Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

கவிதை வளர்த்த மணிக்கொடி
மா.நடராசன்

கவிதை வளர்த்த மணிக்கொடி என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் பேரா. க. உமா மகேஸ்வரி. ஆய்வு நூலுக்குரிய புறவெளிக் கட்டமைப்பு ஒரு கல்வியியலாளரின் வரையறைக் குட்பட்டதாக இருந்தாலும் அதன் உள் ஓட்ட நடையும் கருதுகோளைப் பிசிறின்றி நிறுவுகின்ற குவிமையமும் ஆர்வத்தைத் தூண்டிச் சுண்டிஇழுக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும்.

மணிக்கொடி என்ற இதழ் 1933 செப்டம்பர் 17 - ல் தோன்றி அதன் கால எல்லையில் ஆற்றிய பணிகளை மதிப்பிடும் பலரும் சிறுகதை வடிவத்திற்கும் கட்டுரை வடிவத்திற்கும் நல்கிய பங்களிப்பையே பரக்கப் பேசிப் பேசி அடையாளப் படுத்தியுள்ளனர். “காரணம் அதன் ஆரம்ப கால இதழ்கள் கிடைக்கப் பெறாமையே ஆகும்” என்று கூறும் ஆய்வாளர் உமா. மகேஸ்வரி “வசன கவிதை மரபை வளர்த்தெடுக்க மணிக்கொடிதான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது” என்று ஆய்ந்து அழுத்தமாகப் பதிவுசெய்துள்ள நூல் கவிதை வளர்த்த மணிக்கொடி.

இந்த நூல் எம்ஃபில் பட்டத்திற்காக எழுதப்பட்ட ஒரு சாதாரண நூல் என்ற அளவில் இல்லாமல், முழுநூலிலும் ஒரு ‘தாகத்தேடலின்’ அலைச்சலை வெளிப்படுத்துகின்ற இழையோட்டம் தெரிகிறது. ஐந்து இயல்களால் கட்டமைக்கப் பட்ட இந்நூலில் மணிக்கொடிக்குள் என்ன இருக்க வேண்டும் என்ற உமா மகேஸ்வரியின் ஆர்வம் ‘உரு’ப் பெற்றுள்ளதை ஒவ்வொரு இயலுமே அழுத்தமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. பாரதியாருக்குப் பின், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தேக்கம். தொய்வு நிலவியது.

“மணிக்கொடி” பத்திரிக்கை தான் மீண்டும் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தது என்பதை மையப்படுத்தி வெளிப்படுத்தும் உமா மகேஸ்வரியின் தெளிவான நடையும் அணுகுமுறையும் இளம் ஆய்வாளர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

பாரதியின் சிந்தனைகளை இலக்கியம் மற்றும் சமூகத் தளங்களில் தொடர்ந்து எடுத்துச் செல்வதையே மணிக்கொடி தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. காரணம் மணிக்கொடியின் ஆசிரியர்களாகிய சீனிவாசன், வ. ரா போன்றோர் பாரதியின் பக்தர்களாக இருந்ததே ஆகும். பாரதியார் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலமூர்த்தி என்று கு.ப.ரா அவர்களால் குறிப்பிடப்படுவதை எடுத்துக் காட்டி, “பாரதி வழியைப் பின்பற்றுவதற்காகத் தொடங்கப்பட்ட மணிக்கொடி தமிழில் மறுமலர்ச்சியை நிறுவியதில் முக்கிய இடம் பெறுகிறது என்று உறுதிபடச் சொல்லுகிறார் உமாமகேஸ்வரி.

