Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

அம்மன் வரலாறே சோகமான வரலாறுதான் - ஆ. சிவசுப்பிரமணியன்
சந்திப்பு: முத்தையா வெள்ளையன்

(பேரா. நா. வானமாமலையின் மாணவரான இவர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் உறுப்பினர். கால்கள் தேயத்தேய ஊர்களையும், கிராமங்களையும் தேடித் தேடி பயணம் செய்து மக்களின் பண்பாட்டு விழுமியங்களைச் சேகரித்து மார்க்சிய ஆய்வு முறையில் முடிவுகளை மேற்கொள்பவர். அவரை உங்கள் நூலகத்திற்காகச் சந்தித்தபோது...)

நாட்டுப்புற ஆய்வு என்பது என்ன?

நாட்டுப்புறம் என்ற சொல்லைவிட நாட்டார் வழக்காற்றியல் என்பதுதான் சரியான சொல்லாக இருக்கும்.

நாட்டார் வழக்காற்றியல் என்பது நாட்டார் வழக்காறுகளைப் பற்றிய கல்வி அல்லது ஆய்வு என்று சொல்லலாம். நாட்டார் வழக்காறு வேறு. நாட்டார் வழக்காற்றுஇயல் அல்லது நாட்டார் வழக்காற்று ஆய்வு என்பது வேறு.

நாட்டார் வழக்காறு என்பது மனிதன் தோன்றியதிலிருந்து இன்றைய வரைக்கும், மனிதனோட சேர்ந்து வளர்ந்துகிட்டே இருக்கிறது. மறைஞ்சுசிட்டேயும் இருக்குது. ஆனால் அதே நேரம் நாட்டார் வழக்காறு என்பது வெறும் கடந்த காலம் மட்டுமல்ல. நிகழ்காலத்திலேயும் புதுசுபுதுசா நாட்டார் வழக்காறுகள் தோன்றும். உலகத்தில் உள்ள பல நாடுகளில் மார்க்சியவாதிகள் பல முக்கியமான பணிகளைச் செய்திருக்காங்க. இ. பி. தாம்சன் என்ற மார்க்சியவாதி சொல்லும்போது இங்கிலாந்தில் நாட்டார் வழக்காற்றுத் துறையில் முதன் முதல்ல ஈடுபட்டவங்க கம்யூனிஸ்ட்கள்தான், என்கிறார்.

இந்தியாவில் பி.ஜி.ஜோஷி இதைப்பற்றிக் கொஞ்சம் பேசத் தொடங்கினார். அவர்தான் பேரா.நா.வானமாமலையைத் இந்தத் துறைக்குக் கொண்டு வந்தவர்.. 1959 அல்லது 1960 - என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் என்று என். சி. பி. எச். வெளியீடாக ஒரு சிறு நூல் வந்தது. அந்த நூலில் இதைப் பற்றிப் பேரா. நா. வா. குறிப்பிட்டிருப்பார். 1857 - இல் சிப்பாய் எழுச்சி நடந்தது. அதனுடைய நூற்றாண்டு 1957 - ல் வந்தது. அப்ப சிப்பாய் எழுச்சி சம்பந்தமாக நாட்டார் பாடல்கள், மற்றும் இந்த நிகழ்ச்சி சம்பந்தமான பாடல்கள் இந்தியாவின் பல பகுதிகளில் சேகரிக்க முற்பட்டார். பி. ஜி. ஜோஷி இதைப் பற்றிப் பேரா. நா. வானமாமலையிடம் பேசுகிறார்! பிறகுதான் இந்த வேலையில் பேரா. நா. வானமாமலை ஈடுபட்டார். பேரா. நா. வா. சேகரிச்ச பாடல்களைச் சிறு நூலாக வெளியிட்டார்கள்.

ஜோஷி கேட்டமாதிரி பாடல்கள் கிடைக்கவில்லை. ஜோஷி பல ஹிந்திப் பகுதிகளில் பாடல்களைச் சேகரிச்சார். ஜான்சி ராணியைப் பற்றிய பாடல்கள், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரைப் பற்றிய பாடல்கள் எல்லாம் 1857 symposim என்ற pph வெளியீடாக வந்தது. அந்தப் புத்தகத்தில் folk songs பற்றிய கட்டுரையும் எழுதி இருந்தார். தமிழ்லே வந்த புத்தகத்திலும் அந்தக் கட்டுரையின் மொழிபெயர்ப்பும் இருக்கிறது. ஒரு வரலாற்றை எழுதுவதற்கு முக்கியமான தரவாகக் கொள்ள முடியும்என்று பி. ஜி. ஜோஷி அதுல சொல்லியிருப்பார்.

நாட்டார் பாடல்கள் என்பன வெறுமனே பாடி மகிழ்வதற்கோ பொழுது போக்குவதற்கோ உரியன அல்ல. அந்தப் பாடல்கள்ல சமூக எதிர்ப்பு இருக்கு. அடித்தள மக்களின் எதிர்பார்ப்புகள் இருக்கு. சில வேலைகளில் இந்த அடித்தள மக்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாத சூழ்நிலையில் அதற்கான கதைகள், பாடல்கள், வசவுகள், பழமொழிகள் ஆகிய வடிவங்களைப் பயன்படுத்தி இருக்காங்க. இந்த மாதிரி எதிர் குரல்களை இதன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டின் உண்மையான சமூக வரலாற்றை எழுத முக்கிய சான்றுகளாக இந்த நாட்டார் வழக்காறுகளைப் பயன்படுத்த முடியும். அதனாலதான் நாட்டார் வழக்காறுகளில் இடது சாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.

இதுவரை சேகரிக்கப்பட்டப் பாடல்கள் ஒரு இடைநிலைச் சாதி அமைப்பின் குரலாக இருக்கிறது. அடித்தள மக்களின் குரலாக இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறதே...


அப்படின்னு சொல்ல முடியாது. நாட்டார் வழக்காறு ஒரு அறிவுப் புலமாக வளர்வதற்கு முன்னால் தமிழ்நாட்டில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஓரளவுக்குக் கல்விப் பின்புலம் உள்ளவர்கள் அல்லது இலக்கியப் பயிற்சி உடையவர்கள். அவர்களைத் தமிழில் முன்னோடிகள்னு சொல்லலாம். அவர்களை நான் குறைச்சு மதிப்பிடவில்லை. கி. வா. ஜெகநாதன், பெ. தூரன், அன்னகாமு, கல்வெட்டு ஆய்வாளர்
தி. நா. சுப்பிரமணியம், மு. அருணாசலம் இவர்கள் எல்லாம் இதில் ஈடுபட்டு இருக்காங்க.

