Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

அரசியல் தலைவர்கள் பார்வையில் ஜீவா
பெ.அண்ணாத்துரை

ஜீவா வாழ்க்கை வரலாறு, அரசியல் தலைவர்கள் பார்வையில் ஜீவா, நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா, உறவினர் நண்பர்களின் பார்வையில் ஜீவா, நினைவின் அலைகள் ஜீவா ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இளைய தலை முறையினருக்கு இந்தப் புத்தகங்கள் பெரும் பயனை அளிக்கும்.

ஜீவா என்று ஆசையோடும் பெருமையோடும் அழைக்கப்பட்டத் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கை, இந்திய, தமிழக பாட்டாளி வர்க்க மக்களின் விடுதலை எழுச்சியோடு இணைந்ததாகும்.

ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் ஒடுக்குமுறையிலும் சுரண்டலிலும் சிக்கிக் கிடந்த இந்திய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைந்து போராடச் செய்ய வைத்த காங்கிரஸ் இயக்கத்திற்குள் ‘காங்கிரஸ் சோசலிச இயக்கத்தை’ உருவாக்கிப் போராடியத் தலைவர்களில் ஜீவா முக்கியமானவர்.

பல்துறை ஆளுமையைக் கொண்டிருந்த ஜீவா, தமிழக பாட்டாளி வர்க்கத்திற்கும் கலை இலக்கியத்திற்கும் பெரும் பணி ஆற்றியுள்ளார். இவற்றினைப் பின்வரும் நூல்கள் தெளிவுப்படுத்தியும் ஆதாரப்படுத்தியும் உள்ளன.

‘அரசியல் தலைவர்கள் பார்வையில் - ஜீவா’ நூலில், தமிழகத்தின் முன்னணித் தலைவர்கள் தாங்கள் ஜீவாவுடன் கொண்டிருந்த அரசியல், சமூக உறவினை நினைத்துப் பெருமைப்பட்டு அவரின் சிறந்த குணங்களையும் தமிழக மக்களின் மேல் அவருக்கிருந்த பற்றினையும் கூறியுள்ளனர்.

‘சுயமரியாதை இயக்கம்’ தன் கொள்கையிலிருந்து விலகிச் சென்றபோது அவ்வியக்கத்திலிருந்து ஜீவா வெளியேறி விட்டார். இதனை, ஈ.வெ.கி. சம்பத் விளக்கிவிட்டு மேலும் கூறியிருக்கின்றார்.

“ஜீவா விரும்புகிறவாறு சுயமரியாதை இயக்கம் வேகத்தோடு செல்லாது என்று தான் பெரியார் கூறினார். தனித்த முறையிலும் ஜீவாவைப் பற்றிப் பெரியார் எதுவும் கூறிய தில்லை. உண்மையிலேயே தமிழகத்துப் பொதுவாழ்வில் ஜீவா சிறந்த புகழுடையவராக விளங்கினார். அவருக்கு என்றும் தனிப்புகழுண்டு; தனிச்சிறப்புண்டு. இன்றைக்கும் ஜீவா பொது வாழ்வில் இருக்கின்றவர்களுக்கு ஓர் முன் மாதிரியாக, வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக விளங்குகிறார்.

அரசியல் தலைவர்களை மட்டும் அல்லாமல் விஞ்ஞானி களையும் கவர்ந்தவர் ஜீவா. ஜி.டி. நாயுடு கூறியதை பின்வருமாறு காணலாம்.

“அரசியல் மட்டுமின்றித் தமிழ் இலக்கியங்களிலும் ஆர்வங்கொண்டு பாடல்களுக்கு மிக அழகாக விளக்கங்கள் கொடுப்பதைக் கேட்டிருக்கிறோம். அன்னாரின் மறைவினால் அரசியல் வானில் ஒரு தாரகையை நாடு இழந்தது. நாம் இனிய பண்புள்ள நண்பரை இழந்தோம்.”

வழிகாட்டி ஜீவா நூலில் நடிகவேள் எம்.ஆர். ராதா ஜீவா வுடன் கொண்டிருந்த நட்பையும் உண்மை மனதோடுப் பாராட்டியுள்ளார்.

“தமிழ் நாட்டில் எந்த அரசியல் வாதியிடமும் நான் காணாத தனிச் சிறப்பு வாய்ந்தப் பண்புகள் ஜீவாவிடம் இருந்ததால்தான் நான் அவரிடம் நட்புக்கொண்டேன். நான் அதிதீவிரமாக ஆதரிக்கின்ற திராவிடக் கழகத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடுமையான கருத்து வேற்றுமை இருந்த காலத்தில்தான் நானும் அவரும் உண்மையான நண்பர்களாக நெருங்கிப் பழகினோம்”.

மக்களைக் கவர்ந்த நடிகராகவும் பின், தலைவராகவும் விளங்கி இருந்த எம்.ஜி.ஆர். ஜீவாவின் மேல் கொண்டிருந்த பற்றினைப் பின்வருமாறு கூறியுள்ளதனைக் காணலாம்.
“தலைவராகத் தன்னைக் கருதாமலே தொண்டராகவே உழைத்து உழைத்துச் சந்தனக் கட்டையைப் போலத் தேய்ந்து தேய்ந்து உரு அழிந்தாலும் மற்றவர்கட்கு மணம் பரப்புவதைப் போல தன் வாழ்க்கையை, இன்பத்தை, அழித்துக்கொண்டு அந்தத் தூயத்தன்மையால் ஏற்பட்ட சிறப்பை, மக்கள் சமுதாயத்திற்கு வழங்கி வந்தவர் ஜீவா அவர்கள்...”

