Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

பேரா. கா.சிவத்தம்பியின் இலக்கிய வரலாற்று நோக்கும் தமிழியலின் எதிர்கால இலக்கும்
பெ. மாதையன்

தமிழில் இலக்கிய வரலாறு
(வரலாறெழுதியல் ஆய்வு)
ஆசிரியர் : கார்த்திகேசு சிவத்தம்பி,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 150.00

பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி எதையும் சமூக இருப்பில் வைத்தே சிந்திக்கக்கூடிய மார்க்சீயவாதி, மார்க்சீயத்திறனாய்வாளர். இவர்தம் ஆய்வுகள் எல்லாம் இயங்கியலை, வரலாற்றுப்பொருள்முதல்வாதம் எனும் ஆய்வுநெறியை ஆதாரச் சுருதியாகக் கொண்டே உருப் பெற்றுள்ளன. இந்த அறிவியல்பார்வை பண்டைய இலக்கியம், இலக்கணம், நாடகம், நாவல், சிறுகதை, தனித்தமிழ், திராவிடஇயக்கம் எனும் அனைத்துப் பொருண்மைகளும் பற்றிய அவர்தம் ஆய்வுகளால் புதிய பரிமாணங்களை முன்வைத்துள்ளது; தமிழியல் ஆய்வுக்கான புதிய வழித்தடங்களையும் ஏற்படுத்தித் தந்துள்ளது.

இந்த நோக்கில் பேராசிரியர் தமிழின் இலக்கியவரலாற்றை வரலாறெழுதியல் எனும் ஆய்வு நோக்கில் ஆய்ந்து முன்வைத்துள்ள தமிழில் இலக்கிய வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு) எனும் இந்நூல். பேராசிரியர்தம் சமூக அக்கறையுடனான ஆய்வுப் போக்கை - ஆய்வுநோக்கை, இலக்கியம் சமூகஉற்பத்தி எனும் அடிப்படையில் தமிழ் இலக்கியவரலாற்றை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவையைப், பிரச்சினைமையங்களைச், சாத்தியப்பாடுகளைச், செயல்முறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை முன்வைக்கும் இந்த நூல் தமிழ் இலக்கிய வரலாற்றின் புதிய உருவாக்கத்திற்கான வழிகாட்டியாக விளங்கும் சிறந்த கையேடாக அமைந்துள்ளது.

மரபுபோற்றல் எனும் அடிப்படையில் பழமைக்குத் தரப்பட்ட மிகைமதிப்புச் சூழலில் வெளிவந்த திறனாய்வுப் போக்கு இல்லாத கிளிப்பிள்ளை ஆய்வுகள் மலிந்து காணப்பட்ட தமிழ் ஆய்வுச்சூழலில் 1920 - 50களில் எஸ். வையாபுரிப்பிள்ளை அறிவியல்பூர்வமாகவும் திறனாய்வு மனப்பாங்கோடும் தமிழிலக்கியங்களை அணுகிப் புதிய ஆய்வுப்போக்கை உருவாக்கினார். இந்த ஆய்வுகள் பலத்த எதிர்ப்புக்கு உள்ளானாலும் அவர்தம் ஆய்வுப்பங்களிப்பு இன்றுவரையிலான தமிழியலாய்வில் பெருத்த பாதிப்பையே ஏற்படுத்திவந்துள்ளது; புதிய ஆய்வுநெறியை உருவாக்கியுள்ளது.

1960 - களில் இங்கு அறிமுகமான மொழியில் தமிழ்மொழி ஆய்வில் (தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்றவர்களால்) ஏற்படுத்திய அறிவியல் ஆய்வுப்போக்கைத் தொடர்ந்து மார்க்சியசித்தாந்தப் பார்வை தமிழாய்வுலகிற்கு அறிமுக மாகின்றது. தமிழகத்தில், பேராசிரியர் நா.வானமாமலையும் இலங்கையில் பேராசிரியர் க. கைலாசபதியும் வளர்த்தெடுத்த மார்க்சிய ஆய்வுப்போக்குத் தமிழிலக்கியங்கள் மீது பாய்ச்சிய புதிய ஆய்வொளியாகிய மார்க்சியஒளி தமிழிலக்கியங்களை வரலாற்று ரீதியாக, பொருளாதார உற்பத்திஉறவுகளின் அடிப்படையில் இயக்கவியல் நோக்கில் அணுகும் அணுகு முறையை முன்வைத்ததோடு அதற்கான தேவைகளையும் மெய்ப்பித்தது.

