Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

இசையின் அரசியல்

சாருநிவேதிதா

‘‘என்னுடைய கிதார் பணக்காரர்களுக்கானது அல்ல. நிச்சயமாக அல்ல. நட்சத்திரங்களை அடைவதற்காக நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஏணியே எனது பாடல்.’’ - விக்தோர் ஹாரா.

1973 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ஆம் நாள். இடம்: சீலேயின் தலைநகர் ஸந்த்தியாகோ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அலெந்தேயின் 6 ஆண்டு கால ஆட்சி, மூன்றே ஆண்டுகளில் அமெரிக்காவின் நிக்ஸன் அரசு, அதன் சி.ஐ.ஏ., மற்றும் ITT, அனகோண்டா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் உதவியுடன் ராணுவ ஜெனரல் பினோசெத்தின் துருப்புகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

‘மக்கள் அமர வைத்த இந்த அதிபர் பதவியிலிருந்து நான் உயிரோடு இருக்கும்வரை, சி.ஐ.ஏ.வினால் என்னை அகற்ற முடியாது’ என்று சொன்னபடி டாக்டர் அலெந்தே தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.

அதே தினம் சீலேவின் அடித்தட்டு மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட இசைக் கலைஞரான விக்தோர் ஹாரா அவர் பேராசிரியராக வேலை பார்க்கும் பல்கலைக்கழகத்திற்கு வழக்கம்போல் செல்கிறார். தான் கொல்லப்படுவோம் என்பதும் அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்படும் விக்தோர், ஸந்த்தியாகோவின் புகழ் பெற்ற நேஷனல் ஸ்டேடியத்திற்கு கொண்டு வரப்படுகிறார். தொழிற்சாலைகள் இடிக்கப்பட்டதைப் போல் பல்கலைக்கழகம் டாங்கிகளால் இடித்துத் தள்ளப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் நடப்பதற்குச் சில மாதங்கள் முன்புதான் பாப்லோ நெரூதாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அது, இதே நேஷனல் ஸ்டேடியத்தில்தான் மிகப்பெரும் கலைவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவை முன்னின்று நடத்தியவர் விக்தோர் ஹாரா.

விக்தோரும் பாப்புலர் யூனிட்டி கட்சியைச் சேர்ந்த மற்ற தோழர்களும் நேஷனல் ஸ்டேடியத்திலிருந்த அறைகளில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். (சீலே கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவே பாப்புலர் யூனிட்டி) அப்போதும் விக்தோர் ஹாரா தனது பாடல்களின் மூலம் மற்ற தோழர்களுக்கு உற்சாகமூட்டிக் கொண்டேயிருந்தார்.

ஹாராவுக்கு உணவோ தண்ணீரோ கொடுக்காமல் அடிக்கடி அவரது உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சினர் ராணுவத்தினர். செப்டம்பர் 16ந் தேதி, சித்ரவதையின் உச்சகட்டமாக அவரது கைகளைத் தனது துப்பாக்கியால் சிதைத்த ஒரு அதிகாரி ‘இப்போது பாடு, வேசி மகனே!’ என்று கத்துகிறான். அதற்குச் சற்று நேரம் முன்புவரை கூட ஹாரா ஒரு புதிய பாடலைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார். அந்தப் பாடல் முடிக்கப்படாமலேயே பாதி வாக்கியத்துடன் நின்று போகிறது. அந்தக் காகிதத்தை எடுத்து வைத்துக் கொண்ட ஒரு தோழர் பிறகு ஹாராவின் மனைவி யோவானிடம் அதைக் கொடுக்கிறார். பின்னாளில் ஹாராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் யோவான் அதற்கு ‘முடிவுறாத பாடல்’ என்று தலைப்பிட்டதற்கு இந்தச் சம்பவம்தான் காரணம் என்று குறிப்பிடுகிறார். அவர் கைகள் சிதைக்கப்பட்ட அந்தத் தருணத்தில் கூட ஹாராவை ராணுவத்தினரால் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அப்போதும் அவர் தனது புகழ் பெற்ற பாடலான Venceremos ஐ (நாம் வெல்வோம்) பாடிக் கொண்டிருந்தார். தன்னால் சிறை செய்யப்பட்டிருக்கும் ஒரு கைதியைத் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வைக்க முடியவில்லையே என்று ஆத்திரப்படும் அந்த அதிகாரி தனது எந்திரத் துப்பாக்கியால் ஹாராவின் நெஞ்சில் தொடர்ந்து சுடுகிறான்.

ஹாராவின் உடல் கூட யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதிய ராணுவம், அவரது உடலை நூற்றுக்கணக்கான மற்ற உடல்களோடு சேர்த்து இடுகாட்டுக்கு அனுப்புகிறது.

