Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

நூலகம் ஓர் அறிமுகம்
கிருஷ்ணகோவிந்தன்

டாக்டர் அரங்கநாதன் எழுதிய நூலகத்துறை பற்றிய நூல்களை எல்லாம் அச்சேற்றி நம்மனைவருக்கும் கிடைக்கச் செய்த பெருமை சென்னை நூலகர் சங்கத்தாரையே சாரும். நூல்களை வகைப்படுத்தி குறியீடுகள் வழங்கும் முறையில் தலைசிறந்தது என்று உலகினராலும் கூட உயர்திப் பேசப்படும்.

“கோலன் முறையினைக்” கண்டுபிடித்த பெரியாரும் டாக்டர் அரங்கநாதனேயாவர். இப் பெரியாருடைய தோளோடு தோளாய் நின்று, நூலகப் பணிபுரியும் மற்றொருவர் கே.எம். சிவராமனாவார். இவர் இச்சங்கத்தின் துணைச் செயலாளர் ஆவார்.

இந்திய கையெழுத்துச் சுவடி நூல்கள் :

பத்தொன்பதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியலாளர், வடமொழி கல்லூரிகளையும், பள்ளிகளையும் திறப்பதற்குப் பெரும் ஆதரவு தந்தனர். ஆனால் புராதன இந்திய நாட்டுக் கையெழுத்துச் சுவடிகளைச் சேகரிப்பதில் ஒரு அக்கறையும் காட்டவில்லை. மக்களும் அவ்வாறு இருந்தனர். ஆனால் கி.பி. 1911-ல் சிம்மலாவில் நடந்த கீழை நாட்டுப் பேராசிரியர்கள் மாநாட்டில், பழைய வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளைச் சேகரிப்பதற்குக் கல்கத்தா நகரில் ஒரு மத்திய அலுவலகத்தை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இம்மாநாட்டினைக் கூட்டியது இந்திய அரசாங்கமாகும். இதன் பின்னர் கையெழுத்துச் சுவடிகளுக்கு என பத்து இடங்களில் அலுவலகங்கள், நிறுவப்படவே மக்கள் கையெழுத்துச் சுவடிகளைச் சேகரிப்பதில் அக்கறையும் ஆர்வமும் காட்டினர். பம்பாய் அரசாங்கம் எண்ணற்ற ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்ததோடு அமையாது அவைகளை எல்லா மக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அச்சுவடிகளை எல்லாம் பூனா பந்தர்கார் ஆய்வுக் கூடத்திற்கு அன்புடன் அளித்தது. மற்ற மாநிலங்களும் இது போன்று ஏட்டுச் சுவடிகளைச் சேகரிக்கலாயின.

பந்தர்கார் ஆய்வுக் கூடத்திலிருக்கும் வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளின் எண்ணிக்கை 20,000 ஆகும். சென்னை ‘ஓரியண்டல்’கையெழுத்துச் சுவடிகள் நூலகத்திலிருக்கும் வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளின் எண்ணிக்கை 23,000 ஆகும். மேலும் 10,000க்கு மேற்பட்ட தமிழ், தெலுங்கு கையெழுத்துச் சுவடிகளும் இங்கு உள்ளன.

சென்னை அடையாற்றில் இருக்கும் “தியாசாபிக்கல் சங்கத்தின்” கையெழுத்துச் சுவடிகள் நூலகம் உலகோரால் உயர்த்திப் பேசும் அளவிற்குச் சிறந்து விளங்குகின்றன. கல்கத்தாவிலிருக்கும் ஆசியச் சங்கத்தினர் நூலகத்தில் 14,000க்கு மேற்பட்ட வடமொழிக் கையெழுத்துச் சுவடிகளும் 6,000க்கு மேற்பட்ட அராபிக் பெர்சியன் கையெழுத்துச் சுவடிகளும் உள்ளன. பெனரிசிலிருக்கும் வடமொழிக் கல்லூரியில், எண்ணிறந்த சுவடிகள் இடம் பெற்றுள்ளன. வங்காளத்திற்கும் ஆசிய சங்கத்தாரின் நூலகத்தில் 6,000க்கு மேற்பட்ட பெர்சிய அராபிக் கையெழுத்துச் சுவடிகள் உள்ளன. இச்சுவடிகள் ஸ்ரீரங்க பட்டினத்திலிருந்து திப்புசுல்தான் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவைகளாகும். புராதன இந்தியப் பேரரசர்களது கையெழுத்துச் சுவடிகளெல்லாம் பாட்னாவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

மேலை நாடுகளில் நம் நாட்டுச் சுவடிகள் :

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் எண்ணிறந்த கையெழுத்துச் சுவடிகளை நம் தாயகத்திலிருந்து, மேலை நாட்டார் பலர் எடுத்து சென்றுள்ளதை வரலாறு காட்டுக்கின்றது. பெரும்பான்மையான சுவடிகள் ஜெர்மனியாரால் கொண்டு செல்லப்பட்டன. அவைகளெல்லாம் அவர்களுடைய தேசீய நூலகத்தை இன்று அழகு செய்கின்றன.