இந்த வகையிலான அணுகுமுறைகள் தமிழியல் ஆய்வுப்போக்கில் தத்தமக்கு உரியவகையிலான பாதிப்பு களையும் புதியபார்வைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த வழித்தடத்தில் தமிழிலக்கியங்களை ஆராய்ந்து வருபவரும் பேராசிரியர் க. கைலாசபதியின் நண்பருமான பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பங்களிப்புகள் மார்க்சிய ஆய்வுப்பரப்பில் மிகமுக்கிய இடம்பெறுகின்றன. நா.வானமாமலையின் ஆராய்ச்சி இதழும் க.கைலாசபதியின் Tamil Heroic Poetry, அடியும் முடியும், பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் போன்றவையும் தமிழாய்வுலகின் திருப்புமுனைகளாகத் தொடர்ந்து திகழ்வதைப் போல பேராசிரியர் கா. சிவத்தம்பி 1963ல் தொட்டுத் தொடங்கிச் செய்துவரும் ஆய்வுப்பணி அதே உத்வேகத்தோடு இன்றுவரைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது; எதிர்காலத் தமிழியலாய்வுக்குரிய வலுமிக்கத் திறனாய்வுமரபாக ஆழவேரூன்றியுள்ளது.

இந்த மரபின் ஒரு கூறாக வெளிவந்த தமிழில் இலக்கியவரலாறு - (வரலாறெழுதியல் ஆய்வு) எனும் நூலும் புதியது புகுதலாய் வந்த முதல் ஆய்வுநூலாக உருவாக்கப்பட்டுள்ளது. “1990இன் பின்னர், தமிழகத்தில் இலக்கியவிமர்சனச் சந்திப்பிற் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களைச் சுட்டும் எழுத்துக்களில் இந்நூல் பற்றிப் பேசப்பட்டது” (2007: ஏ) எனப் பேராசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல் இந்த நூலின் பாதிப்பு குறிப்பிட்ட மட்டத்தில் மட்டுமே இருந்துவருகின்றது. இந்த நூலின் தனித்தன்மையும் முக்கியத்துவமும் திறனாய்வுப்போக்கும் இந்த நூல் வெளிவந்து ஏறத்தாழக் கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டபோதிலும் தமிழகத்தில் பரவலாக அறியப்படாமலும் முழுமையாய் உணர்ந்து கொள்ளப்படாமலும் மாணவர் மத்தியில் இனங்காட்டப்படாமலும் இருப்பது வருத்தத்திற்குரியது.

எல்லா இலக்கிய வரலாற்று நூல்களையும் போல இதையும் பத்தோடுபதினொன்றாகக் கருதும் கருத்துநிலை தமிழகக் கல்விச்சூழலில் தொடர்ந்து இருப்பதால் பழமை போற்றும் பழம்போக்கே தொடர்ந்து நிலவுகின்றது. “தமிழ் பற்றிய ஆய்வுகள் தமிழில் வெளிவரும் பொழுது பல்வேறு கருத்து நிலை நிர்ப்பந்தங்கள் காரணமாகப் போதிய அளவுவிஞ்ஞான பூர்வமாக அமையாது போய்விடுவது தமிழ்ப்புலமைமரபின் ஒரமிசமோ என்று ஐயுறத் தக்க அளவுக்கு அதிகமாகவே வளர்ந்துவிட்டது” (பதிப்புரை, 3) எனப் பதிப்பகத்தார் சுட்டியுள்ளது போன்று இன்றையச் சூழலிலும் பழைய வழித்தடத்தில் பாடநூலுருவாக்கம் எனும் குறிப்பிட்டதோர் இலக்கிலேயே தமிழிலக்கிய வரலாறுகள் படைக்கப்பட்டுவரும் இந்தச் சூழலில் இந்த நூல் பற்றிய முக்கியத்துவத்தை வெளிக் கொணர வேண்டியதும் மாணவச் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டியதும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