இதற்கிடையில், யோவான் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்பதால் பிரிட்டிஷ் தூதரகத்திற்குச் சென்று ஹாராவின் உயிரைக் காப்பாற்றும்படி வேண்டுகிறார். ஆனால் பிரிட்டிஷ் தூதரகம் உதவி செய்ய மறுத்து விடுகிறது. இடுகாட்டிலிருந்த ஒருவர் ஹாராவின் உடலை அடையாளம் கண்டு யோவானிடம் வந்து தெரிவிக்க-அதற்காகவே அவர் ராணுவத்தால் கொல்லப் பட்டிருக்கலாம்; இருந்தும் ஹாராவுக்காக அவர் தனது உயிரைப் பணயம் வைக்கிறார். யோவான் ராணுவத்தினரிடம் விவாதித்து ஹாராவின் உடலைப் பெற்று அவரை முறைப்படி அடக்கம் செய்கிறார்.

*********
1978 ஆம் ஆண்டு சீலேவைச் சேர்ந்த Patricia Vertugo என்ற நாவலாசிரியை ஒரு இலக்கியச் சந்திப்புக்காக ப்ரின்ஸ்டன் (யு.எஸ்) செல்கிறார். அங்கே வசிக்கும் தனது நாட்டைச் சேர்ந்தவர்களை சந்திக்கிறார். ‘பினோசெத்தின் ராணுவச் சர்வாதிகாரத்திலிருந்து நமக்கு விடுதலையே இல்லையா? என்று பத்ரீஸியாவிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘இல்லை. ராணுவத்துக்கான எதிர் நடவடிக்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது’ என்கிறார் பத்ரீஸியா. ‘எப்படி நடக்கிறது? எங்கே நடக்கிறது?’ என்ற அவர்களின் கேள்விக்கு பத்ரீஸியா கூறிய பதில் இது:

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் இசையின் மூலமாக மட்டுமே அளவிட முடியும். கருத்துப் பரிமாற்றம் என்பதற்கு எங்களுக்குக் கிடைத்துள்ள ஒரே சாதனம் இசைதான். நாங்கள் அரசியல் பேச முடியாது. கூட்டம் கூட்டுவதற்கு அனுமதி கிடையாது. ஆனால், யாராவது பாடல்கள் கேட்பதை, நான் பார்க்க நேர்ந்தால், அவர் யாரென்று எனக்குத் தெரிந்து விடுகிறது. அவர் பாடல் கேட்பதே போதும், அவர் யார் என்பதை நான் தெரிந்து கொள்ள. ஏனென்றால், அவர் கேட்பது Violeta Parraவின் பாடல்களை.

புரட்சிக்கான நடவடிக்கையாக நாங்கள் கிதார் வாசிக்கிறோம் என்றால் அது உங்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். உங்களுக்குத் தெரியுமா, சீலேயின் பல்கலைக் கழகங்களில் கிதார் வாசிப்பது என்ற செயலின் அர்த்தம்? இல்லை. அந்த ராணுவ ஆட்சியின் பயங்கரத்தை நீங்கள் அனுபவிக்கவில்லை. கிதாரை வைத்துக் கொண்டு வயலத்தா பார்ராவின் Gracias a la vida வைப் (வாழ்க்கைக்கு நன்றி) பாடுவதென்பது எங்களுடைய எதிர்ப்பின் தீவிரமான வெளிப்பாடு என்பேன்.

இசையே எங்கள் அடையாளத்தின் குறியீடாக இருக்கிறது. நான் பார்த்த கார்ட்டூன் ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு வீட்டுக்காரன் அவ்வீட்டிலுள்ள சுண்டெலிகளை அடித்து விரட்டுகிறான். அவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சுண்டெலிகள் பூமிக்குக் கீழே பள்ளம் தோண்ட ஆரம்பிக்கின்றன. கடைசியில் பள்ளம் பெரிதாகி அந்த வீடே பள்ளத்தில் வீழ்ந்து விடுகிறது. அதுதான் சீலேயில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் பாடலின் மூலமாகத் தொடர்பு கொண்டு வரும் நாங்கள், இதன் மூலமாக ஒரு அடிப்படையான வேலையைச் செய்து வருகிறோம். உங்களால் அதைப் பார்க்க முடியாது. ஏனென்றால், அந்த வேலை மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது-இசையின் வாயிலாக.

*********

Silvio Rodriguez என்பவர் உலகப் புகழ் பெற்ற ஒரு கூபப் பாடகர். இவரது பாடல்களை 1976ல் சீலேயில் ஒரு ஆல்பமாகக் கொண்டு வருகிறார் ரோபர்த்தோ கார்சியா. பினேசெத் அரசுக்கு ரோத்ரிகுவெஸ்ஸைத் தெரியவில்லை. அவரது பாடல்களை கார்சியாவின் ஆல்பத்தில் பாடியவர் சீலேயின் வலதுசாரிகளில் ஒருவர் என்பதால் ராணுவம் இதைக் கண்டு கொள்ளவில்லை. அந்த ஆல்பத்திலுள்ள ‘ஒஜாலா’ (நம்பிக்கை என்று பொருள்படும்) என்ற பாடல் அந்த ஆண்டின் மிகப் பிரபலமான பாடலாகக் கொண்டாடப்படுகிறது. ‘இவ்வளவு அருமையான பாடலை எழுதியர் யார்?’ என்ற கேள்வி எழுந்த போது ‘யாரோ ரோத்ரிகுவெஸ் என்பவர்; காஸ்ட்ரோவுக்கு எதிரான ஆள்’ என்று கூறுகிறார் கார்சியா. இவ்வாறாகவே வயலத்தா பார்ரா மூலமும், இன்னும் பல இசைக் கலைஞர்களின் மூலமும் நாங்கள் யார் என்பதை அறிந்து கொண்டோம். அரசியலின் மூலமாக அல்ல-இசையின் மூலமாக’ என்கிறார் ரொபர்த்தோ கார்சியா.

