Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

தெக்கிக் கொல்லையும் காதறுந்த ஆடும்
வே. இராமசாமி

இன்னும் வேறென்ன கேடு வேண்டும் என்று கேட்கிற அளவுக்கு விவசாயம் சீரழிந்து விட்டது. எப்படித் தாய்மொழி தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவாகி உள்ளதோ, அதைப்போலவே விவசாயத்தை மேற்கொள்ளாத ஒரு தலைமுறையும் இங்கு உருவாகிவிட்டது. இச்சூழ்நிலையில் மண் சார்ந்த - உழவு சார்ந்த வாழ்வியலின் அவலங்களை, பெருமிதங்களை, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவரக்கூடிய கவிஞர்களுள் சிவராஜ் வெகு முக்கியமானவர். அவரது சமீபத்திய நெக்குருகச் செய்யும் கவிதைத் தொகுப்பு “நிலமிசை”.

நிலமிசையில் விதைமுளைக்கும். ஆனால் இவரது கவிதைகளில் நிலமே விதையாக முளைத்துள்ளது. குழந்தையின் பனிப்படலங்கள் போன்ற கண்களினூடே உருவங்கள் சரியாகப் பதியாத போதே நிலம் நெஞ்சில் படிந்து விடுகிறது. ஏனெனில் விவசாயி வீட்டுப் பிள்ளைகளின் தொட்டில் வீட்டில் ஆடியதை விட காட்டிலாடியதே அதிகமாக இருக்கும். சிவராஜிக்கும் அவரது தெக்கிக் கொல்லை அப்படித்தான் போலும். வளர்ந்து தன்னந்தனியாக தனது கன்னி உழவை நிலத்தில் நிகழ்த்தும் போது கிராதி கிராதியாய் அது பெயர்ந்திருக்கிறது. அந்தத் துண்டுகளை - உழவுக் கட்டிகளை வார்த்தையில் வைத்து தெக்கிக் கொல்லை என்ற கவிதையில் நம்மை நெகிழ வைக்கிறார்.

ஐப்பசி மழையில் / கொடி அழுகி / கடல மொளச்சுப் போனாலும் / கம்பு எங்களுக்கு / கஞ்சி ஊத்தியிருக்கு. இந்தக் கவிதை வரிகளில் பசுமைப் புரட்சிக்கு முந்தியிருந்த பயிர்த் தொழில்நுட்பமொன்று பதிவாகியுள்ளது. நிலத்தில் - வீட்டில் எப்போதும் உணவுப் பயிர் ஒன்று இருக்கும். ஒன்றில்லா விட்டால் ஒன்று வவுத்துப் பசி போக்கும். உணர்வு பூர்வமாகச் செய்தார்களோ இல்லையோ உணவுப் பயிர் எல்லாக் காலங்களிலும் மகசூலில் இருக்கும். இப்போது எல்லாம் முடிந்த காலத்தில் ஏழைகளுக்கு ரெண்டு ஏக்கர் தரப் போகிறார்களாம் நல்லது. ஏற்கனவே உள்ள பூமியில் விவசாயம் நன்முறையில் நடக்க வழியில்லையே என்ற கேள்விக்கு விடையில்லை. உழவன் சாகவேண்டுமெனில் பூச்சிமருந்து குடிக்கவேண்டாம்; பருத்தி பயிரிட்டால் போதும் என்ற நிலை இன்றுள்ளது. இம்மாதிரியான பிரச்சினைகளைப் பேசுதலே மண் சார்ந்த கவிதைகளின் அடுத்த கட்டமாக இருக்க முடியும். வெறும் பதிவுகளை வைத்து மாரடிப்பதை இனி விடவேண்டும்.

