Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

‘தமிழ்நாடு’ பெயர் மாற்ற மசோதா
ஸ்டாலின் குணசேகரன்

மிகப்பெரும் வரலாற்றை இயல்பாகவே கொண்ட தேசம் நம்முடையது. வரலாறு உள்ள அளவிற்கு வரலாற்று உணர்வு நம்முடைய தேசத்து மக்களுக்கு இல்லை என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

வரலாறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வரலாற்று பதிவு என்பதில் இரண்டு கருத்திற்கு இடமிருக்க முடியாது.

‘தமிழ்நாடு’பெயர் மாற்ற மசோதா என்ற இந்நூல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஒன்றின் பதிவாகும்.

நமது அரசியல் சட்டத்தில் முதல் அட்டவணையில் நமது நாட்டிலுள்ள மாநிலங்களின் பெயர்ப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஏழாவது பதிவில் மாநிலத்தின் பெயர் ‘மெட்ராஸ்’என்று இருக்கிறது.

‘மெட்ராஸ்’என்பதற்குப் பதிலாக இம்மாநிலத்தின் பெயர் ‘தமிழ்நாடு’என்று மாற்றப்பட வேண்டும் என்ற முன் மொழிதலின் அடிப்படையில் எழுந்த நாடாளுமன்ற விவாதங்களின் தொகுப்பே இந்நூல்.

1961ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இப்பெயர் மாற்றத்திற்கென அரசியலமைப்புச் சட்ட (திருத்த) மசோதா விவாதத்திற்கு வந்தது.

‘வரலாறு, மொழி, கலாசார அடிப்படைகளுக்கிசைவாக மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்னும் கருத்து மெட்ராஸ் மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களிடம் மிக ஆழமாக இருக்கிறது. எனவே இந்த மசோதா என்ற குறிப்புடன் பெயர் மாற்றத்திற்கான மசோதா குறித்து ‘குறிக்கோள்கள் மற்றும் காரணங்கள்’அறிக்கையினை சமர்ப்பித்தார். அன்றைய நாடு போற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த பூபேஷ்குப்தா.

பூபேஷ்குப்தா அக்காலத்தில் பிரபலமாக இந்திய அளவில் அறியப்பட்ட தலைவர். ‘பாரிஸ்டர்’தகுதியையும் தன்னகத்தே கொண்டிருந்த இவர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த விவாதங்கள் ஆணித்தரமானவை. இவரது வாதங்களில் அசைக்க முடியாத ஆதாரங்கள் நிரம்பியிருந்ததை அனைவருமே ஒப்புக் கொள்வர். இவரது சமகாலத்திலும் பின்னிட்டும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகத் திழ்ந்த பலருக்கு இவரே ஆகர்சமாகத் திகழ்ந்துள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பூபேஷ்குப்தாவுக்கென்று தனியான ஒரு சிறப்பிடம் உண்டு.

இவ்வளவு சிறப்புமிக்க ஒரு மனிதரால் ‘தமிழ்நாடு’என்னும் பெயர் மாற்ற மசோதா குறித்த விவாதம் எழுப்பப்பட்டதும் முன்மொழியப்பட்டதும் குறிப்பிடத் தகுந்த செய்தியாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்ததிலிருந்தே மொழி கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் குறித்த தனது கருத்தை முறையாக வெளியிட்டிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மொழிவழி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடக்கம் முதலே வலியுறுத்தியிருக்கிறது.

1952ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ப. ஜீவானந்தம் அவர்களின் சட்டமன்ற உரையை இந்நூலோடு இணைத்து வாசிப்பது பொருத்தமானதாக அமையும். அப்போதே மொழிவழி மாநிலம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஜீவா சட்டமன்றத்தில் இம்மண்ணில் தோன்றிய பல்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி வலுவாக வாதாடியுள்ளார். அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களான பி. இராமமூர்த்தி, மணலி கந்தசாமி, எம். கலியாண சுந்தரம் போன்றவர்களும் இதேபோன்று சட்டமன்றத்தில் மொழிவழி மாநிலத்தின் அவசியம் குறித்த தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அவரவர்கள் அவரவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களைப் பயன்படுத்தியும் தங்களது தனித்திறமைகளைப் பயன்படுத்தியும் ‘மொழிவழி மாநிலம்’குறித்தும் ‘தமிழ்நாடு’பெயர் மாற்றம் குறித்தும் அந்தந்த தளங்களில் ஓங்கிக் குரல் கொடுத்திருந்தாலும் இவை அனைத்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானங்களேயாகும். கட்சியின் பிரதிநிதிகளாக நின்றே அவர்களில் அவைகளில் முழங்கியுள்ளனர்.

பூபேஷ்குப்தா ‘தமிழ்நாடு’பெயர் மாற்ற மசோதாவை முன்மொழிந்து பேசுகிறபோது “இது மிகச் சாதாரண பிரேரணை-பெயர் மாற்றம்-ஆனால் கலாசாரம் மற்றும் பிற காரணங்களினடிப்படையில் இது மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பி. இராமமூர்த்தி இம் மசோதாவின் மீது முக்கிய உரை நிகழ்த்த வேண்டியிருந்தது. ஆனால் அன்றைய அரசு அவரை கைதுசெய்து சிறையிலடைத்திருந்தது. ஆகவே அவர் பேசவேண்டியதையும் சேர்ந்து பூபேஷ்குப்தாவே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

பூபேஷ்குப்தா விரிவான முறையிலும் விளக்கமான முறையிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் அவர் கருத்துக்களை வழிமொழிந்தும் ஆதரித்தும் புதிய வாதங்களை எடுத்து வைத்தும் தமிழகத்திலிருந்து சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவருமான சி.என். அண்ணாதுரை இம்மசோதா குறித்துப் பேசியிருக்கிறார்.

