Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

திரு.வி. கலியாண சுந்தரனார்
ஆர். பார்த்தசாரதி

தமிழ்த்தென்றல் எனத் தமிழ் மக்களால் புகழ்ந்து பாராட்டப் பெற்ற திருவாரூர் விருத்தாசல முதலியார், கலியாண சுந்தரனார் (திரு.வி.க) இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட ஈடிணையற்ற ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர். பெரியார் ஈ.வே. ராமசாமி, ம. சிங்காரவேலு, திரு. வி. கலியாண சுந்தரனார் ஆகிய மூவருமே தமிழகம் கண்ட முற்போக்குச் சிந்தனையாளர்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச் சமுதாயத்தைச் செல்லரித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும், சாதிச் சீர் கேடுகளையும் துணிந்து கேள்வி கேட்டவர் பெரியார் ஈ.வே.ராமசாமி. மூடப்பழக்க வழக்கங்கள், சாதி, சமய வழக்குகள் எல்லாவற்றையும் மடியச் செய்து புதியதோர் பொதுவுடைமைச் சமுதாயம் காணத் தம் எழுத்தாலும், பணியாலும் அறிவியல் நோக்குடன் தமிழ் மக்களைத் திரட்டியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். ஆனால், அதேபோது மூடப்பழக்க வழக்கங்கள் சாதி ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்த ஆன்மநேய இறை நம்பிக்கையுடைய தமிழகத்தைக் காண விழைந்தவர், தொழிற்சங்க இயக்க முன்னோடி திரு.வி. கலியாண சுந்தரனார்.

திரு.வி. கலியாண சுந்தரனார் செங்கற்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் 1883 ஆகஸ்ட் மாதம் 26 அன்று தம் பெற்றோருக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவருடைய வாழ்க்கைக் குறிப்புக்களில் (பக்கம் 18) “பிறப்பு வேண்டும், அப்பிறப்பு பயன் கருதாத தொண்டுக்குப் பயன்படுதல் வேண்டும்” என்று கருதுவதாகக் கூறியுள்ளார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி விருத்தாசல முதலியார் சென்னை ராயப்பேட்டைக்குக் குடியேறினார். (1890) திரு.வி.க.வின் கல்வியும் ராயப்பேட்டையிலேயே தொடங்கிற்று. வெஸ்லி கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து ந. கதிரைவேற் பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்றார். பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை அமைக்கப்பட்டது. கதிரைவேற் பிள்ளை தீவிர சைவ சித்தாந்தவாதி. தமிழை ஆழ்ந்து பயின்றவர். ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர். இவருடைய செல்வாக்கின் கீழ்த் தமிழ் கற்ற கலியாண சுந்தரனார் இயல்பாகவே சைவசிந்தாந்தத்தின் பால் ஈடுபாடு கொண்டார். இளம் பருவத்தில் அவரே சொல்வதுபோல “உடல் தடித்தவன்” மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தந்ததில்லை. சைவத்துக்கு எதிரான கருத்துக்களை ஆதரித்ததும் இல்லை.

அவர் காலத்தில் வைதிகமும், பௌத்தமும் எழுச்சி பெறலாயின. அடையாறு பிரம்ம ஞான சங்கத்தின் தலைவர்களாகயிருந்தவர் இருவர். அன்னிபெசன்ட் அம்மையார் வைதீகத்தை ஆதரித்தார். தேசிய எழுச்சிக்கு வித்திட்டவர் அம்மையார் என்று கருதுவோரும் உண்டு. “ஆல்காட்” என்னும் அறிஞர் பௌத்தத்தை உயிர்ப்பித்தார். இவர் செல்வாக்கின் விளைவாக வந்தவர்களே அயோத்திய தாஸ் பண்டிதர், பேராசிரியர் லட்சுமி நரசு, ம. சிங்காரவேலர் முதலானோர். திரு.வி.க. தொடக்கத்தில் சைவம் தவிர பிற சமயங்கள்பால் காழ்ப்பு, எதிர்ப்புணர்ச்சி கொண்டவராக இருந்தார். பௌத்தக் கூட்டங்களில் கலகம் விளைவிப்பவராகவும் கலகக் குழு தலைவராகவும் இருந்ததாகத் தம் வாழ்க்கை குறிப்புகளில் ஆங்காங்குக் குறிப்பிட்டுச் செல்லுகின்றார். இவ்வாறு தகராறு செய்யப் போன கூட்டத்தில்தான் சிங்காரவேலரிடமிருந்து ‘டார்வினின் கருத்துக்களையும், குறிப்பாகக் கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ என்னும் நூலின் கருத்தையும் அறிந்ததாக நன்றி உணர்வுடன் குறிப்பிடுகின்றார்.