கல்லாதவர்களின் பாட்டுன்னு எல்லாரும் ஒதுக்கி வைச்சதை இவுங்க போய் சேகரிச்சாங்க. அல்லது யாரையாவது விட்டுச் சேகரிக்கச் சொன்னாங்க. சேகரித்ததை நூலா கொண்டு வந்தாங்க. அந்த நூல்களைப் பார்த்தாலே அவர்களின் அணுகுமுறை தெரியும். பெர்சிமாசிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒரு நோட்டுப் புத்தகத்திலே நிறைய பாட்டுகளைச் சேகரிச்சு எழுதி வைச்சுருந்தாரு. அதை அவர் இங்கிலாந்து போகும்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொடுத்தார். அந்த நோட்டுப் புத்தகத்தை வைச்சு என்ன செய்றதுன்னு தெரியாம சென்னைப் பல்கலைக்கழகம், சரஸ்வதி மகால் நூல் நிலையத்துக்குக் கொடுத்துட்டாங்க. சரஸ்வதி மகால் நூல் நிலையம் ஒரு கட்டத்திலே கி. வா. ஜா. வை பதிப்பிக்கச் சொன்னாங்க. அந்தப் புத்தக முன்னுரையில் இடக்கர டக்கரான சொற்களை நீக்கி விட்டேன் என்று கி. வா. ஜா. எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்களின் உள்ள ஆபாசம், நல்லது எது, கெட்டது எது என்று முடிவு பண்ணி தொகுத்து இருக்கிறார். அந்த நூலுக்குக் கொடுத்த தலைப்பு மலையருவி. மலையில் இருந்து கொட்டும் அருவி காற்றாட்டு வெள்ளம் போல் கட்டுக்கடங்காமல் இந்தப் பாடல்கள் செல்கிறது என்ற அர்த்தத்தில் தலைப்புகள் வைச்சுருப்பாங்க.

பெ. தூரன் தொகுத்த தொகுப்புக்குப் பெயர் காற்றிலே மிதந்த கவிதைகள். அன்ன காமு கொடுத்த தலைப்பு ஏட்டிலே எழுதாத கவிதைகள். தி. நா. சுப்பிரமணியம் கொடுத்த தலைப்பு காட்டு மல்லிகை. இப்படிப்பட்ட அணுகுமுறைதான் இருந்தது. இதை அறிவியல் பூர்வமாக அவர்கள் அணுகவில்லை, அதனால் பாடுனவங்க யார்? அவங்க எந்த ஜாதி அப்படின்னு பதிவாகவில்லை. சில பாடல்களில் வட்டாரம் மட்டும் பதிவாயிருக்கும்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 1961 - ல் உருவாக்கப்பட்டபோது பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள்ல ஒண்ணு நாட்டுப்புறவியல் குழு. அதற்கு கன்வீனராகப் பேரா. நா. வானமாமலை இருந்தார். அந்தக் குழுவில கு. சின்னப்ப பாரதி, டேப் சடையப்பன்,s.m. கார்க்கி, s.s போத்தையா போன்றவர்கள் இருந்தார்கள். சேலம் பகுதியில் கு. சின்னப்ப பாரதியும். டேப் சடையப்பனும் பாடல்களைச் சேகரிச்சாங்க. நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில வில்லிசைக் கலைஞர் s.m. கார்க்கி ளு.ளு. போத்தையா ஆகியோர் பாடல்களைச் சேகரிச்சாங்க. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் வந்த முதல் தொகுப்பு அதிக முயற்சி எடுக்காம வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்புக்குத் தோழர் ஆர். நல்லகண்ணு, கொக்கரகுளத்தில் இருந்த ஒரு மருத்துவர், பேரா. நா. வா. வின் மாணவர் ளு.ளு. போத்தையா ஆகியோர் சேகரித்த தொகுப்பாக மட்டும் இருந்துச்சு. அடுத்து வந்த தொகுப்பு மிகப் பெரிய பரந்துபட்ட தொகுப்பாக இருந்தது. பேரா.

நா. வானமாமலை அடிப்படையிலே மார்க்சியவாதியாக இருந்ததால, இந்தப் பாடல்களைப் பாடினவர்கள் உழைப்பு சுரண்டக் கூடாது. அதற்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், அந்தப் பாடல் வழங்கின இடம், பாடியவர் என்பதைப் பதிவு செஞ்சாங்க. ஆனால் இன்றைக்கு அப்படி ஒரு தொகுப்பைத் தொகுத்தா அவுங்க சாதியைப் பதிவு பண்ணனும்.

மணிவாசகர் பதிப்பகத்தில் நாட்டார் பாடல்கள் பற்றிப் பத்துத் தொகுதிகள் வந்துருக்கு. அந்தத் தொகுப்பை எப்படித் தொகுப்பதுன்னு முதல் கூட்டம் நடந்துச்சு. அந்தக் கூட்டத்தில் பாட்டு வழங்கிய இடம், பாடினவர் பெயர், சாதி, வயது, கல்வி தகுதி ஆகியவையெல்லாம் குறிப்பிடனும்னு என்று விதிமுறைகளை உருவாக்கினாங்க. இந்த மாதிரி தொகுப்புகள் வருவதற்கு முன் வந்த தொகுப்பை யாருடைய பாடல்ன்னு சொல்ல முடியாது.

பிராமணர், வேளாளர், பெண்கள் ஆகியோரிடம் பாடல்கள் சேகரித்தால் இரண்டு வகையான பாடல்கள்தான் சேகரிக்க முடியும்னு பேரா. நா. வானமாமலை ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார். தாலாட்டு, ஒப்பாரி போன்ற பாடல்கள்தான் சேகரிக்க முடியும். தொழில் பாடல்கள், அதாவது காதல் பாடல்கள் அவர்களிடம் கிடைக்காது. ஏன்னா இவங்க உடல் உழைப்பிலிருந்து அந்நியமானவங்க. அந்தப் பெண்கள் மற்ற ஆண்களிடம் பேசுவதே ஒழுக்கக் குறைவாக நினைப்பாங்க. குறிப்பிட்ட உறவு வட்டங்களில் உள்ள ஆண்களிடம் மட்டும்தான் பேசுவாங்க.

