Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

தமிழ் அச்சுப் பண்பாட்டின் கதை
வீ.அரசு

(குறிப்பு: சுமார் இருநூறு ஆண்டுகால, தமிழ்ச் சமூக இயக்கத்தில் அச்சு ஊடகம் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளது. அது அச்சுப்பண்பாடாக உருப்பெற்றுள்ளது. அதன் பல்வேறு பரிமாணங்களை உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். அதன் தொடக்கமாக இப்பகுதி அமைகிறது)

ஐரோப்பிய சமூகத்தில் உருவான தொழிற்புரட்சி சார்ந்து அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் அறிந்த செய்தி; ஆனால் அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்கச் சமுகங்களில் உருவாக்கியப் பண்பாட்டு நிகழ்வுகள் குறித்த விரிவான உரையாடல்கள் நிகழ்த்துவது தேவையாகிறது. தத்துவார்த்த துறை சார்ந்து கீழைத் தேயம் (orientalism) எனும் உரையாடல் நடைபெறுவதை நாம் அறிவோம்; அப்பின்புலத்தில் பண்பாட்டுத் துறை மாற்றங்கள் குறித்த உரையாடல்களும் அவசியமாகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் அச்சுக் கருவி தமிழ்ச் சமுகத்தில் உருவாக்கிய மாற்றங்களைப் பதிவு செய்ய முயலுவோம்.

வெகுசனத் தொடர்புக் கருவிகளில் கேட்பு ஊடகம், காட்சி ஊடகம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது அச்சு ஊடகம். இவ்வூடகம் செயல்பட எழுத்துப்பயிற்சி அடிப்படைத் தேவையாகிறது. கேட்பு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு இவ்வகையான முன்தேவைகள் இல்லை. எழுத்துப் பயிற்சி என்பது மிகப்பழங்காலம் முதல், புனிதச் செயலாகவே கருதப்பட்டு வருகிறது. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ எனும் கருத்துநிலை மிகப் பரவலான நம்பிக்கையாக உள்ளது. எழுத்தறிவு என்பது எல்லோருக்கும் பொதுவான தாகக் கருதப்படவில்லை. படிநிலைச் சமூக அமைப்பில், மேல்படியில் இருப்பவர்களுக்கே எழுத்தறிவு உரிமையாக்கப் பட்டிருந்தது.

மொழியறிவும் எழுத்தறிவும் கடவுளோடு இணைத்துப் பேசும் மரபும் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது.

மொழி, எழுத்துக்களால் பதிவு செய்யப்படும்போது, எழுத்துக்கள் குறியீடுகளாகவே உருவாயின. இக்குறியீடுகளின் வளர்ச்சியே, ஒவ்வொரு மொழிக்குமான தனித்த எழுத்து வடிவங்கள் உருப்பெற வழி கண்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் எழுத்தறிவு என்பது மரபு ரீதியான பதிவு முறையிலிருந்து, எந்திரம் சார்ந்த பதிவு முறையாக மாற்றம் பெறுகிறது. அந்த எந்திரத்தை அச்சு என்கிறோம். அச்சு எந்திரம், அச்சு சார்ந்த வாசிப்புமுறை, அச்சு சார்ந்த ஆக்கங்கள் உருவாதல் ஆகிய பல நிகழ்வுகள் சார்ந்து உருப்பெறும் நிகழ்வை அச்சுப் பண்பாடு என்று அழைக்க முடியும்.

தமிழ்ச் சமூகத்தில் அச்சுக் கருவி பயன்படுத்தியமுறை, எழுத்தறிவுப் பரவலில் நிகழ்ந்த முறை, அச்சு சார்ந்து நிகழ்ந்த பல்வகை ஊடகங்கள் வழி ஆக்கங்கள் உருவான முறை ஆகியவை தொடர்பான விவரணங்களை உரையாடலுக்கு உட்படுத்துவதின் மூலம், ‘தமிழ் அச்சுப் பண்பாடு’ என்ற கருத்தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்ச் சூழலில் பதினாறாம் நூற்றாண்டின் இடைக்காலம் அச்சுக் கருவி புழக்கத்திற்கு வந்துவிட்டது எனப் பேரா. சேவியர் தனிநாயகம் அடிகள் கருதுகிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் புழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்ற கருத்தும் உள்ளது. அச்சுக் கருவி நிறுவப்பட்ட இடங்கள் குறித்தும் முரண்பட்ட செய்திகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வரலாறு குறித்த விரிவான ஆவணப் பதிவுகளைச் செய்வது அவசியம்.

