Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

தமிழ் ஒளி
சி.கமலக்கண்ணன்

விஜயரங்கம் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்ஒளி புதுச்சேரியில் பொ. சின்னையா செங்கேணியம்மாள் தம்பதியர்க்குத் தலைமகனாகப் பிறந்தார் (21.9.1924).

ஆரம்பக் கல்வியை அரசு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைக் “கல்வே” கலாசாலையிலும் தமிழைக் கரந்தை ‘செந்தமிழ்க் கல்லூரி’யிலும் பயின்றார். அவரது சிந்தனை முற்போக்கின் பக்கம் இருந்தது என்பதை அவரது ஆரம்பக் காலக் கவிதைகள் மூலம் அறியமுடிகிறது.

இச்சிந்தனை தமிழ் ஒளியைப் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னனிடம் கொண்டு சேர்த்தது. இக்காலத்தில் சுயமரியாதைக் கருத்துக்கள் அவரது சிந்தனையைக் கவர்ந்தன. இக்கருத்துக்கள் மேலும் அவருக்கு உரமூட்டின.

பாரதிதாசன் மகன் மன்னர் மன்னனும், தமிழ் ஒளியும் ‘முரசு’ என்ற கையேடு இதழை நடத்தினர். அதில் தமிழ் ஒளி கவிதைகளும் இடம் பெற்றன. முரசு இதழின் கருத்துக்களும் அவரது கவிதைகளும் பலரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. அவை தமிழ் ஒளிக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன.
குறிப்பாகப் பாரதிதாசனின் கவனத்தைக் கவர்ந்தன. பாரதிதாசன் தமிழ் ஒளியை அழைத்துப் பாராட்டி அவரை உற்சாகப் படுத்தினார். அவரிடம் நெருக்கம் மிகுதியாயிற்று.

பின்பு அரசு ‘முரசு’ இதழைத் தடை செய்தது. அதை நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. மன்னர் மன்னன் இளம் வயது காரணமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழ் ஒளி ஜாமீனில் வெளிவந்தார். 1945-ல் அவர் வாழ்ந்த பகுதியில் ஒரு காதல் ஜோடிக்குச் சாதியின் காரணமாக நிகழ்ந்த கொடுமை அவரைப் பெரிதும் பாதித்தது. அதை “நிலைபெற்ற சிலை” என்னும் குறும் காப்பியமாக வடித்தார். அதனைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று எழுந்த ஆவல் அவரைச் சென்னைக்குக் கொண்டு வந்தது.

சென்னை வந்த தமிழ் ஒளிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. புத்தகம் போடுவது சாதாரணமானதல்ல என்பதைக் கண்டு மனவேதனை அடைந்தார். அக்காலகட்டத்தில் (1946) சென்னையில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் பேசிய வா.ரா. அண்ணா ஆகியோரின் பேச்சுகள் இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகம் ஊட்டின. ஆனால் லட்சிய வேட்கையும் உழைக்கும் மக்கள் சார்பும் கொண்ட எழுத்தாளர்களுக்கு மாநாடு எவ்விதப் பயனையும் அளிக்கவில்லை என்பதை உணர்ந்த தமிழ் ஒளி. நண்பர்களுடன் இணைந்து முற்போக்கு எழுத்தாளர்களை ஒன்று திரட்டி சங்கம் ஒன்றை உருவாக்கினார். அச்சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராகயிருந்தார். தமிழ் ஒளியின் நண்பரும் ‘தமிழ் முரசு’ இதழில் பொறுப்பில் இருந்த ஊ. கோவிந்தன் அவர்கள் அதில் இருந்து விலகி பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார். தமிழ் ஒளியையும் அதில் இணையச் செய்தார்.

பின்பு கோவிந்தன் அவர்கள் சொந்தமாகப் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கினார். அதில் “நிலை பெற்ற சிலை” குறுங்காப்பியமாக வெளிவந்தது. இது கவிஞரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது. தமிழ் ஒளி பெரு மகிழ்ச்சியடைந்தார்.

