Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

தவணை

மிதுன்

சித்தப்பா வந்திருக்கிறார். அம்மா இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். அப்போது நான் உறக்கமும் விழிப்புமற்ற நிலையில் போர்வைக்குள் சுருண்டு கொண்டிருந்தேன். காலை நேர இதம் குளிர் படுக்கையிலிருந்து எழமனதின்றிக் கிடத்தி விடுகிறது. யாரோ ஆதுரமாய்த் தலையைக் கோதி விடுகிற மாதிரியான ஸ்பரிசம். அம்மா மீண்டும் அறைக்குள் பிரவேசித்து சித்தப்பாவின் வரவை உறுதி செய்தபோது, எப்போது வந்தாரென கேட்கத் தோன்றியது. ஏனோ கேட்கவில்லை. அதிகாலையிலாக இருக்குமென எண்ணிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து பின்புறம் சென்றேன். சிறுநீர் கழித்து முகம் கழுவிவிட்டு கூடத்திற்குள் நுழைந்தபோது சித்தப்பா இடதுபுற சுவற்றின் மூலையில் சாய்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அப்பா முகச்சவரம் செய்ய ஆயத்தமாய் கண்ணாடியில் முகத்தைப் பதித்திருந்தார். வாங்க சித்தப்பா என்றேன்.

சித்தப்பா ஆமோதிக்கும் விதத்தில் தலையசைத்துவிட்டு தன் பழுப்பு நிற புகையிலைக் கறை படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தார். பிறகு நானோ சித்தப்பாவோ எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேசியென்னவாகப் போகிறதென்ற மெத்தனமா அல்லது பேசுவதற்கு எதுவுமில்லையாவெனத் தெரியவில்லை. திரும்பி சமையல்கட்டுக்கு நடந்தேன். இந்த முறை சித்தப்பாவின் வரவில் பிரத்யேகமான காரணமேதும் இருப்பதாகப் படவில்லை. வழக்கம் போலத்தான். சித்தி எங்காவது, யாருடனாவது சென்றிருப்பாள். எதற்கும் அம்மாவிடம் கேட்டுப் பார்ப்போமெனத் தோன்றியது. சமையலறையில் அம்மா தேநீர் கோப்பையோடு எதிர்ப்பட்டு கையில் நுழைத்தாள். அம்மாவிடம் விசாரித்தேன். காத்திருந்தவளைப் போல சட்டெனப் பொரிந்தாள். வேறென்ன அவ எவங்கூடயோ போய்ட்டாளாம். இவன் போய் கூட்டிட்டு வந்திருக்கான். அதுக்கு உங்கப்பன் பஞ்சாயத்து பேசனுமாம். ரகசியம் போலான குரலில்தான் சொன்னாள். என் கணிப்பை உறுதிப் படுத்திக்கொண்டு கழிவறை நோக்கிச் சென்றேன்.

திரும்பியபோது அம்மா வெந்நீர் காயவைப்பதில் புகையோடு மன்றாடிக் கொண்டிருந்தாள். குளியலறைத் தனப்பில் ஈரம்காய்ந்துபோன விறகை நுழைத்து எரியவைப்பதில் தினம் தினம் அம்மாவிற்கு வதைப்புதான். பிராணவாயுவை ஊதுகுழலில் செலுத்தி விநோத ஒலியெழுப்ப வேண்டும். சிறுவயதில் பலமுறை மண்டையைப் பதம் பார்த்த ஊதுகுழல். எனக்கு ஆசனவாயில் மிதமான வலியிருப்பதாக உணர்ந்தேன். நேற்றிரவு நண்பர்களோடு பியர் அருந்திவிட்டு கிழங்குக் கறியும் இன்னபிற பெயர் தெரியாத பண்டங்களையும் தின்றதில் மலம் குழாய்ப் பிட்டைப் போன்று ஆசன வாய் கிழிகிறாற்போல வெளியேறியதன் விளைவுதான். பிருஷ்டத்தை மெதுவாக அழுத்திப் பார்த்தேன். நிவாரணமிருப்பதாகத் தோன்றவில்லை. கூடத்திற்கு வந்தபோது சித்தப்பா அமர்ந்திருந்த இடம் காலியாகவிருந்தது. அப்பா இன்னும் சவரம் செய்து முடித்தபாடில்லை. அப்பாவிற்குத்தான் தினமும் சவரம் செய்யவேண்டும். எனக்குத் தெரிந்தவரை அவர் ஒருநாளும்கூட அதை நிறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் அம்மாகூட இது குறித்துக் கேட்பாள். துரைக்கு நெதம் செரய்க்கனுமோ. அப்பா சட்டெனக் கூறுவார். போடீ, உனக்கென்ன தெரியும் Face is the first index. எனக்கு சிரிப்பு வரும். மப்ளரைத் தலைக்குச் சுற்றிக் கொண்டு சுலைமான் டீக்கடை நோக்கி நடந்தேன்.

