Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

ஊற்றுப் பெருக்கிய ஆறு
கீழாம்பூர்

உள்ளத்துள்ளது கவிதை, இன்பம் ஊற்றெடுப்பது கவிதை, தெள்ளத்தெளிந்த மொழியில் உள்ளத்தைக் கொள்ளை கொள்வது கவிதை என்று கவிதை நயத்தை கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை வழி நின்று கட்டமைக்கலாம். ஆனால், இன்பம் தருவது மட்டுமே கவிதை என்று சொன்னால் அது காலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகக்கூடும். கவிதைக்கான களன் சமூகம் என்பதால், சமூகத்தின் அசைவுகளைக் கவிதை கோடிட்டுக் காட்டுகிறது. கவிஞர் கோபால்தாசனின் கவிதைகள்.

கவிதையின் களனும் சமூகம் என்பதால் அவர் கண்ட சமூகத்தின் பிரதிபலிப்புகளை இந்தக் கவிதைத் தொகுப்பு கண்ணாடியாய்க் காட்டுகிறது. பொதுவாகக் கதைத்தல் என்றால் சொல்லுதல், மொழிதல், பேசுதல் போன்ற பொருள்களில் நம் தென்னகத்தில் பயன்படுத்துகிறார்கள். எப்படி ஒரு ஆற்று நீர் தான் தோன்றிய இடத்தில் தூய்மையின் மறு உருவாய் விளங்கி, ஊர்கள் பலவற்றைக் கடந்து ஓடிவருகையில் கசடுகள் பல தாங்கிச் சோர்வுறுகிறதோ அதுபோல் இந்த வார்த்தையும் பொருள் அளவில் மாசடைந்து போனது என்று சொல்லலாம். இது கால ஓட்டத்தின் காரணம் என்றும் கொள்ளலாம். ஆனால் பொய் சொல்லுதல் ஏமாற்றும் செயல்களை வெளிப் படுத்தும் பொருளில் அது வடக்கே வழங்கப்படுகிறது. கோபால்தாசனின் இந்தத் தொகுப்பைச் சொல்லுதல் என்னும் பொருளில் எடுத்துக் கொள்ளலாம். சமூகத்தின் அடிவேர் களைக் கணித்து வெளிப்படுத்தும் வார்த்தை வெளிப்பாடாகப் பொருள் கொள்ளலாம்.

எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்னால் கடவுள் வணக்கத்தைக் கைக் கொள்ளுதல் கவி மரபு. (அது அவரவர் உளப்பாங்கைப் பொறுத்தது. தமிழில் எழுந்துள்ள இத்தனைப் படைப்புகளின் முதலிலும் கடவுள் வணக்கமும் காப்புச் செய்யுளும் இருக்கும்.) விதிவிலக்குகளை எண்ணத் தேவையில்லை. கோபால்தாசனின் இந்தத் தொகுப்பும் கூட கடவுள் வணக்கத்தோடுதான் தொடங்குகிறது. அதற்கு இவர் கொடுத்திருக்கும் தலைப்பும் கடவுள்தான்.

அந்தக் கடவுளின் செயல்களை அடுக்கிச் சொல்லிக்கொண்டே போகிறார். “என் வீட்டுக்குக் கடவுள் வந்தார் / நான் கேட்டவைகளைஎல்லாம் தந்தார் / பக்கத்துவீட்டில் இழுப்பு நோயால் அவதிப்படும் குழந்தைக்காகக் கேட்டேன் / குணமாக்கினார் / கைவண்டி இழுத்து நான்கு பெண் குழந்தைகளின் / படிப்புக்காகக் கஷ்டப்படும் கன்னையாவுக்காகக் கேட்டேன் / சீராக்கினார் / ஊன வாலிபனின் உயிர்வாழ்க்கைக்காகக் கேட்டேன் / மூன்று சக்கர வண்டி கொடுத்துச் / சுயதொழிலுக்கு உதவினார்..... / இப்படிக் கேட்டதெல்லாம் செய்தார் / கடைசியில் “உனக்காக என்ன வேண்டும்” என்று அவர் கேட்ட போது / “அதுதான் செய்துவிட்டீரே” என்றேன் / அந்த மாமனிதரிடம்...!” / மனிதனின் மகத்துவத்தை வெளிப்படுத்த இந்தக் கவிதை வரிகள் கோபால்தாசன். உள்ளம் நிறைவாய் வெளிப்படுகிறது. வெறுமனே சொல்லி விட்டுவிடாமல், எல்லோருக்காகவும் கேட்டேன்; நல்லது செய்தார்.

