளிய தேவனாத்தா, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி ‘ப்பூ’ என்று ஊதுகிறாள். கொம்மைகள், சுழன்று சுழன்று அவன் உடல்மீது படிந்து அரிப்பேற்படுத்துகின்றன. வறட் வறட்டென்று சொறியும் எரிச்சலில் வைக்கோல் கூளங்கள் உதிர்ந்து, அவன் உடலம் சிதைகிறது.

அந்த சூதனத்தை நொடியில் புரிந்துகொண்டு, அதிலிருந்து மீளும் வண்ணம், கம்மந்தட்டுகளை அறுத்துத் தள்ள ஆரம்பித்தான். தட்டுகள் சாயச்சாய, அந்த நிலப்பகுதி மொட்டையாகியதில் அவளது கால் கொலுசுகளின் பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

அதோ, எந்த திசையிலும் தப்ப வழியேதுமற்று மிரட்சியுடன் எதிரில் நிற்கிறாள் அவள். கைக்கெட்டும் தூரத்தில் அவளது வாசனை. ஒரே வீச்சு. கருப்பராயனின் கைகளெங்கும் காலகாலமான வன்மம் குதிபோட்டெழும்புகிறது. ஆனாலும், அவள் கண்களில்தான் இன்னும் எத்தனை நம்பிக்கைக் கீற்றுகள்...

அந்தத்தொனி, கருப்பராயனின் கைவிசையை ஒருகணம் மட்டுப்படுத்த, கம்மங்காட்டு வரப்பில் முளைத்திருந்த ஒரம்புப் பூவை நீளமான காம்போடு பறித்தெடுத்து தனது முகத்தில் முத்தியெடுக்கிறாள் தேவனாத்தா.

“கருப்பா, கருப்பா, வழியை விடு...
இல்லாட்டி, உன் தலையை வெட்டிருவேன்...”

என்று நீண்ட காம்புப் பகுதியைப் பிடித்துக் கொண்டு பூவின் அடிப்பகுதியைச் சுண்ட, துண்டாகிக் கீழே விழுகிறது பூ.

அடுத்த கணம், கருப்பராயனின் தலைச்சட்டி படீரென வெடித்துப் பிளக்க, அதிலிருந்து குமிகுமியாய் கருங்குளவிகள் இரைச்சலிட்டுப் பறந்தன. அந்த ரீங்காரத்துடன் தெல்லுக்காய் இரண்டாங் கட்டத்தில் போய்விழும் ரீங்காரமும் சேர்ந்து கொண்டது.

இரண்டாம் கட்டத்தில் தனது ஒற்றைக் காலையூன்றி ஆசுவாசமாய் இளைப்பு வாங்கிக் கொண்டே கிறக்கமாய் நின்றாள் தேவனாத்தா. தப்பித்து வந்துவிட்ட ஆனந்தமும் பரபரப்பும் அவள் உடல் முழுக்க வழிந்துகொண்டிருந்தது. கெஸ்ஸெடுக்கும் மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டவள், சுற்றிலும் நோட்டம் விட்டாள். கண்முன்னால் மல்லாந்து கிடந்தது இரண்டாங்கரம். அதன் கூம்புவடிவ அமைவைக் கண்களால் அளந்து பார்த்தாள். ஏமாற்றத்தின் எரிச்சலில் இறுக்கமாகியிருந்த கருப்பராயனின் முகத்தில் வெயிலின் மினுக்கம் வெறிச்சோடியது.

எதிரில் காலடியில் கிடந்த தெல்லுக்காயை நகர்த்திக்கொண்டு மூணாங்கரத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய உபாயத்தை யோசிக்கலானாள். அந்தக்கட்டம் முழுக்க சுற்றிலும் ஒருமுறை பார்வையால் துழாவிப் பார்த்தாள். எந்தவிதமான வினோதமும் தோன்றாமல் அப்படியே இருந்தது. ஒரே இடத்தில் ஒற்றைக்காலால் நின்றுகொண்டேயிருந்ததில் குதிங்கால் வலித்தது. ஆட்டத்தில் இறங்கிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தவளாய் மெதுவாக எம்பிக்குதித்து தனது பெரு விரலால் தெல்லுக்காயைத் தொட்டு நகர்த்தினாள்.