வெளியே வந்தபோது பனியின்னும் விலகாது திரை போன்று உதகையைப் படர்ந்திருந்தது. சுலைமான் டீக்கடை இறங்குமுகமாய்ச் செல்லும் இந்த வீதியின் கடைக் கோடியில்தான் இருக்கிறது. மிகவும் குறுகலான அமைவிடம் கரிப்புகையெல்லாம் படிந்து கடை என்பதற்கான நம்பகத்தன்மை மிகக் குறைவு. முகப்பில் பொருத்தப்பட்ட பாய்லரும் சிகரெட் விளம்பர சுவரொட்டியுமின்றி கடையை அடையாளம் காண்பதென்பது அத்தனை எளிதன்று. கடை கூட்ட மிகுதியில் நிறைந்திருந்தது. தேநீர் துகளின் மனத்தை சற்று தூரத்திலேயே வாசனை பிடித்துக் கொண்டேன். தேநீருக்குப் பெயர் போன கடை-இந்த பிரதேசத்திலேயே. ஆனால் பெயர்தான் சுலைமான் டீ காபி பாரே தவிர சுலைமானென்று எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அங்கு யாருமிருப்பதாகப் படவில்லை. அருகாமைக்கு வந்தடைந்தபோது தெரிந்த முகங்கள் யாரும் இருக்கிறார்களாவென பார்த்துவிட்டு உட்புகுந்தேன். இருந்தாலும் நஷ்டமென்று எதுவுமில்லை. என்ன, வலக்கையை தலைக்கு உயர்த்தி சல்யூட் பாவனையில் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தால் போகிறது.

அக்கவுண்ட் நோட்டில் பற்றெழுதிவிட்டு வில்ஸ் ஒன்றை வாங்கிப் பற்றவைத்தபோது பெரும் ஆசுவாசம் கிளம்பியது.பரமானந்தத்தின் தொடக்கப்புள்ளியைத் தொட்டு விட்டதைப் போன்று ஒரு வித பேரமைதி. கல்லூரி நாட்களில் நண்பர்களோடு இங்கு கூடுவது வழக்கமாதலால் இப்படியொரு வசதி. வானொலி மட்டரகமான பாடலொன்றை ஒலிபரப்பியதுதான் கொஞ்சம் தர்மசங்கடம். புகை பிடித்துவிட்டு திரும்புகையில் முக்கத்து வளைவு பேருந்து நிறுத்தத்தில் சித்தப்பா முதுகு காட்டி நின்றிருந்தார். நிற்றலில் தள்ளாட்டம் தென்பட்டது. காலையிலேயே சரக்கு ஏற்றிக் கொண்டு விட்டார்போல. மது பற்றிய உருவகமே முந்தைய இரவை நினைவூட்டி உமிழ்நீரை பெருக்கியது. ஆனந்தன் சொல்வான்: மது, நடனத்தின் கரைசல். அதனால்தான் நமக்கு குடித்தவுடன் தள்ளாட்டம் வந்து விடுகிறது. அது நம்மை நடனமாடத் தூண்டுகிறது. ஆசனவாய் வலியை நினைவு படுத்திப் பார்த்தபோது பக்கவாட்டில் உமிழ்ந்துவிட்டு நடந்தேன். சித்தப்பா இப்போது பேருந்து நிறுத்த இரும்புத் தூணைப் பற்றிக் கொண்டிருந்தார். பரிதாபகரமாயிருந்தது. எனினும் அருகில் செல்லத் தோன்றவில்லை.

