Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

அறிவியலின் வரலாறு
க.இளங்கோ

இயக்கவியல் பார்வை மேன்மேலும் துலங்கி ஒளிவீசிய காலம். பாசிசத்துக்கு எதிரான தேசப் பக்தபோரில் சோவியத் ஈடுபட்டிருந்தகாலம். மார்க்சிய ஒளியாக (பிரகாசித்த) கிறிஸ்டோபர் காட்வெல், அறிவியல் மேதை ஜே.டி. பெர்னால், ஹால்டேன் ஆகியோர் திகழ்ந்தனர். மார்க்சிய அடிப்படையில் கலாசாரம் பண்பாடுகளை முதலாமவர் ஆய்வு செய்தபோது அடுத்தவர் நவீன அறிவியலின் வளர்ச்சி எதிலிருந்து வளர்ந்து வந்துள்ளது என்பதை ஆய்வு செய்தார்.

சோழர்களின் வரலாறு, மொகலாயர் வரலாறு என்று நாம் குறிப்பிடுவதை போல (அதாவது வரலாறு மன்னர்களாலும், மாயாவிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதைப் போல) அறிவியலின் வரலாறு என்று எழுத முற்படாமல், ஜே.டி. பெர்னால் “வரலாறு என்பது மனிதச் சமூகத்தினது, அவர்கள் மேற்கொண்ட மாற்றியமைத்த உற்பத்தி உறவுகளின் ஊடாக வளர்ந்தது. படைப்பாற்றல் மிகுந்த உழைக்கும் மக்களின் கூட்டுழைப்பிலிருந்தும், கூட்டுணர்விலிருந்தும் முகிழ்த்தது” என்பதை உள்வாங்கிக் கொண்டு தம்முடைய ஆய்வுகளை மேற்கொண்டார்.

குறிப்பிட்ட ஒரு வகை உற்பத்தி உறவுகள் நிலவுகின்ற சமூகத்தில் அதற்கேற்ற தொழில் நுட்பங்களும், கருவிகளைப் பயன்படுத்துதலும், உற்பத்தியை மேலும் எளிதாக்கிக் கொள்ளுவதற்கான முயற்சியும் நிலவும். அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தலுக்கான தேடலும் முயற்சியும் இடைவிடாது நிகழும் போதுதான், அதுவரை திரட்டியுள்ள அறிவை ‘கூர்மைப்படுத்தும் போதுதான் புத்தாக்கங்கள் தோன்றுகின்றன. மேலும் இதுவரைக்குமான வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே’ என்பதனடிப்படையில் நோக்கும்போது பூர்வீக பொதுவுடமைச் சமூகத்தில் நிலவிய கருவிகள், தொழில் நுட்பங்களில் இருந்து, கணிதம், காலக்கணக்கீடுகள், வானியல் கருத்துக்களும் எவ்வாறு பொருளாதார உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றத்தோடு சேர்ந்து மாற்றமுற்றும் வளர்ந்தும் வந்துள்ளன என்றும், பூர்வீகப் பொதுவுடமைச் சமூகத்திலிருந்து, அடிமைச் சமூகம், நில பிரபுத்துவச் சமூகத்துக்குரிய வளர்ச்சி நிலைகளைக் கடந்து நவீன காலத்தில் ‘விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சியாக வெடித்து மலர்ந்தது என்றும் பெர்னால் தமது நூலில் விளக்கி காட்டுகின்றார். உழைப்பவர்களுக்கு அறிவு தடைபடுத்தப்பட்டு அறிவும், படைப்பாற்றலும் பிரிந்திருந்த நிலையில், புதியன தோன்றுதல் கடினமானதாகவே இருந்துள்ளது.

அதாவது அறிவு நேரடியான பொருளுற்பத்தியில் இருந்து விலகியதாகவும், படைப்பாற்றல் மிகுந்த உழைக்கும் மக்களுக்கான அறிவு தடுக்கப்பட்டதாகவும், தண்டனைக்குரியதாகவும் உள்ள இந்தியச் சமூகத்தில் புதியன தோன்றுதல் சாத்தியமாகவில்லை.

முதல் முயற்சியாகத் தமிழில் பேரா. மு. இலட்சுமணன் எழுதியுள்ள ‘அறிவியலின் வரலாறு’ எனும் நூல் வெளி வந்திருக்கிறது. அவர் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் சமூக மாற்றங்களின் ஊடாக அறிவியலின் வரலாற்றைக் குறிப்பிடவில்லை. ஆயினும் பூர்வீக சமூகத்தில் இவ்வாறு இருந்ததன் தொடர்ச்சி இன்று இவ்வாறு வந்துள்ளது என்று வரலாற்றுப் பார்வையோடு விளக்கிக் காட்டுகின்றார்.

