Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

எல்.ஜி. கீதானந்தனின் அரசியல் இலக்கியச் சிந்தனைகள்
கவிஞர் புவியரசு

சமுதாய நலனுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள தோழர் கீதாவின், ஒரு நூற்றாண்டுக் கால அரசியல் இலக்கியச் சிந்தனைகளின் வரலாற்று ஆவணக் களஞ்சியம் இந்த நூல்.

விரிவான தளத்தில், ஆழமான பார்வையில், சமகால இலக்கியப் படைப்பாளிகளையும், உலகளாவிய அரசியல் நிகழ்வுகளையும் எளிய முறையில் அலசி, வாசகனின் பார்வையை உயர்த்தும் இந்த அரிய நூல், 30 கட்டுரைகள் கொண்டது. நமது நிகழ்கால அரசியல் இலக்கியப் பெருவெளியில், நெடும் பயண அனுபவத்தை இது தருவதோடு, மறக்கப்பட்ட பல வரலாற்று நிகழ்வுகளை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது.
இன்று நாடு முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் தலித்திய எழுச்சியை, உலகப் பார்வையுடன் நம்முன் எடுத்து வைக்கும் ‘சமுதாய மாற்றத்திற்கான போர்க்குரலே தலித் இலக்கியம்’என்ற கட்டுரையே, இந்த நூலின் முதல் கட்டுரையாகத் திகழ்கிறது.

சாதியொழிப்பிற்காகப் போராடிய அம்பேத்கர், தந்தை பெரியார், தலித் மக்களுக்காகக் குரல் கொடுத்த அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் முதலியோரின் பங்கு பணியைப் பதிவு செய்யும் தோழர் கீதா, இதில் குறிப்பிடும் ஒரு மேற்கோள் வாசகரை அதிர்ச்சியடையச் செய்யும்!

“பிராமணன் தனது ஸ்தானத்தை முன் ஜாக்கிரதையாலே கட்டுப்படுத்திக் கொண்டான். புறத்தை ஒடுக்கு முன்பு ஜனங்களின் அறிவை ஒடுக்கிவிட்டான். அறிவின் வேர்களை சூத்திரனிடமிருந்து பறித்துவிட்டபடியால், இவன் ஸ்வதந்தரக் காரியம் செய்ய சாத்தியப்படவில்லை. பிறகு, சூத்திரனுடைய தலை, பிராமணனுடைய பாதத் தூளியிலே ஈடுபட்டிருப்பதை ஸாவதானமாகக் காக்க வேறு சிரமம் வேண்டியதில்லை ஆயிற்று.”

சாதி அடிமைத் தனத்தின் ஆதார வேர்களைக் கண்டு சொல்லும் இந்த வாக்கு யாருடையது? ‘சாத்திரம் அன்றோ சாதியின் உயிர்த்தலம்’ என்று பாடிய மகாகவி பாரதியாருடையது!

பாட்டாளிகளைப் பாடிய கவிஞர் தமிழ்ஒளி, கவிஞர் சிற்பி, நஸ்ருல் இஸ்லாம், எழில்வேந்தன், சிலிக்குயில் பாப்லோ நெருடா என ஒரு விரிவான கவிப் பயணம் நமக்குச் சுவையான இலக்கிய அனுபவத்தை வழங்குகின்றது.

புதிய திசை காட்டும் தொ.மு.சியின் ஆய்வுகள், கொங்குத் தமிழ் மண்வாசனைப் படைப்பாளி மா. நடராசனின் இரண்டு நாவல்கள், மானுடம் பாடிய எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் படைப்புகள், முன்னால் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் எழுதியுள்ள, ‘எனது ஜனாதிபதிக் காலம்’ என்ற நூல், தோழர் தா.பா.வின் பிடெல்காஸ்ட்ரோ பற்றிய நூல் ஆகியவை இந்நூலில் விளக்கமாக விமர்சன ரீதியில் நமக்கு அறிமுகப் படுத்தப்படுகின்றன.
‘தோழியர் பார்வதி கிருஷ்ணனின் இயக்கப் பணிகளும், கலைப்பணிகளும்’, ‘பொது வாழ்வில், பார்வதி கிருஷ்ணன் - ஒரு கலங்கரை விளக்கு’ என்ற இரண்டு கட்டுரைகள் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பைப் பெறுகின்றன.

