Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

காந்தியின் உடலரசியல்
ராமாநுஜம்

காலனியச் சூழலில் காந்தி கடைப்பிடித்த பிரம்மச்சரியம், அவர் முன்வைத்த உடலரசியல், அவர் உருவகித்த ‘இந்தியத் தாய்’ இவைகள் குறித்த மாற்றுப் பார்வையொன்றை இக்குறுநூலில் தோழர் ராமாநுஜம் முன்வைத்துள்ளார். சதத் ஹஸன் மாண்டோவின் மிகச் சிறந்த சிறுகதை தொகுப்பொன்றை தமிழ்ச் சூழலுக்கு மொழியாக்கி அளித்த அவருக்கு நமது அறிமுகங்கள் தேவையில்லை.

நூலிலிருந்து சில பகுதிகள்....

சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன் நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை அணியாமல் அம்பேத்கர் ஜாதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி இருக்க முடியாது. கலாசாரத்தில் ஒதுக்கப்பட்ட கறுப்பு நிறத்தைக் கொண்டாடாமல் பெரியாரியம் சாத்தியமில்லை.

இதை வைத்து நாம் சூத்திரங்களை உருவாக்க முடியாது என்றாலும் உள்ளடக்கத்திற்கும், வடிவத்திற்கும் உள்ள இணைவை நாம் போற்ற முடியும். இந்த உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவைக் காந்தி ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றார். உடலின் சாத்தியங்களை இதற்குமுன் வரலாற்றில் காணாத அளவிற்கு விரிவுபடுத்தினார்.

அரசியல் போராட்டம் ஆகட்டும், ஆன்மிகச் சிந்தனையாகட்டும், சமூகச் சீர்திருத்தங்கள் ஆகட்டும், அறிவியல் விஞ்ஞான தொழில் நுட்பச் சிந்தனையாகட்டும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தன் உடலையே காந்தி மையப்படுத்தினார். காந்தி முன்வைத்த உடல் என்பது மதங்கள் போற்றிய வரையறைகளுக்கு வெளியே இருந்தது. அது காலனியம் முன்வைத்த உடலை நிராகரித்தது. இந்தியத் தேசிய எழுச்சி முன்வைத்த ஆண் - மைய உடலை மறுத்தது. காந்தியின் உடல் வரலாற்றிலிருந்தும், கருத்தாக்கத் தளத்திலிருந்தும் தனிமனிதனின் உடலை விடுதலை செய்ய முயற்சித்தது. காந்தி உடலின் சாத்தியங்களை விரிவுபடுத்த முயற்சித்த அதே வேளையில் அதன் எல்லையையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

காந்தியின் உடலை நாம் இரண்டு தளங்களில் வைத்துப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

1. சமூக, கலாச்சார அரசியல் தளத்தில் காந்தியின் உடல் (காலனிய எதிர்ப்பும் தேசியக் கட்டமைப்பும்)
2. பிரம்மச்சரிய பரிசோதனைகளில் காந்தியின் உடல்

காந்தியை முழுவதுமாக ஏற்பதும் சாத்தியமில்லை, நிராகரிப்பதும் சாத்தியமில்லை. நேரு, அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களை ஒரு சாரார் முழுமையாக ஏற்பதும் மற்றொரு சாரார் முழுமையாக நிராகரிப்பதும் சாத்தியப்படுகிறது. காந்தியைப் பொறுத்தமட்டில் இது சாத்தியப்படாமலே போகிறது. காந்தியின் அரசியல் அறத்தைப் போற்றியவர்கள் அவருடைய பிரம்மச்சரியப் பரிசோதனையை ஏற்க மறுத்தார்கள். அவருடைய சமூகப் பார்வையை விமர்சித்தவர்கள் அறத்தை மையமாக வைத்த அவருடைய அரசியலைப் போற்றினார்கள். காந்தியின் மத நல்லிணக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அவருடைய சாதி நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை விமர்சித்தார்கள்.

மறைந்த எழுத்தாளர் ராஜாராவ் காந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘இஸ்லாமை எதிர்ப்பதற்காக அவர் இஸ்லாமியர்களை ஆதரித்தார்’ என்று எழுதியுள்ளார். தோழர் அ. மார்க்ஸ் அண்மையில் எழுதிய புத்தகத்தில், ‘சாதி நிறுவனத்தால் பயன்அடைந்தவர்களுக்கிடையே காந்தி சனாதன எதிர்ப்புப் பற்றி பேச வேண்டியிருந்தது என்றால் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் சனாதனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பேச வேண்டியிருந்தது. அதனால் காந்தியின் மொழி, அம்பேத்கர் மற்றும் பெரியார் பேசிய மொழியிலிருந்து வேறுபட்டுத்தான் இருக்கும் என்கிறார். அதே சமயத்தில் வைதீக சனாதனிகளிடமிருந்து காந்தியைப் பிரித்தெடுக்கவும் முயற்சிக்கிறார்.

பெரியார் பற்றி பல புத்தகங்களைத் தோழர் எஸ். வி. ஆருடன் இணைந்து எழுதிய வ. கீதா அவர்கள் ஆங்கிலத்தில் “Sour force” என்று காந்தியின் அறம் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துள்ளார். எப்படிப் பார்த்தாலும் காந்தி சிக்கலான மனிதர்தான். புரிந்துகொள்ள முடியாத மகாத்மாதான். அவரவருக்கு வேண்டிய மகாத்மாவைக் காந்தியிடமிருந்து அவரவர் உருவாக்கிக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.

காந்தியின் உடலரசியல்
ஆசிரியர் : ராமாநுஜம்,
வெளியீடு : கருப்புப் பிரதிகள்,
பி-74, பப்பு மஸ்தான் தர்ஹா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 5, விலை : ரூ. 20


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com