Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

இசை கவிதைகள்

ஒரு நல்ல கவிதை

ரஸத்திலே தேறவும்
பணத்தினைப் பெருக்கவும்
ஒரு சேர முயன்றவன்
தன் ஒற்றைக் கண்ணால் கவிதையையும்,
இன்னொரு கண்ணால்
கணிதங்களையும் கவனித்து வந்ததால்
இரண்டுமே சரியாகப் புலப்படவில்லை
இருபத்தி மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களையும்
பதினைந்து பத்து ரூபாய் நோட்டுக்களையும்
சேர்த்து எண்ணி முடிக்கையில்
அதன் கூட்டுத்தொகை ஒரு கவிதையாகி வந்தது
முதல் வரியையும், இரண்டாம் வரியையும் கூட்டி
கடைசி வரியால் வகுக்கிறான்
அவன் கவிதைகளில்
காற்றில் மிதக்கும் சொகுசு கார்,
கெட்டி அட்டைப் பதிப்பில் ஒரு கவிதைத் தொகுப்பென
இரு முரணாசைகள் அவனுக்கு
கனவானாகவும் இயலாத
கவிஞனாகவும் கூடாத
துயரம் அழுத்த,
வவுச்சரின் பின்புறத்தில்
நேற்றவன் எழுதியது
நிஜமாகவே ஒரு நல்ல கவிதை.

வெக்கைக் கவிஞன் சொல்வதாவது...

என் கவிதைக்குள்
ஒரு மலர் சுடர்ந்து
எவ்வளவோ காலமாகிவிட்டது
அருவிகள் பெருகி வழிவதில்லை
குளமொன்று காணக்கிடைப்பதில்லை
சொட்டு மழை கூட இல்லை
வானமே இல்லையென்பதால்
பறவைகளும் இல்லை
சுந்தரிகளின் மந்தகாசமோ
குழந்தைகளின் கனிக் கோலமோ
இல்லவே இல்லை
ஒரு மரம் இருந்து
அது அசைந்தால் தானே
மந்த மாருதம் தவழ்வதற்கு
நிலவொளி படராத
என் சொற்களை
இன்னும் எத்தனை காலத்திற்கு
நீங்கள்
படித்துக் கொண்டிருப்பீர்கள்?

கற்பெனப் படுவது....

கற்பெனப் படுவதை
யாரும் கண்ணுற்றதில்லை யாதலால்
அதன் வடிவம் குறித்த சந்தேகங்கள்
பெருகிய வண்ணம் இருக்கின்றன
வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம்
நீள் வட்டம், அரை வட்டம்
எனப் பல அனுமானங்கள்
யோனி வடிவில் இருப்பதாகவும் ஒரு கருத்துண்டு
கறைபடிந்து விட்டால்
பின் நீக்க முடியாது என்பதிலிருந்து
அதன் வண்ணம் தூய வெண்மை
என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது
கற்பு இடையில் தொலைந்ததல்ல
அதன் புகைப்படமும் யாரிடமும் இல்லை
எனவே அதைக் கண்டுபிடிப்பது எளிதான தன்று
அதை ஒரே ஒரு முறை மட்டும்
பார்த்திருப்பதாக சொல்பவன்
அது சிரிக்கவே சிரிக்காததென்றும்
முகத்தில் அச்சத்தையும், அழுகையையும்,
கோபத்தையும் எப்போதும்
ஏந்தியபடியிருக்கும் என்கிறான்
தீங்கிலிருந்து தப்பிக்க இயலாத போது
தன்னைத்தானே அறுத்துக்கொள்ள ஏதுவாய்
கழுத்தில் கத்தி ஒன்றை
தொங்கவிட்டிருக்கும் என்பதும்
அவன் சொன்னதுதான்
கற்பு என்பதை ஒரு பூவினம் என நினைத்த
சிறுமியொருத்தி
அதை வனம் முழுக்கத் தேடியலைகிறாள்.


சொற்களின் வங்கோடைக் காலங்களில்

அந்நாட்களில்
சகலமும் விரைப்பேறிக் கிடந்தது
தீராத குழப்பத்தினோடும்
திட்டங்களின் உஷ்ணத்தோடும்
இரவுகள் பிரகாசிக்காமல் புலர்ந்தன
மதி,மலர்,மழலை அனைத்தும்
முறையோடே இயங்கின
உனதறை சாளரக்கம்பியில்
நெடு நேரமாய் தத்திக் கொண்டிருந்த
தேன் சிட்டும் உன்னில் சலனமூட்டவில்லை
பதறாதே
நான்கு மாதங்களென்பது
சுமார் நூற்றியிருபது நாட்கள்
ஒரு சிறிய வெளி
சுண்டிக் காயப்பண்ணிய பணி நாட்கள்...
சரீரம் தொய்வுற்றிருந்த பிணிப் பொழுதுகள்....
இவற்றைக் கழித்துச் சொன்னால்
உன்னை இன்னும் கொஞ்சம் தேற்றலாம்
இது வேளை
நிலம் குளிர் பூத்திருக்கிறது
உன் சொற்கிடங்கின் மண் கதவு
இம் மழை வாங்கி மெல்லக் கரையும்
தூரத்தே வருகிற
அந் நீலநிறப் பறவை
உன்னைக் கடக்கையில் கவிதையாகும்.

25 ரூபாய் இரவு விளக்கும்
ஒரு புத்திசாலித்தனமான கவிதையும்-


கொஞ்சம் வெளிச்சத்தைப் பரிசளிக்கிறேன்
கொஞ்சம் வெளிச்சத்திலிருந்து துவங்கியது
இப் பிரபஞ்சம்..
இந்த நாள்...
இக் கவிதை.
அதிகாலை அவிழ்கிற மலர்கள்
தன்னுடலில்
கொண்டு வருகின்றன
கொஞ்சம் வெளிச்சத்தை
இருள் கொட்டிக் கிடக்கும்
மனத்துள்
ஒரு குழந்தையின் முத்தம்
சொட்டுகிறது கொஞ்சம் வெளிச்சத்தை
தாவித்தாவி ஓடுகிற மனிதனை
சற்றே நிறுத்தி
ஒரு கவிதை காட்டுவதென்ன
கொஞ்சம் வெளிச்சம்
எனவே ப்ரியமானவனே!
கொஞ்சம் வெளிச்சத்தைப் பரிசளிக்கிறேன்.

உன் ஜிமிக்கிகள் அணிந்திருக்கும் இதயம்

சுமார் அறுபது கி.மீக்கு
அப்பாலிருந்து கிளைத்து நீள்கிற
முள் மரம்
தீண்டிக் கிழிக்கிறது என்னை
கசிந்த உதிரத்தில்
உகுந்த கண்ணீர் கலந்ததில்
மிதக்கிறதுன் மேனி நிறம்
ஐந்தாம் எண்ணில் சுழல்கிற மின்விசிறி நீ
படபடக்கிறது என் இலேசான புத்தகம்
உன்கரைசல்
வண்டல்களாகிப் படிகிறது
என் சொற்களில்
அதரச் சுளைகளில் இனித்த என் பெயரை
கவ்வி எடுத்து வெளியே துப்பிய
எவனோ ஒருவன்
உன் நிர்வாணமெங்கும் தேடுகிறான்
இன்னும் எங்கேனும் இருக்கும்
என்னை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com