1973இல் துவங்கிய பினோசெத்தின் ராணுவ ஆட்சி 1990 வரை நீடித்தது. இந்தக் கால கட்டத்தில் பினோசெத்துக்கு எதிராக உலக அளவில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது விக்தோர் ஹாராவின் பாடல்கள். அந்தப் பாடல்கள் ஸ்பானிஷில் இருந்தாலும் ஸ்பானிஷ் தெரியாத மற்ற தேசத்து மக்கள் அதைப் புரிந்து கொண்டார்கள். காரணம், ஹாராவின் குரலில் சீலே தேசத்து மக்களின் கண்ணீர் தெரிந்தது. அதற்கு மொழி ஒரு தடையாகவே இல்லை.

La plegraria a un labrador (விவசாயிக்காக பிரார்த்தனை) என்ற அவரது புகழ்பெற்ற பாடல்:

....Deliver us from the master who keeps us in misery,
thy kingdom of justice and equality come.
Blow, like the wind blows the wild flower of the mountain pass...
...give us your strength and courage to struggle.
Stand up, look at your hands,
Take your sister and brother’s hand so you can grow.
We’ll go together, united by blood,
Now and in the hour of the death.
Amen

விக்தோர் ஹாரா ஒரு பேட்டியில் கூறுகிறார்: என்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்... என் தேசத்தின் வறுமை, உலகின் பல்வேறு பகுதி மக்களின் வறுமை, வார்ஸாவில் யூதர்களுக்காக எழுப்பப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்கள், வெடிகுண்டுகளால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் திகில், போரின் காரணமாக மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கும் துயரம்... ஆனால், இவ்வளவுக்கு இடையிலும் அன்பின் வலிமையை நான் கண்டிருக்கிறேன்.

நான் விரும்புவது அமைதியை. அதுவே எல்லாவற்றுக்கும் மேலானது. என் கிதார் நரம்புகளின் வழியே துக்கமும் சந்தோஷமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் வழியே உங்கள் இதயத்தைத் துளைக்கும் பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன: நம்மை நாமே பார்த்துக் கொள்வதின்றும் விலகி, இந்த உலகை புதிய கண்களால் பார்க்க உதவும் சில கவிதை வரிகளும் அதன் வழியே வந்து கொண்டிருக்கின்றன.

விக்தோர் ஒரு புரட்சியாளராக இருந்த போதிலும்-சே குவாராவைப் புகழ்ந்து பாடியிருந்த போதிலும்-குவாராவின் கொரில்லா போர்முறையை மறுதலிக்கிறார்; புரட்சிக்கு மக்களுடைய பங்கேற்பை வலியுறுத்துகிறார். சீலேயில் தொடர்ந்து நடந்து வந்த மக்கள் இயக்கங்களுக்கும் விக்தோரின் இந்தக் கருத்துக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

1971இல் அவர் குறிப்பிட்டார். நாம் நிகழ்ச்சி நடத்தும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கலைக்குழுவை உருவாக்க வேண்டும். இசையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக நாம் அவர்களுடைய இடத்துக்கு இறங்கக் கூடாது. இதன் பொருள்: அவர்களை விட மேலான இடத்தில் இருப்பதாகவும், அவர்களுக்காக நாம் நம்மை இறக்கிக் கொள்வதாகவும் ஒருபோதும் நினைக்கக் கூடாது. அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நாம்தான் மேலேறிச் செல்ல வேண்டும். நம்முடைய வேலை மக்களுடைய கலாச்சார வேர்களை மீட்டெடுத்துத் தருவதும், கலை வெளிப்பாட்டுக்கான அவர்களுடைய தாகத்தைத் திருப்தி செய்வதுமேயாகும்.

பாப்லோ நெரூதாவுக்கு அடுத்தபடியாக உலகெங்கும் பிரபலமான சீலே தேசத்துக் கவிஞர் Nicanor Parra. இவரது சகோதரி Violeta Parra சீலேவின்மிக முக்கியமான பாடகர். வயலத்தாவின் மகள் இஸபெல், மகன் ஆஞ்ஜெல் பார்ரா இருவரும் கூட பாடகர்கள்தான்.

