Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

தலித் பிரச்சினை - முன்னோக்கிய பாதை
அ.மார்க்ஸ்

நம்பிக்கையூட்டக்கூடிய தேசிய அளவிலான தலைவர்களில் ஒருவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரான து. ராஜா. அவரது பேட்டிகள், கருத்துக்கள், அமெரிக்கா நம் மீது திணிக்கும் அணு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துவதில் அவரது பங்களிப்பு ஆகியவற்றை நாளிதழ்களின் வாயிலாக அறியும்போது ‘ஆகா நம்மூர்க்காரர்’ என்கிற மகிழ்ச்சி கூடுதலாக உருவாவது தவிர்க்க இயலாது. ‘தலித் பிரச்சினை: முன்னோக்கிய பாதை’ என்கிற இந்நூல் நமது சமூகத்தை ஆட்டிப் படைக்கும் மிக அடிப்படையான ஒரு சிக்கல் குறித்த அவரது ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. பெரியவர் தோழர் நல்லக்கண்ணுவின் முன்னுரையும் பேராசிரியர் முத்துமோகனின் மொழியாக்கமும் நூலின் முக்கியத்துவத்தைக் கூடுதலாக்குகின்றன. நூலுடன் இணைக்கப்பட்ட மூன்று பின்னிணைப்புகள், குறிப்பாக 1989ம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் தமிழாக்கம் நூலுக்கு வலுசேர்ப்பவை.

சாதியை ஒழிக்காமல் இங்கே அரசியல் சீர்த்திருத்தத்தையோ, பொருளாதாரச் சீர்த்திருத்தத்தையோ கொண்டுவர இயலாது என்கிற அம்பேத்கரின் மேற்கோளுடன் தொடங்கும் இந்நூல் கம்யூனிஸ்ட்களுக்கும் தலித் இயக்கங்களுக்கும் இடையே உடைந்து போயுள்ள உறவுகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று முடிகிறது. கயிர்லாஞ்சி தொடங்கி இங்கே தலித்துகள் மீது நடைபெற்று வரும் வன்கொடுமைகளின் பரிமாணங்கள், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக நிலைகளில் தலித்துகள் பின் தங்கியுள்ள நிலையை வெளிப்படுத்தும் புள்ளி விவரங்கள் ஆகியவற்றின் பின்னணியில் தலித் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது குறித்து எழுதுகிறார் ராஜா. தலித்துகள் ‘தமது சுயபாதுகாப்பிற்காகத் தனித்த இயக்கங்கள்’ கட்டுவதை ஏற்கும் நூலாசிரியர். “இருப்பினும் தலித்துகளும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுத் திரளும் பரந்த அரசியல் கூட்டணியே எல்லா விளிம்பு நிலை மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இயலும்” என்கிறார். தலித்கட்சிகள் தமது முதலாளிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்தைக் கூர்மைப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

அம்பேத்கரின் சாதி, வர்க்கம் குறித்த கருத்துக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆசிரியர், அம்பேத்கரின் ஆய்வு முறை மார்க்சியமல்ல என்றாலும் அவரது ஆய்வுகளில் வெளிப்படும் காலனிய, ஏகாதிபத்திய நிலவுடைமை எதிர்ப்புக் கருத்துக்கள் தீவிர ஜனநாயகத் திசை வழிகளைக் காட்டுகின்றன என்கிறார்.

எனினும் தலித் கட்சித் தலைவர்கள் சிலர் முதலாளிய, ஏகாதிபத்திய எதிர்ப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் கம்யூனிஸ்டுகளையும், மார்க்சியத்தையும் விமர்சிப்பதும் ஆர்வம் காட்டுவதையும் இந்துத்துவ சக்திகளுடன் சில வேளைகளில் கூட்டுச் சேர்வதையும் சுட்டிக் காட்டி வருந்தும் ராஜா இடதுசாரிகளும் தலித்துகளும் இணைந்து களத்தில் நிற்பதையே ‘முன்னோக்கிய பாதை’யாக முன் வைக்கிறார்.

கம்யூனிஸ்டுகள் சாதிப் பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு மாறாகச் சமீப காலமாக இது குறித்து அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தலித்துகள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வின் விளைவாக இங்கே தனித்துவத்துடன் கூடிய தலித் கட்சிகள் உருவாயின. கருத்தியல் மட்டத்திலும் அரசியலிலும் இது வரவேற்கத்தக்கப் பல மாற்றங்களை உண்டு பண்ணியது. எனினும் சில அமைப்புகள் ஏதோ தலித்தியத்தின் பிரதான எதிரி மார்க்சியமும் பெரியாரியமும்தான் என்பது போல கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருந்தன. இரு தரப்பினருக்குமே இது பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

எனினும் சமீப காலங்களில் தலித் இளைஞர்கள் மத்தியில் இது குறித்த ஒரு மறு பரிசீலனை உருவாகியுள்ளதை அவதானிக்க இயல்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆனந்த் டெங்டும்டேயின் நூலுக்கு தலித் இளம் அறிவு ஜீவிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தோழர் ராஜா விரும்புவது போல எதிர்காலத்தில் தலித் அமைப்புகளும் இடதுசாரிகளும் ஓரணியில் இணைந்து நிற்பதற்கு இந்தப் புதிய தலைமுறை இளைஞர்கள் அளிக்கும் அழுத்தம் வழி வகுக்கும் என நம்பலாம்.