தமிழகத்தில் உருவான கிறித்துவத்தொண்டு நிறுவனங்களின் வரலாற்றோடு, இவ்வரலாறும் அடங்கியிருக்கிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குறித்தப் பல்வேறு ஆவணப் பதிவுகள் இருப்பதால், இச்செய்திகள் பல கோணங்களில் தரப்படுகின்றன. கிறித்தவ தொண்டு நிறுவன வரலாறுகளைச் சார்பு மனநிலையில் அணுகாமல், தரவுகளின் நம்பகத்தன்மை சார்ந்து அணுகும்போது, இச்சிக்கலுக்குத் தீர்வைக் காணமுடியும். இவ்வகையில் அச்சுக் கருவிகள் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடாடிய கதை குறித்துப் பதிவு செய்ய வேண்டும். அச்சுக் கருவிகள் வழி காலந்தோறும் அச்சிடப்படும் ஆக்கங்கள் எவையெவை என்பது குறித்தும் பதிவு செய்வது அவசியம். புதிதாகச் சமூகத்தில் இடம் பெறும் கருவிகள் வழி உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கும் அதை நுகர்பவர் களுக்குமான உறவுநிலைகள் குறித்தப் புரிதல் தேவை.

அதன் மூலம்தான் அச்சுப் பண்பாட்டு உருவாக்கத்தைக் கணிக்க முடியும். இவ்வகைப் பண்பாட்டைக் கண்டறியும் நேரத்தில், தமிழ்ச்சுழல் குறித்த ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன. விரிவான விவரண ஆவணங்களும் பரவலாக அறியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இச்சிக்கலோடு, அச்சு கருவி வழியிலான உற்பத்தியின் நுகர்வு வரலாற்றை நாம் கண்டறிய வேண்டும். அதன் மூலம் தமிழ் அச்சுப் பண்பாடு என்ற கருத்துருவாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அச்சுப்பண்பாட்டின் அடிப்படையாக அமையும் தமிழ்ச்சூழலின் எழுத்துப் பயிற்சி உருவான முறை குறித்தும் அறிவது அவசியம். பிராமி எழுத்து வடிவங்கள் குறித்து ஆய்வுசெய்துள்ள ஐராவதம் மகாதேவன் அவர்கள், சங்க இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு பெயர்ச்சொற்கள், பிராமிக்கல்வெட்டு ஒன்றை நடுகல் மூலம் கண்டறிந்துள்ள பேரா. கா. இராஜன் அவர்கள், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியச் செய்திகள், நடுகல் பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படுவதாகக் கூறுகிறார். இச்செய்திகள் தமிழ்ச் சமூகத்தின் தொடக்க கால எழுத்துப் பயிற்சி குறித்து அறிவதற்கு வாய்ப்பாக இருக்கிறது.

பிராமிக் கல்வெட்டுப் பரவல், அதாவது, கல்வெட்டுக்கள் கிடைத்த இடங்களின் அடிப்படையில், எழுத்தறிவுப் பரவல் பண்டைச் சமூகத்தில் விரிவாக இருந்தது என்பது ஐராவதம் மகாதேவன் அவர்களின் கருத்தாகும். இவ்வகையான எழுத்துப்பயிற்சி காலந்தோறும் எவ்வகைப் பரிமாணத்தை உள்வாங்கிச் செயல்பட்டது என்பது குறித்து அறிவது அவசியம். அச்சுக்கருவி புழக்கத்தில் வந்தபோது இவ்வகை எழுத்துப்பயிற்சி எவ்வகையில் இருந்தது என்பது முக்கியம்.

திண்ணைப் பள்ளிக்கூடங்களுக்கும் சுவடிகள் உருவாக்கத்திற்கும் தொடர்பு இருந்தது. திண்ணைப் பள்ளிகளில் போதிக்கப்பட்டவைகள் ஓலைச் சுவடிகளில் பதிவு செய்யப்பட்டன. அதனை மாணவன் சுமந்து சென்றான்; ஓலைத்தூக்கு என்ற தொடரும் நடைமுறையில் இருந்தது. பதிவுமுறைகளைக் கையில் எடுத்துக்கொண்ட சமயம் சார்ந்த நிறுவனங்கள், ஓலைச்சுவடி நூலகங்களை உருவாக்கின. அவை பெரிதும் சமயம் சார்ந்த சுவடிகளே பாதுகாக்கப்பட்டன. குறிப்பிட்டச் சமயம் அல்லாத பிற சமயங்கள் சார்ந்த சுவடிகள், பாதுகாக்கப்படவில்லை. இதனால்தான் பௌத்த சமணம் சார்ந்த தமிழ்ச்சுவடிகள் பெரிதும் நமக்குக் கிடைக்காது போயிற்று. சைவ சமயச் சுவடிகளே அதிகம் கிடைத்தன.