தொழில் களத்தில் ஆண், பெண் என்று கலந்து வேலை செய்வாங்க. அங்கப் பல புதிய உறவுமுறைகள் ஏற்படுகிறது. மதனி, கொழுந்தியா, கொழுந்தன், மச்சினன் உறவுமுறைன்னு இருக்கும். இந்த உறவு முறைகளில் கேலி பண்ணிக் கொள்வது என்பது இந்தப் பண்பாட்டில் சாதாரணமானது. இதுல தெம்மாங்குப் பாடல்கள், காதல் பாடல்கள் வருது. ஆனா தமிழ்ல தனியாகக் காதல் பாடல்கள் கிடையாது. தொழில் பாடலுக்குள்ள காதல் பாடல் வருது. யார் உடல் உழைப்பைச் செய்யறாங்கன்னு தெரிய வருது. பிற்படுத்தப்பட்ட சாதியினரும், தலித்துகளும்தான் உடல் உழைப்பு செய்றாங்க. நாட்டார் பாடல்களில் உழைக்கும் மக்களின் பிரதிபலிப்பு அதிகமாக இருப்பதைக் காணலாம்.

பொதுவா கதை சொல்கிற போக்கு குழந்தைகளைத் தூங்க செய்வதற்கும் சாப்பாடு ஊட்டுவதற்கு உயர்சாதி அமைப்பினர் பயன்படுத்துறாங்க. உழைக்கும் மக்கள் தொழில் களத்தில் கதை சொல்லும் போக்கு இருக்கிறது. வேலை செஞ்சிட்டு, சாப்பிட்ட பிறகு ஓய்வு எடுக்கும் போது கதை சொல்கிற பழக்கம் இருக்குது. நடவு நேரத்திலே கதை சொல்ல மாட்டாங்க. ஏன்னா வேலை ஓடாது. களை எடுக்கும் போது. களத்து மேட்டிலேயும் கதை சொல்கிற போக்கு இருக்கு.

இந்த மாதிரி நாட்டுப்புறச் சூழல் எல்லா நாடுகளில் இருக்குமா?

எல்லா நாடுகளிலும் இந்த மாதிரி சூழல் இருக்கும். பாடல்கள் இல்லாம இருக்கும். பாடல்கள்னு சொல்றத விட வழக்காறுகள் இல்லாம இருக்கும். உதாரணமாகச் செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் மாவட்டம்ன்னு பெயர். அங்க ஏரி பாசனம் மட்டுமில்லாம, அந்த ஏரியில் தண்ணி இருக்கிறதனாலே நிலத்தடி நீர் அதிகம். கிணற்று நீர் பாசனமும் உண்டு. ஏற்றம் என்ற கருவியைப் பயன்படுத்துறாங்க. டாக்டர் குருவிக்கரம்பை சண்முகம் வந்து ஏற்றப் பாடல்களைதான் ஆய்வு செஞ்சாரு. நூற்றுக்கணக்கான ஏற்றப் பாடல்களைச் சேகரிச்சாரு. இப்ப ஏற்றப் பாடல்கள் பாடப்படுவதில்லை. ஏதாவது பழைய ஆட்களிடம் கேட்டா கிடைக்கும். ஏன்னா பம்பு செட் வந்துருச்சு. ஏற்றப் பாடல்கள் மறைஞ்சுருச்சு. சென்னையிலே கானா பாடல்கள் என்று புதுவகை உருவாயிருக்கு. இந்த மாதிரி பல வழக்காறுகள் தோன்றும், மறையும். அல்லது மாற்றமடையும்..

நாட்டார் வழக்காறுகளை அரசியல் படுத்தவில்லைன்னு சொல்றாங்க. இந்த வழக்காறுகளை ஹிட்லர் பயன்படுத்தியதை உதாரணமாகச் சொல்கிறார்களே..

நாட்டார் வழக்காற்றியலை யாரும் எதுக்கு வேண்டு மானாலும் பயன்படுத் தலாம். இடது சாரி களும் வலது சாரிகளும் பயன்படுத்தலாம். ஹிட்லர், முசோலினி ஆகியோர்களும் பயன்படுத்தினார்கள். இடது சாரிகள் சரியாகக் கவனம் செலுத்தவில்லை. பயன்படுத்தவில்லை.

வெ. நா. திருமூர்த்தி, டேப் சடையப்பன்,s.m. கார்க்கி போன்ற வர்கள் இடதுசாரி நிலையில் நாட்டார் பாடல்களைப் பயன் படுத்திக் கொண்டனர். பட்டுக்கோட்டையிடம் கூட இந்தத் தாக்கம் உண்டு. பிச்சைக்குட்டி, அவர்களின் பொருளாதார நிலை யினால் திருவடுதுறை ஆதினத்தின் வில்லிசைக் கலைஞராக இருந்தார். அதே நேரம் நாட்டார் வழக்காற்றின் கூறுகளைக் கொண்டு வந்து, முற்போக்கான கருத்துக்களைக் கூறினார். இந்த மாதிரி கலைஞர்களின் தனி மனித முயற்சியா செய்து இருக்காங்க. ஆனா ஒரு இயக்கமாக வளரவில்லை. அது தம் முடைய தவறே தவிர நாட்டார் வழக்காற்றின் தவறு இல்லை. வழக்காற்று விஷயங்களை ஓர் அருங்காட்சியகப் பொருளாகப் புனிதமாக மாற்றுகிற போக்கும் இருக்கு. வழக்காறுகளைச் சேகரிப்பதே, அந்த வழக்காறுகளின் துணையோடு இந்தச் சமூகத்தை மாற்றம் செய்ய முடியுமான்னு பார்க்கணும். அடுத்துக் கடந்தகால வரலாற்றில், நமக்கு எழுதப்பட்ட வரலாற்றில் கிடைக்காத சில உண்மைகள் கிடைக்குமா என்று பார்க்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அந்தக் காலத்தில் யாரும் வரலாற்றை எழுதினது இல்லை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வரலாற்றை எழுதுவதற்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்காறிலிருந்து தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டார் வழக்காறுகளைக் கடந்த காலத்துக்கும் பயன்படுத்த முடியும். எதிர்காலத்திற்காக நிகழ்காலத்திலும் பயன்படுத்த முடியும்.

சிறு தெய்வ வழிபாடுகளை எப்படி எடுத்துக் கொள்வது?

