Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

‘செவ்வியல்’ கீர்த்தனை நாட்டார் வடிவமே

நா. மம்மது

இது வேர்களைத் தேடும் காலம்; மலர் ஒன்று இருந்தால் செடியிருக்கும்; வேர் இருக்கும்.செவ்வியல் வடிவமாகக் கூறப்படும் கீர்த்தனை என்ற உருப்படிக்கு வேர் எது என்பதே இவ்வாய்வு.

உரு - உருமலர்ச்சி - உருவம் - காலங்காலமாக மலர்ச்சி அடைதல்.

பழைய பாடல் மரபிலிருந்து உருக்கொண்டு இந்த உருப்படி என்ற கீர்த்தனை வடிவமாகிய வரலாறே நாம் காணப்போவது.

தமிழக வரலாற்றில், சங்ககாலம், களப்பிரர்காலம், காப்பியக்காலம், பக்திக்காலம், உரையாசிரியர்கள் காலமென பகுப்புகள் உண்டு.

பல்லவி, அனுபல்லவி, சரணம் அதாவது எடுப்பு, தொகுப்பு, முடிப்பு என்ற வடிவத்தில் கீர்த்தனை மலர்ச்சி பெற்ற 15 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு முடிய உள்ள கால கட்டமான 500 ஆண்டுகளை, நாம் கீர்த்தனைகளின் காலம் என்று கூறலாம்.

நாட்டார் வடிவம் (Popular Form) (Folk Form)

செவ்வியல் வடிவம் தன்னுடைய மூலத்தை நாட்டார் வடிவத்தில் தேடிக் கொள்கிறது. நாட்டார் வடிவத்தில், இலக்கணம் இல்லை, பாமரத்தனமானது என்றெல்லாம் வரையறை செய்வது செவ்வியல் சார்ந்த மேட்டுக்குடியினரே. எனவே நாட்டார் வடிவத்தை உள்வாங்கி ‘இலக்கணப்படுத்தி’ ‘வளமாக்கி’ செவ்வியல் வடிவமாக்கிக் கொண்டதே செவ்வியல் கலைகள்.

நாட்டார்வடிவமான, ‘சதிர்’ என்பது பரதநாட்டியமானது. இதற்கான அண்மைய வரலாற்றுச் சான்று. ஒரே காலகட்டத்தில் கூட நாட்டார் வடிவம், செவ்வியல் வடிவம் தத்தமது போக்கில் வளர்ச்சி பெற்றதைப் பார்க்கலாம். நாட்டார் பாடல்கள் தாளம் நிறைந்த சந்தமயமானவை: சிந்து இசை, சந்த இசை, வண்ண இசை, என்றெல்லாம் உருமலர்ச்சி பெற்று பல்வேறு வடிவங்கள் பெற்றுள்ளன.

15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் கூத்துக்கு அடிப்படையான தாளத்தை முதன்மை கொண்ட சந்தப் பாடல்கள் (வண்ணங்கள்) பாடினார். அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடினார்; பாரதி நொண்டிச்சிந்து முதல் 50 வகைச் சிந்துகள்; பாவேந்தரின் தெம்மாங்கு என்று நாட்டார் வடிவம் வளர்ச்சி பெற்றது. மறுபுறம், இதே தாளத்தைக் கையிலெடுத்து பதம், சதி, சொற்கட்டு, கீர்த்தனை என்று மற்றோர் மரபை முத்துத்தாண்டவர் தொடங்குகிறார். மாரிமுத்தாபிள்ளை, அருணாசலக்கவிராயர், ஊத்துக்காடு, கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர் இந்த மரபைத் தொடர்ந்து வளர்ச்சி பெறச் செய்தனர்.

கீர்த்தனை என்ற சொல்
காழி - சீகாழி - சீர்காழி
சீ - சீர் - சீர்த்தி - கீர்த்தி - கீர்த்தனை

தேவாரம் - தெய்வத்தைப் புகழ்ந்த இசைப்பாடல்
திருப்புகழ் - தெய்வப் புகழ்ப்பாட்டு
கீர்த்தனை - இறைவனைப் புகழ்ந்த பாடல்கள்

பெருந்தேவபாணி, சிறுதேவபாணி என்பது பஞ்சமரபு கூறும் இசைப்பாடல்களில் வருவது, தெய்வம் பராயது என்ற சொல்லாடல் கருத்திற்குரியது.