சித்தி ஏனிப்படி செய்கிறாளோ. சித்தப்பாவோடு திருமணமான - ஒரு எட்டாண்டுகளிருக்குமென எண்ணுகிறேன் - என் அறிவுக்கு எட்டியவரை நான்கு முறையாவது யாருடனாவது சென்றிருப்பாள். ஒரு முறை வடக்கிற்கு, ஒரு முறை திருப்பூருக்கு என... வடக்கிலிருந்து அழைத்து வந்தபோது கூட ஒரு மாதம் இங்குதான் தங்கிவிட்டுப் போனாள். அப்போதெல்லாம் சித்தியா இப்படி செய்கிறாளென எண்ணுமளவிற்கு பொறுமையும், பரிவும் அப்படியொரு ஆதுரம். எனினும் குழந்தைகளில்லாதது சித்திக்கு அப்படியொன்றும் பெரிய வருத்தமில்லைதான் போல. திருமணமான முதலாண்டு ஒருமுறை கர்ப்பம் தரித்து அவளாகவே அபார்ஷன் செய்து கொண்டதாக அம்மா சொல்வாள். அந்த கணங்களில் எனக்கு சித்தியொரு மாபெரும் புதிராகத் தோன்றிவிடுவாள். அம்மாவிற்கும் இப்போதெல்லாம் சித்தியின் பெயரெடுத்தாலே சுள்ளெனப் பொரிகிறாள். முன்பெல்லாம் ஒவ்வொரு தவணையும் வழக்குப் பேச அப்பாவோடு அவளும் போய்க் கொண்டிருந்தவள் கடைசி இருமுறை மறுத்துவிட்டாள். வீடு நெருங்கியிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பாவின் குரல் சச்சரவாய்த் தொனித்தது. சமையல்கட்டுக்குச் சென்றேன். அம்மா என்னைப் பார்த்ததும் சட்டென உரையாடலைத் தெலுங்கிற்கு மாற்றினாள். இப்படியான நேரங்களின்போது மட்டும் அம்மாவிடமும் அப்பாவிடமும் நான் வெகுதூரம் அந்நியப்பட்டுப் போவதாகத் தோன்றியது. வாசலுக்கு வந்தமர்ந்து கொண்டேன். பிறகு அப்பா கூடத்திற்கு வந்து விடுமுறை கூறிவிட்டு வருவதாக சென்றவுடன் உட்சென்று வினவினேன். அம்மா சிடுசிடுவெனும் குரலில் சொல்கிறாள். இந்த முறை அப்பா என்னையும் அழைத்துச் செல்கிறாராம். விவரம் புரியாது ஏனென்றேன். தெரியல. அடுத்து தடவ அவ போனான்னா பஞ்சாயத்துக்கு உன்ன அனுப்பறதுக்காயிருக்கும். வாயடைத்துப்போக வைத்து விடுகிறாள். இருப்பினும் நெடும் பயணம் குறித்த ஆவலில் சட்டென உற்சாகம் பற்றிக் கொள்கிறது. பேருந்துப் பயணம் நினைவுகளையும், குழந்தைத்தனத்தையும் மீட்டெடுக்கும் சாதனமோ என்னவோ தெரியவில்லை. அப்பா உடன் வருவது குறித்து பிரக்ஞையெழுந்த போது மறுகணத்திலேயே சோர்வு படர்ந்தது. பதினோரு மணிபோல அப்பா வந்தவுடன் கிளம்பினோம். அம்மாவுக்கு சுத்தமாக மனமொப்பவில்லை.