இயக்கவியல் தன்மையும் திருந்திய பதிப்புகளும்

பேராசிரியர் கா. சிவத்தம்பி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப காலத்தில் (1982) சிறப்பாய்வாளாராகப் பணியாற்றிய காலகட்டத்தில் மேற்கொண்டதும் ஆய்வரங்கில் அரங்கேற்றப் பட்டதும் 1986 - இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் Literary History in Tamil - A Historiograpical Analysis எனும் தலைப்பில் வெளிவந்ததுமான ஆய்வின் திருந்திய தமிழ் வடிவமே தமிழில் இலக்கியவரலாறு - வரலாறெழுதியல் ஆய்வு (1988) எனும் இந்த நூல். “இது ஆங்கிலநூலின் மொழிபெயர்ப்பன்று” எனும் பேராசிரியர் “ஆங்கிலமூலத்தில் இல்லாத பல விளக்கங்கள் இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன என்கின்றார்” (1988: 13). 1988ஆம் ஆண்டுப் பதிப்புக்குப் பின் வந்த மூன்றாம் அச்சைத் தொடர்ந்து தற்போது வெளிவரும் இந்தத் திருந்திய நான்காம் பதிப்புப் பல்வேறு புதிய சேர்க்கைகளைக் கொண்டதாக, மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக, மீள்நோக்கப் பெற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ். வையாபுரிப்பிள்ளை, கே. ஏ. நீலகண்டசாஸ்திரி, தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் போன்றோரின் வரலாற்றுப் பங்களிப்புகள், தெ. பொ.மீயின் காலக்கணிப்புக்கான மறுப்புகள், பிராமணீய எதிர்ப்பு, தேவநேயப்பாவணரின் தமிழ்முதன்மை என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட பங்களிப்பு, வரலாற்றாசிரியர்களான பர்ட்டன் ஸ்ரையின், கதரின்கஃவ், நொபுறுகரசிமா, ஒய். சுப்பராயலு, சண்முகம் போன்றோரின் சோழர்காலவரலாறு சார்ந்த சிறந்த பங்களிப்புகள், ஏ.கே.இராமானுஜத்தின் சங்கஇலக்கிய மொழிபெயர்ப்புப் பங்களிப்பு எனும் இவற்றுடன் பண்டைத்தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய ஐராவதம் மகாதேவனின் ஆய்வு பெறும் முக்கியத்துவம் என்பனவற்றை விளக்கியதோடு (பக்.57,131 - 141, 234) ஐராவதம் மகாதேவனின் பிராமிக் கல்வெட்டுக்கால வரையறை கி.பி 600க்கு முன்னுள்ள தமிழிலக்கிய காலப்பகுதியை கி.மு.2-கி.பி.1, கி.பி5-6 எனப் பகுத்துப் பார்க்க வேண்டிய தேவையை முன்னிறுத்துவதையும் கே.வி. ராமன், நாகசாமி, நடனகாசிநாதன், கா. ரதஜன் போன்றோரின் தொல்லியல் ஆய்வுகள் சங்கஇலக்கிய ஆய்வில் ஏற்படுத்தியுள்ள புதிய பரிமாணத்தையும் குறிப்பிட்டுக்காட்டி (பக். 126-141) இவையெல்லாம் புதிய தமிழிலக்கிய வரலாற்றில் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதன் தேவையைப் பேராசிரியர் முன்வைத்துள்ளார்.

