Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

நூலகமும் கோயில்தான்
கு.ஞானசம்பந்தன்

‘எழுத்தும் தெய்வம்... எழுதுகோலும் தெய்வம்’ - பாரதி.

Gnanasampanthan “உரத்தின் வளம் பெருக்கியுள்ளிய தீமைப் / புரத்தின் வள முருக்கிப் பொல்லா - மரத்தின் / கனக்கோட்டந் தீர்கு நூலஃதே போல் மாந்தர் / மனக்கோட்டந் தீர்க்கு நூன் மாண்பு.” - நன்னூல்

‘வளைந்த மரத்தின் கோணலை நூலானது போக்கி நேராக்கி நிமிரச் செய்கிறது; அதேபோல் கற்கும் நூல்கள் மனித மனத்தின் கோணலைப் போக்கி, தன்னேரிலா மனிதனாய் அவனை நிமிரச் செய்கிறது - என்று இலக்கண நூலாகிய நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் குறிப்பிடுவார்.

‘பஞ்சுநூல் மரக்கோணலைப் போக்கி / நேராக்கும் கல்வி நூல் மனித மனக் / கோணலை நீக்கிக் கூராக்கும்’. ‘நூலகங்கள் திறக்கப்படும் போது, சிறைச்சாலைகள் மூடப்படும்’ என்பது மேல்நாட்டுப் பழமொழி. பயணம் செய்யும் போது, எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் பழமைச் சின்னங்களைத் தேடிப் பார்ப்பது போல, நூலகங்களைத் தேடிச் செல்வது எனது வாடிக்கை.

மதுரையில் பழைய நூலகங்கள் என்று எடுத்துக் கொண்டால், நான்காம் தமிழ்ச் சங்கமாகிய செந்தமிழ்க் கல்லூரியில் ஓர் அறிய நூலகம் ஒன்று இன்றைக்கும் பயன்பட்டு வருகிறது. காக்காத் தோப்புத் தெருவில் ‘பிரம்ம ஞானசபை’ நூலகம் ஒன்றும் உள்ளது.

காந்தி அருங்காட்சியக நூலகமும், மதுரை தியாகராசர் கல்லூரி நூலகமும் பழைமையும் பெருமையும் மிக்கவை.

இவை தவிர சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகமும் வேறு பல நூலகங்களும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு என்றைக்கும் அணி சேர்ப்பன.

மேலும், மதுரையின் வீதியோரப் பழைய புத்தகக் கடைகள் கண்ணெதிரே கிடைக்கும் கல்விக் களஞ்சியங்கள்.
இந்தச் சூழலில் பழகிய நான், சமீபத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்கா சென்ற போது, அங்கு பல நூலகங்களுக்கு குறிப்பாக ‘கனெக்டிக்கெட்’ மாநிலத்தில் அமைந்துள்ள ‘யேல்’ பல்கலைக் கழக நூலகத்திற்குச் செல்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் பேராசிரியரும் எனது நண்பருமான டாக்டர். ஜான் பெர்னார்ட்பெய்டு (பானி) அவர்கள் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பகுதிகளையும் அங்கிருந்த அரிய நூலகத்தையும் எனக்குச் சுற்றிக் காட்டினார். அப்போது அவர் கூறிய அந்தப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய ‘யேல்’ கோமகன் பற்றிய வரலாற்றுச் செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின.

அவ் ‘யேல் கோமகனார்’ சென்னை மாநகரத்தில் 1780-களில் உயரதிகாரியாகப் பணியாற்றியவராம். தமிழகத்தில் விளைந்த பருத்தியை ஏற்றுமதி செய்து, அதன் மூலம் கிடைத்த பெரும் தொகையைக் கொண்டே ‘யேல்’ பல்கலைக் கழகத்தை நிறுவினாராம். நம் தமிழ் மண்ணில் விளைந்த கரிசல் காட்டுப் பருத்தி, மானம் காக்கும் ஆடை நெய்ய நூல் மட்டும் தருவதாக எண்ணியிருந்தோம். ஆனால் அது ‘யேல்’ பல்கலைக் கழகத்தில், நூல்களைக் கற்று உயர்வடைய நூல்களைப் பாதுகாக்க, நூலகங்களை நிறுவிட, செல்வமாகவும் பயன்பட்டிருக்கிறது என்பது வியப்பான உண்மை.