அவ்வளவுதான், தெல்லுக்காய் சுழன்று சுழன்றோடி வெண்கல ஓசையை எழுப்பியபடி நாணயமாக உருமாறி ஓட ஆரம்பித்தது. பொளேரென காதுகளில் அறைந்தது கடைத் தெருவின் இரைச்சல்.

அவளது கையிலும், காலிலும், கழுத்திலும் சங்குவளைகள் பற்றிப் படர்ந்து கொண்டோடின. வளைகள் குலுங்கக் குலுங்க இரைச்சல் மிகுந்த தெருக்களின் இண்டு இடுக்குகளிலெல்லாம் ஓடிக்களித்தாள். முத்துக்களும், ரத்தினங்களும் பரப்பி வைக்கப்பட்டிருந்த குமிச்சலிலும், கேழ்வரகு, தினை போன்ற தானியங்களின் குமிச்சலிலும் சூரியவெளிச்சம் பட்டுப் பட்டு மின்ன, கடைத்தெருவின் மாடமாளிகைகளிலும், கோவில்களின் கூட கோபுரங்களிலும் புறாக்களின் ரெக்கையடிப்பு ஜன இரைச்சலின் பரபரப்பில் கரைந்துகொண்டிருந்தது. கறுத்துப்போன திரேகத்துடன் திராவிடர்களும் வெளுத்த யவனர்களும் தத்தமது மொழிகளின் இரைச்சல் கசிய, பொழுதைத் தலையில் போட்டுக் கொண்டிருந்தார்கள். பொதி கழுதைகளும், பொதி மாடுகளும் அசைந்து அசைந்து நடக்க, சந்தடியைப் பிளந்துகொண்டு அவ்வப்போது சில குதிரை வீரர்கள் பாய்ந்து வந்தார்கள். உப்புக்கு முத்துக்களை அள்ளிக் கொடுக்கும் கலகலப்பு சந்தையெங்கும் பிரதிபலிக்கிறது.

அந்தத் தெருவே தூளிபடுகிறது. அந்தச் சந்தடியின் மயக்கத்தில் அவள் வாணிப வீதிகளில் சுற்றியலைந்து வளைகள் வாங்குகிறாள். அந்தக் கண்ணாடிகளின் கிணுகிணுப்பு வாணிபத்தின் இரைச்சலையும் மீறி ஒலிக்க ஆரம்பிக்கிறது.

திடீரென காற்றோசை அந்தக் கடைத்தெரு முழுக்க உறுமுகிறது. வளையல்களின் நாதம் தெருக்களில் பட்டுப்பட்டு நாலாபுறமும் எதிரொலிக்க, தெருமுனையின் கடைசியில் ஒரு சிறு புள்ளியெனத் தோன்றுகிறான் கருப்பராயன். கைகளை நீட்டிக்கொண்டு அவளை நோக்கி அவன் முன்னேறி, கண்கள் கட்டப்பட்ட கண்ணாம் பூச்சியாக அவளைத் துரத்த ஆரம்பித்தான்.

அவள் ஓடஓட, வணிகத்தின் இரைச்சலையும் மீறி வளைகளின் கலகலப்பு அதிகரித்தது. உப்பு வண்டிகளிலும், பொதிமாடுகள் மீதும், ஜன இரைச்சலிலும் புகுந்து புகுந்து ஓடுகிறாள். காக்கை, குருவிகளைப் போல பறந்தோடியும் கூட, முதுகுப் புறத்தில் கண்ணாம்பூச்சியின் வாசனை கிட்டத்தில் நெருங்கிக் கொண்டேயிருந்தது.

கண்ணா கண்ணாம்பூச்சி...
கருப்பராயம் பூச்சி...
ஊளை முட்டையை தின்னுப்புட்டு
நல்ல முட்டையைக் கொண்டு வா...

எவ்வளவு விசையாக ஓடித்தப்பித்தும் முடியவில்லை. அந்தக் கடைத்தெரு முடிவேயில்லாமல் எங்கு ஓடினாலும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் புதிர் வழிச் சுழலாக இருந்ததில் ஒரேயடியாய்க் களைத்துப்போய் நின்றாள் அவள். அதற்குள் நெருங்கி வந்துவிட்டது கண்ணாம்பூச்சி.

