Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

இரத்தத்தின் அழைப்பு!
த. அரவிந்தன்

உயர் தனி இனிப்புப் பெயர் ‘சே’. அந்த இனிப்பைச் சுற்றி இன்று உலக எறும்புகள். பெரும் கரும்பைக் கடத்த முடியாத எறும்புகளைப் போலவே மனிதச் சிற்றெறும்புகள். நூலில் நிலவும் புயலுக்கும்; பூகம்பக் குலுக்கலுக்கும் இடையில் ‘சே’ வோடு கைகுலுக்கும். துப்பாக்கித் தூக்கும். இரத்தம் சொட்டச்சொட்ட ஏகாதிபத்தியத்தைச் சுட்டு வீழ்த்தும். புரட்சி செய்யும். நூலைப் படித்து முடித்ததும், தங்கள் உணர்ச்சிகளுக்கும் எழுதிக் கொள்ளும் முடிவுரை.

நெருப்பெறும்புகள் காற்றின் விசிறிகள், காற்றின் பெருவிரல் அசைந்தால் கண்விழிக்கும் நெருப்பு. பெருவிரல் அசையாவிடில் கண்ணுறங்கும் நெருப்பின் மேல் பூனை உறங்கும்.

சிற்றெறும்பு, நெருப்பெறும்பைவிட உயர்வானவை கட்டெறும்புகள். குருதியால் ‘சே’வைக் கும்பிடுபவை. உயிரோடும் உணர்வோடும் ‘சே’வை வைத்துக் கொண்டாடுபவை. இவ்வகை உயர் எறும்புகள் காத்திருக்கின்றன. எறும்புண்ணிகள் தங்கள் இடத்திற்கே வருமென நீண்ட நெடுங்காலமாய்க் காத்திருக்கின்றன.

பசித்தேயிருக்கின்றன. ஆனால் ‘சே’ எதற்கும் காத்திருக்கவில்லை. புரட்சியைத் தேடி அவரே சென்றார்.

புரட்சியாளர் என்பவர் உறவை; உடலை; உள்ளத்தை வென்றவராக இருக்க வேண்டும். இந்த மூன்றையும் வென்றவர் ‘சே’வின் புரட்சி எண்ணத்தைப் புத்தி முழுவதும் நிரப்பி வைத்தவர்களாக இருந்தார்கள் ‘சே’வின் மூதாதையர். ‘சே’ வின் தந்தை டான் எர்னஸ்டோ குவேரே லிஞ்ச் நூலாசிரியர் ஐ. லாவ் ரெட்ஸ்சிகியிடம் சொல்கிறார்:

“எனது மகனின் நரம்புகளில் இரிஷ் புரட்சியாளர்கள்; ஸ்பானிஷ் வீரர்கள்; அர்ஜென்டைனா தேசபக்தர்களின் ரத்தம் பாய்கிறது. ஒரு போதும் ஓய்ந்து இராத தமது மூதாதையரிட மிருந்து மரபுச் செல்வமாகச் சிலவற்றைச் ‘சே’ பெற்றிருந்தான் என்பது தெளிவான உண்மை”

மரபுச் செல்வங்கள் இல்லாத நாடு எது? மூதாதையர் செல்வங்களைக் கொண்டு முறை வாழ்வு வாழ்ந்தவர் எத்தனைபேர்?

மரபுச் செல்வங்களை மட்டுமே கொண்டு ஒரு நாடு முன்னேறும் என்கிற சித்தாந்தம் உண்மையாகவே இருக்குமானால், உலகில் இரவல் எதிர்பாராத நாடாக அல்லவா இந்தியா இருக்கவேண்டும்? ஏன் இல்லை?

மரபோடு சேர்ந்த முன்னேற்றக் கொள்கையையும், முறையான உழைப்பையும், முனையளவும் தயங்காத உறுதியையும் உயிராய்க் கருதவில்லை. மூதாதையரின் பெருமை பெருமூச்சிலே பயணம். வெற்றி விளக்கை ஏற்றமுடியவில்லை.