ந. கதிரைவேற்பிள்ளைக்கும், திருவருட்பா இராமலிங்கருக்கும் இடையே கடுமையான முரண்பாடு தோன்றிற்று. ந. கதிரைவேற் பிள்ளை, இராமலிங்கருடைய பாடல்கள் ‘அருட்பா அல்ல மருட்பா’என்று வாதித்தார். இவருக்குத் துணை நின்றவர்கள் மாறுதல் வேண்டாச் சைவ சித்தாந்திகளும், ஆறுமுக நாவலரும் ஆவர். தொடக்கத்தில் திரு.வி.கவும் இந்த அணி சார்ந்தவராகவே இருந்தார். ‘அருட்பா’என்று ஏற்று வாதித்தவர்கள் சைவத்தில் மாறுதல் வேண்டி நின்ற மறைமலையடிகள் தேசிய இயக்கம் சார்ந்த செய்கு தம்பி பாவலர் ஆகியோர். இப்போராட்டம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. தமிழக வரலாற்றில் இது கரும்புள்ளி. திரு.வி. கலியாண சுந்தரனார் நாளடைவில் கருத்து மாறி இராமலிங்கரின் நோக்கையும், போக்கையும் ஆதரித்து, “இராமலிங்கர் திருவுள்ளம்” என்னும் நூல் எழுதினார். அதேபோது அறிவு முதிர்ச்சியும் அரசியல் இயக்கங்களும் அவரை எல்லாச் சமயங்களையும் நேசிக்கும் சமரச வாதியாக்கின. இந்த மாறிய சூழ்நிலையில் அவருடைய மகத்தான பங்களிப்பு இந்தியத் தொழிலாளர்களுக்குக் கிடைத்தது.

1908ஆம் ஆண்டு திரு.வி.க சிம்சன் கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றியபோது பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவராக இலங்கிய கீர்ஹாட்டி சென்னை நகர் வந்திருந்த போது பொருள் வாங்க அக்கம்பெனியை நாடியபொழுது சந்தித்துத் தொழிலாளர் பற்றி உரையாடினார். முதலாம் உலகப் போருக்கு முன் இந்திய நாட்டில் தொழிலாளர்களுக்காகக் கண்ணீர் சிந்தியவர் பலர் இருந்தனர். மும்பையில் ‘லோகாண்டே’ என்பவர் தொழிலாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி எழுச்சி பெறச் செய்வதற்கு முயன்றார். பம்பாய், அகமதாபாத், கல்கத்தா, நாகபுரி, சென்னை ஆகிய நகரங்களில் சமுதாய நலனில்‘நாட்டம் கொண்டோர் தொழிலாளர்களுக்குச் சுகாதார மேம்பாடு, நலவாழ்வு, குடும்பத் தொல்லைகள் நீக்கம் ஆகியவை பற்றி உதவி வந்தனர். ஆனால் தொழிலாளர்கள் வர்க்க அடிப்படையில் உணர்வு கொண்டெழுந்து, தம் குறைகளைத் தாமே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற தேவை முதலாம் உலகப் போர்க் காலத்தில் முகிழ்ந்தது. உணவுப் பொருட்களும், துணிமணிகளும் போர்முனைக்கு அனுப்பப் படவே பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலைவாசிகள் உயர்ந்தன. தொழிலாளர் உளம் குமுறினர்.

