Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

தெளிவும் அழகும்
தா.பாண்டியன்

ஜீவாவால் எழுதப்பட்டவை அனைத்தையும் திரட்டி, ஒரே தொகுதி நூலாக வெளியிட நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம், ஜீவா நூற்றாண்டை ஒட்டி எடுத்த முடிவை, நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. மிக்கப் பயன் தரும் சிறப்பானை செயல்.பேராசிரியர் வீ. அரசு, இந்தக் கடுமையான பொறுப்பை, அர்ப்பணிப்போடு ஏற்று, கடமை உணர்வோடு நிறைவேற்றியுள்ளார்.

ஜீவா தமது பதினேழாம் வயதில் எழுதிய சொன்மாலை, 102 வரிப்பாடல்களைக் கொண்டதாக இருக்கிறது. அது புதை பொருள் ஆய்வில் தோண்டி எடுக்கப்பட்டது போன்ற அரிய செல்வமாகத் திகழ்கிறது. அது ஜீவா இளமைப் பருவத்திலேயே தெளிந்த சமூக சீர்திருத்த, சமதர்மக் கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. பாரதியின் புதிய ஆத்திசூடி மாதிரி விளங்குகிறது.

ஜீவா எழுதிய பாடல்கள் மேடைகளில் பாடப்படுவதற்காக, இயக்கப்போக்குகளுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது. அன்றைய வழக்கப்படி, எழுதும் கவிஞரின் பெயரும், பாட்டு வரிகளில் வரும். ஜீவா அதே முறையைக் கையாண்டுள்ளார்.

பெண்ணுரிமை, நாட்டு விடுதலை பற்றியப் பாடல்களோடு, சுரண்டலைச் சாடி, சமதர்மம் வேண்டி எழுதப்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன. ஜீவாவின் பாடல்களில், “காலுக்குச் செருப்பும் இல்லை - கால் வயிற்றுக் கூழும் இல்லை” என்ற பாடல்தான், இன்றைக்கும் மேடை தோறும் பாடப் படுகிற பாடலாக மலர்ந்தது. அந்தப் பாடலும் ‘சமதர்மம் வேண்டும்’ என்ற இருபாடல்களும் அந்தக் காலத்தில் இசைத்தட்டாகப் பதிவு செய்யப்பட்டவை. கோவை ராமதாஸ் பாடியிருக்கிறார். அதைத் தேடிய போது, ஒன்றே ஒன்று கிடைத்தது. அதையும் அலுவலக மாற்றங்களின் போது தவற விட்டு விட்டுடோம். அந்தப் பேரிழப்பை நினைத்து வருந்துவது உண்டு.

அந்தப் பாடலைப் பலர் பல ராகங்களில் பாடுகிறார்கள். ஆனால், கோவை ராமதாஸ்தான், பாடலின் பொருளோடு இரண்டறக் கலந்து, உணர்ச்சியோடு, அழுகுரலில், ஆனால் கம்பீரமான வெண்கலத் தொனியில் பாடியிருந்தார். எனவே, கேட்டோர் கண்களில் நீர் வழிந்ததில் வியப்பே இல்லை. ஏனெனில் அவரது பாட்டில் சோகம், வீரம் கலந்திருந்தது. பலமுறை கேட்டுக் கேட்டு அழுதிருக்கிறேன். ஆனால், அழுவதற்காக எழுதப்பட்ட பாடல் அல்ல அது... இறுதியில், ‘ஒன்றுபட்டுப் போர் புரிந்தே உயர்த்திடில் செங்கொடியை, இன்றுடன் தீருமடா இம்சை முறைகள் எல்லாம்’ என முழங்கி, எழ வைத்த பாடல் அது. இதர பாடல்களும் பொருள் பொதிந்தவை. இயக்கத்தைக் கட்டப் பாடப்பட்டவை

இந்தப் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்த எழுத்தாளர், சிந்தனையாளர் வ. ரா. ஜீவாவை, பேசுவதைக் குறைத்துப் பாடல்களை எழுதக் கேட்டது பற்றிய குறிப்பும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், பாடல்கள் எழுதுவதை விட்டுவிட்டார், ஜீவா...