ஆரம்பத்தில் மனித அறிவானது உருவாகி வளர்ந்து வந்தபோது அது தத்துவவியலாளர்களாலேயே விளக்கப்பட்டது. விஞ்ஞானக் கருத்துக்களையும் தத்துவ ஞானிகளே விளக்கினர் என்பதைக் கூறுகிறார். காண்ட் டெகார்ட்டே முதலானோர்களின் தத்துவத்தில் எவ்விதக் குறைபாடுகள் இருந்தாலும் அவர்களுக்குப் பிரபஞ்சத்தைப் பற்றியும், இவ்வுலகத்தைப் பற்றியதுமான விஞ்ஞான அறிவு சரியாகவே இருந்தது.

பொருளைப் பற்றியும், இயற்கை விஞ்ஞானங்களைப் பற்றியும் தம்முடைய சூட்சுமமான கருத்தாக்கங்களை சரியாகவே வெளியிட்டனர்.

இன்றைய அறிவியலின் வளர்ச்சியானது மந்திரம், மதம், விஞ்ஞானம் என்று படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது என்று கூறுவது வரலாற்று நோக்கிலே பருவத்திற்கேற்பப் பயிர் செய்ய வேண்டியதன் கால அறிவு விவசாயம் மேற்கொண்டபோது ஏற்பட்டது. உற்பத்தியோடு ஏற்பட்ட கால கணக்கீட்டு முறைகளும், வான சாஸ்திரமும், எகிப்திலும், சீனாவிலும், பாபிலோனிலும், இந்தியாவிலும் ஏற்பட்டன என்றும் அவை இன்றைய அறிவியலுக்கு அளித்துள்ள பங்கு பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றார்.

வானசாத்திரத்தை மனித வாழ்வுடன் இயைபுடைய தாக்கிச் சோதிடம் உருவானது, அது இன்று விண்ணியல் ஆய்வாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் அதன் அடிப்படையில் அறிவியல் வளர்ச்சி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்தது தொடங்குகிறது என்று விளக்கம் தருகின்றார்.

கிரேக்க தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றிய கருத்துக்களைச் சுருக்கமாக எடுத்து விளக்குகிறார். லியனார்டோ - டாவின்சி ஒரு புகழ்வாய்ந்த ஓவியர் என்றே தெரிந்து வைத்துள்ள நமக்கு கட்டிடங்களுக்கான வரைபடங்கள், பறக்கும் எந்திரங்கள், பாராசூட், இராணுவ டாங்கிகளுக்கான மாதிரி வரை படங்களையும் தயாரித்தளித்தவர் என்பதையும் ‘இரத்த ஓட்டம், இதய அமைப்பு, கண், அதன் ரெட்டினா அமைப்பு மூலமாக பிம்பம் தெரிகின்றது என்பதை ஆய்ந்தறிந்து வெளியிட்டவர் டாவின்சி. விஞ்ஞானத்தை மதத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்தார். இவர் 100 ஆண்டுகள் முன்னோடியாக விஞ்ஞான அறிவில் விளங்கினார் என்றும், மறுமலர்ச்சிக் காலத்தின் சிறந்த மனிதன் என்றும் குறிப்பிடுகிறார்.

தொழிற்புரட்சிக்குப்பின் மனிதர்களும் மிருகங்களும் செய்யும் வேலையை இயந்திரங்கள் செய்யத் தொடங்கின என்று குறிப்பிடுகிறார். நிலப்பிரபுக்களால் நிலங்களிழந்து பண்ணையடிமைகள் நிர்கதியாக வெளியேற்றப்பட்டனர். பண்ணைகள் மேய்ச்சல் நிலங்களாக மாற்றப்பட்டன. தொழில் முனைவோராக இருந்த அன்றைய முதலாளிகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் உரிமைகளை மறுத்து நகரத்தை நோக்கி விரட்டினர். அடிமைகள் கூலியாளாக மாறிவிட்டனர். தொழிலாளியினுடைய உடலுழைப்பைக் குறைப்பதற்காகத் தொழிற்புரட்சி ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அண்டமும், பூமியும் என்ற இயலில் ‘தாலமி’யின் பூமி மையமானது, இயக்கமற்றது என்ற கருத்திலிருந்து வளர்ந்து இன்று வரை அடைந்துள்ள கண்டுபிடிப்புகளும் மாற்றங்களும் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறார். கி.மு.விலிருந்தே சூரியனை மையமாகக் கொண்ட கருத்தும், பூமியை மையமாகக் கொண்ட கருத்தும் இடைவிடாது போராடின என்பதை உணர முடிகின்றது.

