Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

‘உதிரும் இலை’
பச்சியப்பன்

அளவில் சிறியதெனினும், நேசத்திற்குரிய உள்ளங்கை பற்றி மலைவழியில் இறங்கி நடப்பதான அனுபவம் தருகிற தொகுப்பு. பிறந்த ஊரின் நினைவு வேலைபார்க்கும் இடத்தின் எதிரொலி, குழந்தை, தன்னியல்பில் மாறிப்போன அம்மா, கரிசன மனைவி, உதிர்ந்த இலை, கல்குவாரிமலை, அலறி வீழ்ந்த பறவை, ரயில் அனுபவங்கள், சாலையோரத்தில் வீழ்ந்து கிடந்த குடிகாரன், குடியால் நிர்க்கதியாய் விட்டுப்போன அப்பா, விலைபோகாத கருப்புமாடு என நீளும் விதவிதமான கவிதைப் பாடுபொருள்களைக் கொண்டது இத்தொகுப்பு.

Yazhini Munusamy's book 'Uthirum Ilai' நேரடியாகவும் சில கவிதைகள் பேசுகின்றன, மறைமுகமாகவும் இயங்குகின்றன சில புலம்பலும் உண்டு. நம்பிக்கையும் உண்டு. எடுத்தெரியவும் செய்கிறார் கொண்டாடவும் செய்கிறார். ஜனத்திரளுக்கான அரசியலும் பேசுகிறார். திண்ணையில் நடைபெறும் நாலாந்தர பேச்சுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். காதல் உண்டு, நட்பு உண்டு. நிர்க்கதியாய் விட்டுப்போய் பல்லிளிக்கும் மனிதர்களும் கவிதைகளில் உண்டு. கடந்து வந்த பாதையில் தென்பட்ட அனைத்தையும் எழுத்தாக்கும் கலை முனுசாமிக்கு கைவந்திருக்கிறது. நவீன கவிதை என்பது நவீன வாழ்வை எதிர்கொள்வது? அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இத்தொகுப்பில் உள்ள ‘இதோ என் நோக்கியா’கவிதையைச் சொல்லலாம்.

பழக்கப்படுத்தப்பட்ட ஆண் தன்மையை குற்றவுணர்ச்சிக் குள்ளாக்குகிற கவிதை ‘தூக்கம் தளும்பும் உன்னை’ எனத் தொடங்கும் கவிதை. பிரிதொரு மனிதரில் நின்று கொண்டு தன்னை விமர்சனம் செய்து கொள்ளுகிற உத்தியை இந்தக் கவிதையில் கையாண்டிருக்கிறார். இதனுடைய கவிதை மொழி ‘இச்சைமொழிப் பேசி ஆழ்ந்துறங்கி’என செதுக்கிய சொற்களாலும் ஆனது, “லன்ச்”சும் கட்டிக் கொடுத்து என்கிற பாலிதீன் உறைகளாலும் ஆனது.

மழைக்கால மாலை நேரத்தில் மேய்ச்சல் காட்டில் கட்டறுந்து ஓடும் இளம்கன்றின் துள்ளலென தன்போக்கை தானே தீர்மானித்து ஓடும் கவிதை நடையை கவிஞர் கொண்டிருக்கிறார். எனக்கு இப்படித்தான் சொல்லத் தெரியும் என்பது போல. இதற்கு எல்லா கவிதைகளும் உதாரணம்.

சிலைசெய்து கடைசியில் கண்ணைத் திறப்பது போன்ற உத்தி சில கவிதைகளில் உண்டு. கல்லூரியைப் பற்றி அழகாகச் சித்திரித்து விட்டு கடைசியில் ‘எப்போதும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள் முதல்வர்கள் ஒருபோதும் வயதாவதேயில்லை வகுப்பறைகளுக்கு மட்டும்’என்று அக்கவிதை முடிகிறது. அதேபோல மலையைப் பற்றி அதன் சிதைவு பற்றி சொல்லி விட்டு கடைசி வரியில் ‘எரிமலைகளை யாரும் நெருங்குவதில்லை’என்று மற்றொரு கவிதை முடிகிறது. இப்படி கடைசி வரியில் சாவியை வைக்கிற உத்தியை நிறைய கவிதையில் கையாண்டிருக்கிறார். அந்த வரிகளிலிருந்து தொடங்குகிற ஆழமான பொருண்மையைப் பொதிந்து வைத்திருக்கிற நுட்பமான பணியையும் செய்கிறார்.