பண்டைய எழுத்தறிவு ஊடகமான சுவடிகள் எழுதுதல், சுவடிகள் பாதுகாத்தல், சுவடிகள் படி எடுத்தல், சுவடிகளை வாசித்தல் எனும் பல்நிலைகள் சுவடிப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள உதவும். அச்சுப் பண்பாட்டின் முன் வடிவமான சுவடிப் பண்பாடு குறித்தும் விரிவான விவரணப் பதிவுகள் நம்மிடம் இல்லை. இதனால் காலந்தோறும் எழுத்துப்பயிற்சி எவ்வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அறிவதிலும் சிக்கல் இருக்கிறது.

சமயம் சார்ந்த மடங்கள், கோயில்கள், திண்ணைப் பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றிடையே இருந்த உறவுமுறை குறித்த அறிவு நமக்குத் தேவை. இந்தப் பின்புலத்தில்தான் தொண்டு நிறுவனங்கள், அவை உருவாக்கும் பள்ளிகள், இவைகளின் மூலமாக உருவாகும் எழுத்துப்பயிற்சி, அத்தன்மைகளிலிருந்து உருவாகும் வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றை நாம் கண்டறிய முடியும். அச்சுக்கருவியை அறிமுகப்படுத்திய கிறித்துவ தொண்டு நிறுவனங்களுக்கும் அவை உருவாக்கிய கல்வி நிறுவனங்கள் எழுத்துப் பயிற்சி அளித்த முறைகளுக்குமான உறவுகள் குறித்து விவாதிப்பது அவசியம்.

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை, பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் கிறித்துவ நிறுவனங்களே உருவாக்கியுள்ளன. மரபு சார்ந்து உருவான எழுத்தறிவுப் பயிற்சியும் சந்திக்கும் புள்ளிகளையும் நாம் கண்டறிய வேண்டும். இதன்மூலம், புதிய வாசிப்புப் பழக்கம் உருப்பெற்றதை அறியலாம். கல்வி நிறுவன உருவாக்க வரலாற்றோடு தொடர்புடையதாக எழுத்துப்பயிற்சியும் வாசிப்புப் பழக்கமும் அமைவது குறித்து நாம் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் அச்சுப் பண்பாட்டின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

அச்சுக்கருவி வருகை, எழுத்தறிவுப் பயிற்சி, வாசிப்புப் பழக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாக அச்சுஊடகம் அமைகிறது. இவ்வூடகம் அடிப்படையில் மூன்று துறைகளாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அறிவிப்பை அடிப்படையாகக் கொண்ட சுவரொட்டிகள், அறிக்கைகள், துண்டறிக்கைகள், சிறுவெளியீடுகள் சார்ந்த அச்சுச் செயல்பாடுகள். இதனைச் சமய நிறுவனங்களும் அரசியல் இயக்கங்களும் பெரிதும் பயன்படுத்திக்கொண்ட பண்பாடு குறித்து அறிவோம். இது தொடர்பான விரிவான விவரணங்களைப் பதிவு செய்வதும் உரையாடுவதும் அவசியமாகும்.

கால ஒழுங்கை அடிப்படையாகக் கொண்டு, தொடர் நிகழ்வாக அச்சிடப்பட்டு வழங்கும் துறை உருவானது. இதனை இதழியல் என்று பொதுநிலையில் அழைக்கிறோம். கால ஒழுங்கு, அச்சிடும் வடிவ ஒழுங்கு, அச்சிடப்படும் பொருண்மை ஆகியவை சார்ந்து இத்துறையை நாம் மதிப்பிடமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் தொடங்கி, இதழியல் எனும் அச்சு ஊடகம், தமிழ்ச் சமூகத்தில் செயல்படும் பரிமாணங்கள் விரிவானது. பல்வேறு சமூக இயக்கங்கள் குறித்த ஆவணங்களாகவும் அவை உள்ளன. இவற்றின் நிலைபேறு குறைந்த கால அளவைக் கொண்டிருப்பதால், அவை பதிவு செய்யப்படாமல் போயின. இதனால், தமிழ் அச்சுப் பண்பாட்டை அறிய உதவும் முதன்மையான தரவுகளான இதழ்கள் குறித்து அறிவது சிக்கலாக இருக்கிறது. இதழ் வழி உருவான அச்சுப் பண்பாட்டின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அணுவியக்கத்தைக் கண்டறிய முடியும்.