மூதாதையரின் பெருமைக் குளத்திலே மூழ்கிப் போனவர் இல்லை ‘சே’. தனது பாரம்பரியம் பற்றி எங்கும் சிலாகிக்காதவர். காசாபிளாங்கோ என்ற இடத்தைச் சேர்ந்த சீனோரா மரியா ரோசாரியோ குவாரா என்பவருக்குச் ‘சே’ எழுதுகிறார்:

“தோழரே பட்டவர்த்தனமாய்ச் சொல்வதென்றால் ஸ்பெயினின் எப்பகுதியிலிருந்து எனது மூதாதையர் வந்தனர் என்பதை நானறியேன். நாம் நெருங்கின உறவினர்கள் அல்லர் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்த உலகில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறுவாயானால் நாமிருவரும் தோழர்கள்” வார்த்தை வசீகரத்துக்காக; வார்த்தை மிரட்டலுக்காக இப்படிச் சொல்லவில்லை ‘சே’. வார்த்தைக்கேற்ப வாழ்ந்து காட்டியவர். அநீதி எங்கெல்லாம் தலையெடுத்ததோ அங்கெல்லாம் தோழர்களோடு சேர்ந்து தோள் கொடுத்தாரே ஒழிய, உறவுகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கவில்லை. அதுவும் இந்த உறுதிப்பிடிப்பின் எல்லை எதுவரை?

ஏகாதிபத்தியவாதி பாடிஸ்டா ஆட்சியைக் கியூபாவில் கொரில்லா யுத்தம் நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்ததோடு முடித்துக் கொண்டாரா? இல்லை.

தொழில்துறை அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டுப் பொலிவிய கொரில்லா யுத்தத்தில் எதிரிகளின் கைகளால் சுடப்பட்டு இறக்கப்போகும் தறுவாயிலும், “புரட்சி என்றைக்குமே அழியாது என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றாரே அதுவரை.

“சே”வின் வீரமரணத்திற்குப் பின் பிடல் காஸ்ட்ரோ சில கடிதங்கள் வெளிட்டார். அதில் தன் குழந்தைகளுக்குச் ‘சே’ எழுதிய கடிதத்தில் எழுதுகிறார்:

“நீங்கள் புரட்சிக்காரர்களாக வளர வேண்டும். கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். தொழில் நுட்ப ஞானம் பெறவேண்டும். இந்த அறிவுதான் இயற்கையை நமது கட்டுக்குக் கொண்டு வர நமக்கு உதவும். நாமெல்லாம் தனிப்பட்ட முறையில் முக்கியமற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உலகில் எங்கு அநீதி நிலவினாலும் அதைக் கண்டு ஆழமாக வெறுப்புணர்வு கொள்ள வேண்டும். அதுதான் புரட்சிக்காரனின் முக்கியமான பாராட்டத் தக்கக் குணம்”

தலைவர் பதவிக்குத் தயாராகச் சொல்லவில்லை தம் பிள்ளைகளை ‘சே’. “துப்பாக்கி இல்லாமல் புரட்சி நடக்காது” என்று கூறிய ‘சே’ தம் பிள்ளைகளைப் போராடத்தான் சொன்னார்.

“தனிப்பட்ட முறையில் நாமெல்லாம் முக்கியமற்றவர்கள் இல்லை” என்று உறவுகளை, சுய நலத்தைக் கடந்துதான் தம் பிள்ளைகளை வாழச் சொன்னார்.

ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடிய உறவுகளாகத்தான் இயல்பாகவே அமைந்திருந்தது ‘சே’வின் உறவுகள். ஆனால் அவரது உடல்? மிகப்பெரிய ஒத்துழையாமை இயக்கம் நடத்தியது. இரண்டு வயது இருக்கும்போதே ‘சே’ வைத் தொற்றிக்கொண்டது ஆஸ்துமா நோய். 1930 - களில் ஆஸ்துமா நோயைத் தீர்க்கும் மருந்துகூட இல்லை. மூச்சுத்திணறல் காரணமாக ரக்பை என்கிற ஒருவகைக் கால்பந்து விளையாட்டைக் கூட விளையாட முடியாதவராய் இருந்தார். முடங்கிப் போகவில்லை. தன் நோயைப் போக்கிக்கொள்ள முடியாவிட்டாலும் பிறர் நோயைத் தீர்க்கும் பொருட்டு மருத்துவரானார். தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்தார். பிறகு நிரந்தரமாகச் சமூக நோயைத் தீர்க்கும் பொருட்டுப் புரட்சி மருத்துவராக மாறிப்போனார். கடைசிவரை ஆஸ்துமா அவரைத் தோற்கடிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது.

முடியவில்லை. சுருட்டின் புகையை ஊதுவதுபோலத் தான் நோயாளி என்கிற எண்ணத்தையும் உதறித் தள்ளியபடியே இருந்தார்.

சியாரா மாய்ஸ்ட்ராவிலிருந்து புரட்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவத்தைக் கேப்டன் ஆன்டனியோ எழுதுகிறார்.

“ஆஸ்துமா அடிக்கடி அவரைத் திக்குமுக்காடச் செய்துவிடும்போதும் அவர் எப்படி நடமாடித் திரிகிறார் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஆயினும்கூட அவர் முதுகில் ஆயுதங்களும் பிற கருவிகளும் நிரம்பிய பையைச் சுமந்துகொண்டு மலைகளின் மீது, ஓர் அனுபவம் மிக்கப் போர்வீரனைப் போல் ஏறினார். அவரது இரும்பு போன்ற நெஞ்சுரமும், ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதும் அவருக்குப் பலத்தை அளித்தன” நோயைக் காரணம் காட்டி கருணையைக்கூட இரவல் பெறத்தயாராக இல்லாத ‘சே’ ஒரு கட்டத்தில் சொல்கிறார்:

“அந்த நாட்களில் ஒரு வழியாக நான் கான்வாஸ் படுக்கை விரிப்பைப் பெற்றேன். அப்படிப்பட்ட படுக்கை விரிப்பு உண்மையிலேயே பொக்கிஷம் போன்றது. ஆனால் கடுமையான புரட்சிகர விதிகளின் படி ஏற்கனவே சாக்கு விரிப்பை யாரார் பயன்படுத்தி வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் கான்வாஸ் விரிப்பு வழங்கப்படும்.

எனவே சாக்கு விரிப்பு வைத்திருப்பவர்களுக்குத்தான் முதலுரிமை. என்னிடம் சாக்கு விரிப்பு இல்லை. அது முள்முள்ளாய் குத்தி என்னைத் தொல்லை செய்யும் என்பதால் நான் வெறுந்தரையில் தூங்கி வந்தேன். ஆகவே சாக்கு விரிப்பு இல்லாத எனக்குக் கான்வாஸ் விரிப்பை எதிர்பார்க்க உரிமையில்லை. பிடல் எனக்கு மட்டும் விதிவிலக்காகக் கான்வாஸ் விரிப்பு வழங்க உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சி என்றென்றும் என் நினைவில் நிற்கும்”

‘சே’ நினைத்திருந்தால் மருத்துவராக இருந்துகொண்டு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். அதைவிடுத்து உடலை வருத்திக்கொண்டு துப்பாக்கிச் சத்தங்களை விரும்பி மலை மீது படுத்துறங்கினார் என்றால் ‘சே’ உள்ளம் எவ்வளவு உறுதிமிக்க உள்ளம்? அந்த உறுதிமிக்க உள்ளத்தை அவர் பெற்றது மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி, கார்க்கி ஆகியோரது படைப்பின் மூலம். யுத்தத்தின் நடுவேயும் புத்தகத்தின் வாடை இல்லாமல் ஒரு நாளும் அவர் இருந்ததில்லை. படைப்பின் மூலம் பெற்ற உறுதியை அவர் யுத்தத்தின் வாயிலாகவும் புத்தங்களின் வாயிலாகவும் நமக்கு வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்.