நெஞ்சுக் கூட்டைக் கிழித்துக் கொண்டு வாங்கும் மூச்சின் இளைப்பு காட்டிக் கொடுத்து விடுமோ என்ற பயத்தில் மூச்சை அடக்கிக் கொண்டு நடுங்கினாள். தப்பிப்பதற்கு ஏதும் வழி இருக்கிறதா என்று சுற்றிலும் ஒரு முறை அந்த பிராந்தியம் முழுவதும் பார்வையால் துழாவினாள். தன் கையில் அணிந்திருக்கும் கண்ணாடி வளைகள் போன்ற அமைப்புடன் அந்த இடம் சுழித்திருந்தது. இந்த வளை வியூகத்திலிருந்து தப்பிக்கவே முடியாதா என்ற குமுறலுடன் மேலும் சில எட்டுக்கள் ஓடிப் பார்த்தாள். அதற்கு வாகாக அந்த இடம் சுழன்று கொடுத்தது.

வளைகளின் கிணுங்கல் ஒலி கண்ணாம் பூச்சியை உசுப்பியது. இவ்வளவு களேபரத்திலும், கண்ணாம்பூச்சியால் எப்படி அவளைப் பின்தொடர்ந்து வரமுடிகிறது என்பதை சடுதியில் புரிந்து கொண்டபோது அழுகை பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு. கோபமும் எரிச்சலும் பொங்க ஆத்திரத்துடன் தனது கையில் கலகலக்கும் வளைகளை உடைத்தெறிந்தாள்.

அடுத்த கணம், அவளைச் சுற்றிக் கவிந்து கிடந்த அந்த வியூகத்தின் வளைக்கரம் நெளிய ஆரம்பித்தது. கடைத் தெருவின் சுழல் பாதைகள் பிளந்து பிளந்து பல்வேறு பாதைகள் திறக்க, அவள் உடலெங்கும் ஆனந்தம் குதியாளம் போட்டது. வளைகளை உடைத்தெறியும் சூத்திரத்தில் அவள் முன்னே நகர்ந்து கொண்டிருந்தது தெல்லுக்காய்.

அது, ஒரே எத்தில் பறந்து போய் மூணாங் கரத்தில் விழவும், கடைத்தெருவின் இரைச்சல் மங்கவும், கருப்பராயன் கண்களில் கட்டப்பட்டிருந்த கண்கட்டு அவிழ்ந்து போகவுமான காட்சிகள் சற்றைக்கெல்லாம் நடந்தேறின. கருப்பராயனுக்கு அவளது விளையாட்டின் போக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. இப்படி ஒரு விளையாட்டை இதுவரை கண்டதுமில்லை கேட்டதுமில்லையென்று எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு கரத்திலும் அவள் இறங்கி நின்றதும், அவளது கால் அடவுகள் மாறும் நுட்பத்தை இதுவரை காணாத பேரதிசயமாகக் கண்காணிக்க ஆரம்பித்தான். அவளது உடலின் அசைவுகளும், சமிக்ஞைகளும் ஏதோ ஒரு புதிய பேச்சில் அந்தக் கட்டத்துடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தபோது பிரமித்துப் போனான்.

அவளது முகத்தின் குளுமை கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குள் பரவ ஆரம்பித்திருந்தது. அவளைப் பார்க்கும் கணந்தோறும் உடலின் சூடு தணிந்து குளுந்து போனான் அவன். அவளது உடலின் நளினமும், துழாவியடிக்கும் கண்களின் பார்வையும் அவனது உடலெங்கும் இனம் புரியாத விறுவிறுப்பை ஏற்றியது. குளுமையும், தகிப்பும் மாறிமாறி அவனுடலில் கட்டுக்கடங்காத உணர்ச்சிகளை ரத்த ஓட்டத்தில் கூட்டின.

இப்பொழுது அவனுக்கு எல்லாமே புதிதாகத் தோன்றியது. அந்த ஆட்டத்தில் மறைந்திருக்கும் புதிர்களும், சவால்களும், கண்ணிகளும் அவன் கண் முன்னே பிரம்மாண்டமாய் எழுந்து நின்றன. ஆட்ட விதிகளின் நிஜமான தரிசனத்தை அவனுக்கு அவள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பாடத்தில் நிலை குலைந்து போனான் அவன். இத்தனை வருட ஆட்டத்தில், இந்த ஆட்டத்தின் நுட்பம் தெரியாதவர்களுடனேயே விளையாடி ஜெயித்ததல்ல பெரியதனம். சரியான போட்டி! இவளோடு ஜெயித்துக் காட்டு.