மாலையில் சேலம் வந்து சேர்ந்தபோது பயண அசதியையும் மீறி சீதோஷ்ண நிலையின் மாற்றத்தில் உடல் பிசுபிசுக்கத் தொடங்கியது. பயணம் முழுக்க அலைக்கழித்த சித்தியைப் பற்றிய நினைவுகள் அடுக்கி வைக்கப்பட்ட கற்கள் சரிந்ததைப்போன்று தாறுமாறாய்ச் சூழ்ந்தது விலகி சமநிலைப் பெற்றிருக்கிறது. அப்பா மடித்துக் கட்டிய வேட்டியுடன் முன்பாக விரைந்து கொண்டிருக்கிறார். சிகரெட் பிடிக்க வேண்டுமெனும் ஆவல் அப்பா எக்கணம் அசருவாரென தருணம் பார்த்தது. இந்தப்பயணத்தை தேர்ந்தெடுத்தது பெரும் தவறோவெனத் தோன்றியது. மறுத்திருந்தாலும் அப்பா விடுபவரில்லை. தண்ணீரைப் பருகிவிட்டு ஓடியவுடன் அப்பா தேநீர் குடிக்க அழைத்துச் சென்றார். நகரப் பேருந்து பிடித்து சித்தப்பாவின் வீட்டை வந்தடைந்தபோது இரவு தழையத் தொடங்கியிருந்தது. பழக்கப்பட்ட வீதி, சித்தி வடக்கிலிருந்து வந்தபோது சித்தப்பாவின் பிடிவாதத்தில் இரண்டு மாதம் வந்து தங்கிப் போயிருக்கிறேன்.

தெரு விளக்கின் வெளிச்சத்தில் சித்தப்பாவின் வீடு அமைதி பரவி நின்றிருந்தது. தணித்த வீடுதான். அப்பா கதவைத் தள்ளிக் கொண்டு நுழைந்தார். நான் வெளிப்புறம் ஒட்டுத்திண்ணையிலேயே அமர்ந்து கொண்டேன். மருந்திற்குக் கூட காற்று வருவதாயில்லை. சித்தப்பா வெற்றுடம்புடன் வெளியே வந்து அழைத்துச் சென்றார். வீட்டினுள் ஒரு வித விசித்திர அமைதி வியாபித்திருந்தது. மூத்திர நெடியை ஒத்திருந்த உலர்த்தப்படாத துணிகளின் ஈரநெடி அறைக்குள் பரவியிருப்பதை அவதானித்துக் கொண்டேன். மங்கிய வெளிச்சத்தில் வீட்டின் பாங்கு கோவில் பிரகாரத்தின் சாயலைத் தோற்றுவித்தது. சித்தப்பா எப்போது இங்கு குடியமர்ந்தார் என்பதை விட அப்பா எப்போது உதகைக்கு இடம்பெயர்ந்தார் என்பதெல்லாம் நான் அறியாத தகவல்கள். சித்தப்பாவிற்கு லாரியோட்டுநர் உத்தியோகம் என்பதை மட்டும் தெரிந்திருந்தேன்.

பெரும் அலங்காரமோ படாடோபமோ இல்லாத வீடு சலிப்பைத் தருவித்தது.அப்பா நாற்காலியில் கையையூன்றி அமர்ந்திருந்தார். இந்த கம்பீரம்தான் அப்பாவை இத்தனை தொலைவு கடந்து வரச்செய்கிறதா. இறைந்து கிடந்த துணிகளினருகில் அமர்ந்து சித்தி அவற்றை மடித்துக் கொண்டிருந்தாள். அல்லது அப்படியொரு பாவனையோ என்னவோ. நான் உட்புகுந்தபோது மெல்ல தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு பின் கவிழ்ந்து கொண்டாள். சித்தி வெகுவாகத்தான் மாறிப் போயிருக்கிறாள். எனினும் யௌவனத்திற்குக் குறைவில்லை. சென்று சுவற்றில் சாய்ந்தமர்ந்து கொண்டேன். சில கணங்கள் நிலவிய மௌனத்தை சுவர்ப்பல்லி குலைத்தது. அப்பா சற்று நேரம் சித்தப்பாவிடம் விசாரித்திருந்துவிட்டு சித்தியிடம் பேசலானார். புழுக்கம் தாளாது நான் எழுந்து வெளியேறியபோது சித்தப்பா ஏதோ முனகுவது போலிருந்தது. பொருட்படுத்தாது நகர்ந்து மீண்டும் திண்ணையில் வந்து உட்கார்ந்தேன்.