1965 இல் ஆஞ்ஜெலும் இஸபெல்லும் ஒரு சிறிய வீட்டை வாங்கி pena de los parra என்ற பெயரில் ஒரு கிளப்பை ஆரம்பித்தனர். பாரிஸ் நகரின் கஃபேக்களைப் போல் புகழ் பெற்றது சீலேவின் ‘பேஞா’ எனப்படும் சிறிய கிளப்புகள். இங்கே குறைந்த உயரமுள்ள மேஜையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒயின் அருந்தியபடி பாடல்களைப் பாடுவது வழக்கம்.

பார்ராவின் பேஞாவில்தான் அறுபதுகளில் சீலேவில் உருவான புதிய பாடல் (Neura cancion) என்ற இயக்கத்தைச் சேர்ந்த பாடகர்கள் பாடினர். இதன் முக்கிய பாடகராக இருந்தவர் விக்தோர் ஹாரா. இனி வருவது ஆஞ்ஜெல் பார்ராவின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

அந்த 1000 நாட்களும் (டாக்டர் அலெந்தே பதவியிலிருந்த நாட்கள்) ஒரு கனவைப் போல் மறைந்து போயின. செப்டம்பர் 14ஆம் தேதி (1973) நான் கைது செய்யப்பட்டேன். அதற்கடுத்த ஒன்பது மாதங்களும் பல சிறைகளில் கழித்தேன். நவம்பர் 9ஆம் தேதி (1973) அன்று நேஷனல் ஸ்டேடியம் மூடப்படும் வரை என்னை அங்கேதான் அடைத்திருந்தார்கள்.

இரண்டு பேரை ராணுவம் பலி வாங்க நினைத்தது. அந்த இரண்டு பேர்: விக்தோர் மற்றும் நான். அவர்கள் விக்தோரை முதலில் கைது செய்தார்கள். நான் மூன்று நாட்கள் கழித்து மாட்டினேன். நான் எப்போதும் சொல்வேன், நான் இன்று உயிரோடு இருப்பதற்குக் காரணமே விக்தோரின் மரணம்தான் என்று. ஏனென்றால், எங்களில் யார் முதலில் சிக்குகிறார்களோ அவரைக் கொன்று அதை மற்றவர்களுக்கு உதாரணமாகக் காட்ட விரும்பினார்கள் அவர்கள்.

நாங்கள் சிறைக்குள்ளேயே கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினோம். எங்களை சிறையில் அடைக்காமல் நாடு கடத்தியிருந்தால் தங்களுக்குத் தொந்தரவு குறைவாக இருந்திருக்கும் என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு நாங்கள் உள்ளே சத்தம் போட்டுக் கொண்டிருந்தோம்.

வடக்கு சீலேயிலுள்ள சக்காபுக்கோ என்ற நகரில் நைட்ரேட் சுரங்கத் தொழிற்சாலை இருந்தது. பிறகு, நைட்ரேட்டுக்குப் பதிலாக அதன் இடத்தை தாமிரம் பிடித்துக் கொண்டபோது அங்கிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியூர்களுக்குப் பிழைப்பு தேடிச் சென்றனர். அந்த நகரை தொழிலாளர்களின் நினைவுச் சின்னமாக மாற்ற எண்ணினார் அலெந்தே. அதன் திறப்பு விழா நெருங்கிக் கொண்டிருந்த போதுதான் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆனால் அதே நகரில்தான் பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டார்கள்.

மொத்தம் நாங்கள் 1200 கைதிகள் இருந்தோம். சிறைக்கு மேற்கூரைகள் கிடையாது. அதை எங்களுக்காக அந்த ஊர்ப் பெண்கள்தான் செய்து கொடுத்தார்கள். அவர்கள் வீட்டு ஆண்கள் சிறைகளில் இருந்தார்கள்; அல்லது, காணாமல் போயிருந்தார்கள்; அல்லது, வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள்.

சிறையின் சுவர்களிலேயே பத்திரிகை நடத்தினோம். எங்களிடையே நல்ல கேலிச் சித்திரக்காரர்கள் இருந்தனர். ஒரு தோழர் 400 கைதிகளை வைத்து கூட்டுப்பாடல் ஒன்றை உருவாக்கினார். ரேடியோ இல்லை என்பதால் நாங்களே ஒரு இசைக்குழுவை அமைத்துக் கொண்டோம். வெளியிலிருந்த சில நண்பர்கள் கிதாரையும் மற்றும் சில இசைக் கருவிகளையும் கொடுத்து உதவினார்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நாடகம் நடந்தது. இதுவரை நாடகமே எழுதி பழக்கமில்லாதவர்கள் கூட எழுதினார்கள். ஆனால் காமெடி மட்டும்தான் சாத்தியம். எங்கள் துக்கத்தை அங்கே பேச முடியாது. இவற்றைப் பார்ப்பதற்கு சிறைக் காவலாளிகள் எங்கள் அனுமதி பெற்ற பிறகே வருவார்கள். இத்தகைய நிகழ்வுகள் மூலமே எங்களை அடிமைப்படுத்த நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறாதபடி எங்கள் ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டோம்.