செவிந்திப் பூவைப்போல மலர்ந்திருக்கும் அவளது முகம் கூம்பிப் போவதை ஒருக்கணமும் அவனால் ஏற்க முடியவில்லை. அந்த உணர்வை சமாளிக்கும் போக்கில் வேறொரு எண்ணம் தோன்றியது. இல்லை, அவளைத் தோற்கடிக்கக் கூடாது. இன்னும் அவளிடம் என்னென்ன விதமான வித்தைகள் இருக்கின்றனவோ, அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டுமெனஅவன் மனம் கிடந்து ஏங்கியது.

இல்லை. நீ அவளிடம் மயங்கிப்போய் விழுந்துவிட்டாய். அதற்கு சமாதானமாக இப்படிப் பேசுகிறாய். அவன் உடல் முழுக்க ஒரு உத்வேகம் திமிறியெழுந்தது. இதில் அவளை ஜெயிக்க விட்டுவிட்டால்...? காலங்காலமான வரலாற்றின் பக்கங்களில், தனது பெயர் தீராத களங்கத்தையும், தோல்வியையும் சுமந்து கொண்டு திரியப்போகிறதே... அடேய், இந்தத் தோல்வி உன்னுடைய தோல்வி மாத்திரமல்ல; உனது முன்னோர்களின் தோல்வி... என்ற பல்வேறு எண்ணங்கள் அவனை அலைக்கழித்தன.

சரேலென்று காற்றுச் சூறையொன்று அவனை உரசிக் கொண்டு போக, எதிரில் தேவனாத்தா கைகளை வில் போல வளைத்து காற்று அம்புகளை ஏவிக்கொண்டிருக்கிறாள். கருப்பராயன் உஷாரானான். பதுங்கிப் பதுங்கி நடக்கும் அவளது நடையின் லாவகத்தில் சருகுகள் மிதிபடும் சத்தம். கழுத்தை ஒரு வாகாய் இழுத்துக்கொண்டும், பார்வையின் கருவிழிகளில் சொல்லொணா விவரிப்புகள் மாறிமாறியடித்துக் கொண்டும், அவள் அந்தக் கட்டத்தில் நடக்க நடக்க, அந்த இடத்தை குனுப்பமாய்ப் பார்க்க ஆரம்பித்தான் கருப்பராயன்.

மயில்களின் அகவலும், பட்சிகளின் படபடப்பும், அணில்குஞ்சுகளின் கீச்சலும் குமிந்திருந்த மரங்களின் வாதுகளில் மோதி எதிரொலித்தன. சடைசடையாய்த் தொங்கும் ஆலவிழுதுகளில் மந்திகள் கரணம் போட்டன. விடைத்து சேகேறிய முள் மரங்களின் செறையில் ஊளைகள் சுழட்டியடித்தன. சற்றைக்கெல்லாம் அந்த இடத்தின் கானக வாசனை அவனது மூக்கில் எகிறியது. அவன் நின்றிருந்த இடத்தில் சங்கமுள்ளும், சப்பாத்திமுள்ளும் சோங்காய்க் கப்பியிருந்தன.

வடிவான தனது உடலை நிமிர்த்திக் கொண்டு அவள் நடந்தாள். அவளது கையில் உள்ள வில்லின் நாண் இழுபடும் போதெல்லாம், நரியோ, ஓநாயோ ஊளையிடும் ஓலம் கேட்டுக்கொண்டேயிருந்தது. எதிர்ப்படும் முயல் குட்டிகளின் துள்ளலில் அவளும் துள்ளிக் கொண்டிருந்தவள் சற்றைக்கெல்லாம் களைத்துப் போனாள். நா வறண்டு போக தாகம் நெஞ்சுவரை இறங்கியது.

எதிரிலேயே ஓடிக்கொண்டிருந்தது சுனை. பாய்ந்தோடி குப்புற விழுந்து நீரை அள்ளி அள்ளிப் பருகினாள். கொம்புத் தேனாய் இனிச்சுக் கிடந்தது தண்ணீர். எவ்வளவு குடித்தும் தாகம் தீராது வயிறு ஒரேயடியாக நிரம்பி வழிந்தது. ஒருவழியாய் ஆயாசத்துடன் தலையை நிமிர்த்தினால், எதிரில் வாதுவாதாய் கொம்புகள் பிரிந்த பெரிய கலைமான், அதனருகில் ஒரு புள்ளிமானும் மான் குட்டியும்.