‘பொருளும் சக்தியும்’ என்ற இயலில் கி.மு.விலேயே ஐயோனியன் தத்துவ ஞானிகளுக்கு அணுவைப் பற்றிய அறிவு இருந்துள்ளது என்பதும், டெமாக்ரட்டீஸ் ‘உண்மையில் அணுவும், வெற்றிடமும் தான் உள்ளன’ என்று கூறியதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. பாசிசம் உச்சநிலையடைந்த போது அணுசக்தியை அழிவு சக்தியாகப் பயன்படுத்தியதையும், அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் எடுத்துக்காட்டி அறிவு அழிவிற்குப் பயன்படக் கூடாது. ஆக்க சக்தியாக மட்டுமே பயன்பட வேண்டும் என்று கூறுகிறார்.

உயிரற்றவையிலிருந்து, உயிருள்ளவை தோன்றியதன் வரலாறு கூறும்போது மில்லர் என்பவர் அமோனியா, மீத்தேன், கலவையைப் பிளாஸ்கில் சுத்தமான தண்ணீரின் மீது மிதக்கவிட்டு, மூடி மின்சாரம் பாய்ச்சப்பட்ட போது ஆரஞ்சு, சிவப்பு நிறத்திற்கு மாறி 20 புரோட்டின் உருவாக்கும் அமினோ ஆசிட்டுகள் கொண்ட சூப் தயாரித்தார் என்பதுடன், அடிப்படையில் மனித இனக்குரங்குகள், மனிதனாக மாறியதன் வரலாறு விளக்கப்படுகின்ற போது ‘கைகளைப் பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டதன் முக்கியத்துவமும், கூட்டுழைப்பில் ஈடுபட்டதன் மூலமாக ஏற்பட்ட மாற்றமும் கூறப்படாதது ஒரு குறைபாடாகும். கொரில்லா, சிம்பன்ஜி, ஒராங்குட்டான் வகைப்பாட்டிலிருந்து, நியான்டர்தால், ஓமோ சேப்பியன்ஸ் இனங்கள் வரை விளக்கப்படுகின்றது. சார்லஸ் டார்வின், கிரிகோரி மெண்டல் ஆகியோரின் பங்களிப்பு, பரிணாம வளர்ச்சியில் உயிரியல், உளவியல் தோற்றம் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.

பூர்வீக சமூகத்தில் இருந்து மருத்துவ அறிவு எல்லாச் சமூகத்திலும், எல்லாக் காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. அறுவைச் சிகிச்சையும், மருத்துவ முறைகளும், மேலை நாடுகளிலும், தமிழகத்திலும் பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து இருந்து வந்துள்ளன.

பாபிலோனியர்கள் கணித முறையில் 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறப்புற்று இருந்தாலும் கணிதத்தில் ‘0’ ஐயும் பகுபடா எண்கள் பற்றியும் அறிந்திருக்கவில்லை. எகிப்தியர்களின் கணித அறிவு பிரமிடுகளின் கட்டுமானத்திற்குப் பயன்பட்டது. கிரேக்க தத்துவத்தில் ஆர்க்கிமிடிஸ், தேல்ஸ் ஆகியோரின் பங்களிப்பு பிரதானமானது. (Land Survay) நில அளவை முறை முதன் முதலில் மேற்கொண்டவர்கள் இவர்கள்தான். ஜூலியஸ் சீசர் (கி.மு. 100-44) காலண்டர் முறையினை அறிமுகப்படுத்தினார். வருடத்திற்கு 3651/4 நாட்கள் என்று நிர்ணயித்த சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டரை உருவாக்கினார் என்பது போன்ற வரலாற்று உண்மைகளைக் கூறுவதுடன் ‘பிதாகரஸ்’ கோட்பாடுகளுடன், சுல்பசூத்திரத்தை ஒப்பிட்டு ஆய்வு நிகழ்த்தப்படுகிறது.