தமிழ்ப்பா வரலாறு

தொல்காப்பியர், புலவர் மரபான, செவ்வியல் வடிவப்பா வகைகளுக்கே முதலிடம் தருகிறார். அரசர்க்குரிய ஆசிரியம், மேல்தட்டு வர்க்கத்தினருக்கான வெண்பா என்று ஆசிரியத்திற்கும், வெண்பாவிற்கும் முதன்மை தருகிறார். ஆனால் கலிப்பாவும், பரிபாடலும், வரிப்பாடலும், காலத்தால் முந்தியது.

துள்ளல் ஓசை பெற்ற கலிப்பா தாளத்தில் அசைந்தது. எனவே அது நாட்டார் மரபைச் சேர்ந்தது. கலிப்பா, கலிவெண்பா, சந்தக்கலி வெண்பா மற்றும் கலிவிருத்தம், சந்தக்கலிவிருத்தம் என, இவ்வாறு தாளத்தில் அமைந்த சந்தக்கலி வெண்பா, சந்தக்கலி விருத்தம், கலித்தாழிசை, ஒத்தாழிசைக்கலி கொச்சகக்கலி, கொச்சக ஒருபோகு, மயங்கிசைக் கொச்சகக்கலி, வண்ணக ஒத்தாழிசைக்கலி, என்றெல்லாம் கலிப்பாடல் வளர்ச்சி பெற்றுள்ளதற்கு மூலகாரணம். கலிப்பா என்பது தாளத்தில் அமைந்த நாட்டார் இசைப்பாடல்கள் ஆகும். வெண்பா, ஆசிரியப் பாக்களை விட, கலிப்பாவிற்கும் அதன் ஏனைய வடிவங்களுக்கும் நிரம்பவே இலக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர்.

ஆயினும் நாட்டார் வடிவமான பரிபாடலுக்கு ஓரளவே இலக்கணம் கூறுகிறார். தாளத்திற்கேற்ற சொற்களால் ஆன வண்ணங்களை இருபதாகக் கூறுகிறார். பண்ணத்தி, என்று பண் தாளத்தால் அமைந்த இசைபாடல்களைப் பற்றித் தெரிவிக்கிறார். எழுதாக்கிளவி, மோதிரப்பாட்டு என்ற இவைகளை நாட்டார் பாடல் என்று சரியாகவே உரைசெய்கின்றனர் உரையாசிரியர்கள்.

பரிபாடல் என்ற நாட்டாரின் இசைப்பாடல்களைப் பற்றி தொல்லாசிரியர் இலக்கணம் படைக்கவில்லை. பரிபாடல் இலக்கணப்படுத்த முடியாத காட்டாறு என்றோ, பாமரமக்களின், பாணர் மரபினரின் கீழானவடிவம் என்றோ அவர் விட்டிருக்கலாம். இது மேலும் ஆய்வுக்குரியது.

உடல் அசுத்தமானது உடல் உழைப்பு கேவலமானது என்ற கோட்பாடு புகுந்தபின்னர், உடல் உழைப்பு சார்ந்த ஆடலும் பாடலும் கேவலமாகிப் போனது. கூத்தாடி, வேசி என்ற சொற்கள் திட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. செய்யுள் யாப்பது, இலக்கியம் படைப்பது மட்டுமே மேட்டுக்குடி புலவர் மரபு என்ற கால கட்டத்தில் இது நடந்திருக்கலாம்.

பாரி போன்ற இனக்குழுத்தலைவர்களை அழித்ததோடு பாணர் மரபும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. மூவேந்தர் முடியாட்சி ஏற்படுத்தப்படுகின்றது. மன்னர்களின் படைமடம்படாத, கொடைமடம் பட்ட புகழைத் துதிபாட புதிய புலவர் மரபு எழுச்சி பெறுகிறது என்ற கைலாசபதியின் கருத்தை நாம் ஏற்றாக வேண்டும். புலவர் பாடல்கள் மட்டுமே நமக்குக்கிடைக்கின்றன. பாணர் இசைப்பாடல்கள் பதிவு செய்யப்பட்டதாகவே தெரியவில்லை. மக்கள் இசைப்பாடல்கள் பதிவு பெறவேயில்லை.