1917ஆம் ஆண்டு நடைபெற்ற சோவியத் புரட்சி உலகத் தொழிலாளி வர்க்கத்திற்குத் தெம்பூட்டிற்று. உழைக்கும் வர்க்கத்தின் சிறப்பை உணரச் செய்தது. உலகத் தொழிலாளி வர்க்கத்தைத் தட்டி எழுப்பிற்று.

பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருள் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம் இவற்றின் தாக்கத்தினால் சென்னை பக்கிங்காம் கர்நாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க வேண்டியதன் தேவையை உணர்ந்தனர். சென்னை வெஸ்லி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணி செய்து வந்த திரு.வி.கவைச் சூளை பட்டாளத்தில் வாழ்ந்த செல்வபதி செட்டியார் அணுகிச் சூளை யிலிருந்த வெங்கடேஷ குணாமிர்த வர்ஷணி சபையில் பேச அழைப்பு விடுத்தார். வேண்டுகோளை ஏற்றுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார். அந்தத் தருணத்தில்தான் மகத்தான சோவியத் அக்டோபர் புரட்சியைப் பற்றிய செய்தி கிடைத்தது. கல்லூரிப் பொறுப்பிலிருந்து விடுபட்டு திரு.வி.க “தேசபக்தன்” ஆசிரியரானார். 1918ஆம் ஆண்டு மார்ச்சு 2ஆம் தேதி அன்று நடைபெற்ற ‘குணாமிர்த வர்ஷணி சபைக் கூட்டம்’ நிரம்பி வழிந்தது. தொழிலாளர் கடலெனத் திரண்டனர். அவர்களை அடக்கக் காவல்துறை கடுமையாக நடந்து கொண்டது. ஆனால் தொழி லாளர்கள் அமைதிகாத்தனர். இதுவும் திரு.வி.கவிற்கு தொழிலாளி வர்க்கத்தின் தனிச்சிறப்பை உணர்த்திற்று.

செல்வபதி செட்டியார் ராமஞ்ஜுலு நாயுடு, குத்தி கேசவப்பிள்ளை ஆகியோர் இடை உண்டான சந்திப்பின் விளைவாக 1918ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் சனிக்கிழமை சென்னை தொழிலாளர் சங்கம் கண்டார் திரு.வி.க சென்னை பிரம்ம ஞான சங்கம் சார்ந்த ‘வாடியா’வைத் தலைவராகவும், திரு.வி.கவைத் துணைத் தலைவராகவும் கொண்டமைந்த தொழிற்சங்கமிது. அக்காலத்தில் சில தொழிற்சங்கங்கள் இயங்கி வந்தன. டிராம்வே தொழிலாளர் சங்கம், மதராஸ் தென்மராட்டா ரெயில்வே தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், அலுமினியத் தொழிலாளர் சங்கம், நாவிதர் சங்கம், ரிக்ஷா ஓட்டுநர் சங்கம், போலீஸ் காவலர் சங்கம், தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர் சங்கம் (நாகை) கோவை நெசவுத் தொழிலாளர் சங்கம், மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கம் முதலியன. சர்க்கரைச் செட்டியார், E.L. ஐயர், தண்டபாணி பிள்ளை, ஹரி சர்வோத்தம ராவ், ராஜகோபாலச்சாரியார், ஆதி நாராயணச் செட்டியார், M.S. சுப்ரமணிய ஐயர், வ.உ. சிதம்பரம் பிள்ளை இயக்கத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