அந்த நொடியில் களைப்பு ஓடியே போய்விட்டது. தாவி எழுந்தவள், சடுதியில் வில்லை வளைத்து அம்பு பூட்டினாள். அந்த நிழலசைவில் கலவரத்துடன் அவை சிதறி ஓட ஆரம்பித்தன. அவள் பாய்ந்து துரத்த, தடுமாற்றத்துடன் தனியாகப் பிரிந்தோடியது மான்குட்டி. அதைத் தொடர்வதுதான் உசிதமென சட்டென்று அச்சிறு கால்குளாம்புகளின் மீது பாதம் வைத்தாள்.

இதுதான் தருணமென்பதை உணர்த்தியது கருப்பராயனின் உடல். ரத்த ஓட்டத்தின் விசை அவனுக்குள் சுழித்துச் சுழித்து ஓட, புலி வேசங்கட்ட ஆரம்பித்தான். அவனது பொச்சாம் பட்டையைப் பிளந்து கொண்டு குபுக்கென்று வால் ஒன்று முளைத்து அசைந்தாடியது. தாடையைப் பிளந்து கொண்டு பற்கள் வளர ஆரம்பித்தன. மான்குட்டி ஓடி ஓடி எதிர்ப்பட்ட அந்த சோங்குக்குள் நுழைய, நுழைந்த வேகத்தில் வெளியில் வந்து நின்றது வேங்கைப் புலி.

ஒரே ஓட்டமாய் ஓடி வந்தவள், கால் தடுக்கியவளாய் பீதியுடன் குப்புற விழுந்தாள். அவள் கையிலிருந்த வில் நழுவ, எதிர்ப்பட்ட அந்த அபாயத்தை நொடியில் உணர்ந்தவள், சடக்கெனத் திரும்பி ஓடினாள். வேங்கையின் உறுமல் முதுகில் எதிரொலித்தது.

“வேங்கைப்புலி... வேங்கைப்புலி... வெட்டிப்போடுவேன்...
சொன்னாங்கைலே... சொன்னாங்கைலே... சொழட்டிப்போடுவேன்...” என்று பாடிக் கொண்டே ஓடினாள்.
“ஆட்டுக்குட்டி... ஆட்டுக்குட்டி... ஆஞ்சி போடுவேன்...
உதிரக்குட்டி... உதிரக்குட்டி... உறிஞ்சிப் போடுவேன்...”
என்ற உறுமல் அவளை துரத்திக் கொண்டு வந்தது.

ஓடி ஓடிக் களைத்துப் போனவளுக்கு மயக்கமாய் வந்தது. தலை ஒரேயடியாய் சுற்றியது. எதிரில் ஒரு புள்ளியாய்த் தெரிந்த நீரோடை அவளது ஓட்டத்தில் பெரிதாகிறது. அதை ஒரே தாண்டாகத் தாண்டிவிட்டால் போதும். அதன் பிறகு புலியால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவளுள் எழும்ப, ஒரே எட்டில் அதன் கரையை வந்தடைந்தாள்.

அந்த ஓடையை ஒரே எட்டில் தாண்ட வேண்டுமானால், இருக்குமிடத்தில் இருந்து கொண்டே தாண்ட முடியாது. பின்னால் சில அடிகள் போய் அங்கிருந்து ஒரே ஓட்டமாய் எழும்பினால்தான் தாண்டமுடியும். ஆனால், பின்னால் போனால் புலி அடித்துப் போட்டுவிடும். மலங்க மலங்க விழித்தவள், புலியின் உறுமல் கேட்கவும், செத்தே போனோம் என்று கண்களை மூடிக்கொண்டாள்.

அவளுக்குப் பின்னால் பாய்ந்து வந்த புலி சட்டென்று வேகத்தைக் குறைத்து நின்று கொண்டது. தன்னை இன்னும் புலி ஒரே கவ்வாகக் கவ்வி வாயில் போட்டுக் கொள்ளவில்லையே என்ற ஆச்சரியத்தில் தலையைத் தூக்கிப் புலியைப் பார்த்தாள்.

அதன் கண்களிலிருந்து சுரந்த ஒளி புலியினுடையதாக இல்லை. மேலும் அதன் சமிக்ஞையையும் நொடியில் உணர்ந்தவள் சட்டென பின்னால் சில அடிகள் நகர்ந்து ஒரே ஓட்டமாய் நீரோடைக்கு அப்பால் காலெட்டி வீசினாள்.

