Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

ஒரு ஜப்பான் பள்ளி மாணவியின் அனுபவங்கள்
ராதிகா ஆராத்யே

நான் இளமையில் ஜப்பான் நாட்டில் கோபே (Kobe) என்ற ஊரிலுள்ள ஒரு பள்ளியில் படித்தேன். பிரிட்டிஷாரால் நடத்தப்படும் இப்பள்ளிக்குப் புனித மைக்கேல் சர்வதேசப் பள்ளி என்று பெயர். நான் ஜப்பானுக்குப் போனபோது, புது டில்லியிலுள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன். ஆதலால், ஜப்பானில் நான் நான்காம் வகுப்பில் சேர்ந்தேன். அங்கேயே மூன்றாண்டுகள் தொடர்ந்து படித்தேன்.

இவ்வாண்டு, நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் கல்லூரியில் காலடியெடுத்து வைத்துள்ளேன். இதற்கு முன்னர் நான் எட்டு வெவ்வேறு பள்ளிகளில் பயின்றிருக்கிறேன். இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து பார்க்கிறேன். அவற்றுள் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது புனித மைக்கேல் பள்ளி தான் என நம்புகிறேன். அங்கிருந்த ஆசிரியர்கள் பாடம் நடத்திய விதம், பாடங்களை ரசிக்க வைத்தது; என்னுடைய சுயசிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருந்தது. என்னை நானே நேசிக்கவும், இந்த உலகத்தை நேசிக்கவும் அங்கிருந்த ஆசிரியர்கள் கற்றுத் தந்தனர்.

நான் நான்காவது படித்தபொழுது என்னுடைய வகுப்பாசிரியராக இருந்தவர் திரு. ஷாண்ட் அவர்கள்.

அவர் இசை, உடற்பயிற்சி, ஜப்பானிய மொழி வாசிப்புத் திறன் ஆகிய மூன்று பாடங்களைத் தவிர மற்ற அனைத்து வகையான பாடங்களையும் கற்றுத் தந்தார். குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் பாடநூலோ கலைத்திட்டமோ அங்கு கிடையாது. தமது மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கான எல்லாவிதமான சுதந்திரமும் திரு. ஷாண்ட் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.

வரலாறு கற்பிக்கும்பொழுது திரு. ஷாண்ட் சில தலைப்புகளைத் தருவார். அவற்றுள் நாங்கள் எங்களுக்குப் பிடித்தமான தலைப்புகளைத் தேர்ந்தெடுப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் நூலகம் சென்று என்னென்ன புத்தகங்களிலிருந்து என்னென்ன விஷயங்களைத் தொகுக்க வேண்டும் என அவர் கூறுவார். நாங்கள் நூலகம் சென்று நூலகரின் உதவியுடன் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் தனியாகவோ இண்டிரண்டு பேராகவோ உட்கார்ந்து கட்டுரைகள் எழுதுவோம்.

புவியியல் பாடத்தையும் வரலாற்றுப் பாடத்தைக் கற்றது மாதிரியே பாதியளவு கற்றோம். மீதிப் பகுதியை திரு. ஷாண்ட் எங்களைப் பள்ளிக்கு வெளியே அழைத்துச் சென்று ஆறுகளும் ஏரிகளும் எவ்வாறு உருவாயின? மண் அரிப்பைத் தடுப்பதற்கு மரங்கள் எவ்வாறு நடப்பட்டன? என்பன போன்ற விஷயங்களைக் கற்பித்தார். இதேபோல் மலையின் உச்சியில் எங்களை நிறுத்தி, நிலப்பகுதியில் ஏன் துறைமுகத்தைச் சுற்றித் தொழிற்சாலைகள் பெருகுகின்றன? என்பது பற்றி எங்களுக்கு விவரித்துக் கூறுவார். புவியியல் பாடத்தைப் பொறுத்த வரையில் எங்களுக்கு வகுப்பறைத் தேர்வு கிடையாது. ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது.

இருப்பினும், புவியியலை நாங்கள் சிறப்பாகக் கற்றுவிட்டோம் என்ற எண்ணம் இருந்தது.