உனக்கு என்ன வேண்டும் என்றபோது, அதுதான் நான் முன்னமே கேட்டுவிட்டேனே என்று சொல்லும் போது, பிறருக்காக வாழ்தலே வாழ்க்கை என்பதைக் கவியுள்ளம் வெளிப்படுத்துகிறது. பொதுநலனை முன்னிட்டுச் சிந்தித்தலே கவியுள்ளம். “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற சிந்தனையை வெளிப்படுத்தியதால்தான் இன்றும் பாரதி சிரஞ்சீவியாய் நம்முடன் இருந்து வருகிறான்.

ஒப்புமை இல்லாமல் கவிதையை நயம்பட உரைத்தல் சற்றே கடினம்தான். ஒப்புமையில் காட்டும்போது சொல்லவரும் கருத்தும் எளிதாகப் பதிந்துவிடுகிறது. இந்தத் தொகுப்பில் பல கவிதைகளில் ஒப்புமைக் கதைகளைக் கதைத்திருக்கிறார் கோபால்தாசன். அதில் ஒன்று, ‘பாரம்’ என்ற கவிதை. கவனமாய்த் திசை திருப்பப்பட்டு/ஒதுங்கிச் சென்று கொண்டிருக்கிறது/எனது வண்டி, / அது செல்லும் பாதைகளில் சில/இடர்ப்பாடுகள் நேரிடலாம்/அதைச் சுதாரித்துக்கொண்டு / அசையாமல் சென்று கொண்டிருக்கிறது / சில மனிதர்களால் மட்டும்/சுவைகூட்டப்பட்டு/இடையில் சுத்திகரிக்கப்பட்டதொரு /வாசகம்/ என் மார்பக இடப்புறக் கூட்டினில்/ஒரு குஞ்சாய் வளர்ந்து கொண்டிருக்கும்... எனினும்/அதன் கர்வம் இன்னும்/குறைந்தபாடில்லை / பழசும் புதுசும் தனித்தனியே வண்டியின் பாரங்களின்/கழிவுகளையோ அல்லது அபரிமிதமான சலனங்களையோ/குறைத்துக் கொள்ள முனையும் போதும்;/தடுக்கிறது அனுபவம் என்ற மனசாட்சி / என்ற கவிதையில் மண்ணின் தன்மையைக் கோபால்தாசன் வெளிப்படுத்துகிறார்.

இதில் சுதாரித்தல் என்ற சொல்லும் தென்னகத்துச் சொல். குறிப்பாகச் சொல்லப்போனால் குமரிமுனைக்கே உரிய சொல். இங்கே கவிஞரின் ஒப்புமை நயம் என்ன என்பது நமக்கு வண்டியின் வடிவில் பாரத்தின் வடிவில் சொல்லாமலே விளங்குகிறது. அதில் அனுபவம் என்ற மனசாட்சி செய்யும் செயலைக் கவிஞரின் கதைத்தல் பாங்கு வெளிப்படுத்தும் விதம் தனிச்சுவைதான்.

இந்தத் தொகுப்பு முழுதுமே கதைத்தல் எனும் சொல்லுதல் பாங்கில் இருந்தாலும், கதைத்தல் எனும் ஒரு தலைப்பையும் கவிதை ஒன்றுக்குக் கொடுத்துள்ளார் கோபால்தாசன். இன்றையச் சமூகத்தின் முன்னுள்ள பிரச்னைகளில் தலையாயதாக இருப்பது பயங்கரவாதம். இது மனிதனின் அமைதி வாழ்வைக் குலைத்துப் போராட்டக் களத்தில் பதைபதைப்பை உண்டாக்குகிறது. இன்றைய நவீன யுகமும் மனித உரிமை எண்ணங்களும் மேலோங்கியுள்ள நிலையில் அமைதி விரும்பும் மனிதன் வாழ முடியாமல் மனித இனமே கெடுகிறது. மனித உரிமை எண்ணங்கள் அமைதி விரும்பியான அப்பாவிக்கு ஆட்படாமல் அடக்கி ஒடுக்கும் தண்டல்காரனுக்குச் சாதகமாகிப் போன நிலை மனித சமூகத்தின் துர்பாக்கியம். இந்த அவலத்தைக் கதைத்தலில் வெளிப்படுத்துகிறார் கோபால்தாசன். இந்தக் கவிதையில் மண்ணின் மைந்தர் நிலையை மட்டுமில்லாமல், புலம் பெயர்ந்தோனின் வாழ்வியல் சங்கடத்தையும் முரசறைந்து கதைக்கிறார்.