இந்த வார்த்தையையே நான் ஆட்சேபிக்கிறேன். சிறு தெய்வம்னு சொன்னாலே அற்பமான தெய்வம்ன்னு சொல்றாங்க. இந்தச் சொல்லே மேட்டுக்குடிகாரங்க உருவாக்கின சொல். இதைக் கிராம தெய்வம்னு சொல்லுங்க. அல்லது நாட்டார் தெய்வம்னு சொல்லுங்க. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலிருந்து பம்பாயில் குடி பெயர்ந்து இருக்காங்க. அங்க எல்லா தெய்வமும் இருக்கு. தென் மாவட்டத்தில் உள்ள சுடலைமாடன் சாமி, கோவை மாவட்டத்தில் உள்ள அண்ணன்மார் சாமி, சென்னை நகரில் இருக்கிற தெய்வங்களைப் பார்க்கலாம். இந்தத் தெய்வங்களை வைத்து எந்த எந்த மாவட்டத்திலிருந்து மக்கள் குடி பெயர்ந்து இருக்காங்கன்னு நாம கண்டுபிடிக்க முடியும். இந்தத் தெய்வங்களை அவுங்க ஏத்திகிடாம போனதால அற்பமான தெய்வமுன்னு சொல்லிடறாங்க.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையான வழிபாட்டுமுறை முக்கியமானது தெய்வம்னு சொல்றது முழுவதும் மனிதர்களாக இருந்து கொலை செய்யப்பட்டவர்கள். இதற்கு நான் பயன்படுத்திய வார்த்தை கொலையில் உதித்த தெய்வங்கள். அதைப் பற்றி என். சி. பி. எச். வெளியிட்ட பூச்சியம்மன் வில்லுப்பாட்டிலே நான் 9 காரணங்கள் குறிப்பிட்டிருக்கிறேன். ஏதாவது காரணங்களுக்காக இவர்கள் கொலை செய்யப்பட்டு, பின்னர் தெய்வமாக்கப் பட்டு வணங்கப்பட்டனர். ஒரு சமூக வரலாற்றில் நிலவுடைமைக் கொடுமை தமிழ்நாட்டில் எப்படி இருந்தது என எழுது வதற்குப் பயன்படுகிறது. உளவியல் ரீதியாக இந்த வழிபாடுதான் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. நிறுவனமயமான சைவம், வைணவம் மதங்களை விட இதுதான் நெருக்கமாக இருக்கிறது.

எந்தச் சாதியைச் சேர்ந்த சராசரி கிராமத்துச் சனங்களும், திருமணத்தில் முதல் வெற்றிலைப்பாக்கு குலதெய்வத்துக்கு தான் வைக்கிறாங்க. குடும்பத்தில் நல்ல விஷயத்துக்கு குல தெய்வத்துக்காகப் பொங்கல் வைப்பாங்க. திருமணமான ஆணும், பெண்ணும் முதல்ல குல தெய்வ கோவிலுக்குதான் போவாங்க. அவங்க திருப்பதி வெங்கடாஜலபதியையோ அல்லது திருத்தணி முருகனையோ வணங்கலாம். ஆனால் குல தெய்வ வழிபாடு என்பது கட்டாயச் சடங்காக இருக்கிறது. இது வாழ்க்கையோடு இணைந்த ஒன்று.காஞ்சி சங்கராச்சாரியார், இராம. கோபாலன் செல்வாக்குக்கு ஆட்பட்டு இங்கு உயிர் பலி தடைச்சட்டத்தை கொண்டு வந்தாங்க. பிறகு அவுங்களாக அந்தச் சட்டத்தை நீக்கினாங்க. ஒரு அரசு அமைப்புல இருக்கிறவங்க, நமக்கு எதிரானதாக இருக்கிறது என்று கிடைத்த தரவுகளை வைத்துப் புரிஞ்சு கிட்டாங்க. அந்தளவுக்குத் தாக்கத்தை இந்த வழிபாட்டுமுறை ஏற்படுத்தியிருக்கு.

.கரிகாலன் கல்லணை கட்டியதற்கு வரி வசூல் செய்தான் என்று ஒரு கருத்து நிலவுகிறதே...

கல்வெட்டுகளில் காவிரியின் கரையை உயர்த்துவதற்காக, காவிரிக்கரை 9 விநியோகம், என்ற வரியைக் கரிகாலன் விதித்ததாக உள்ளது. வாய்மொழிச் செய்தியாக நாடார்மூகத்தைச் சேர்ந்த சகோதரர்களை மண் எடுத்துக் கரையைக் கரிகாலன் உயர்த்தச் சொன்னதாகவும், அந்தச் சகோதரர்கள் மறுத்தாகவும், அந்தச் சகோதரர்களைக் கொன்றதாகவும், மூத்த சகோதரர் மட்டும் எஞ்சியதாகவும், அந்த மூத்த சகோதரரை மட்டும் இரக்கப்பட்டுக் கரிகாலன் விட்டு விட்டதாகவும், அந்தச் சகோதரர் பத்ரகாளியிடம் முறையிட்டுப் பனங்கொட்டையை பெற்றுக் கற்பதருவை வைத்து வளர்ந்தாங்கன்னு வலங்கைச் சரித்திரம், வலங்கையர் புராணம் ஆகியவைகளில் இந்தச் செய்தி வருகிறது. ஒரு செப்புப் பட்டயத்தில் சோழ மன்னனுக்குப் பதிலாகப் பாண்டிய மன்னன் செய்தி இருக்கு வைகுண்ட சாமியின் அகிலத்திரட்டில் இந்தச் செய்தி இருக்குது.

ஊழியம், வெட்டி, வடமொழியில் விருஷி, ஆங்கிலத்தில் forced labour - ன்னு சொல்லுவாங்க. கட்டாயமாக வேலை செய்யனும். வேலை செய்யலைன்னா தண்டனை உண்டு. ஆனால் ஊதியம் கிடையாது. இப்படித்தான் கோவில்கள், அணைக்கட்டுகளையும் கட்டியிருக்காங்க. இந்தக் கொடுமையைக் கதைப்பாடல்கள்தான் வெளிப்படுகிறது.

இது மாதிரி வேறு செய்திகள்.....