ஜீவா எழுதியுள்ள பெண்களுக்கான கட்டுரைகள், தொடர் கட்டுரைகளாக ஜனசக்தியில் வெளியிடப்பட்டவை. அதில் பாரதியார், பாரதிதாசன் பாடல்களோடு, மேல்நாட்டு அறிஞர்களின் கருத்து, பல நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஜீவா, எழுதிய கட்டுரைகளை, ஒரு தொகுப்பில் படிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்திருப்பது, புதையுண்டு, மறைந்திருந்த அரிய கருவூலம் ஒன்றைத் தேடிக் கையில் கொடுத்தது போல அமைகிறது.

ஜீவாவின் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கும் போது, 1925 முதல் 1963 ஆம் ஆண்டு வரையிலான தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. அதில் ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

மேடைகளிலும், கட்டுரைகளிலும், மிக முக்கியமாகத் தோன்றும் சில நிகழ்ச்சிகளை மட்டுமே, ஜீவாவின் வாழ்க்கைச் சிறப்பைக் காட்டும் ஆதாரங்களாக நாம் செய்து வருகிறோம்.
ஜீவாவின் கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் படிக்கிற போது தான், அவரது பிரமிக்கத் தக்க அரசியல் வளர்ச்சி தெளிவாகப் புரிகிறது.

காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டதும் விளங்குகிறது. அந்த மாபெரும் தலைவரின் கருத்துடனும் உடன்பட முடியாத போது, துணிந்து எடுத்த முடிவும் தெரிகிறது.

தந்தை பெரியாருடன், ஜீவாவுக்கு ஏற்பட்டத் தொடர்பு, பின்னர் கருத்து முரண்பாடு, நாட்டில் நடந்து வந்த அரசியல் போக்குகளில் எழுவது தெரிகிறது.

பெரியாரின் பாத்திரத்தை அங்கீகரிக்கும் ஜீவா, நாட்டினன் விடுதலை என்ற முதற்கோரிக்கையை ஒதுக்கி விட்டுப் பேசப்படும் சமூக சீர்திருத்தத்தை ஒப்புக் கொள்ள முடியாது விலகுகிறார்.

சேர்ந்து பணியாற்றிய காலங்களிலும் பிரிந்து எதிர் மேடையில் நின்று வாதிட வேண்டிய கடமை வந்த போதும் அரசியல் நாகரிகம் பிறழாது நடந்திருக்கிறார்கள்.

கொண்ட கொள்கைக்கு மட்டுமே நாணயமானவர்கள் என்பதை இருவரும் நிறுவியுள்ளனர். இதுவும் நமக்கு ஒரு நல்ல பாடம்.

சிங்காரவேலரை, முதன் முதலாகச் சந்தித்து, சிங்காரவேலர், சென்னைக்கு வந்து என் பெரிய நூலகத்தைப் பயன்படுத்திக்கொள் என அழைத்த விவரம், ஜீவாவால் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து தயாரித்த திட்டம், இருவரும் பெரியாரிடமிருந்து விலக நேரிட்ட காரணங்கள் தெளிவாக விளக்கப்படுகிறது.

அதே போல், வ. உ. சிதம்பரனார், தான் பத்தே நிமிடம் பேசிவிட்டு, பேசமுடியாமல் உணர்ச்சி வசப்பட்டு உட்கார்ந்து விட்டதாக, பிற்காலத்தில் மேடைகளில் எரிமலையாகப் பொங்கிக் கிளம்பிய - மக்களைக் கிளப்பிவிட்ட பேச்சாளர் குறிப்பிடுவது, நமக்கொரு வரலாற்றுக் குறிப்பைக் கூறுவதாக அமைகிறது.

தமிழகத்தில் எழுந்த மொழிச் சிக்கலில், தி. மு. க. விற்கும், பொதுவுடைமை இயக்கத்திற்கும் இடையில் நடந்த கருத்து மோதலையும் பல கட்டுரைகளில் காண முடியும். அதில், தாய்த் தமிழ் - பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக ஆக வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை ஆணித்தரமாக விளக்கியுள்ளார் ஜீவா. தமிழுக்காக வாதிட ஜீவாவிற்குத்தானே தகுதியுண்டு. மொழிச் சிக்கலைத் தீர்க்க, விஞ்ஞானரீதியிலான பதில் ஜீவாவின் கட்டுரைகளில் பளிச்சிடுகின்றது.