முதன் முதலில் கந்துவரி, ஆற்றுவரி, ஊசல்வரி என்று சிலம்பிலே நாட்டார் இசை பதிவு பெறுகிறது. உரையிடை இட்ட பாட்டு உடை செய்யுளாக சிலம்பு ஒளிவீசுகின்றது.
(பாட்டு=இசைப்பாட்டு)
(செய்யுள்=இலக்கியம்/காப்பியம்)

கீர்த்தனை வடிவம் பெறல்

கீர்த்தனைக்கு மூலவடிவம் எது? கலிப்பா மூலவடிவமாகிறதா? வெண்பாவையும், ஆசிரியப்பாவையும் புலவர் மரபு எடுத்துக் கொண்டாலும், சிக்கலான யாப்பும் தேர்வு பெற்ற இலக்கியச் சொற்களும், இசைப்பாடலுக்கு ஓர் சிறையாகவே இருந்து வந்துள்ளன.

யாப்பிலும், சொற் பயன்பாட்டிலும் ஒரு நெகிழ்வுத் தன்மை வேண்டும் என்ற தேவை ஏற்படுகிறது. விருத்தம், தாழிசை, துறை என்ற பாவினங்கள் தோன்றுகின்றன. தாளத்தில் அமைந்து துள்ளல் ஓசை பெறும் நாட்டார் வடிவான கலிப்பா விரிவடையத் தொடங்குகிறது. புதிய வடிவங்களை நெகிழ்வுத் தன்மையுடன் ஆக்கிக்கொள்கிறது.

இதற்கு முன்பே, ஒத்தாழிசைக் கலியின், தேவர்ப்பாரய முன்னிலை, ஒருபோகு ஆகி அது மேலும் மயங்கிசைக் கொச்சகக்கலியாகிறது.

சிலம்பில் மங்கலவாழ்த்து, மயங்கிசைக் கொச்சகக் கலிக்கு ஓர் சான்று. மங்கலவாழ்த்துப் பாடல் அதாவது இசைப்பாடல் என்றே அடிகளார் பெயர் தருகிறார். அது மேலும் உருமலர்ச்சி அடைந்து கொச்சக ஒரு போகு ஆகிறது. மேலும் உருமலர்ச்சிபெற்று இன்றைய கீர்த்தனை வடிவம் கொள்கிறது. கொச்சக ஒரு போகின், நெகிழ்வுத்தன்மை அனைத்தும் இன்றைய கீர்த்தனை வடிவத்தில் உள்ளது. தொல்காப்பியர் கொச்சக ஒரு போகிற்குக் கூறும் அத்தனை நெகிழ்வுத் தன்மையையும் இன்றைய கீர்த்தனை பெற்றுள்ளது.

தரவுஇல்லாமம் தாழிசை பெற்றும்
தாழிசை இன்றித் தரபுடைத்தாகியும்
எண் இடை இட்டுச் சின்னங்குன்றியும்
அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகியும்
யாப்பிலும் பொருளிலும் வேற்றுமையுடையது
கொச்சக ஒரு போகு ஆகும் என்ப
-தொல் பொருள் செய்யுள் நூற்பா 1406

எண் - அம்போதரங்கம்
சின்னம் - தனிச்சொல்
அடக்கியல் - சுரிதகம் (சரணம்)

கீர்த்தனைப் பாடலின் உறுப்புக்களான பல்லவி, அனுபல்லவி, சரணம், எதுகை, மோனை, முரண், இயைபு, தாளஅறுதி, தனிச்சொல், முடுகு, அம்போதரங்கம் என்பது பற்றி முதலில் பார்க்கலாம்.

கீர்த்தனை பாடுவதில் பல்லவி பாடுதல், சுரம் பாடுதல், ஆலாபனை, நிரவல் பாடுதல், தானம் பாடுதல் எனப் பல்வேறு விரிவாக்கங்களும் உண்டு.

