Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

அத்திவெட்டி
பொதிகை சித்தர்


தமிழ் மரபும், தாவரவியலறிவும், உள்ளார்ந்த மார்க்சியப் புரிதலும் அவரது மனம் படுபசுமைகளில் தலைமயங்கி முயங்கிய தர்சனமாக வாய்க்கும் அவரது கவிதைகள் எனைப் பெரிதும் ஈர்ப்பன. ஞானதிரவியத்தின் கவிதைகளில் காணக்கிடக்கும் கவித்துவத்திற்கும் வேர்மூலம் எதுவோ, கதைகளில் காணக் கிடக்கும் கவித்துவத்திற்கும் வேர்மூலம் எதுவோ, அதுவே தமிழகக் கிராம வாழ்வின் வேரடி மண்ணாக வெளிப் பட்டிருக்கும் அகஒட்டு நாவலுக்கான வேர்மூலமாகும். கவிதைகள் மற்றும் கதைகள் வாயிலாக அவர் மூலம் நமக்கு அறிமுகமான அத்திவெட்டியின் இனவரைவியல் ஆவணமாக, வட்டாரக்கிளைமொழியின் ஊற்றுக்கண் மடைதிறந்து பொங்கிப் பாய்ந்தோடும் தன் வரலாற்றப்புனைவே அகஒட்டாகும்.

“பிரபஞ்சத்தின் மீதிருக்கும் தீராக்காதல் அறிதல் வேட்கை, மனிதர்களின் மீதான தீராக்காதல், மனிதர்கள் நொறுக்கப்படுவதற்கான காரணங்களைக் காணுதல் என்று என்கவிதை வாழ்வு நீழ்கிறது” என்பாரே ஞானதிரவியம், அந்த வாக்குமூலம் அகஓட்டின் வாயிலாகவும் நமக்கு அனுபவ மாகவே வாய்க்கின்றது. சிதிலங்களாகும் விழுமியங்களின் சின்னாபின்னங்களையும், குடும்ப வன்முறையின் வலைக் கண்ணிகளில் அலைக்கழியும் ஓர்மையற்ற ஓர்ந்தும் விடுபட இயலா எழுத்துருக்கின் வடுப்பாய்ந்த வியாகுலங்களை அனாயாசமாகச் சித்தரித்துச் செல்கிறது அகஒட்டு. முந்தைய வட்டார எழுத்துருக்களின் எழுத்துக்கள் போலல்லாது அடுத்தப் பாய்ச்சலாக வட்டாரக் கிளைமொழி, மற்றும் உட்பிரிவு இனவரைவியல், புதிய பிரதேச கோலங்கள் என அத்தி வெட்டித்தமிழ் நெடிகப்பிய அக ஒட்டு நம்மில் தாக்கத்தை மீக்கூரச் செய்வதாகின்றது.

“மறி” என்றொரு சிற்றிதழ் கூட நடத்தினார் ஞானதிரவியம். அப்போதெல்லாம் புலப்படாத “மறி” என்பதன் முழு அர்த்தம் அகஒட்டு வாசிப்பிற்கு அப்புறமாகத்தான் எனக்கும் பிடி படலாயிற்று. “மறி” என்னா பண்று (பிறகு என்ன செய்வது?) என மறுக்க” வாசிக்க. வாசிக்கத்தான் பேசாம இதுக்கு “மறி என்னா பண்று”? என்றே தலைப்பிட்டிருக்கலமே என்று கூட எனக்கும்பட்டது.

“இறக்கை” இதழில் ராசமைந்தனாகிய வா, மு. கோமுவும் கூட இவ்வாறே சுட்டிக்காட்டியுள்ளார். இங்குதான் இருக்கிறது “சொல் கதை” க்கும் “புனைகதை” க்குமான விதந்தோதப் படவேண்டிய வித்தியாசம் எனலாம். கதைப்பாத்திரங்கள் மாத்திரமல்லாமல் கதை சொல்லியின் கூற்றுக்களுங்கூட பேச்சு மொழியிலேயே அமைந்து கிடப்பதே “சொல்கதை” களின் உள்ளார்ந்த இயல்பாகும். அது இயற்கைஉணவைப்போல அப்படியே சாப்பிடவேண்டிய ஒன்றுதான். ஆக்கிப்படைக்கும் எழுத்தாக்கச் சமையலுக்கெல்லாம் அங்கே வேலையேயில்லை. இதுக்கு உடனடி உதாரணமா வேணுமின்னா ஹரிகிருஷ்ணன் கைபாகமான “மயில்ராவணன்” முதலான கதைககளைச் சொல்லலாம். ஞானதிரவியமோ “நகர்சார் நாட்டார் கதைசொல்லி” எனலாம்.