அப்பா நான் உத்தேசித்திருந்ததைப் போலவே பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென சித்தப்பாவின் மீது பாய்கிறார். சித்தியின் உருவம் ஒரு குற்றவாளியைப் போல மனதில் படர்ந்தது. எழுந்து அடுத்த தெருவிலிருக்கும் அத்தையின் வீட்டிற்கு சென்று வரத் தோன்றியது. வேண்டாம் இப்போது வந்திருக்கும் சூழ்நிலையில் அத்தை தன் கோணல் சிரிப்பிலேயே என்னை நிர்வாணமாக்கிவிடக் கூடும். சட்டென அப்பா தன் குரலை தெலுங்கிற்கு மாற்றிக் கொண்டுவிட்டிருந்தார். ஏதோ கடினமான விஷயம் பரிமாறிக் கொள்ளப்படுவது அப்பாவின் குரல் கணிவிலும் சித்தியின் விசும்பலிலிருந்தும் உணர முடிந்தது. ஒரு வேளை வாழ்வின் மர்மங்கள் யாவுமே மொழியினால் கட்டமைக்கப் படுகிறதா. அல்லது மர்மங்கள்தான் மொழியின் உதவியோடு தன்னை நிகழ்த்திக் கொள்கிறதாவெனத் தோன்றியது. இருப்பினும் சித்தி எதை நிரப்பிக் கொள்ளும் பொருட்டு இப்படி அலைகிறாளென எண்ணியபோது கேள்வியின் கணம் பிடிக்குள் அகப்படாது கை நழுவிப் போவதை உணர முடிந்தது. எழுந்து அருகிலுள்ள பெருமாள் கோவிலை நோக்கி நடந்தேன். நிதானிக்கவியலாது சூன்யம் கவிகிறது. அந்தியின் இயல்பு போல.

அநாதி சூழ்ந்த கோவிலும் தெப்பக் குளமும் அமைதியை வாரியிறைத்து நின்றிருந்தது. சித்தப்பா வீடிருக்கும் வீதியிலேயே நேராக நடந்தால் சற்று தொலைவில் கிளை பிரியும் மண் சாலையில் இடது புறமாக ஒதுங்கி நிற்கும் கோவிலும், குளமும், மைதானம் போன்ற பெருவெளியை தகவமைத்துக் கட்டியிருக்க வேண்டும். இன்னும் மீந்து கிடக்கும் வெட்டவெளி அதை உறுதிப்படுத்துகிறது. சற்று விஸ்தாரமான கோவில். ஆறேழு மணி வரை கூட்டம் நிரம்பும். பிறகு என்ன நடைமுறையோ, தீர்மானமோ நடை சாத்தப்பட்டு மௌனம் சூழும். கோவிலுக்கு நேரெதிர் வட்ட வடிவத்திலான தெப்பக்குளம். குளத்தைச் சுற்றி வகிடு கிழித்தாற் போல் வெவ்வேறு பகுதிக்கு விலகும் மண்சாலை. படித்துறையில் இறங்கி இரண்டு மூன்று படிகளைக் கடந்தமர்ந்தேன். அண்டையில் வீடுகளில்லாதது நிம்மதி தருகிறது. வாங்கி வந்த சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

குளம் வெறிச்சோடிக் கிடக்கிறது. முன்பு எப்போதோ தண்ணீர் இருந்தபோது இங்கு வந்து மிதந்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது. சித்திதான் துணையாக வருவாள். ஆண்களுக்கு மட்டும் குளத்தில் நீராட அனுமதியுண்டு. நீரில் நான் இறங்கிக் கரையேறுகிற வரை சித்திக்கு இருப்பு கொள்ளாது. எப்படித்தான் கவனிப்பாளோ? சற்று நிலை பிசகினாலும் சித்தியின் குரல் நாராசமாய் அதிரும். டேய் தம்பி, போதும் வாடா நாளைக்கு வரலாம் என்பாள். காற்று சன்னமாய் வீசுகிறது. தண்ணீர் இருந்திருக்க வேண்டும். இருந்திருந்தால் இதோ இந்த நிலவொளி நீருடன் இணைந்து புரியும் நர்த்தனத்தின் கொள்ளையழகை ரசித்திருந்திருக்கலாம். இப்போது தவளைகளின் சத்தம் மட்டுமே சுருதி பிசகாது குளத்தை நிறைக்கிறது. எனினும் அதிலும் ஒரு வித லயம் இருக்கத்தான் செய்கிறது. சிகரெட் துண்டை வீசியெறிந்தேன். இரவின் வானில் மேகங்கள் வழுக்கிக் கொண்டு செல்வதைப் போன்றிருந்தது. கட்டற்ற நகர்தல்... சதா விரிதலை நோக்கிய அதன் பயணம் சற்று அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது.