அதேபோல, நாற்று நடுவது மாதிரி தொடக்கமும் முடிவும் அர்த்தப்படுத்தி செய்யப்பட்டுருக்கிற கவிதைகளும் உண்டு. எல்லா மூளையிலும் ஒரே மாதிரியாக பச்சை கட்டி நிற்கிற பயிர்மாதிரி. எதுவும் எதாலும் உயிர் வாழாமல் ஆனாலும் ஒரே கழனியில் இருப்பது போல சில கவிதைகளும் உண்டு. இதற்கு ஒரு உதாரணம் ‘அரிதாகவே நேர்கின்றன’எனத் தொடங்கும் கவிதை.

இரயில் பயணத்தில் நேரும் அனுபவத்தை, குறிப்பாக பிச்சைக்காரர்கள் பற்றிய கவிதைகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாக இருப்பது அதன் சிறப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கவிதையில் ஒன்று ‘அவன் அமர்ந்திருக்கும் சிம்மாசனம் அப்படி’எனத்தொடங்கும் கவிதை. மனிதனின் கயமைத்தனத்தை, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெருமுயற்சியில் வெளிப்படும் கீழ்மையைப் பேசுகிற கவிதை. அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்கிற அடித்தட்டு மக்களின் போர்முழக்கம் நமதாக இருக்கும்போது ஆளும் வர்க்கத்தின் நாற்காலி போட்டியை இக்கவிதை பேசுகிறது. சமூக நீதிக்கான செயல்பாடாக ஒன்று செயல்படும்போது, மற்றொன்று தனிமனித வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஒரு செயல்பாடு பொது நலம் சார்ந்து இயங்காதபோது, அது எத்தகையதாக கருதப்படுகிறது என்பதற்கு இக்கவிதை உணர்த்தும் செய்தி சான்று. இக்கவிதை ஒரு அலுவலக ஊழியனுக்கு ஒரு பொருள்தரும். அரசியல்வாதிக்கு ஒரு பொருள் தரும். இதுதான் இந்த கவிதையின் வெற்றி எனத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ‘வனத்தின் திசைகளில்’என்ற கவிதையில் கவிஞர் உள்வைத்த ரகசியத்தை வாசகன் விளங்கிக் கொள்ளாமல் போகிற ஆபத்தும் நேர்ந்திருக்கிறது. மறைமுகமாக பேசப்படும் கவிதையில் இரண்டும் நேரலாம் என்பதற்கான உதாரணங்கள் இவை.

நகரத்தின் சகல கொடூரங்களையும் சில கவிதையில் உணர்த்துகிறார் கவிஞர். பிச்சையிடாமல் பாவனை செய்யும் பயணியில் இருந்து, திருமணங்களில் பின்பற்றப்படும் போலி ஆடம்பரங்களில் இருந்து, வாகனவோட்டிகளைக் குறித்த அச்சத்தோடு உருளும் மிதிவண்டிப் பயணத்திலிருந்து, தாமதமானால் சிதையும் ஒரு நாளைக்கான உணவிலிருந்து நிறையவே நகரத்தின் கொடுமையை இவர் கவிதைகளின் வழியே உணரலாம். சீலகமில்லாத கிராம மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ஆனால் வினோதம் என்னவெனில் இந்த விஷயங்களுக்கு முரணாக ‘காக்கை குருவி’ எனத் தொடங்கும் கவிதை எழுதியிருக்கிறார். இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யம் ஒரு இடதுசாரி அரசியல் எழுத்தாளன், தனிமனித துரோகங்களுக்குப் புலம்பி இருப்பதும்.

வாழ்க்கை என்பது வினோதமானது. தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு குதூகலிப்பதற்கும், இறந்த தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு மௌனமாய் வயலுக்குப் போவதற்குமான பெருத்த இடைவெளி உண்டு. அந்த இடைவெளியில் இயங்குகிறது, இந்தக் கவிதை தொகுப்பு.

உதிரும் இலை
ஆசிரியர் : யாழினி முனுசாமி
மித்ரா வெளியீடு (டிசம்பர் - 2005),
32/9, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை - 24,
விலை : ரூ. 35/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com