Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

காலத்தின் கண்ணாடி
இரா.நல்லகண்ணு


கவிஞர் தமிழ்ஒளி, மகாகவி பாரதியை ஞானகுருவாகக் கருதியவர்; புரட்சிக்கவி பாரதிதாசனை ஆசிரியராகப் பெற்றுப் பயிற்சிபெற்றவர். பாரதிதாசனின் அரவணைப்பில், தஞ்சைக் கரந்தைத் தமிழ்க்கல்லூரியில் முறையாகத் தமிழ்ப் பயின்றவர்.

இயல்பாகவே, கவியுள்ளம் கொண்டவராக இருந்ததால், எதையும் ஊன்றிப்பார்த்து உள் வாங்கிக்கொண்டார். சமூக இழிவு நிலைகளைக் கண்டு கொதிப்படைந்தார். பகல் பொழுதெல்லாம் மண்ணில் உழைக்கும் மக்கள் படும் துயரைக்கண்டு இரவு முழுதும் நட்சத்திரக் கூட்டங்களாக கொந்தளித்த விரிவானத்தைப் புரட்சிக்கவி பாரதிதாசன் இயற்கையின் சிரிப்பில் சித்திரித்தார்; அதைப்போலவே, கவிஞர் தமிழ்ஒளி, தனது கவிதைக் கணைகளாகக் கனல் தெறிக்கும் வேகத்தில் சாடியிருக்கிறார்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த மாணவர் இயக்கத்தில் கலந்துகொண்டார். சாதிக் கொடுமைகளைச் சாடினார்; சுயமரியாதைக் கருத்துள்ள கவிதைகளைப் படைத்தார்; பிரெஞ்சுக் காலனியான புதுவையில் பிறந்து வளர்ந்தவர்; பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டங்கள் கவிஞரைப் பெரிதும் ஈர்த்தன;

“தொழிலாளி கையில் விலங்கிட்டுக்
காலமெல்லாம் கொள்ளையிட்ட
பொய்யர் குலம் நடுங்கப் பொங்கிவந்த மேதினமே”

என்ற கவிதை, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளி வர்க்கப் பேரணியில் முழங்கும் போர்ப் பரணி கீதமாக ஒலிக்கப்படுகிறது. கவிஞர் தமிழ் ஒளி 41 ஆண்டுகளே வாழ்ந்தார்.

சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதித்து, உணர்ச்சிப் பிழம்பாக உடலை வருத்திக்கொண்டு ஷெல்லி, பாரதி போன்றவர்களின் வழித் தோன்றலாக வாழ்ந்தவர்; அடிமை நாட்டில் சுதந்திர இயக்கம் கருக்கொண்டு, பிரசவமான காலத்துக்குச் சற்று முன்பும், பின்பும் சில ஆண்டுகாலமே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளும், இயல், இசை, நாடகம், காவியங்கள், சிறு கதைகள் போன்ற அனைத்துப் படைப்புகளும் அக்காலத்தின் கண்ணாடி போல் படம் பிடித்துக்காட்டுகின்றன: சூரியஒளியை முப்பரிமாணக் கண்ணாடியில் உள் வாங்கி மேலும் கதிர் வீச்சுகளைப் பாய்ச்சுவதுபோல், கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் அனைத்தும் சமூகத்தின் உயிர்ப்புகளை உணரவைக்கின்றன.

மகாகவி பாரதி “சோவியத் புரட்சியை” ‘யுகப்புரட்சி’ என்று குணாம்சப்படுத்தி வெளியிட்ட முதல் பெரும் இந்தியக் கவிஞர். புரட்சிக்கவி பாரதிதாசன் “பாரடா உன்மானிடப் பரப்பை” என்று தமிழனுக்கு உலகப் பார்வையைக் காட்டினார்.

அதே சிந்தனை வழியில் தோன்றிய தமிழ்ஒளி 1957 ஆம் வருடம் சோவியத் விஞ்ஞானியின் விண்வெளிப்பயணத்தைப் பாடிப்புகழ்ந்தார். “அந்தரத்தில் அமைத்தார்” என்றும் சந்திர மண்டலத்தில் மனிதன் போய் தரை இறங்கிய நிகழ்ச்சியை “சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி, சாத்திரத்தை மாற்றுவது மனிதசக்தி” அறிவியல் சாதனை, மூட நம்பிக்கையை எவ்வாறு தகர்க்கிறது என்றும் பகுத்தறிவுக் கண்கொண்டு பார்த்து மகிழ்கிறார்.