தோழியர் பார்வதி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்திலேயே (1938-ல்) கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததும், இந்தியா திரும்பியவுடன், ஏகாதிபத்திய எதிர்ப்பிற் காகவும், மக்கள் எழுச்சிக்காகவும், ‘இந்திய மக்கள் நாடகக் குழு’ (‘இப்டா’) அமைப்பதில் முன்னின்று தீவிரப் பணியாற்றியதும் முதல் கட்டுரையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பால்ராஜ் சகானி, பிருதிவிராஜ் கபூர், சபானா ஆஸ்மியின் தந்தை கைஃபி ஆஸ்மி, துர்க்கா கோட்டே, திலீப் குமார், அலி சர்தார் ஜாப்ரி, நாட்டிய மேதை உதய் சங்கர் போன்ற பல கலைஞர்கள் பங்கு பெற்றிருந்த ‘இப்டா’வின் நிர்வாகியாகத் திகழ்ந்த தோழியர் பார்வதி தாகூரின் ‘பொம்மை வண்டி’ என்ற நாடகத்தில் நடித்தும் இருக்கிறார் என்ற அரிய செய்தியைத் தோழர் கீதா பதிவு செய்திருக்கிறார்.

தோழியர் பார்வதியின் அரும்பணிகளின் விளைவாகவே, பிற்காலத்தில் சமுதாய உணர்வு கொண்ட சபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல், நஸ்ரு தீன்ஷா, ஓம்பூரி, நந்திதா தாஸ், மல்லிகா சாராபாய், ஆமிர்கான் போன்ற பல்வேறு கலைஞர்கள் வணிகத் திரைப்படங்களுக்கு வெளியே தமது குரலைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

இலட்சிய வாழ்க்கையினால் நேர்ந்த சிறை, தலைமறைவு வாழ்வு முதலிய துன்பங்களைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட தோழியர் பார்வதி, மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் இருக்கும் சிறப்புப் பெற்றபோதும் அவர் வாழ்ந்த, வாழ்ந்து வரும் எளிய வாழ்வையும், அவரது மக்கள் பணியையும் இரண்டாவது கட்டுரை அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.

‘விவேகானந்தரும் மத நல்லிணக்கமும்’ என்ற கட்டுரையில், விவேகானந்தருக்குப் பூசப்பட்டுள்ள மதச் சாயத்தைக் கழுவுகின்ற முறையில் பல ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. “பிராமண, சத்திரிய, வைசீய ஆட்சிகளெல்லாம் உலகத்தில் நடந்தேறிவிட்டன. இனி உலகில் சூத்திரர் என்னும் உழைப்பாளர் ஆட்சியே ஏற்படும்”, என்ற விவேகானந்தரின் மேற்கோளை எடுத்துக்காட்டும் தோழர் கீதா, “பிற மதத்தினரை அழிக்காதே. அவர்களுக்கு உதவி செய்!” என்ற சிகாகோ பேருரை வாசகத்துடன் காலத்திற்கேற்ற கருத்துடன் கட்டுரையை முடித்திருக்கிறார்.

தீண்டாமைக் கொடுமையின் பேயாட்டம் மேலவளவுப் படுகொலைகளாக இரத்தம் பூசிக்கொண்ட செய்தியை மையமாகக் கொண்டு நாடு தழுவிய நிகழ்வுகளை ஒரு கட்டுரை விரிவாகப் பேசுகிறது. பா.ஜ.க. ஆட்சியில், மூட நம்பிக்கைகள், விஞ்ஞான பாடமாக முத்திரை குத்தப்பட்டுப் பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட விபரீதத்தை ஒரு கட்டுரை விவரிக்கிறது.

ஜனநாயக மனித உரிமைப் பாதுகாப்புப் பற்றியும், அரசு அலுவலர் ஆசிரியர் போராட்டப் படிப்பினைகள் பற்றியும், மரண தண்டனை பற்றியும், ராஜீவ் காந்தி படுகொலை விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றியும், உலக அரங்கில் நம் பார்வையைச் செலுத்தும் ஜப்பான் கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு பற்றியும், சீன கம்யூனிஸ்டு கட்சியின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா பற்றியும் விரிவான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

‘நீரின்றி அமையாது உலகு - அதற்குப் போரின்றிக் காண்போம் தீர்வு’ என்ற கவிதைத் தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை, பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. உலகில் சில நாடுகள், தமக்குள் எத்தகைய மோதல் ஏற்படும்போதும், ஆறுகளில் தடை எதுவும் ஏற்படுத்தாத நாகரீகப் போக்கை மேற்கொள்வதைப் பல ஆதாரங்களுடன் தோழர் கீதா நமக்கு எடுத்துச் சொல்கிறார்.

சான்றாக - 1991-ல் நேட்டோ, ஈராக்கிற்கு நீர் வழங்குவதை நிறுத்துமாறு துருக்கியிடம் வலியுறுத்தியது!
அதற்குத் துருக்கி அரசு, “நீங்கள் ஈராக் மீது குண்டு வீச எங்கள் விமானத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நாங்கள் ஈராக் செல்லும் நதி நீரைத் தடுக்கும் கொடுமையைச் செய்ய மாட்டோம்”, என்று திட்டவட்ட மாகக் கூறியதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது. காவிரி நதி நீர்ப் பிரச்சினையை அலசுகின்றது இக்கட்டுரை.