ஆங்கில வகுப்புகளில் நாங்கள் ஆசிரியர் குறிப்பிடும் புத்தகங்களை மட்டும் படிப்பதில்லை. எங்களுக்குப் பிடித்தமான நூல்களையும் படித்தோம். வகுப்பில் நாங்களே சொந்தமாக கதைகள் எழுதுவோம்; கவிதைகள் எழுதுவோம். ஆசிரியர் சில சமயங்களில் ஒரு தலைப்பையோ, ஒரு வரியையோ சொல்லுவார்; அல்லது ஒரு படத்தைக் காட்டுவார். நாங்கள் அதற்குப் பொருத்தமாக கதையினை எழுதுவோம்.

கணித வகுப்பில் எங்களுடைய அறிவுத் திறனுக்கு ஏற்ற வகையில் பல்வேறு நிலைகளில் பல கணித அட்டைகள் இருக்கும். ஒவ்வோர் அட்டையிலும் கொடுக்கப்பட்டிருக்கும் கணக்குகளை, எங்கள் அறிவுத் திறனுக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்துச் செய்து முடிப்போம். கணக்கு வகுப்பில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு வகுப்புகள் உயர்ந்த நிலையில் உள்ள கணக்குகளையோ, இரண்டு வகுப்புகள் குறைந்த நிலையில் உள்ள கணக்குகளையோ செய்து கொண்டிருப்போம்.

நாங்கள் அறிவியல் பாடத்தை - ‘செல்’ முதல் வானத்து ‘நிலா’ வரையில் - சிலைடுகளைப் (Slides) பயன்படுத்தியே கற்போம். ஒவ்வோர் அறிவியல் கருத்தையும் நடைமுறையில் உள்ள உதாரணங்களைக் கூறி ஆசிரியர் கற்பித்தார். எடுத்துக்காட்டாக, ஐந்தாம் வகுப்பில் மனித உடம்பிலுள்ள பாகங்களைப் பற்றிப் படிக்க வேண்டிய பாடம் இருந்தது. அதற்காக, பிளாஸ்டிக்காலான மனித உடம்புப் பாகங்களின் மாதிரிகள் எங்களுக்குத் தரப்பட்டன. இதில் ஒன்று ஆண் உடம்புப் பகுதி; மற்றொன்று பெண் உடம்புப் பகுதி. உடம்பின் ஒவ்வொரு பெயர் சொல்ல வேண்டும், அதற்கு வண்ணம் தீட்டவேண்டும், அப்பாகத்தை அதற்குரிய இடத்தில் பொருத்தமாகச் சேர்க்க வேண்டும். இது ஒரு பயிற்சி. அறிவியல் பாடத்தைப் பொருத்தவரையில் மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனை வளர்ப்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது.

எதையும் மனப்பாடம் செய்து அப்படியே திரும்ப எழுதுவதை ஊக்குவிப்பதில்லை. அறிவியல் பாடத்தில் கேள்விகளுக்குப் பதில் எழுத வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டதில்லை. இரத்த அணுக்களைப் படித்தபொழுது, எங்கள் விரல்களை நாங்களே மெல்லக் குத்தி, இரத்தம் எடுத்து ‘சிலைடுகள்’ தயாரித்தோம். அவைகளை உற்றுநோக்கி ஆராய்ந்து பார்த்தோம். இவ்வளவையும் நாங்கள் நான்காம் வகுப்பிலேயே செய்தோம்.

இசைப் பாடங்கள் இனிமையாக இருந்தன. எங்களது ஆசிரியர்கள் எல்லா வகையான பாடல்களிலும் பயிற்சி தந்தார்கள். அப்பாடல்களை ரெக்கார்டர்களில் போட்டுக் கேட்பது எப்படி என்றும் கற்றுத் தந்தனர். எங்களுக்குள் இசைக் கச்சேரி நடக்கும். இசைப் போட்டியில் வென்றவர்களுக்கு சாக்லேட், ரப்பர் போன்றவை பரிசாக வழங்கப்படும். இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசைப் பண்களைக் கற்க வைப்பதே இசைப் போட்டியின் நோக்கமாக இருந்தது. நாட்டுப்புறப் பாடல்களுக்கேற்றவாறு நடனமாடுவதும் பாடமாக இருந்தது. அதை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிப் பழகுவோம். இதைவிட, நாடகத்தில் நடிப்பது என்பதுதான் எங்களுக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருந்தது. எங்கள் ஆசிரியர்கள் எங்களைச் சொந்தமாகக் கதை எழுதச் சொல்லுவார்கள். அதையே நாடகமாக மாற்றி எழுதச் சொல்லுவார்கள். சின்னச் சின்னக் குழுக்களாக மாணவர்களைப் பிரித்து, நாடகத்தில் ஈடுபடுத்துவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நாடகப் பாத்திரம் தரப்படும். நாங்கள் அதனை ஏற்று மகிழ்வோடு நடிப்போம்.