ஜீவா, சமதர்மம், பொதுவுடைமை என்றால் என்ன என்பதை விளக்கியும், நிறைய எழுதியிருக்கிறார். அதில், கம்யூனிட்டு அறிக்கையில் வரும் வரிகளையும் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் மேற்கோள்களையும் எடுத்துக் காட்டுகிறார். “புராதன சமுதாயம் நீங்கலாக மனித குல வரலாறு முழுவதுமே, வர்க்கப் போராட்டம்” என்று ஜீவா எழுதியிருப் பதைப் படித்தபோது மகிழ்ந்தேன். ஏனெனில், பலர், சமூக வரலாறே வர்க்கப் போராட்ட வரலாறு என்று அவசரத்தில் கூறுவது வழக்கமாகி விட்டது. புராதன சமுதாயத்தில் வர்க்கப் பிளவு இருந்தது இல்லை.

அதைச் சரியாகப் புரிந்து தெளிவாக எழுதியிருப்பது, மார்க்சீயத்தை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்துப் படிக்காமல், உய்த்துணர்ந்து தேறிய பொதுவுடைமைவாதி என நிரூபித்து விடுகிறார். ஜீவா, மார்க்சிம் கார்க்கி பற்றி விரிவாக எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞன் மாயாக் கோவ்ஸ்கி பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.

கலை இலக்கியம் பற்றிப் பொதுவுடைமையர் கொள்கை என்ன என்பதைப் பேராசானாய் நின்று விளக்கம் தந்துள்ளார். மறக்காமல், பாரதி, பாரதிதாசன், வள்ளுவர், கம்பன் என்று, தமிழ்க் கவிஞர்களைப் போற்றிப் பலபட எழுதியுள்ளார். அத்தனையிலும் புதுமை சேர்த்துள்ளார்.

சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றியும் பாராட்டிப் புகழ்ந்து பேசுகிறபோது. அதற்கான காரணங்களை விளக்குகிறார்.

தோழர் ஜீவா, தமிழ் நாட்டில் காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சி தொடங்கப்பட்ட போது, ஈ. வெ. ராவுடன் தொடர்பு கொண்டதைக் குறிப்பிடுகிறார். ஜெயப் பிரகாசர் வந்தது, திருச்சி மாநாட்டிற்கு எஸ். ஏ. டாங்கே வந்தது. ஜீவா செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட விவரங்களும் கிடைக்கின்றன. பல போராட்டங்களில் கலந்து கொண்ட விவரங்களையும் அவரே எழுதியுள்ளார்.

ஜீவாவை, அன்றைய சென்னை மாநிலத்திற்குள் நுழையக் கூடாது என அரசு துரத்தியடித்தது. நடந்த வழக்கில் ஜீவாவும், இளங்கோவும் விடுதலை பெறுகின்றனர். ஆனால் அரசு நடமாடக் கூடாத தடை, ‘இண்டர்ன்மெண்ட்’ என்ற சட்டப் படி பூதப்பாண்டியில் கிடக்கப் பணித்து விடுகிறது. அப்பொழுது, அங்கிருந்தவாறு கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறார்.

பக்கம் 119 இல், 38 ஆவது கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ள பகுதியில், அன்பார்ந்த ராமமூர்த்தி, பத்துத் தினங்களுக்கு முன் நானும் இளங்கோவும் விடுதலையானோம். அப்பீலில் புராசிக்கியூசன் சட்ட விரோதமென்று கூறி எங்களை விடுதலை செய்து விட்டார்கள்.

பழைய இண்டர்ன்மெண்ட் ஆர்டர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பேசவும் கூடாது. ஊரைவிட்டு வெளியிலும் போகக்கூடாது. சுமார் ஐந்தரை மாதம் சிறை வாழ்வு. நமது கட்சிப் பிரசுரங்களும் பத்திரிகைகளும் படிக்கும் சந்தர்ப்பம் இல்லை. ஜனசக்தி முறையாகக் கிடைக்க ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஆரம்பத்திலிருந்து இதுவரை வெளிவந்துள்ள ஜனசக்திப் பிரதிகள் முழுவதும் கிடைத்தால் கட்சி ஞானத்தில் என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளப் பேருதவியாக இருக்கும்.