தன்னைத் தொடுவதற்கான தருணம் வாய்த்தும் அவன் ஏன் தொடவில்லையென்று நாலாங்கட்டத்தில் நின்று கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள் தேவனாத்தா. மூன்று கட்டங்களையும் தாண்டி வெற்றிகரமாக கடைசிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டது குறித்து ஆனந்தம் அவள் உடலெங்கும் பொங்கி வழிந்தது. ஆனாலும், அவளால் நம்பவே முடிய வில்லை. இதெல்லாம் நிஜம்தானா? இது வரை இந்த ஆட்டம் விளையாடிய எந்த ஆட்டக்காரியும் முதல் கட்டத்திலேயே தோற்றுப் போய் வெளியேறி விடுவாள். அதிகபட்சமாக இரண்டாம் கட்டத்தில் வேண்டுமானால் காலடியெடுத்து வைத்திருப்பாள்.

ஒரு வேளை கருப்பராயன் விட்டுக் கொடுக்கிறானோ? அந்தக்கணம் அவளுக்கு உடல் முழுவதும் சப்பென்றாகிவிட்டது. இருக்காது. அப்படியெல்லாம் நிச்சயமாக இருக்காது. ஏனென்றால், கருப்பராயன் தோற்றுப் போவதென்றால், அது இந்தத் தெல்லாட்ட வரலாற்றிலேயே அவனுக்கு நேரும் மானக்கேடு. அவனது இனத்துக்கே ஒருபெரும் களங்கம். யாராவது தன்னைக் கறைப்படுத்திக்கொள்ள முன்வருவார்களா என்ன?

இது கடைசிக் கட்டம். இதில் மட்டும் ஜெயித்துவிட்டால் வரலாறு முழுக்க தனது பெயர் அழியாத பக்கங்களில் நிலைத்து நிற்கும் கணங்களை எண்ணி கிறங்கிப் போனாள். உடல் முழுவதும் உத்வேகம் ஓடிக்களிக்க நாலாங் கட்டத்தில் ஊன்றியிருந்த ஒற்றைக்கால் நிலைகொள்ளாமல் பரபரத்தது. தான் நடத்தும் ஆட்டத்தின் சூட்சுமத்தில் எப்பேர்ப்பட்ட கொம்பனாயிருந்தாலும் தோற்றுத்தான் ஆகவேண்டும் என நெஞ்சை நிமிர்த்தினாள்.

உத்தியில் நின்றிருக்கும் கருப்பராயனைப் பார்த்தாள். அவனது முகம் எவ்வித உணர்வுகளுமற்று சாரமிழந்து கிடந்தது. தான் தோற்றுக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டிருக்கிறானோ... அவளுக்குள் மேலும், மகிழ்ச்சி பீறிட்டடிக்க உடம்பெங்கும் பதட்டமடைந்தது.

திடீரென சங்கம் முழங்கியது. அவளது செவிப்பறைகள் கிழிந்து போய் விடுவதைப்போல ‘ம்’ என்ற ஒலி அந்தக்கட்டம் முழுக்க நிறைந்து வழிந்தது. அவளது தலைக்குள் பாய்ந்து விண் விண்ணென்று நரம்புகள் தெறிக்க, ஒலிக் கொழுந்துகள் அவள் உடல் முழுவதும் நக்கியெடுத்தன. அது வலம்புரிச்சங்கம். நாபியிலிருந்து மூச்செடுத்து ஊதும் காற்று அண்ட சராசரங்களையும் தனக்குள் இழுத்து ‘ம்’ என்று வெளிப்படுத்தும் ஒலிவெள்ளம். ஒரே சீரான லயத்துடன் கவிழும் அந்த ஓயாத நாதத்தின் மயக்கத்தில் கண்கள் சொருகிப்போக கிறக்கத்துடன் நின்றாள். இலவம் பஞ்சுபோல அவளது உடல் மிக லேசாகி நெகிழ்ந்து கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக உருகியுருகி வழிந்து, சற்றைக்கெல்லாம் காற்றாகக் கலந்து வலம்புரிச் சங்கின் உள்முகமாய்ச் சுழன்று சுழன்று தாவிக் கொண்டிருந்தாள்.