இதைப்போலவே அச்சு ஊடகம், குறிப்பாக இதழியல் பற்றிய ஆய்வுகளில் அக்கறை காட்டிவரும் வீ.அரசு. அ.மா.சாமி. நவீனத் தமிழிலக்கியப் படைப்பாளர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகளை உருவாக்கிய ரகுநாதன், பெ.சு. மணி. ராஜ்கௌதமன், இரா.இளளவரசு போன்றோர் பணிகளும் இந்திய வரலாறெழுதுகையில் ரொமிலா தாப்பர், விபன்சந்திர, எஸ். கோபால். கே.என்.பணிக்கர் போன்றோரை உள்ளிட்ட வரலாற்றாசிரியர் குழுவின் குழுவின் மேற்கிளம்பல், இந்தியப் பின்புலத்தில் தமிழக வரலாற்றுப் பங்களிப்பு இனங்காணப் பட்ட விதம் என்பனவற்றையும் தென்னகச் சூழலில் ராஜன் குருக்கள், வேலாயுதம், ஒய். சுப்பராயலு, சண்முகம் போன்றோர் பெறும் இடம், ஒய். சுப்பராயலுவின் The political geography of Chola Nadu எனும் நூலின் முக்கியத்துவம் (பக். 146-148) ஆகியனவும் சுட்டிக்காட்டப்பட்டதன் வழி தமிழ் இலக்கிய வரலாற்றில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய புதிய பரிமாணத்தேவைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பின்னிணைப்புப் பகுதியில் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மயிலை சீனி. வேங்கடசாமி போன்றோரின் படைப்புகள் குறித்த பட்டியல் களைச் சேர்த்ததன்வழி அவற்றின் முக்கியத்துவமும் அவை பற்றிய புரிதல்களின் கட்டாயத் தேவைகளும் முன்வைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு தம் நூலைக் காலந்தோறும் புதுக்கித் தரும் இயக்கவியல் வழிப்பட்டதான பேராசிரியர் தம் மனப்பாங்கும் ஆய்வுப்போக்கும் வரலாறெழுதியலுக்கான நடைமுறைசார்ந்த சிறந்த வரிகாட்டியாக அமைந்துள்ளது.

இலக்கிய வரலாற்று அணுகுமுறைகள்

தமிழின் இலக்கியவரலாற்றை எதிர்காலத்தில் தமிழின் தமிழரின் இலக்கியவழி வரலாறாக உருமாற்றி உருவாக்குவதற்கான இலக்கு நோக்கிய பயணத்தில் தமிழறிஞர்களை வழிநடத்திச் செல்லும் நெறிமுறைகளைக் கூறும் இந்நூல் பேராசிரியரே சொல்வதைப்போல் “இலக்கியவரலாற்றினைத் தனியே இலக்கியத்தின் வரலாறு ஆகக் கொள்ளாது. இலக்கியவழி வரலாறு ஆகக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதன் மூலம் இந்நூல் இலக்கியமும் வரலாறும் இணையும் முறைமை பற்றிய சில முக்கியப் பிரச்சினைகளைத் தமிழில் முதன்முறையாக ஆராய முற்படுகின்றது” (2007: X) எனப் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலக்கியம் சமூக உற்பத்தி

பேராசிரியர் கா.சிவத்தம்பி, பொருளாதாரம் எனும் அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தையும் மேற்கட்டுமானம் பிரதிபலிக்கும் எனும் அடிப்படையில் பிரதிபலிப்புக் கொள்கை பற்றிய தவறான நோக்குநிலையை மாற்றி ஒரு இலக்கியம் பண்பாட்டின் பிரதிபலிப்பாக மட்டுமே அல்லாமல் பண்பாட்டை உற்பத்தி செய்வது என்பதையும் கருத்தில் கொண்டே இலக்கியத்தை அணுகும் விமர்சனப்பார்வை வேண்டும் என்கின்றார். இதனால்தான் “சமூகத்தின் எவ்வெவ் நடைமுறைகள் இலக்கியப் பொருளாகக் கொள்ளப்படுகின்றன. ஏன் அவ்வாறு கொள்ளப்படுகின்றன. மற்றவை ஏன் கொள்ளப்படுவதில்லை எனும் விடயங்கள் மறக்கப்பட்டு விடுகின்றன” (பக். 11, 12) எனும் நிலையில் இலக்கியம் அணுகப்பட வேண்டும் என்கிறார்.