இப்படித்தான் ஒவ்வொரு நாளும் முதல் பாடவேளை நடக்கும். இப்படி நாடக நடிப்போடு ஒவ்வொரு நாளும் பள்ளி தொடங்குவதுதான் சிறந்தது என நாங்கள் எண்ணுவோம்.

ஒருநாள் திரு. ஷாண்ட் எங்களிடம் ஒரு புதுமையான செய்தியைக் கூறினார். “நாம் இந்தப் பருவத்தில் ஒரு திரைப்படம் தயாரிக்கப் போகிறோம். நமது பாடங்களிலுள்ள கருத்துக்களே திரைப்படமாக உருவாகும்” இதுதான் அவர் கூறிய செய்தி. அவரே திரைப்படம் எடுப்பதற்கான கதைக்குச் சில பொருத்தமான கருத்துக்களைச் சொன்னார். நாங்கள் ‘கால இயந்திரம்’ (The Time Machine) என்ற தலைப்பை அதற்குத் தேர்ந்தெடுத்தோம். அந்த இயந்திரத்தைக் கொண்டு கடந்த காலத்திற்குள் பயணித்து, அது எப்படி இருந்திருக்கும்? என்பதையும் எதிர்காலம் எப்படி இருக்கக்கூடும்? என்பதையும் விளக்கும் வகையில் நாங்களே ஒரு கதை எழுதினோம்; நாங்களே வசனம் எழுதினோம். கதாபாத்திரங்களுக்கான உடைகளை நாங்களே தயாரித்தோம். நாங்களே ‘கால இயந்திரத்தையும்’ செய்தோம்.

திரு. ஷாண்ட், திரைப்படத் துறையினர் எதையும் உண்மையென நம்பும் வகையில் அப்படியே சித்திரித்துக் காட்டுவார்கள் என்ற விஷயத்தைச் சொன்னார். உடனே எங்களது கால இயந்திரத்தை ஸ்பிரிங், சக்கரங்கள், டேப்புகள் போன்ற பல்வேறு பாகங்களைப் பொருத்தி அமைத்தோம். காட்டுக்குச் சென்று வெளிப்புறப் படப்பிடிப்பு நடத்தினோம். காட்டுவாசிகள் போல விநோதமான ஆடைகளை அணிந்து கொண்டோம். இந்தத் திரைப்படத்தை முடிப்பதற்கு ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் எடுத்துக்கொண்டோம். இந்த நாட்களில் நாங்கள் பாடப் புத்தகங்களிலிருந்து என்னென்ன கற்று இருப்போமோ அதைவிடக் கூடுதலாகவே கற்றிருக்கிறோம் என்ற மனநிறைவு எங்களுக்குள் ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் நாளன்று, பெற்றோர்களுக்கு நான்காம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த ‘மகத்தான’ திரைப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. திரைப்படத்தில் தங்களது சிறு குழந்தைகளைச் சின்ன திரைப்பட நட்சத்திரங்களாகப் பார்த்தபொழுது பெற்றோர்களுக்கு எவ்வளவு பெருமிதம்! எவ்வளவு பூரிப்பு!

எங்களுக்கு வாரத்தில் ஒருநாள் நூலகப் பாடவேளை இருந்தது. அந்தப் பாடவேளையானது வெறுமனே புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுக்கவும் திருப்பிக் கொடுக்கவும் மட்டும் கற்றுத் தருவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. அப்பாட வேளையில், நூலகம் எப்படிச் செயல்படுகிறது? புத்தகங்களை எப்படிப் பதிவு செய்கிறார்கள்? அலமாரிகளில் புத்தகங்கள் எவ்விதம் அடுக்கி வைக்கப்படுகின்றன? என்பன போன்ற விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். இரண்டு மாணவர்கள் நூலகத்தின் நுழைவாயில் அருகில் அமர்ந்துகொண்டு, நூலகத்திலிருந்து வெளியே வீட்டுக்கு எடுத்துச் செல்லும் புத்தகங்களில் ‘ஸ்டாம்ப்’ வைத்துத் தந்தார்கள். படித்துவிட்டு மாணவர்கள் திரும்பித்தரும் புத்தகங்களை எடுத்துச் சென்று அலமாரியில் அடுக்கி வைத்தோம்.