சென்னையில் தொழிலாளர் மத்திய சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட சென்னை தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகள் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு அச்சமூட்டின. ஆளுநராக இருந்த வெலிங்டன் திரு.வி.கவை அடிபணியச் செய்ய, தொழிற்சங்க இயக்கத்தில் பங்கு பெறாமல் இருக்கச் செய்யப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். (திரு.வி.கவை நாடு கடத்துதல் உட்பட) முயற்சி பலிக்கவில்லை. 1920-ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று பக்கிங்காம் கர்நாட்டிக் மில் மூடப்பட்டது. ஐரோப்பிய நிர்வாகி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தொழிலாளர் வேலை செய்துவந்த ஒரு பிரிவுக்குச் சென்றபோது அங்குப் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர் துப்பாக்கியினைப் பிடுங்கி அவரை வெளியே அனுப்பினர், அவமதித்தனர் என்பதை நிர்வாகம் காரணம் காட்டிற்று. அந்தக் காலத்தில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இருந்ததில்லை, நாயினும் கேடாக, புழுவாக தொழிலாளர் நடத்தப்பெற்றனர்.

தொழிலாளர் நடவடிக்கையால் கம்பெனிக்கு இழப்பு ஏற்பட்டது என்று நிர்வாகம் 13 பேரை வேலை நீக்கம் செய்தது; சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்படி இழப்புக்குத் தொழிற்சங்கமே காரணம் எனக் கருதி சங்கத்தின் நிர்வாகிகளில் பதின்மர் 7,000 பவுன் அபராதம் செலுத்தவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கிற்று. இது சங்க நிர்வாகிகளிடையே கருத்து வேற்று மைகளை உண்டாக்கிற்று. தீர்ப்பில் சொன்னபடி அபராதம் செலுத்திவிட வேண்டும் என்று சங்கத் தலைவர் வாடியா கருதினார். கருத்துவேற்றுமை முற்றவே வாடியா பதவி விலகவே, திரு.வி.க தலைவராகிச் சங்கத்தைத் தொடர்ந்து நடத்தினார். சக்கரைச் செட்டியார் துணைத் தலைவராகி, வாடியா சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில், இந்தியா சார்பாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். பின் நடந்தது பற்றி திரு.வி.க கூறுகிறார்.

“சில மாதங்கள் கடந்து ஒரு பெரிய வேலை நிறுத்தத்தினிடையில் வழக்கு (9-8-1921) முதலாளிகளாலேயே திரும்ப வாங்கப்பட்டது. இந்திய மந்திரி தொழிற்சங்க சட்டம் ஒன்று நிறுவுமாறு இந்திய அரசாங்கத்தைத் தூண்டியது. அதற்கு இந்திய அரசு ஒருப் பட்டது என்று சொல்லப்பட்டது”. (வாழ்க்கைக் குறிப்புகள் பக். 391-392).

வர்க்க உணர்வும் போராட்ட வழியும், முதலாளித்துவ எதிர்ப்பும் கொண்ட சங்கம் இந்தியாவில் சென்னை தொழிலாளர் சங்கமே என்பது பலர் கருத்து. 1922இல் கயாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்குபெற்ற சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்திய மக்களுக்குத் தேவையானது முழுவிடுதலையே என்று பேசினார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சென்னையில் 1923இல் ‘மே’தினம் கொண்டாடப்பட்டது. (வேன் கார்டு, 15-06-1923).

இதற்குச் சிங்காரவேலரின் உந்துதலும் தலைமையும் காரணம் “இன்றைய இந்தியா” என்னும் நூலில் ரஜனி பாமிதத் முதன்முதலில் 1927இல் பம்பாய் நகரில் மே தினம் கொண்டாடப் பெற்றது என்று குறிப்பிடுகிறார் (பக். 509). சரியான தகவல் பாமிதத்துக்குக் கிடைத்திராது போயிருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது. நாடெங்கிலும் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. 1925ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. இது நாடு முழுவதும் வளர்ந்து வந்துள்ள தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் விழிப்புணர்வைச் சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான சக்லத் வாலா சென்னை வருகை தந்தார்.