“நாம் கடந்த கால இலக்கியங்களை நிகழ்காலத்துடன் எவ்வாறு இணைக்கின்றோம் என்பதைப் பொறுத்ததாகும். இதனைச் செய்ய உதவுவதே இலக்கியவரலாற்றின் கடமை, பொறுப்பு ஆகும். இதற்கு, இலக்கியத்தின் பழைமையோ, ரசிக்கப்படுவதற்கான அதன் கவித்துவளமோ மாத்திரம் முக்கியமாகா; அது எவ்வாறு கடந்தகாலத்தினுள்ளிருந்து நிகழ்காலத்துடன் உரையாட முடிகிறது என்பதிலும், கடந்தகாலத்தில் அது எவ்வாறு அணுகுகின்றோ மென்பதிலும் தான் இலக்கியவரலாற்றின் சிறப்புத் தங்கியுள்ளது” (பக்.31,32) எனும் கருதுகோளை அவர் முன்வைத்துள்ளார். இந்தக் கருதுகோள் தமிழ் இலக்கியவரலாற்றில் பின்பற்றப்பட்டதையும் இலக்கிய வரலாற்றில் விமரிசனப் போக்கு இடம்பெறாததையும் அடிப்படையாகக் கொண்டு அதில் நேர்ந்துள்ள குறைபாடுகளை இனங்காண்கிறார். விமரிசனப் போக்கு இல்லாததுடன் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் இலக்கியக் காலவரையறை இன்மையையும்; தமிழ் இலக்கியம் முழுவதையும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் அனைவரையும் ஒருங்கேவைத்து நோக்கும் முழுமை நோக்கு இல்லாததையும் இதுவரை வெளி வந்த தமிழ் இலக்கியவரலாற்றின் குறைபாடுகள் என்கின்றார்.

தரவுகளின் பன்முகத்தன்மை

இலக்கியவரலாற்றுத் தரவுகளின் போதாமையையும் தரவுகள் பன்முகப்பட்டதாகத் தமிழின் அனைத்துப் பரிமாணங்களையும் உட்கொண்டதாக இருக்க வேண்டியதன் தேவைகளையும் மிகுதியும் வலியுறுத்தியுள்ளார் பேராசிரியர். இந்தியப் பண்பாட்டை முழுமையாக விளங்கிக்கொள்வதற்குத் தென்னிந்திய வளர்ச்சி கவனத்துடன் ஆராயப்பட வேண்டும் என்பதை நிலைநிறுத்திய கே. ஏ. நீலக்கண்டசாஸ்திரியின் பணியின் பின் எஸ். வையாபுரிப்பிள்ளையின் தனித்தன்மை வாய்ந்த இலக்கிய வரலாற்று அணுகுமுறையைச் சிறப்பாக விளக்கியுள்ளார். “சரித்திரத்துக் குதவும் பொருட் கூறுபாடுகள் பல இருக்கின்றன. சிலாசாஸனங்கள், தாமிர சாஸனங்கள், தினசரிதைகள் முதலியவற்றை இங்கே குறிப்பிடலாம்.

இவற்றை நாம் கூடிய விரைவில் ஆராய்ச்சி செய்தல் வேண்டும். சரித்திர காலத்துக்கு முற்பட்ட வரலாறுகளைத் தெரிந்துகொள்ளப் புராண இதிகாசங்கள், நாடோடிப் பாடல்கள் முதலியன பயன்படும். பழமொழிகள், பற்றிய ஆராய்ச்சியும் தனிப்பட்ட ஓர் துறையாகும். பொருள் வரலாற்று ஆராய்ச்சிகளும் இங்கே கருதற்குரியன” (ப. 108) என ஏனைய வரலாற்று ஆசிரியர்களின்றும் வேறுபட்டு மேலும் தேவைப்படும் வரலாற்றுத் தரவுகளின் தனித்தன்மைகளை எடுத்து விளக்கும் எஸ். வையாபுரிப் பிள்ளையின் கருத்தை எடுத்துக்காட்டி இலக்கியவரலாற்றுக்கான தரவுகளின் போதாமையை விளக்கியுள்ளார் பேராசிரியர். தமிழ் இலக்கியவரலாறு பன்முகப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தை மட்டுமல்ல இந்தத் தரவுகள் திரட்டப்பட வேண்டிய அவசியத்தையும் முன்வைத்துள்ளார்.