1974 மத்தியில் நான் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டேன். உலகம் முழுவதிலுமிருந்த பல்வேறு கலைஞர்களின் மூலமாக பினோசெத் அரசுக்கு வந்த கண்டனங்களே என் விடுதலைக்குக் காரணமாயிருந்தன. நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டனர். மெக்ஸிகோவில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன். பிறகு பாரிஸ் வந்து விட்டேன்.

*****

பினோசெத்தின் ராணுவ அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு இசை ஒரு முக்கியமான காரணமாக இருந்தது எப்படி என்பதற்கு யோவான் ஹாரா சில சாட்சியங்களை அளிக்கிறார். விக்தோரின் மரணத்திற்குப் பிறகு விக்தோரின் பாடல்களையும், கேசட்டுகளையும் ரகசியமாகக் கடத்திக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறி விட்டார் யோவான்.

அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சீலே சென்ற யோவான் அதுபற்றிக் கூறியிருக்கும் சாட்சியம்: எந்த நேரத்திலும் சீலேவில் மரண ஊர்வலங்களே நடந்து கொண்டிருந்தன. அதையெல்லாம் அரசியல் ஊர்வலங்கள் என்றே சொல்லலாம்.அந்தக் காரணம் இந்தக் காரணம் என்று சொல்லி கொல்லப்பட்டவர்களின் மரண ஊர்வலங்கள் அவை. சீலேவைப் பற்றி என் ஞாபகத்தில் உள்ளவை இந்த ஊர்வலங்கள் மட்டும்தான். அதோடு பிரபலமானவர்களின் மரண ஊர்வலங்களும் நடக்கும். நடிகரான ரோபர்த்தோ பராதா அல்லது ரோத்ரிகோ ரோஹாஸ்... (அந்த இளைஞர் பினோசெத்தின் அடியாட்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.) நாங்கள் கல்லறைகளில் கூடுவோம். ஆம். அது ஒரு பயங்கரமான அனுபவம். கல்லறைக்குப் போகும் வழியெல்லாம் பாடிக்கொண்டே செல்வோம் - கண்ணீர்ப்புகைக் குண்டுகளுக்கு நடுவே.

*****

வயலத்தா பார்ரா மற்றும் விக்தோர் ஹாராவால் உருவாக்கப்பட்ட ‘புதிய பாடல்’ இயக்கத்தை சேர்ந்தவர் ரோபர்த்தோ மார்க்குவெஸ் என்ற பாடகர். சீலேவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் அவர். அந்தப் பகுதிக்குரிய இசையை ஸந்த்தியாகோ மக்கள் அறிந்திருக்கவில்லை. மத்திய சீலேயில் இருந்தவர்கள் வட பகுதி இசையை பெரு அல்லது பொலிவிய இசையாகவே கருதினர்.

மார்க்குவெஸும் அவரது தம்பியும் ஒரு இசைக் குழுவைத் துவக்கிப் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் வடக்குப் பகுதியிலிருந்து ஸந்த்தியாகோ நகருக்கு வருகின்றனர். அப்போது மார்க்குவெஸின் வயது 17. ஆண்டு 1973. ‘நாங்கள் மிகவும் இளைஞர்களாக இருந்ததால்தான் ராணுவத்தின் துப்பாக்கியிலிருந்து தப்பினோம்’ என்கிறார் மாக்குவெஸ்.

Charangos என்பது ஒரு சிறிய கிதாரைப் போன்ற ஒரு இசைக்கருவி. இதன் பெட்டிப் பகுதிக்கு மரத்துக்குப் பதிலாக தென்னமெரிக்க நாடுகளில் வசிக்கும் பாலூட்டியின விலங்கான Armadilloவின் ஓட்டைப் பயன்படுத்துகின்றனர். Quena (ஒரு வகை நாணலால் செய்யப்பட்ட புல்லாங்குழல்), ஸம்ப்போஞா போன்ற இசைக்கருவிகளை பினோசெத்தின் ராணுவ அரசு தடை செய்தது. அது மட்டுமல்ல, தென்னமெரிக்க நாடுகளில் பிரபலமான Poncho என்ற மேலாடை கூட தடை செய்யப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட தங்களுடைய வாழ்க்கையே தடை செய்யப்பட்டதாக உணரும் மார்க்குவெஸின் நண்பர்கள் திரும்பவும் தங்கள் சொந்த ஊருக்கே திரும்புகின்றனர். மார்க்குவெஸும், அவர் தம்பியும், மற்றொரு நண்பரும் மட்டும் ஸந்த்தியாகோவின் பேஞாக்களில் பாடி வந்தனர்.