1949ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் கட்சியின் தீவிர உறுப்பினராக விளங்கிய தமிழ்ஒளி, கட்சி இயக்கங்களில் தீவிர பங்காற்றியுள்ளதும் உண்மை. ‘ஜனசக்தி’ வார இதழ் வெளிவரமுடியாத சூழல் உருவானபோது ‘முன்னணி’, ‘போரணி’ என்ற பெயரில் வார இதழ்கள் துவக்கப்பட்டன; கவிஞர் தமிழ்ஒளி, கவிஞர் குயிலன், திறனாய்வாளர் தி.க.சிவகங்கரன் மற்றும் பலர் துணையாசிரியர்களாகச் செயலாற்றினார்கள்;

அடக்குமுறை காலத்தில் முற்போக்கான கருத்துக்களைத் தாங்கி இவை வெளிவந்தன.

ஜீவா துவங்கிய ‘தாமரை’ இதழிலும் கவிஞர் தமிழ் ஒளி சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவந்தார். “வீராயி”, “கண்ணப்பன் கிளிகள்” ஆகிய படைப்புக்கள் தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற காவிய வரிசையில் மதிப்பிடப்பட்டுள்ளன.‘தமிழ் ஒளியின்’ படைப்புக்கள் அனைத்தையும், கவிஞர் வாழ்ந்த காலத்தில் உறுதுணையாக உதவிசெய்துவந்த இலக்கிய நண்பர் செ. து. சஞ்சீவி, தொகுத்தளித்துவருகிறார்;

கவிஞரின் சிறுகதைகளையும், ஓரங்க நாடகங்களையும் ‘உயிரோவியங்கள்’ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார்.

1947 ஆகஸ்ட் 15ல் நாடு சுதந்திரம் பெற்றது; ஆனந்தப் பள்ளுப்பாடி, குதூகலமாகக் கொண்டாடப்பட்டது; குறுகிய சில மாதங்களுக்குள் எதிர்பார்த்த மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகளும், ஓரங்க நாடகங்களும் “உயிரோவியங்கள்” என்ற தலைப்பில் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சுதந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது; மதுவிலக்குக் கொள்கை அமலாக்கப்பட்டதால், மது, மரத் தொழிலாளிகள் வேலையில்லாமல் பட்டினிகிடக் கிறார்கள்; பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கள்ளுக்கடைகள் சாராயக் கடைகள் நடத்திய கோடீஸ்வரர்கள் - விடுதலை இந்தியாவில் தேசியப் பிரமுகர்களாகக்காட்சியளித்தவர்கள் கதையில் கதாபாத்திரங்களாக வருவார்கள், வேலையற்ற மது, மரத் தொழிலாளி, “ஜமீந்தார்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டஈடு? எங்களுக்கு என்ன?” என்று குரலெழுப்புவது சிந்திக்கவைக்கிறது.

ரிக்ஷா தொழிலாளி, விவசாயத் தொழிலாளி தலித் பெண் ஆகிய அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கை நிலைகளை கதை வடிவத்தில் உயிரோட்டமாகக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

காமன்வெல்த் அமைப்பில் சுதந்திர இந்தியா கட்டுப்பட்டிருந்ததால், மலேயா கணபதி, தூக்கிலிடப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியாமலிருந்த துயரத்தை வன்மையாகக் கண்டிக்கும் இலக்கியப்படைப்பாக ‘அணைந்த தீபம்’ உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் சகாய் கிருஷ்ணபிள்ளை பாம்பு கடித்து இறந்தார். தலைமறைவு வாழ்க்கையில் எத்தனைத் தலைவர்கள் காவு கொடுக்கப் பட்டார்கள் என்ற பட்டியலுக்கு “அவன் அமரன்” ஒரு இலக்கிய சாட்சியாக உள்ளது.

கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புக்களை நூல்களாக வெளியிட்டுத் தமிழ் மக்களுக்கு வழங்கிவரும் இலக்கிய நண்பர் செ. து. சஞ்சீவி அவர்களுக்கு, தமிழ்கூறும் நல் உலகு, நன்றியுடன் நல்லாதரவளிக்கும் என்று நம்புகிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com