திட்டமிடலின் அவசியத்தேவை

திட்டமிடல் இல்லாத செயற்பாடு கருதிய இலக்கை அடையத் துணையாகாது. எனவே குறிப்பிட்ட இலக்கு நோக்கிய ஆய்வுப் பயணம் சிறக்கத் திட்டமிடல் மிகமிக அவசியமானது. பன்முகப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டிய இலக்கிய வரலாற்றுக்குத் திட்ட மிடலே அடிப்படை தமிழிலக்கிய வரலாற்று உருவாக்கத்தில் திட்டமிடலின் இன்மை, வரலாற்றை எழுதுவதற்கான முழுமையான தரவுகள் இல்லாமை, தரவுகளாகக் கொள்ளப் படவேண்டியவை எவை எவை எனும் மூன்று கூறுகளை முன்னிலைப்படுத்துவதாக மூன்றாவது இயல் அமைந்துள்ளது. “தமிழுக்கு ஒரு முற்றுமுழுதான இலக்கியவரலாறு எழுதப்படுவதற்கு வேண்டிய ஆட்களையும் பொருட்களையும் ஒரு மையமான இடத்திற்குக் கொண்டுவந்து, அதற்கெனத் தொழிற்படுவதான ஒரு பெருமுயற்சி மேற்கொள்ளப்படவில்லை” (ப.166) எனக்கூறும் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் வரலாற்றை எழுதுவதற்கு மேற்கொண்ட முயற்சியிலும் திட்டமிடல் இல்லாதிருந்ததையும் எடுத்துக்காட்டியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக அகராதியையும் கலைக் களஞ்சியத்தையும் மேற்கொண்டதைப் போன்ற திட்டமிடல் வரலாற்று எழுதுமுறைக்கும் மேற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

சமூக உருவாக்கமும் - கருத்துநிலையும்

“சமூக உருவாக்கம் என்பது, சமூக உறவுகளின் பன்முகப்பட்ட கட்டமைவினை, சமூகத்தின் பொருளாதார, கருத்துநிலை, மட்டங்களினதும் சிலவிடங்களில் அரசியல் மட்டத்தினதும், ஒருங்கிணை நிலையைக் குறிப்பதாகும். இந்த ஒருங்கிணைநிலையில் பொருளாதாரத்தின் தொழிற்பாட்டுப் பங்கு முக்கியமானதாகும்” (ப. 201) எனும் சமூக உருவாக்கம் பற்றிய கருத்தின் அடிப்படையில் பொருளாதார அடித்தளமான உற்பத்திமுறை, உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகப் பகுப்பாய்வைச் செய்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். “கருத்துநிலை பற்றித் தெளிவான விளக்கமளிப்பது அத்தியாவசியமாகும். கருத்துநிலை என்பது அரசியல், சமூக, விஞ்ஞான, மெய்யியல், மத, ஒழுக்கநெறி, அழகியற் கருத்துகளின் ஒன்றிணைந்த அமைவு ஆகும். அது சம்பந்தப்பட்ட ஆளின் அல்லது நிறுவனத்தின் வர்க்கப் பண்புடன் தொடர்புடையது” (ப. 204,205) எனும் கருத்துநிலை; இலக்கியஉருவாக்கம், இலக்கியநுகர்வு எனும் இருநிலையுடன் தொடர்புடைய இயல்பையும் விளக்கி இலக்கியவரலாறு இந்த அடிப்படையில் அமைதல்வேண்டும் என்பதை முன்மொழிந்துள்ளார்.