பல்லவி

நாட்டார் வடிவான வரிப்பாட்டில் முகமுடைவரி, முகமில்வரி, முரிவரி, வரிச்சாத்து எனப் பல்வகை உண்டு.

முகமுடைவரி

“வரிப்பாட்டுக்கு முகமாக நிற்றலின் முகம் எனப்படும்” என்பார் அரும்பத உரைகாரர். சிலம்பு, கானல்வரியில் ஆற்றுவரிக்கு உரை செய்யும்போது முகமுடைவரி பற்றி மேற்கண்டவாறு அவர் கூறுகிறார்.

“திங்கள் மாலை வெண்குடையான்” என்று தொடங்கும் பாடல் முதலிய மூன்றும் “வாழிகாவேரி” என்று முடிகிறது. இதுவே முகம், ஈற்றடி மீண்டும் மீண்டும் பாடப்பட வேண்டும்; இன்றைய பல்லவி போன்று.

“அப்பன் இடம் திரு ஆலங்காடே” என்று முடியும் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்களும், “அரங்கமா நகருளானே” என்று முடியும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாசுரங்களும் இவ்வாறே ஈற்றடி மீண்டும் மீண்டும் பாடப்பட வேண்டியவை.

மேல்வைப்புகள்

ஈரடி மேல்வைப்பு, நாலடி மேல்வைப்பு (இடரினிம் தளரினிம் - சம்பந்தர் மற்றும் ‘திருமால் கேளாத செவி என்ன செவியே’ (சிலம்பு - ஆச்சியர் குரவை) என்பவை பல்லவி போன்று திரும்பத் திரும்ப வந்து பாடப்பட்டவை.

“போக்கியல் வகையே வைப்பு எனப்படுமே”
(போக்கியல்-சுரிதகம்-சரணம்-முடிப்பு)
-தொல் 1393

வைப்பு என்ற மேல்வைப்பு பற்றிய நூற்பா இதுவாகும். மேல்வைப்பு என்றால், பாடலின் மேலே, முதலில் வைத்து மீண்டும் மீண்டும் பாடப்பட வேண்டும் என்பது பொருள்.

முகமுடை வரி என்பதில் ஈற்றடியிலுள்ள “வாழிகாவேரி” என்பது பல்லவி போன்று மீண்டும் மீண்டும் பாடி பாடலின் முதலில் வருவது போன்ற அமைப்பில் உள்ளது. அதாவது கடைசியில் வருவது முதலில் வருகிறது. நமது நாட்டில் முகவரியும் முதலில் மாவட்டம், வட்டம், ஊர், தெரு, பெயர் என்றே எழுதப்பட்டது. சீன நாட்டில் இந்த முறைமையே இன்றும் வழக்கில் உள்ளது. தற்போது நம்நாட்டில் இந்த முறை தலைகீழாகி, நபரின் பெயர் முதலில் வந்து, மாவட்டத்தின் பெயர் இறுதியில் வந்துள்ளது. இறுதி முதலாவது நாட்டில் மட்டுமல்ல இசையிலும் முறையானதுதான்.

பல்லவம் என்றால் துளிர்விடுதல் என்று நிகண்டுபொருள் கூறுகிறது. ஒடிசி நடன உருப்படியின் பெயர் பல்லவி. அதன் பொருள் துளிர்விடுதல்.

பாட்டின் ஒரு வரியைப் பல்லவியாக்கிப் பாடும் வழக்கம் உண்டு. “ஸமயமுதெலிஸி புண்யம லார் ஜிஞ்சனி” என்று தொடங்கும் தியாகராசரின் திரிபுடைதாள அசாவேரி கிருதி ஒன்று உண்டு. அடிக்குறிப்பில், பதிப்பித்த இரங்கராமானுச அய்யங்கார் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

சரணத்தின் முன் இரண்டுவரிகள் பல்லவியானது. பின் இரண்டும் அனுபல்லவியானது.
-கிருதி மணிமாலை 1976- தொ. 1 ப. 202

அதாவது பல்லவி என்பது பாடலின் திரண்ட கருத்து; அதை நாம் எவ்விதமாகவும் அமைத்துக் கொள்ளலாம். காப்பி இராகத்திலுள்ள, “என்னதவம் செய்தனை-யசோதா” என்ற பாபாநாசம் சிவன் பாடல் கீர்த்தனை என்றால் “என்ன புண்ணியம் செய்தனை” - சம்பந்தர் திருவலஞ்சுழிப் பதிகம்

என்ன புண்ணியம் செய்தேனோ - வள்ளலார்
என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே - அப்பர்.
திருச் சேரைப்பதிகம் 5:2

என்பதும் கீர்த்தனை தானே? ஏன் கீர்த்தனையாகப் பாடக்கூடாது?