எங்கும் கிடைக்கப் பெறாத மணிக்கொடி இதழ்களைப் பேராசிரியர் வேதசகாயகுமார் மூலம் பெற்று ஆய்வு செய்து மணிக்கொடியின் மறுமலர்ச்சிப் பணியை வெளிக்கொணர “மணிக்கொடியும் இலக்கிய மறுமலர்ச்சியும், மணிக்கொடியும் பாரதிதாசனும், மணிக்கொடியின் கவிதைத் தேடல், மணிக்கொடிக் கவிஞர்கள், மணிக்கொடியின் முடிவும் புதிய அறிதல்களும்” என்ற ஐந்து நிலைகளில் தம் ஆய்வைச் செலுத்திய உமா மகேஸ்வரியின் “மணிக்கொடி” எந்த நாளும் பட்டொளி வீசிப் பறக்கவில்லை என்ற கைலாசபதி, அ. மார்க்ஸ் போன்றோரின் “மணிக்கொடி” இதழ் பற்றிய எதிர்மறைக் கருத்தை மறுத்துத் “தமிழில் மறுமலர்ச்சியைத் தொடரச் செய்து முழுமைப் படுத்தியது” என்று நிறுவும் வகையில் ஆய்வு அமைந்துள்ளது.

“மணிக்கொடி”யிலிருந்து வேறுபட்ட இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்த பாரதிதாசன், வ. ரா வோடு இணைந்து பணியாற்றிய இடம் மணிக்கொடியாக உள்ளது. ஆனால் வரலாற்றில் இது மறைக்கப்பட்டுள்ளது.

“காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம்; இதிலென்ன குற்றம்”

என்று “மணிக்கொடி”யில் வெளியாகிய பாரதிதாசன் பாடல் பெரும் கவனத்துக்குள்ளாகியது. குடும்பக்கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற பெருமையை மணிக்கொடிதான் பாரதிதாசனுக்கு வாங்கித்தந்தது. ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ போன்று 14 பாடல்களை மட்டுமே பாரதிதாசன் மணிக்கொடியில் எழுதியிருந்தாலும் அவை அனைத்தும் தரமானவையாகவும் கலைநேர்த்தி கொண்டவையாகவும் அமைந்துள்ளன என்ற ஆய்வுக் கருத்தை வலுவுள்ளதாகச் சொல்லும் விதம் இரண்டாம் இயலின் சிறப்பாக அமைந்துள்ளது.

மணிக்கொடியின் கவிதைக் கோட்பாடுகள் என்று ஒன்பது விசயங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கோட்பாட்டடையாளங்களைத் தீர்மானிப்பதற்கு மணிக்கொடி இதழ்களில் ஆழ்ந்த பயிற்சியும் சாரங்களை வடித்தெடுக்கும் வடிப்புத்திறனும் நூலாசிரியரிடம் இயல்பாக அமைந்துள்ளது. (இது தான் ஆய்வின் தேவை என உணர்ந்து கொள்ள வேண்டும்) மணிக்கொடி இதழ் மொழிபெயர்ப்புக் கவிதைகளையும், கிராமியப்பாடல்களையும் வெளியிட்டுக் கவிதைச் சோதனை செய்தது. (அந்த அடிப்படையில் பிச்சமூர்த்தியின் முதல் கவிதை 1934 செப்டம்பரில் (பிரிவில் தோன்றும் பேரின்பம்) முதல் வசன கவிதையாக மணிக்கொடியில் வெளியாகி தமிழ்க் கவிதையை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றதை மணிக்கொடியின் கவிதைத் தேடலாக அடையாளப்படுத்தும் செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில், வசன கவிதைதான் புதுக்கவிதைக்களுக்கான தோற்றுவாய் என்பது உறுதிப்பட்டது என்ற உமாமகேசுவரியின் ஆய்வுமுடிவு தர்க்க ரீதியான சத்தியமாகப்படுகிறது.

மணிக்கொடிக் கவிஞர்கள் என்று கு.ப.ரா, ந.பி, என்று இருவரை அடையாளப்படுத்துகிறார், நூலாசிரியர். அவர்களின் கவிதைகளைப் பற்றிய ஆய்வு நிகழ்த்தும் போக்கு சுருக்கமாகவும், அழுத்தமாகவும் அமைந்துள்ளது. இது, அவர்களைப் பற்றிய பெரிய விரிந்த ஆய்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. மணிக்கொடியின் சாதனையாளர்களாகவும், மணிக் கொடியில் சாதித்தவர்களாகவும் பாரதிதாசன், ந. பி. ஆகிய இருவரை இனங்காணும் ஆய்வாளர் முயற்சி கவிதை வாசிப்புப் பயிற்சியையும் கவிதைக்குள் செலுத்தும் ஒரு தேடலையும் தெளிவாகக் காட்டுகிறது.