பெர்லின் நூலகத்தில் 40,000க்கு மேற்பட்ட வடமொழிக் கையெழுத்துச் சுவடிகள் உள்ளன. இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அலுவலகத்தில் 35,000க்கு மேற்பட்ட, வடமொழி பெர்சிய - அராபியச் சுவடிகள் உள்ளன. திப்புசுல்தான் தானே எழுதிய அவனது ‘கனவுகளை’ப் பற்றிய சுவடிகளும், அவனது ‘குர்ஆனும்’இங்குள்ளன.
இங்கு இருக்கும் சிறப்பான சுவடிகளில் நூறு தங்க ஓலைகளாலானதும், பாலி மொழிகளில் எழுதப்பட்டதுமான, ஒரு கையெழுத்துச் சுவடி குறிப்பிடத்தக்கதாகும். கத்தியினால் இவ்வெழுத்துகள் வெட்டப்பட்டு இருக்கின்றன. ஆச்சுபோர்டு நூலகத்தில் 16,000 வடமொழிக் கையெழுத்துச் சுவடிகள் இருக்கின்றன. சாந்தி நிகேதன், விசுவபாரதி நூலகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்திலும் எண்ணிறந்த சுவடிகள் உள்ளன.

இந்திய நாட்டுத் தனியரசுகளில் பல கையெழுத்துச் சுவடிகள் சேகரிப்பதில் முனைந்து நின்றன. அவைகளில் பரோடா, மைசூர், நேபால், பிகானிக், ஜெய்பூர், ஜோட்பூர், காஷ்மீர், திருவனந்தபுரம் தனியரசுகள் குறிப்பிடத்தக்கன.
லண்டன் மாநகரில் இந்திய நூலகம் :

வணிகத்தின் பொருட்டு நம் நாட்டில் வலம் வந்த ஆங்கிலேயர்கள், நம்மை அடிமைப்படுத்தியது மட்டுமல்லாமல் ஆட்சிப் பொறுப்பையும் மேற்கொண்டனர். இதன் பின்னரே அறிவும்திறனும் மிக்க, பல ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வரலாயினர். வந்தவர்கள் சிலர் நம் நாடு சிறந்த ஒரு அறிவுக் களஞ்சியமாக விளங்குதல் கண்டு வியப்பு அடைந்தனர். சில ஐரோப்பிய அறிஞர்கள் நம் தாயகம் வந்து வடமொழி பயின்று, ஆராய்ச்சிலும் ஈடுபட்டனர். இந்திய நாட்டுச் சட்ட திட்டங்களை ஒட்டியே ஆட்சி நடத்த விரும்பிய வாரன் ஹேஸிடிங்ஸ் கி.பி. 1776ல் இந்துச் சட்டங்களை வடமொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கச் செய்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், சர் வில்லியம் ஜோன்சு என்பவரால் நம் நாட்டின் புராதன இலக்கியம், சிற்பம், வரலாறு இவற்றை ஆய்வு செய்யும் பொருட்டு கல்கத்தாவில் ஆசிய சங்கத்தை (Asiatic Society) நிறுவினர். இப்பெரியவரின் தளராத உழைப்பினால், பல ஏட்டுச் சுவடிகள் சேகரிக்கப்பட்டன. ஆனால் சேகரித்த ஆங்கிலேயர்கள், தங்கள் தாய்நாடு திரும்பியபொழுது அவைகளை உடன் கொண்டு சென்றார்கள்.

இதனை அறிந்த ஆங்கிலக் கிழக்கிந்திய டைரக்டர்கள் இந்தியாவின் கலைச் செல்வங்கள் எங்குப் பலருக்கும் பயன்படாமல் போய்விடுமோ என அஞ்சி இந்திய இல்லம் என்னும் கட்டடத்தில், இத்தகைய கலைச் செல்வங்களைச் சேகரித்து வைக்க முற்பட்டனர். ஏட்டுச் சுவடுகளைச் சேகரித்து கொடுத்தவர்கள் போற்றப்பட்டனர். இதற்குப் பேராதரவு தந்தவர் ‘ராபர்ட் ஆர்ம்’என்பவராவர். இவரே ‘மொகல் பேரரசின் வரலாற்றுத் துணுக்குகள்” என்னும் ஆங்கில நூலினை எழுதியவர் ஆவார்.

கம்பனியார் இட்ட வித்தானது, மரமாகிப் பூத்துக் குலுங்கிக் காயாகிக் கனியாவதற்குக் காரணமாக இருந்தவர் ‘சார்லஸ் வில்கின்சன் ஆவார். பகவத் கீதையை முதலில் மொழி பெயர்த்தவர் இவரே. பதினாறு ஆண்டுகள் இந்திய நாட்டில் அலுவலராகப் பணியாற்றியவர். தம் ஓய்வு நேரத்தை எல்லாம், வடமொழி பயின்று தம் தாய் நாடு திரும்பும்போது சிறந்த வடமொழி அறிஞராகச் சென்றார்.

தொடரும்...



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com