1975ல் இசைக் கருவிகளின் மீதான தடை நீக்கப் பட்டதால் மார்க்குவெஸ் குழு Despedida del pueblo (சென்று வருகிறேன், தோழர்களே!) என்ற ஒரு ஆல்பத்தை வெளியிடுகிறது. அதிலுள்ள ஒரு பாடல் El candombe para jose என்பது. மார்க்குவெஸ், அர்ஜென்டினா சென்றிருந்தபோது கேட்ட பாடல் இது. அர்ஜென்ட்டினாவுக்குரிய Zamba ரிதத்தில் அமைந்த இந்தப் பாடலில் சராங்கோஸ் மற்றும் கூவனாவையும் கலந்து ஆல்பத்தில் சேர்த்தார் மார்க்குவெஸ். 1976ஆம் ஆண்டு, அமெரிக்க அரசின் வலியுறுத்தலுக்குப் பணிந்து சிறையிலிருந்த அரசியல் கைதிகளை விடுவிக்க முன்வந்தது ராணுவ அரசு. அப்போது ஒரு சிறையிலிருந்து அதன் கதவுகள் திறக்கப்பட்ட போது, ஆயிரக்கணக்கான கைதிகள் வெளியே வருவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஒரே குரலில் கோரஸாக El candombe para jose வைப் பாட ஆரம்பிக்கின்றனர்.

அந்தக் காட்சியையும், கடலின் ஓசையைப் போன்ற ஒலி அலைகளையும் கற்பனை செய்து பாருங்கள்.

*****

விக்தோர் ஹாரா பிறந்தது ஸந்த்தியாகோவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமம். அப்பா மானுவேல் ஒரு விவசாயக் கூலி. கொடிய வறுமையும், அளவுக்கு மீறிய கடின உழைப்பும் மானுவேலை ஒரு குடிகாரராக்குகிறது. குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிப்பது அவரது தினசரி வழக்கமாகிறது. விக்தோரின் அம்மா அமாந்தோ ஒரு பாடகி. அறுவடைக் காலங்களிலும், மற்ற குடும்ப நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார் அமாந்தோ. கிதார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அதனால் சிறு வயதிலிருந்தே தன் அம்மாவிடமிருந்து பாடல்களையும் கிதாரையும் கற்றுக் கொண்டார் விக்தோர்.

எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் விவசாயக் கூலிகளுக்கு அப்போதெல்லாம் கூலிகொடுக்கும் வழக்கம் இல்லை. எப்போதாவது அறுவடைக் காலங்களில் கொடுக்கப்படும் தானியங்களோடு சரி. ஆக, நாள் முழுவதும் உழைத்து விட்டு பட்டினி கிடப்பதுதான் கிராமப்புற மக்களின் வாழ்க்கையாக இருந்தது. அவ்விதமாகவேதான் விக்தோரின் இளமைக் காலமும் கழிந்தது. அதுபற்றி பின்னாளில் நினைவுகூறும் விக்தோர் ‘ஆண்டுக்கு ஒருமுறைதான் மாமிச உணவு கிடைக்கும்; அன்றைய தினம் எங்களுக்கு ஒரு திருவிழா’ என்கிறார். கொடுமையான வறுமை தன் தந்தையைக் குடிகாரராக்கிவிட, அம்மா அமாந்தோவோ ‘அந்த வறுமையையும் எங்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய ஒன்றாக மாற்றினார்-தனது பாடல்களின் மூலம்’ என்று ஒருமுறை கூறினார் விக்தோர். அப்பா பிழைப்புத் தேடி வெளியூர் போய் விடுகிறார். அப்போது விக்தோரின் சகோதரி மரியா தேநீர் தயாரிக்கும்போது உடலில் வெந்நீர் கொட்டி விடவே, மருத்துவ வசதி வேண்டி அமாந்தோ தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஸந்த்தியாகோ நகருக்குச் செல்கிறார். அங்குள்ள தெருவோரக் கடையொன்றில் பணியாளராகச் சேர்கிறார்.

விக்தோருக்கு 15 வயதாகும்போது அமாந்தோ மரணமடைகிறார். பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையில் சேர்ந்து பட்டம் வாங்குகிறார் விக்தோர். பல நாடகங்களை இயக்குகிறார். இசையையும் முறையாகப் பயில்கிறார். பல்கலைக் கழகத்தில் நடன ஆசிரியராக இருந்த பிரிட்டிஷ்காரரான யோவானை மணந்து கொள்கிறார். இந்தக் காலகட்டத்தில் வயலத்தா பார்ராவைச் சந்தித்ததுதான் விக்தோரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நாடகத் துறையை விட்டு விட்டு முழு மூச்சாக இசையில் கவனம் செலுத்தத் துவங்குகிறார்.