தொடர்ந்து பொதுவுடமை ஏடுகளில் கவிதைகளை எழுதி வந்த தமிழ்ஒளி, குயிலன் போன்றவர்கள் கம்யூனிஸ்ட் கவிஞர்கள் என்றே எண்ணப்பட்டனர். சுதந்திர தினத்தை ஒட்டி வானொலியில் கவிதை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் கலந்து கொண்டார். அதில் ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் தமிழ்ஒளி கவிதை வாசித்தார். அதில் உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த இந்தச் சுதந்திரம் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் கவிதை புனைத்திருந்தார்.
அக்கவிதையை ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் சிறப்பித்துப் பாராட்டினார்.

இக்காலக் கட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இக்காலத்தில் குயிலனை ஆசிரியராகவும், தமிழ்ஒளி, எஸ்.ஆர்.எஸ்., ராஜன் ஆகியோரை இணையாசிரியர் களாகவும் கொண்டு ‘முன்னணி’ என்ற இதழ் தொடங்கி நடத்தினர். இவ் இதழும் அரசால் தடை செய்யப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் தமிழ் ஒளியைப் பெரிதும் பாதித்தது. அரசியலும் காலனிய நாடுகளின் விடுதலையும் உழைக்கும் மக்களின் எழுச்சியும் தமிழ்ஒளி கவிதைகளிலும், சிறுகதை, ஓரங்க நாடகம் போன்ற தமது படைப்புக்களில் முனைப்புடன் எழுதினார்.

“மே” தினத்தை ஆதரித்து எழுதிய கவிதையும் “சீனப் புரட்சி”-யின் வெற்றிக்கு நல்வாழ்த்து கூறியும் எழுதிய கவிதைகளும் குறிப்பிடத்தக்கனவாக வெளிவந்தன.

கம்யூனிஸ்ட் கட்சியின் மீது இருந்த தடை நீக்கப்பட்டபின் 1954-இல் கூடிய குழு எதிர்காலத்திட்டம் பற்றி விவாதிக்க கூடியது. அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் சிலர் வெளியேறினர். அவர்களில் தமிழ் ஒளியும் ஒருவர்.
தோழர் சஞ்சீவி அவர்களுடன் அமைந்தகரையில் தங்கியிருந்த தமிழ்ஒளி திடீர் என ஒருநாள் காணாமல் போனார் நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பாண்டிபஜாரில் மனநிலை கெட்டுத் திரிந்த தமிழ் ஒளியை சஞ்சீவி அழைத்து வந்து அவரைப் புதுவைக்கு அனுப்பி வைத்தார்.

மனநலம் சீர் பெற்ற தமிழ் ஒளி மீண்டும் சென்னை வந்து எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.

ஆனால் அவரால் தொடர்ந்து எழுத முடியாமல் போனது, அவரது உடல் ஆஸ்துமா நோயால் மிகவும் பலவீனமடைந்தது. தோழர் சஞ்சீவி அவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவம் சரியில்லை என்று வெளியேறிவிட்டார்.

தோழர் சஞ்சீவி அவரைப் புதுவைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரது உடல் நிலை மேலும் மோசமானது. 29.3.1965 அன்று துன்பமான அவரது மரணச் செய்தி முற்போக்காளர்களைத் துன்பத்தில் ஆழ்த்தியது.

அவரது பிறந்த நாளன்று புதுவை அரசு விழாவெடுத்து கொண்டாடுவது முற்போக்குச் சக்திகளுக்கு மகிழ்ச்சியானதாக உள்ளது.

இவரது படைப்புகள், ஒன்பது காப்பியங்கள், பல நூறு தனிக் கவிதைகள், இரண்டு குறுநாவல்கள், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருபது ஓரங்க நாடகங்கள், மூன்று மேடை நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட குட்டிக் கதைகள். மூன்று இலக்கிய ஆய்வு நூல்கள் விமர்சனக் கட்டுரைகள் ஆகியனவாகும்.

எழுத்தாளர் செ.து. சஞ்சீவி தமிழொளிக்குத் தோன்றாத் துணைவராக விளங்கினார். கவிஞருடைய படைப்புகளைத் தன்னலம் கருதாது தனிநின்று, முயன்று சேகரித்து நூல்களாக வெளியிட்டு வந்துள்ளார். நல்ல உள்ளம் கொண்ட அன்பர் சஞ்சீவி பாராட்டுக்குரியவர்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com