நிறைய இருக்கு. சின்னப்ப பாரதி சேகரிச்ச பாடல் ஒன்றில் உறவு பற்றிச் செய்திகள் இருக்கு. மாமனாருக்கும், மருமகளுக்கும் உறவு ஒரு காலக்கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தாகச் சில சமூகங்களில் இருந்துருக்கு. அதற்கு என்ன காரணம்னு பார்த்தா சொத்துக்கு உரிமையானவன் குடும்பத்தில் மூத்தவனுக்கு மட்டுமே இருந்தது. பெண்ணும் ஒரு சொத்தாகக் கருதிய சமூகத்தில், அப்பாவை அண்ணன் சொல்லக்கூடிய பழக்கங்கள் இப்படியான செய்திகள் வந்துருக்கிறது. ஜமீன் பகுதியில் உள்ள அம்மன்கள், ஜமீன்தாரின் பாலியல் வன்முறை காரணமாக உயிர் துறந்தவங்கதான். அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தவுடன், அந்தப் பெண் குழந்தையைப் பெற்றோர்களே கொன்று விட்டு ஊரை விட்டுச் செல்வது, ஒரு பெண் அரண்மனைக்குப் போவதற்கு முன்போ அல்லது போயிட்டு வந்த பிறகோ தற்கொலை செய்து கொள்வது போன்ற நிகழ்வுகள் உள்ளன. இதன்மூலம் நிலவுடைமைக் கொடுமையை நாம் தெரிந்து கொள்ள முடியும். அம்மன்கள் வரலாறு முழுதும் சோகமான வரலாறுதான்.

இந்த அம்மன்களைப் பார்வதி போன்ற தெய்வங்களோடு சேர்த்துப் பெரிய அம்மன்களாக மாத்திட்டு வருகிற சூழ்நிலையை இப்பப் பார்க்க முடியும். மத மாறிய முன்னோர்களை ஆராய்ந்தால் ஜமீன்தாரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் கிறிஸ்துவர்களாக மாறியிருக்காங்க. அவர்களுக்கு வெள்ளக்காரச் சாமியார் உதவியாக இருக்காங்க. கிறிஸ்துவப் பெண்களிடம் ஜமீன்தார் சேட்டை பண்ண மாட்டார்ன்னு ஒரு நம்பிக்கை இருந்த மாதிரி தெரியுது. மதம் மாறுவது என்பது ஆன்மிகத்திற்காக மட்டுமல்ல. சமூக பாதுகாப்பிற்காகவும் நிகழ்ந்திருக்கு.

கிறிஸ்துவமதத்தில் தீண்டாமையைப் பற்றிப் பாடல்கள் கிடைச்சுருக்கா?

இருந்திருக்கணும். ஆனால் இப்போது கிடைக்கவில்லை.

இஸ்லாமிய சமூகத்தில்...

தர்ஹாக்களில், இது மாதிரி இறந்து போன மனிதர்கள்தான். அவுலியான்னு சொல்லுவாங்க. பெண்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்து போன அவுலியாக்களுக்கு உள்ள தர்ஹாக்கள் நிறைய இங்கு இருக்கின்றன. திருப்பத்தூருக்கும் புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் இந்த வகையைச் சேர்ந்ததாகும். பிராமணப் பெண்களைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறந்த இஸ்லாமியர்கள் அடக்கம் செய்த இடம் தான் கங்கை கொண்டானில் உள்ள தர்ஹா.

நாட்டார் வழக்காற்றியல் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பிறகு வளர்ச்சியடைந்து இருக்கா?

பல்கலைக் கழகத்திற்குச் சென்ற பிறகு, ஒரு தளத்தில் வளர்ச்சின்னு சொல்லாம். நாட்டார் வழக்காறு என்பது படிப்புக்கான ஒரு கருவி, வெறும் அறிவால் மட்டும் பார்க்கக் கூடியது என்று கருதும் பேராசிரியர்களும், அந்தப் பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களும் இருக்கிறார்கள்.

விதி விலக்காக அங்கேயும் சில பேராசிரியர்களும், மாணவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் சமூக மாறுதல்களும் துணை நிற்கக் கூடியவர்கள். இவைகளை இந்த முறைகளில் பயன்படுத்தனும்னு சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த அணுகுமுறையிலதான் உலக அளவில புதியமுறை ஒன்று ஏற்பட்டிருக்கு. Applied Folklore என்று பெயர். பயன்பாட்டு நாட்டார் வழக்காற்றில் என்று தமிழ்ல சொல்லுவாங்க.

நாட்டார் வழக்காற்றில் இரண்டு வகைகளில் பயன் படுத்தலாம். தொலைக்காட்சியில் ஒரு விளம்பரத்திற்குத் திரைப்படத்தில் நாட்டார் இசையைத் திருடிப் பயன்படுத்தலாம். இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு ஊர் ஊராகச் சென்று கற்ற கலையை வித்தை காட்டிப் பிழைத்துக் கொள்ளலாம். உண்மையான கலைஞனைத் தெருவிலே விட்டுடலாம். அல்லது அந்தக் கலைஞனுக்குக் குறைந்த தொகையை ஊதியமாகக் கொடுத்து, இடைத்தரகர்கள் பயன் பெறலாம். இவையெல்லாம் பயன்பாட்டு வழக்காற்றில் ஆபத்தான போக்கு அல்லது எதிர்மறையான போக்குன்னு சொல்லலாம்.

இன்னொன்று, முற்போக்கான இயக்கங்கள், இதனுடைய வடிவத்தை எடுத்துக் கொண்டு உள்அடக்கத்தை மாற்றிக் கொண்டு, பயன்படுத்துகிறார்கள். யார், எதுக்குப் பயன்படுத்து கிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு புனிதப் பொருளாகப் பார்க்காமல் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்க, இந்தப் பயன்பாட்டு வழக்காற்றியல் பயன்படுதுன்னு சொல்லலாம்.

நாட்டார் வழக்காற்றில் அறிவியல் பூர்வமாகச் சேகரிக்கப்படுகிறது. ஆவணக் காப்பகத்தில் முறையாகப் பாதுகாக்கப்படுகிறது. பிறகு வெளியிடப்படுகின்றது. வரலாறு, மானுடவியல், சமூகவியல், இலக்கியம் போன்ற துறைகளோடு இணைஞ்சு ஆய்வு செய்யக் கூடிய சூழலும் இருக்கிறது. இந்தச் சூழலுக்கு முக்கிய காரணம் நாட்டார் வழக்காற்றியல் ஒரு துறையாகச் செயல்படுவதால்தான் முடிந்தது. அதே நேரம் வெறும் அறிவுசார் துறையாக மட்டும் பார்த்து (சமூக பயன்பாட்டை) ஒதுக்குகிற ஆபத்தும் உண்டு. இந்த ஆபத்துக்காக அறிவுத்துறையாக ஆக்காம இருக்க முடியாது.

உலகமயமாக்கல் சூழ்நிலையில் நாட்டார் வழக்காற்றியல் எப்படி எதிர் கொள்ளும்?