அகஓட்டின் சொல்லாட்சிக்கு இதோ சில... மாதிரிகள்... சனபொடச, போங்காசம், நாம்பிருதாப்பய நிரைச்சல், நெருதுளி, திருவடஞ்சு, அய்ப்பெடுத்து, செந்துளுப்பா, சேந்தமாலா, புருதாணிக்கம், அத்தளியும், பொச்சிப்போச்சி, கீலாகொண்டுபோச்சா, பொக்கை, ரண்டாங்கட்டிப்புள்ள, கங்கொரத்தப்புள்ள என நீளும்.....

அத்திவெட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்று...... தில்லைவாழ் தீட்சிதர் போலவும், நெல்லைவாழ் கோட்டைப் பிள்ளைமார் போலவும், அத்திவெட்டிவாழ் கள்ளர்களும் அங்கனக்குள்ளயே சுத்தி அவுகளுக்குள்ளேயே கொள்வினை கொடுப்பினைன்னு வாக்கப்படுவதேயாகும். இதுபற்றி அத்திவெட்டித் தமிழிலேயே கேப்போமே.

“கோச்சுக்காதிய சித்தப்பா மாமா... எங்க அப்பா வகையில நீங்க எனக்குச் சித்தப்பா... என் பொண்டாட்டி வகையில் நீங்க எனக்கு மாமானாரு... கள்ளம் மொறம காமாடு தலமாடுன்னா.....”

“ஆமாண்டப்பா நல்ல மொறம... காலம் பூராவும் நம்ப ஊருக்குள்ளேயே கல்யாணத்தப் பண்ணிக்கிட்டா இப்படித் தான் கொழம்பிப்போயி எல்லாப் பயலுவலுந் தங்கச்சிய கட்டிக்கப் போறாந்...”

“அதுக்காவ வெளியூர்ல சம்பந்மா பண்ண முடியுந்...? நம்ப ஊர்ல கட்னாத்தாந்... இந்த ஊர்ல காலந் தள்ள முடியும் இல்லாட்டி வீட்டப் பிரிச்சு அடஞ்சிருவாய்ங்கெ.....?”

ஆக இப்படி “சித்தப்பா மாமா” க்களுக்கும் “ மாப்ளே மவன்” களுக்குமாகக் கால்மாடு தலமாடாக் கெடப்பதுதான் அத்திவெட்டி கள்ள மொறம எல்லாம்..... திரைகடலோடித் திரவியம் தேட தலைமுறை தலைறையாகப் “பொருள்வயின் பிரிவை” நிர்ப்பந்திக்கும் அத்திவெட்டியின் குடும்பச்சிறை நெருக்கடிகளும் ஏலவே ஞான திரவியத்தின் கவிதைகளில் பாடுபொருளான ஒன்றுதான் எனினும் அதன் தொடர்நீட்சி வேறு பரிமாணங்களாய் அகஒட்டில் விகசிக்கலாகின்றது.

“சோறு போட்டாக்குழம்பு ஊற்றிக் கொள்வது போல மீசை முளைத்தால் கப்பலேறுகிற ஊரில் இருந்து கொண்டு கப்பலேறுவதில்லை என்பது இவனின் உறுதி.....

“ஒரு மனுசந்தாந் நெனச்சபடி வாழ முடியாதா... இந்த நாட்ல...? வெளிநாட்டுக்கு ஓடுங்கறவ்வோ...... ஒரு புள்ளக்கறிய அறுத்து இன்னொரு புள்ளக்கி ஓட்றோவ்... புள்ள பொண்டாட்டியெல்லாம் விட்டுவிட்டு அங்ஙெனபோய் கண்ணு காணாமே கெடந்து சாவுறு ஒரு வாழ்க்கையா.....?...

இது ஒரு பொழப்பா..... ஒரு புள்ளயப்பெத்துப்புட்டுப் போவாந்... மறுபுள்ளப் பெக்க வருவாந்... மறி..... படிக்க வக்கப் போவாந்..... மறிவந்து ஒரு மாசம் இருந்துட்டுத் தோப்பு வாங்கப் போவாந்..... மறிவந்து பொண்ணக்கட்டிக் குடுக்கப்போவாந்..... மறி கடசியிலே சாவறதுக்கு வருவாந்...

திரவியத்தின் எழுத்துருக்களில் தாணுண்டு தன்படிப்புன்னு உள்ளொடுங்குங் குணாதிசயத்துக்கு ஊடே வெளிப்படும் “அமுக்காங்கள்ளித்தனமான முரளியின் குணச்சித்திர வார்ப்பு அபூர்வமாக வாய்த்திருக்கின்றது அகஒட்டில்... “முன்னுற உணர்த்த” லாக செல்வத்தின் வாய்மொழி வாயிலாகவும் அவை காணக்கிடக்கின்றன.