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பினால் தொழிலாளிவர்க்கம் மனம் தளரவில்லை நாடு முழுவதும் தொழிலாளர் கிளர்ச்சிகள் பெருகின, போராட்டங்கள் வெடித்தெழுந்தன எனவே வளர்ந்து முதிர்ச்சி பெற்ற பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்திற்குப் பாதுகாப்பளித்த தொழிற்சங்க சட்டம் போலவே இந்தியாவிலும் 1926-இல் இந்திய தொழிலாளர் சங்கச் சட்டம் வைசிராய் நிர்வாக சபையினால் நிறைவேற்றப்பட்டது. (இது பற்றித் திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகளில் பக். 301-302 குறிப்பிட்டுள்ளது மேலே காட்டப்பட்டுள்ளது)

தமிழகம் கண்ட மும்மணிகளான, பெரியார், ஈ.வே.ராமசாமி சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், திரு.வி. கலியாண சுந்தரனார் இடையே நல்ல இணக்கமும், பிணக்கும் இருந்தன. கருத்து வேறுபாடுகள் தோன்றும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் நாகரிகமான, கண்ணியமான முறையிலேயே விமர்சித்து வந்தனர். இருப்பினும் சிற்சில சமயங்களில் கடுஞ்சொற்களை வீசியதும் உண்டு. ஆனாலும் அவர்களிடையேயிருந்த நட்பு பாதிக்கப்படவில்லை.

மூவருமே காங்கிரசில்தான் முதலில் இருந்தனர். ஆனால் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்பதில் ஈ.வே.ராவுக்கும் அன்றிருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மிக ஆழமாயிற்று. எனவே 1925ஆம் ஆண்டு காஞ்சி புரத்தில் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பெரியார், ஈ.வே.ரா.வின் தீர்மானம் ஒன்றை விவாதத்திற்கு அனுமதிக்க மறுத்ததால் ஈ.வே.ரா வெளியேறினார். அவருடன் வெளியேறியவர்களில் ஒருவர் பின்னால் அனைத்திந்திய தொழிற்சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய சக்கரைச் செட்டியார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈ.வே.ரா. வெளியேறியது தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனை.

திரு.வி.கலியாண சுந்தரனார் பழுத்த சைவவாதி, ஆன்மிகவாதி. கடவுள் நம்பிக்கையை அவர் என்றும் விட்டுக் கொடுத்தார் இல்லை. அவர் பத்திரிகை ஆசிரியர். சாது அச்சகம் நிறுவியவர். பல நூலின் ஆசிரியர். சைவம், தமிழ், தேசியம், பெண்ணியம் என்பன பற்றிய நூல்களும் கட்டுரைகளும் வரைந்துள்ளார். இறை நம்பிக்கையுடைய திரு.வி.க. என்றும் சமூக மாற்றங்களுக்கும் முற்போக்குக் கருத்துக்களுக்கும் எதிர் நின்றதில்லை. சோவியத் நண்பர் கழகம் தம் தலைமையில் இயங்குவதற்கும், மூலதனத்தை பதினேழு முறை படித்ததையும் சங்க அலுவலகத்தில் மார்க்சியம் கற்பிப்பதற்கும் அவர் ஒப்புக் கொண்டமையே அவருடைய விரிந்து பரந்த மனப் பான்மையை - சாதி, சமயம் கடந்த மனிதநேய உணர்வை எடுத்துக்காட்டுகின்றன.

காந்தியத்தில் ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்த திரு.வி.க. சமூகத்தின் பிணிகளை நிரந்தரமாக தீர்க்கவல்லது மார்க்சியமே என்று கருதினார். இங்கு அவருடைய பணிகளில் முக்கிய மாகக் குறிப்பிடப்பட வேண்டியது அவர் தொழிலாளர் வர்க்கத்துக்குக் காட்டிய நல்வழி பற்றியதே ஆகும். தொழிலாளர் இயக்கத்தில் ஆழத்தடம் பதித்த தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் 1953ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று மறைந்தார். இந்தியத் தொழிலாளிகளை நெஞ்சுயர்த்தி தலைநிமிர்ந்து அச்சமின்றி நடக்கச் செய்தவர் திரு.வி. கலியாண சுந்தரனார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com