அனுபல்லவி

அனுபல்லவியை, துணைப்பல்லவி, உபபல்லவி, தொடுப்பு என்றெல்லாம் கூறுகிறோம். எடுப்பும் முடிப்பும் மட்டுமே அதாவது பல்லவி, சரணம் மட்டுமே முதலில் இருந்தது. இடைக்காட்டுச் சித்தர் பாடலில் எடுப்பும் முடிப்பும் மட்டுமே உண்டு.

எடுப்பு: ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே

முடிப்பு: ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்த வட்டத்துக்குள்ளே நின்றதுங் கண்டேன்
மாலிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்த்தேன்.

இந்த முடிப்பு முடிந்து மீண்டும் எடுப்பு பாடப்படும்.
பாபஞ் செய்யா திருமனமே - நாளைக்
கோபஞ்செய்தே யமன் கொண்டோடிப்போவன்

- கடுவெளிச்சித்தர் இந்த ஆனந்தக் களிப்பு, பல்லவி மட்டும் பெற்று, அனுபல்லவியின்றி வந்துள்ளது. பல்லவியில் திரண்ட கருத்தை, மேலும் விளக்கமாகக் கூற அனுபல்லவி அமைந்தது. பொதுவாகப் பல்லவி சமன்தானத்திலும், அனுபல்லவி மேல்தானத்திலும் பாடும்முறை வழக்கத்தில் உள்ளது.

சரணம்

பொதுவாக சரணம் என்பது பாடல்தான். கலித்தொகையின் தாழிசை என்பதுவே இன்று சரணமாகியுள்ளது. தாழிசை இடைநிலைபாட்டு என்றும் பெயர் பெற்றுள்ளது. “ஒரு பொருள் மேல மூன்றடுக்கி வந்தது” “மூன்று தாழிசை பெற்றுவந்தது” என்ற வழக்கு அடிக்கடி இலக்கியங்களில் பேசப்படுவது.

“திங்கள் மாலை வெண்குடையான்” முதலிய மூன்று பாடல்கள், “கயலெழுதி வில எழுதி” முதலிய மூன்று பாடல்கள், இவ்வாறு மூன்று தாழிசைகள் அடுக்கிவருவது நம் இலக்கிய மரபு. பின்னாளில் கீதம் என்ற சொல் வழக்குக்கு வருகிறது. கீதம் என்ற சொல்லாட்சி சிலம்பில் வருகிறது.

“மதுரகீதம் பாடினள் மயங்கி”: வேனில் 8:24
“கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேனே” -திருமூலர்
“கீதம்பாட மடமந்து கேட்டு” -கம்பர்
திருக்கேதாரம்-பாடல் 2.

கீதத்தில் பல்லவி, அனுபல்லவி போன்ற அமைப்பு இல்லை. ஆனால் அமைத்துக் கொள்ளலாம். இசைப்பாட்டின் பெயர் கீதம்-திவாகரநிகண்டு. ஆகவே சரணம் என்பது பாடல்; அது கீதம் என்ற பெயர்பெற்றுள்ளது. அதன்மூலம் தாழிசை: தாழிசை என்பது கண்ணிகளே, கண்ணிகள் பழமையான நாட்டார் இசைவடிவங்கள்.

“பராபரமானதடி அகப்பேய்
பரவையாய் வந்ததடி
தராதலம் ஏழ்புவியும் அகப்பேய்
தானே படைத்ததடி” -அகப்பேய்ச்சித்தர்.

இது ஈரடிக் கண்ணிகளால் வந்த ஓர் பாடல். கீதம் எனலாம். தாழிசை எனலாம்; சரணம் எனலாம். ஆனால் மூலம் நாட்டார் வடிவாய் உள்ளது.