பல்துறைசார் ஆய்வு, புதிய அணுகுமுறை எனும் இவற்றின் தேவை

வரலாற்றை எழுதுவதற்கான மூலங்களின் குறைபாட்டையும் கல்வெட்டியல், தொல்லியல், மொழியியல், மானிடவியல் எனும் பல்துறைசார் ஆய்வுடன் இலக்கிய வரலாறு ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார் பேராசிரியர். “சமூகவியல், மொழியியல் என வரும் பல்வேறு துறை சங்கம சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கின்ற பல்துறை அணுகுமுறையினையும் வேண்டி நிற்கிறது” (ப. 208) என வரலாற்றக் காலப்பகுப்பு பன்முகநோக்கில் பல்துறை சார்ந்ததாக அமையவேண்டும் என்கின்றார். இந்த அடிப்படையில் 1. ஆரம்பம் முதல் கி.பி 600 வரை, 2. கி.பி. 600முதல் 1400 வரை, 3. கி.பி. 1400 முதல் 1800 வரை , 4. கி.பி. 1800 முதல் இன்று வரை எனத் தமிழக வரலாற்றுக் காலங்களைப் பாகுபடுத்தித் தந்துள்ளார். மேலும் இவை தோற்றம், வளர்நிலை, நிறைநிலை, சிதைவு அல்லது இறுதிக் கட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய துணைப்பிரிவுகளாகயும் பகுத்துக் கொள்ளப்படவேண்டிய தேவையையும் வலியுறுத்துகிறார்.

சங்க இலக்கியம் தொடங்கிப் பதினெண்கீழ்க்கணக்கு வரையிலான 600 ஆண்டுகாலப்பகுதி பற்றிய பகுப்பாய்வு 1. திணைக் கோட்பாட்டின் சமூக - பொருளாதார முக்கியத்துவம், 2. வர்க்க உருவாக்கம், 3. அரசு உருவாக்கம் - நில அடிப்படையிலான ஆட்சி அதிகாரம், 4. சமஸ்கிருத நியமங்கள் இணைத்துச்சொல்லப்பட்ட மத பண்பாட்டு நடைமுறை ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்கான பாகுபாடாக அமைதல் வேண்டும் என்கிறார்.

ஆகத் தமிழியல் ஆய்வறிஞர்கள் செல்லவேண்டிய திசைமுகங்களைக் காட்டி அவர்களை அவ்வழியில் செலுத்தவும் எதிர்காலத்தில் தமிழ் இலக்கியவரலாற்றை இலக்கியவழி வரலாறாக உருவாக்கவும் உதவும் வளமான வித்தாக இந்நூல் அமைந்துள்ளது.

தமிழ்க்கல்வி, ஆய்வுச் சூழல்

இலக்கியங்களின் வரலாற்றையும் இலக்கியங்கள் காட்டும் சமூக வரலாற்றையும் வேறுபடுத்திக்காட்டிக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய; இதுவரைக் கவனத்தில் கொள்ளப்படாத தரவுகள், எல்லோரும் ஏற்கத்தக்கப் பொதுவான காலப்பாகுபாட்டு வரையறைகள், சமூக உருவாக்க அடிப்படை எனும் இவற்றின் அடிப்படையில் இலக்கியவரலாறு, இலக்கியவழி வரலாறு எனும் இரண்டையும் அறிவியல் மனப்பாங்கோடு உருவாக்கு வதற்கான, வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் எழுதுவதற்கான திட்டவரைவைப்போல் முன்மொழியப்பட்டுள்ள இந்த ஆய்வுநூல் எழுதப்பட்டு ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இந்நூல் பற்றிய சரியான அறிதலும் புரிதலும் இல்லாத நிலையே இன்றுவரைத் தொடர்ந்து காணப்படுகின்றது.

தமிழகக் கல்விச் சூழலில் ஒவ்வொரு தமிழ் மாணவரும் இந்த நூலைப் படிப்பதற்கான வாய்ப்பு அவசியம் உருவாக்கப்பட்டாக வேண்டும். வாய்பாடாகச் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை மனோபாவங்கள் மட்டுமே இந்த நிலைக்குக் காரணம் அல்ல. தமிழகக்கல்விச் சூழலும் ஆசிரியர் மனப்பாங்கும் மரபான பாடத்திட்டங்களும் இதற்கான காரணங்களாக உள்ளன. இந்நிலையில் ஒட்டு மொத்த மனமாற்றமும் பல்துறை அறிஞர்களின் ஒருங்கிணைப்பும் இல்லாமல் இத்தகைய வரலாற்றெழுது பணிகளுக்கு வாய்ப்பில்லை.