இந்நூலின் சிறப்பே அனைவரின் உரைகளும் நாடாளு மன்ற உரைகளில் உள்ளவாறே கொடுக்கப்பட்டதாகும். நாடாளுமன்றக் கோப்புகளில் பதிவு செய்யப்பட்ட உரைகளை அப்படியே மொழிபெயர்த்துக் கொடுக்கப்பட்ட காரணத்தினால் அன்றைய அரசியல் சூழலையும் வாதமுறைகளையும் சொல்லப்பட்ட காரண காரியங்களையும் நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

“இப்போதெல்லாம் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்களிலிருந்து ஆங்கிலம் சம்பந்தமான எல்லாவற்றையும் நீங்கள் விரும்புவீர்கள். நமக்கெல்லாம் ஜான், மைக்கேல் போன்ற பெயர்கள் வைக்கப்படவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அத்தகைய பெயர்களையும் நீங்கள் வரவேற்பீர்கள்” என்று பூபேஷ்குப்தா தனது வாதத்தினிடையே குறிப்பிடுகிறார்.

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாய்மொழியில் மட்டுமே உரைகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதை நேற்றுத்தான் அறிந்தோம். தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினர்களையும் குறிப்பாக இந்தச் சூழ்நிலையை உருவாக்கியவர்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. காமராஜ் நாடாருக்கும் எனது பாராட்டுக்கள். அவர் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர். எங்கள் தோழர்கள் பலரை சிறையிலடைத்தவர். அவர்மீது எனக்கு ஏகப்பட்ட வருத்தமுண்டு. ஆனால் அவர் தனது மொழிக்குச் சேவை செய்திருக்கிற முறை ஆங்கிலத்தில் பேச மறுத்திருப்பது, மாநிலப் பணிகளை தமிழிலேயே நடத்துவது ஆகியவற்றிற்காக இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேலையில் எங்களின் ஆதரவும் பாராட்டுக்களும் அவருக்கு உண்டு.” என்று மிகப் பெரும் தன்மையோடு ‘தமிழ்நாடு’பெயர் மாற்ற மசோதாவின் மீதான உரையில் குறிப்பிட்டு மகிழ்கிறார் பூபேஷ்குப்தா.

‘பாரிஸ்டர்’ பட்டம் பெற்றிருந்தாலும் ஆங்கிலத்தில் ஆழமான புலமையிருந்தாலும் வெளிநாடுகளில் படிக்கும் அளவுக்கு அக்காலத்திலேயே செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்தாலும் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நடை உடை பாவனைகளிலும் ஒரு வங்காளியின் சின்னமாகவே விளங்கினார் பூபேஷ்குப்தா.

அப்படிப்பட்ட மனிதர் தனது ‘தமிழ்நாடு’பெயர் மாற்ற மசோதா குறித்த உரையில் தமிழ்மொழியின் சிறப்புக்கள் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“உலகத்திலேயே மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். உலகத்தின் பல பாகங்களிலுமுள்ள மக்களின் பேச்சு மொழியே வளர்ச்சியடையாதிருந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் இருக்கிறது. உலகத்தின் பல மொழிகள் வளர்ச்சியடைவதற்கு முன்னமேயே சிறப்பான இலக்கியங்களைப் படைத்தது தமிழ். தமிழ் அத்தகு புகழ் படைத்தது. நமது நாட்டின் கலாசாரப் பாரம்பரியத்திற்கு அவ்வளவு சிறப்பாகவும் வளமாகவும் பங்களிப்புச் செய்த தமிழ் மக்களின் மேன்மை அத்தகையது. தமிழைப் பற்றிப் பேசும் போது நமக்கு மிகுந்த பாசம் உண்டாகிறது. ஏனெனில் நாம் இன்றைக்குப் பார்க்கிற இந்தியா ஏராளமான மொழிக் கூறுகளும் குழுக்களும் அடங்கியதாக இருக்கிறது. அவர்களில் தமிழ்நாட்டு மக்கள் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள். அவர்களின் இலக்கியத்தில் அவர்களின் கலாசாரத்தில் அவர்களின் பாடல்களில் இசையில், அவர்களின் வாழ்க்கை முறையில் நமது மக்களின் கலாசாரம் என்று நாம் கருதுகின்றவற்றின் தொன்மைப் பெருமை மிளிர்கிறது. ஆகவே எல்லா வகையிலும் இந்தியக் கலாசாரத்தின் மையமாக தமிழ்நாடு இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் பெரும்பாலோர் நல்ல ஆங்கில அறிவு உடையவர்களாக இருந்தும் மெட்ராஸ் என்ற இப்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் ஆட்சிமொழியாகத் தமிழே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் முதன்மை மாநிலமாக இருக்கிறது.”

‘தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா’என்ற இந்நூல் வாசகர்களுக்கு வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்றை படம் போட்டுக் காட்டுகிறது. மொழி குறித்தும் மாநிலங்களின் தனி உரிமை குறித்தும் தேசிய இனங்கள் குறித்தும் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. அக்கால நாடாளுமன்றத்தின் வாதப் பிரதிவாத முறைகளை எடுத்துச் சொல்கிறது. தேசத் தலைவர்கள் கருத்து வித்தியாசமிருப்பினும் பண்பு சார்ந்து நெறிகளோடு இருந்த சிம்பலங்களை பாடமாகக் கற்பிக்கிறது.

அரசியல், மொழி, வரலாறு, இலக்கியம் குறித்துச் சிந்திக்கிற எல்லோரிடமும் இருக்கவேண்டிய இந்நூல் ஓர் வரலாற்று ஆவணம் என்பதில் சந்தேகமில்லை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com