எதுகை

கீர்த்தனைப் பாடல்கள், நம் பழைய மரபான பாடல் அணிகளை - எதுகை, மோனை, முரண், இயைபு - எடுத்துக் கொள்கின்றன.

கீர்த்தனையில், பல்லவியில் வரும் எதுகையே, அனுபல்லவியில் வரும்.

பல்லவி: ஆடியபாதம் தரிசனம் கண்டால்
ஆனந்தம் பெண்ணே

அனுபல்லவி: தேடிய பொருளும் கூடவராது
தெரிந்து பாரடி கண்ணே -கோபாலகிருஷ்ண பாரதியார்.
(ஆடிய, தேடிய - எதுகை)

பாடல்களை தாளத்தில் அமைத்துப்பாடும்போது எதுகை, மோனை தானே வரும். எதுகை, மோனை என்ற அணிகள் தாளத்தின் பாற்பட்டவை. புலவர் பாடல்களைவிட, நாட்டார் பாடல்களில் எதுகை, மோனை சிறப்பாக அமைந்திருக்கும். ஏனெனில் நாட்டார் பாடல்கள், தாளத்திற்கு முதலிடம் தருபவை. நாட்டார் பழமொழி கூட மிகச் சிறப்பான முறையில் எதுகை, மோனை பெற்று வரும்.

காரிகை படித்து கவிதை செய்வதை விட
பேரிகை அடித்துப் பிழைப்பு நடத்தலாம்

இங்கு எதுகை மோனை சிறப்பாக அமைந்துள்ளது. நாட்டார் பேச்சுகூட எதுகை மோனைச் சிறப்புடையதாக இருக்கும்.எதுகை, மோனையாகப் பேசுகிறான் என்பதை “எகனை மொகனையாகப் பேசுகிறான்” என்பார்கள் சாதாரண மக்கள். நாட்டார் வழக்கிலுள்ள எதுகை, மோனை முதலிய அணிகளைக் கீர்த்தனைகள் எடுத்துக் கொள்கின்றன.

தனிச்சொல்

சின்னம், அடை, கூன், தனிநிலை என்றெல்லாம் நம் இலக்கியங்கள் தனிச் சொல்லைக் கூறுகின்றன. அசையாகவும் சீர் ஆகவும், பாட்டின் முதலில், இறுதியில், நடுவில் வருவது வேறு. பாட்டில் தாள அறுதிக்குப் பின்பு வரும் தனிச் சொல், அதற்கு முன்பு ஒருதாள நிறுத்தம் பெறுகிறது. அதுமிக இனிமையான ஓர் அமைப்பு அதை விட்டிசை என்கிறோம். விசுராந்தி என்று தற்காலம் அழைக்கப்படுகிறது.

“சேவிக்க வேண்டுமையா -சிதம்பரம்
சேவிக்க வேண்டுமையா”
(முத்துத்தாண்டவரின் ஆபோகிப் பண் கீர்த்தனை)
(சிதம்பரம் - தனிச்சொல்)

“ஏன்பள்ளிகொண்டீர் அய்யா -சீரங்கநாதா நீர்
ஏன் பள்ளிகொண்டீர் அய்யா”
-(அருணாசலக் கவிராயர் பாடல்)
(சீரங்கநாதா நீர் - தனிச்சொல்)

இந்த தனிச் சொல், தொங்கல் எனப் பெயர் பெறுகிறது திருப்புகழில்.

எனஓதும், பெறுமானே, அருளாளா என்று திருப்புகழ் தொங்கல், இசையில் தனி இனிமை பெறுவது. நொண்டிச் சிந்தின் அழகே இந்தத் தனிச்சொல்லில் அமைந்தது தான்.

“நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
-பாரதியின் நொண்டிச்சிந்து

முதலடியின் ஈற்றிலுள்ள ‘இந்த’ -தனிச்சொல்)

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே நம் பாடல்களில் பயின்று வந்தும், நாட்டார் பாடலான நொண்டிச்சிந்து போன்ற சிந்துகளில் வந்தும் சிறப்படைந்த, தனிச்சொல்லை, கீர்த்தனை எடுத்துக் கொள்கிறது.