மனிதனுக்கு அடிப்படையான கல்வி, தண்ணீர், மருத்துவம் போன்றவைகள் வணிகமயமாகிவிட்டன. இப்படிப் பட்ட சூழலில் எந்த அறிவுத் துறையும் தப்ப முடியாது. நாட்டார் மருத்துவத்திற்கும் சித்த, ஆயூர்வேத மருத்துவத்திற்கும் தொடர்புகிடையாது. பாட்டி வைத்தியம்தான் நாட்டார் மருத்துவம். பாட்டிகளுக்கு நாடி பார்க்கத் தெரியாமல் இருக்கலாம். காய்ச்சல், வயிற்றுப்போக்குப் போன்ற நோய்களுக்கு அஞ்சரைப்பெட்டி வைத்தியம்ன்னு சொல்லி மருந்து கொடுப்பாங்க. இந்த மாதிரி மனிதர்கள் முறையாக மருத்துவம் படித்தவர்கள் அல்ல. ஆனால் இவர்கள் மனிதர்களுக்கு, மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கிறவங்க. இந்த அறிவைப் பதிவு செய்யக்கூடிய ஆபத்து இருக்கிறது. வேம்பு, மஞ்சள் போன்றவைகளுக்குக் காப்புரிமை வடிவத்தில் ஆபத்து வந்த மாதிரி இதற்கும் வரலாம். ஒரு காலத்தில் பறை என்ற இசைக்கருவி சைவ, வைணவ கோவில்களில் பயன்படுத்தப் பட்டிருக்கு. அதற்கான சிற்பங்கள் கோவில்களிலே இருக்கு. சங்கஇலக்கியத்தில் ஒவ்வொரு நிலத்திற்கும் பறை சொல்லப்பட்டிருக்கு. இடைக்காலத்தில் பார்ப்பனியம் செல்வாக்குப் பெற்றக் காலத்தில், பறை தீட்டுக்குரியதாக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்டது. பிறகு பறை என்பது எழுச்சிக் குரலாக மாறுகிறது. இப்பப் பறை இசை திரைப்படத்திலும், தொலைக்காட்சி தொடரிலும் பயன்படுத்துகிறார்கள். தெருக்கூத்தை இப்போது மேட்டுக் குடியினர் பயன்படுத்துகின்றனர். இப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று அதையெல்லாம் கற்காமல் இருக்க முடியாது.

ஒப்பிலக்கிய ஆய்வுமுறை போன்று நாட்டார் வழக்காற்றில் சாத்தியமா?

இலக்கியத்தில் ஒப்பிலக்கிய ஆய்வு போன்று செய்ய முடியாது. பழமொழிகளை ஒருத்தர் ஆய்வு செய்கிறார் என்றால் இரண்டு சாதிகளிடையே வழங்கும் பழமொழிகள், இரண்டு வட்டாரங்களில், இரண்டு மொழிகளுக்கு உள்ள பழமொழிகள், ஆய்வு செய்யலாம். நாட்டார் வழக்காற்றுக்கு, அந்த வழக்காறுகளைச் (வழங்கக்கூடிய) சூழலோடு இணைத்துப் பார்க்க முடியும். வழக்காறுகளுக்கு அர்த்தம் எப்ப முழுமையாக் கிடைக்கும்னா அந்தச் சூழலோடு இணைத்துப் பார்க்கும் போதுதான் கிடைக்கும். வழக்காறுகளின் துணையோடு ஒரு வரலாற்றை உருவாக்க முடியும். வரலாற்றின் துணையோடு வழக்காறுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

பாடல்களைப் பாடினவங்க பெயர், சாதி எல்லாம் சேர்த்து இருக்காங்க. இது அடையாள அரசியல் அறிமுகமான பிறகா?

இல்லை. சாதிக்குச் சாதி பழக்க வழக்கங்களில் வேறுபாடு இருக்கு. பண்பாட்டு நிலை களில் உணவு வகை களில் வேறு பாடு இருக்கு. வழக் காறுகளைப் புரிந்து கொள்ள இந்தப் பின்புலங்கள் தேவை யாக இருக்கு. இதெல் லாம் அடையாள அரசியலுக்கு முன்னாலே வந்தாச்சு.

இதுனால சாதி மீட்டுருவாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்காதா?

எதையும் எப்படியும் பயன்படுத்தலாம். அச்சு ஊடகத்தை எடுத்தா, ஏகப்பட்ட சாதிப் பத்திரிக்கைகள் இருக்கிறது. சில பாடல்களை எல்லா சாதிக்காரர்களும் பாடுவாங்க. சில பழக்கவழக்கங்கள் எல்லாச் சாதிக்காரங் களிடையேயும் இருக்கும்.

செந்நெறிக் கலைகளிலிருந்து நாட்டார்களின் கலைகள் உருவாக்க முடியுமா?

இல்லை. நாட்டார் கலைகளிலிருந்து செந்நெறிக் கலைகள் உருவாகுது.

இல்ல.. ஒரு காலத்தில் செவ்வியல் இலக்கியம் இருந்து தேய்ந்து மக்கள் கலை வடிவங்களாக மாறி இருக்கிறது. இலங்கையில் கூட அப்படிச் சில கலை வடிவங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே..

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஒரு செவ்வியல் இலக்கியம். கோவலன் கதைன்னு வேற ஒண்ணு இருக்கு. மாதவியை மிகவும் நுட்பமாக, உயர்வான பாத்திரமாக இளங்கோவடிகள் சித்திரிச்சுருப்பாரு. பழி வாங்குற விஷயத்தில், செவ்வியல் இலக்கியவாதிகள் பெயர் சொல்லமாட்டார்கள். விவிலியத்தில் கைபாஸ் என்கிற ஆள்தான் இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு முன்னிலையில் இருந்தவர்களில் ஒருவன். அவன் என்ன ஆனான் என்று விவிலியத்தில் சொல்லப்படவில்லை. இங்கு உருவான வாசாப்புன்னு என்ற நாடகத்தில் நரகத்தின் அதிபதியான லூசிபர், கைபாஸை நீதான் நரகத்திற்குச் சரியான ஆள் என்று இழுத்துப் போவதாகக் காட்சி இருக்கும். சிலப்பதிகாரத்தின் மூலம் கோவலன் கதை வந்ததா? கோவலன் கதையிலிருந்து சிலப்பதிகாரம் வந்ததா? என்று கேள்வி எழும். வாய்மொழி யாக இருந்த கதையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரமாக எழுத, இதே கதையை வைத்துக் கொண்டே நாட்டார் கதைப் பாடல்கள் உருவாயிருக்கிறது. நமக்கும் மூலம் கிடைக்கவில்லை. இந்த இரண்டுக்கும் மூலம் ஒன்றுதான். அந்த மூலத்தின் மூலம் செவ்வியல் வடிவமும், நாட்டார் வழக்காற்றியல் வடிவமும் கிடைக்கிறது.வாய்மொழிச் செய்திகளை முழுமையான தரவுகளாகப் பயன்படுத்த முடியுமா?