எவ்வளவு நேரம் நின்றிருந்தேனோ, திரும்புகிறபோது அப்பா வாசலிலேயே சித்தப்பாவுடன் நின்றிருந்தார். வாயில் மென்ற நிஜாம் பாக்கை துப்பிவிட்டு விரைந்தேன். அப்பா கிளம்புவதற்கு ஆயத்தமாய் சைகை செய்தார். சித்தாப்பாவிடம் சொல்லிவிட்டு சித்தியிடம் சொல்ல வீட்டிற்குள் புகுந்தேன். கதவருகிலேயே நின்றிருந்தாள். சித்தியின் முகம் சலனமற்றிருந்தது. ஆச்சர்யமாகவிருந்தது. பார்வையில் கூட சுணக்கமில்லை. சித்தி, சொல் சித்தி இனிமேலாவது எங்காவது சென்றால் திரும்புவதில்லையென. மாறாக அப்பா சற்று முன்பு கூறியதைப்போல பத்தனாவிற்கு மருந்தை கிருந்தை வாங்கி குடித்து வைக்காதே. வேண்டாம் சித்தி உனது இந்த மௌனம் சாவின் மௌனத்தை ஒத்திருக்கிறது. அல்லது நீயும் உன் மௌனத்தை எனக்குப் புரியாதவொரு மொழிக்கு மாற்றிக் கொண்டுவிடு. சித்தியிடம் பேச அவகாசமின்றி தலையசைத்துவிட்டு வெளியேறினேன்.

பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கையில் பின்புறம் நிலப்பரப்பு யாவும் பாழ்வெளியாய் பரிணமிப்பதைப் போன்றிருந்தது. நிறுத்தம் வரை சித்தப்பா அப்பாவிடம் தணிந்த குரலில் பேசியபடி வந்தார். நிறுத்தத்தில் திடீரென சித்தப்பா அப்பாவின் கைகளைப் பற்றிக் கொண்டார். அப்பா மெல்ல அவரின் தோளைப் பிடித்து இறுக்குகிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. எனக்கு அந்தக் கணம், எல்லாம் ஒரு நாடகம் பார்ப்பதைப் போலிருந்தது. குன்னூர் பிரின்ஸ் மேத்யூ கூறியதை நினைத்துக் கொண்டேன். உனக்கு ஒவ்வாத, நீ தொடர்பில்லாத எதுவுமே உனக்கு நாடகமாகத்தான் தெரியும். என்ன செய்வது, மனித மனம் எப்போதுமே தன் ஆளுமையை வேண்டியே நிற்கிறது. எனினும் சிறியதாய் ஒரு கிலேசம் தோன்றி மறைந்ததென்னவோ உண்மைதான்.

மேட்டுப்பாளையத்தில் முதல் பேருந்தைப் பிடித்து அதிகாலையில் ஊர் வந்து சேர்ந்தோம். மதியம்வரை தூங்கியெழுந்த பிறகு இயல்பு திரும்பியிருந்தது. அம்மா இரண்டொரு வார்த்தையில் பேச்சைத் துண்டித்துக் கொண்டாள். மாலையில் நான் வெளிக் கிளம்பினேன்.

இரண்டு மாதங்கள் கடந்திருக்குமென எண்ணுகிறேன். கல்லூரியிலிருந்து திரும்பியதொரு மாலையில் அம்மா சொன்னாள். சித்தி யாருடனோ ஓடிவிட்டாளென்று. அறைக்குள் சென்று உடை மாற்றுகையில், எனக்கு அனேகமாக சித்தப்பா நாளை வருவாரெனத் தோன்றியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com