மகாகவி பாரதியைத் தமிழ்நாடு முழுக்க, பட்டித்தொட்டி எல்லாம் பேசி, கவிதையைப் பரப்பி, விடுதலை வேட்கையை உருவாக்கியவர் ஜீவா. இதற்கு ஓர் உதாரணமாக, பாரதியின் விழாவில் கலந்து கொண்ட பாரதியின் அருமை மகள் சகுந்தலா பாரதி, தன் தந்தையின் முழு சிறப்பையும், ஜீவா பேசியதைக் கண்டு, ஜீவா எந்த விழாவில் பேசினாலும் முதல் ஆளாக கலந்து கொண்டு இருக்கின்றார். அவர் ஜீவாப் பற்றிக் கூறியுள்ளதை ‘உறவினர் நண்பர்கள் பார்வையில் ஜீவா’ நூல் உணர்த்துகின்றது.

“என் தந்தையைப் பற்றி அவர் புதுப்புது விதமாக, புதுப்புது வண்ணங்களாகப் பேசினார். அவரது பேச்சு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திற்று. உணர்ச்சி ஆவேசத்தோடு ஜீவா பேசியபோது, என் அப்பாவை நேரில் பார்த்தது போலவே ஆய்விட்டது. அன்று முதல் எனக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ஜீவா பேசும் கூட்டத்துக்குப் போவேன்.

பாரதி விழா என்றால், அதில் ஜீவா பேசுகிறார் என்றால், எவ்வளவு தூரமாக இருந்தாலும் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அக்கூட்டங்களுக்குச் செல்லுவேன்.”

பாரதிக்குப் பின் தமிழகத்துப் புரட்சிக் கவிஞராக விளங்கிய பாரதிதாசன் ஜீவாவின் மேல் கொண்டிருந்த பேரன்பை அவரின் கவிதை காட்டியுள்ளது ‘ஜீவா -நினைவின் அலைகள்’ நூல் கூறுவதோடு உழைக்கும் மக்களின் உண்மைத் தலைவராகவும், தொண்டராகவும் உழைத்த தலைவர் ஜீவாவைப் போற்றியுள்ளதையும் கீழ்வரும் கவிதையில் காணலாம்.

“நாட்டுக்குப் பேசித்தன் நாட்டுக்கெழதி உயிர்
நாட்டுக்கே நல்கிய ஜீவாவை - நாட்டில்
இருக்கும்படி செய்வோம்! கல்நாட்டிச் கீர்த்தி
பெருக்கும்படி செய்வோம் நாம்!
தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப் பார்
தீங்குவரக் கண்டும் சிரித்திடுவார் - யாங்காணேம்
துன்பச்சுமை தாங்கி சீவாநந் தம்போன்ற
அன்புச் சுமைதாங்கும் ஆள்”

தமிழ் நாவல் இலக்கியத்தில் முற்போக்குச் சிந்தனைகளை வரைந்து வந்த பேரா. மு. வரதராசன், ஜீவாவின் மேல் கொண்ட அன்பின் காரணமாக, அவரின் நினைவாக எழுதியுள்ள கவிதையைக் இங்கே காண்போம்.

பாட்டாளிப் பெருமக்கள் உய்ய நாளும்
பலவிடத்தும் சென்றுழைத்த ஏழை பங்க!
நாட்டிலுள்ள கொடுமைபல நலிந்தே போக
நாடோறும் முழங்கிவந்த ஆர்வ தோழா!
கூட்டார்ந்த நட்புரிமை மறவா நண்ப!

இருக்கின்ற சமூக சுரண்டல் முறையும், நீதியும், கொடுமையும் ஒழிக்கப்பட்டு, புதிய சமூக அமைப்பை உருவாக்கப் போராடும் தொழிலாளர், விவசாய மக்களின் உள்ளத்தை உறுதிப்படுத்தும் இலக்கியங்களைச் சோசலிச எதார்த்த பொது இலக்கியம் என முழங்கி வந்தவர் ஜீவா.

இதனை உலக அளவில் ரஷ்ய நாட்டில் “மக்சீம் கார்க்கி” தன் “தாய்” நாவல் மூலம் தொடங்தி வைத்தார். இதனை மேலும் வளர்த்துச் சென்றவர் மாயக்கோவ்ஸ்கி. இருவரின் படைப்புகளிலிருந்து ஜீவா விளக்கிக் காட்டி இருப்பதை “சோசலிச யதார்த்தவாதம் பற்றி -ஜீவா” நூல் தெளிவுப் படுத்தியுள்ளன.

தக்கத் தருணத்தில் இதனை வெளிக்கொண்டு வந்திருக்கும் “பாவை பப்ளிகேஷன்ஸ்” நிறுவனத்தாருக்கு என் அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜீவா (தொகுப்பு)
நினைவின் அலைகள் (ரூ. 75/-),
உறவினர்கள் நண்பர்கள் பார்வையில் (ரூ.45/-),
நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி (ரூ.40/-),
அரசியல் தலைவர்கள் பார்வையில் (ரூ.75/-),
வாழ்க்கை வரலாறு - கே. பாலதண்டாயுதம் (ரூ.40/-).
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com