செப்புப் பட்டயம், கல்வெட்டு, இலக்கியம், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகள் ஆகியவை வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்தத் தலைப்புகளில் ஏதோ ஒன்றை மட்டும் எடுத்து வரலாறு எழுதப்படவில்லை. ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்த்து, அதன் பிறகுதான் முடிவுக்கு வருகிறார்கள். அதே விதிமுறை நாட்டார் வழக்காற்றியல் முறைக்கும் பொருந்தும்.

உதாரணத்துக்கு நெல்லை சதி வழக்கை எடுத்துக் கொண்டால் அரசாங்க ஆவணம் இருக்கிறது. இதற்காகப் போராடினவர்களை எல்லாம் குற்றவாளியாகத்தான் அரசாங்கம் சொல்லும். விடுதலைப் போராட்ட வீரர்களாக, உழைக்கும் மக்களின் செயல்பாடாகச் சித்திரிக்காது. இந்தச் சான்றுகளை மக்களிடமிருந்துதான் பெற முடியும். சான்றுகளைப் பெற்ற பிறகு உண்மைகளோடு ஒத்துப்போகிறதா, வேறு ஏதாவது இதைப் பற்றியச் செய்திகளோடு ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். வரலாறு எழுதுவதற்குப் பொதுவாகப் பயன்படும் மரபுவழி ஆவணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து முடிவுக்கு வரலாம். கிடைக்காத இடத்தில் அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்கு, இவைகளை ஆவணமாகப் பயன்படுத்த முடியும்.

கானா பாடல்களை நாட்டார் வழக்காற்றில் சேர்த்துக்கொள்ள முடியுமா?

நாட்டுப்புறவியல் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்த முடியாது. அதற்குக் காரணம், நாட்டுப்புறவியல் என்ற சொல் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. சென்னை, திருவல்லிக்கேணியில் கோலம் போடுகிறது நாட்டார் கலைதான். இதே இடத்தில் அஞ்சரைப் பெட்டி மூலம் வைத்தியம் செய்தால் நாட்டார் வைத்தியம்தான். எல்லையம்மன் வழிபாடு நடக்கும். இது நாட்டார் வழிபாடுதான். இது போன்ற செயல்பாடுகள் நகரத்திலும் இருக்கின்றன.

தூத்துக்குடியில கோரல்மில்ன்னு ஒண்ணு இருந்துச்சு. இந்த மில்ல அமைச்சவங்க ஆர். வி. சகோதரர்கள். அந்த மில்லுக்கு வேலைக்குப் போனவங்க, அந்த மில்லைப் பற்றிப் பாடிய பாடல்கள் பேரா. நா. வானமாமலை தொகுப்புலே வந்துருக்கு. அந்த மில்லில் இருக்கிற புகைப் போக்கி அப்போது மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கிறது.

நூறடி கோபுரமாம்.
நூல் நூற்கும் மில் ஆபிசு
நூல் விலையானாலும்
குமரி விலையாகலையே.


என்ற பாடலில் சந்தையில் நூல் விற்பனையாகி விடுகிறது. ஆனால் மகளுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று வருகிறது. நகர சூழல், வெள்ளைக்கார துரைகளைப் பற்றி எஸ்டேட்டில் பாடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாட்டார் வழக்காற்றின் ஆய்வு சரியான பாதையில் செல்கிறதா?

இந்த நேர்காணலில் கூட அதிகமாகக் கதையையும், பாடல்களையும்தான் பேசி இருக்கிறோம். நாட்டார் வழக்காற்றில் இவை சின்ன அங்கம்தான். நாட்டார் வழக்காற்றியலை நான்காகப் பிரிப்பாங்க. (1) வாய்மொழி வழக்காறுகள். இதில் பாடல், பழமொழி, கதைப்பாடல், விடுகதை, வட்டார சொற்கள் ஆகியவைகள் அடங்கும். (2) சமூகப் பழக்க வழக்கங்கள். (3) நாட்டார் நிகழ்த்தும் கலைகள் இதில ஒயிலாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு அடங்கும். (4) பொருள்சார் பண்பாடு. (material culture) பொருளும், பொருளைச் சேர்த்து ஒரு பண்பாடு இருக்குது. பொருளை மட்டும் தனியாப் பார்க்க முடியாது. சங்க இலக்கியத்தில ‘உண்பது நாழி, உடுப்பவை இரண்டே’ என்று வருகிறது. அப்போ தமிழர்கள் இரண்டு ஆடை உடுத்தி யிருக்காங்க. ஒன்று மேலாடை. இன்னொன்று கீழாடை. இதைச் சங்க காலத்தில் ஆடையின் பயன்பாடு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆடை வகைகளைப் பற்றியும் சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் சொல்லுகின்றன. இவை நம்முடைய நாகரிகச் சிறப்பை உணர்த்துவதற்கு உதவும். ஆனா நாட்டார் சமூகப் பழக்க வழக்கங்களில் இந்தத் துண்டை எப்ப தலையிலே கட்டமுடியும், யார் தலையிலே கட்ட முடியும். யார் தோள்லே போட முடியும், யார் இடுப்பில கட்டணும், யார் கையில போடணும், என்பதில் துண்டுக்குள்ள அடக்குமுறை, ஆதிக்கப்பண்பாடு பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.

உப்பை எல்லோரும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். தென் மாவட்டங்களில் பல சாதியினர் உப்பைப் போட்டுச் சோறு பொங்குவாங்க. சில சாதியினர் உப்பு போடாம பொங்குவாங்க.வேளாண் சமூகத்தில் உடல் உழைப்பவர்கள் தான் உப்பு போட்டுச் சோறு பொங்குவாங்க. இதுக்குக் காரணம், அவர்கள் சோறு பொங்குவது வேலையை முடித்து விட்டு வரும் மாலை வேளைகளில்தான். அந்தச் சோற்றைக் காலையில் தொழில் களத்துக்கு எடுத்துட்டுப் போகணும். அப்பச் சோறு கெட்டுப் போயிடக்கூடாது. சூடா பொங்கிச் சாப்பிடும் உடல் உழைப்பு இல்லாத சாதியினருக்கு இதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை.