1966 நவம்பர் மாதம் 7-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 8-ந்தேதி அவரது இறுதி மூச்சு நிற்பதற்கு முன் வரை தன் கைப்பட டைரி எழுதி வைத்துள்ளார். அந்த டைரி பின்னர் புத்தகமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு நாளின் குறிப்பையும் படித்தால் மிரள வைக்கிறது.

இந்தப் பொலிவியா டைரி பற்றி நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:

“அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தோல்வியுறச் செய்து அமெரிக்காவில் சோஷலிசத்தை நிறுவி, பின்னர் உலகமெங்கும் சோஷலிசத்தை வெற்றிமுரசு கொட்டச் செய்ய வேண்டும் என்ற நம்பமுடியாத, அல்லது இன்னும் சரியாகச் சொல்வதென்றால் மாபெரும் கடமையை ஏற்றுக்கொண்டிருந்த போதும் குவேராவின் டைரியில் ஒரு வரியிலோ, ஏன் ஒரு வார்த்தையிலோ வீண் ஜம்பத்தை, வெற்றி ஆரவாரத்தைப் பார்க்க முடியவில்லை. அது ஒரு கனவு காண்பவரின் டைரி அல்ல; தனது லட்சியம் சரியானதுதான் என்று உறுதியாக நம்புகிற ஒரு நிதானமான புரட்சிக்காரனின் டைரி” வரலாறு தன் குறிப்பேட்டில் இது போன்ற ஒரு புரட்சியாளரை இனி குறித்துக் கொள்ளுமா என்பது ஐயம். அதேசமயம், “நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா?” என்று கேட்டதற்கு, மக்களது நலன்களுக்காகச் செய்யப்படும் காரியங்களுக்குப் பெயர்தான் கம்யூனிசம் என்றால் நாங்கள் கம்யூனிஸ்டுகள்தான்” என்று ‘சே’ சொன்னாரே, அதைப்போல் மக்கள் நலன்களில் யாரார் உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் ‘சே’வின் உயிருள்ள சித்திரங்கள்.

‘சே’ மேற்கொண்ட சூறாவளிப் பயணங்களைப் போலவே நூலாசிரியரும் நெடும்பயணம் மேற்கொண்டு இந்நூலை உருவாக்கித் தந்திருக்கிறார். ‘சே’வோடு சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டவர்களின் சாட்சியங்களோடு, பழகியவர்களுக்குச் ‘சே’ எழுதிய கடிதங்களோடு, புகைப்படங்களைக் கொண்டே ‘சே’வின் வீரசாகசத்தைத் தெரிந்துகொள்கிற தொகுப்போடு உயிரோட்டமாய்க் கொடுத்திருக்கிற நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதே துடிப்போடு அமைந்த சந்திரகாந்தன் மொழியாக்கம் நூலின் பலம். புரட்சியாளர்களில் எப்படி ‘சே’வுக்கு நிகர் எவருமில்லையோ; அதைப்போல் ‘சே’ நூல்களில் இந்நூலுக்கு நிகர் எதுவுமில்லை.

இறுதியாய் ஒன்று:

பொலிவியா இராணுவம் சிஐஏவிடம் ‘சே’ வின் உடலைக் கொடுத்துவிட்டது. சிஐஏ அவரது உடலை என்ன செய்தது எனச் சரியான தகவல் இல்லை. ‘சே’வைக் கொன்றுவிட்டோம் என்று தங்களைத் தாங்களே தைரியப் படுத்திக் கொள்வதற்காக மணிக்கட்டுகளோடு ‘சே’வின் கரங்களை வெட்டி எடுத்துப் பத்திரப்படுத்தியது. அந்தக் கரங்கள் இன்றும் கியூபாவில் இருக்கின்றன. அந்தக் கரங்களில் தெரிவது சிவப்பின் அழைப்பு. இரத்தத்தின் அழைப்பு.

எர்னஸ்டோ சே குவேரா

ஆசிரியர் : ஐ. லாவ்ரெட்ஸிகி, வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,
சென்னை - 600 098. விலை: 200


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com