அவள் எம்பிக் குதிக்கும் குதியாளத்தில் நீர்த்துளிகள் சிதறித் தெறிக்கின்றன. அவள் கண்களில் சரேலித்துப் பாய்ந்தது எல்லையற்ற நீரோட்டம். சமுத்திரத்தின் உவர்ப்பு அவள் உடலெங்கும் தழுவ, சங்கோசை கடலின் அலையடிப்பாக மாறுகிறது. அவளது உடலில் செதில்கள் மினுக்கம் பெற, தனது சிவந்து போன செவுள்களில் மூச்சு வாங்கிக்கொண்டு வாலை அசைத்து அசைத்து நீருக்குள் விளையாடித் திரியும் மீனாக இருந்தாள். பவளப்பாறைகளின் மெலிதான வர்ணம் அவள் உடலில் பட்டு மினுமினுக்க பாசித் திட்டுகளிலும், கிளிஞ்சிகளிலும், சிப்பிகளிலும் உடலைத் தேய்த்துக்கொண்டு அலையடித்து நீந்தினாள்.

தலையைச் சிலுப்பிக்கொண்டே அசைந்து அசைந்து நீரோட்டத்தின் மேல்தளத்துக்கு வந்து சேர்ந்தாள். உச்சியில் காய்ந்து கொண்டிருந்த வெயிலின் சூடு தன்மீது பட்டதும் செதில்கள் உதிர்ந்து போக ஆரம்பித்தன. சற்றைக்கெல்லாம் பெண்ணாக மாறிப்போனாள். கைகளை அசைத்து நீந்திக் கொண்டே சுற்றிலும் நோட்டம் விட்டாள். கட்டுமரங்களில் பரதவர்கள் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். இரும்புக் குண்டுகளில் முடையப்பட்ட வலைகளை ஒரு லாவகத்துடன் வீசி இழுக்கும்போது அவர்களது புஜத்தில் வெயில் மின்னும் அழகு.

திடீரென அவளுக்கு முன்னால் நீர்ச்சுழல் ஏற்பட்டது. அந்தச் சுழற்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி, சுற்றிலும் மிதந்து கொண்டிருக்கும் பொருள்களையெல்லாம் உள்ளிழுத்துக் கபளீகரம் செய்ய, அந்த விசையில் மாட்டிக் கொள்ளாது பதட்டத்துடன் பின் நோக்கித் தாவினாள். குகை வாயைப் போலத் திறந்து கொண்டிருந்த அந்த நீர்ப் பிலத்திலிருந்து சரேலென மேலெழுந்தான் கருப்பராயன்.

அவனிடமிருந்து தப்பிக்க நீருக்குள் முங்கினாள் அவள். முங்கிய அடுத்த கணம் அவளது உடலில் செதில்கள் படர, மீனாகிப் போனாள். நீந்தி நீந்தி அடியாழத்திற்குச் சென்று மறுபடியும் மேலே எழும்பினாள். வெயில்பட்டதும் சட்டென பெண்ணாக மாறிப்போனாள். ஒவ்வொருமுறை மூழ்கும் போதும் மீனாக மாறி, மேலெழும்பும்போது பெண்ணாகி விடுகிற விந்தையான விளையாட்டு அது. மனிதத்துள் மறைந்திருக்கும் மீனத்துக்கும் மீனத்துள் மறைந்திருக்கும் மனிதத்துக்குமான போராட்டமாக அந்த நீர்விளையாட்டு இருந்தது. யதார்த்தத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து கலைத்தன்மையின் மனோநிலைக்கு வருகிற முங்கல் அது.

அதா வரான் கருப்பு...
இதா வரான் கருப்பு...
முங்கி வந்தா மீனு...
சங்கி வந்தா நானு...

என்று பாடிக்கொண்டே அவளைத் துரத்த ஆரம்பித்தான் கருப்பராயன். அவள் முழுகி முழுகி வாலையடித்துக்கொண்டு விரைய, பின்னாலேயே இன்னொரு மீனின் அலையடிப்பு நீரோட்டத்தில் அசைந்து கொடுத்துக் கொண்டேயிருந்தது.

கடல்நீரின் ஓட்டம் நகர்ந்து நகர்ந்து ஆற்று நீர் கடலில் சங்கமிக்கிற புகர்முகங்களில், அவள் நீந்திக் கொண்டிருப்பதை உணர்த்தியது, அலையடிப்புகளற்ற துளும்பித் தேம்பும் மிதமான நீர்நிலை. உப்பு நீரும் ஆற்று நீரும் இணையும் அக்கணத்தில் நீரின் தன்மை முற்றாக வேறொரு தன்மைக்கு மாறும் அபூர்வம். உப்புச் சப்பற்ற அதன் ருசியில் தனது நா துவண்டு போவதையும், புத்தம் புதிய ருசி ஒன்று தனக்குள் இறங்குவதையும் உணர்ந்தாள். அந்தப் புகர் முகத்தின் அடியாழத்தில் குமிகுமியாக முத்துச்சிப்பிகள் பூத்துக் கிடப்பதைப் பார்த்தவள், அதன் கர்ப்பப்பை இதுதான் என்று யூகித்தபோது அவளுக்குள் இனம் புரியாத பரவசம் ஊடுருவியது.