உடல் உழைப்பாளிகள் அதிகமாக மோரைப் பயன்படுத்த மாட்டார்கள். அதே நேரம் பிராமணர்கள், வேளாளர்கள் அதிகமாக நல்ல மோரைப் பயன்படுத்துவார்கள். மோர் ஜீரணத்தைக் கொடுக்கக் கூடியது. உழைக்கும் மக்களுக்கு உழைப்பே ஜீரணத்தைக் கொடுத்து விடுகிறது. இவர்களுக்கு மோரையும் சேர்த்துச் சாப்பிட்டால் சீக்கிரம் பசி வந்துவிடும். பொருள்சார் பண்பாடுங்கிறது தமிழ்நாட்டின் சமூக வரலாற்றுக்கு மிகவும் இன்றியமையாதது. தமிழ்நாட்டில் நாட்டார் வழக்காற்றில் அதிகமாகப் பொருள்சார் பண்பாடு பற்றி ஆய்வு செய்யப்படவில்லை.

காலனி ஆட்சியில் சுதந்திரப் போராட்டப் பாடல்களைத் தவிர வேறு என்ன மாதிரியான பாடல்கள் உள்ளன?

வெள்ளைக்காரர்கள் தொடர்பு எங்கெங்கு இருக்கோ, அங்கு எல்லாம் பாடல்கள் உருவாயிருக்கு. தோட்டத் தொழிலுக்காகக் கடல் கடந்து சென்ற இடங்கள், இங்குத் தேவி குளம், பீர்மேடு போன்ற பகுதிகளிலும் பாடல்கள் இருக்கின்றன. அதிகமாகப் பாலியல் வன்முறை பற்றிச் சொல்லப்படுகிறது. அடித்து வேலை வாங்கும் முறை, ஆஷ்துரை செல்லும்போது குறுக்கே யார் சென்றாலும் அடிப்பான் போன்ற செய்திகளும் உள்ளன.

கிறிஸ்துவத்திற்கு மாறின பின்பு பிற்காலப் பாடல்கள் உள்ளனவா?

கிறிஸ்துவத்தைத் தமிழ் மரபுகளில் உள்வாங்கிய நிறைய பாடல்கள் உள்ளன. இயேசு தகப்பனாரோடு தச்சுவேலை செய்றது, வேலை செஞ்சு பெற்றோர்களுக்குக் கஞ்சி ஊத்துவது, போன்ற செய்திகளும், கிறிஸ்துவ தாலாட்டுப் பாடல்களும் உள்ளன.

இஸ்லாமியர்களைப் பற்றி...

இருக்கு. ஆனால் சேகரிக்கப்படவில்லை. ஏன்னா, பெரும்பாலான சமூகங்களில் வழக்காறுகளுக்குச் சொந்தக்காரங்க பெண்கள்தான். நாம போய் இஸ்லாமியப் பெண்களைச் சந்தித்து வழக்காறுகளைச் சேகரிக்க முடியவில்லை. பெண் ஆய்வாளர்கள் இதில் ஈடுபடும் போது இது சாத்தியப்படலாம்.

இலங்கையில இஸ்லாமியப் பாடல்கள் உள்ளன. தொழில் பாடல்கள் அதாவது காதல் பாடல்கள், ஹஜ் யாத்திரைச் சமூகத்தில் பெரிய மனிதனாகப் போற்றப்படுகிறவன் உண்மையில் மிக மோசமான பழக்கத்தைக் கொண்டவனாக இருப்பது பற்றிக் கேலி செய்கிற பாடல்கள் நூல்களாக வெளியாகியுள்ளன.

ஆறு பெருகிப் போனாலும் லெப்பைக்கு இரண்டு பொணம்னு இங்குச் சொல்வாங்க என்ற பழமொழிகளும் யார் தாலி அறுத்தாலும் லெப்பைக்கு இரண்டு பொணம்னு அர்த்தம்.

விடுதலைப் போராட்டத்தைத் தவிர மற்ற அரசியல் போராட்டங்களைப் பற்றி...

தஞ்சை மாவட்ட விவசாயிகளைப் பற்றி நிறைய பாடல்கள் இருக்கு. அதைச் சேகரிக்காமல் விட்டுட்டோம். இப்ப அப்பணசாமி சில பாடல்களைச் சேகரிச்சுக் கொடுத்திருக்கிறார். பண்ணையார்களின் ஆதிக்கம் மிகுந்து இருந்த காலத்திலே வயலில் பெண்கள் வேலை செய்யும் போது. சேலையை முழங்காலுக்கு மேலேதான் கட்டணும். கணுக்காலுக்குக் கீழே கட்டக் கூடாது. அப்படிச் சேலையக் கட்டுனா, ஒரு வட்டம் போட்டு, அந்த வட்டத்தக்குள்ள அந்த பெண்ணை நிற்க வைத்துக் கணுக்காலில் பெரம்பால் அடிப்பார்களாம். அடி வாங்கும் போது ஐயோன்னு கத்தக் கூடாது. ஐயான்னு பண்ணையாரைப் பார்த்துக் கத்துணுமாம். ஐயோன்னு கத்துனாலோ, அந்த வட்டத்தை விட்டுக் கொஞ்சம் மாறினாலோ கூட அடி விழுமாம். அந்தக் கால கட்டத்திலே விவசாய சங்கம் ஆரம்பிச்சு மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றத்தைப் பற்றி முழுப் பாடல் இருந்திருக்கு. ஆனா இரண்டு வரிதான் எனக்குச் சமீபத்தில் கிடைத்திருக்கு.

முழங்கால் வரை இருந்த சேலையைக்
கணுக்கால் வரை இழுத்து விட்டது யாரு
அது மணலி கந்தசாமி என்று கூறு.

இப்ப உள்ள அரசியல் நிலைமைகள் பற்றி..

எமர்ஜென்சி பற்றி, ராஜீவ் இறந்து போனது அரசியல்வாதிகள் பற்றியெல்லாம் ஜோக்ஸ், துணுக்குச் செய்திகள், இது மாதிரி நிறைய உருவாகிகிட்டே இருக்கு. இவைகளையும் s.m.s செய்திகள் எல்லாவற்றையும் நாட்டார் வழக்காற்றியலில்தான் சேர்க்கணும். நாட்டார் வழக்காற்றியலில் பாடல்கள்தான்னு ஒரு பிம்பம் இருக்கு. இப்ப கொஞ்சம் விடுபட்டு வருது. இதில் அதிகமாக ஆய்வு செய்யப்பட வேண்டியது பொருள்சார் பண்பாடுதான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com