“கலகலன்னு அளம்பு பண்ணிக்கிட்டுக் குறும்பு பண்ணிக்கிட்டு டார்ச்சர் குடுக்கிற பசங்கள நம்பலாந்... இதுமாரி அடப்பொட்டக்கணக்கா இருக்ற பசங்கள நம்பவே முடியாது... இருக்ற மாரி இருந்து பெரிய தப்பெல்லாம் பண்ணிப் புடுவாங்கெ.....” எனும் பேராசிரியர் செல்வத்தின் ஸ்டுடண்ட்ஸ் சைக்காலாஜி.....

“யாந்..... நல்லது கெட்டதெல்லாந் அந்தப் படுப்புல சொல்லித்தர மாட்டாய்ங்களா.....? எனும் “படிக்காதபுள்ளே” கமலத்தின் அப்ராணிக்கேள்வி.....

“இதெல்லாம் சொல்லிக்குடுத்து..... வைத்தியம் பண்றத்தையுஞ் சொல்லிக் குடுத்தா நாடு எப்பவோ நல்லாயிருக்காதா?...... அவய்ங்கெ வைத்தியம் மட்டுந்தாஞ் சொல்லிக் குடுப்பாய்ங்கெ”.....? மத்ததெல்லாம் மனுசனோட மனுசனாப் பழகி நம்பளேக் கத்துக்கிடணுந்.....? எங்க அந்தப்பயலெ வெளியெவிட்டியெ நீங்கெ.....? பயந்து பயந்து அந்தப் பயல நீங்க வெறுஞ்சாணிப் புழுவா ஆக்கிப்புட்டிய, எக்கேடோ கெட்டுத் தொலைங்க.....” எனப் பயலின் சுபாவத்தையும் செல்லங்கொடுத்துப் பொத்திப் பொத்தி வளர்த்த வளர்ப்பையும் வாங்கு வாங்கென்று வாங்குகிறார் செல்வம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சக கல்வியாளரிடம், இந்த எம். பி. பி. எஸ். எஞ்சினியரிங் படிக்கிறவங்களுக்கெல்லாஞ் தத்துவம் ஒருபேப்பர்,

அரசியல் ஒருபேப்பர், வரலாறு ஒரு பேப்பர்..... அத்தோட வேல்யூஸ் உண்டாக்குற மாரி நல்ல லிட்ரேச்சர் ஒரு பேப்பர்னு வச்சு அதுல எடுக்கிற மார்க்கையுந் வேல வெட்டிக்குப் போம்போது எடுத்துக்கணுஞ்சார்...... வெறுந் டெக்னீசியன்களா மட்டும் உருவாக்கிவிட்டா அவய்ங்க ரோபட்மாரி வாழ்றாய்ங்கெ சார்...” எனவும் அங்கலாய்க் கின்றார். இப்படிக்கூமுட்டையா அடப் பொட்டயா வளந்த மொரளி இருக்குற மாரி இருந்து அப்படியே பெரிய பெரிய தப்பெல்லாம் தெளிவான துரோகமாகப் பண்றதும் அதுக்கான பஞ்சாயத்துமாக முடிகின்றது அகஒட்டு.

அருமயான விஷயங்களை எளிமையான “சொலவங்கள்” இழையோடிக் கெடக்கும் அத்திவெட்டித் தமிழில் கண்ணி வெடி கணக்காப் பொதச்சு வச்சிருக்கிறது அகஒட்டு. அதில் “அகப்படுபவர்கள்” பாக்கியவான்கள்.

பிரதேச மண்மணமான வேர்மூலமாக மட்டுமல்லாமல் குடும்பவன்முறையின் வலைக்கண்ணிகளில் அலைக்கழியும் அகமன வெப்றாளங்களையும், ஒரு புள்ளக்கறிய அறுத்து மறுபுள்ளக்கி ஊட்டுங் கொடூரங்களையும் இத்தியாதி... இத்தியாதி. பிரச்னைப்பாடுகளின் வேர்மூலங்களையும் அகழ்ந்து காட்டும் பாங்கிலும் கவித்துவம் அகஓட்டிலும் இழையோடிக்கிடக்கின்றது. அத்திவெட்டிப் பள்ளிக்கோடப் படிப்பு மனிதஉறவுகளைக் கையாள செல்வத்திற்கு அத்துப் படியாகியுள்ள பாங்கு நம்மை மலைக்க வைக்கின்றது.

பின் குறிப்பு

“ஏம்மா என்ன கருப்பாப் பெத்தே?” என்கிற கேள்விக்குச் சிவாஜிபடத்தில் சுஜாதா தீட்டும் வசனம் தெரிஞ்ச சங்கதிதான். ஆனா அந்தக் கேள்விக்கு “அகஒட்டில்” கெடய்க்கிறது அருமையான பதில்..... “செவப்பாம்ல?... செவப்பு உள்ளங்காலுள இருக்கு, கருப்பு கண்ணுக்குள்ள இருக்கு”

அகஒட்டு
ஆசிரியர் : இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்,
வெளியீடு : அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் - 613 007, விலை : ரூ 140/-



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com