வர்க்கத்தை முன்னிலைப்படுத்திச் சாதிப் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளிய தவறை இடதுசாரிகள் கடந்த காலங்களில் செய்திருந்த போதிலும் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள் என்கிற வகையில் அவர்களை ஒழுங்கு திரட்டி, அமைப்பாக்கி, அதனூடாகத் தீண்டாமைக் கொடுமைகளைப் பேரளவிற்கு அழித்தொழித்த பெருமை அவர்களுக்குண்டு. தஞ்சை மாவட்டத்துக்காரன் என்கிற வகையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும். இன்று கோட்பாட்டு ரீதியாகவே சாதிப் பிரச்சினையைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிற நிலைபாட்டிற்கு அவர்கள் வந்துள்ளது எதிர்காலத்தில் மேலும் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

அம்பேத்கர் நூற்றாண்டிற்கு முன்னதாகவே வர்க்கச் சாதிப் பிரச்சினையில் அக்கறை காட்டிய ஒரு மார்க்சியப் பாரம்பரியம் இங்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கெயில் லும்வெத், சூரத் பட்மீல், பெங்களுர் குணா முதலியவர்கள் இந்த வகையில் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். சாதியை மேற்கட்டுமானமாகப் பார்க்காமல் எல்லா வகையான உற்பத்தி உறவுகளின் ஊடாகவும் உபரியை உறிஞ்சும் ஒரு கருவியாகச் செயல்படும் வகையில் உற்பத்தி உறவுகளில் ஒன்றாகவே கூட வைத்துப் பார்க்கலாம்.

அதாவது, அடித்தளத்தின் ஓரங்கமாகவே கூடக் கருதலாம் என்கிற கருத்துக்களெல்லாம் கூட இங்கே பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் “உழுபவனுக்கு நிலம்” என்ற கொள்கை கூட நடுத்தர சாதிகளுக்குத்தான் பயனளிக்கும் என்றெல்லாம் கூடக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிலமில்லாதவர்களுக்கு நிலம், தலித்துகளுக்கு நிலம் என்ற இக்கோரிக்கைகள் திருத்தம் பெற வேண்டும் எனச் சிலர் வாதிட்டனர். கார்ல் மார்க்சின் ‘ஆசிய உற்பத்தி முறை’ குறித்த அறிமுகமும், விவாதங்களும் இங்கே மேற்கொள்ளப்பட்டதும் இந்தப் பின்னணியில்தான்.

சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் அகில இந்தியப் புரட்சிப் பண்பாட்டு இயக்கம் (AILRC) என்கிற அமைப்பு சென்னையில் நடத்திய ‘சாதியும் வர்க்கமும்’ என்ற இரு நாள் கருத்தரங்கும் இந்த வகையில் முக்கியமானது. வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுப் பின்பு நூலாகவும் இரு பதிப்புகள் வெளிவந்தன.

அதே போல வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்திப் பேராசிரியர் கல்விமணி போன்றவர்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செய்து வரும் பணிகள் முக்கியமானவை. இச்சட்டத்தை முழுமையாக மொழியாக்கி மலிவுப் பதிப்பாக வெளியிடும் பணியும் இங்கே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கொண்ட பணிகள், பேசப்பட்ட கருத்துக்கள் எல்லாமே சரியானவை என நாம் ஏற்க வேண்டியதில்லை என்ற போதிலும் இவற்றை முற்றாகப் புறக்கணித்தல் நியாயமில்லை என்பதைவிட நமக்கு இழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். மீண்டும் மீண்டும் எதற்காக நாம் ‘0’ விலிருந்தே தொடங்க வேண்டும்! அம்பேத்கருக்கும் நமக்கும் இடைக் காலத்தில் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்களிப்புகளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

அம்பேத்கரின் வாழ்வில் அவர் ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சியை’ (ILP) உருவாக்கிய காலகட்டம், அப்போது அவரது செயற்பாடுகள், எழுதிய கருத்துக்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தலும், கணக்கில் எடுத்துக் கொள்ளுதலும் தோழர் ராஜாவின் உயரிய நோக்கை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் பெரிதும் பயன்படும். ஒரு அரசியல் கட்சியாகப் பரிணமித்தல் குறித்து அண்ணல் அம்பேத்கர் முயற்சிசெய்த போதெல்லாம் அவரது இணைவு கம்யூனிஸ்டுகள், சோஷியலிஸ்டுகள் ஆகியோருடனே இருந்தது. கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெற்றதும் அம்பேத்கரும் டாங்கேயும் ஒரே மேடையில் பேசியதும் இங்கே நினைவு கூரத்தக்கன.

தலித்கட்சிகள் + கம்யூனிஸ்டுளின் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்நூல் இக்காலகட்டத்தில் மிக முக்கியமானது. தோழர் ராஜாவின் கட்டுரையை மொழியாக்கியது முத்துமோகன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின் உள்ள இணைப்புகளை மொழியாக்கியது அவரில்லையெனில் பின்வேறு யார் என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை

ஆசிரியர்: து. ராஜா,
தமிழில் : ந. முத்துமோகன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98, விலை ரூ 35/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com