‘வரவுத்திருவை’ பற்றிய விரிவான கவிதையொன்று இந்த ‘நிலமிசை’த் தொகுப்பை அணி செய்கிறது. உமிய தள்ளிவிட்டு / பீராஞ்சு பொடச்சு / கல அரிசி அளந்தாக்க / படி அரிசி கிடைக்கும் / பகல் பொழுது ஓடும் / சுழலும் திருவைப்போல் / இவ்வரிகளைப் படிக்கும் போதே வாசகன் தலையில் கரகரவெனத் திருவைச் சுற்றுகிற பிரேமை தட்டிவிடும். அந்த அளவுக்கு அச்சு அசலாக அமைந்துள்ளது. அணிந்துரையில் பழநிபாரதி திருவையைப் பற்றி இதுவரை யாரும் எழுதவில்லை என்று பாராட்டிச் சொல்லியுள்ளார்.

அதைப்போலவே ‘விடிவிளக்கு’என்கிற கவிதை நம் கவனத்தைக் கவர்கிறது. இதில் கவிஞர் சிவராஜ் முந்திரிக் கொட்டை பொறுக்கும் பெண்ணின் பாடுகளை வருணித்துள்ளார். காலில்தைத்த / காரமுள்ளின் வலி / செருப்பாய் ஆகும் / குளவி கொட்டி / கண்ணு வீங்கியிருக்கும் / முந்திரிப்பால் / பட்டயிடமெல்லாம் / வெந்து போயிருக்கும் - இவ்வளவு துன்பங்களோடு வீட்டிற்கு வந்தவள் பிள்ளைக்கு வெட்டி வெட்டி இழுக்கும்.

அவ்வேளையில் அவளின் நிலையை “இரவெல்லாம் / இவளும் எரிவாள் / விளக்கோடு” என்று கவித்துவம் ததும்ப படம் பிடிக்கிறார் நூலாசிரியர்.

‘செவலையெனும் சித்தப்பா’என்ற இத்தொகுப்பிலுள்ள கவிதை முத்தாய்ப்பாக உள்ளது. ஆநிரைகளை விட்டுவிட்டு உழவனின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. அது நடந்ததுயெல்லாம் / நேர் கோடாக்கினால் / ஆசியாக் கண்டத்தையே / அளந்து வந்திருக்கும் / பொய்ய வயக்காட்டில் / இடுப்பு மட்டும் சேற்றிலே / தவழ்ந்து கொண்டு வரும் பொழுது / செவலையைப் பார்க்க / பாவமாக இருக்கும் / அன்னிக்கு அதுக்கு / புண்ணாக்கு கிடைக்கும் / அப்பா போனதுக்கப்புறம் / செவலைதான் / எங்களுக்குச் சோறு போட்டுச்சு / எங்களை விட்டுப் பிரிந்த / செவலை செத்துப் போனாலும் / எந்தத் தப்பிலாவது / தவிலிலாவது / அழுது கொண்டுதான் இருக்கும் / எங்களைப் போல... இந்தக் கவிதை முடியும் இடத்தில் நமக்குக் கண்ணீர்த்துளி தொடங்கிவிடும். நல்ல கவிதைகள் அழவைக்கும். ஒரு நாள் எழவைக்கும். அந்தச் சக்தி சிவராஜின் கவிதைக்கு இருக்கிறது.

மொத்தத்தில் இக்கவிதைத் தொகுப்பு உண்மையைப் பேசுகிறது. கவிதைக்கும் கவிஞனின் வாழ்க்கைக்கும் தொடர்புள்ளது. காதல் என்றும் புரட்சி என்றும் அம்மையின் மேன்மை என்றும் இது கொட்டி முழக்கவில்லை. தன்னைத் தானே மேம்படுத்தி - சிறப்புரைத்து - இது பொய்யுரைக்கவில்லை. எழுதியபடியே வாழ்கிறான் ‘நிலமிசை’யில் இக்கவிஞன். தமிழ்நாட்டில் எழுதியபடியே கவிஞன் வாழ்கிறானென்றால் அது அரிதல்லவா? முன்னுரையில் அவரே சொல்வதுபோல் படித்தது மறந்துவிடும். பட்டபாடு மறக்க முடியாது.

நிலமிசை
ஆசிரியர் : சிவராஜ்,
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 14, விலை : ரூ. 45.00.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com