ஒருநாள் திரு. ஷாண்ட், வகுப்பில் எங்களைப் பார்த்து பிற்காலத்தில் ‘வாழ்க்கையில் நீங்கள் என்னவாகப் போக விழைகிறீர்கள்?’ என ஒரு கேள்வியைக் கேட்டார். நான் ஒருத்தி மட்டும் ‘எழுத்தாளராகப் போக விழைகிறேன்’ எனச் சொன்னேன். நான் சொன்னது ஷாண்ட்டுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ‘அப்படியானால், இன்றே எழுதத் தொடங்கு. நமது கே.ஜி. வகுப்புக் குழந்தைகளுக்கு ஒரு கதைப் புத்தகம் எழுது. அதில் சில படங்களை வரை. அதை நேர்த்தியான முறையில் ஒரு கையெழுத்துப் பிரதியாகத் தயாரிக்க வேண்டும். அதை நமது கே.ஜி. வகுப்பு ஆசிரியர் அவரது வகுப்பில் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுவார். அதைக் குழந்தைகள் கேட்டு, எப்படி ரசிக்கிறார்கள் என்பதை நாம் போய்ப் பார்ர்ப்போம்’ என்றார். எனக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஒரே சிலிர்ப்பு. நான் எழுதிய ஐந்து கதைகளைக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் வாசித்துக் காட்டியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கதையைக் கேட்ட சிறு குழந்தைகள் என்னிடம், “ராதிகா, உங்கள் கதை ரொம்ப நல்லா இருக்கு. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கூறினார்கள்.

திரு. ஷாண்ட், நான் கதை எழுதியதோடு என்னை விட்டுவிடவில்லை. அவர் “ராதிகா, நீ பெரிய எழுத்தாளராகும் பொழுது, உனக்குக் கட்டாயம் ‘டைப்’ செய்யத் தெரிந்திருக்க வேண்டும். பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஓய்வு நேரத்தில் தட்டச்சுப் பாடங்களில் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்து தருகிறேன்.

அலுவலகத்திற்குப் போய் அதை முடிவு செய்வோம்” என்றார். எனது ஒன்பது வயதிலேயே தொடர்ந்து பள்ளியில் இரண்டாண்டுகள் தட்டச்சுப் பயிற்சி பெற்றேன்.

திரு. ஜாக்சன் என்பவர் எனது 5-ஆம் வகுப்பு ஆசிரியர். இவர் என் மனதைக் கொள்ளை கொண்ட ஆசிரியர். அவருக்கு வயது 40; திருமணமாகாத பிரம்மச்சாரி. அவருக்குப் ‘போட்டி’ என்றாலே பிடிக்காது. ஒவ்வொரு குழந்தையும் தன்னைப் பற்றி உயர்வாகவே எண்ண வேண்டும் என்று எண்ணுபவர். ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி. அவள் நான்காம் வகுப்புக் கணக்குகளை ஐந்தாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தாள். எங்களது கணக்குகளை நாங்கள் சரியாகச் செய்தபோது எங்கள் நோட்டில் ‘மிகவும் பிரமாதம்’ என அவர் பாராட்டி எழுதுவார்.

செயிண்ட் மைக்கேல் பள்ளியின் ‘இலட்சிய வாசகம்’ (motto) என்ன என்பது எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால், அதன் பொருள் ‘எந்தக் குழந்தையையும் பாரபட்சமாக நடத்தக்கூடாது’ என்பதுதான். இக்கருத்து இன்றும் நினைவில் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் இந்த இலட்சியத்தை அடைவதற்கு ஓயாது பாடுபட்டனர். நாங்கள் ஆசிரியர்களிடம் பயமின்றி வாதாடுவதற்கு எங்களுக்குச் சுதந்திரம் இருந்தது. நாங்கள் ஒன்றைச் செய்தால் அதை ஏன் நாங்கள் அப்படிச் செய்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கு ஆசிரியர்கள் முன்வந்தனர். எந்த ஆசிரியருமே அதிகார தொனியில் எங்களிடம் நடந்து கொண்டதில்லை. எந்த விஷயமும் எங்கள் விருப்பத்திற்கு மாறாக எங்கள் மீது திணிக்கப்பட்டதில்லை.

தமிழாக்கம் : கோகிலா தங்கசாமி.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com