வெகுமக்களின் கேட்பு, காட்சி ஊடகப்பண்பாடுகளி லிருந்து அச்சு ஊடகப் பண்பாடு வேறுபடும் புள்ளிகளை அறிய இதழ்களே முதன்மையாக அமைகின்றன. தமிழச்சுப் பண்பாட்டைக் கண்டறிய முனையும் மாணவனுக்கு இதழியல் சார்ந்த பல்பரிமாணங்களே முதன்மைத் தரவுகள் ஆகும். இவை காலந்தோறும் பல்வேறு பொருண்மைகளில் செயல்படும் பாங்கு குறித்து அறிவதின் மூலம், தமிழ் அச்சுப் பண்பாட்டை நாம் உய்த்துணர வாய்ப்புண்டு.

ஒவ்வொரு சமூகத்தின் ஆக்கங்கள் என்பவைப் பல வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. இவற்றைக் ‘கலை இலக்கியங்கள்’ என்ற பொதுத் தொடரால் குறிக்கிறோம். கலை - இலக்கியங்கள் என்பவை மனித வெளிப்பாடுகளே. வெளிப்படுத்தும் முறை சார்ந்து அவை அடையாளப்படுத்தப் படுகின்றன. வாய் மொழி மரபு எழுத்து வடிவமாகப் பதிவு செய்யப்படும்போது, அது தவிர்க்க இயலாமல் அச்சுப் பண்பாட்டோடு தொடர்பு கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது. எனவே, மனிதர்களால் உருவாக்கப்படும் எழுத்துவடிவிலான ஆக்கங்களுக்கும் அச்சுப் பண்பாட்டிற்கும் நெருக்கமான உறவு உருப்பெற்று வருகிறது. இவை ஒரு பக்கம் இதழியலாகவும் இன்னொரு பக்கம் புத்தக உருவாக்கமாகவும் அமைந்துவிடுகிறது.

இதழியல் இயக்க முறையிலிருந்து, புத்தக உருவாக்கம் மற்றும் புத்தக வாசிப்பு வேறுபட்டதாக அமைகிறது. இத்தன்மை அச்சுப் பண்பாட்டின் இன்னொரு பரிமாணமாக அமைந்து விடுகிறது. கேட்பு மற்றும் காட்சி ஊடகத் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் புத்தக உருவாக்கம் அமைகிறது. வெகுசனத்தன்மை சார்ந்த புத்தக வாசிப்பு, தொழில்நுட்பம் சார்ந்த புத்தகப்படிப்பு, பல்வேறு சமூகம் சார் உரையாடல்களை முன்னெடுக்கும் ஆக்க இலக்கிய வடிவங்கள் என்று புத்தக உருவாக்கமும் புத்தக வாசிப்பும் செயல்படுகிறது. இத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, அச்சுப் பண்பாடு எவ்விதம் உருப்பெறுகிறது என்ற உரையாடலும் நமக்குத் தேவைப்படுகிறது. இத்தன்மைகள் இலக்கிய வகைமைகளைத் (Gerne) தோற்றுவிக்கின்றன என்ற சுவையான வரலாறும் இதற்குள் அடங்கியிருக்கிறது.

அச்சுப் பண்பாடு என்பது குறிப்பிட்ட மொழி மற்றும் இனம் சார்ந்த செயல்பாடுகளை அடிப்படையாகக்கொண்டது. அச்சுக்கருவி அச்சமூகத்தில் புழக்கத்திற்குக் கொண்டு வரப் பட்டமுறையும் அதன் உற்பத்தியை நுகர்ந்த முறையும் குறித்த உரையாடலாக அச்சுப் பண்பாடு அமையலாம். தொடர்ச்சியான இலக்கிய உருவாக்க மரபு, அச்சு வழி எவ்வகையால் மடைமாற்றம் பெறுகிறது என்பதும் அச்சுப் பண்பாட்டின் தனித்தன்மையாகக் கருதலாம். மேற்கூறிய தன்மைகளை, தமிழ்ச்சூழல் சார்ந்து, விரிவான தரவுகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும்.

இதன் மூலம் தமிழில் உருவான அச்சுப்பண்பாட்டைக் கட்டமைக்க முடியும்.

இதன்மூலம் நவீன தமிழ்ச் சமூக உருவாக்க வரலாற்றையும் புரிந்து கொள்ள முடியும். மேலே விவரித்த அச்சுப் பண்பாட்டின் பல்பரிமாணங்கள் குறித்துத் தொடர்ந்து வரும் இதழ்களில் உரையாடுவோம். அவ்வுரையாடலுக்கான முன் அறிமுகமாக மேல் கூறியவற்றைக் கருதிக் கொள்ளலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com