இந்திய மரபில் ஆர்யபட்டர், ஸ்கொயர், ஸ்கூப்களைப் பயன்படுத்திய விபரம் தரப்பட்டுள்ளது. பாஸ்கரர் கணிதம், வானவியலில் தேர்ந்தவர். ஆர்க்கிமிடிஸ் அப்போலியன்ஸ்களுக்கு கூட இல்லாத கணிதத் திறமை இந்தியர்களிடம் உண்டு என்று பிரெஞ்சு கணித மேதை “லாப்லாஸ்” கூறுவதை நினைவு கூர்கிறார்.

பாபிலோனிய மக்களின் கால்வாய்ப் பாசனம், அணைகள் கட்டுதல், அகழிவெட்டுதல், நிலங்களை அளந்து குத்தகைக்குவிடல் என்பன இந்நூல் குறிப்பிடுகின்றன. அவ்வாறே இந்தியாவில் சிந்துச் சமவெளி நாகரிகம் மொகஞ்சதாரோ, காலிபங்கன், லோத்தல் பகுதிகளை உள்ளடக்கிய வேளாண் நுட்பங்கள் கைவினைப் பொருட்களும், கட்டடக் கலை, மூடப்பட்ட கழிவு நீர் வாய்க்கால், சுட்ட செங்கல்லின் பயன்பாடு, ஆடைநெய்தல், வாணிபத்தில் சக்கர வாகனங்கள் பயன்படுத்துதல், தானியக் களஞ்சியம் ஆகியன பற்றியும் கூறுகிறார். இங்குத் தமிழ் நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியக் கல்லணை, அயல்நாடுகளுடனான வாணிபத் தொடர்புகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிவியலைப் பிரபலப்படுத்துதல் அ. ஜேம்ஸ், ரென்னஸ், ஆ. காலிமெக்கன்ஸி, இ. புக்கானன் ஆகியோராலும், ஆசியாடிக் கழகத்தாலும் மேற்கொள்ளப்பட்டது. இச்சமயம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்ற ஜே.சி. போஸ், சர்.சி.வி. ராமன், பி.சி. ராய் ஆகியோர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளாகத் தமது கண்டுபிடிப்புகளின் மூலம் சாதனை நிகழ்த்தினர். இவர்கள் தேச விடுதலைப் போராட்டம் நடந்த சமூகப் பின்புலத்தில், வீறு கொண்டெழுந்த அறிவுத் தேடலில், உதித்த விஞ்ஞானிகளாவர்.

போகிற போக்கில் ஆணாதிக்கம் அறிவியலிலும் உள்ள தால் மேரி கியூரி மட்டும்தான் பெண்ணினத்தில் விஞ்ஞானியாக வர முடிந்தது என்று கூறுகின்றாரே ஒழிய தீர்வாக எதுவும் சொல்லவில்லை. வர்க்க சமூகம் ஒழிந்து சமத்துவ சமூகத்தில் தான் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக எல்லாத் துறைகளிலும் பெண்களும் அறிவிலும், திறமையிலும் மேலோங்கி வளர்ந்து சாதனை படைக்க முடியும் என்பதற்குச் சோவியத்தே சான்றாக இருக்க முடியும்.

இன்றைய அணுமற்றும் விண்வெளி ஆய்வுகள், பசுமைப் புரட்சிக்கான திட்டங்கள், செயல்பாடுகளைக் குறிப்பிடுவதுடன், சமூகப் பிரச்சனைகளை இவ்வறிவியல் வளர்ச்சி தீர்க்கவில்லை என்று மறைமுகமாகச் சாடுகிறார்.

இறுதியாக “சமுதாயத்தைப் பலவீனப்படுத்தக் கூடிய ஜாதியிலிருந்து விஞ்ஞானிகளும், அறிவாளிகளும் விடுபட வில்லை என்று சாடுகின்றார். ஆக இந்தியச் சமூகம் புதியன படைக்கும் ஆற்றலிழந்து நிற்கிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய போக்கிலிருந்து விடுபடாத வரை எல்லா அறிவியலாரும், தேர்ந்த தொழில் நுட்ப வாதியாக இருக்க முடியுமேயன்றிப் புதியன படைக்கும் ஆற்றலற்றவராகவே இருப்பர். இந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு, சமூக மாற்றம் குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் அக்கறை கொண்டு போராடும்போது, அத்தகைய சமூக எழுச்சி உருவாகும்போது அதனுடன் சேர்ந்து உருவாவதுதான் அனைத்து புத்தாக்கங்களுமாகும்.

அறிவியலின் வரலாறு
ஆசிரியர் : மு. இலட்சுமணன்,
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை,
சென்னை - 14, விலை : ரூ. 80.00



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP