Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

யதார்த்தவாதம்
எஸ்.தோதாத்ரி

இன்றைய நாகரீகம் யதார்த்தவாதத்தையும், மார்க்சீயத்தையும் கண்டனத்திற்குள்ளாக்குவது ஆகும். உயர்மட்ட விவாதங்களில் இது இன்று அதிகமாக இடம் பெறுகிறது. யதார்த்தவாதம் அதன் இடத்தைப் பறிகொடுத்து விட்டது. யதார்த்தவாதம் மொத்தத்தின் தத்துவம். அது வன்முறையானது. அதன் இடத்தில் மாந்திரீக யதார்த்தவாதம் பிடித்துக் கொண்டது. இது பின் நவீனத்துவவாதிகளின் குரல். இவ்வாறு கூறுபவர்களில் இடது சாரிகளும் இருப்பதுதான் வியப்பிற்குரியது. மார்க்சீயத்தை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ள இடதுசாரிகளில் பலர் அவர்கள் கொள்கை எது என்று அறியாமலேயே அதற்கு நேர் எதிராகப் போவதுதான் வியப்பிற்குரியது.

யதார்த்தவாதம் பற்றிப் பேசும் பொழுது முதலில் உள்ள விஷயம் அதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலேயே பேசுவது அல்லது அவரவர்கள் மனதில் எது தோன்றுகிறதோ அதுதான் யதார்த்தவாதம் என்று கூறுவதும் ஆகும். முதலில் யதார்த்தவாதத்தின் கூறுகளைச் சுருக்கமாகக் காண்போம்.

கலையின் அடிப்படையே மனிதனுக்கும் சுற்றுப்புறத்திற்கும் உள்ள உறவு ஆகும். இங்கு சுற்றுப்புறம் என்பது இயற்கை அல்ல. மனிதன் உருவாக்கிக் கொண்ட சமூக அமைப்பு அது. சுற்றுப்புறம் மனிதனின் மனதில் பிரதிபலிக்கிறது. அதனை அவனது அனுபவங்களுக்கு ஏற்ப அவன் வெளிப்படுத்துகிறான் இது. அறம், புறம் ஆகியவற்றின் கிரியை காரணமாக உருவாகிறது. இதனை வெளிப்படுத்திக் காட்டும் பொழுது எழுவதுதான் கலையும், விஞ்ஞானமும் இதில் கலையானது புறத்தை அகத்துடன் இணைத்து உணர்ச்சி மயமாகக் காட்டுவது ஆகும். விஞ்ஞானம் அகத்தைப் புறத்துடன் இணைத்து துல்லியமாகப் பிரதிபலிப்பது ஆகும். இது அடிப்படையான கருத்து.

இதில் யதார்த்தவாதம் என்பது சில பிரத்தியேகத் தன்மைகளுடன் சுற்றுப் புறத்தைப் பிரதிபலிக்கும் போக்கு ஆகும். மற்ற கலைக் கோட்பாடுகளை விட யதார்த்தவாதம் அதிகமான அளவிற்குச் சமூகத்தினைப் புறவயமாக ஏற்றுக் கொண்டு அதனைப் பிரதிபலிக்கிறது. அதற்கும் சமூக நிகழ்வுகளுக்கும் நெருக்கம் அதிகம். இங்கு அகவையப்படுத்தும் முயற்சி குறைவு.

இந்த முயற்சியில் ஒரு யதார்த்த வாதி அதிகமான அளவு நேரடியான சமூக ஆய்வில் ஈடுபடுகிறான். இதுதான் யதார்த்தவாதத்தை மற்ற இலக்கியக் கோட்பாடுகளில் இருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கியமான அளவுகோல். இதனை யதார்த்தவாதம் பற்றிப் பேசுபவர்கள் கவனிப்பதே இல்லை. மாறாக இதற்கு நேர் எதிரானவற்றை எல்லாம் யதார்த்தவாதம் என்று கூறுகிறார்கள். இந்த ஆய்விற்கு ஒரு உதாரணம் அண்மையில் வெளியான ‘யாத்திரை’ என்ற நாவல். மாற்குவால் எழுதப்பட்ட இந்த நாவல் ஒரு பிரச்சினையை அது தலித் கிருஸ்துவர்களுக்கும், கிருத்துவ ரெட்டியார்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையை நுணுக்கமாக ஆராய்கிறார். இந்த ஆய்வானது ஒரு நுண் ஆய்வு. ஆனால் இதில் இந்திய சமூக அமைப்பில் உள்ள ஒரு பொதுப் பிரச்சினை இடம் பெறுகிறது. அது சாதீயம். அதே சமயத்தில் மாற்கு இதற்கு உள்ளாக உள்ள பொருளாதாரப் பிரச்சினையையும் எடுத்துக் காட்டுகிறார். இது தீர்க்கப்படாமல் சாதீயம் தீர்க்கப்பட முடியாது என்பது மறைமுகமான கருத்தாக இந்த நாவலில் இடம் பெறுகிறது. இது போன்று சமூக ஆய்விற்குப் பல உதாரணங்களை அண்மைக்கால இலக்கியங்களில் இருந்தே காட்ட முடியும். இந்த ஆய்வு இந்த அளவிற்கு ஆழமாக மற்ற இலக்கியக் கோட்பாடுகளில் இடம் பெறுவதில்லை.

யதார்த்தவாத இலக்கியங்களில் நாவல், சிறுகதை ஆகியவற்றில் உள்ளது வகைப்பாடான கதாபாத்திரங்கள். அதாவது யதார்த்தவாதக் கதாபாத்திரத்தின் தனி நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியவர்கள். அவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட முறையில் தான் இயங்குவார்கள். யாத்திரை நாவலில் உள்ள ராயப்பரெட்டி, தும்மா ரெட்டி ஆகியோர் கிருத்துவ நில உடைமையாளர்கள். இவர்கள் நடந்து கொள்ளும் முறை பண்ணையார்களுக்குரிய பண்புகளை அடித்தளமாகத்தான் கொண்டிருக்கும். அதனால் தான் இவர்கள் நாயுடு, நாடார் என்று தங்களைப் போன்றவர்களை மதத்தையும் மீறி ஒன்று சேர்க்கின்றனர். இது வகைப்பாடான பாத்திரப் படைப்பு எனப்படும். இது யதார்த்த வாதத்தில் இயங்கியல் தன்மை யோடு இடம் பெறுகிறது.
யதார்த்தவாதத்தில் காரண காரியத் தொடர்பு இடம் பெறுகிறது. இது மற்ற இலக்கியக் கோட்பாடுகளில் அதிகமாக இடம் பெறுவதில்லை. மேலே கூறிய ‘யாத்திரை’ நாவலில் ஆசிரியரது நோக்கம் சாதீயக் கொடுமைகளுக்கு எது காரணம் என்பதை விளக்குவது ஆகும். அவரது விடை அது பண்பாட்டு அம்சம் என்று இருக்கலாம். ஆனால் இது காரணம், இதன் விளைவு தலித் கிருத்துவர்கள் மீதான அடக்குமுறை என்று கூறுவதை நாம் இங்குக் காண இயலுகிறது.

இந்த முறையில் அமைந்துள்ள யதார்த்த வாதம் சுபாவ யதார்த்தவாதம், விமர்சன யதார்த்தவாதம் சோஷலிச யதார்த்தவாதம் என்ற கட்டங்களைத் தாண்டி வந்துள்ளதைக் காணலாம். இது தமிழ்நாவலில் ‘கமலாம்மாள் சரித்திரம்’ புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி’ ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ என்ற கட்டங்களாக வளர்ந்துள்ளதைக் காண இயலும். பஞ்சும் பசியும் துவங்கி இன்று வெளிவரும் தலித் நாவல்கள், பெண்ணிய நாவல்கள் அனைத்துமே சோஷலிச யதார்த்தவாதக் கட்டத்தில் உள்ளவை எனலாம். ‘கூகை’ சோளகர் தொட்டி, கோவேறு கழுதைகள், தகப்பன் கொடி, வன்மம், யாத்திரை ஆகியவை எல்லாமே உழைக்கும் மக்கள் போராட்டத்தைச் சித்திரிப்பவை. இவற்றைக் கவனிக்காமல் சோஷலிச யதார்த்த வாதம் செத்து விட்டது என்று கூறுபவர்கள் சோஷலிசம், மார்க்சீயம், யதார்த்தவாதம் ஆகியவற்றை நிராகரிப்பவர்களே ஆவர்.

யதார்த்தவாதத்தினையும் இயல்பு நெறியையும் ஒன்றாக காணும் போக்கும் இன்று பலரிடம் காணப்படுகிறது. உதாரண மாக பேரா. சிவத்தம்பி ‘உங்கள் நூலகம்’ பத்திரிகை (ஜூலை 2006) இதழில் ‘யதார்த்த வாதம் சோஷலிச யதார்த்தவாதம், மார்க்சீயம் ஆகியன பற்றிய கட்டுரையைக் குறிப்பிடலாம். இதில் இந்தக் குழப்பம் காணப்படுகிறது. இயல்பு நெறிக்கும் யதார்த்த வாதத்திற்கும் உள்ள இவை சமூகத்தைப் புற வயமாகக் அணுகுகிறது என்பது தான் ஆனால் இயல்பு நெறியில் அகத்தை விட புறத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. யதார்த்தவாதத்தில் அகம், புறம் ஆகியவற்றின் இயங்கியல் உறவு இடம் பெறுகிறது.

இயல்பு நெறியில் இயந்திர கதியிலான பொருள் முதல்பார்வைதான் இடம் பெறுகிறது. இயல்பு நெறியாளர்கள் மனிதனை இயற்கையின் ஓர் அம்சமாகத் தான் காண்கின்றனர். அவனை விலங்கு நிலையில் காண முற்படுகின்றனர். இது பல தமிழ் நாவல்களில் அதிகமான சூழ்நிலை வர்ணனை என்ற அளவில் இடம் பெறுவதைக் காண முடியும். யதார்த்த வாதம் இதற்கு நேர் மாறானது. மனிதன் அங்கு மையப்படுத்தப் பட்டு, அவன் வாழும் முறை, மாறுதல், எதிர்காலம் எல்லாம் அது உள்ளடக்குகிறது. விமர்சனம் இடம் பெறுகிறது. எனவே இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இயல்பு நெறிக்கு எமிலிசோலாவையும், யதார்த்தவாதத்திற்குப் பால்சாத்ரேயையும் மேலைய உலகினரையும் உதாரணமாகக் கூறுவர். இது மேற் போக்கான கூற்று அல்ல ஆழமான பாகுபாடு ஆகும். இயல்பு நெறிக்கு ஓர் உதாரணமாக ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் என்ற நாவலைக் கூறலாம். இதன் ஹென்றி மனிதனது ஆரம்ப கால விலங்கு நிலைக்குச் செல்கிறான். அது தான் இந்த நாவலில் இடம் பெறும் விளையாட்டு. எனவே இயல்பு நெறியை யதார்த்த வாதத்துடன் குழப்பக் கூடாது. ஏனென்றால் அதில் சமூக ஆய்விற்குப் பதிலாக, காரண காரியத் தொடர்புக்குப் பதிலாக இயக்கமற்ற சித்திரமே இடம் பெறுகிறது. கிருஸ்டோபர் காட்வெல் இதனை இயக்க மறுப்பியல் நிலை என்று கூறுவார். இது யதார்த்தவாதத்திற்கு நேர் எதிரானது.

யதார்த்தவாதத்திற்கு மாற்றாக அல்லது அதன் தொடர்ச்சியாக இப்பொழுது பல அறிஞர்கள் பரிந்துரைப்பது மாறுதல் ரியலிசம் அல்லது மாந்திரீக யதார்த்தவாதம். தென் அமெரிக்கச் சூழ்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணம் கொண்ட முறையாக இது தோன்றியிருக்கலாம். ஆனால் அதிகமான பண்பாட்டு வளர்ச்சியுள்ள இந்தியாவில் இது தேவைதானா என்று யோசிக்க வேண்டும். யதார்த்தம் குழப்பமானது. அதை நேரடியாகப் பிரதிபலிக்க முடியாது என்ற சிந்தனை அடிப்படையில் தோன்றியது மாஜிகல் ரியலிசம். இதற்குப் பின்புலமாக இருப்பது பொருள்முதல் வாதம் அல்ல கருத்து முதல் வாதம், பிராய்ட், யுங், அட்லர், ஜெஸ்டால்ட் ஆகியோரது உளவியலுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு. யதார்த்த உண்மைகளை நேரடியாகக் கூறாமல் பூடகமாக, புதிராகக் கூறுவது என்பது இது. இதனை, தோற்றத்தினைப் பன்னாட்டு மூலதனத்தின் வியாபகத்துடன் இணைத்துக் காணலாம். இதன் அடிப்படையில் தோன்றிய தமிழ் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் யாவுமே இலக்கியத்தினை ஒரு குறுகிய குழுவின் சாரமாகவே ஆக்கியுள்ளது.

இதற்கும் யதார்த்தவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டால் தெளிவாக விளங்கும்.

யதார்த்தவாதத்தில் சமூகம் நேரடியாக புறவயமாக அணுகப்படுகிறது. மாஜீகல் ரியலிசத்தில் புறவயத்தை விட அகவய அணுகுமுறை அதிகம். அதனால் தான் குழப்பமான யதார்த்தத்தை நேரடியாகக் கூறுவதை விட, பல மனப்படி மங்களை அதன் மீது ஏற்றி ஒரு மாந்திரீகமாகக் கூறுவது சிறந்தது என்று மாஜிகல் ரியலிஸ்ட்கள் கூறுகின்றனர். அதனால்தான் தொல்கதைகள், சடங்குகள், புராதன நம்பிக்கைகளை அதிகமாக இதில் பயன்படுத்துகின்றனர். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இதற்கு ஒரு உதாரணம்.

யதார்த்தவாதத்தில் சமூக ஆய்வு மையமாக இடம் பெறுகிறது. மாந்திரீக யதார்த்தவாதத்தில் இந்த ஆய்வு அதிகம் இடம் பெறுவதில்லை.

யதார்த்தவாதத்தில் காரண காரியத் தொடர்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாந்திரீக யதார்த்தவாதத்தில் இது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பின் நவீனத்துவத்தின் அங்கமானது தானே மாந்திரீக யதார்த்தவாதம். யதார்த்தவாதத்தில் தர்க்கரீதியான முறை உள்ளது. மாந்திரீக யதார்த்தவாதம் அதர்க்கமானது.

யதார்த்த வாதத்தில் வரலாற்று முறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாந்திரீக யதார்த்தவாதத்தில் இது மறுக்கப்படுகிறது. கணம் தான் முக்கியம், வரலாறு பழங்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் அவசியமில்லை என்பது மாந்திரீக யதார்த்தவாதம் காலம் முன்னுக்குப் பின் முரணாக சின்னாபின்னமாக மாந்திரீக யதார்த்தவாதத்தில் இடம் பெறுகிறது.

இந்த இலக்கியப் போக்கினை இன்று சோஷலிச யதார்த்தவாதத்திற்கு மாற்றாகச் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சோஷலிச யதார்த்தவாதத்தின் போக்குவேறு மாந்திரீக யதார்த்த வாதத்தின் போக்குவேறு என்பதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com