பாரதிதாசனும் ந.பி யும் எதிரெதிர்த் திசைகளில் இயங்கியவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் பாங்கு அக்கால இலக்கியச் சூழலைப் பதிவு செய்வதாக உள்ளது. இது புரிந்து கொள்ளப்பட்டால் தான் தமிழ்க்கவிதையின் பரிணாம வளர்ச்சி அர்த்தமுடையது என்பதை உலகுக்குக் காட்ட முடியும். மணிக்கொடி இதழில் எழுதிய பிற கவிஞர்கள் என்று சுமார் பத்துப்பேரை அடையாளம் காட்டும் உமாமகேசுவரி (மணிக்கொடியின்) சாதனை என்று கணிக்கப்படுகின்ற மூன்று கலைஞர்களான பாரதிதாசன், ந.பி, கு.ப.ரா ஆகியோரின் படைப்புகள் போல அவர்களின் படைப்புகள் அமையவில்லை என்று ஆய்வு முடிவைச் சொல்லிச் செல்கிறார்.

மணிக்கொடியின் ஆறாண்டுகால இயக்கம் நான்கு பேர்களின் வேறுவேறு தலைமையின் கீழ் வேறுவேறானதாக இருந்தது என்று அதன் வேற்றுமைத் தன்மைகளையும் ஆளுமை களையும் நுணுக்கி ஆராய்ந்துள்ள விதம் மிகவும் முக்கியமான அம்சமாகக் கருதப்படவேண்டிய பதிவு. மணிக்கொடியில் நிகழ்ந்த தலைமை மாற்றங்கள் பொருளாதாரப் பற்றாக்குறையை ஏற்படுத்தி மணிக்கொடிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அதன் வீழ்ச்சி நிகழ்ந்த விதத்தைச் சொல்லும் முறையில் இலக்கிய ஆர்வலர்களின் மனதை நெகிழச் செய்யும் நடை தனித்தன்மை வாய்ந்தது.

மேலும், இந்த ஆய்வுக்கு, கிடைக்காத மணிக்கொடி இதழ்களைச் சேகரித்து வைத்திருந்த வேதசகாயகுமாரின் நேர்காணல் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அது மிகவும் முக்கியமான சான்றாகவும், வரலாற்றுப் பதிவாகவும் தேவைப்படும் வகையில் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல மிக முக்கியமான கவிதைகளாக மணிக்கொடியில் வெளியான பாரதிதாசன், பிச்சமூர்த்தி கு.ப.ரா கவிதைகள் சில இந்நூலில் இடம்பெற்றிருப்பது மணிக்கொடியின் நேர்த்தியை, தாக்கத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது.

ஆக, ‘கவிதை வளர்ந்த மணிக்கொடி’ என்ற நூல், மணிக்கொடி காலகட்டத்தின் படைப்பிலக்கியப் போக்கும் படைப்பாளிகளின் பங்களிப்பும் அப்படைப்புகள் பற்றிய எதிர்வினைகளும் வரலாறாக இருந்த விதத்தை அனைவராலும் தெரிந்து கொள்ள எளிமையாகத் தெளிவான நடையில் அமைந்துள்ளது. தமிழ்க் கவிதை, பாரதியிலிருந்து வளர்ந்த விதத்தையும், வசனகவிதை, புதுக் கவிதை என்ற பரிமாணம் பெற்றுள்ள விதத்தையும் தெரிந்துகொள்ள அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.

கவிதை வளர்த்த மணிக்கொடி
ஆசிரியர்: க. உமாமகேஸ்வரி, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600098, விலை : ரூ.50.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com