தோழர் மோகனோடு கலந்து நான் ஊரிலிருந்து கொண்டே கட்சி வேலையில் எப்படிப் பங்குகொள்ளவேண்டுமென்று எனக்குத் தெரிவிக்கச் சொல்லவும். சமீப காலத்தில் வெளிவந்துள்ள நமது இலக்கியங்கள் ஒரு தொகுதி அனுப்பிவைத்தால் நலமென்று மோகனிடம் கூறவும்... நமது கட்சியின் நடவடிக்களையும் வளர்ச்சியையும் அறியப்பேராவல்... போதுமான வரையில் கட்சிக்குப் பிரயோஜனமின்றி இன்னம் எத்தனை காலம் இங்கு அடைந்து கிடக்க வேண்டுமோ?

ஜனசக்தி எவ்வாறு ஏஜண்டு நியமிக்கிறீர்கள்? நாகர்கோயிலில் இதுவரை ஏஜெண்டு இல்லை. இவ்விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?
-பூதப்பாண்டி
என எழுதப்பட்டுள்ளது.

சிறைக்குள் பூட்டிப் போட்டாலும் நடமாட முடியாதவாறு கட்டிப் போட்டாலும் கட்சி, கட்சி என்றே சிந்தித்த புரட்சியாளர்களின் அர்ப்பணிப்பு இந்தக் கடிதத்தில் தெரிகிறது அல்லவா?

அதே போல், முந்தா நாள்தான் சிறையிலிருந்து வெளிவந்தேன்... என்று ஒரு கட்டுரைத் தொடங்குகிறது.

பல தேசியத் தலைவர்களின் தொடர்புச் செய்திகள், அறிவுலக மேதைகளின் கருத்துகள், இலக்கியம், அரசியல் என விரிந்த கடலில் எதிர் நீச்சலடித்த விவரங்கள் நிறைய உள்ளன...

இளம் சந்ததி, இத்தொகுப்பைக் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும். மாணவர்களை, இளைஞர்களைப் படிக்க வைக்க வேண்டும்.

ஜீவா, இறுதிக்காலத்தில் நிறைய எழுத விரும்பினார். முயன்றார். முடியவில்லை... எனவே, எழுதாமல் விட்டு விட்டாரே எனக் குறைப்பட்டுக் கொண்டது உண்டு... இத்தொகுப்பைப் படித்தவுடன், போதுமான அளவு கொடுத்து விட்டுத்தான் ஓய்ந்திருக்கிறார் என்பது தெளிவாயிற்று.

ஜீவா சமதர்மம், பொதுவுடைமையைத் தமிழில் எவ்வளவு தெளிவாக, அழகாக எழுதியிருக்கிறார் எனப் பாராட்டிப் புகழ்வது போதாது. அது போன்று எழுதவும், பேசவும் கற்க வேண்டும்.

பொதுவுடைமைச் சிந்தனை வளர்ச்சிக்கு முன்னோடிகளாக இருந்த மாமனிதர்கள் பற்றியும் மறக்காமல் எழுதியுள்ளார்.

இத்தொகுப்பைப் படித்து முடிக்கிற இளைஞர் செம்மையான அரசியல் ஞானம் பெறுவார்.

அதில் உள்ள அவரது வாழ்க்கை விவரங்கள், இளைஞர்களுக்கும், துணிவையும் தெளிவையும் உறுதியையும் கொடுக்கும்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பெரும்வரத்தை வழங்கியுள்ளது. அதற்காகத் தமிழக மக்கள் பாராட்டுவார்கள்.

தொகுத்த அரசுக்கு மனம் நிறைந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

படியுங்கள். பயனடையுங்கள்.

ப. ஜீவானந்தம் ஆக்கங்கள் (இரண்டு தொகுதிகள்)
ப. ஜீவானந்தம் கால
ஜனசக்தி தலையங்கங்கள் (இரண்டு தொகுதிகள்)
பதிப்பு : வீ. அரசு, வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,
சென்னை - 98, (நான்கு தொகுதிகளின் விலை : ரூ. 2000)




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com