Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

நாகரிகத்தின் முகத்தில் அறையும் சமூக அவலம்
சி. கமலக்கண்ணன்

இந்தியச் சமூகத்தின் எல்லாக் குற்றங்களையும் தடுக்கச் சட்டமுள்ளது. சட்டமில்லாத துறையே இல்லை, எதை எடுத்தாலும் சட்டபூர்வமான விளக்கங்கள், நியாயங்கள், முன்மொழிய முடிகிறது. ஆனால் எதார்த்தமோ வேறாக உள்ளது. எத்தகையக் கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை, சிறைச்சாலைகள் புதிது புதிதாகக் கட்டிப் பெருமையுடன் விழாவாகக் கொண்டாடித் திறந்து கொண்டுள்ளோம். இன்றையப் பொருளாதார சமூக அமைப்பே பெரும்பான்மையான குற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றது என்கின்றனர் பல ஆய்வாளர்கள்.

இன்றைய இந்தியச் சமுதாயம் பழைய சீரழிந்த நிலப்பிரபுத்துவ சாதிய வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடக்கின்றது. மனுவின் கொள்கைகள் இன்றும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பாதுகாக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்தியச் சமூகம் முழுவதும் பரந்து கிடக்கும் மக்களாகிய தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்கும் கொடுமைகள் நாம் நாகரிகமானவர்கள்தாமா என்று வெட்கப்படும்படி உள்ளது. (தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லே அந்தச் சமூக மக்களைச் சரியாக அடையாளப்படுத்தும் சொல்) காலங்காலமாக எல்லாச் சலுகைகளையும், உரிமைகளையும், தங்களது வளர்ச்சிக்கு மட்டுமே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்து வந்துள்ள மேல்சாதியினர் தங்களுக்குக் கீழான சாதியினராகக் கருதித் தாழ்த்தப்பட்டவர்களை அடக்கி ஒடுக்கித் தாங்கள் ஏவிய வேலைகளைச் செய்யும் அடிமைகளாகவே நடத்தும் கொடுமை இன்னும் நடந்து வருகிறது.

“மனிதர் கழிவை மனிதர் அகற்றும் வழக்கம் இனியுண்டோ” என்றார் பாரதி. விடுதலைக்குப் பின் இந்தியாவில் இத்தகையக் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டிப் பாடினார். ஆனால் சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகள் ஆனபோதிலும் மனிதர் கழிவுகளை அகற்றும் வேலைகள் தாழ்த்தப்பட்டவர்கள் தலைமீது சுமத்தியுள்ளதை அகற்றமுடியாத நாம் வல்லரசு கனவுகளில் மிதந்து கொண்டுள்ளோம்.

இன்று உலகமே வியக்கிறதாம் நம் வளர்ச்சியைக் கண்டு, விஞ்ஞானத் துறையில் சாதனை, அந்நியச் செலாவணி குவிகிறது ஆசிய பகுதியில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் போதே நமது சமூகத்தின் மறுபுறம் மிகவும் சீரழிந்து போன அவலங்களை அகற்ற முடியாத, அல்லது அகற்ற விரும்பாத இன்றைய அதிகாரத்தை எண்ணி வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது.

சாதிய ஒடுக்குமுறையின் கோர வடிவத்தைக் கிராமங்களில் காணலாம், தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர்களை ஊரின் ஒதுக்குப் புறத்தே ஒதுக்கி வைத்துள்ளதை.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள, வறுமை நிலையும், சமூக அமைப்பும் தாழ்த்தப்பட்டவர்களை நகரத்தில் கழிவுகளை அகற்றும் வேலையைச் செய்பவர்களாக்கியுள்ளது. இத்தகையச் சகோதர, சகோதரிகள் கழிவை அகற்றும் போது எத்தகையப் பாதுகாப்பும் இன்றி வெறும் கைகளால் அப்புறப்படுத்துகின்றனர், இதனால் பல நோய்கள் அவர்களைத் தாக்குகின்றது. அவர்களுக்கு என்ன ஆனாலென்ன?

எங்கள் மாநிலத்தில் மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றும் இழிவை நாங்கள் ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறது ஒவ்வொரு மாநில அரசும், ஆனால் நடைமுறையில்? அடைத்துக் கொண்ட சாக்கடையின் உள்ளே இறங்கிச் சுத்தப்படுத்தும் தோழர்களை நாம் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றோம். “அதே சமயத்தில் தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் இப்பணியினைச் செய்வோரின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், 2006 - 2007 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.”

அதேபோல் இத்துடன் தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவர் விடுதியைப் பற்றிக் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது. கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வந்து தங்க இடமில்லாமல், வசதியில்லாத மாணவர்களுக்கென்று அரசே இலவச மாணவர்விடுதிகளை நடத்துகின்றது. அவை சாதிவாரியாகப் பிரித்து நடத்தப்படுகின்றன. க்ஷ.ஊ. ஆ.க்ஷ.ஊ. ளு.ஊ என்றே பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ளு.ஊ மாணவர் விடுதிகள் உள்ளே நுழைவதற்கே அருகதை அற்றதாக உள்ளது. எங்குமே கிடைக்காத ஒரு வகையான உணவு அங்கு மட்டுமே கிடைக்கிறது. இங்குத் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்குச் சுத்தமான உணவோ, சுத்தமான சூழலோ அற்று அல்லல் படுவதைக் காணமுடிகின்றது.

தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அவலங்களை மாநில வாரியாக எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் புள்ளி விவரங்களுடன் நமது சமூகத்தின் அவல உண்மையினைத் தோலுரித்துக் காட்டுகிறது ஜனகப்பிரியாவின் “மறு வாழ்வு” என்ற இந்தச் சிறு பிரசுரம். இந்நூலைப் படிக்கும் போது, நமது சமூகத்தின் சீரழிந்த கோர அவலத்தை நமது முகத்தில் அறைந்துவிட்டுச் செல்கிறது. ஆனால் இந்த அவலத்திற்கான தீர்வு இந்தச் சமூகத்தால் தீர்க்கப்படாத போது, மீண்டும் மீண்டும் இதற்குள்ளேயே தீர்வைக் காண முயல்வது பலவீனமடையவே செய்யும். தீர்வை நோக்கி, நாம் வெகுதூரம் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்நூலைத் தொடர்ந்து தகழியின் “தோட்டிகள்” நாவலும், ராஜாவின் “தலித் பிரச்சனைகள் முன்னோக்கியப் பாதை” என்ற நூல்களைப் படிப்பதன் மூலம் அடுத்தகட்டத்திற்குச் செல்ல வேண்டிய வழியை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

“மறுவாழ்வு”
ஆசிரியர் : ஜனகப்பிரியா, வெளியீடு : ஸ்நேகா, 2/2, தீபம் காம்ப்ளக்ஸ், மெயின் ரோடு, சாத்தூர், விலை : ரூ. 10/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com