‘பருத்தி, ஆடை நெய்ய நூலையும் தரும் / பாடம் கேட்க கற்கும் நூல் வாங்கும் செல்வமும் தரும் என்பது உண்மை. மற்றுமொரு அதிசயம் அந்த நூலகத்தின் நுழைவாயிலில் உலகத்தின் மிகப் பழைய மொழிகளான கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு, எகிப்து, சீனம், ஜப்பான் மொழிகள் கல்வெட்டுக்களாய்ப் பொறிக்கப்பட்டுள்ளன.
கிறித்துவ தேவாலயம் போன்றிருந்த, அந்த குளிர் ஊட்டப்பட்ட நூலகத்தின் பிரம்மாண்டமான மரக்கதவுகளின் உள்ளே நுழைந்த போது, பழமையான கிறிஸ்துவ தேவாலயத்தின் உட்பகுதி போன்றே அந்நூலகம் காட்சி அளித்தது.

நீண்ட சலவைக் கல் கூடத்தின் உட்புறத்தில் அழகான தேவதைகளின் படமும் அந்த தேவதைகளுக்கு மத்தியில், தூய வெள்ளாடை தரித்து அழகின் வடிவமாய் ஒரு தேவதையும் ஜீவியமாய் அங்கே நின்றிருந்தது. ஓவிய வடிவில் இருந்த அந்தத் தேவதையின் பீடத்தின் அருகே என்னை அழைத்துச் சென்ற நண்பர் பானி “நன்றாக உற்றுப் பாருங்கள். இந்த தேவதையிடம் என்ன காண்கிறீர்கள்” என்றார். நான் உடனே “அழகிய தேவதையின் வலது கையில் பழைய புத்தகம் ஒன்று இருக்கிறதே” என்றேன் வியப்போடு. “சபாஷ்! அதுதான் உண்மை உங்கள் ஊர் கலைவாணியைப் போல இதுவும் கல்வித்தேவதைதான்” என்றார். பின்னர் அரிய நூல்களைப் பாதுகாத்து வைத்திருந்த பத்துமாடி உயரமுள்ள உட்புறம் தூண்களே இல்லாத பளிங்குக் கூடம் ஒன்றுக்குச் சென்றோம். அங்கிருந்த நூலகர் என்னை அன்போடு வரவேற்று,

“இந்தப் பளிங்குக் கூடத்தின் அதிசயம் என்ன தெரியுமா? வெளியில் இருந்து சூரிய வெளிச்சமும் உள்ளே வரும். ஆனால், உள்ளிருக்கும் பொருள்கள் வெளியே தெரியாது” என்று பெருமிதமாகச் சொன்னார்.

“இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இது கட்டப்பட்டது” என்றார். மேலும் பெருமையை விடாமல் நான் உடனே “இதென்ன அதிசயம். எங்கள் மொழியில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய, சீத்தலைசாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியத்துள் ‘பளிக்கறை புக்க காதை’ எனும் பகுதியில் கதாநாயகி மணிமேகலை கதாநாயகன் உதயகுமாரனுக்குப் பயந்து இந்தப் பளிக்கறைக்குள் புகுந்து கொள்கிறாள். முழுவதும் பளிங்கினால் செய்யப்பட்ட அந்த அறையின் உள்ளிருந்து, மணிமேகலை உதயகுமாரனைப் பார்த்தாள். ஆனால் வெளியே இருந்த உதயகுமாரன் அவளைப் பார்க்க முடியவில்லை.... இது நடந்து இரண்டாயிரம் ஆண்டுகளாயிற்று என்றேன் நான்.

நான் சொன்னதைக் கேட்ட இரண்டு பேரும் அதிர்ச்சியில் பளிங்குச் சிலை போலானார்கள். பிறகு நான் கூறிய செய்தியை எழுதித் தரும்படி அவர்கள் என்னிடம் கேட்க, நான் அவர்களிடம் அதை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன்.

இப்படி நூலகங்கள் குறித்து நாம் பேசிக் கொண்டே செல்லலாம். ஊரெங்கும் இருக்கும் நூலகங்கள் இருக்கட்டும். ‘வாஸ்து சாஸ்திரம்’ பார்த்து வீடு கட்டும் நம்மவர்கள் பூசையறை, படுக்கையறை, பணப்பெட்டியரை, சமையலறை என்று எப்படி வேண்டுமானாலும் கட்டட்டும். நூல்கள் வைக்கவும் அமர்ந்து படிக்கவும் ஒரு படிப்பறையும் கட்டினால் நலம்தானே! ‘வாஸ்து புருஷன் ஒன்றும், கோபித்துக் கொள்ளமாட்டான். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நன்மை செய்வான்.

ஏனென்றால், ‘நூலகமும் கோயில்தான்’.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com