அப்போதுதான் அர்ஜென்ட்டினாவில் பெரோனின் ஆட்சிக் காலத்தில் உருவான் ‘புதிய பாடல்’ இயக்கம் சீலேவுக்கு வந்து சேர்கிறது. இதன் முக்கியமான அம்சம்: மேட்டுக்கடியினருக்கான உயர்தரப் பொழுதுபோக்கு அம்சமாக இருந்த இசையை அடித்தட்டு மக்களின் இசையாக மாற்றியது. இவ்வாறாக, புதிய பாடல் இயக்கம் குரலற்றவர்களின் குரலாகவும், அவர்களது அரசியல் ஆயுதமாகவும் ஆனது. இதன் முக்கியப் பிரதிநிதிகளாக விளங்கியவர்கள்: வயலத்தா பார்ரா மற்றும் விக்தோர் ஹாரா.

‘புதிய பாடல்’ இயக்கம் அறுபதுகளில் சீலேயில் நிகழ்ந்த மக்கள் எழுச்சியுடன் தொடர்புடைய இணை நிகழ்வாகவே அமைந்தது எனலாம். 1969ஆம் ஆண்டு, Puerto Montt என்ற ஊரில் வீடற்ற விவசாயிகள் பலர் அங்கிருந்த வெற்று நிலத்தில் குடிசை கட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களை அடித்து விரட்டி குடிசைகளைக் கொளுத்தும்படி போலீசுக்கு உத்தரவிட்டார் உள்துறை மந்திரி. தாக்குதலில் 7 அப்பாவி விவசாயிகள் கொல்லப்படுகின்றனர். பிறந்து ஒன்பது மாதமே ஆன ஒரு சிசுவும் அதில் அடக்கம். அப்போது Preguntas por Puerto montt (புவெர்த்தோ மோந்த் பற்றிய சில கேள்விகள்) என்ற தலைப்பில் ஒரு பாடல் எழுதினார் விக்தோர். அதில் வரும் ஒரு வரி: ‘‘கறைபடிந்த உன் கரங்களைக் கழுவ (சீலேவின்) தெற்கில் பெய்யும் அவ்வளவு மழையும்கூடப் போதாது...’’

அடித்தட்டு மக்களால் விக்தோர் எந்த அளவு விரும்பப்பட்டாரோ அதே அளவுக்கு வலதுசாரிகளின் வெறுப்புக்கும் ஆளானார். அதனால் ஒருமுறை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது வலதுசாரிகளால் அனுப்பப்பட்ட ரவுடிகளால் தாக்கப்பட்டார்.

மக்களை ஒடுக்குகின்ற ராணுவமாக இருந்தாலும், அதிலும் வர்க்க முரண்பாடுகள் இருப்பதை அவதானித்தார் விக்தோர்.

சிப்பாயே, என்னைச் சுடாதே. என்னைச் சுடாதே...
உன் கைகள் நடுங்குவது எனக்குத் தெரியும்.
என்னைக் கொன்று விடாதே.
நான் உன் சகோதரன்.

அவரது மகள் அமாந்தாவுக்கு நீரழிவு நோய் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவர் பாடிய பாடல் ஒன்றும் மிகவும் பிரபலமானது.

எனக்கு ஞாபகமிருக்கிறது அமாந்தா
தெருக்களில் மழைபெய்து கொண்டிருக்கும்போது
மானுவேல் வேலைசெய்யும்
தொழிற்சாலையை நோக்கி நீ ஓடுவாய்.
வாய் நிரம்பிய சிரிப்புடன்.
உனக்கு அப்போது வேறு எதுவும் முக்கியமல்ல.
நீ அவனைச் சந்திக்கப் போகிறாய்
வெறும் ஐந்தே நிமிடங்கள்
உன் வாழ்வே
அந்த ஐந்து நிமிடங்கள்தான்
சைரன் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது
மீண்டும் தொழிற்சாலைக்குள்
திரும்பிச் செல்லும் நேரம்.
திரும்பி நடந்து செல்லும்போது
எல்லாவற்றையும் நீ ஒளிரச் செய்து விடுகிறாய்
அந்த ஐந்து நிமிடங்கள்
உன்னை ஒரு மலராக மாற்றிவிடுகிறது.

டாக்டர் அலெந்தே அதிபர் தேர்தலில் நின்றபோது அவருக்காக ஊர் ஊராகச் சென்று, பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளுக்கும் போலீஸ் தடியடிக்கும் நடுவில் நின்று கொண்டு பாடினார் விக்தோர். அப்போது அவரது தோழர் ஒருவர் கொல்லப்பட்டபோது பாடிய பாடல் இது:

நகரத் தெருக்களினூடாக வேலைக்குச் செல்லும்போது
நான் உன்னை நினைத்துப் பார்க்கிறேன்
புகை படிந்த ஜன்னல்களில் தெரியும்
முகங்களைப் பார்க்கும்போதும்
நான் உன்னை நினைத்துப் பார்க்கிறேன்
அவர்கள் யாரென்பது தெரியாது
என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது.
நான் உன்னை நினைத்துப் பார்க்கிறேன்
என் வாழ்வின் தோழனே
என் எதிர்காலம்,
இந்தக் கணத்தின் கசப்பு,
உயிரோடு இருப்பதன் சந்தோஷம்
இந்த எல்லாவற்றிலும் நீ இருக்கிறாய்.
இவ்வாறாக -
ஒரு கதையின் ஆரம்பத்தை
எழுதிக் கொண்டிருக்கிறேன் -
அதன் முடிவு தெரியாமல்.

*******

‘You cannot have a revolution without songs’ என்ற வாசகம் டாக்டர் அலெந்தேயின் கூட்டங்களில் அவருக்குப் பின்னே தொங்கவிடப்படுவது வழக்கம். சீலேயின் அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக இசையின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வாசகம் அது.

இசை என்றால் சினிமாப் பாடல் என்றும், அதில் ஈடுபடுபவர்களே இசை மேதைகள் என்றும் கருதப்படும் ஒரு சமூகம் இது என்ற பிரக்ஞையுடனேயே இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இசை என்பது ஒரு துறை சார்ந்த அனுபவம் என்ற கால கட்டம் முடிந்துவிட்டது. இப்போது இசை என்றால் அதனோடு கூடே அரசியல், மானுடவியல், பூகோளம், கணிதம், வான சாஸ்திரம், பௌதிகம், கட்டிடக்கலை என்று பல்வேறு துறைகளையும் பற்றிப் பேச வேண்டியுள்ளது. கிரேக்க இசைக் கலைஞர் Lannis Xenakis ஐக் கேட்கும்போது கணிதத்தின் Probability theory பற்றிய பேச்சு வருகிறது. இது எல்லாம் இந்த இசைப் பயணத் தொடரில் இருக்கும்.

மேலும், பிற கலைத்துறைகளைப் பற்றி நாம் மற்றவர் மூலமாகக்கூட கேட்டறிந்து கொள்ள முடியும். ஆனால் இசையை மட்டும் நாமே கேட்டால்தான் உண்டு. சுய அனுபவத்தை வேண்டி நிற்கும் ஒரு கலை: இசை. ஆதி சங்கரர் தன்னுடைய அத்வைத தத்துவத்தை நிலை நாட்டுவதற்காக பல விற்பன்னர்களுடன் சம்வாதம் புரிந்ததுண்டு. விவாதத்தில் தோற்றவர் ஆதி சங்கரரின் சிஷ்யராகிவிட வேண்டும் என்பதும், சங்கரர் தோற்றால் அவர் தனது சன்னியாசத்தையே விட்டு விட வேண்டும் என்பதும் விவாதத்தின் நிபந்தனைகள். அப்படி ஒரு முறை சங்கரர் மீமாம்ச தத்துவத்திலும் வேதங்களில் நியமங்கள் எனப்படும் கர்ம காண்டத்திலும் விற்பன்னரான மந்தன மிஸ்ரருடன் சம்வாதம் செய்ய நேர்ந்தது.

சங்கரர் ஞான காண்டத்தில் நிபுணர், மந்தன மிஸ்ரரின் பத்தினியான உபய பாரதி நடுவராக இருப்பார் என்பது ஏற்பாடு. உபய பாரதியும் தத்துவத்தில் தேர்ந்தவர். விவாதம் 15 நாட்கள் தொடர்கிறது. முடிவில் மந்தன மிஸ்ரர் தோற்பதால் அவர் சங்கரரின் சீடராகி விடுகிறார். இருப்பினும் உபய பாரதி சங்கரரை விடுவதாக இல்லை. அவர் விவாதத்தைத் தொடர்கிறார். அப்போது அவர் சங்கரரிடம் காம சாஸ்திரத்தைப் பற்றியும், ஆண் பெண் இருவருக்கிடையிலான பாலியல் உறவு பற்றியும் கேட்கிறார்.

சங்கரரோ ஒரு துறவி. ஸ்த்ரீ சுகம் பற்றி அறியாதவர். ஆனால் உபய பாரதியின் கேள்விக்குப் பதில் கூறாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு சந்நியாசத்தைத் துறக்க வேண்டும். அச்சமயத்தில் அந்த ராஜ்யத்தின் அரசன் மரணப்படுக்கையில் கிடக்கிறான். எனவே, சங்கரர் அந்த அரசனின் உடலில் பரகாயப் பிரவேசம் செய்வதென்று முடிவு செய்து அவன் உடலில் புகுந்து அவனுடைய பத்தினிகளுடன் சல்லாபித்து வாழ்ந்து, தான் யார் என்பதை மறந்து போகிறார். அப்போது அவரது சீடர்கள் பஜ கோவிந்தத்தை பாட ஆரம்பிக்கவும், சங்கரர் சுய நினைவு பெற்றுத் திரும்பவும் தனது உடலில் குடியேறி பாரதியின் கேள்விகளுக்குப் பதில் கூறுகிறார்.

இந்தக் கதையை நான் இங்கே குறிப்பிடுவதன் காரணம், இசை ரசனை என்பது காம சாஸ்திரம் போன்றது. எனவே இசையை ரசிக்கவும், துய்க்கவும் நாம் பரகாயப் பரவேசமாவது செய்துதான் அதை அனுபவிக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com