“வனாந்தரத்தில் பனையோலைகள் வேய்ந்த கூரைக்குள் தேசம் விட்டு/கடல் கடந்து கரையோடு/உறவாடியபடியே ஜீவனம் கழித்தோம்... / வறுமையைத் துடைக்கப் போராடிக் கொண்டிருந்த வேளையில் / உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தஞ்சம் தேடி ஓடுகிறோம்... / நாங்கள் என்ன தவறிழைத்தோம்...? / பூர்வீகம் தமிழாய்ப் போனதற்கு / நாங்களென்னய்யா பாவம் செய்தோம்...? / எத்தனை ஆண்டுகளாய் மிதிபட்டு வதைபட்டு ரத்தம் சிந்திப் பயந்து ஒடுங்கி வாழ்வது? ........ / நேற்று இருந்தவர் கண்முன்னே / காலையில் உடல் சிதறி இறந்து கிடக்கும் கோரம்... / மனிதப் பிறப்பை இப்போது மட்டும் / தயவு செய்து தள்ளிப் போடச் சொல்லுங்கள்... / ஆம். மிருகங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் கூட / இங்கே மனிதர்களுக்கு இல்லை... / வேட்டையர்களைக் கண்டு / மிருகங்களுக்கே இல்லாத பயம் / இப்போது எங்களுக்கு... / நாட்டிற்குள் மிருகங்கள் மனித ரூபத்தில் நடமாடுவதால் / தமிழ்ச் சாதுக்கள் பதுங்கிக் கொள்ளும் அவலம்.. / எப்போது அந்த மண்ணில் வெடிச் சப்தம் நின்று / மனித நேயம் துளிர்க்குமோ / அப்போது திரும்புவோம் உயிர் கொண்டு!” என்று முடிக்கும் போது, இந்த அராஜக உலகத்தில் பிறப்பதே ஒரு பாவம் என்கின்ற சிந்தனையை விதைக்கிறார் கோபால்தாசன்.

இறை வழிபாடும் பக்தியும் மனிதர்களை மேம்படுத்து வதற்குப் பதிலாக அறியாமை மயக்கத்தில் மெல்ல ஆழ்த்தி யிருப்பதை ஒரு கவிதையில் காட்டுகிறார். இசக்கியம்மன் என்ற கவிதையில் இந்தக் கருத்து வெளிப்படுகிறது. “அம்மனின் சிரிப்பையும் / நடையையும் / குரலையும் / சாமியாடும் பூசாரியிடம்தான் காணவேண்டும்... இருப்பினும் / அந்தச் சாமியாடியை / மற்ற நேரங்களிலும் / ஏன் அம்மனை போல் பாவிக்கிறார்கள் / என்பதுதான் இன்னும் விளங்கவில்லை?” / என்று கேள்விக்கணையை விடுக்கும் போது, அந்த எண்ணம் ஆக்கிரமித்து மாயையைப் போக்க விழைகிறது.

குற்றச் செயல்களும் அதற்கான தண்டனைகளும் மலிந்து விட்ட இந்தக் காலத்தில், அந்தக் குற்றங்களால் சிறை செல்வோரின் குடும்பம், குறிப்பாக இளம் பிஞ்சுகள், குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை இழந்துவிட்டுத் தவிக்கும் நிலையை நம் சமூகத்தில் காண்கிறோம். ஒன்றுமறியாத அப்பாவிப் பிஞ்சுகள், தங்கள் பெற்றோர் தவறுகளால் ஆதரிப்பார் யாருமின்றித் தவிக்கும் நிலைக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது. நம் சமூகம் அல்லது அரசாங்கம் என்ற கேள்விக்குப் பதில் கேட்டால்... ஒன்றும் சொல்ல இயலாத தவிப்புதான் மனத்தை ஆக்கிர மிக்கிறது. கோபால்தாசனின் “அப்பா” என்ற கவிதை இந்தச் சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது. “அம்மாவுக்கும் அப்பாவுக்கும் / நடந்த வாய்த்தகராறு / சண்டையில் அம்மாவைப் / பலமாய் அடித்துவிட / மயங்கி விழுந்த அம்மா / இறந்துவிட / அப்பா சிறை செல்ல, / நானிப்போது அநாதையாக நிற்பதற்கு / ஏது காரணம்?” என்று ஒரு பிஞ்சு கேட்கும் கேள்வியில்தான் எத்தனை அர்த்தங்கள்...

காலத்தைக் காட்டும் கண்ணாடியாய், சமூகத்தை மேம்படுத்த ஓர் எண்ணக் குவியலாய் முளைத்த இந்தக் கவிதைகளின் கருத்துப் படையலில் சமூக ரணத்திற்கான காரணம் புலப்படுகிறது. அந்தக் கோபாலனின் புல்லாங்குழலில் விளைந்த கீத ஒலிபோன்று, புல்லாங்குழலில் மையூற்றி எழுதுகோல் கிறங்கச் செய்யும் ஆற்றல் கோபால்தாசனின் கதைத்தலில் வெளிப்படுவது ஒரு சிறப்பு.

கதைத்தல்
ஆசிரியர்: கோபால்தாசன்,
வெளியீடு: புதுப்புனல், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
முதல்மாடி, திருவல்லிக்கேணி, சென்னை - 600005, விலை ரூ. 39.00



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com