அந்த இடத்தின் நீரோட்டம் அசைந்து கொடுத்துக் கொண்டேயிருக்க, பார்வையைத் திருப்பினாள். எதிரில் ஒரு கருத்த மீன் அலையடித்தவாறு நீந்திக் கொண்டிருந்தது. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவளைக் கவ்வாமல், வாலைச் சுழட்டியடித்துக் கொண்டேயிருந்தது. அந்த அலையடிப்பின் நீர் தனது செதில்களில் பட்டு சுழட்ட, அவளுக்குள் இன்பம் மயிர்க்கூச்செரிந்தது. அந்த இடம், சங்கமிக்கும் நீரோட்டம், அதன் தன்மை, அலையடிப்புகள், அனைத்தும் அவளது செவுள்களுள் இறங்கிக்கொள்ள, அவளுக்குள் ஏதோ ஒன்று திறந்துகொண்டது. ஒருகணம் அவள் தன்னை மறந்தாள்.

அதுக்குப்பிற்பாடு....என்ன நடந்திச்சி தெரியுமா...” என்ற ரங்குப்பாட்டி, தலையை உயர்த்தி கடைவாயில் இடுக்கியிருந்த வெத்திலைத் தம்பளத்தைத் துப்பினாள். சிறுமிகள் இருவரும் பரபரத்தெழும் ஆர்வத்துடன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆட்டம் ஆடுபவன் அந்த ஆட்டத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அதன் விதிகளை மீறினாலோ, துரோகம் செய்தாலோ அந்த ஆட்டமானது சபித்துவிடும். கருப்பராயன் தேவனாத்தாளைத் தொடுகின்ற ஒரு தருணம் வாய்த்தபோதும், தொடாமல் விட்டதனால் வந்த வினை, அந்த ஆட்டத்தின் தலையில் அஞ்சாங்கரம் தானாகவே முளைத்துவிட்டது. அந்த அறச் சிந்தனையின் தரும நியாயத்தைப் பார்த்த கருப்பராயனுக்குத் திடீரென ஒரு காலும் கையும் விளங்காமல் அங்கேயே விழுந்து மாய்ந்து போனான். தன்னால்தான் இந்த சாபத்தை வாங்கிக் கொண்டான் என்று தேவனாத்தாளும் அந்த அஞ்சாங்கரத்திலேயே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.

அதன்பிறகு அந்த அஞ்சாங்கரம் அழியவேயில்லை.

வெகுகாலம் இந்த ஆட்டத்தை விளையாடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். காலப்போக்கில், விளையாடலாமென ஒரு சிலர் முன் வந்தபோது, கருப்பராயனாக இருக்க யாரும் முன்வரவில்லை. அதற்குப் பதிலாகத்தான் கருங்கல்லை உத்தியில் வைத்து விளையாட ஆரம்பித்தனர்.

ஆனால், சமைஞ்ச பெண்டுகள் யாரும் விளையாடுவதில்லை. சின்னஞ் சிறுசுகள் மாத்திரமே விளையாடுவார்கள்... என்று வித்தாரமாக விளக்கினாள் பாட்டி.

“இப்போதுங்கூட அஞ்சாங்கரத்திலே காலெடுத்து வெக்கறதுக்கு முன்னாடி ‘சாமீ...கருப்பராயா...தேவனாத்தா...’ன்னு சொல்லீட்டுதான் காலெடுத்து வெப்பாங்க... தெரியுமில்லே...” இருவரும் பிரமிப்புடன் தலையசைத்தார்கள்.

“அதா பாரு, ஆடெல்லா சோளக்காட்டுப் பக்கம் திரும்பியிருச்சி... நாம்போயி ரண்டு கோவைத் தளை பொறிச்சாறேன்...” என்று சல்லக் கொக்கியைத் தூக்கிக் கொண்டு நடந்தாள் ரங்குப்பாட்டி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com