அன்றைய நிலையில் பேராசிரியர் கா. சிவதம்பி வருகைதரு பேராசிரியராகச் சிறப்பாய்வாளராக அழைக்கப்பட்டு இத்தகைய ஆய்வை நிகழ்த்துவதற்கு வாய்ப்பளிக்கப் பட்டதைப்போல் இன்றையச் சூழலில் இந்த நூல் முன்வைக்கும் கருத்துரையின் அடிப்படையில் இத்தகைய வரலாற்றை எழுதுவதற்கான பணிப்பங்கீட்டுத் திட்டம் ஒன்று பல்வேறு தமிழகப் பல்கலைக்கழகங்களையும் தமிழாய்வு நிறுவனங்களையும் இலங்கை மலேசிய நிறுவனங்களையும் பல்துறைசார் ஆய்வறிஞர்களையும் இணைத்து உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

தமிழகக் கல்விச்சூழலிலும் பாடத்திட்டங்களிலும் கற்பிக்கும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியம். அந்நிலையில்தான் நல்ல மாணவர்கள் உருவாவதோடு அறிவியல் மனப்பாங்கோடு எழுதப்பட்ட ஆய்வுகள் பயன்கொள்ளப்படுவதுடன் அவற்றின் வழித்தடத்தில் புதிய ஆய்வுகள் பரிணமிக்கும் சூழலும் உருவாகும். பேராசிரியர் கா. சிவத்தம்பி முன்வைத்த வரலாறெழுதியலுக்கான அடிப்படைப் பணிகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தவும் தேவையான ஆக்கப்பணிகளையும் அடிப்படைப் பணிகளையும் மேற்கொள்ளவும் காலந்தோறுமான வரலாறுகளைப் பல்பரிமாணத் தரவுகளின் அடிப்படையில் படிப்படியாக எழுதவும் வேண்டிய மனப்பாங்குகளும் சூழல்களும் உருவாகும்.

வரலாற்றியல், தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், சமூகவியல், மானிடவியல், மொழியியல், புதிய திறனாய்வுப் போக்குகள் எனும் பல்வேறு அடிப்படைகளில் சங்கஇலக்கியம் முதலான இலக்கியங்கள் அணுகப்படும் இன்றையச் சூழலில் நாட்டுபுறவியல் ஆய்வுப் பங்களிப்புகள் பெருகியுள்ள இக்காலச் சூழலில் பேராசிரியர் கா. சிவத்தம்பி கருதுவதுபோல் இன்றுள்ள அறிஞர்களை இணைத்து அறிஞர்குழுமம் ஒன்று உருவாக்கப்பட வேண்டியதும் புதிதாய் வகுத்துக்கொள்ளப்பட்ட இலக்கிய காலங்களுக்கு ஏற்ற வரலாறுகளைப் படைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். இந்தக் காலகட்டத்தில் செயற்படுத்த இயலவில்லை என்றால் இனி எந்தக் காலமும் வாய்க்காது என்பதை மனதில் கொண்டு தமிழ் இலக்கிய வரலாறெழுதியலுக்கான திட்டவரைவு உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டாக வேண்டும். இதுவே பேராசிரியரின் எண்ணம் நிறைவேற அவர் சுட்டியுள்ள இலக்கைத் தமிழ்ச் சமுதாயம் அடைய வழிவகுக்கும். இதற்குப் பல்கலைக் கழகங்களும் தமிழாய்வு நிறுவனங்களும் பல்துறைசார் அறிஞர்களும் முன்வந்து முயலவேண்டியது அவசியம்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆராளவின்றே எனும்படித் தமிழியலின் எல்லாத் திசைகளையும் தம் உலகத்தரம் வாய்ந்த பரந்துபட்ட பல்பரிமாண ஆக்கங்களாலும் அறிவுவீச்சாலும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பேராசிரியரின் வியாபிப்பை, அவர்தம் தமிழியல் பங்களிப்புகளின் ஆழ அகலங்களை எண்ணிப் பெருமிதப்பட்டு வியந்து நிற்கும் எனக்கு இந்த நூலை மீளப் படிக்கும் போது எனக்கும் பெருமிதமும் மனநிறைவும் தோன்றுகின்றன. பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி அவர்களுக்கு நன்றியும் மனம்கனிந்த பாராட்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com