நேருவைக் கண்மூடித் தனமாக இடதுசாரித் தலைவர் என்று புகழ்பாடுவதோ, பிற்போக்காளர் என்று பழிப்பதோ தவறு என்று, பல அறிஞர்கள், சிந்தனையாளர்கள் கருத் தோட்டங்களை ஆதாரமாகக் கொண்டு நடுநிலைப் பார்வை வழங்குகிறது, ‘நேருவைப் பற்றிய மறு மதிப்பீடுகள்’ என்ற கட்டுரை. உலக மயமாக்கலுக்கு ஆதாரமாக வகுக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரக் கொள்கை, எவ்வாறு வளர்முக நாடுகளை நசுக்கப் பயன்படுகிறது என்பதை விரிவாக ஆராயும் கட்டுரை, மிக விரிவாக ஆதாரங்களுடன் அமைந்துள்ளது.

உலக வரலாற்றில் அற்புதமான பெண்மணி என்று போற்றப்படும் ஜென்னி மார்க்ஸ் பற்றிய கட்டுரை, நம் மனதை நெருடுகிறது.

தோழர் தா. பாண்டியனின் ‘பிடெல்காஸ்ட்ரோ’ நூலை அறிமுகம் செய்து வழங்கியுள்ள ஆய்வுரை முக்கியமானது. கியூப விடுதலைக்கான உலக மகா புரட்சி வீரன் சேகுவேராவும், பிடெல்காஸ்ட்ரோவும், இவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோவும் நடத்திய வீரம் செறிந்த விடுதலைப் போர் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வல்லரசு பிடெலை கியூபாவிலிருந்து அகற்ற, நாடாளுமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்தது. அவரைக் கொலை செய்ய பல்வேறு நுட்பமான நவீன முறைகளில் சி.ஐ.ஏ. என்ற உளவு நிறுவனம் 638 தடவை முயன்று தோற்றுப்போனது! கடைசியாக, பிடெல் நேசித்த பெண்ணையே வளைத்துப் போட்டு அவள் மூலமாக உதட்டில் நஞ்சு தடவிக் கொல்ல ஒரு முயற்சி நடந்தது! அதில் தப்பிய பிடெல், மனம் வெறுத்துப் போய், அவளிடம் தன் துப்பாக்கியைத் தந்து, ‘இந்தா! என்னைச் சுட்டுவிடு!’ என்று சொன்னார்! அவளால் அவரைச் சுட முடியவில்லை. இதை அவளே அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினாள். இன்று அவர், தம் இளவல் ரால் காஸ்ட்ரோவிடம் பதவியை ஒப்படைத்திருக்கிறார்.

இந்நூலின் 29-வது கட்டுரை ‘கொங்கு நாட்டு வரலாற்றில் இடதுசாரி இயக்கங்கள்’. கட்சி வேறுபாடுகள் இன்றி கொங்கு மண்டலத்தின் வீரப் போராட்டங்களை விரிவாகப் பேசும் இந்தக் கட்டுரை, உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காகத் தம் இன்னுயிர் ஈந்த தியாகி என்.ஜி. ராமசாமி முதல், சின்னியம்பாளையம் தோழர்கள், கோவை முதலாளிகளின் கையாட்களால் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் பலரையும் குறிப்பிட்டு நினைவு கூர்கிறது.

தொழிற் சங்கப் போராட்டங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி. ராமனின் புதல்வர் சிவராமன் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளராக வந்து 1941-ல் இரகசியக் கூட்டங்கள் நடத்திச் சிறை சென்ற அபூர்வ செய்தியும் இக்கட்டுரையில் உள்ளது. நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டுக் ‘காணாமல்போன’ எல். அப்பு மற்றும் உடுமலை லிங்குசாமி போன்றவர் பற்றியும், தம்முடைய பழைய நிலைபாடு பற்றியும் ஆசிரியர் மறைக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். இக்கட்டுரை கொங்கு மண்டலப் போராட்ட ஆவணம்.

மகாகவி பாப்லோ நெருடாவின் கட்டுரையுடன் நிறைவு பெறும் இந்தச் சமகால அரசியல் இலக்கிய வரலாற்று ஆய்வு நூல், ஒரு நல்ல தெளிந்த, அறிவு பூர்வமான சிந்தனைப் பதிவு; ஒரு மனவெளிப் பயணம்; ஒரு போர்க்குரல்.


அரசியல் இலக்கியச் சிந்தனைகள்
ஆசிரியர் : எல்.ஜி. கீதானந்தன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098, விலை : ரூ. 70/-



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com